அலைகடலும் உறங்காது; அகக்கடலும் அடங்காது!

அலைகடலும் உறங்காது; அகக்கடலும் அடங்காது!

– அரசியல் விமர்சகர் ப்ரியன்

மீபத்தில் நண்பர் மகள் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக காட்டுமன்னார்கோவில் சென்றிருந்தேன். திருமணத்திற்கு முதல்நாள் மாலையே சென்று விட்டேன். அது அந்தி சாயும் நேரம். "அருகிலுள்ள வீராணம் ஏரிக்கரையில் உலவிவிட்டு வரலாமே" என்று அழைத்தார்கள் நண்பர்கள். "கரும்புத் திண்ண கசக்குமா" என்ன? 'வீராணம் ஏரி' என்றாலே நமக்கு உடனே நினைவுக்கு வருவது 'பொன்னியின் புதல்வரான அமரர் கல்கி எழுதிய, 'பொன்னியின் செல்வன்'தானே! அந்த மகோன்னதமான சரித்திர நாவலில், முதல் அத்தியாயத்திலேயே பொங்குமாங்கடலென விரிந்து பரந்து கிடக்கும் அந்த ஏரியின் அழகை, கம்பீரத்தை அற்புதமாக வர்ணித்திருப்பாரே கல்கி. அவரது பார்வையில் அது வீர நாராயண ஏரி.

நண்பர்களுடன் கரையில் நடந்தபோது, ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், அமரர் கல்கி எழுதியபடி வாணர் குலத்து வீரன் வந்தியத்தேவன் குதிரையில் பயணித்த காட்சி கண்ணில் விரிந்தது. அது மட்டுமா? வந்தியத்தேவன் பயணித்த அந்த நாள் ஆடிப்பெருக்கு. தமிழர்கள் அந்த விசேஷ நாளை எப்படிச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள் என்பதையும் மிக நேர்த்தியாகப் பதிவு செய்திருப்பார் கல்கி.

இந்த சரித்திர நாவலின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் தொடராக வந்த நிலையில், கதை எந்த ஏரிக்கரையில் துவங்கியதோ அங்கேயே முடியும். கந்தமாறன் வேண்டுகோளின்படி அவன் தங்கை மணிமேகலையைப் பார்க்க வரும் வந்தியத்தேவன், ஏரியில் ஒரு படகில் சென்று, நீராழி மண்டபத்தில் மணிமேகலையைச் சந்திப்பார். அவர் மடியிலேயே உயிரை விடுவார் மணிமேகலை. முதல் அத்தியாயத்தில் கொண்டாட்டமாக, ஏரிக்கரையில் துவங்கும் நாவல், அதே ஏரிக்கரையில் துயரமான சூழலில் முடியும். அன்று ஏரிக்கரையில் உலவிவிட்டு வந்தபின்னர் நெடுநேரம் 'பொன்னியின் செல்வன்' கதாபாத்திரங்கள் நினைவில் சுழன்றபடி இருந்தன.

மரர் கல்கி இந்த நாவலை எழுதத் துவங்கியது 1950ம் வருடம். முதலில் வெளிவந்தபோது எழுச்சிமிகு வரவேற்பைப் பெற்ற அந்த நாவல், 'கல்கி' அவர்கள் மறைவுக்குப் பிறகு 1966ல் கல்கியில் மீண்டும் வெளியிடப்பட்டது. அப்போது எனக்கு அறிமுகமானதுதான் பொன்னியின் செல்வன். பாட்டி, பெரியம்மா, அத்தையின் பெண்கள், சகோதரர் என்று கூட்டுக் குடும்ப வாசம். நுங்கம்பாக்கம் மத்திய சுங்கத் தீர்வை அலுவலகத்தில் கண்காணிப்பாளராக இருந்தார் அத்தையின் கணவர்.
அவர், 'கல்கி' வாசகர். வியாழக்கிழமை மாலையில் அவர் அலுவலகத்திலிருந்து வரும்போது, பையில் காய்கறிகளோடு அந்த வாரம் 'கல்கி'யும் இருக்கும்.

ஒரு நாள் அவர், "அடுத்த வாரம் முதல் 'பொன்னியின் செல்வன்' தொடர் வெளிவரப் போகிறது. நீங்க எல்லாம் அதை விடாது படிக்கணும்" என்றார். இதுபோன்று சொல்லக்கூடியவர் அல்ல அவர். காத்திருந்தோம் அடுத்த வியாழன் மாலை வரை. பையிலிருந்து கல்கியை எடுக்க பலத்த போட்டி. அந்த வாரம் மட்டுமல்ல; அந்தத் தொடர் முடியும் வரை, 'யார் முதலில் படிப்பது என்ற போட்டி தொடர்ந்தது. கோடியக்கரை கடற்கரையில் படகில் சாய்ந்தபடி, "அலை கடலும் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன்" என்று பூங்குழலி பாடும் பாட்டை மனப்பாடம் செய்து பாடுவோம். இப்படி நான்கு வருடங்கள் எங்கள் உணர்வுகளோடு ஒன்றிப்போனது பொன்னியின் செல்வன்.

டைசி வாரம் முடிந்தவுடன், ஒரு வெறுமை தட்டியது. அடுத்த வாரம் காய்கறி பையுடன் வந்த 'கல்கி'யை மறுநாள் காலை வரை யாரும் கண்டுகொள்ளவில்லை. கடைசியில் ஒன்பது கேள்விகளையும் எழுப்பி அதற்கான பதில்களையும் 'கல்கி' சொல்லியிருப்பார். இதுகுறித்த விவாதம் பல நாட்கள் குடும்பத்தில் நடந்தது. "அருள்மொழிவர்மன், தனக்கு வாய்ப்பு இருந்தும், மக்கள் விருப்பம் அவருக்கு ஆதரவாக இருந்தாலும் தான் பட்டம் ஏற்றுக்கொள்ளாமல் தனது சிறிய தகப்பன் முறையிலிருந்த உத்தம சோழனுக்கு பட்டம் கட்டியது பெருத்த ஏமாற்றம். ஆனால் இதை, "சரித்திரத்திலேயே இணையற்ற சம்பவம்" என்று வர்ணித்திருப்பார் கல்கி.

படித்து முடித்தவுடன் குடும்பச் சூழல் காரணமாக, 'நாரதர்' என்ற சிறு பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்தேன். அதன் ஆசிரியரான 'நாரதர்' சீனிவாச ராவ் "பத்திரிகையெல்லாம் படிப்பாயா?" என்றார். "ஓ… படிப்பேன் சார். 'கல்கி'யில் 'பொன்னியின் செல்வன்' படித்திருக்கிறேன்." என்றேன்.

'பேஷ்' என்றார் அவர். அமரர் கல்கியைப் போலவே சீனிவாச ராவும் விகடன் குடும்பத்திலிருந்து வந்தவர். 'நாரதரில்' இரண்டு மாத சம்பளத்தில் சேர்த்து வைத்து, மங்கள நூலகத்தில் 'பொன்னியின் செல்வனை' வாங்கினேன். என் பெரியம்மா பையன் அதை மும்பைக்கு எடுத்துக்கொண்டு போய்த் திருப்பித் தராமல் போனது தனிக்கதை. 'பொன்னியின் செல்வன்' அகக்கடலில் ஏற்படுத்திய தாக்கம் என்றும் அடங்காது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com