என்ன சேதி?

பழைய குருடி

சமாதானத்தை நிலை நாட்டுவதற்காக எத்தனை யுத்தங்கள் வந்துவிட்டுப் போனபோதிலும், எத்தனை அட்லாண்டிக் சாஸனங்கள் தோன்றி மறைந்தபோதிலும், எத்தனை சர்வதேச மகாநாடுகள் கூடிக் கலைந்த போதிலும், எத்தனை நவயௌவன இயக்கங்கள் நடந்தபோதிலும், இந்த உலகமாகிய மூதாட்டி 'பழைய குருடி'யாகவே இருப்பாள் என்றும், தன் போக்கிலேயே போவாள் என்றும் தோன்றுகிறது. மண்ணாசையும் அதன் விளைவான சண்டை சச்சரவுகளும் ஏற்பட்டுக் கொண்டுதானிருக்கும் என்று காணப்படுகிறது. சண்டை சச்சரவுகளுக்குக் காரணமாக மண்ணாசையோடு மண்ணெண்ணெய் ஆசையும் ஒருவேளை சேர்ந்து கொள்ளலாமே தவிர, மற்றப்படி உலகம் பழைய உலகமாகவேதான் இருந்து வருமோ என்று ஐயுறுவதற்குச் சென்ற வாரத்தில் ஒரு காரணம் ஏற்பட்டது. ஸிரியா லெபானன் சம்பவத்தைத்தான் சொல்கிறோம்.

டிகாலேக்கு ஒரு அடி!
சமய சந்தர்ப்பம் பார்த்தப் பிரான்சுக்குள் புகுந்து, தேர்தல் நடத்திப் பெருமித வெற்றி பெற்று, ஏறக்குறைய பிரான்சின் சர்வாதிகாரி ஸ்தானத்தை அடைந்த டிகாலேக்கு நாளுக்கு நாள் ஏகாதிபத்திய வெறி தலைக்கேறி வந்ததைக் கண்டோம். அந்த வெறியானது சென்ற வாரத்தில் ஸிரியாவில் தன்னுடைய கோரஸ்வரூபத்தைக் காட்டிற்று. அதன் பலனாக டிகாலே தலையில் ஒரு அடி விழுந்தது.

யுத்தத்தில் பிரான்சு தோற்றிருந்த சமயத்தில் ஸிரியா லெபானன் பிரஜைகள் பிரஞ்சு பிடிப்பிலிருந்து விடுதலையடைய ஒரு பெரு முயற்சி செய்தார்கள். அதில் வெற்றியும் பெற்றார்கள். நேசக் கட்சியார் ஜயிக்க ஆரம்பித்திருந்த சமயத்தில் பிரஞ்சுக்காரர் மறுபடியும் ஸிரியாவைக் கட்டுக்குள் கொண்டு வரப் பார்த்தார்கள். அப்போது லெபானனின் பிரஜைகள் 'லபோ லபோ' என்று அடித்துக்கொண்டு பிரஞ்சு முயற்சியைத் தோற்கடித்தார்கள்.

இப்போது மீண்டும் நல்ல வேளை பார்த்து டிகாலே ஸிரியாவை பிரஞ்சு சாம்ராஜ்யச் சிறையில் போட்டுவிடப் பார்த்தார். ஸிரியாவில் ஏற்கெனவே இருந்த பிரஞ்சுத் துருப்புகளுக்குப் பக்கபலமாகப் புதிய துருப்புகளைக் கொண்டு இறக்கினார். எனவே, மீண்டும் ஸிரியா லெபானனில் பெருங் கூக்குரல் எழுந்தது. கலகமும் உண்டாயிற்று. மகாலே அடியுண்டு பின்வாங்கினார். ஸிரியா மக்கள் சுதந்திரக் கொடி தூக்கினார்கள். இப்போது தங்கள் நகரிலுள்ள வீதிகளில் பிரஞ்சுப் பெயர்களையெல்லாம் அழித்து வருகிறார்கள். பிரான்சு தேசம், பிரஞ்சு பாஷை, பிரஞ்சு மக்கள் எல்லாரையும் தாங்கள் அடிவயிற்றிலிருந்து வெறுப்பாக ஸிரியர்கள் இப்போது சொல்கிறார்கள்.

சமய சந்தர்ப்பம் அறிந்து தங்களுடைய சக்தியைத் தக்கபடி பயன்படுத்தி வெற்றி பெற்ற ஸிரியாவின் மக்களை நாம் மனமார வாழ்த்துகிறோம்.

சர்ச்சில் சுதந்திர வீரர்!
மேற்படி ஸிரியா பிரஞ்சுத் தகராறில் ஒரு பெரிய விசேஷம் என்னவென்றால், சர்ச்சில் பெரிய சுதந்திர வீரராக உலகத்தின் முன்னிலையில் பெயர் வாங்கிக்கொண்டதுதான்! ஜான்புல் உலகமெங்கும் எத்தனையோ தேசங்களின் சுதந்திரத்தைப் பறித்து அந்தந்த தேசங்களின் தலையில் அழுத்தமாய் உட்கார்ந்துகொண்டிருக்கிறான். இந்த மாபெரும் யுத்தத்திலேகூட அவனை அந்தந்த இடத்திலிருந்து ஒரு அங்குலமாவது அப்புறப்படுத்த முடியவில்லை!

ஆனால், ஜான்புல்லின் அதிர்ஷ்டத்தைப் பாருங்கள்! அவன் பக்கத்தில் அதிர்ஷ்டம் இருப்பதனாலேயே மற்றவர்களுடைய புத்தி மழுங்கி அசட்டுத்தனமான காரியங்களைச் செய்கிறார்கள். ஸிரியாவில் டிகால் அத்தகைய அசட்டுக் காரியத்தைச் செய்யப் போக, ஸிரிய மக்கள் கூகூ என்று கூச்சலிட, சர்ச்சில் இந்தச் சச்சரவில் தலையிட்டு, டிகாலை அதட்டி நிறுத்தி, ஸிரிய மக்களின் சுதந்திரத்தைத் தாங்கிப் பேசி, 'உலகில் தீனர்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்குச் சர்ச்சிலைத் தவிர வேறு யார்?" என்ற பெயரை வாங்கிக் கொண்டார். ஸிரியர்களை பிரிட்டிஷார்தான் பிரஞ்சுக்காரர்களுக்கு விரோதமாகத் தூண்டிவிட்டதாக என்னதான் டிகாலே குற்றம் சுமத்தினாலும், ஸிரியாவில் பிரஞ்சுக்காரர்களை வெறுத்து பிரிட்டிஷாரை உதவிக்கு அழைத்ததையும் அவரால் மறுக்க முடியவில்லை! எல்லாவற்றிற்கும் காரணம், ஜான்புல்லின் யோக ஜாதகந்தான்!

எச்சரிக்கை!
ஆனபோதிலும், ஸிரிய மக்கள் ஒரு விஷயத்தில் எச்சரிக்கையா யிருக்க வேண்டியது அவசியமாகும். இந்தியா தேசத்திலயும் ஒரு சமயம் இப்படித்தான் பிரஞ்சுக்காரர்களுக்கும் பிரிட்டிஷ்காரர்களுக்கும் தகராறுகள் நடந்தன. கடைசியில் பிரஞ்சுக்காரர்களை பிரிட்டிஷார் தோற்கடித்துத் துரத்திவிட்டு, அவர்கள் விட்டுப்போன இடங்களோடு மற்ற இடங்களையும் சேர்த்துத் தாங்கள் அழுத்தமாக உட்கார்ந்து கொண்டார்கள். இன்னமும் நகர மாட்டோம் என்கிறார்கள். இந்தியாவில் நடந்தது ஸிரியாவில் நடக்காதபடி பார்த்துக்க் கொள்ள வேண்டும்.

சென்ற வருஷத்தில் இதே பத்தியில், யுத்தத்தில் வெற்றி யார் அடைவார்கள்? பிரிட்டிஜா, ருஷியாவா, அமெரிக்கவா?" என்று விவாதித்தபோது, யத்தத்தில் வெற்றி யடைவது யாராயிருந்தாலும், யுத்தத்தினால் லாபம் அடையப் போவது மட்டம் பிரிட்டன்தான்! யுத்தம் முடிந்த பிறகு உலகத்தில் இன்னும் சில புதிய பகுதிகள் சிவப்பு வர்ணம் திட்டப்பெற்று விளங்கும்!" என்று எழுதியிருந்தோம். இந்
நம் கூற்றை மெய்ப்படுத்துவதற்காக ஸிரியா பிரிட்டனின் கீழ் நிரந்தரமாக வந்து விடுவதை நாம் விரும்பவில்லை. அப்புறம் கடவுள் இருக்கிறார்!

(10.6.1945 கல்கி தலையங்கத்திலிருந்து…)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com