எனது வாழ்நாள் சாதனை!

எனது வாழ்நாள் சாதனை!

– ஓவியர் வேதா

1976ல் நான் S.S.L.C. படித்து முடித்தபோது வீட்டின் சூழ்நிலை காரணமாக மேற்கொண்டு படிப்பைத் தொடர முடியாமல் போனது. வீட்டு வேலைகளை செய்துகொண்டு மற்ற நேரங்களில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது.
அப்போது கல்கி வார இதழில் இரண்டாவது முறையாக ஓவியர் வினு அவர்களின் கைவண்ணத்தில் வெளிவந்த, 'பொன்னியின் செல்வன்' தொடரின் பைண்டு செய்த தொகுப்பை என்னிடம் கொடுத்து வாசிக்கச் சொல்லி அறிமுகப்படுத்தியவர்
எனது தந்தைதான்.

பத்திரிகைகளில் ஓவியம் வரையும் அனைத்து ஓவியர்களுக்கும் அமரர் கல்கியின் எழுத்துக்களுக்கு ஓவியம் வரைய வேண்டும் என்ற கனவும் ஆசையும் உண்டு. குறைந்தபட்சம் பதிப்பகங்களில் வெளியிடும் கல்கியின் நூலுக்காவது அட்டைப் படம் வரைந்துவிட வேண்டும் என்று துடிப்பார்கள். எனக்கும் அந்த ஆசை இருந்தது. ஓவியக் கல்லுரியில் படிக்கும்போதே (1980 – 85) பகுதி நேர ஓவியராக (1981) கல்கியில் கதை, கட்டுரைகளுக்கு தலைப்பு எழுதும் பணியை மேற்கொண்டேன். எனது குரு ஓவியர் மணியம் செல்வன் அவர்கள் மூலம் இந்த அறிமுகம் கிடைத்தது. படிப்படியாக வளர்ந்து வடிவமைப்பாளராகவும் (Layout Artist) கதை, கட்டுரைகளுக்கு ஓவியம் வரையும் நிலைக்கும் உயர்ந்தேன். கல்கியின் எழுத்துக்கு முதன்முதலில்,
'வீணை பவானி' என்ற கதைக்கு அமரர் கல்கி நூற்றாண்டு மலரில் வரைந்தேன்.

2014 ஜூன் மாதம் ஒரு நாள் கல்கி அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது.
மதியம் இரண்டு மணிக்கு அலுவலகத்திற்குச் சென்றபோது,
ஆசிரியர் திருமதி லக்ஷ்மி நடராஜன், பொறுப்பாசிரியர் வெங்கடேஷ் மற்றும் சுப்ர.பாலன் ஆகியோர் என்னை வரவேற்றனர். ''கல்கி வார இதழில் ஆகஸ்ட் ஆண்டு மலரில் அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' தொடர் ஆரம்பிக்கப்போகிறோம். அதற்கு நீங்கள்தான் ஓவியம் வரைய வேண்டும்'' என்று சொன்னபோது எனக்கு இன்ப அதிர்ச்சியாகவும், ஆனந்தமாகவும் இருந்தது.

''ஒவ்வொரு வாரமும் படத்தை பென்சில் ஸ்கெட்ச் செய்து திருமதி சீதா ரவி அவர்களின் ஒப்புதல் பெற்ற பிறகுதான் வண்ணப் படமாக வரைய வேண்டும்'' என்றும் சொன்னார்கள். அதன்படி ஒவ்வொரு வாரமும், 'ஸ்கெட்ச்' போட்டு சீதா ரவி அவர்களிடம் காட்டி, அவர்கள் சொல்லும் திருத்தங்கள், யோசனைகள், குறிப்புகள் அனைத்தையும் கேட்டு அதன்படி ஓவியங்கள் வரைந்தேன். ஏற்கெனவே ஓவியர்கள் மணியம், வினு மற்றும் பத்மவாசன் போன்ற ஜாம்பவான்கள் இந்தத் தொடருக்கு ஓவியம் வரைந்து இருந்ததால் அவர்களில் இருந்து மாறுபட்டு வரைய வேண்டிய சவால் இருந்தது.

ந்தியத்தேவன் குதிரை மேல் அமர்ந்தபடி வீராணம் ஏரிக் கரையோரம் வரும்போது, அன்று ஆடி பெருக்கு என்பதால் ஆண்களும், பெண்களும் மற்றும் குழந்தைகளும் சூழ விரியும் புதினத்தின் அறிமுகக் காட்சி.  முதல் படமே சவாலாக அமைந்தது. அடுத்து கடம்பூர் மாளிகையில் இரவு நேரத்தில் வந்தியத்தேவன் நுழையும்போது பல வீரர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டு தாக்குவார்கள். இந்தக் காட்சியை வரைவதும் எனக்கு மிகப் பெரும் சவாலாக இருந்தது. அக்காட்சியில் வந்தியத்தேவன் முகத்தில் கோபமும், வெறுப்புமாக வரைந்திருந்தேன். அதைக்கண்ட சீதா ரவி அவர்கள், 'வந்தியத்தேவன் முகத்தில் மிகவும் அலட்சியமாக சண்டை போடுவது போல் இருக்க வேண்டும்' என்று கூறி, மேலும் அக்காட்சி சிறப்பாக அமைய சில குறிப்புகளும் தந்தார்கள். அதன்படி வரைந்தேன். அக்காட்சி மிகவும் ரசிக்கும்படி அமைந்தது; எனக்கு நல்ல பெயரையும் பெற்றுத் தந்தது.

அதைப்போல், 'சுழிக்காற்று' என்ற அத்தியாயத்திற்கு ஓவியம் வரைய மிகவும் தடுமாறினேன். புயல் மழையில் கப்பல் தடுமாறுவது போல் அமையும் காட்சி. மின்னல் வெட்டும் ஒளியைத் தவிர மற்றபடி கும்மிருட்டாக இருக்கும் என
அமரர் கல்கி வர்ணித்திருப்பார். அதற்காக கருப்பு நிற காகிதத்தில் மிகவும் சிரமப்பட்டு வரைந்தேன். அந்த ஓவியம் வெளிவந்த பின் வாசகர்களிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்தன. நான் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் நீங்கியது போல் உணர்ந்தேன். பொன்னியின் செல்வன் தொடருக்கு ஓவியம் வரைந்த 187 வாரங்களும் எனக்கு சவாலாகவே இருந்தது. பொன்னியின் செல்வன் நாவலுக்காக ஒவ்வொரு வாரமும் ஐந்து ஓவியங்கள் வரைந்தது ஓவியர் மணியம் அவர்களுக்குப் பின் நானாகத்தான் இருப்பேன் என நினைக்கிறன். பொன்னியின் செல்வன் தொடருக்கு ஓவியம் வரைந்ததை எனது வாழ்நாளில் மிகப் பெரிய சாதனையாகவே கருதுகிறேன்.

இந்த நாவலின் அனைத்துக் கதாபாத்திரங்களும் எனக்குப் பிடிக்கும் என்றாலும், மிகவும் பிடித்த கதாபாத்திரம் வானதிதான். அவளது அசட்டு தைரியமும், இளவரசர் அருள்மொழிவர்மன் மீது அவள் வைத்திருந்த அளவு கடந்த பாசமும், அதை வெளிக்காட்டத் தெரியாத அவளது கூச்ச சுபாவமும் என்னை மிகவும் ரசிக்க வைத்தது. அதுபோன்ற ஒரு காட்சியை எனது எழுத்தில் படிப்பதை விட, அமரர் கல்கி அவர்களின் எழுத்து ரசனையிலேயே படிப்பது சுவாரசியமாக இருக்கும். இதோ என்னோடு சேர்ந்து நீங்களும்தான் இதை வாசியுங்களேன்.

சூரியன் மறைந்து நாலு திக்கிலும் இருள் சூழ்ந்து வந்த நேரத்தில், வானதி
குடந்தை – திருவாரூர் சாலையில் பல்லக்கில் போய் கொண்டிருந்தாள். அவளுடைய உள்ளம் குழம்பியிருந்தது. நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்துக்குப் போக வேண்டும் என்றும், அங்கே காய்ச்சல் வந்து படுத்திருக்கும் இளவரசருக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்றும் அவள் மனம் துடித்தது. ஆனால் அது எப்படி சாத்தியமாகும்? புத்த பிக்ஷுக்களின் விஹாரத்துக்குள் தன்னை அனுமதிப்பார்களா, அங்கே இளவரசரைத் தான் பார்க்க இயலுமா, பார்த்தாலும் பணிவிடை செய்ய முடியுமா – என்பதை யெல்லாம் எண்ணியபோது ஒரே மலைப்பாயிருந்தது.

நாகைப்பட்டினத்துக்குத் தனியாகப் பிரயாணம் செய்ய வேண்டியிருப்பதை எண்ணியபோது அதைரியம் உண்டாயிற்று. அதைரியத்தைப் போக்கி மனதில் உறுதி உண்டுபண்ணிக்கொள்ள முயன்றாள். உலகில் பெரிய காரியம் எதுதான் எளிதில் சாத்தியமாகும்? ஒவ்வொருவர் எடுத்த காரியத்தைச் சாதிப்பதற்கு எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்? அந்த ஓடக்காரப் பெண் கடலில் தனியாகப் படகு செலுத்திக்கொண்டு போக எவ்வளவு நெஞ்சுத் துணிவு உள்ளவளாயிருக்க வேண்டும்? புயலிலும், மழையிலும் மலை போன்ற அலைகளுக்கு மத்தியில் படகு விட்டுக் கொண்டு போய் இளவரசரைக் காப்பாற்றியதற்கு எவ்வளவு நெஞ்சுத் துணிவு அவளுக்கு இருக்க வேண்டும்? தான் இந்த சிறிய பிரயாணத்தைக் குறித்துப் பயப்படுவது எவ்வளவு பேதமை?

சூடாமணி விஹாரத்துக்குள் உடனே போக முடியாவிட்டால் பாதகமில்லை. அக்கம் பக்கத்தில் இருந்து இளவரசரைப் பற்றிய செய்தி தெரிந்து கொண்டிருந்தாலும் போதும். இளவரசரைப் பார்க்க முடியாவிட்டாலும் பாதகமில்லை; அந்த ஓடக்காரப் பெண்ணையாவது பார்க்க முடிந்தால் போதும். ஆம், அதுதான் சரி, அவளை எப்படியாவது தெரிந்து கொண்டால், அவள் மூலமாக இளவரசரைப் பார்க்க முடிந்தாலும் முடியலாம். அவரிடம் தனக்குள்ள அன்பு ஏதோ ஒரு பிரயோஜனத்தை காட்டிவிட வேண்டும். அதற்குப் பிறகு இந்த உயிரை விட்டாலும் விட்டுவிடலாம். அல்லது புத்த சங்கத்தில் சேர்ந்து பிக்ஷுணி ஆனாலும் ஆகிவிடலாம்…

– புத்த பிக்ஷுக்களின் இருப்பிடமான சூடாமணி விஹாரத்தில் தங்கியிருந்த இளவரசர் அருள்மொழிவர்மன் மீது வானதி வைத்திருந்த அன்பு, தானும் புத்த பிக்ஷுணி ஆகி விட்டாலும் பரவாயில்லை என்பது வரை அவளை இழுத்துச் சென்றது என்றால் அவளது ஸ்நேகத்தை என்னவென்று சொல்வது!

2015ல் 'பொன்னியின் செல்வன் பாதையில்' என்ற போட்டி ஒன்றை வைத்து அதில் பத்து பேரை தேர்ந்தெடுத்து அவர்களை கதை நடந்த களத்திற்கு அழைத்துச் சென்றது கல்கி குழுமம். அவர்களோடு என்னையும் அனுப்பி வைத்தது. வந்தியத்தேவன் நடந்த வீராணம் ஏரி முதல் விண்ணகரக் கோவில், தஞ்சை பெரிய கோவில், ரவிதாசன், சோமன், சாம்பன் சதி திட்டம் தீட்டிய பள்ளிப்படை, கடம்பூர் மாளிகை இருந்த இடம், கோடியக்கரை கலங்கரை விளக்கத்தின் மிச்சம், பூங்குழலி அமர்ந்து இருந்த
குழகர் கோயில் மதில் சுவர் மற்றும் குழகர் பெருமானையும், வானதியும் குந்தவையும் மற்றும் அருள்மொழிவர்மனும் நடந்த பழையாறை நகரமும் கோவிலையும் கண்ணராக் கண்டேன். ஓவியங்கள் வரைவது மட்டுமல்லாமல்,
இந்த இடங்களுக்கு எல்லாம் சென்று வரக்கூடிய அனுபவத்தையும் கல்கி குழுமம் எனக்கு அளித்ததை பெரும் பாக்கியமாகவே கருதுகிறேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com