பொன்னியின் செல்வன் பாதையில்…

பொன்னியின் செல்வன் பாதையில்…

-சுசீலா மாணிக்கம்

அறிமுகம்:

நான் முதன்முதலில் 'பொன்னியின் செல்வன்' வாசித்தது என் முதுகலை கல்லூரி காலத்தில்.

எனது வகுப்புத் தோழன் V. அரவிந்த கேசவன் (இன்று வாழ்க்கைத் துணைவன் (ர்) என்பது தனிக்கதை.), "சுசீலா கண்டிப்பா உன்னோட வாழ்நாள்ல ஒரு தரமாவது 'பொன்னியின் செல்வன் நீ படிக்கணும்" என வற்புறுத்தியபோதும் –

விடுமுறைக்கு செல்லும்போது அத்தனை அத்தியாயங்களையும் கைகளில் திணித்து அனுப்பியபோதும் –

சக தோழன் சொல்லிவிட்டாரே என படிக்க ஆரம்பித்த எனக்கு,பொன்னியின் செல்வனின் ஆழம், கதையோட்டம், கதை மாந்தர்கள், நாவலின் அழகு… மனதை பாடாய் படுத்த ஆரம்பித்துவிட்டது.

வந்தியத்தேவனின் வீரம், குறும்பு – குந்தவையின் ஆளுமை, சமயோசிதம், குந்தவையின் அமைதியான அழகுடன் போட்டியிடும் நந்தினியின் ஆர்ப்பாட்ட அழகு – நந்தினியின் சாகசங்கள் – வானதியின் அச்சம் – பழுவேட்டரையர்களின் 'வீரம் – சேந்தன் அமுதனின் குரல் –
ஊமை ராணியின் பாசம் – கந்தமாறனின் நட்பு – நட்பின் விரிசல் – மணிமேகலையின் அடக்கம், காதல் – ஆதித்த கரிகாலரின் அகால மரணம் – ஆழ்வார்கடியானின் பக்தி – வார்த்தை ஜாலம் – மதுராந்தகனின் ஆசை – சுந்தர சோழரின் படுக்கை – ரவிதாசனின் துரோகம் – பூங்குழலியின் பாடல்…

சில சமயங்களில் எனக்குள் நானே பெருமிதப் பட்டுக் கொள்வதுண்டு. புன்னகைத்துக் கொள்வதுண்டு. பெருமிதம் தவறுதான். புரிகிறது. இருப்பினும் மனதுக்குள் ஓர் இதம்.

திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் –

நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் – ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா வழிகாட்டுதலின் பேரில் அன்னை கல்யாண காமாட்சி அருளை தருமர் வந்திருந்து பெற்றுக்கொண்ட புண்ணிய பூமியான இன்றைய தருமபுரி.

பாண்டிய சேர நாட்டு உறவுகளுடன் எனது இன்றைய அழகான அமைதியான குடும்ப வாழ்வு அமைந்திருப்பது திருச்சீராப்பள்ளியில்தான். சோழ மன்னர்களின் கரங்களும், காலடி தடங்களும் பதிந்த மண்.

இப்படி எல்லாம் பொன்னியன் செல்வனுக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருந்தால் மனதுக்கள் பெருமிதம் வரத்தானே செய்கிறது.

அப்பப்பா… அப்படியே நம் பொன்னியின் செல்வரின் அழகையும் வீரத்தையும் மனதினுள் ரகசியமாய் ரசித்துக் கொள்வதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்…

அறிவிப்பு:

2015-ல் மீண்டுமாய் 'கல்கி' அவர்களின் பொன்னியின் செல்வன் 'கல்கி'யில் தொடராய் வரப் போகிறது எனும் தித்திக்கும் அறிவிப்பை பார்த்தவுடன் ஆரம்பித்த குதூகலம் – சலுகையுடனான சந்தாவையும் கட்டிவிட்டு

வந்திய தேவனுடன் குந்தவை, வானதி, பொன்னியின் செல்வனும் பூங்குழலியும், நந்தினி, பழுவேட்டரையர்களையும்…

எதிர்பார்த்து காத்திருந்த தருணங்கள் –

கரும்பும் கொடுத்து தின்ன காசும் கொடுத்தாற்போல் 'ஆடிப்பெருக்கு மெகா போட்டி' அறிவிப்பு…

மிகுந்த எதிர்பார்ப்புடன் கடந்து சென்ற நாட்கள் –

ஒவ்வொரு படமாய் சேகரிக்கும்போதும் ம்ம்ம்… என்ன கேள்வி கேட்பார்கள்? எப்படி கேட்பார்கள்…

என யோசித்தபடியே போன ஆவல் நிரம்பிய நேரங்கள். ஆடி மாதம் வந்தது. ஆடிப் பெருக்கும் பொங்கியது. ஆனந்தத்தை அள்ளி அள்ளி தந்தது.

போட்டி தந்த விறுவிறுப்பும், வெற்றி தந்த கலகலப்பும் மாறுவதற்குள் அறிவிக்கப்பட்டது எங்கள் வாழ்வின் கனவு – லட்சியம் – பெருமிதம் – கடைசிவரை மறக்க இயலா பயணம் 'பொன்னியின் செல்வன் பாதையில்'…

அறிவிப்பையும் பின் தொடர்ந்த கடிதத்தையும் பார்த்தவுடன் மனம் கொண்டது ஆனந்தமா? அமைதியா?! பரபரப்பா?! பெருமிதமா?! இவை எதுவும் இன்றி சொல்லித் தெரியாத புதிய உணர்வு அது…

கனவு:

பின் நம் கனவுத் தொழிற்சாலை மிக வேகமாய் இயங்கத்தான் ஆரம்பித்துவிட்டது. ஆனந்த உலகில் கனவுகளின் புதுப்புது பரிமாணங்களுடனும், உணர்வுகளுடனும்

வந்தியத் தேவனுடன் சற்று நேர குதிரை பயணம் – பூங்குழலியுடன் படகுப் பயணம் கண்கள் விரித்தபடி கடலைப் பார்த்தபடி – அலைகடலும் ஓய்ந்திரும் பாடலை காது குளிரக் குளிர கேட்டபடி – பல நாள் படகுப் பயணம் – பூங்குழலியின் படகோட்டும் திறமையை வியந்தபடி.

ஆழ்வார்க்கடியாளனின் பக்தி வெறியைப் பார்த்தபடி – சிரித்தபடி – மக்களோடு மக்களாய் நின்று பல நாட்கள் –

நந்தினியின் அழகில் சாதுர்யத்தில் மயங்கி கள்ளுண்ட வண்டாய் அவர் அரண்மைனயில் சில நாட்கள்… மதி மயங்கி பல நாட்கள் –

குந்தவையின் எளிய அழகை புத்தி கூர்மையை கண்டு அதிசயித்தபடி அவர்அரண்மைன பெண்டிருள் ஒருவனாய் வெகு நாட்கள் –

சுந்தர சோழர் அவ்வளவு அழகா! பொன்னியின் செல்வனுமா?! அரசசரும் அரச குமாரருமாய் ராஜமணி மண்டபத்தில் அருகருகே அமர வைத்து அவர்களின் ஒட்டு மொத்த அழகில் சொக்கிப் போய் சில நாட்கள் –

சிவாலய திருப்பணியில் ஈடுபட்டிருக்கும் செம்பியன் மாதேவி அம்மையி்ன் அருகில் அவர் சொல் கேட்கும் ஏவலாட்களுள் ஒருவனாய் பல நேரங்கள்… சிவாலயம் சிவாலயமாக சென்று மகிழ்ச்சியாய் பணிகள் செய்த பல காலங்கள் –

மனதினுள் நிரம்பிவிட்ட ஊமை ராணியின் பின்னால் காடுகளிலும், மலைகளிலும், நீரூற்றுகளிலும், பாசறை பக்கங்களிலும், கடல் அலைகளிலுமாய்… அவரின் அவலக் குரல் கேட்டு மனம் தடுமாறிய பல சமயங்கள் – அவரின் மாசிலா அன்பில் கரைந்தபடி பல நாட்கள்…

இப்படி கனவுத் தொழிற்சாலை. மேலும் மேலும் விரிந்துகொண்டே போக…

எங்கள் 'பொன்னியின் செல்வன் பாதையில்' பயணத்திற்கு உற்சாகமாய் தயாரானோம்.

பயணம்/சந்திப்பு

செப்டம்பர் 23-ஆம் தேதி சாயங்காலம் 6 மணிக்கு திருச்சியிலிருந்து ரயில் மூலம் நான்கு நாட்களுக்கான ஆடைகள்  இத்யாதிகளுடன் கண்கள் நிறைய கனவுகளுடன் புறப்பட்டோம். (என்னவர் என்னை 'கும்பகோணம் ஹோம் ஸ்டே'-ல் விட வந்தார்.)

குடந்தை Junction-ல் இருந்து auto பயணம். ஆனந்தம், அமைதி, எதிர்பார்ப்பு… வந்துவிட்டது home stay. இறக்கியவுடன் 'கல்கி' என கேட்டு மேலே செல்லுங்கள் என வழியையம் காட்டினார்கள்.

1st floor சென்றோம். எதிரில் திரு sir. வணக்கம். Susheela Aravindannn?? எனக் கேட்க,

ஆமா sir என்றோம். வாங்க sir, வாங்கமா என அழைத்து சென்று 'இதுதான் ladies-க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருவர் வந்துவிட்டார்கள். நீங்களும் செல்லுங்கள் என்றார்.

கதவை தட்டினோம். திறந்தார்கள். உள்ளே நுழைந்தோம். வீடு மாதிரியான தோற்றம். ('நா அப்படியே Shock ஆயிட்டேன்' என ஒரு படத்தில் வடிவேலு அவர்கள் சொல்லுவாரே – நானும் shock ஆயிட்டேன். நாம் இதுவரை கண்டது ஒரு room with attached bathroom. கொஞ்சம் மேலே சென்றால்
with balcony யுடான A/c room. இவ்வளவு பெரிய வீட்டில் (suit) stay செய்தது இல்லை.) 'பத்திரமாய் சென்று வா' எனக் கூறி என்னவர் சென்றுவிட்டார்.

பயணம்/குழு

னது 'கல்கி' எனக்களித்த Team members பற்றி சில வரிகள்.

திருமிகு சுப்ர.பாலன் Sir;

ட்டை தீட்டப்பட்ட வைரம். அத்துணை வயதிலும் எங்களுக்கு நிகராய் எல்லா இடங்களுக்கும் நடந்து வந்து ஆலய வரலாறுகளை சேகரித்து…  கல்கி நினைவுகளின் அகராதியாய் விளங்கினார்.

அவரிடமிருந்து வந்த நேர்மறை அலைகள் கண்டிப்பாய் எங்கள் அனைவருக்கும் நல்லவைகளை தந்தன: இன்னும் தந்து கொண்டிருக்கின்றன.

திருமிகு வேதா Sir:

விரல்களுக்குள் ஓவியக் கலையையே ஒளித்து வைத்துக்கொண்டு ஒன்றுமே தெரியாதவர் போல் அவ்வளவு எளிமையாய் வலம் வந்தவர். ஓர் கலைத்தாயின் புதல்வன் இவ்வளவு எளிமையாய் இருப்பாரா? – பொறாமை பட்டோம். வேனில் இருந்து நாங்கள் இறங்கும்போது வேன் கதவுகளை பிடித்துக் கொள்வார். நீங்க பத்திரமா இறங்குங்க என்பார். அனைவரும் இறங்கும்வரை நிற்பார். எளிமை பார்த்து வெட்கப்பட்டோம்.

திருமிகு திருநாவுக்கரசு Sir:

ங்கள் கப்பலின் மாலுமி. விமானத்தின் பைலட். ஒரு well trained மாலுமியும், பைலட்டும் எப்படி நடந்து கொள்வார்களோ அதேபோன்று பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை, அன்பு, பாசம், நேசம்…

மிக அமைதியாய் இருப்பார். ஆனால் அனைத்தையும் கிரகித்துக் கொள்வார். பின் தலைமை நிருபர் என்றால்… என்பது போல.

அவர்தான் பேச மாட்டார். ஆனால் அவர் கைகளில் உள்ள புகைப்படக் கருவி பேசிக் கொண்டே இருக்கும்.

திருமிகு ராஜதுரை Sir:

ரும்போதே வாய் திறந்தால் 'ஜோக்' சொல்ல மட்டும் என சபதமேற்று வந்தவர். அவர் பேசினால் நாங்கள் சிரிப்போம்.

திருமிகு சாயிலஷ்மி mam:

யர்டா இருக்க. தலை வலிக்கிறது என கூறி முடிக்கும் முன் தனக்காய் வைத்திருக்கும் தைலம், மாத்திரைகளைத் தந்து சாப்பிட்டுட்டு நிம்மதியா படுங்கப்பா. என சகோதரி போன்ற உணர்வைத் தந்தவர். கனிவானவர்.

திருமிகு அமிர்தம்:

நாகர்கோவில் பாஷையில் பேசி எங்களை கட்டி போட்டவர். நீங்க தூங்குங்க. நாங்க குளிச்சிட்டு geyser  போட்டு தண்ணீர் சூடானதும் எழுப்பி விடறேன் எனச் சொல்லி care எடுத்துக் கொள்பவர்.

திருமிகு சத்தியபாமா:

சிறு குழந்தையை கூட கூட்டிச் செல்லும் உணர்வு தந்தவர். குழந்தைகளின் கள்ளமில்லா இதயம் போன்று அன்பினால் எங்களை எல்லாம் கட்டிப் போட்டவர்.

திருமிகு சாந்தினி, விஜயலஷ்மி, உஷாதேவி – மதுரை சகோதரிகள்:

மீனாட்சி ஆட்சியல்லவா. முப்பெரும் தேவியராய் காட்சியளிப்பர். அருள் பாலிப்பார். சகோதரத்துக்கு எடுத்துக்காட்டாய் வலம் வந்தவர்கள்.

ஓட்டுநர் கார்த்திக்:

மிக நிதானமாய், முகம் சுளிக்காமல் ஒவ்வொரு ஆலயங்கள் மீண்டுமாய் home stay – என அழைத்துச் சென்றதில் மகிழ்ச்சி. இறைமையின் ஆளுமையை புரிய வைத்தார் தம்பி கார்த்திக்.

வீராணம் ஏரி

வேன் கிளம்பிய சிறிது நேரத்துக்கெல்லாம் நாங்கள் கண்களில் நிறைத்துக் கொண்டது வழியில் ஒரு கோயிலில் நடைபெற்றுக் கொண்டிருந்த 'கோ பூஜை'

இறைமையின் ஆசிகள் நம்மைத் தொடர்ந்து வழி நடத்தும் என்ற மிகுந்த நம்பிக்கையுடனும், மனநிறைவுடனும் தொடர்ந்தோம். எங்கள் வெற்றிப் பயணத்தை… சந்தோஷப் பயணத்தை…

காணக் கண் கோடி வேண்டும்

ண்ணுக்கெட்டிய தூரம் வரை தண்ணீர். தண்ணீர். சூரியன் மறையும் அழகிய காட்சியும் இளஞ்சிவப்பான வானமும், இளம் தென்றலுமாய் மனதுக்கும் உடலுக்கும் இதமளித்தன.

வந்தியத் தேவனுடன் குதிரையில் பயணிக்காவிட்டாலும், அவர் சென்ற பாதையில் தலைமுறைகள் பல கடந்தும் குளிர் சாதன சிற்றுந்தில் மனதுக்கினிய பயணமாய் அமைந்திருந்தது வீராணம் ஏரிப் பயணம்.

வீரநாராயணப் பெருமாள் சன்னிதி:

டுத்ததாய் நாம் சென்றது அருள்மிகு மரகதவல்லித் தாயார் ஸமேத வீரநாராயணப் பெருமாள் சன்னிதி.

இத்தகு பழம்பெரும் புகழ் பெற்ற திருதலத்தினுள் நுழைந்தபோதே நம்மை வரவேற்றது மீண்டுமாய் மங்கல வாத்தியம். வந்திருக்கும் அனைவருக்குமே மங்கலமே என சொல்வதைப் போன்ற மிகுந்த மனநிறைவுடன் உட்சென்றோம்.

நாத முனிகள், ஆளவந்தார் போன்ற பெருமான்கள் அவதரித்த திருத்தலம் – ஸ்ரீராமானுஜர் அவர்களின் தடம் பெற்ற புண்ணிய ஸ்தலம். இங்கு நாமா?

பெருமிதமா – நன்றியுணர்வா – சந்தோஷமா – அமைதியா – புரியத்தான் இல்லை. ஆனால் மனதின் ஆழத்திலிருந்து ஓர் இனிமையான இனம்புரியா உணர்வு. இன்றுவரை உணர்கிறோம்.

அத்தகைய பெரியோர்களால் புனிதம் பெற்ற இடங்கள். அவர்கள் காலடி பதிந்த தடங்கள், காற்றுடன் கலந்து இன்னும் அந்த நல் அதிர்வுகளை தாங்கியிருக்கும் தென்றல், நிர்மலமற்ற அந்த வானுக்கு கீழே கோயில் கோபுரங்கள், கலசங்கள்…

அங்கிருக்கும் வரை காற்றின் ஊடே

'பொலிக பொலிக பொலிக

போயிற்று வல்லுயிர் சாபம்' – எனும் நம்  சொல்வீரன் ஆழ்வார்க்கடியானின் குரல் கேட்கிறதோ என காது மடல்களில் ஒரு சிலிர்ப்பும், குறுகுறுப்பும் உண்டானதை தவிர்க்கத்தான் முடியவில்லை.

கடம்பூர் மாளிகை – ருத்ர கோடீஸ்வரர் ஆலயம்

குரவை கூத்து ஆடப்பட்ட இடங்கள், கடம்பூர் மாளிகை அருகேயான ருத்ர கோடீஸ்வரர் ஆலயம்.

ஏகாந்தம், இனிமை, சந்தோஷம், பெருமிதம் இப்படி பற்பல உணர்வுகளின் கலவையாய் –

ஆவுடையார் லிங்கம் அருகில் சென்று அவரை ஸ்பரித்தபடியே அவர் தந்த நல் அலைகளை உள்வாங்கிய படியே அவர் தந்த அமைதியையும் ஆனந்தத்தையும் மனம் பூராவும் நிரப்பியபடியே,

கனவிலும் நினைத்துப் பார்க்க இயலாத, கற்பனைக்கு எட்டாத உணர்வுகளை, அலைகளை உள்ளத்திலும் – உடலிலும் – உயிரிலும் நிரப்பிக் கொண்டு அங்கிரந்த சுரங்கப்பாதையை எட்டிப் பார்க்க கிடைத்த சந்தர்ப்பம் அப்பப்பா…

ஏகாந்தமான இடங்கள் – அடுத்தடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் –

என்ன வரம் பெற்றோம். இப்படியோர் பேறு நமக்கு என்றெண்ணி எண்ணி மகிழ்ந்து நடந்தோம்.

திருப்புறம்பயம்

திருப்புறம்பயம். உள் நுழையும்போதே மணி சப்தம். கணீர் கணீர் என செவிக்கினிமையாய் இதயத்துக்கு அருகாமையில் இறைமையை உணர்த்தியபடி. தென்றலுடன் இயந்த மணி சப்தமும் இறைமையின் அருகாமையும் ஆசிகளுமாய் பிராகாரத்துள் சென்றோம்.

அருள்மிகு கரும்படு சொல்லியம்மை உடனுறை ஸ்ரீ சாட்சிநாத ஸ்வாமி திருக்கோவில்

ஆங்காங்கே நந்திகேஸ்வரனுடான லிங்க உருவங்கள். மற்றும் வெளி பிராகாரத்தில் 32 லிங்க பிரதிஷ்டை. தனிதனி நாமகரணத்துடன்.

புன்னை மரம் தல விருட்சமாய் பழமை மாறாமல் அழகாய்… எங்கள் மனதின் ஆழத்தில் ஏகாந்தமாய் அமர்ந்து கொண்டதை சொல்லவும் வேண்டுமா?

மூன்று நாட்கள் பாண்டிய சோழ மன்னர்களுக்குள் நடந்த பயங்கர ரண கள காட்சி அரங்கேறிய இடம் திருப்புறம்பயம்.

உடம்பில் தொண்ணூற்றாறு காய வடுக்களும் முதுமையும் கொண்ட உடலுடன்… கால் காயத்துடன் விஜயாலய சோழன் வீரர்களின் தோளமர்ந்து திருமாலின் சக்ராயுதத்தைப் போல கத்திகளை சுழற்றிக் கொண்டு –

அமானுஷ்ய வீரம். ஆம். அந்த அமானுஷ்யத்தை அனுபவிக்க ஒரு முறையேனும் இரவில் செல்ல வேண்டும்.

பள்ளிப்படை கோயில் செல்ல வேண்டும். அங்கிருக்கும் வீரக்கல் அருகே அமர்ந்து பொன்னியின் செல்வனில் 'ரணகள ஆரண்யம்' எனும் 19-ஆம் அத்தியாயம் படிக்க வேண்டும்.

கண்கள் சுழல அங்கேயே அமைதியாய் அமர்ந்திருக்க வேண்டும். ஆழ்வார்க்கடியான் அமர்ந்திருந்தது போன்று தைரித்துடன் அமர்ந்திருக்க வேண்டும்.
தொடரும்…

(இக்கட்டுரையின் அடுத்தப் பகுதி ஜூன் 08, 2022 அன்று பதிவேற்றப்படும்.)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com