பாட்டிக்கு அன்றுதான் தலை தீபாவளி

பாட்டிக்கு அன்றுதான் தலை தீபாவளி
Published on
சுஜாதா தேசிகன்                                               

தீபாவளிகள் பல கொண்டாடியிருந்தாலும், திருச்சியில் சிறுவயது தீபாவளி கொண்டாட்டங்கள்தான் இன்னும் நினைவில் இருக்கிறது. பட்டாசு வெடிக்கும் அந்த நாள் மட்டும் தீபாவளி இல்லை,  முதலிரவு கணவன்போல சில மாதங்களுக்கு முன் எதிர்பார்ப்புகளிருந்து தீபாவளி தொடங்கிவிடும். பட்டாசு லிஸ்ட்,  புதுத் துணியுடன் தீபாவளி ரிலீஸ் சினிமாவும் அதில் பிறகு சேர்ந்துகொண்டது.

தீபாவளி காலை வாசலில் 'மல்லிகை முல்லை' நாதஸ்வரத்துடன் வானொலியில் 'உன்னைக் கண்டு நான் ஆட' பாடலுடன் பட்டாசு சத்தம் ஜுகல் பந்தியாக ஒலிக்க,  'தீபாவளி இனாம்' வாங்க சிலர் வாசலில் வந்து நிற்பார்கள்.

என் பாட்டி – "உங்களை எல்லாம் நான் பார்த்ததே இல்லையே ?" என்பாள்.

"பாட்டி, நாங்க வருஷா வருஷம் தீபாவளிக்கு மட்டும்தான் வருவோம்! அதனால, தினமும் எங்களைப் பார்க்க முடியாது. சீக்கிரம் ஏதாவது கொடு, நிறைய வீட்டுக்குப் போகவேண்டும்!" என்று அவசரப்படுத்துபவர்களை, "கொடுக்கிறேன்! உன் கண் ஏன் சிவந்திருக்கு? ராத்திரி சரியா தூங்கலையா?" என்று விசாரித்துவிட்டு சில்லறையைக் கொடுப்பாள். போதைக் கண்ணுக்கும் தூங்காத கண்ணுக்கும் பாட்டிக்கு வித்தியாசம் தெரிந்தாலும் தெரியாதது போலப் பேசுவாள்.

அலைப்பேசி இல்லாத அந்தக் காலத்தில் வரும் தொலைப்பேசி அழைப்பில் 'கங்கா ஸ்நானம் ஆச்சா' என்ற விசாரிப்புகள் இன்று  'ஹாப்பி தீபாவளி' குறுஞ்செய்தியில் சுருங்கிவிட்டது.

எல்லா தீபாவளி மலர்களையும் என் அப்பா வாங்கிவிடுவார். மலர்களைத் தமிழ் சினிமா மாதிரி ஒரு 'டெம்ப்ளேட்டில்' அடக்கிவிடலாம். விளம்பரக் கூட்டங்களுக்கு நடுவில்  ஓவியங்களைத் தேடுவது சுவாரசியமான பொழுதுபோக்கு. சில நல்ல சிறுகதைகள் ஒளிந்துக்கொண்டிருக்கும்.

தலை தீபாவளி மாப்பிள்ளை, துணி எடுக்கும் பெண்கள் போன்ற ஜோக்ஸ் கட்டாயம் இருந்தே தீரும். உதாரணத்துக்கு, "ஏங்க…ஏங்க காஞ்சிபுரம், தர்மாவரம், பனாரஸ் இந்த ஊரெல்லாம் நெனச்சா உங்களுக்கு என்ன ஞாபகம் வருது"

"திருப்பதி, திருச்செந்தூர், பழனி ஞாபகம் வருது"

பட்டாசை சாதாரணமாக வெடித்த மாதிரி ஞாபகம் இல்லை. புஸ்வாணம், மத்தாப்பு வகைகளைப் பிரித்து, அதன் ரசாயன வெள்ளி துகள்களை ஒரு டப்பாவில் அடைத்து, திரியைச் சொருகி, அதை ஒரு ஹார்லிக்ஸ் பாட்டிலில் இறக்கி… ராக்கெட்டின்  குச்சியை கழட்டி தரையில் ஓடவிட,  'கள்' குடித்த குரங்குபோல அந்த ஏவுகணை பக்கத்து விட்டு ஜன்னல் உள்ளே சென்ற சற்று நேரத்தில் உள்ளே அலறல் சத்தம் கேட்க… மேலும் விவரித்தால் என்னைப் 'பொடா' சட்டத்தில் உள்ளே அனுப்பிவிடுவார்கள்.

தீபாவளிக்கு ஒரு வாரம் முன் அம்மாவும் பாட்டியும் தேன்குழல், நாடா, முள், கை முறுக்கு, மைசூர்பாக், தீபாவளி லேகியம் என்று மும்முரமாக இருக்க…  நாங்கள் ரிலீஸ் ஆகப்போகிற படங்களைக் குறித்துப் பேசிக்கொண்டிருப்போம். 'தளபதி' காலை ஆறு மணி ரசிகர்கள் காட்சிக்கு  கை நிறைய மிட்டாய் கொடுத்து, படத்துக்கு நடுவில் சீட்டுக்கு அடியில் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள். மீதி படத்தைச்  சப்பளாம் கொட்டிக்கொண்டு  பத்மாஸனத்திலே  பார்த்தது நினைவில் இருக்கிறது.

தீபாவளி அன்று, அவசரமாக உச்சந்தலையில் ஒரு சொட்டு எண்ணெயுடன் குளித்துவிட்டு, காலர் நுணியில் மஞ்சள் தடவிய புதுச் சட்டையை உடுத்திக்கொண்டு, ஒரே நாளில் நான்கு படம் பார்ப்பது சாஸ்திரம். ஒரு தீபாவளிக்கு பாக்யராஜின் 'ராசுக்குட்டி' படப்பெட்டி ஏதோ காரணத்தால் தாமதமாக வர, நைட்ஷோ இரவு 12.30க்கு ஆரம்பித்தது. அந்த தீபாவளி மட்டும் ஐந்து படம். மறுநாள் படத்தின் கதைகள் காய்கறிகள் குழைந்து அவியல் போலக் குழம்பியிருக்கும்.

இப்படிப் பல நினைவுகள் இருந்தாலும், என் தாத்தா பற்றி என் அப்பா கூறிய சம்பவத்தை வியக்காமல் இருக்க முடியாது. என் தாத்தா நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்தியத் தேசிய இராணுவத்தில் ( INA ) சேர்ந்து,  போர் கைதியாக சிங்கப்பூரில் மாட்டிக்கொண்டு,  உயிருடன் இல்லை என்று தீர்மானித்து அவருக்குத் திவசம் செய்யத் தொடங்கிவிட்டார்கள்.

பிண குவியல்களுக்கு நடுவில், பர்மா வழியாக இந்தியா வந்து தீபாவளிக்கு சில மாதங்கள் முன் ஒரு நாள் திடீர் என்று வீட்டு வாசலில் நின்றார். அன்று தான் பாட்டிக்குத் தலை தீபாவளி!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com