0,00 INR

No products in the cart.

பாடாய்ப் படுத்தும் ‘பொன்னியின் செல்வன்!’

– எழுத்தாளர், பத்திரிக்கையாளர் சீதா ரவி

‘பொன்னியின் செல்வனும் பூங்குழலி அம்மையும்
வந்தியத்தேவனும் வானதியும் குந்தவையும்
பழுவேட்டரையரும் பழுவூர் நந்தினியும் – எம்மைப்
பாடாய்ப் படுத்துகின்றார் – நாங்கள்
பாகாய் உருகுகின்றோம்…’

– இப்படி ஒரு பாடலை, சற்றே நாடகத்தனமான மெட்டில் கேட்டதுண்டு குழந்தைப் பருவத்தில்! அமரர் கல்கியின் மனைவியும் எங்கள் பாட்டியுமான ருக்மிணி அம்மாள் அடிக்கடி அதனைப் பாடிப் பாடி பெருமிதப்படுவார். “உங்க தாத்தா ஒரு பள்ளிக்கூடத்துல தலைமை தாங்கப் போனபோது வாசித்துக் கொடுத்த வரவேற்புப் பத்திரமாக்கும் இந்தப் பாட்டு…” என்பார். ‘பொன்னியின் செல்வன்’ ஒரு நாவல் என்பது புரிவதற்கு முன்பாகவே அதன் பிரம்மாண்டமும் வீச்சும் என்ன என்பதைப் புரிய வைத்தார் பாட்டி.

த்தாவது வயதில், ‘பொன்னியின் செல்வன்’ கல்கி இதழில் மறுபிரசுரமானபோது (1968) ஓவியர் வினுவின் படங்களுடன் அச்சான பிரதிகளைப் பார்க்க நேர்ந்தது. நீண்ட வாளும், பழுவேட்டரையரின் முகத்தில் மிரட்டிய கடுமையும், நந்தினியின் கனல் கண்களும் பயமுறுத்தின. படிக்க முற்படவேயில்லை! முதலில் படித்தது சிவகாமியின்  சபதத்தைத்தான். நேரம் கிடைத்தபோதெல்லாம் அதையே மீண்டும் வாசிக்கத் தோன்றியது.

கல்கி நிறுவனத்தில் உதவியாளராகப் பணிக்குச் சேர்ந்த புதிதில், பொன்னியின் செல்வனை மணியம் படங்களுடனேயே மறுபிரசுரம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. அப்போதுதான் வாரந்தோறும் பிழை திருத்துவதற்குப் படிக்க ஆரம்பித்தேன். உதவி ஆசிரியர் பி.எஸ்.மணி சார் அல்லது இளங்கோவன் சார் திருத்துவார்கள். அந்த வாரத்துக்கான அத்தியாயத்தை உரக்க வாசிக்க வேண்டியது என் பணி. வாரந்தோறும் நாங்கள் மிகவும் விரும்பி வரவேற்ற நேரமாக அமையலாயிற்று, ‘பொன்னியின் செல்வன்’ ஃப்ரூஃப் ரீடிங் டைம். பத்திரிகையில் கணிசமான பக்கங்களில், அதுவும் கிழித்து பைண்டிங் செய்யத்தக்க வகையில் நடுப்பக்கங்களில் அதனை வெளியிடுவது எங்கள் பொறுப்பு!

இப்போது போல் டிஜிடல் அச்சு முறை கிடையாது என்பதால் பிழை திருத்துவதும் சரி, ‘டம்மி’ போட்டு பக்கங்களை ஒதுக்குவதும் சரி கடினமான பணிகள்தான். ஆனாலும், கதையின் காந்த சக்தியும் கதை மாந்தர்களின் காவிய குணங்களிடையே மின்னல் கீற்றாகப் பின்னித் தெறித்த அவர்களுடைய சராசரி மானுட இயல்புகளும் எங்களை ஆட்கொண்டு திளைக்கச் செய்யும். கண்ணீர் மல்க, குரல் நடுங்க மணிமேகலையின் மரணத்தை வாசித்ததையும், பூங்குழலியை வந்தியத்தேவன் துரத்தியோடும் கட்டத்தை சிரிப்பு தாங்காமல் திணறியவண்ணம் வாசித்துக்கொண்டே வந்து ஒரு கட்டத்தில் அவள் நின்று திரும்பவும் எங்கள் சிரிப்பும் நின்றுபோய் சிந்தனையில் மூழ்கிப் போனதையும் மறந்துவிட முடியுமா! உரக்க வாசித்து மகிழ மிக ஏற்ற கதையாக்கம், சொல்லாடல் கொண்டவை அமரர் கல்கியின் கதைகள்.

பொன்னியின் செல்வனை எழுதிவந்தபோது, கல்கி கிருஷ்ணமூர்த்தியே அவ்வப்போது அதற்கு ‘முன்கதைச் சுருக்கம்’ எழுதி வந்தார். புதிய பாகம் தொடங்குகிறபோதும் ஏதேனும் சிறப்பிதழ் வெளியாகி வேறு புதிய தொடர்கள் தொடங்கப்படுகிறபோதும் முன்கதைச் சுருக்கம் கட்டாயம் இடம் பெறும். ஒவ்வொரு முறை கல்கியில் தொடராக மறுபிரசுரமானபோதும் இந்த முன்கதைச் சுருக்கங்கள் இடம்பெற்றன. ஏறத்தாழ நாவல் முற்றுப்பெறும் தறுவாயில் முன்கதைச் சுருக்கம் எழுதி வெளியிட ஒருமுறை அவசியம் ஏற்பட்டது. திணறி்த் திண்டாடி அதை எழுதி முடித்தது பணிக்கால அனுபவங்களுள் மறக்க முடியாத ஒன்று.

பத்மவாசனின் வண்ண ஓவியங்களுடன், ‘பொன்னியின் செல்வன்’ நான்காம் முறையாக கல்கியில் தொடராக வெளி வந்தது! அப்போதும் விற்பனை கூடி நிறுவனத்தின் பொருளாதாரம் உறுதியடைய உதவியது. இணைய முகவரி ஒன்றைப் பதிவு செய்து புதிதாக டிஜிட்டல் உலகத்தில் பிரவேசித்த காலகட்டம். முழு இதழையும் இணையத்தில் ஏற்ற பொருளாதார வலிமை இல்லாத நிலையில், சில பக்கங்களை மட்டுமே இணைய இதழில் வழங்க ஆரம்பித்தோம். பத்துப் – பன்னிரண்டு பக்கங்கள் அச்சில் வெளிவந்ததை மூன்று – மூன்றரை பக்கங்களுக்கு ‘எடிட்’ செய்து அப்பகுதியை மட்டும் சி.டி.யில் பதிவு செய்து எடுத்துப்போனால், இணையத்தில் ஏற்றும் பணியை வேறொரு நிறுவனம் செய்துத் தரும். இப்படி வாரந்தோறும் யானையை பானைக்குள் அடக்கிவிட்டு, அந்தப் பானையை பத்திரப்படுத்தாமல் போனது எவ்வளவு பெரிய தவறு!

இப்போதும் அவ்வப்போது ‘பொன்னியின் செல்வனை’க் கையில் எடுக்கத் தோன்றுகிறது. ஏதேனும் சில பக்கங்களை படிக்கத் தோன்றுகிறது. எந்தப் பகுதியை வாசித்தாலும் இன்பம் ஏற்படுகிறது. சமீபத்தில் நடந்த அமரர் கல்கி நினைவு நாள் நிகழ்ச்சியில் பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி குறிப்பிட்டார் – “பொன்னியின் செல்வன் போன்ற நாவல்களை எழுதியது கல்கி தனக்குத் தானே செய்துகொண்ட துரோகம்” என்று! அந்த நாவல் எழுப்பிய ரசனை வெள்ளத்தில் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய வரலாற்றுச் சிறப்பு மிக்க பல கட்டுரைகளும் கருத்துச் சிதறல்களும் காணாமல் போய்விட்டன என்பது பேராசிரியரின் வருத்தம்.  ஆனால், தமது கட்டுரைகளிலும் தலையங்கங்களிலும் எழுத்தாளர் கல்கி வலியுறுத்திய
தேச நலனையும் உயர் மானுடப் பண்புகளையும் தமது புனைவுகளிலும் காட்சிப்படுத்தினார். அவை மேலும் அதிகமான வாசகர்களை விரைந்து சென்றடைந்தன. பொன்னியின் செல்வனை வாசிப்பவர்கள் அந்த தேசியத்தில் சிலிர்க்காமல் இருக்க முடியாது; அந்தப் பண்புகளைப் பற்றிச் சிந்திக்காமல் இருக்க முடியாது.

மரர் கல்கியின் வாழ்க்கை வரலாறை எழுதிய சுந்தா கூறுவது போல்…

“நாட்டின் சுதந்திரத் திருநாளுடன் தேசிய விடுதலை இயக்கம் முற்றுப் பெற்றது. அந்த இயக்கத்தில் ஈடுபட்டோரில் பெரும்பாலோருக்கு அது ஒரு போராட்ட இயக்கமாக மட்டுமே இருந்தது… அவர்களில் விதிவிலக்காக இருந்தவர்களில் கல்கியும் ஒருவர். அவருடைய தேச பக்தி இந்தக் குறிக்கோளுக்கு அப்பாலும் விரிந்தது. பாரத நாட்டின் பண்பாடு, அதன் ஒரு பகுதியும் தனித்தன்மை கொண்டதுமான தமிழகப் பண்பாடு ஆகிய இரண்டின் உள்ளீடான தத்துவங்களிலும் வெளியீடான வண்ணங்களிலும் அவருடைய கவனம் லயித்தது. அவற்றை அவர் அனுபவித்து அனுபவித்து, தமது அனுபவ ஆனந்தத்தை, நேரான கட்டுரைகள் மூலமும் புனைக்கதைகள், நாவல்கள் மூலமும் பிறருடன் பகிர்ந்துகொண்டார். சுருங்கச் சொன்னால், மிக விரிவானதொரு தேசியத்தால் எழுந்தவை கல்கியின் இலக்கியச் சாதனைகள்.”

அச்சாதனைகளுள் ஒன்றுதான் ‘பொன்னியின் செல்வன்!’

1 COMMENT

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

படித்தவர் பார்த்தனர்; பார்த்தவர் படித்தனர்!

- இயக்குநர், நடிகர் இளங்கோ குமணன் “ஆதி அந்தமில்லாத காலவெள்ளத்தின் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது தூரம் பிரயாணம் செய்யுமாறு நேயர்களை அழைக்கிறோம்” என்று கல்கி அவர்கள் 1950ல், ‘பொன்னியின் செல்வன்’ நாவலின்...

நான் என்றும் ‘பொன்னியின் செல்வன்’ வாசகன்!

- காந்தி கண்ணதாசன் ‘பொன்னியின் செல்வன்’ - எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பெயர். ஒரு சரித்திரக் கதை மூன்று தலைமுறைகளையும் கடந்து பயணிக்கிறது... அதுமட்டுமின்றி, இந்த சரித்திரக் கதை, வாசகர்களை மற்ற சரித்திரக்...

தமிழர் பெருமை பொன்னியின் செல்வன்!

- பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை மணிரத்னம் திரைப்படமாக எடுக்கப்போகிறார் என்று அறிந்தபோது, மனதில் பலவித கலவையான உணர்வுகள் எழுந்தன. ‘தமிழகமெங்கும் பதியப்படாத ஒரு கழகம் இருக்கிறது’ என்று மதன்...

பொன்னியின் செல்வனும் ‘வானதி’ ஐயாவும்!

- மூத்த பதிப்பாளர் ‘வானதி’ திரு.ராமனாதன் தேவகோட்டையிலிருந்து சிறு வயதிலேயே வேலை தேடிச் சென்னைக்கு இடம் பெயர்ந்து வந்த எங்கள் தந்தை ஐயா திருநாவுக்கரசு அவர்கள், 'ஜில் ஜில்' பதிப்பகம் என்று தொடங்கிக் குழந்தைகளுக்காகச்...

பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம்!

- பாம்பே கண்ணன் பொன்னியின் செல்வனுடனான எனது அனுபவங்கள்… எதை எழுதுவது; எதை விடுவது? பதினான்கு வயதில் ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்ற வாசிப்பைப் பற்றியா? அல்லது பொன்னியின் செல்வன் ஒளிப்படமாகத் தயாரிக்க...