பொன்னியின் புதல்வர் அளித்த பொன்னியின் செல்வன்.

பொன்னியின் புதல்வர் அளித்த பொன்னியின் செல்வன்.
தொகுப்பு; சேலம் சுபா
பொன் குமார், நூல் விமர்சகர், சேலம்

பொன்னியின் செல்வன் ஒரு வரலாற்று நாவல் மட்டுமல்ல, வரலாறு படைத்த, படைத்துக் கொண்டிருக்கும் நாவலாகும். கி. பி. 950– கி. பி. 1050 வரையிலான வரலாற்றை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு
கி.பி. 1950இல் தொடங்கி ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் எழுதியுள்ளார் எழுத்தாளர் கல்கி. ஆனால் கதைக்களத்தின் காலமோ இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவானது. சுத்தமான தங்கத்தில் சிறிதளவே செம்பு கலந்து ஆபரணம் செய்து அழகு பார்ப்பது போல் வரலாற்றில் கொஞ்சம் கற்பனையைக் கலந்து வாசிப்பதற்கு ஏற்ற வரலாற்று நாவலைத் தந்துள்ளார்.

பொன்னியின் செல்வனின் நாயகன் வரலாற்று வீரன் வந்தியத் தேவன்.  தடைகள், தொல்லைகள் எல்லாம் தாண்டி ஆதித்த கரிகாலன் தன் தந்தை சுந்தர சோழருக்கு கொடுத்தனுப்பிய ஓலையை  நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாய் இருக்கும் சுந்தர சோழரை சந்தித்து கொடுக்கிறான். அச்சமயம் புலவர்கள் சோழ வம்சத்தைச் சேர்ந்த  சுந்தர சோழர் மற்றும் சோழ மன்னர்களின் பெருமையைப் பாடுகின்றனர். இதன் மூலம் வரலாறு எழுதப்படுகிறது. சொல்லப்படுகிறது. வந்தியத்தேவன் வென்றதையும் விரிவு படுத்தியதையும் அவன் ஒரு வீரன் என்பதையும் கல்கியின் கைவண்ணத்தில் வாசிக்கக் கிடைக்கிறது. பொன்னியின் செல்வனின் சகோதரியும் வல்லத்து நாட்டு வந்தியதேவனின் மனதை கொள்ளை கொள்பவருமான குந்தவை நாச்சியாரின் படைப்பு மற்றுமொரு சிறப்பு. குந்தவை யாரின்அறிவு, ஆற்றல், தெளிவு, துணிவு, நேர்த்தி, நேர்மை  வியப்பளிக்கிறது. பொன்னியின் செல்வனில் பொன்னியின் செல்வி குந்தவை.

ஒரு வரலாற்று பதிவாகவே மட்டும் படைக்காமல்  அந்த காலத்தில் நடந்த பண்பாடு, கலாசார நிகழ்வுகளையும் பதிவு செய்ய தவறவில்லை கல்கி.  பொன்னியின் செல்வனை வாசித்தால் சோழர் வரலாற் றையும், தமிழர்களின் சிறப்புகள் பற்றியும், பண்டைய மன்னர்களின் வீரத்தையும் மாண்பையும் கொடையையும் அறிவுக்கூர்மையையும் ஆற்றிய பணியையும் தொலைநோக்குப் பார்வையையும் ஆளுமைத் திறனையும் அறிய முடியும். கல்கியின் எழுத்து காட்சியாக விரிவதை வாசிப்பில் உணர முடியும். வாசகர்களின் பார்வையில் பொன்னியின் புதல்வர் கல்கியே ஆவார். அவர் பிறந்து வளர்ந்ததும் அந்த பொன்னி மண்ணில் தானே!

*********************

வேண்டாமே பொன்னியின் செல்வன் திரைப்படம்!

ஹரணி, எழுத்தாளர்,
தஞ்சாவூர்.

ங்கள் வீட்டிற்கருகில் அந்தச் சமணக்குடும்பம் இருந்தது. பெரிய குடும்பம். ஆண்களும் பெண்களுமாகக் கிட்டத்தட்ட 15 பேர்கள். அங்கேதான் கல்கி வாங்குவார்கள். ஒவ்வொரு புதன்கிழமையும் காலையில் எழுந்து குளித்துவிட்டு சுத்தமாகப் போகவேண்டும். அந்த வீட்டின் மூத்தவர் அந்தவாரம் பொன்னியின் செல்வனைப் படித்திருப்பார். அந்த வீட்டின் பெண்கள் (அக்காக்கள்) வரிசையில் நிற்க நானும் அந்த வரிசையில் இருப்பேன். இப்படி ஒவ்வொரு வாரமும் வரிசையில் நின்றுதான் கல்கியின் பொன்னியின் செல்வனை வாசித்த அனுபவம்.

பிற்காலத்தில் நானும் கல்கியை வாங்கி ஒவ்வொரு வாரமும் அத்தியாயத்தைப் பிரித்து பைண்ட் செய்து வைத்திருக்கிறேன். வேதாவின் ஓவியங்கள் பிரமாதம். கல்கியின் நடை, பாத்திரங்களின் அறிமுகம், ஓவியர்களின் ஓவியங்கள் இப்படி எல்லாமும் சேர்ந்து, பொன்னியின் செல்வனைவிட்டு அகலவிடாது ஈர்த்து மயங்கவைத்து வீழ்த்தும்.

அதுமட்டுமின்றி ஒவ்வொரு பாத்திரமும் இப்படித்தான் என்று மனத்துள் சிற்பம் போல செதுக்கப்பட்டுவிடும். அதை மாற்றி ஓவியர் வரைந்திருப்பாரோ என மனம் தவிக்கும். ஆகவே படிப்பதற்கு முன்னதாக ஓவியங்களைப் பார்ப்பேன். இதனால்தான் பொன்னியின் செல்வனை ஒவ்வொரு காலக்கட்டத்தில் பலர் சினிமா எடுக்கிறேன் என்றபோது மனங்கிடந்து தவித்தது. எடுத்துவிடக்கூடாது; இன்றைக்கு அந்த தவிப்பு அதிகமாகவே உள்ளது. பாத்திரச் சிதைவு வந்து விடும் என்று துடித்தது.

என்னுடைய உறவுகளில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் பொன்னியின் செல்வன் கதாப்பாத்திரங்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன என்பதை பெருமையாகக் குறிப்பிடுகிறேன்.

*********************

ஒற்றன் நம்பி!

குமரன், தொழிலதிபர், கரூர்.
(கல்கியின் தீவிர வாசகர்)

ரூரில் ஒரு சிறிய ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வருகிறேன். என் வயது தற்போது 45.  எத்தனையோ புத்தகங்களை வாசித்து இருந்தாலும்,  எனது சிறுவயதில் நான் வாசித்த கல்கியின் பொன்னியின் செல்வனின் பாதிப்பை இதுவரை வேறு எந்த புத்தகமும் ஏற்படுத்தியது கிடையாது. இதுவரை எத்தனை முறை படித்திருப்பேன் என்று எனக்கே நினைவில்லை. எத்தனை முறை படித்தாலும் ஒவ்வொரு முறையும் புதிய ஆச்சர்ய அனுபவத்தை உருவாக்குவதில் பொன்னியின் செல்வனுக்கு நிகர் பொன்னியின் செல்வன் தான். அதில் உள்ள கதாபாத்திரங்கள் எத்தனை எத்தனை இருந்தாலும் பலருக்கும் பல கதாபாத்திரங்கள் பிடித்திருந்தாலும் எனக்கு பிடித்த கதாபாத்திரங்களில் முக்கியமானவர் ஆழ்வார்க்கடியான் நம்பி என்ற அந்த ஒற்றர் கதாபாத்திரம்தான்.

ஓவியம்; பத்மவாசன்
ஓவியம்; பத்மவாசன்

சோழப் பேரரசின் முதல் மந்திரி அநிருத்தப் பிரம்மராயரின் ஒற்றன் இந்த ஆழ்வார்க்கடியான் நம்பி. பழுவூர் இளையராணி நந்தினி தேவியை வளர்த்த சகோதரர் ஆகவும் அந்த புதினத்தில் சித்தரிக்கப்படுகிறார். திருமலை என்ற பெயரோடு அறிமுகமாகி வைணவ சமயத்தின் மீதுள்ள பற்றால் ஆழ்வார்க்கடியான் நம்பி என பெயரை மாற்றிக் கொண்டு கையில் எப்போதும் தடியுடன் உடல் முழுவதும் திருநாமம் இட்டுக் கொண்டும் அவர் இந்தப் புதினத்தில் தோன்றி சிறுவர்களுடன் மல்லுக்கட்டி சண்டை போடுவதாகட்டும், கதாநாயகன் வந்தியத்தேவனுடனான இவரது தர்க்கங்கள் நிறைந்த உரையாடல்கள் (சீண்டல்கள்) ஆகட்டும், அருள்மொழிவர்மனுக்கும், வந்தியத்தேவனுக்கும் சாமர்த்தியமாக உதவும் தருணங்கள் ஆகட்டும்… ஆழ்வார்க்கடியான் நம்பியின் கதாபாத்திரம் என் நெஞ்சில் நிறைந்து நிற்கும் என்றென்றும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com