0,00 INR

No products in the cart.

அமர காவியம் பொன்னியின் செல்வன்!

– ஐங்கரன்

“பக்தி மேலீட்டால் கடவுளையே மறந்து விடுவார்கள் சில பக்தர்கள்” என்று சொல்வதுண்டு. பலரின், ‘பொன்னியின் செல்வன்‘ அனுபவமும் இப்படித்தான் இருக்கிறது. எழுதியவரைக்கூட மறந்து, கதையில் ஆழ்ந்து விடுவார்கள். படித்து முடிந்த பிறகு “எந்தக் கதாபாத்திரத்தில் கல்கி ஒளிந்து கொண்டிருக்கிறார்” என்று தேடுகிறார்களே, அதுதான் உச்சகட்டம். வாசகர்களை விநாடிக்கு ஒரு நூற்றாண்டு வீதம் எளிதில் கடத்திவிட்டு மறைந்துகொண்டு விடுகிறார் ரா.கி. – அதுதான் காரணம்.

கல்வெட்டில் எழுத்துருவில் நிலைத்திருந்த வந்தியத்தேவன் நம்முடன் உல்லாசமாக இணைந்து கொள்கிறான். எடுத்த எடுப்பிலேயே ஏரிக்கரையிலே தோன்றி அனைவரையும் கவர்ந்துவிடுகிறான் வல்லவரையன். பொன்னியின் செல்வனாக ஜொலிக்கும் அருள்மொழிவர்மனோ, சந்திக்குமுன்பே செல்லப்பிள்ளையாய் நடமாடுகிறான். மற்றவர்கள் படிப்படியாய் படிப்பவர் மனத்தில் இடம் பிடித்து விடுகிறார்கள்.

இந்த வரலாற்று நெடுங்கதையைப் படிப்பவர்கள் பெறும் மற்றோர் அனுபவம் – ஆசிரியரின் கதை சொல்லும் உத்தி. இளமைக் காலத்தில் தாம் பெற்ற ஹரி கதை அனுபவத்தை இந்நாவலின் விறுவிறுப்பான ஓட்டத்திற்கு அவர் பயன்படுத்திய நேர்த்தி வியப்பூட்டுகிறது. ‘சுழற்காற்று’ – 2ஆம் பாகம், அத்தியாயம் 10.

“இந்தக் கதையின் ஆரம்ப காலத்திலேயே நமக்கு நெருங்கிப் பழக்கமான ஆழ்வார்க்கடியான் நம்பியை கொஞ்ச காலமாக நாம் கவனியாது விட்டுவிட்டோம். அதற்காக நேயர்களிடமும் நம்பியிடமும் மன்னிப்புக் கோருகிறோம். முக்கியமாக, நம்பியின் மன்னிப்பை இப்போது நாம் கோரியே தீர வேண்டும். ஏனெனில், ஆழ்வார்க்கடியான் இப்போது வெகு வெகு கோபமாக இருக்கிறான்…”

நகைச்சுவையோ, வீரமோ ‘கல்கி’ அவர்கள் சொல்லும்போது அந்தக் களத்திலேயே நம்மை நிறுத்திவிடுவார். ‘கொலைவாள்’ பாகம் – 3, 35ஆம் அத்தியாயம்.

“ஜண ஜண ஜண ஜணார்! பதினாயிரம் வாள்கள் மாலைச் சூரியனின் மஞ்சள் வெயிலில் மின்னிக்கொண்டு வந்தன! டண டண டண டணார்! பதினாயிரம் வேல்கள் இன்னொரு பக்கமிருந்து ஒளிவீசிப் பாய்ந்து வந்தன!”

“வரலாற்று நெடுங்கதையைச் சொல்வது எப்படி” என்று தலைப்பிட்டுத் தனியே நூல் எதுவும் எழுதத் தேவையில்லை. அதற்குப் ‘பொன்னியின் செல்வன்’ கல்கியின் பாணியே சிறந்த எடுத்துக்காட்டு.

அண்மையில் ஓர் இளைஞர் கேட்டார், “பொன்னியின் செல்வன் கவிதையா? நாடகமா?”

நான் கேட்டேன், “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சிரித்துக்கொண்டே, “அந்த நூலைப் பார்த்ததுகூட இல்லை. அதனால்தான் கேட்கிறேன்” என்றார். ஹாலிவுட் தயாரிப்பாளர் SAM FRISKIN சொன்னது என் நினைவுக்கு வந்தது. “சரியான முடிவுகள் அனுபவங்களிலிருந்தே வருகின்றன. அனுபவங்களோ, தவறான முடிவுகளிலிருந்து ஏற்படுகின்றன” இதைச் சொல்லி அவரை மேலும் குழப்ப விரும்பவில்லை. சுருக்கமாகச் சொன்னேன், “தம்பி, உடனே வாசிக்கத் தொடங்குங்கள்… அனைத்தையும் கடந்தும் விஞ்சியும் நிற்கும் காவியம் பொன்னியின் செல்வன்.”

து சரித்திர நாவல் மட்டுமன்று; ஓர் உன்னத அனுபவமும்கூட. பருக அமர்பவரை அது பருகத் தொடங்கி விடும். ‘உள்ளுவது எல்லாம் உயர் உள்ளல்’ என்றபடி அழகுணர்ச்சியைக் கடந்த ஓர் அகத் தூண்டுதலைக் கல்கியாரின் படைப்புகளில், குறிப்பாக வரலாற்றுப் புதினங்களில் காணலாம்.

சிவகாமியின் சபதம் – அஸ்தமன நேரத்தில் இயற்கை கொள்ளும் கோலத்தின் ஊடே பறந்து செல்லும் வெண்நாரைக் கூட்டத்தை வருணிக்கிறார். மனக் கிளர்ச்சி தரும் காட்சி. ஞானியரின் பரவச நிலை பற்றிக் கூறும்போது, இராமகிருஷ்ண பரமஹம்ஸரின் அனுபவம் நினைவுக்கு வருகிறது.

பார்த்திபன் கனவு – மாமல்லர் இளம் பிராயத்தில் மேகத் துணுக்கில் தாம் கண்ட யானையைப் பற்றி மகளிடம் சொல்கிறார். மாமல்லபுரம் மனக்கண் முன் விரிகிறது.

பொன்னியின் செல்வன் – பொன்னை உருக்கிக் காசுகளைக் குவிக்கிறார்கள். சிறையிலிருக்கும் சேந்தன் அமுதனோ, ‘பொன்னார் மேனியனை’ப் பாடுகிறான். படிப்பவரின் உள்ளம் உயர்கிறது. நாட்டம் நன்னெறியின்பால் செல்கிறது!

‘பொன்னியின் செல்வனை’ ஆழ்ந்து படிப்பவர் சேக்கிழார் பெருமானின், ‘பெரிய புராணத்தை’ நினைவுகூர்வது இயல்பே. ஏனென்றால், ஆதாரபூர்வமான, துல்லியமான, பயனுள்ள பல தகவல்கள் இரண்டிலும் இடம்பெறுகின்றன.

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ முதற்பாகம், புதுவெள்ளம் – 19ஆம் அத்தியாயம்.

“காவிரி நதியிலிருந்து பல கிளை நதிகள் பிரிந்து சோழநாட்டை வளப்படுத்துவதை யாவரும் அறிவார்கள். அக்கிளை நதிகள் யாவும் காவிரிக்குத் தெற்கே பிரிகின்றன. கொள்ளிடத்திலிருந்து பிரிந்து காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் நடுவில் பாயும் நதி ஒன்றே ஒன்றுதான். அதற்கு, ‘மண்ணியாறு’ என்று பெயர்.”

இதைப் பார்த்த பிறகு, பலர் மண்ணியாறு பிரியும் அப்பகுதியைக் காண விரைந்திருக்கிறார்கள். ‘திருப்புறம்பயத்தில் நடந்த போர்’ என்று மட்டும் எழுதியிருந்தால், ‘எத்தனையோ போர்கள், அதில் இது ஒன்று’ என்ற போக்கில் உறைந்துபோன ஒரு நிகழ்வாகக் கருதியிருப்பார்கள். ‘மண்ணியாற்றின் கரை’ என்ற குறிப்புக் கூட ஓரளவே கவனத்தைத் திருப்பியிருக்கக் கூடும். நீரோட்டத்துடன் கூடுதல் தகவல் தந்து நேரில் சென்று பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டியமை, ‘கல்கியாரின் தனித்தன்மை எழுத்தாற்றல், சொல் திறமை’ வரலாற்றுடன் நிலவியலையும் பயில வேண்டும் என்பதில் அவர் கொண்டிருந்த அக்கறை!

ழையாறையை, ‘பழைய பாறை’ என்று தவறாக எண்ணி, பிறகு திருத்திக் கொண்டவர்களும் உண்டு. வந்தியத்தேவனையே பார்த்துவிட்டாற்போல் பரபரப்புடன் கூறினார் ஒரு நண்பர். “அவன் பிறந்த ஊர் வல்லத்தைப் பார்த்துவிட்டேன்.”

தாம் பார்த்தது தஞ்சாவூரையடுத்த வல்லம். அவ்வாணர் குல வீரனின் ஊர் காட்பாடிக்குப் பக்கத்திலுள்ள வல்லம் என்று அறிந்ததும் ஏமாற்றத்தால் அவர் முகம் வாடியது. ஒரு வாரத்துக்குள் அங்கும் சென்று திரும்பிய பிறகுதான் அவர் ஆறுதலடைந்தார்.

“நீங்கள் முன்னதாகப் பார்த்த வல்லமும் சோழ வரலாற்றுடன் தொடர்புடைய ஊர்தான். தஞ்சைக்கருகே உள்ள வல்லம் முத்தரையர் வசமிருந்தது. பின்னர் விஜயாலயன் அதைப் பிடித்தான்” என்று விளக்கியதும் அவர் முகத்தில் அரும்பியிருந்த புன்னகை, கண்கொள்ளாக் காட்சி.

பரபரப்பான சூழலில் இயங்கத் தொடங்கி விட்டது உலகம். இந்நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ தொடர்பான வரைபடங்களையும் கூடுதல் தகவல்களையும் தொகுப்பது எத்துணை இன்றியமையாதது என்பதை உணர்ந்தேன்.

கடம்பூருக்கும் கொடும்பாளுருக்கும் – இதேபோல், மழபாடிக்கும் பழுவூருக்கும் இடையே உள்ள வேறுபாடு அறியாமல் பலர் குழம்பியதைக் கண்டதும் முழுமூச்சில் இறங்கினேன். இந்த முயற்சியில் நான் கற்றவை பல, பெற்ற அனுபவமோ பெரிது.

வாழ்க்கையில் வெறுப்புற்று கடும் விரக்தியில் இருந்தார் ஒரு அன்பர். ‘பொன்னியின் செல்வன் நெடுங்கதை மனப்புண்ணுக்கு மருந்து மட்டுமன்று; தன்னம்பிக்கையை ஊட்டும் அமிழ்தம் என்பதை அனுபவத்தில் கண்ட நான், கதை சொல்லத் தொடங்கினேன். வாசித்தும் மகிழ்வித்தேன்.

4ஆம் பாகம் – மணிமகுடம், 17ஆம் அத்தியாயம்.

பூங்குழலி கொதிப்புடன் பேசுகிறாள்.

“… வாயு தேவனும் ஒருவேளை என்னை மணந்துகொள்ள மறுத்தால், அக்னி தேவனிடம் செல்வேன். அப்புறம் கேட்க வேண்டுமோ? இந்த உலகமே தீப்பற்றி எரிய வேண்டியதுதான்.

அமைதியே உருவான சேந்தன் அமுதன் – “பூங்குழலி, போதும் நிறுத்து! ஏதோ ஒரு மனக்கசப்பினால் இவ்விதமெல்லாம் நீ பேசுகிறாய். மனமறிந்து யோசித்துப் பேசவில்லை. உன் மனநிலையை அறிந்து கொள்ளாமல் உன்னிடம் நான் கல்யாணப் பேச்சை எடுத்ததே என் தவறுதான். அதற்காக என்னை மன்னித்துவிடு. கடவுள்தான் உன்னுடைய மனக்கசப்பைப் போக்கி அமைதி அளித்து அருள வேண்டும். அதற்காக நான் அல்லும் பகலும் பிரார்த்தனை செய்து வருவேன்” என்கிறான்.

இந்த இடத்தில் அழுதுவிட்டார் அந்த அன்பர். கதை முடியுமுன் தாம் அடிமையாகி விட்டிருந்த கொடிய பழக்கத்தை அடியோடு விட்டுவிட்டார். இழந்திருந்த மன அமைதியைத் திரும்பப் பெற்றார்.

‘ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில்’ என்று தொடங்கி, அந்த ஆதியையும் அந்தத்தையும் இணைப்பது அன்பு நெறி என்பதையுணர்த்தும் அமர காவியம் பொன்னியின் செல்வன்!

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

கல்கியின் எழுத்தில் ஒரு மணிமகுடம்!

- எழுத்தாளர், பத்திரிக்கையாளர் திருப்பூர் கிருஷ்ணன் `பொன்னியின் செல்வன்` தொடர் முதல்முறையாக கல்கியில் வெளிவந்து கொண்டிருந்த காலம். (கல்கி கிருஷ்ணமூர்த்தி காலத்திற்குப் பின்னும் அதே தொடர் மீண்டும் மீண்டும் கல்கி வார இதழில் பலமுறை...

அமரர் கல்கியிடமே வேண்டினேன்!

- ஒரு அரிசோனன் இன்றளவும் ஒவ்வொரு சரித்திர எழுத்தாளரும் அமரர் கல்கியைத்தான் முன்மாதிரியாக வைத்து, தமது எண்ணங்களில் எழுந்து நடமிடும் கதாபாத்திரங்களை எழுத்தில் வடிக்க முற்படுகின்றனர் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் இல்லையேல்...

வரலாற்று ஆர்வத்தைத் தூண்டிய நாவல்!

- பேராசிரியை கே.பாரதி பொன்னியின் செல்வன் புதினம் எனது இளம் வயது வாசிப்பு அனுபவத்தில் ஒரு மைல் கல். அந்தக் காலத்தில் வானொலியில் சினிமாப் பாட்டு கேட்பது கூட தவறு என்று கருதிய ஒரு...

தாளெடுத்து செய்த சாதனை!

2
- கல்வியாளர் பேராசிரியர் வவேசு நான் முழுக்க முழுக்க ஒரு சென்னைவாசி. திருவல்லிக்கேணி கோஷாஸ்பத்திரியில் பிறந்து, தி.நகர் எனப்படும் மாம்பலத்தில் வளர்ந்தவன். நான் பிறப்பதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னரே என் தந்தையார் எங்கள் பூர்வீகமான...

கரிகாலன் தட்டிப் பறித்த கல்லூரி சீட்!

1
- எழுத்தாளர், பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர் மாலன் கல்லூரிக் காலத்தில் எனக்கு முத்துப்பாண்டி என்றொரு தோழர் இருந்தார். புகுமுக வகுப்பை முடித்திருந்தோம். அவரது விருப்பம் அடுத்து வேளாண் கல்லூரியில் சேர்வது. அப்போதெல்லாம் தொழிற்கல்வியில் சேர்வது...