காலத்தால் வெல்ல முடியாத காவியம்!

காலத்தால் வெல்ல முடியாத காவியம்!

– மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா

பெரிய நகரங்களில் பல்பொருள் அங்காடிகளில் விற்பனைக்கான இனிப்புத் தின்பண்டங்கள் வரிசையில் கவர்ச்சியான பொருள்களுக்கிடையில், ஓர் ஓரமாகக் கடலை மிட்டாயையும் பொரி உருண்டையையும் நாம் காண்கின்றபோது சிலீரென்று ஓர் உணர்வு. சின்ன வயதின் நினைவுகள், காற்சட்டைப் பையில் வைத்துச் சாப்பிட்ட பொருட்கள், உடல் நலனுக்குத் தீங்கு விளைவிக்காத அந்த உணவு, என் மண்ணின், என் பாரம்பரியத்தின் அடையாளம் என்று உரத்துக் கூறத் துடிக்கும் மனது.

சற்றேறக்குறைய அதே மனநிலைதான் இன்று குவிந்து கிடக்கும் ஆங்கில, தமிழ் நூல்களுக்கிடையே, 'பொன்னியின் செல்வன்' நூலினைக் காணும்போதெல்லாம் ஏற்படுகிறது. காரணம், மிகைப்படுத்தப்படாத, யதார்த்தமான, பழுதில்லாத வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையி்ல் புனையப்பட்ட நம் பாட்டன் சோழனின் வரலாறுதான் பொன்னியின் செல்வன்.

நெஞ்சில், நினைவில் நிலைத்து நிற்கும் பாத்திரங்கள். வந்தியத்தேவன், இலக்கிய ஆர்வலர்களின் மந்திரச் சொல்லாக மாறிப்போன பெயர். நந்தினி, காவியத்தின் இறுதியில் உண்மை தெரிய வருவதற்குமுன் கூட, அவள் செயல்களின் காரணமாக நியாயமாக வரவேண்டிய கோபம்கூட அவள் மீது வராமல் போக நேர்ந்திடும் விந்தை. குந்தவை, சராசரி பெண்ணின் இதயங்கொண்ட கம்பீரமான, நிதானமான இளவரசி. பூங்குழலி, பழுவேட்டரையர், அருள்மொழிவர்மன், ஆதித்த கரிகாலன் இவர்கள் தமிழர்களின் இதயங்களில் கல்வெட்டாய்ப் பதிந்துவிட்ட பெயர்கள்.

பெயர் சூட்டச் சொல்லி என்னிடம் கொண்டுவரும் குழந்தைகளுக்குப் பெரும்பாலும் நான் சூட்டிடும் பெயர்கள் பொன்னியின் செல்வனிடமிருந்துதான். நம் நேசத்துக்குரியவர்களின் பெயர்களைத்தானே, நிரந்தரத்தின் பொருட்டுப் பிறருக்கு நாம் சூட்டுகிறோம்.

1960களில் பள்ளிப் பருவத்தின்போது என் தமக்கையை, அப்போது கல்கியில் மீண்டும் தொடராக வெளியான, காலத்தால் அழிக்க முடியாத 'பொன்னியின் செல்வன்' காவியத்தை வாய்விட்டு உரக்கப் படிக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டே என் தாயார் வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அப்போது காதில் விழுந்து, மனத்தில் பதிந்து, விவரம் தெரிந்து படிக்க வாய்ப்பு கிடைத்தபோது, ஒரே மூச்சில் நான் வாசித்த முதல் நெடுங்கதை 'பொன்னியின் செல்வன்'தான்.

எனினும், பின்னாளில் என் மகள் வாசித்து, தான் தமிழ்ப் பெண்ணாகப் பிறந்ததன் பெருமையை உணர்ந்ததாகவும், என் மகளாகப் பிறந்து அதை வாசிக்க நேர்ந்த அளவில்லா மகிழ்ச்சியினை அடைந்ததாகவும் நள்ளிரவில் என் உறக்கம் கலைக்காமல் ஒரு கடிதம் எழுதி என் தலைமாட்டில் வைத்து, காலையில் நான் கண் விழித்ததும், அந்த மடலைப் படித்து என் மனம் பூரித்துப்போனதெல்லாம் என் வாழ்வின் பொன்னான தருணங்கள். அதுபோன்ற பொன்னான தருணங்கள், எண்ணற்ற தமிழர் இல்லங்களில் அவர்தம் உள்ளங்களில் நிலவி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. காலத்தால் வெல்ல முடியாத காவியம் இது என்கிற கருத்தில் யாருக்குத்தான் மறுப்பு இருக்க முடியும்!

17.08.2014 தேதியிட்ட கல்கி வார இதழிலிருந்து…
நன்றி : கல்கி களஞ்சியம்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com