என் கூடவே வாழும் பூங்குழலி !!

என் கூடவே வாழும் பூங்குழலி !!
-சுசி கிருஷ்ணமூர்த்தி

ஓவியம்: பத்மவாசன்

பொன்னியின் செல்வன்' பெயரை படித்ததும் என் நினைவுகள் நான் சிறுவயதில் 'பொன்னியின் செல்வன்' நாவலை படிக்க பட்ட கஷ்டங்கள், அவ்வளவு கஷ்டங்களுக்குப் பின் ஒவ்வொரு  பாகம் கையில் கிடைக்கும் பொழுதும் நான்  அடைந்த மகிழ்ச்சி,  இதையெல்லாம் நோக்கி சென்றன.

அப்பொழுது நாங்கள் மும்பையில் இருந்தோம். மும்பை தமிழ் சங்கம் நூலகமும்  எங்கள்  வீட்டின் பக்கத்தில்தான்  இருந்தது, தமிழ் சங்கத்தில் புத்தகங்கள் கொட்டிக் கிடக்கும் ஆனால் அந்த நூலகத்தில் புத்தகம் எடுத்துப்  படிக்க மாதம் 10 ரூபாய் கட்ட வேண்டும்.

பெண்கள் புத்தகம் எல்லாம் படிப்பது தப்பு என்று எண்ணப்பட்ட காலம் அது. அந்த நேரத்தில் நான் நூலகத்தில் சேர  மாதம் 10 ரூபாய் வீட்டில் எப்படி கேட்க முடியும்? அங்கத்தினராக இல்லாததால் என்னால் புத்தகத்தைப் பார்த்து ஏங்கத்தான் முடிந்ததே தவிர  புத்தகங்களை படிக்க முடியாத நிலைமை.

அப்பொழுது எனக்கு 10 வயதிருக்கும். தினமும் மாலையில் ஒரு முறை தமிழ்ச்சங்கம் சென்று அந்த புத்தகங்களை ஒரு தடவை தடவிப் பார்த்து விட்டு வந்து விடுவேன்.

அந்த நூலகத்தை நிர்வாகிக்க அரவிந்த் சார் வந்தார். புத்தகங்கள் மேல் உள்ள ஆசையால் அந்த நூலகத்தை நிர்வாகிக்க வந்தவர்.  அவருக்கு முன்  இருந்தவர் ரொம்ப கோபக்காரர். ஏதாவது புத்தகத்தை தொட்டால் அவருக்கு கோபம் வந்துவிடும்.

அரவிந்த் சார் நான் தினமும் நூலகத்திற்கு வருவதை கவனித்திருப்பார் போலும் , ஒருநாள் என்னிடம்,

"பாப்பா ! உன் பெயர் என்ன? உனக்கு புத்தகம் படிக்க ரொம்ப ஆசையா?" என்று கேட்டார். நானும் என் பெயரை சொல்லி, எனக்கு புத்தக ஆசையைப் பற்றியும் சொன்னேன். எங்கள் வீட்டில் புத்தகம் படிக்க 10 ரூபாய் தர மாட்டார்கள் என்றும்  கூறினேன்.

அவர் என்னிடம் "நீ  இங்கு எனக்கு இந்த நூலகத்தில்  உதவி செய்தால், அதற்கு சம்பளமாக நான் உனக்கு வீட்டுக்கு எடுத்து செல்ல புத்தகம் கொடுப்பேன். தினமும் சாயங்காலம்  2 மணி நேரம் வேலை செய்தால் போதும். உங்க அப்பா அம்மா சம்மதம் கொடுத்தால் நாம் இதை பண்ணலாம் " என்றார்,

அதைக் கேட்டதும் நான் புத்தக உலகில் பறக்க ஆரம்பித்தேன். ஆனால் வீட்டில் சொல்ல வேண்டுமே – என் அம்மா நான்காம் வகுப்பு மட்டுமே படித்திருந்தாலும், புத்தகம் படிப்பதில் அவருக்கு என்னை விட ஆர்வம் அதிகம். அதனால்  முதலில் அம்மாவிடம் அரவிந்த் சார் கூறிய  விவரத்தை சொன்னேன்.

அம்மா சம்மதம் கொடுக்க முதலில் பயந்தாள், அதன் பிறகு நான் கெஞ்சிக் கூத்தாடி அம்மாவை நூலகம் வந்து அரவிந்த் சாரிடம் பேசச் செய்தேன். அப்புறம்  அரவிந்த் சாரே எங்கள் வீட்டிற்கு வந்து அப்பாவிடம் பேசி அவர்  சம்மதத்தையும் வாங்கினார்.

பிறகென்ன – என் காட்டில் மழைதான். நூலகத்தில்  புத்தகங்களை அட்ட வணை போடுவதில் உதவி செய்ததால்,  புத்தகமும் வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடிந்தது,. ஆனால் ஒரு சமயம் ஒரு புத்தகம் தான் வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடியும். அதை திருப்பிக் கொடுத்து விட்டு தான்  அடுத்தது எடுத்துச் செல்ல முடியும்.

நானும் அம்மாவும் போட்டி போட்டுக் கொண்டு படித்தோம்.  ஆனால் பொன்னியின் செல்வன் கையில் கிடைத்தவுடன் தான் தகராறு ஆரம்பித்தது. ஒவ்வொரு பாகமும் 500 பக்கங்களுக்கு மேல் 2 அல்லது 3 நாட்களில்  ஒரு பாகம் முடித்து திருப்பிக் கொடுத்து விட்டு அடுத்த பாகம் வாங்கி வந்து விடுவேன்.

அது   பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம் படித்துக் கொண்டிருந்த நேரம். அந்த சமயம் பார்த்து  என்  தந்தை `வஜ்ரேச்வரி ` என்னும் இடத்திற்கு சுற்றுலா ஏற்பாடு செய்து விட்டார். நான் வரவில்லை  என்று கூறிய பொழுதும் "வீட்டில் எப்படி தனியாக இருப்பாய்" என்று சொல்லி என்னை சுற்றுலாவிற்கு வரச் செய்துவிட்டார்.

நான் கிளம்பும் பொழுதே கையில் பொன்னியின் செல்வனை எடுத்துக் கொண்டுதான் சென்றேன். மூன்றாம் பாகம் திருப்பிக் கொடுத்தால் தான் அடுத்த  பாகம் கிடைக்கும் என்பதால் எல்லோரும்  ஆடல் பாடலுடன் உல்லாசமாக   வரும்பொழுது, நான்  பொன்னியின் செல்வன்  படித்துக் கொண்டே வந்தேன்.  `வஜ்ரேச்வரி` யில் வெந்நீர்  கிணறு ரொம்ப பிரபலமானது  என்பதால் எல்லோரும்  அதில் குளித்து  சாப்பிடும் வரை கூட இருந்த நான் பிறகு புத்தகம் படிக்க  ஒரு மரத்தடியை  நாடி விட்டேன்.

கதை படிக்க படிக்க பூங்குழலியாகவே மாறிவிட்ட நான் தலை  நிமிர்ந்த பொழுது மாலை ஆகி விட்டிருந்தது. கூட வந்த யாருமே கண்ணில் படாததால்  பயத்தில் கதறி அழத்  தொடங்கி  விட்ட என்னை ஒரு குரல் 'என்ன  ஆச்சு மகளே?' என்று ஹிந்தியில்  கேட்டது.

என் எதிரே ஒரு  தாடி மீசைக்கார  சாமியார்.  அவரைப் பார்த்ததும் எனக்கு பொன்னியின் செல்வன் நாவலில் படித்த பெரிய பழுவேட்டரையர் தான் நினைவுக்கு வந்தார். தன் காதல் மனைவி நந்தினியின் பேச்சைக் கேட்டு பூங்குழலியான என்னை சிறையில் இட்டு விடுவாரோ என்றெண்ணி கதறத்  தொடங்கினேன்.

அந்த  சாமியார் பாவம் என்னை சமாதானப் படுத்த முனைந்தார், அந்த நேரம் பயத்தில்  பொன்னியின் செல்வன் புத்தகம்  என் கையிலிருந்து கீழே விழ  அதை அந்த சாமியார்  கையில் எடுத்தார். அதைப் பார்த்ததும், முதலில் என் மனதில் தோன்றியது 'சாமியார் பொன்னியின் செல்வன் புத்தகத்தை எடுத்துச் செல்லப் போகிறார்' என்ற பயம் தான்.

அப்பொழுது நான் பூங்குழலியாக மாறினேன். பூங்குழலி  கடலில் அருள் மொழிவர்மரைப் காப்பாற்றியது போல் நானும் பொன்னியின் செல்வன் புத்தகத்தைக் சாமியாரிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற நினைப்பு எனக்கு வந்த பொழுது,  எனக்குள்  வீரம் வந்து விட்டது.

க்கத்தில் இருந்த மரக்கிளையை  ஒடித்து  எடுத்து, படகோட்டிப் பெண் பூங்குழலியின்  கையில் இருக்கும் துடுப்பு என்று கற்பனை செய்து கொண்டு,  அந்த சாமியாரை ஒரு சாத்து சாத்துவதற்கு கையை ஓங்கினேன். சாமியாரின் நல்ல நேரம் . என் தந்தை  அங்கு வந்து  விட்டார். சாப்பாடு முடிந்ததும் எல்லோரும் விளையாட்டும் பாட்டுமாக இருந்ததால் நான் அவர்கள் கூட இல்லை என்பதை ஒருவரும்  கவனிக்கவில்லையாம். பஸ்ஸில் ஏறும் பொழுதுதான் நான் இல்லாததை கவனித்து என் தந்தை என்னைத் தேடிக் கொண்டு வந்தார். அவர் வந்ததால் தான்  அந்த சாமியார் பிழைத்தார்.

பஸ்ஸில்  ஏறியதும்  எல்லோரும் கொடுத்த பூசையில்  திரும்ப  அழுகைதான்,  இவ்வளவு  நடந்தும். இன்றும் பாதி நேரம்   கடலில்  பாடிக்கொண்டே படகோட்டும்  பூங்குழலியாக,  கனவுலகில் வாழுபவள்தான்   நான்.

வந்தியத்தேவன், குந்தவை, நந்தினி, ஆதித்த கரிகாலன், வானதி ,  ஆழ்வார்க்கடியான் பழுவேட்டரையர்கள் என்று எல்லோரும் என்றும் என் நினைவில் வாழ்கிறார்கள் என்றாலும்  என் கூடவே,   வாழ்பவள் பூங்குழலி மட்டும்தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com