படித்தவர் பார்த்தனர்; பார்த்தவர் படித்தனர்!

படித்தவர் பார்த்தனர்; பார்த்தவர் படித்தனர்!

– இயக்குநர், நடிகர் இளங்கோ குமணன்

"ஆதி அந்தமில்லாத காலவெள்ளத்தின் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது தூரம் பிரயாணம் செய்யுமாறு நேயர்களை அழைக்கிறோம்" என்று கல்கி அவர்கள் 1950ல், 'பொன்னியின் செல்வன்' நாவலின் தொடக்கத்தில் நேயர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பார்.

இன்று 72 ஆண்டுகளுக்குப் பிறகும் நேயர்கள் அவர் அழைப்பை ஏற்று வேறு வேறு வாகனங்களில் (ஊடகங்களில்) பயணப்பட்டுக்கொண்டே இருக்கின்றார்கள் பொன்னியின் செல்வனுடன்.

'ஆதியும் அந்தமும் இல்லா காலவெளி' இந்தச் சொற்றொடர் பொன்னியின் செல்வன் நாவலின் நிலைத்தத் தன்மைக்கும் நீடித்தப் புகழுக்கும் மிகப் பொருந்தி இருப்பது கல்கியின் எழுத்து வன்மைக்கு ஒரு சான்று.

'நான் பொன்னியின் செல்வனின் வாசகன்' என்பதையே நெஞ்சு நிமிர்த்தி ஒருவர் சொல்லும்போது அந்தப் பொன்னியின் செல்வனை ஊடக வடிவில் முதன் முதலில் கொண்டு வந்த காலம் தொடங்கி, அந்த வடிவம் மிகப்பெரிய உருவம் பெற்றது வரை உடன் பயணித்தவன் நான் என்று தலை நிமிர்த்தி சொல்லலாம் இல்லையா?

'பொன்னியின் செல்வன்' நாவல் வடிவம் தாண்டி முதல் முறையாக நாடகம் வடிவம் பெற்றது முதல், பின்னாளில் மேடையில் மிக பிரம்மாண்ட வடிவம் பெற்றது வரையான எனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது, 'பொன்னியின் செல்வன்' வாசகர்களுக்கு ஒரு சுவையான அனுபவமாக அமையும்.

'பொன்னியின் செல்வன்' நாவலை முதன் முதலாக 1999ல், நாடக வடிவமாக்கியவர் என் இளவல் இளங்கோ குமரவேல். (இன்று இயக்குனர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு அவருடன் இணைந்து திரைக்கதை அமைத்திருக்கின்றார்) குமரவேலின் பொன்னியின் செல்வன் நாடகத்தை மேஜிக்லாண்டர்ன் என்ற குழுவினர் நாடகமாக்கினார்கள். இயக்குனர் பிரவீன் இயக்கத்தில் நாடகம் 1999ல் மூன்று நாட்கள் நந்தனம் YMCA திறந்த வெளி அரங்கில் நான்கு மணி நேரம் நடைபெற்றது. நடிகர் பசுபதி இரண்டு நாட்கள், நடிகர் நாசர் ஒரு நாள் ஆதித்ய கரிகாலனாக நடித்தார்கள். இந்நாடகத்தில் நடித்தவர்களுக்கு தமிழ் பேச பயிற்சி அளிக்கச் சென்ற என் தாயார் புனிதவதி இளங்கோவன் செம்பியன் மாதேவி வேடமேற்று நடித்தார். ஒத்திகை பார்க்க சென்ற எனக்கு நாடக முன்னுரை வழங்கும் வாய்ப்பு தரப்பட்டது. குடும்பமாய், குடும்பங்களின் நாவல் பொன்னியின் செல்வனில் பங்கேற்கும் பெரு வாய்ப்பை நாங்கள் பெற்றோம். சில சூழல்கள், பொருளாதார இடர்கள் காரணமாக அந்நாடகம் தொடரப்படவில்லை.

பதினைந்து ஆண்டுகள் கழித்து 2014ல் எங்கள் S.S.இண்டர்நேஷனல் மூலம் மீண்டும் பொன்னியின் செல்வனை மேடையேற்றினோம். இயக்குனர் பிரவீன், எழுத்தாளர் குமரவேல், அரங்க அமைப்பாளர் தோட்டா தரணி, இசையமைப்பாளர் பால் ஜேக்கப் என அதே தொழில் நுட்பக் கலைஞர்களுடன், புதிய பல நடிகர்களுடன் பொன்னியின் செல்வன் 2014, 2015 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் இருபது நாட்கள் மேடையேறினான்.

தமிழகம், சிங்கப்பூர் என வலம் வந்த பொன்னியின் செல்வனை, தமிழர்கள், அந்நாவலை மொழிபெயர்ப்பில் படித்தவர்கள் என அனைவரும் கொண்டாடினார்கள். ஒரே குடும்பத்தின் மூன்று தலைமுறை ஒன்றாய் வந்து ஒரு நாடகத்தை ரசித்ததும், ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்து விட்டு நாடகம் காண வந்த இளையோர் கூட்டமும், பொன்னியின் செல்வனுக்கு மட்டுமே கிடைத்த பெருமை.

மிழ் திரையுலக உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் தொடங்கி, இளைய தலைமுறை கொண்டாடும் சிவகார்த்திகேயன் வரை வந்து, கண்டு வாழ்த்திச் சென்றார்கள். மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் நாடக உலகம் கண்ட மிக பிரம்மாண்டமான நாடகம் என்ற தனி பெருமையையும் பெற்றது பொன்னியின் செல்வன்.

இந்தப் புகழுக்கெல்லாம், வெற்றிக்கெல்லாம் காரணம் ஒரே ஒருவர்தானே! யார் அவர்? அவர்தான் அமரர் கல்கி. அவருக்கு எப்படி நன்றி செலுத்தப்போகின்றோம். நன்றி என்ற ஒரு சொல் போதுமா? போதாது என்று முடிவெடுத்த நாங்கள், 2014ல் பத்து நாட்கள் பொன்னியின் செல்வன் நாடகத் திருவிழாவைத் தொடக்கி வைக்க, 'கல்கி' திரு.ராஜேந்திரன் அவர்களை அழைத்து கல்கி அறக்கட்டளைக்கு ஒரு லட்சம் பணம் செலுத்தி, எங்கள் நன்றியை காணிக்கையாக்கினோம்.

2015ஆம் ஆண்டு மீண்டும் பொன்னியின் செல்வன் நாடகம் மேடையேறியபோது இதுவரை நாவலை படிக்காதவர்களையும் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆவலில் புரவலர்களின் உதவியோடு பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களையும் ஒன்றாக்கி ஒரு பெரிய அளவு நூலாக வெளியிட்டு, 'படியுங்கள் பாருங்கள்' என்ற தலைப்பில், 'இரண்டு டிக்கெட்டுகள் வாங்குபவர்களுக்கு ஒரு பொன்னியின் செல்வன் நாவல் இலவசம்' என வழங்கினோம்.

படித்தவர்கள் பார்த்தார்கள், பார்த்தவர்கள் படித்தார்கள். மீண்டும் மீண்டும் படிப்பார்கள்… மீண்டும் மீண்டும் பார்ப்பார்கள் அதற்குரிய தகுதி பெற்றவன்தானே பொன்னியின் செல்வன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com