0,00 INR

No products in the cart.

பொன்னியின் செல்வன் கதையும்… நானும்!

– சீர்மிகு எழுத்தாளர், முற்போக்கு சிந்தனையாளர், சமூக ஆர்வலர் சிவசங்கரி

‘பொன்னியின் செல்வன்’ தொடர் முதன் முதலில் கல்கி பத்திரிகையில்
1950ஆம் ஆண்டு துவங்கியபோது எனக்கு வயசு 8. கதைகளைப் படிப்பதில் அதிக ஆர்வம் காட்டாத நான், வீட்டில் எல்லோரும் அந்த வார கல்கியை படித்து முடித்த பிறகு அந்தப் பத்திரிகையை எடுத்துக்கொண்டுபோய் தனியாக அமர்ந்து, ‘பொன்னியின் செல்வன்’ கதைக்கு ஓவியர் மணியம் தீட்டிய படங்களைப் பார்த்து ரசிப்பேன்.

நந்தினியின் ஆண்டாள் கொண்டை, அகன்ற அழகான விழிகள், பூங்குழலியின் காற்றில் அலையும் கூந்தல், குந்தவையின் ஐந்து அடுக்கு நூதன கோபுரக் கொண்டை, வந்தியதேவன், அருள்மொழிவர்மனின் ஆண்மை மிகுந்த தோற்றம், வயது ஆனாலும் கம்பீரம் குறையாத பெரிய பழுவேட்டரையர், கட்டை குட்டையாக குடுமியை ஒரு பக்கமாய் வைத்திருந்த ஆழ்வார்க்கடியான்… என்று அத்தனை கதாபாத்திரங்களையும் ஊன்றிப் பார்த்து ரசிப்பேன்!! பிறகு என் கலர் பாக்ஸிலிருந்து கலர் பென்சில்கள் எடுத்து மனசுக்குப் பிடித்த மாதிரி ஒவ்வொரு படத்திற்கும் வண்ணங்கள் பூசி அழகு பார்ப்பேன்!!!

என் அப்பா கல்கி பத்திரிகையின் ஆடிட்டர் என்பதோடு, கல்கி சதாசிவ மாமாவின் குடும்ப நண்பராகவும் இருந்ததில் அடிக்கடி அவர்களின் வீடுகளுக்குச் செல்வார். அப்படிச் செல்லும்போது பல தருணங்களில் நானும் உடன் போவேன். ஓரிரு முறைகள் நான் கலர் செய்து வைத்திருந்த, ‘பொன்னியின் செல்வன்’ படங்களை கையோடு எடுத்துச் சென்று கல்கி மாமாவிடம் காட்டியபோது அவர் அவற்றை கையில் வாங்கிப் பார்த்து, “பேஷ்…. பேஷ்! ரொம்ப நன்னா இருக்கு” என்று பாராட்டி என் முதுகில் தட்டிக் கொடுத்திருக்கிறார்!!

‘பொன்னியின் செல்வன்’ தொடர் வெளியானபோது என் பாட்டி நடமாடும் சக்தியை இழந்து, படுத்த படுக்கையாய் இருந்தார். ஆனாலும், வாராவாரம் கல்கி பத்திரிகை வந்ததும் அவருக்குதான் முதலில், ‘பொன்னியின் செல்வன்’ கதையை பெரியவர்கள் யாராவது படித்துக் காட்டுவார்கள். அந்தத் தொடரில் பாட்டிக்கு அப்படி ஒரு ஈடுபாடு! சுமார் நான்கு வருஷங்களுக்கு கதை தொடர்ந்தபோது, “பொன்னியின் செல்வன் முடியும் வரை நான் உயிரோடு இருக்க வேண்டும்!” என்று வாய்விட்டு இறைவனிடம் பாட்டி வேண்டிக்கொண்டதை நான் கேட்டிருக்கிறேன்!

குந்தவையின் ஐந்து அடுக்குக் கொண்டை, அந்தக் காலத்தில் எல்லோராலும் வியந்து பேசப்பட்ட ஒரு சிகை அலங்காரம்! ஓவியர் மணியத்தின் கற்பனையைக் குறித்து பாராட்டிப் பேசாதவர்களே இல்லை எனலாம்! நவராத்திரி நாட்களில் அதுமாதிரி கொண்டை போட விரும்பி, வைக்கோலைப் பிரிமணை போல பல அளவுகளில் செய்து, கருப்புத் துணியைச் சுற்றி, நேர்த்தியாக வட்டங்களை உருவாக்கிய பின் தலைமுடியில் ஒவ்வொன்றாக நுழைத்துக் கட்டி, குந்தவையின் கோபுர கொண்டையை நாங்களும் போட்டுக்கொண்டு ஆனந்தப்பட்டிருக்கிறோம்!

ந்தினி வெகு அழகுதான் என்றாலும் கூட, அது என்னமோ பூங்குழலிதான் இயற்கையாகவே அழகானவள் என்று எனக்குத் தோன்றும். கல்லூரி நாட்களில் ஆழ்ந்த ரசனையுடன் பொன்னியின் செல்வனைப் படித்தபோது அழகிற்காக மட்டுமின்றி, துணிச்சலான குணத்திற்காகவும் அவளது தனித்தன்மைக்காகவும்கூட பூங்குழலியைத்தான் எனக்குப் பிடிக்கும்!

கடல் சீற்றத்தைப் பொருட்படுத்தாமல் தன்னந்தனியாகக் கடலில் படகை ஓட்டி, வந்தியத்தேவனை இலங்கைக்கு தானே படகில் இட்டுச்சென்று, கப்பல் உடைந்து கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த அருள்மொழிவர்மனையும் வந்தியத்தேவனையும் காப்பாற்றி… இப்படி எத்தனை அரிய காரியங்களை அனாயாசமாக பூங்குழலி செய்திருக்கிறாள்!

ரவில் தன்னந்தனியாக கடலில் படகை துடுப்புப் போட்டு செலுத்தும்போது அவள் பாடும் பாட்டு, அந்த நாவலைப் படித்தவர்களின் காதுகளில் எப்போதும் ரீங்காரம் செய்து கொண்டுதான் இருக்கும்.

‘அலை கடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்
நிலமகளும் துயிலுகையில் நெஞ்சகம்தான் பதைப்பது மேன்’

என்ற அந்தப் பாட்டை என்னையே பூங்குழலியாக பாவித்துக்கொண்டு நட்சத்திரங்கள் ஒளிரும் இரவுகளில் தனியாகப் படகோட்டிக் கொண்டு ஆழ்கடலில் பயணிப்பது போன்ற கற்பனையில் நான் பலமுறைகள் ஆழ்ந்துபோனதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்… நினைப்பே இனிக்கிறது!

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

படித்தவர் பார்த்தனர்; பார்த்தவர் படித்தனர்!

- இயக்குநர், நடிகர் இளங்கோ குமணன் “ஆதி அந்தமில்லாத காலவெள்ளத்தின் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது தூரம் பிரயாணம் செய்யுமாறு நேயர்களை அழைக்கிறோம்” என்று கல்கி அவர்கள் 1950ல், ‘பொன்னியின் செல்வன்’ நாவலின்...

நான் என்றும் ‘பொன்னியின் செல்வன்’ வாசகன்!

- காந்தி கண்ணதாசன் ‘பொன்னியின் செல்வன்’ - எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பெயர். ஒரு சரித்திரக் கதை மூன்று தலைமுறைகளையும் கடந்து பயணிக்கிறது... அதுமட்டுமின்றி, இந்த சரித்திரக் கதை, வாசகர்களை மற்ற சரித்திரக்...

தமிழர் பெருமை பொன்னியின் செல்வன்!

- பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை மணிரத்னம் திரைப்படமாக எடுக்கப்போகிறார் என்று அறிந்தபோது, மனதில் பலவித கலவையான உணர்வுகள் எழுந்தன. ‘தமிழகமெங்கும் பதியப்படாத ஒரு கழகம் இருக்கிறது’ என்று மதன்...

பொன்னியின் செல்வனும் ‘வானதி’ ஐயாவும்!

- மூத்த பதிப்பாளர் ‘வானதி’ திரு.ராமனாதன் தேவகோட்டையிலிருந்து சிறு வயதிலேயே வேலை தேடிச் சென்னைக்கு இடம் பெயர்ந்து வந்த எங்கள் தந்தை ஐயா திருநாவுக்கரசு அவர்கள், 'ஜில் ஜில்' பதிப்பகம் என்று தொடங்கிக் குழந்தைகளுக்காகச்...

பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம்!

- பாம்பே கண்ணன் பொன்னியின் செல்வனுடனான எனது அனுபவங்கள்… எதை எழுதுவது; எதை விடுவது? பதினான்கு வயதில் ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்ற வாசிப்பைப் பற்றியா? அல்லது பொன்னியின் செல்வன் ஒளிப்படமாகத் தயாரிக்க...