பொன்னியின் செல்வன்…

பொன்னியின் செல்வன்…

ஓவியம்: பத்மவாசன்

அன்புள்ள ஆசிரியருக்கு,

 வணக்கம். நலம். நலம் நாட ஆவல்.

பொன்னியின் செல்வன் நாவலைப் பல முறை ரசித்துப்படித்து மகிழ்ந்த பல்லாயிரம் வாசகர்களில் நானும் ஒருத்தி என பெருமையோடு கூறிக்கொள்கிறேன்.

பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதை மாந்தர்கள் ஒவ்வொருவரும், ஏதோ ஒருவிதத்தில் நம் மனதில் இடம் பிடித்துவிடுவது தான்  நாவலின் சிறப்பு.

அநிருத்தப் பிரம்மராயரின் மதி நுட்பம், நாட்டுப்பற்று, போர்த்திறன் என ஒவ்வொன்றையும் எண்ணியெண்ணி வியந்துள்ளேன்.

ஆதித்த கரிகாலனின் வீரம், செயல்பாடுகள்,நாட்டை விரிவு படுத்தும் எண்ணம் என அனைத்தும் அருமை. சாதனை செய்யத் துடித்தவன், சூழ்சியால் கொலையுண்டது  குறித்து மனம் வெதும்பும் சில நேரங்களில்.

திருமலையப்பன் தந்திரம், கோபம், தர்க்கம் என அனைத்தையும் ரசிப்பேன் பல முறை.

அழகு, அறிவு, அரசியலில் ஆர்வம், மக்களின் மனதில் நீங்கா இடம் என அனைத்தும் ஒருசேர அமைந்து இருந்தது குந்தவையிடம். இந்தப் பெயரை உட்சரிக்கும் போதே ஒரு துள்ளல் வரும் மனதில்.

வீரம்,சாதிக்கும் வேட்கை, சாதுர்யம் என பல குணங்களின் கலவையாகவே இருக்கும் வந்தியத்தேவன் பாத்திரம்.

கடைசியாக கதையின் நாயகனான அருள்மொழிவர்மன்.

அவரைப்பற்றி சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. நிறைகுடம் போன்ற அவரது குணங்கள் படிக்கும் அனைவரையும் தன் வசப்படுத்தும்.

ல வருடங்களுக்கு முன்பு, நாங்கள் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்று இருந்தோம். அங்கிருந்த கல்வெட்டுகளைப் பார்க்கும்போது ராஜராஜ சோழன் என்பதை விட,  பொன்னியின் செல்வனாக நான் ரசித்த இளம் அருள்மொழிவர்மனே மனதில் வந்து நின்றார். உலகமே வியந்து ரசிக்கும் இந்த கோவிலை நம் அருள் மொழியா கட்டியது என எண்ணி வியந்தேன். அவர் நடந்த இடத்தில் நானும் நடக்கிறேன் என்று பூரித்துப் போனேன்.

இது போன்ற பல நிகழ்வுகள் நடந்த இடங்களை பார்க்க ஆவலாக உள்ளது. சிவன் அருளால் நிச்சயம் நடக்கும் என எண்ணுகிறேன்..!!

அன்புடன்,

பானு பெரியதம்பி,
சேலம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com