பெருமாளே ஆசிர்வதித்த பிரமாண்ட நாயகன்: பாம்பே ஞானம் பேட்டி!

பெருமாளே ஆசிர்வதித்த பிரமாண்ட நாயகன்: பாம்பே ஞானம் பேட்டி!

நேர்காணல்: சாருலதா ராஜகோபால்.

தமிழ் நாடக உலகில் தவிர்க்க முடியாத ஆளுமை பாம்பே ஞானம். மகாலஷ்மி மகளிர் குழு ஆரம்பித்து, அனைத்து கதாபாத்திரங்களிலும் முழுக்க பெண்களே நடிக்கும் வகையில் பல சமூக நாடகங்கள் தயாரித்து கதை வசனம், இயக்கம் என அனைத்திலும் தடம் பதித்தவர். நடிப்பிலும் தனி முத்திரை பதித்தவர். ஆன்மிக நாடகங்களை தன் தனி பாணியில் சிறப்பாக நடத்தி வருபவர் என்று பல சிறப்புகள் திருமதி. பாம்பே ஞானத்துக்கு உண்டு.

இப்போது திருப்பதி வெங்கடேச பெருமாள் வரலாற்றை 'பிரம்மாண்ட நாயகன்' என்ற பெயரில் தெலுங்கிலும் தமிழிலும் ஒரே நேரத்தில் இயக்கிய வகையில் சினிமாவிலும் வெற்றிகரமாகக் கால்பதித்துள்ளார் பாம்பே ஞானம். அடுத்து காஞ்சி மாமுனிவர் குறித்து நாடகத் தொடர் ஆரம்பிக்கும் மும்முரத்தில் இருந்த அவரிடம் கல்கி ஆன்லைனுக்காக பிரத்தியேகமாக சந்தித்துப் பேசினோம்.

நாடகத்துறையில் உங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

எங்கள் குடும்பம் கும்பகோணம், மாயவரம் (தற்போது மயிலாடுதுறை) அருகில் ஆனைதாண்டவபுரம், தேதியூர் என்று கிராமங்களை பூர்வீகமாக கொண்டது. '18 வாத்திம கிராமங்கள்' என அழைக்கப்படும் அங்கே மிகவும் ஆசாரத்துடன் வளர்க்கப்பட்டேன். உடன்பிறந்த யாருக்கும் இல்லாத ஓர் ஆர்வமாக நடனம், நாடகங்கள், விளையாட்டு என எல்லாவற்றிலும் எனக்கிருந்தது. பாட்டு கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்து கொடுத்தபோது ஏனோ அதை என் மனம் நாடவில்லை. அந்தக்கால வழக்கம் போல் 14 வயதில் என் திருமணம் நடந்தது. மாமனார், மாமியாரிடம் பயம் கலந்து மரியாதை எனக்கு இருந்தது.

கிராமத்தில் அதிகம் படிக்க வாய்ப்பில்லாததால், படித்த வேலை பார்க்கும் கணவரை சார்ந்த வாழ்க்கை என இருந்தபோதும் மனதில் பள்ளி நாட்களில் சிறிய நாடகங்களில் சிறிய வேடங்களில் நடித்த நினைவுகள் இருந்தன. அதன் பின்னர் என் 40 வயதில் என் கணவருக்கு பாம்பேயில் வேலை கிடைத்ததால் அங்கு மாதுங்காவில் குடியேறினோம். அங்கே எங்கள் அடுத்த வீட்டில் வசித்த கனகா சீனிவாசன் எனும் நடனமணி அறிமுகம் ஆனார். அவர் மூலம் மாதுங்கா நாடக சொசைட்டி நடத்துபவர்கள் அறிமுகம் ஆனார்கள். பேச்சுவாக்கில் என் நடிப்பு ஆர்வத்தைப் பற்றி சொல்லவும், ''செயின்ட் தியாகராஜர்'' எனும் தியாகராஜர் சுவாமிகள் வரலாறு நாடகத்தில் அவரின் மனைவி யாக சிறிய பாத்திரம் கிடைத்தது. அதுவே என் வாழ்வில் முதல் திருப்பம். சண்முகானந்தா ஹாலில் அந்த சிறிய பாத்திரத்தில் நான் சிறப்பாக செய்ததாக, 'டைம்ஸ் ஆப் இந்தியா' பத்திரிகை பெரிதாக எழுதியது மிகவும் தூண்டுகோலாக ஆனது.

பிறகு ஒரு நண்பர் வரதட்சணை கொடுமை பற்றி ஒரு ஸ்கிரிப்ட் எழுதுமாறு என்னைக் கேட்க, நானும் எழுதினேன். அதை மேடை நாடகம் ஆக்கி என்னைப்போல நடிக்க ஆர்வமுள்ள மகளிரை வைத்து நடத்துமாறு நண்பர்கள் ஆலோசனை கூறினர். அக்காலத்தில் ன்னிய ஆடவருடன் பெண்கள் சேர்ந்து நடிப்பதில் தயக்கம் இருந்ததால், அனைத்து மகளிர் கொண்ட நாடகக் குழுவை உருவாக்கினோம். இந்த அனைத்து மகளிர் நாடகக் குழுவின் முதல் நாடகம் சிந்திக்க வைத்த சீதனம்! ஆண்கள் வேடத்தில் பெண்களின் குரல் வேறுபாடு இருந்ததுதான்.. ஆனால் நாடகம் சுவாரசியமாக இருந்ததால், ரசிகர்கள் இதை பெரிதுபடுத்தவைல்லை. எங்கள் நாடகங்கள் பெண்கள் மற்றும் சமுதாய பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொண்டதாக நடத்தினோம். 'அக்கரை பச்சை' வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் நம் குழந்தைகள் சந்திக்கும் இழப்புகள், பெற்றோரிடம் பாசம் அதிகம் என ஒரு விவாதப்பொருளை மையமாக வைத்து நடத்திய ''பாசத்தின் பரிமாணம்.', இல்லத்தின் ஏக்கங்கள் பெற்றோரை முதியோர் இல்லத்திற்கு கொண்டு விடுவது குறித்த ' இல்லத்தின் ஏக்கங்கள்' நாடகம், தலைமுறை இடைவெளி குறித்த 'அபினயா' நாடகம் என்று பல நடத்தினோம்.

'பெண்களால் செய்ய முடியுமா?' என தோன்றக்கூடிய கொலை பற்றிய திகில் நாடகமும் செய்தோம். இப்படி 24 ஆண்டுகள் போன நிலையில் 25-ம் ஆண்டு ஆன்மிக நாடகங்கள் பக்கம் திரும்பினோம். 'பகவன் நாம போதேந்திராள்' 2014-ம் ஆண்டு காஞ்சி மடத்தின் வழிவந்த, ராம நாமத்தின் மகிமையை உலகிற்கு உணர்த்திய மகான் போதேந்திராள் பற்றியது! கோவிந்தபுரத்தில் அதிஷ்டானம் கொண்டு இன்றும் அருள்புரிந்து கொண்டிருக்கும் மகான். அவரால் ராம நாமத்தை ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது குறித்து விவரமாக அதில் காண்பிக்கப்பட்டது. இது குறித்து காஞ்சி சுவாமிகளின் ஆசிவாங்க சென்றபோது அவர் ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை அளித்து, அவர் பற்றிய நாடகம் போட ஆசியளித்தார். அதுதான், 'பஜ கோவிந்தம்' என்ற பெயருடன் ஸ்ரீ மகா சுவாமிகளின் பாத்திரமும் அமைக்கப்பட்ட முக்கிய நாடகம்.

உங்கள் கவனம் ஆன்மிக நாடகங்கள் பக்கம் திரும்பியது எப்போது?

அஷ்டபதி இயற்றிய ஸ்ரீ ஜெயதேவரைப் பற்றி எடுத்ததுதான் முதல் ஆன்மீக நாடகம். அடுத்து தானாகவே பகவான் ஸ்ரீ ரமணர், சீரடி சாய்பாபா என தொடர்ந்தது. இவை அனைத்திலும் பெண்கள் மட்டுமே நடிக்கிறார்கள். என் சிறிதும் தெரியாதபடி நடத்தப்பட்ட நாடகங்கள். அதுவும் பாபா நாடகத்தில் மழையை அவர் கட்டுப்படுத்தும் வல்லமையை காண்பிக்க மேடையிலும் மற்றும் ரசிகர்களும் நனையும்விதம் மழையே பொழிய வைத்து,சொட்டசொட்ட நனைய வைத்து பெரிதும் பாராட்டு பெற்றோம். அடுத்து ராமகிருஷ்ண பரமஹம்சர் நாடகம் போடும்போது – கொரோனாவால் உலகமே பாதிப்படைந்த நிலையில் மேடை நாடகம் தொடரமுடியாத நிலை ஆகிவிட்டது.

வசனங்களை முன்கூட்டியே பேசி பதிவு செய்து நாடகத்தின்போது உபயோகிக்க ஆரம்பித்தது ஏன்?

ஆன்மீநாடகங்களைப் பொறுத்தவரை மகான்களின் குரல்கள் பெண் குரலாக இருக்குமானால் ரசிக்க முடியாது என தோன்றியது. இந்தவகை நாடகத்தின் நடுவே வேதங்கள் சொல்ல வேண்டி வரும். அவற்றையெல்லாம் முன்கூட்டியே தவறின்றி பேசி ரெக்கார்டு செய்தால் நன்றாக இருக்கு என்று தோன்றியது. அதனால்தான் ரெக்கார்டட் குரலை பயன்படுத்த ஆரம்பித்தோம். ஆனால், மேடையில் நேரடியாக பேசுவதைவிட இது கடினம். மைமிங் முறையில், மெஷின் கட்டுப்பாட்டில் நாம் பேசுவதுபோல் சரியாக நடிப்பது சவாலான விஷயம். நாமே பேசுவது வேறு, பதிவு செய்த குரலுக்கு இணையாக வாயசைப்பது வேறு. மிகவும் கவனம் செலுத்த வேண்டிய செயல்.

மற்ற நாடக குழுக்களிலிருந்து நீங்கள் எவ்வாறு வித்தியாசப்படுகிறீர்கள்?

நாடகத்தில் நடிப்பவர்கள் அனைவரும் பெண்கள் என்பதே புதுமையான விஷயம்தான். அதிலும், ஆன்மிக நாடகங்கள் மேடையில் பார்க்கும்போது சினிமாவுக்கு இணையாக மேடை அமைப்பு செட்டிங் செய்வது. அந்தந்த காலகட்டத்தில் இருப்பது போல் உடை நாகரிகம் பேச்சுவழக்கு பின்பற்றுதல் ஆகியவை எங்களின் ஸ்பெஷாலிடி. எங்கள் நாடகங்களில் டிக்கட் வசூலிக்காமல் போட ஆரம்பித்தோம். ஆன்மிக விஷயங்களை அனைவருக்கும் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். நாடகத்துக்காக பத்து ரூபாய்கூட செலவு செய்ய இயலாத எளிய மக்களும் கண்டுகளிக்க ஏற்படுத்திக்கொடுத்த வாய்ப்பிது. உண்டியல் வைப்போம். அதில் இயன்றவர்கள் போடும் பணம் எங்கள் முக்கிய தேவைகளுக்கு ஈடுசெய்தது. லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை என்று பயணித்தோம்.

தியாகராஜர் எப்படி வந்தார்?

லாக்டவுனில் எல்லா நாடகங்களும் கேன்சல் ஆகி வீட்டிலேயே இருந்தபோது மகாபெரியவா ஒரு பெண்ணின் சொப்பனத்தில் ''அவளை தியாகராஜரின் வாழ்வை போடச்சொல்'' என்றாராம். இதை எப்படி செய்வது என்று யோசித்தபோது, ''ஆன்லைனில் செய்யேன்'' என்று தோழி ஐடியா கொடுத்தாள். இதுவரை ஷூட்டிங்கில் நடித்துள்ளேன். ஆனால் நடத்தியதில்லை. இயக்கியதில்லை எனினும் செய்து பார்க்க முடிவு செய்தேன். தியாக ப்ரம்மத்தின் வாழ்க்கையை, பிறப்பு முதல் அவர் குடும்பம், சந்தித்த பிரச்னைகள், இயற்றிய பாடல்கள், பூஜை முறை என சமாதி வரை சிறிய அளவில் ஆனால் விவரமான சினிமாவாக வெளிக்கொணர்ந்தோம். அது மக்களிடம் பெரிதும் சென்றடைந்து ஆதரவும் அதிகம் பெற்றது.

ப்ரம்மாண்ட நாயகன் பற்றி சொல்லுங்களேன்?

தியாகராஜர் நாடகத்துடன் 'கோவிந்தா கோவிந்தா'' என முடித்துக்கொள்ள நினைத்தோம். ஆனால் பெரியவா சில உணர்த்துதல்கள் மூலம் வெங்கடேச பெருமாள் குறித்து செய்ய உத்தரவு தந்தார். முதலில்

சாதாரணமாகத்தான் ஆரம்பிக்கப்பட்டது. அவர் ஏழுமலையான் பிரம்மாண்டமானவர் ஆயிற்றே. அப்படியே கொண்டு சென்றுவிட்டார். ஏழுமலைகள் காண்பிக்க, இயற்கையான சூழலில் அமைய வெளிப்புற படப்பிடிப்பு நடத்த வேண்டி வந்தது. கிட்டதட்ட 120 நபர்கள் பங்கேற்றனர். மலை உச்சியில் கோடையில் படப்பிடிப்பு நடத்தியதில் வெயிலின் உக்கிரம் அனைவரையும் பாதித்தது. தோல் நோய், கொப்புளங்கள், கட்டிகள் ஏற்பட்டு எங்கள் நிறம் கருமையாக மாறியது. எப்படியோ அந்த பெருமாளின் அருளால் ஷூட்டிங் முடிந்து, திரைப்படம் இப்போது இசையமைப்பிற்கு சென்றுள்ளது. விரைவில் திரைக்கு வரும்.

உண்மையில் 'பிரமாண்ட நாயகன்' படத்துக்கான் தொடக்கப் புள்ளி என் மனதில் காஞ்சியில் அத்திவரதர் எழுந்த நேரத்தில் ஆரம்பித்தது. ஓரிக்கை மணிமண்டபத்தில் மகாபெரியவர் திருவுருவத்தை தரிசனம் செய்துவிட்டு வெளியில் வந்தேன். அப்போது நெற்றியில் நாமம் அணிந்த உயரமான ஒரு மனிதர் என் எதிரில் வந்தார். என்னிடம் இரண்டு பவழங்களையும் ஒரு ஜேட் கல்லையும் கொடுத்தார். நான் அவரிடம் ''எதற்கு கொடுக்கிறீர்கள், இதற்கான பணம் எவ்வளவு?" என்று கேட்டேன், அதற்கு அவர் ''நான் திருப்பதியில் நகை வியாபாரி உங்களுக்கு என் அன்பளிப்பு'' என்று கூறிவிட்டு அங்கிருந்து விரைந்து சென்று விட்டார். திருப்பதி ஏழுமலையானே நேரில் வந்து ஆசிர்வதித்ததுபோல் இருந்தது. அதையே எனக்கான உத்திரவாக எடுத்துக்கொண்டு பிரம்மாண்ட நாயகன் ஆரம்பித்தேன்.

அடுத்து என்ன ஐடியா?

ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் எங்கள் நாடகங்களின் உண்மைத்தன்மை பற்றி அறிந்துள்ளதால் ஸ்ரீ மஹா பெரியவா குறித்து விவரமாக எடுக்கச் சொல்லி புத்தகங்கள் தந்து ஆசிர்வாதம் செய்துள்ளார். 'நடமாடும் தெய்வம்' என்ற பெயரில் நெடுந்தொடராக ஆரம்பிக்க உள்ளோம். அவரின் வாழ்க்கை வரலாற்று சிறப்புகள் அவர் அருளால் விரைவில் திரையில் வெளியாகும்.

  • அமைதியாகச் சொல்லி அன்புடன் விடைகொடுத்தார் திருமதி. பாம்பே ஞானம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com