பொன்னியின் செல்வனும் ‘வானதி’ ஐயாவும்!

பொன்னியின் செல்வனும் ‘வானதி’ ஐயாவும்!

– மூத்த பதிப்பாளர் 'வானதி' திரு.ராமனாதன்

தேவகோட்டையிலிருந்து சிறு வயதிலேயே வேலை தேடிச் சென்னைக்கு இடம் பெயர்ந்து வந்த எங்கள் தந்தை ஐயா திருநாவுக்கரசு அவர்கள், 'ஜில் ஜில்' பதிப்பகம் என்று தொடங்கிக் குழந்தைகளுக்காகச் சிறு சிறு நூல்களைத் தயாரித்து வெளியிட்டார்! தேவகோட்டை ஏ.திருநாவுக்கரசு என்பதே அப்போது ஐயா அவர்களின் பெயராக இருந்தது!

பின்னர் அதே, 'ஜில் ஜில்' என்ற பெயரில் சிறுவர்களுக்கான மாத இதழ் ஒன்றையும் இரண்டு ஆண்டுகள் போல் நடத்தினார். அந்தப் பத்திரிகையைப் பாராட்டி கல்கி அவர்கள் தம்முடைய வார இதழில் அருமையான மதிப்புரை எழுதி வாழ்த்தினார். "பத்திரிகை நடத்துகிறாயே, சொந்தத்தில் அச்சகம் வேண்டாமா?" என்று கேட்டு உற்சாகப்படுத்தவும் செய்திருக்கிறார்.

அந்த நாட்களில் வாசகர்கள் எல்லோரையும் கவர்ந்து பெரும்பாலோரின் படிப்பார்வத்தைத் தூண்டியது போலவே, 1950-1954ல் கல்கியில் தொடராக வெளியான, 'பொன்னியின் செல்வன்' தொடர்கதை எங்கள் ஐயாவையும் கவர்ந்தது!

சின்ன அண்ணாமலை அவர்களின், 'தமிழ்ப்பண்ணை' போன்ற பதிப்பகங்களில் சிலகாலம் பணியாற்றி, பல அனுபவங்களுக்குப் பிறகு 1955ஆம் ஆண்டில் சொந்தமாக ஒரு பதிப்பகத்தைத் தொடங்க முடிவெடுத்தார்.

தம்முடைய புதிய பதிப்பகத்துக்கு என்ன பெயர் வைப்பது என்கிற யோசனை செய்தபோது, தம்மை முன்பொரு சமயம் ஆதரித்து வாழ்த்திய கல்கி அவர்களின் நினைவு வந்திருக்கிறது. அவருடைய மகத்தான இலக்கியக் கதாபாத்திரமான கொடும்பாளூர் இளவரசி 'வானதி'யின் பெயரும் கூடவே நினைவுக்கு வந்திருக்கிறது. எனவே, 'வானதி பதிப்பகம்' என்ற ராசியான பெயரை பதிப்பகத்துக்கு வைத்தார். படிப்படியாக எங்கள் பதிப்பகம் வளர்ச்சி கண்டு ஒரு கௌரவமான நிலைக்கு வந்தது.

திப்பகம் தொடங்கி ஐந்து ஆண்டுகளில், 1960ஆம் ஆண்டில் அவர்களுக்கு மூன்றாவது மகளாகப் பிறந்த எனது சகோதரிக்கு 'வானதி' என்ற அதே ராசியான பெயரைச் சூட்டி மகிழ்ந்தார்.

நாளடைவில் பதிப்புத்துறையில் ஆயிரக்கணக்கில் நூல்களை வெளியிட்டு புகழ் பெற்ற காலத்தில் ஐயா அவர்களுடைய பெயரின் அடைமொழியாகவே, ஒரு டாக்டர் பட்டம் மாதிரி என்றுகூடச் சொல்லத் தோன்றுகிறது 'வானதி' என்பது நிலைத்து விட்டது! 'வானதி  திருநாவுக்கரசு' என்கிற அதிகௌரவமான அடையாளத்தோடு தமிழ்ப் பதிப்புலகத்தில் நியாயமான இடமும் பெற்றார்.

1984ஆம் ஆண்டில் கல்கி ராஜேந்திரன் அவர்கள், அதுவரை வேறு பதிப்பகங்களில் வெளியாகியிருந்த, 'பொன்னியின் செல்வன்' மகா காவியத்தின் வெளியீட்டு உரிமையை எங்கள் வானதி பதிப்பகத்துக்கு மிகுந்த நம்பிக்கையோடு வழங்கினார்கள். அத்துடன் அதுவரை வெளியாகியிருந்த அமரர் கல்கி அவர்களின் எல்லா எழுத்துக்களையும் (சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு உள்பட) ஒரே குடையின் கீழ் என்பதுபோல் எங்கள் வானதி திருநாவுக்கரசு ஐயாவின் பொறுப்பிலேயே வெளியிடவும் அனுமதித்தார்கள்.

தொடர்ந்து பல மறுபதிப்புக்களைத் தந்து, 'பொன்னியின் செல்வன்' பிரதி இல்லாத வீடே இல்லை என்று சொல்கிற அளவுக்குப் பணியாற்றுகிற நிலையை உருவாக்கி, வானதி பதிப்பகம் தொண்டாற்றியது.

எங்கள் வானதி ஐயா அவர்கள் ஒரு முறை குறிப்பிட்டதுபோல், 'கல்கி உணர்வோடு' அந்த நூல்களை நாங்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். கல்கி அவர்களின் மகத்தான வாழ்க்கை வரலாறாக பெரியவர் 'சுந்தா' எழுதிய, 'பொன்னியின் புதல்வர்' நூலையும் வானதி பதிப்பகமே வெளியிட்டுப் பெருமை பெற்றது.

இப்போது அமரர் கல்கி அவர்களின் எழுத்துக்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பல சகோதரப் பதிப்பாளர்களும் கல்கியின் நூல்களை வெளியிட்டு வருகிறார்கள். இந்த நிலையிலும் வானதி பதிப்பகம் தான் ஏற்றுக்கொண்ட பொறுப்பைத் தொய்வின்றி நிறைவேற்றி வருகிறது.

எல்லாம் நல்லதாகவே நடக்க அந்த 'வானதி அன்னை'யும் அவரைத் தமிழர்களின் உள்ளங்களில் நிரந்தரமாகக் குடியேற்றி உலவச் செய்த 'பொன்னியின் புதல்வர்' கல்கி அவர்களும் ஆசீர்வதிப்பார்களாக!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com