
– பாம்பே கண்ணன்
பொன்னியின் செல்வனுடனான எனது அனுபவங்கள்… எதை எழுதுவது; எதை விடுவது? பதினான்கு வயதில் ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்ற வாசிப்பைப் பற்றியா? அல்லது பொன்னியின் செல்வன் ஒளிப்படமாகத் தயாரிக்க ஆசைப்பட்டு ஒரு மணி நேர பரிட்சார்த்த முயற்சி செய்தது பற்றியா? அல்லது பொன்னியின் செல்வன் பாத்திரங்களை ஒலி வடிவில் காதுகளுக்குக் கொண்டு சென்ற சரித்திரத்தைப் பற்றியா? இறுதியில் முடிவு செய்தது… மூன்றாவதாக சொன்ன ஒலி வடிவம் பற்றித்தான். அதுதான் எனக்கு ஒரு அங்கீகாரம் அளித்தது… ஆசனம் அளித்தது.
என்னைப் பொறுத்தவரை ஒலிப்புத்தகம் என்பது ஒருவர் உரக்கப் படிப்பது அல்ல; புத்தகம் ஒரு ஒலி வடிவம் பெற வேண்டும். கதாபாத்திரங்கள் மட்டும் அல்ல; ஆசிரியர் என்ன உணர்வோடு கதையை வர்ணித்திருப்பாரோ அந்த உணர்வுகளை குரலில் கொண்டு வர வேண்டும். கதாபாத்திரங்கள் குரல் மூலம் அந்தந்த பாத்திரங்களாக ஒலிக்க வேண்டும். இது நான் பல புத்தகங்கள் தயாரித்தபோதும் பின்னரும் கேட்டு, கவனித்து உணர்ந்த விஷயம்.
'சிவகாமியின் சபதம்' முப்பது மணி நேரம் ஒலிப்புத்தகம் கொடுத்த தைரியம், என்னை பொன்னியின் செல்வனை யார் யாரோ படமாகவும் தொடராகவும் தயாரிக்க முற்பட்டு முடியாமல் போன நிலையில் நாம் ஏன் அதற்குக் குறைந்த பட்சம் ஒரு ஒலி வடிவம் கொடுக்கக் கூடாது என எண்ண வைத்தது. துணிந்து விட்டேன். நான்கு நாட்கள் ஒலிப்பதிவிற்குப் பிறகு நம்மால் இவ்வளவு பொருட்செலவு செய்ய முடியாது என முயற்சியை கைவிட்டேன்.
ஒரு மாதத்திற்குப் பிறகு ஒரு நாள் பெங்களூரிலிருந்து வெங்கட்ராமன் என்பவர் என்னை அழைத்து, 'சிவகாமியின் சபதம்' ஒலிப்புத்தகத்திற்காக என்னை பெரிதும் சிலாகித்து, 'நீங்கள் ஏன் பொன்னியின் செல்வனை ஒலி வடிவில் தரக் கூடாது?' என மீண்டும் என் உள்ளிருந்த ஆசையைத் தூண்டினார்.
'அதற்கான பொருள் வசதி இல்லை. யாராவது ஸ்பான்சர் கிடைத்தால் செய்யலாமென்றிருக்கிறேன்' என்றேன். இரண்டு நாட்கள் கழித்து அவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல். பொன்னியின் செல்வனிற்கு ஆகும் செலவு முழுவதையும் தான் ஏற்றுக் கொள்வதாகவும், 'ஒரு DVD கூட விற்பனை ஆகவில்லை என்றாலும் பரவாயில்லை. நாம் அதை மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்' என்றார்.
அடுத்தடுத்து கலைஞர்கள் தேர்வு நடந்தது… நந்தினியைத்தான் ஆர்வமுடன் பயத்துடன் தேடினேன். ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. பாத்திமா பாபு அழைத்தார். தான் இதில் பங்கு பெற வேண்டுமென அன்புக் கட்டளையிட்டார்.
'ஆஹா… நந்தினி கிடைத்தாள்' என மனதினுள் கூச்சலிட, அவர் நான் நந்தினி பாத்திரம் செய்கிறேன் எனக் கூற, நமக்கு தெய்வம் (கல்கி) துணை போகிறது என ஆனந்தப்பட்டேன். அவர் நந்தினியாகவே வாழ்ந்தார் என்றால் மிகை ஆகாது.
தயாரிப்பின்போது ஏற்பட்ட சோதனைகள் ஒரு தனி கட்டுரை. பல நாட்கள் மின்வெட்டு…. மாறும் தொழில்நுட்பக் கலைஞர்கள்…. இப்படி பல சோதனைகள்.
இந்தத் தயாரிப்பை ஒரு திரைப்படம் எடுப்பது போலவே திட்டமிட்டேன். தினசரி எடுக்க வேண்டிய அத்தியாயம்… அதற்கான கலைஞர்கள்… கலைஞர்களின் தேதிகளுக்கு ஏற்ப அத்தியாயங்களை திட்டமிடல்… உணவு ஏற்பாடு என ஒப்பனையும் உடை மாற்றமும் இல்லாத ரெக்கார்டிங். 51 நாட்களில் 78 மணி நேர ஒலிப்பதிவு.
பின்னர் எடிட்டிங் எனப்படும் அத்தியாயங்களை வரிசைப்படுத்துதல். பின்னர் பின்னணி இசை… சிறப்பு சப்தங்கள்… எல்லாவற்றிற்கும் மேலாக கல்கி அவர்கள் தன் நாவலில் போகிறபோக்கில் பல பாடல்களை இணைத்திருப்பார். பொன்னியின் செல்வன் படிக்கும் பலர் பாடல் வரிகளைத் தாண்டி போயிருப்பார்கள். 'அலை கடலும் ஓய்ந்திருக்க…' பாடலை பலரும் நினைவு கூறுவார்கள். ஆனால், பூங்குழலி எந்த மெட்டில் பாடினாள், சோகமா? ஆனந்தமா? பாடல் வரிகள் என்ன? எத்தனை பேர்களுக்குத் தெரியும்? இதுபோலத்தான் பல பாடல்களுக்கும். ஆனால், நான் முடிவு செய்தேன். அத்துணை பாடல்களையும் இசை அமைத்து அந்தந்தப் பகுதிகளில் இணைப்பது என. இது இந்த ஒலிப்புத்தகத்திற்கு மாபெரும் மதிப்பை அளித்தது. கிட்டத்தட்ட ஒன்றரை வருடத் தவம்.
அடுத்து, யார் கையால் இந்த ஒலிப்புத்தகத்தை வெளியிடுவது?
'பொன்னியின் செல்வன்' என்றதும் நினைவிற்கு வரும் பெயர் மணிரத்னம்தானே. ஆகையால், சுகாசினி மணிரத்தினம், கல்கியின் பேத்தி சீதா, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், எங்களது ஆதரவாளர் நல்லி குப்புசாமி செட்டி, சி.கே.வெங்கட்ராமன் என மேடையில் பிரபலங்களின் பட்டாளம். அமரர் கல்கி அவர்களுக்கு அரங்கில் ஒரு இருக்கை ஒதுக்கி மாலையிட்டேன்.
ஹிந்து ஆங்கில பத்திரிக்கையில் இருபது நாட்களுக்கு முன் வர வேண்டிய எனது நேர்காணல் (சாருகேசி எழுதியது) சரியாக அன்று காலை வெளியாகியது. காலையிலிருந்து தொடர்ந்து செல்போனில் அழைப்புகள். மாலை 6.30 மணிக்குத் தொடங்கும் நிகழ்ச்சிக்கு (14.06.2013) 5 மணி முதலே மக்கள் கூட ஆரம்பித்தனர்.
6.30 மணிக்கு நாரத கான சபை நிரம்பி வழிய, இனிதே நடந்த நிகழ்வை நல்லி அய்யா அவர்கள், 'என் அனுபவத்தில் ஒரு DVD வெளியீட்டிற்கு இவ்வளவு கூட்டம் வருவது இதுவே முதல் முறை' என வர்ணித்தார்.
சுகாசினி பேசும்போது, 'பொன்னியின் செல்வனுக்கு இப்படி ஒரு வடிவம் கொடுக்க முடியும் என எங்களுக்கு முன்னால் தோன்றாமல் போனதே' எனக் கூறினார். எல்லாவற்றையும் என் மனக்கண் முன்னால் தன் இருக்கையில் அமர்ந்து
அமரர் கல்கி ரசித்துக் கொண்டிருந்தார். இது சத்தியம். அவர் ஆசி இல்லாவிட்டால் எனது இந்த மாபெரும் முயற்சி நிச்சயம் நிறைவு பெற்றிருக்காது. 'இது ஒரு கேமரா இல்லாத சினிமா' என ஹிந்து நாளிதழ் எழுதியது.
இந்த ஒலிப்புத்தகங்கள் வெளிவந்தவுடன்தான் இதற்குப் பின்னணியில் ஒரு சேவையும் உள்ளது என என்னால் உணர முடிந்தது. பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். அவர்களுக்காகவும் கல்கி போன்ற மாபெரும் எழுத்தாளர்களின் படைப்புகளை தமிழ் படிக்கத் தெரியாத நமது இளைய சமுதாயத்தினருக்காகவும், நேரமின்மை காரணமாக புத்தக வாசிப்பு இல்லாதவர்களுக்காகவும் இந்த உழைப்பை என்னால் முடியும் வரை தொடர்ந்து செய்ய எண்ணுகிறேன். பார்க்கலாம்…!