மிளகாய் தூள் போட்டு பிரியாணி செஞ்சேன்…செம காமெடி ஆச்சு!

மிளகாய் தூள் போட்டு பிரியாணி செஞ்சேன்…செம காமெடி ஆச்சு!
-நேர்காணல்: சேலம் சுபா.

"மேடம் ஷாட் ரெடி" குரலைக் கேட்டதும் "கொஞ்ச நேரம் இருக்கியளா நா போயிட்டு வாரேன் .." கொஞ்சும் வெள்ளந்திக் குரலில் சொல்லி சென்றார்  தீபா சங்கர் .

சினிமாவிலும் சரி.. சின்னத் திரையிலும் சரி.. எத்தனை பேர் நடித்தாலும் தன் தனித்திறமையால், கிராமத்து மணம் வீசும் வெள்ளந்தியான பேச்சால் ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொள்கிறார்.  இவர் திரையில் வந்தாலே எல்லோரும் ரசிக்கிறார்கள். நகைச்சுவையை தனது அடையாளமாக மாற்றிக்கொண்டாலும் சமூகம் மேல் அக்கறையுடனும் பேசுகிறார் இவர் .

பிசியான நேரத்திலும் நமக்கு நேரம் ஒதுக்கிப் பேசினார். ''ம்.. கேள்விகளைக் கேளுங்க அக்கா..'' என்று வந்து அமர்ந்தார், தனக்கே உரித்தான மல்லிகைப்பூ சிரிப்புடன்!

உங்களைப் பற்றி சொல்லுங்களேன் ?

பிறந்த ஊர் தூத்துக்குடி .புகுந்த ஊர் திருச்செந்தூர். .அம்மா அமிர்தவள்ளி. அரசுப்பணியில் வேளாண்மைத்துறையில இருந்தவர் ..அப்பா கணேசன் .வாத்தியார் . எனக்கு ஒரு தங்கை ஒரு அண்ணன் ஒரு தம்பி கணவர் சங்கர் . கணீஸ் சேதுராம்னு ரெண்டு மகன்கள்.பெரியவன் ஒன்பதாம் வகுப்பும் சின்னவன் ஆறாம் வகுப்பும் படிக்கிறாங்க .இப்ப நாங்க இருக்கறது திருவள்ளூர்ல..இப்ப என் வயசு நாப்பது .நிறம் கறுப்பு .ஆனா மனசு வெள்ளை .இதுதான் நான் .

படிப்பு ?

படிப்புல அவ்வளவு நாட்டம் இல்ல. சின்ன வயசுல இருந்தே கையைக் காலை ஆட்டி டான்ஸ் ஆடிக்கிட்டே இருப்பேன் .நான் படிச்ச ஸ்கூல்ல டான்ஸ் ஆட வாய்ப்பு தரலங்கறது மனசுல வலி தந்தாலும்  டான்ஸ் மேலத்தான் தீராத காதல் .எப்படியாவது  ஸ்டேஜுல டான்ஸ் ஆடணும்னு ஒரே வெறிதான் .

அம்மாகிட்ட என் ஆசைய சொன்னேன் .அவங்கதான் எனக்கு தெய்வம் .என் ஆசைய புரிஞ்சிக்கிட்டு அப்பாகிட்ட சொல்லி தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில சேர்த்து விட்டாங்க மூன்றுவருஷம் அங்க நாட்டியம் கத்துக்கிட்டேன்.. அதுக்கப்புறம் சென்னை போய் கலாசேத்ராவுல மேற்படிப்பு படிக்க ஆசைப்பட்டேன் .ஆனா இடம் கிடைக்கல. அப்புறம் சென்னை, கிரீன்வேஸ் ரோட்டுல இருக்கற  அரசு இசைப்பள்ளியில் சேர்ந்து அஞ்சு வருஷம் படிச்சு 'நாட்டிய நட்டுவாங்க நன்மணி' பட்டம் வாங்கினேன் .

என் குடும்பத்துல என்னயத் தவிர எல்லோருமே படிச்சவங்கதான் .எனக்குத்தான் கலை மேல ஆசை வந்துடுச்சு . அண்ணன், அண்ணி இரண்டு பெரும் இஞ்சீனியர்ங்கதான் . டெல்லியில இருக்காங்க .தம்பி எங்க பொறந்த ஊரான முத்தையாபுரத்துல ஐ டி கம்பெனி சொந்தமா நடத்துறான் .இப்பத்தான் அம்மா இறந்து ஒன்றரை வருசமாச்சு! ''தீபாவோட நடிப்புக்கு தடை சொல்லாத மாப்பிள்ளைதான் வேணும்'' னு அம்மா தேடிப் பிடிச்சு  சங்கரை எனக்குக் கல்யாணம் பண்ணி வெச்சாங்க. அவங்க ஆசிர்வாதம்தான் இன்னிக்கு நான் இத்தனை புகழோட இருக்கேன் .

உங்கள் பேச்சு வழக்கு எப்பவுமே இப்படித்தானா ?

ஆமா..எங்க அம்மாவும் இப்படித்தா பேசுவா .. நானும் என் தங்கையும்கூட இப்படித்தான் பேசுவோம் .அண்ணன், தம்பில்லாம் ஐ டி பீல்டுல இருக்கறதால பேச்சு மாறும் .எங்க அம்மாவோட வேலையினால பல ஊர் போனோம்..அதனாலதான் பல ஊர் பாஷை எல்லாம் நான் கலந்து கட்டிப் பேசறத எல்லோரும் ரசிக்கிறீங்க..என்ன நான் அப்பப்ப கொஞ்சம் எமோஷனல் ஆகிடுவேன் ..அப்ப என்னை அறியாம நான் பேசுற சில விஷயங்களும் க்ளிக் ஆகிடும் .இப்படித்தான் பாருங்க ''.மாயாண்டி குடும்பத்தார்'' படத்துல தம்பிகிட்ட கோவிச்சுக்கிட்டு சாப்பிடாம போற சீன்ல, ''எங்க அப்பா செத்துட்டாருன்னு நினைச்சய்யா'' ன்னு நானே சொந்த டைலாக்கை பேசினேன் .ஒரே டேக்கில ஓகே ஆச்சு .அந்த சீன எல்லோரும் பாராட்டினாங்க .நான் எந்த அளவுக்கு எமோஷனல் ஆவேனோ அந்த அளவுக்கு உடனே சிரிக்கவும் செய்துடுவேன் .கண்ணுல தண்ணியோட சிரிப்பேன் .யாராவது கொஞ்சம் என்கிட்டே அன்பா பேசிட்டாப் போதும் .அவங்களே போதும்னு சொல்ற அளவுக்கு வாய் மூடாம பேசுவேன் .

குக் வித் கோமாளியில உங்களை எல்லோரும் ரசிச்சாங்களே ? நல்லா சமைக்கத் தெரியுமா ?

யார் சொன்னது ? சமையலாவது ஒண்ணாவது ? காலையில் நாலரை மணிக்கு எழுந்து ஷூட்டிங் கிளம்பத்தான் நேரம் சரியா இருக்குது .டப்பிங் எல்லாம் பேசிட்டு நடுநிசியில வீட்டுக்கு வந்து அப்படியே சாஞ்சிருவேன் .கணவர் சங்கர் இல்லாட்டி நான் இல்ல! அவர்தான் மகன்கள பார்த்துக்கிட்டு எனக்கும் தேவையானத செஞ்சி மனசு கோணாம நடந்துப்பாரு.

சரி விசயத்துக்கு வாரேன். முத நாளு பிரியாணி பண்ண சொன்னாங்க .சரின்னுட்டு வெறும் மிளகாப் பொடிய போட்டு பண்ணினா என் நேரமோ என்னமோ  பிரியாணிய சூப்பர்னு சொல்லிப்புட்டாங்க .

ஆனா அதுக்கப்புறம்தான் காமெடியே .அவங்க சொன்ன எந்த ஐட்டமும் எனக்கு சரியா வரலை. ''என்னமா.. நீங்க தூத்துக்குடி பக்கம்தானே? உங்க பக்கம் வெக்கற கருவாட்டுக் குழம்பு வாசத்துல ஊரே மணக்கும்னு சொல்வாங்க நீங்க என்னன்னா ..சரியா சமைங்க..''ன்னு அவங்க கெஞ்சினாங்க. ஆனா, சமையல் என்ன நாட்டியமா.. கையக் காலை அசைச்சா சரியா வரதுக்கு?! நானும் அழுவாத குறையா ''எனக்கு இப்படித்தான் சமைக்க வரும்''னு கெஞ்ச ..ஒருவழியா ஷோவ விட்டு எலிமினேட் ஆகிட்டேன் .அப்பாடா தப்பிச்சேன் சாமின்னு இருந்தது .ஆனா ஒண்ணு.. அந்த ஷோவுல நான் அடிச்ச லூட்டியை எல்லாரும் ரசிச்சாங்க. அதான் எனக்கு பேரும் வாங்கித் தந்துச்சு .

கடவுள் நம்பிக்கை உண்டா ?

கல்யாணமாகி இரண்டு பிள்ளைங்க பொறந்த பின்ன அவ்வளவா சான்ஸ் இல்லாம கலங்கிப்போய் இருந்தேன் .என்னதான் நடிச்சாலும் பெருசா அங்கீகாரம்லாம் இல்ல..சரின்னு சென்னைய விட்டுட்டு தூத்துகுடிக்குப் போய் பள்ளியில டீச்சரா வேல பார்த்தேன் .ரொம்ப கஷ்டம்தான் .என் அம்மாதான் ''குலதெய்வத்துக்கிட்ட உன் குறைய சொல்லிட்டு வா''ன்னு சொன்னாங்க .சரின்னு என் குலசாமி கோவிலுக்கு போய் என் மனக்குறையை சொல்லிட்டு வீட்டுக்கு வந்தேன் பாருங்க..

.அன்னிக்கே இயக்குனர் பாண்டிராஜ் தம்பி கிட்ட இருந்து போனு..'கடைக்குட்டி சிங்கம்' படத்துல கார்த்தி தம்பியோட அக்காவா நடிக்கிற வாய்ப்பு தந்தாரு .மனசெல்லாம் மத்தாப்புத்தான் .பெருசா கடவுள் நம்பிக்கையெல்லாம் இல்லைனாலும், நமக்கும் மேல ஒரு சக்தி உண்டுன்னு நம்ப வெச்சது இந்த சான்ஸ்! .என்னை மக்கள் கவனிக்க ஆரம்பிச்சது அந்தப் படத்திலதான்! .அதுக்கப்புறம் உங்களுக்கே தெரியும் ..ஒரே ஏறுமுகம்தான்..

நீங்க வாங்கின முதல் சம்பளம்..?

நா சென்னையில தங்கி நாட்டியம் படிச்சப்ப ஒரு பேப்பர்ல மெட்டி ஒலி சீரியலுக்கு நடிக்க ஆட்கள் தேவைன்னு விளம்பரம் வந்தது .இப்பத்தான் டிக் டாக் எல்லாம் .நா அப்பவே எல்லா நடிக நடிகைகள் மாதிரி நடிச்சு சேஷ்டைகள் பண்ணுவேன் .என் பிரண்டுதான் என்னை போய் திருமுருகன் சாரை பார்க்க சொன்னா.. சாருக்கு என் கலர் பிடிச்சு வாய்ப்பு தந்தாரு .முத சம்பளமா 350 ரூபாய் கையில வாங்கின நிமிடம் எனக்கு சொர்க்கத்துல பறக்கற மாதிரி இருந்தது .

அப்படியே அம்மா கையில கொண்டு போய் தந்தேன் ..அம்மா  துணி வாங்கித் தந்தாங்க .இன்னிக்கு எவ்வளவு சம்பாரிச்சாலும் அந்த 350 ரூபாய்தான் எனக்கு கோடி ரூபாய்க்கு சமம் .அப்புறம் பணத்தைப்பத்திக் கேட்டதால,  இதையும் சொல்லிடறேன் .இந்த கொரானா வந்தாலும் வந்தது.. பணம் இருக்கறவங்க, இல்லாதவங்கனு பாகுபாடு காட்டாம எல்லோரையும் சரிசமமா ஆட்டிப்படைச்சிருச்சு. பணத்துப் பின்னாடி ஓடி களைச்சுப் போய் வாழ்க்கையைத் தொலைக்காம – கிடைக்கற நேரத்த குடும்பத்தோட சந்தோசமா கழிங்க..

உங்களுக்கு கிடைத்த பாராட்டுகளில் நெகிழ வைத்தது ?

நிறைய பேர் பாராட்டினாலும் சன் டிவியில ''டாக்டர் படத்துல உங்களுக்குப் பிடிச்சவர் யாரு?'' ன்னு தம்பி சிவகார்த்திகேயனைக் கேட்டதுக்கு, ''எனக்கு தீபாக்காவைத் தான் பிடிக்கும்''னு சொன்னதை எனக்குக் கிடைச்ச மிகப்பெரிய பாராட்டா நினைக்கிறன். அது மட்டுமில்லாம எனக்கு அங்கீகாரம் தந்து ரசிக்கிற மக்களோட ஒவ்வொரு கைத்தட்டலையும் ஒவ்வொரு விருதா நினைச்சு பெருமைப்படறேன் .

மறக்க முடியாத நகைச்சுவை சம்பவம்..?

ஆஹா ..கண்டிப்பா .சின்ன வயசுல எனக்கு மசால் வடைன்னா ரொம்ப பிடிக்கும் .கடைப்பக்கம் போறப்ப எல்லாம் வடையப் பாத்துட்டு அழுது அடம்பிடிச்சு நிப்பேனாம். எங்க அப்பா அதெல்லாம் அந்தக் கடைக்காரர் சாப்பிடறதுக்குன்னு சொல்லுவாராம். நானும் நம்பி அம்புட்டு வடையும் இவர் ஒருத்தரே திங்கறாரேன்னு திட்டுவேனாம்.. .

நானு கல்யாணம் முடியற வர கூட அத்தனை வடையும் கடைக்காரர்தான் தின்னு தீக்கிறார்னு அப்பாவியா நினைப்பேன் .கல்யாணம் முடிஞ்சு ஊர்ப்பக்கம் போறேன் ..அதே கடை ..அதே கடைக்காரர்.அப்பா வடைப்பான்னு கேக்கறேன் ..அதே டையலாக் அப்பா சொல்ல, நானும் அப்படியான்னு வடைகளை பாத்துட்டே ''ஏம்பா.. ரெண்டு பிள்ளை பெத்துட்டேன். இப்பவும் நீன்க சொல்றதை நான் நம்புவேனா?'' ன்னு கேட்டுப்புட்டு ரெண்டு பேரும் சிரிச்சோம். .. . ..

சிரித்தபடி கையாட்டி விட்டு மீண்டும் சூட்டிங் ஸ்பாட்டுக்கு ஓடினார் தீபா

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com