மறக்க முடியாத கம்பீரம்!

மறக்க முடியாத கம்பீரம்!

– ஓவியர் தெய்வா

'கல்கி' வார இதழில் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு, 'கூடலழகி' எனும் சரித்திர நாவலுக்கு ஓவியம் தீட்டும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 'இந்த நாவல் சற்றே பொன்னியின் செல்வன் நாவலோடு தொடர்புடையது' என்று கூறினார்கள். அதன் காரணமாக எனக்கு அறிமுகமானதுதான் பொன்னியின் செல்வன் சரித்திர நாவல்.

அந்த நாவலின் கதையோட்டத்தை அறிந்த எனக்கு மிகுந்த பிரமிப்பும் ஆச்சரியமும் ஏற்பட்டது. 'இப்படி கூட ஒரு சரித்திரத்தை சுவையோடும் சுவாரசியத்தோடும் எழுத முடியுமா?' என வியப்பு ஏற்பட்டது. நாவலில் இடம் பெற்றிருந்த கதை மாந்தர்கள் நிஜமா அல்லது கற்பனையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அவர்களின் கதாபாத்திரங்களை அமரர் கல்கி அவர்கள் வர்ணித்திருந்த விதமானது, அனைவரின் கண் முன்னே அவர்களைக் கொண்டு வந்து நிறுத்தியது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

பொன்னியின் செல்வன் நாவலில் எனது மனதில் நிறைவாகவும் முழுதாகவும் பதிந்தவர் பெரிய பழுவேட்டரையர்தான். இவர் பழுவூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த சிற்றரசர். சோழ நாட்டுத் தனாதிகாரியாக சுந்தர சோழர் ஆட்சி காலத்தில் இருந்தவர். துறைமுகப்பட்டினங்களில் சுங்கத் திறை விதித்து வசூலிக்கும் அதிகாரிகளை கண்காணிக்கும் பொறுப்பினையும் ஏற்றிருப்பார். அவருடைய தோற்றம், கம்பீரம், வீரத் தழும்புகள் ஒப்பனைகளை
அமரர் கல்கி ஐயா அவர்கள் வர்ணித்திருப்பது மிகச் சிறப்பாக இருக்கும்.
நாவலில் கூறியிருப்பதற்கு ஏற்ப, ஓவியர் மணியம் ஐயா அவர்கள் பெரிய பழுவேட்டரையரை மிகவும் அருமையாக ஓவியம் தீட்டி நமது கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருப்பார்.

பொன்னியின் செல்வன் நாவலில் பெரிய பழுவேட்டரையர் ஒரு குறுநில மன்னராக இருந்தாலும் அவருடைய கதாபாத்திரம் கடைசி வரை பேசப்பட்டுக் கொண்டே இருக்கும். இந்தக் கதையில் நந்தினியின் பாத்திரத்தோடு தனது மிக அன்பான காதலை வெளிப்படுத்தியிருப்பார். வெளித் தோற்றத்தில் மிகவும் கம்பீரமாகவும் நந்தினியின் முன்பு ஒரு குழந்தையைப் போலவும் இருப்பது ரசிக்கும்படி இருக்கும்.

ந்த நேரத்தில் பொன்னியின் செல்வனில் வரும் ஒரு காட்சியும் வர்ணனையும் எனது நினைவுக்கு வருகிறது. அதை ஐயா கல்கி அவர்களின் எழுத்திலேயே பார்ப்பதுதான் நன்றாக இருக்கும்.

"இத்தனை நேரம் இளைப்பாறியிருந்த வல்லவரையனுடைய குதிரை இப்போது நல்ல சுறுசுறுப்பைப் பெற்றிருந்தது. ஒரு நாழிகை நேரத்தில் கடம்பூர் சம்புவரையர் மாளிகை வாசலை அடைந்து விட்டது. அந்தக் காலத்துச் சோழ நாட்டுப் பெருங்குடித் தலைவர்களில் செங்கண்ணர் சம்புவரையர் ஒருவர். அவருடைய மாளிகையின் வாசல் ஒரு பெரிய நகரத்தின் கோட்டை வாசலைப் போல் இருந்தது. வாசலுக்கு இருபுறத்திலும் எழுந்த நெடுஞ்சுவர்கள் கோட்டைச் சுவர்களைப் போலவே வளைந்து சென்றன.

கோட்டை வாசலில் யானைகளும், குதிரைகளும், ரிஷபங்களும், அந்த மிருகங்களையெல்லாம் பிடித்துக் கட்டுவோரும், தீனி வைப்போரும், தண்ணீர் காட்டுவோரும், ஆங்காங்கு தீவர்த்தி தூக்கிப் பிடித்து வெளிச்சம் போடுவோரும், தீவர்த்திகளுக்கு எண்ணெய் விடுவோருமாக, ஒரே கோலாகலமாயிருந்தது. இதையெல்லாம் பார்த்த வல்லவரையனின் உள்ளத்தில் சிறிது தயக்கமும் துணுக்கமும் ஏற்பட்டன. 'ஏதோ இங்கே பெரிய விசேஷம் ஒன்று நடைபெறுகிறது. இந்தச் சமயத்தில் நாம் வந்து சேர்ந்தோமே' என்று எண்ணினான். நடக்கும் விசேஷம் என்னவென்பதைப் பார்த்துத் தெரிந்துகொள்ளும் ஆவலும் ஒரு பக்கம் பொங்கிக் கொண்டிருந்தது. கோட்டை வாசற் கதவுகள் திறந்துதானிருந்தன. ஆனால், திறந்திருந்த வாசலில் வேல்பிடித்த வீரர்கள் சிலர் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்தால் யமகிங்கரர்களைப் போலிருந்தது.

தயங்கி நின்றால் தன்னை அவர்கள் நிறுத்திவிடுவார்கள் என்றும் தைரியமாகக் குதிரையை விட்டுக்கொண்டு உள்ளே போவதுதான் உசிதம் என்றும் அந்த வீர வாலிபன் எண்ணினான். அந்த எண்ணத்தை உடனே காரியத்தில் நிறைவேற்றினான். ஆனால், என்ன ஏமாற்றம்! குதிரை கோட்டை வாசலை அணுகியதும் வேல் பிடித்த வீரர்கள் இருவர் தங்கள் வேல்களைக் குறுக்கே நிறுத்தி வழிமறித்தார்கள். இன்னும் நாலு பேர் வந்து குதிரையின் தலைக்கயிற்றைப் பிடித்துக் கொண்டார்கள். அவர்களில் ஒருவன் வந்தியத்தேவனை உற்றுப் பார்த்தான். இன்னொருவன் தீவர்த்தி கொண்டுவந்து உயரத் தூக்கி முகத்துக்கு நேரே பிடித்தான்.

வல்லவரையன் முகத்தில் கோபம் கொதிக்க, 'இதுதான் உங்கள் ஊர் வழக்கமா? வந்த விருந்தாளிகளை வாசலிலேயே தடுத்து நிறுத்துவது…?' என்றான்.

'நீ யார் தம்பி இவ்வளவு துடுக்காகப் பேசுகிறாய்? எந்த ஊர்?' என்றான் வாசற்காவலன்.

'என் ஊரும் பேருமா கேட்கிறாய்? வாணகப்பாடி நாட்டுத் திருவல்லம் என் ஊர். என்னுடைய குலத்து முன்னோர்களின் பெயர்களை ஒரு காலத்தில் உங்கள் நாட்டு வீரர்கள் தங்கள் மார்பில் எழுதிக் கொண்டு பெருமையடைந்தார்கள்! என் பெயர் வல்லவரையன் வந்தியத்தேவன்! தெரிந்ததா?' என்றான்.

'இவ்வளவையும் சொல்வதற்கு ஒரு கட்டியக்காரனையும் கூட அழைத்து வருவதுதானே?' என்றான் காவலர்களில் ஒருவன். இதைக் கேட்ட மற்றவர்கள் சிரித்தார்கள்.
…….
'இங்கே என்ன ஆர்ப்பாட்டம்?' என்ற ஒரு இளங்குரல் கேட்டது. அந்தக் குரல் கேட்ட இடத்தில் நின்றவர்கள் விலகிக் கொண்டு வழி ஏற்படுத்தினார்கள். வாலிபன் ஒருவன் அந்த வழியாக விரைந்து வந்தான். கையில் பிடித்த கத்தியை இலேசாகச் சுழற்றிக் கொண்டு சூரசம்ஹாரம் செய்த சுப்பிரமணியரைப் போல் நின்ற வந்தியத்தேவனை ஒருகணம் வியப்புடன் நோக்கினான்.

'வல்லவா! என் அருமை நண்பா! உண்மையாகவே நீதானா?' என்று உணர்ச்சி ததும்பக் கூவிக்கொண்டு ஓடிச் சென்று வல்லவரையனை அந்த இளைஞன் கட்டித் தழுவிக் கொண்டான்.

'கந்தமாறா! நீ படித்துப் படித்துப் பல தடவை சொன்னாயே என்று உன் வீட்டுக்கு வந்தேன். வந்த இடத்தில் எனக்கு இத்தகைய வீர வரவேற்புக் கிடைத்தது' என்று வந்தியத்தேவன் தன்னைச் சுற்றி நின்றவர்களைச் சுட்டிக் காட்டினான்.

அவர்களைப் பார்த்து 'சீ! முட்டாள்களே! போங்களடா! உங்கள் அறிவு உலக்கைக் கொழுந்துதான்!' என்றான் கந்தமாறன்.

கந்தமாறன் வந்தியத்தேவனின் கையைப் பிடித்துப் பரபரவென்று இழுத்துக்கொண்டு போனான்.
…….
போகிற போக்கில் வல்லவரையன், 'கந்தமாறா! இன்றைக்கு என்ன இங்கே ஏகதடபுடலாயிருக்கிறது? இவ்வளவு கட்டுக்காவல் எல்லாம் எதற்காக?' என்றான்.

'இன்றைக்கு இங்கே என்ன விசேஷம் என்பதைப் பற்றி அப்புறம் விவரமாகச் சொல்கிறேன். நீயும் நானும் பெண்ணையாற்றங்கரைப் பாசறையில் தங்கியிருந்தபோது, பழுவேட்டரையரைப் பார்க்க வேண்டும்; மழவரையரைப் பார்க்க வேண்டும்; அவரைப் பார்க்க வேண்டும்; இவரைப் பார்க்க வேண்டும்; என்று சொல்வாயே? அந்த அவர், இவர், சுவர் – எல்லோரையும் இன்றைக்கு இங்கேயே
நீ பார்த்து விடலாம்!' என்றான் கந்தமாறன்.
…….
வந்திருந்த விருந்தாளிகளுக்கு மத்தியில் நடுநாயகமாக ஓர் உயர்ந்த பீடத்தில் அமர்ந்திருந்த பழுவேட்டரையரிடம் அழைத்துப் போய், 'மாமா! இவன் என் ஆருயிர் நண்பன் வந்தியத்தேவன். வாணப் பேரரசர் குலத்தவன். இவனும் நானும் வடபெண்ணைக்கரைப் பாசறையில் எல்லைக் காவல் புரிந்து கொண்டிருந்தோம். அப்பொழுதெல்லாம் 'வீராதி வீரர் பெரிய பழுவேட்டரையரைப் பார்க்க வேண்டும்' என்று ஓயாது சொல்லிக் கொண்டிருப்பான். 'பழுவேட்டரையர் திருமேனியில் அறுபத்து நாலு போர்க் காயங்கள் இருப்பது உண்மைதானா?' என்று கேட்டுக் கொண்டிருப்பான். 'ஒரு நாள் நீயே எண்ணிப் பார்த்துக்கொள்' என்று நான் சொல்லுவேன்' என்றான்.

பழுவேட்டரையர் சுருங்கிய முகத்துடன், 'அப்படியா, தம்பி! நீயே எண்ணிப் பார்த்தால் ஒழிய நம்ப மாட்டாயோ? அவ்வளவு அவநம்பிக்கையா உனக்கு? 'வாணர் குலத்தைக் காட்டிலும் வேறு குலத்தில் வீரம் இருக்க முடியுமா?' என்ற சந்தேகமோ?' என்றார்.

தோழர்கள் இருவருமே திடுக்கிட்டுப் போனார்கள். தோத்திரமாகச் சொன்னதை இப்படி இவர் குதர்க்கமாக எடுத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கவில்லை.

வந்தியத்தேவனுடைய மனத்தில் எரிச்சல் குமுறியது. ஆயினும் வெளியில் காட்டிக்கொள்ளாமல், 'ஐயா! பழுவேட்டரையர் குலத்தின் வீரப்புகழ் குமரிமுனையிலிருந்து இமயம் வரையில் பரவியிருக்கிறது. அதைப் பற்றிச் சந்தேகிப்பதற்கு நான் யார்?' என்று பணிவுடன் சொன்னான்.

'நல்ல மறுமொழி; கெட்டிக்காரப்பிள்ளை!' என்றார் பழுவேட்டரையர்."

… இப்படியாக, வந்தியத்தேவன்-பழுவேட்டரையர் சந்திப்பை வர்ணனையோடு ரசமாகச் சொல்லி இருப்பார் அமரர் கல்கி அவர்கள்.

'பொன்னியின் செல்வன்' நாவலை கடைசி வரை ஐயா கல்கி அவர்கள் எப்படி மிகவும் நுணுக்கமாகக் கொண்டு சென்றிருப்பாரோ, அதற்கு சற்றும் குறைவில்லாமல், அதற்கு நிகராக அந்த நாவலின் கதாபாத்திரங்களை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருப்பார் ஓவியர் மணியம் அவர்கள். அந்தக் காலத்தில் எந்த பெரிய வசதி வாய்ப்புகளும் இல்லாதபோதே கற்பனைக்கெட்டாத அளவுக்கு அந்த ஓவியங்களை அவர் கற்பனையாகத் தந்திருப்பதை, நான் மிகுந்த வியப்புடன் பார்க்கிறேன்… தலை வணங்குகிறேன்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com