அனைத்திற்குமான பிள்ளையார்சுழி – கல்கியும் பொன்னியின் செல்வனும்!!!

அனைத்திற்குமான பிள்ளையார்சுழி – கல்கியும் பொன்னியின் செல்வனும்!!!
Published on
– ஹரிணீ முருகன், தேனி.

ல்கி அவர்களின் எழுத்துக்கும் எனக்குமான தொடர்பு 1997ல் இருந்து ஆரம்பித்தது. கோகுலம் படித்துக் களித்துக் கொண்டிருந்த எனக்கு முதலில் அறிமுகமானது, இரண்டு தலைமுறைகளாக கல்கி வாசகர்களாக இருந்த என் குடும்பத்தினர் வார இதழ்களிருந்து சேகரித்திருந்த சிவகாமியின்
சபதம்!!! பெரியம்மா தமிழாசிரியை. எனக்கு தமிழ் பற்று அதிகம். ஒன்பது வயது குழந்தைக்கு, முழு நீள காதல் கதை (சிவகாமியின் சபதம்) தரப்பட்ட தென்றால் அதிலிருந்தே புரியும் கல்கி எழுத்தின் கண்ணியம்.

பிறகு 1998ல் இருந்து கல்கியில் வெளியான பொன்னியின் செல்வன் வாரா வாரம் படிக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு எழுத்தும் ஆச்சரியக் கடலில் தள்ளும் என்னை. கொளுத்தும் வெயிலடிக்கையில் சுழற்காற்று படித்துவிட்டு வெளியில் பேய் மழை என நினைத்த அனுபவம், பொன்னியின் செல்வன் காலத்தில் நான் யாராக இருந்திருப்பேன் என்ற கற்பனை இப்படி தனி உலகத்தில் வாழ்ந்த நினைவுகள் பல.

ஒலி ஒளியுடன், நடிப்புக் கலை, தொழில்நுட்பம் அனைத்தும் சேர்த்தும் கூட சில சமயம் காட்சிகள் முழு தாக்கத்தைத் தர முடிவதில்லை. ஆனால் தமிழும் கல்கியும் சேர்ந்தால், அனைத்தும் உங்கள் கண் எதிரில்.

தூரிகை சித்தர் பத்மவாசன் அவர்களின் கைவண்ணத்தில் மிளிர்ந்த படங்களை வரைய ஆரம்பித்தேன். பள்ளி ஆண்டு இதழில் நான் வரைந்த குந்தவை நந்தினி படம் அச்சானது மிகவும் பெருமையாக இருந்தது.

சோழ நாட்டுக் கணவர் அமைந்தது ஒரு வரம். திருமணமான புதிதில் என்னை பொன்னியின் செல்வன் நாடகத்திற்குத்தான் அழைத்துச் சென்றார். எனக்கான பிறந்தநாள் பரிசு சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகத்தாரின் பத்மவாசன் ஓவியங்களோடு கூடிய பொன்னியின் செல்வன்.

எனது அனைத்து முயற்சிகளிலும் முதலாக இருப்பவர் கல்கியே.

முகங்கள் வரையும் பயிற்சி வகுப்புக்குப் பின்னர் வரைந்த முதல் முகம் கல்கி.

வலைப் பதிவு எழுத ஆரம்பித்தபோது, முதல் பதிவு பொன்னியின் செல்வன் பற்றி.

சமீபத்தில் பொன்னியின் செல்வன் தினம் ஒரு கேள்வி போட்டியிலும் ஒரு நாள் தேர்வான அதிர்ஷடசாலி நான்.

– ஹரிணீ முருகன்
– ஹரிணீ முருகன்

ஒவ்வொரு முறை பொன்னியின் செல்வன் படிக்கும் போதும், புதுப் புது இணைப்புகள், புதிய கருத்துகள், வித்தியாசமான அர்த்தங்கள் எனத் தோன்றிக்கொண்டேயிருக்கும். கல்லூரி, அலுவலகம், கணவர் அனைவருக்கும் கதை சொல்லி மகிழ்ந்திருக்கிறேன்.

அதன் விளைவாக சென்ற வருடம் ஆரம்பித்ததுதான் "கதைகள் சூழ் உலகு" யூட்யூப் மற்றும் வலையொலி (podcast). இந்த முயற்சியும் கல்கியின் ஆசியுடன். பொன்னியின் செல்வன் கதை சொல்ல ஆரம்பித்ததற்கு இருந்த வரவேற்பு அபாரம். ஐம்பதாயிரம் ப்ளே நெருங்குகிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வடிவம் பற்றி ஆய்வு செய்ய செய்ய வற்றாத ஊற்றென ஆர்வம் பெருகுகின்றது.

வாசிப்பு, தமிழின் பெருமை. இதனை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல கல்கியைப் படித்தாலே போதும்!!!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com