0,00 INR

No products in the cart.

அள்ள அள்ள திகட்டாத அமிர்த கலசம்.

தி.வள்ளி
திருநெல்வேலி.

ஓவியம்: மணியம்

சிறு வயதிலிருந்தே எனக்கு கதைகள் படிப்பது மிகவும் பிடிக்கும். பொன்னியின் செல்வன் அனேகமாக ஏழாம் அல்லது எட்டாம் வகுப்பு படிக்கும்போது படித்ததாக ஞாபகம். இப்போது எனக்கு வயது 65… கிட்டத்தட்ட பத்து முறை படித்திருப்பேன். அப்போது தொலைக்காட்சி ஆதிக்கம் இல்லாத காலம். பள்ளி விடுமுறை விடும் முன்னரே படிக்க புத்தகங்களை சேகரிக்க ஆரம்பித்துவிடுவோம். அப்படிக் கிடைத்த ஒரு பொக்கிஷம் தான் பொன்னியின் செல்வன். முதலில் அதன் சைஸை பார்த்து  நம்மால்  முழுவதும் படிக்க முடியுமா என்று தயங்கினேன். ஆனால் படிக்க ஆரம்பித்த பிறகுதான் அது ஒரு தங்கச்சுரங்கம் மாய உலகம் என்பது புரிந்தது.

ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் கல்கியவர்கள் செதுக்கி இருப்பார்கள். கதாநாயகன் வந்தியத்தேவனின் குறும்பு… தேவையில்லாமல் ஒவ்வொரு முறையும் ஆர்வக்கோளாறில் ஏதாவது  செய்து மாட்டிக் கொள்ளும் சுபாவம், எனக்கு மிகவும் பிடித்தது. அருள்மொழி வர்மனைப் பற்றி கேட்கவே வேண்டாம். அனைவருக்கும் பிடித்த கதாபாத்திரம்.

தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்தது ஆழ்வார்க்கடியான் கதாபாத்திரம். ஆழ்வார்க்கடியானும் வந்தியத்தேவனும் வரும் இடங்கள் எல்லாம் கலகலப்புக்கு பஞ்சமிருக்காது. பழுவேட்டரையர்களைப் பற்றி படிக்கும் போது அவர்கள் பராக்கிரமசாலிகள்… சோழ விசுவாசிகள்… என்று உள்மனது உணர்த்தினாலும் ஒரு வெறுப்பு வந்து மனதில் அமர்ந்து கொள்ளும்.  அந்த அளவு கல்கியின் வார்த்தைகள், கதை போக்கு இருக்கும் .

மகா வீரனான ஆதித்த கரிகாலனின் சோகமான முடிவு கண்களில் கண்ணீரை வரவழைக்காமல் இருக்காது. அந்த பாகத்தை மட்டும் நான் திரும்பத் திரும்ப பல தடவை படித்துள்ளேன். அவ்வளவு மாவீரனாக இருந்தாலும், அவசரகாரனாக எதிரிகளின் சூழ்ச்சியில் அகப்பட்டு மாண்டு போவது மனம் ஏற்றுக் கொள்ளாதது. அதுபோல பல கதாபாத்திரங்கள்.

பெண் கதாபாத்திரங்களை விட்டுவிட்டோமே என்று நினைக்க வேண்டாம். குந்தவை. சோழநாட்டின் மக்களின் கண்ணுக்கு கண்ணான இளவரசி அவள். நாட்டின் முக்கிய முடிவுகளுக்கு துணை யிருப்பவள். குந்தவியின் அழகும், அறிவும், வந்தியதேவன் பால் அவள்  காதல் வயப்படும் போது ஏற்படும் தவிப்பும், அவளுக்கும் நந்தினிக்கும் இடையே நடக்கும் சொற்போர் என சுவாரஸ்யத்திற்கு சற்றும் குறைவில்லாத கதாபாத்திரம்.

வானதி இயல்பில் பயந்த சுபாவம் உடையவள். பின்னால் அருள்மொழிவர்மனை மணந்த போதிலும்  சோழ சிம்மாசனத்தில் அமர மறுத்தவள். ராஜேந்திர சோழன் என்னும் வீர மகனை பெற்றெடுத்தவள்.  சில நேரம் சந்தோஷமாகவும் சில நேரம் துக்கமாகவும் மாறி மாறி இருக்கும்  கதாபாத்திரம். எதற்கெடுத்தாலும் பயப்படும் இவள் இளவரசனை காப்பாற்ற வேண்டும். காணவேண்டும் என்னும் போது தைரியமாய் மாறி பிரம்மராயரை எதிர்ப்பது அழகான கட்டம்.

அடுத்து நந்தினி இவளும் பரிதாபத்துக்குரிய ஒரு பாத்திரமே என்னதான் மதுரை வீரபாண்டியனின் காதலியாக இருந்து பின் சோழ வம்சத்தை பழிவாங்க பழுவேட்டரையரை மணந்தாலும்… வில்லியாக சித்தரிக்கப்பட்டாலும்… அவளும்  பரிதாபத்துக்குரிய பின்னணி கொண்டவளே. அரச குடும்பத்தினரால் பலமுறை பந்தாடப்பட்டு, அவளுடைய உணர்ச்சிகள் சாகடிக்கப்பட்டு, இறுதியில் அவள் சோழ இளவரசன் மேல் கொண்ட காதலும் கொல்லப்பட்டு, மனம் இரும்பாய் மாறிய மெல்லியலாள். சிறுவயதில் பல அவமானங்களையும் சந்தித்தவள் என்ற முறையில் அவள் மேல் ஒரு பரிதாபம் வருகிறது. அவளுடைய பிறப்பும் ஒரு ரகசிய குழப்பத்திற்குரிய விஷயமாகவே கதை நெடுக சித்தரிக்கப் படுகிறது.

பூங்குழலி அலைகடல் தாலாட்ட படகையே தொட்டிலாக இயற்கையை ரசிக்கும், யாருக்கும் அடங்காத, முரட்டு பெண்ணாக வளரும் காட்டு பிச்சி. இவள் பாடும் “அலைகடலும் ஓய்ந்திருக்க… அகக் கடல்தான் பொங்குவதேன்” என்ற பாடல் மனதில் அமர்ந்து  கொண்டு இன்றுவரை காதில்   ரீங்கரிக்கிறது.

இன்னும் பல கதாபாத்திரங்கள் செம்பியன்மாதேவி, வானமாதேவி, மந்தாகினி, மணிமேகலை, என ஒவ்வொருவர் கதாபாத்திரமும் ஒவ்வொரு வகையில் கதைக்கு அழகு சேர்ப்பது.

க் கதாபாத்திரங்கள் தவிர சைவ-வைணவ சண்டைகள், தேசத்துரோகம், ஒருதலைக் காதல், சினேக துரோகம்,  என்ன சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் பல நிகழ்வுகள்.  பண்டைய போர் முறை. திருவிழாக்கள்… மக்களின் வாழ்க்கைமுறை, போர் தந்திரங்கள், என அறிந்துகொள்ள பல விஷயங்கள்.

மொத்தத்தில் அள்ள… அள்ள… திகட்டாத அமிர்த கலசம்… வரலாற்று பொக்கிஷம்… பொன்னியின் செல்வன்.

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

அனைத்திற்குமான பிள்ளையார்சுழி – கல்கியும் பொன்னியின் செல்வனும்!!!

0
- ஹரிணீ முருகன், தேனி. கல்கி அவர்களின் எழுத்துக்கும் எனக்குமான தொடர்பு 1997ல் இருந்து ஆரம்பித்தது. கோகுலம் படித்துக் களித்துக் கொண்டிருந்த எனக்கு முதலில் அறிமுகமானது, இரண்டு தலைமுறைகளாக கல்கி வாசகர்களாக இருந்த என்...

பொன்னியின் செல்வன்…

0
ஓவியம்: பத்மவாசன் அன்புள்ள ஆசிரியருக்கு,  வணக்கம். நலம். நலம் நாட ஆவல். பொன்னியின் செல்வன் நாவலைப் பல முறை ரசித்துப்படித்து மகிழ்ந்த பல்லாயிரம் வாசகர்களில் நானும் ஒருத்தி என பெருமையோடு கூறிக்கொள்கிறேன். பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதை...

பொன்னியின் செல்வன் பாதையில்…

0
சென்ற வாரத் தொடர்ச்சி... -சுசீலா மாணிக்கம் திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ பிரஹர் நாயகி ஸமேத ஸ்ரீ கபர்தீஸ்வர சுவாமி திருக்கோயில். ‘என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே’- திருஞான சம்பந்த பெருமான் போற்றி பாடப்பெற்ற...

பொன்னியின் செல்வன் பாதையில்…

-சுசீலா மாணிக்கம் அறிமுகம்: நான் முதன்முதலில் ‘பொன்னியின் செல்வன்’ வாசித்தது என் முதுகலை கல்லூரி காலத்தில். எனது வகுப்புத் தோழன் V. அரவிந்த கேசவன் (இன்று வாழ்க்கைத் துணைவன் (ர்) என்பது தனிக்கதை.), “சுசீலா கண்டிப்பா உன்னோட...

“பொன்னியின் செல்வன் ” உடன் எனது அனுபவங்கள் :-

-பி. லலிதா, திருச்சி. நான் பிறந்தது  நாகை மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர். என் பெயர் லலிதா. வயது 67. நான், கல்கி, மங்கையர் மலர் இதழ்களின் நீண்டநாள் வாசகி. என் தந்தை  சுதந்திரா கட்சியில் உறுப்பினராக இருந்தார்....