கல்கியின் எழுத்தில் ஒரு மணிமகுடம்!

கல்கியின் எழுத்தில் ஒரு மணிமகுடம்!

– எழுத்தாளர், பத்திரிக்கையாளர் திருப்பூர் கிருஷ்ணன்

`பொன்னியின் செல்வன்` தொடர் முதல்முறையாக கல்கியில் வெளிவந்து கொண்டிருந்த காலம். (கல்கி கிருஷ்ணமூர்த்தி காலத்திற்குப் பின்னும் அதே தொடர் மீண்டும் மீண்டும் கல்கி வார இதழில் பலமுறை வெளிவந்து சாதனை புரிந்தது.) கல்கி எழுத எழுத, ஓவியர் மணியம் சுடச்சுட வரைந்த அற்புதமான சித்திரங்களோடு அது வெளிவந்த காலத்தில் தமிழ் வாசகர்களின் உள்ளங்களை அப்படியே முழுமையாக அள்ளிச் சாப்பிட்டது! எங்கும் பொன்னியின் செல்வன் என்பதே பேச்சு! அடுத்த வாரம் என்ன நடக்கும் என்றறிவதற்காக வாசகர்கள் ஒவ்வொரு வாரமும் மிகுந்த ஆவலோடு காத்திருந்தார்கள்.

கல்கி வார இதழ் வரும் நாட்களில் ரயில் நிலையம் சென்று ரயிலிலிருந்து கல்கி இதழ் கட்டுக்கட்டாக அவர்கள் ஊரில் இறங்கும்போதே கல்கியை வாங்கப் போட்டி போட்டார்கள். சில குடும்பங்களில் ஒரே நேரத்தில் யார் கல்கியை முதலில் படிப்பது எனச் சண்டை வந்ததால், ஒவ்வொரு வாரமும் இரண்டிரண்டு கல்கி இதழ்கள் வாங்கத் தலைப்பட்டார்கள். மாலை நேரங்களில் ஒருவர் பொன்னியின் செல்வனைச் சத்தம் போட்டுப் படிக்க குடும்பத்தில் அனைவரும் அதைக் கேட்டார்கள். கேட்டபின் அடுத்த வாரம் சம்பவம் எப்படிப் போகும் என்பது குறித்த ஊகங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.

வாராவாரம் அந்தத் தொடரை ஆர்வத்துடன் படித்து வந்தார் ஒரு மூதாட்டி. கதையோ வளர்ந்துகொண்டே இருக்கிறது. பாட்டிக்கோ வயது காரணமாக ஆயுள் குறைந்துகொண்டே வருகிறது. `நான் காலமாவதற்குள் பொன்னியின் செல்வன் முடிந்துவிட வேண்டுமே… கடவுளே! பொன்னியின் செல்வனை முழுமையாகப் படித்துவிட்டு நான் காலமாக வேண்டுமே!` என்று அடிக்கடிப் புலம்புவாராம் அந்தப் பாட்டி. அவர் – பிரபல எழுத்தாளர் சிவசங்கரியின் பாட்டி.

ன் நண்பரும் சென்னை கிருஷ்ணகான சபை மானேஜராக இருந்தவருமான காலஞ்சென்ற ரங்கராஜன் கல்கி எழுத்துகளின் தீவிர ரசிகர். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மாணவப் பருவத்திலேயே, எப்படியாவது பொன்னியின் செல்வன் புத்தகம் வாங்க வேண்டும் என்று அவருக்குத் தீராத வேட்கை.

கையிலிருந்த கொஞ்சப் பணத்தோடு வானதி பதிப்பகம் சென்றார். விலையைக் கேட்டதும் மலைப்பாக இருந்தது. அவ்வளவு தொகை அப்போது கைவசமில்லை.

ரங்கராஜனின் ஆர்வத்தைப் பார்த்த வானதி திருநாவுக்கரசு வியப்புடன் யோசித்தார். பிறகு, `எவ்வளவு தொகை இருக்கிறதோ அதை இப்போது கொடு. மீதித் தொகையைக் கொஞ்சம் கொஞ்சமாக மாதாமாதம் கொண்டு கொடு. இப்போதே ஐந்து பாகங்களையும் எடுத்துக் கொண்டு போய்ப் படி!` என்று பொன்னியின் செல்வன் புத்தகங்களை முழுவதுமாகக் கொடுத்துவிட்டார்.

புத்தகங்களை மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்ட ரங்கராஜன் ஒருசில மாதங்களில் முழுத் தொகையையும் கொண்டு கொடுத்துவிட்டார்.

கல்லூரி மாணவர்கள் பலர் தங்களுக்குக் கிடைக்கும் சிறுசிறு தொகையைச் சேமித்து வைத்து, பொன்னியின் செல்வன் புத்தகம் வாங்கிப் படித்த காலகட்டம் அது.

க்கச்சக்க முடிச்சுக்கள் அந்த வரலாற்று நாவலில் உண்டு. ஒவ்வொரு முடிச்சாக அவிழும்போது வாசகர்கள் அடையும் இலக்கிய இன்பமே தனி.

வந்தியத்தேவன், அருள்மொழி வர்மர், சுந்தர சோழர், குந்தவை, வானதி, நந்தினி, ஆழ்வார்க்கடியான், சேந்தன் அமுதன், பூங்குழலி, பெரிய பழுவேட்டரையர், சின்னப் பழுவேட்டரையர், ஆதித்த கரிகாலர், செம்பியன்மாதேவி, ரவிதாசன், கந்தமாறன், மணிமேகலை, அநிருத்த பிரம்மராயர், மதுராந்தக சோழர், மந்தாகினி என்று இன்னும் பல எண்ணற்ற பாத்திரங்கள்.

`புதுவெள்ளம், சுழற்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாகச் சிகரம்` என ஐந்து பாகங்களைக் கொண்டு இதிகாசம் போல் வளரும் பிரம்மாண்டமான சரித்திர நாவல் அது. சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்தப் புதினம் படைக்கப்பட்டுள்ளது.

1950இல் கல்கி வார இதழில் தொடங்கப்பட்ட இந்த நாவல் மூன்றரை ஆண்டுகள் தொடராக வெளிவந்தது. சில சரித்திரச் செய்திகளை நேரில் கண்டு அறிவதற்காக கல்கி மூன்று முறை இலங்கைக்குச் சென்று வந்தார்.

பக்க அளவில் இதை மிஞ்சிய சரித்திர நாவல் தமிழில் வேறேதும் இல்லை. இந்த நாவலின் இடையே கல்கி எழுதிய அழகான கவிதைகளும் உண்டு.

முக்கியமாக பூங்குழலி பாடுவதாக வரும் `அலைகடலும் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன்? நிலமகளும் துயிலுகையில் நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்?` போன்ற கவிதை வரிகள் வாசகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டன.

பொன்னியின் செல்வன் நாவலின் புகழ்பெற்ற பாத்திரம் ஆழ்வார்க்கடியான். அவன் பேசும் பேச்சை நினைத்து நினைத்து மகிழலாம். நகைச்சுவையும் குறும்பும் கொப்பளிக்கும் பேச்சு அது. இதோ ஓர் இடத்தில் ஆழ்வார்க்கடியானும் சிவனடியாரும் பேசிக்கொள்கிறார்கள்:

`என்னதான் சொன்னாலும் நாயன்மார்கள் மொத்தம் அறுபத்து மூன்று பேர். ஆழ்வார்கள் பன்னிரண்டே பேர்தான்!` என்கிறார் சிவனடியார்.

`ஆமாம் ஆமாம். கெளரவர்கள் நூறு பேர். பாண்டவர்கள் ஐந்தே பேர்தான்!` என்று பதில் சொல்கிறான் ஆழ்வார்க்கடியான்.

`அந்தப் பன்னிரண்டு ஆழ்வார்களிலும் பேயாழ்வார் பூதத்தாழ்வார் எனப் பேயும் பூதமுமல்லவா இருக்கிறது!` என்பது சிவனடியாரின் கேலி.

`வைணவத்திலாவது ஆழ்வார்களில்தான் பேயாழ்வாரும் பூதத்தாழ்வாரும் இருக்கிறார்கள். ஆனால் உங்கள் கடவுளான சிவனைச் சுற்றியே பூத கணங்கள் இருக்கின்றனவே?` என்று கேட்டு சிவனடியாரின் வாயை அடைக்கிறான் ஆழ்வார்க்கடியான்.

`என்ன இருந்தாலும் அடியையும் முடியையும் காண முடியாமல் பிரம்மாவும் திருமாலும் கடைசியில் சிவனிடம் சரண் அடைந்தவர்கள்தானே?` என்ற கேள்வி சிவனடியாரிடமிருந்து வருகிறது.

`தசகண்ட ராவணனுக்கு உன்னுடைய சிவன் எத்தனை வரங்களைக் கொடுத்தார். என்ன ஆயிற்று? எல்லாம் எங்கள் திருமாலின் ராம கோதண்டத்துக்கு முன்னால் பொடிப் பொடியாயிற்றே?` என்று பதில் சொல்கிறான் ஆழ்வார்க்கடியான்!

ஆழ்வார்க்கடியான் எத்தனை சாகசக்காரன்! அவனை பேச்சில் வென்றுவிட முடியுமா என்ன?

இதுபோன்ற பகுதிகளைப் படிக்கும்போது நாம் சைவராக இருந்தாலும் வைணவராக இருந்தாலும் அன்றைய சூழலை எண்ணி மலர்ந்து சிரித்து மகிழ்கிறோம். அதுதான் கல்கி எழுத்தின் வெற்றி.

பொன்னியின் செல்வனைப் படித்தவர்கள் குந்தவைப் பிராட்டியையும் நந்தினியையும் வாழ்நாளில் மறக்க மாட்டார்கள். அப்படிக் கச்சிதமாக வார்க்கப்பட்ட பாத்திரங்கள் அவை. அவர்கள் இருவர் சுபாவத்தையும் ஒப்பிட்டுக் கல்கி எழுதும் இடம் இது:

`ஒருவன் நரகத்தில் விழப் போகிறவனாய் இருந்தால் அவனைத் தடுத்து நிறுத்திக் குந்தவை தேவி சொர்க்கத்துக்கு அவனைக் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுவாள். அது ஒருவித சக்தி.

நந்தினி என்ன செய்வாள் தெரியுமா? அவளுடைய சக்தி இன்னும் ஒருபடி மேலானது என்றே சொல்ல வேண்டும். நரகத்தையே சொர்க்கம் என்று சொல்லிச் சாதித்து அதை நம்பும்படியும் செய்து நரகத்தில் சந்தோஷமாகக் குதிக்கும்படிச் செய்து விடுவாள்.` (பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்)

இதைவிடச் சிறப்பாக வேறு எப்படி அந்தப் பாத்திரங்களின் இயல்பை வர்ணிக்க முடியும்? நந்தினியின் குரலைப் பற்றிக் கல்கி வர்ணிக்கும் இடம் உரைநடையா இல்லை கவிதையா?

`காசிப் பட்டின் மென்மையும் கள்ளின் போதையும் காட்டுத் தேனின் இனிப்பும் கார்கால மின்னலின் ஜொலிப்பும் இணைந்ததுதான் இந்தக் குரல்!` என எழுதுகிறார் கல்கி.

மது சரித்திர நாவல்களாலும் சமூக நாவல்களாலும் எண்ணற்ற சிறுகதைகளாலும் கவிதை, கட்டுரை போன்ற படைப்புக்களாலும் கலை விமர்சனங்களாலும் தாம் எழுதிய தலையங்கங்களாலும் தற்காலத் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்தவர் கல்கி என்றே அறியப்படும் ரா.கிருஷ்ணமூர்த்தி. இலக்கியத்தில் அவர் தொடாத துறையே இல்லை.

நாட்டுப் பற்றை வளர்க்கும் கல்கியின் எழுத்து, அதன் பெருமை கருதி நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளது. கல்கி மறைந்தாலும் அவர் எழுத்துகள் காலத்தை வென்று நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அவரது என்றும் நிலைத்திருக்கும் எழுத்துகள் மத்தியில், `பொன்னியின் செல்வன்` வரலாற்றுப் புதினம் என்றென்றும் ஒரு மகுடமாக ஒளிவீசிக் கொண்டிருக்கும் என்பதிலும் சந்தேகமே இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com