தமிழர் பெருமை பொன்னியின் செல்வன்!

தமிழர் பெருமை பொன்னியின் செல்வன்!

– பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர்

'பொன்னியின் செல்வன்' நாவலை மணிரத்னம் திரைப்படமாக எடுக்கப்போகிறார் என்று அறிந்தபோது, மனதில் பலவித கலவையான உணர்வுகள் எழுந்தன. 'தமிழகமெங்கும் பதியப்படாத ஒரு கழகம் இருக்கிறது' என்று மதன் சார் அடிக்கடி கூறுவார். அப்படி பதியப்பெறாத ஒரு மாபெரும் குழு ஒன்று தமிழ்நாட்டில் இருக்கிறதென்றால் அது, 'பொன்னியின் செல்வன் ரசிகர்கள் குழு'தான். அந்த நாவல் கொடுத்த உணர்வு அலைகளை அனுபவித்தவர்களுக்கு, அது திரைப்படமாக எடுக்கப்பட்ட பல முயற்சிகள் தோல்வியுற்றபோது ஒருவிதத்தில் வருத்தமாக இருந்தாலும், ஒருவிதத்தில் மகிழ்ச்சியாகவே இருந்தது. ஏனென்றால், அதை விஷுவலாகப் பார்க்க நாங்கள் விரும்பவில்லை எனும் அளவுக்கு மனதில் பதிந்து போனப் புதினம்.

எங்கள் மனதுக்குள் ஒரு பூங்குழலி, ஒரு பொன்னியின் செல்வன், ஒரு வந்தியத்தேவன் இருக்கிறார்கள். அவர்களை திரையில் பார்த்து ஏமாற்றமடைந்துவிட்டால் அந்த ஏமாற்றத்தை எங்களால் தாங்கிக்கொள்ளவே முடியாது. அதனால் அந்தத் திரைப்பட முயற்சிகள் தோல்வியுற்றபோது, ஒரு வருத்தம் இருந்தாலும், ஓரத்தில் ஒரு சிறியதாக மகிழ்ச்சி இருந்தது என்னவோ உண்மை. ஆனால், நிறைவாக அந்தத் திரைப்பட முயற்சி வெற்றி அடைந்தது என்பதை அறிந்தபோது அந்தப் படத்தின் திரைக்கதை, வசனத்துக்கு ஜெயமோகன் அவர்கள் பணியாற்றி இருக்கிறார் என்று கேள்விப்பட்டபோது, அது எனக்கு இனிமையையும் நிறைவையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. தமிழ் எழுத்து உலகத்தில் இருந்த மாபெரும் ஆளுமைகள் என்றால் அன்று கல்கி, இன்று ஜெயமோகன். இவர்கள் இருவரும் இணையப்போகிற ஒரு கலைப்படைப்பு எப்படி இருக்கும் என்கிற ஒரு ஆர்வத்தையும் ஆவலையும் அது தூண்டியது என்பதும் கூட உண்மைதான். (இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பொன்னியின் செல்வன் படைப்பு எப்படி இவ்வளவு ஆர்வத்தைத் தொடர்ந்து தூண்டிக்கொண்டே இருக்கிறது?)

ஹாரிபாட்டர் நாவல் ஏழு பகுதிகளாக வந்தது. அந்த நாவல் வந்துகொண்டிருந்தபோதே, திரைப்படங்களாகவும் வெளியிடப்பட்டது. அதன் பிறகு உலகத்தில் இருக்கிற மாபெரும் உல்லாசப் பூங்காவான டிஸ்னி வோல்ட் எங்கெங்கு இருக்கிறதோ அங்கெல்லாம், 'ஹாரிபாட்டர் வோல்ட்' என்று ஒன்றை ஏற்படுத்தினார்கள். அங்கு நான் எனது மகள்களோடு சென்றேன். அவர்கள் மிகப்பெரிய ஹாரிபாட்டர் விசிறிகள். அந்த உலகத்தில் நுழைந்தவுடனே அவர்கள் அப்படியே அழுகிறார்கள். ஏனென்றால், அவர்கள் புத்தகத்தில் படித்த ஒரு விஷயத்தை கண் முன்னே பார்க்கின்றபோது அந்த உணர்வு அலைகளை அவர்களால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. உதாரணத்துக்கு, ஹாரிபாட்டர் நாவலில் ஹாரிபாட்டர் ஏறிப்போகிற டிரெயின் ஸ்டேஷன் பிளாட்பார்ம் என்று ஒன்று வரும். அதை அந்த இடத்தில் நேரடியாக உருவாக்கி இருந்தார்கள். அதைப் பார்த்தவுடனே இவர்களுக்குக் கண்ணீரே வந்துவிட்டது.

அப்போது நான், 'இதுபோன்று பொன்னியின் செல்வன் உலகம் என்று ஒன்றை உருவாக்கினால் எப்படி இருக்கும்?' என்று மனதில் நினைத்துக்கொண்டேன். சம்புவராயர் மாளிகைக்குள் வந்தியத்தேவன் முதன் முதலில் வந்து பார்க்கின்ற போது, அன்று இரவு அவன் தூங்கி விட்டதாக நினைத்துக்கொண்டு அங்கு வேலன் வெறியாட்டம், குறவைக் கூத்து எல்லாம் நடைபெறும் அல்லவா? அப்போது குறி சொல்வார்கள். அப்போது அருகே மதிற்சுவர் ஒன்றின் மேலே ஆழ்வார்க்கடியானின் தலை தெரியும். அதை வந்தியத்தேவன் மறைந்து பார்த்துக்கொண்டிருப்பான். அதை ஒரு நிகழ்வாக நடத்திக்காட்டினால் எப்படி இருக்கும் என்றெல்லாம் நான் நினைத்துப் பார்ப்பதுண்டு. எத்தனையோ தலைமுறைகள் தாண்டி நமக்குள்ளே அந்த மாதிரியான உணர்வு அலைகளை ஏற்படுத்திக்கொண்டே இருக்கவல்லதுதான் கல்கி அவர்களின் எழுத்துச் சித்திரத்தின் வெற்றி என்று எனக்குத் தோன்றுகிறது.

இது பலமுறை நான் பகிர்ந்துகொண்ட ஒரு விஷயம்தான். இருந்தாலும் அதன் சுவை கருதி மீண்டும் ஒரு முறை அதைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நான் பிளஸ் டூ படித்துக்கொண்டிருந்தபோதுதான் முதன்முதலில் பொன்னியின் செல்வனைப் படித்தேன். அப்போது ஒரு பரீட்சைக்கும் இன்னொரு பரீட்சைக்கும் நடுவில் நீண்ட விடுமுறை இருக்கும். கெமிஸ்ட்ரி பரீட்சைக்கு முன்பு நான்கைந்து நாட்கள் விடுப்பு இருந்தது. அந்த சமயத்தில் நான் பொன்னியின் செல்வன் படித்துக் கொண்டிருந்தேன். கெமிஸ்ட்ரி பாடம் படிப்பது கொஞ்சம் கஷ்டம் என்பதால் ஒரு மாறுதலுக்காக நான் அந்த நாவலைப் படித்துக்கொண்டிருந்தேன். அப்படி நான் படித்துக்கொண்டிருந்தபோது, 'இன்னும் கொஞ்சம்… இன்னும் கொஞ்சம் படித்துவிட்டு முடித்துவிடலாம்' என்று எண்ணிக்கொண்டே ஏறக்குறை அந்த நாவலையே படித்து முடிக்கும் தறுவாய்க்கு வந்துவிட்டேன்.

ஒரு நாள் இரவு கிட்டத்தட்ட பன்னிரண்டு அல்லது ஒரு மணி இருக்கும், நான் அந்த நாவலைப் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது ஆதித்தகரிகாலனின் மரணம் நிகழும் பகுதியைப் படித்துவிட்டு அதைத் தாங்கிக்கொள்ளவே முடியாமல் கதறிக் கதறி அழுதேன். தூங்கிக்கொண்டிருந்த எனது அப்பா, கதறல் சத்தம் கேட்டு பதறி அடித்துக்கொண்டு வந்து, நான் கெமிஸ்ட்ரி பாடத்தை மிகவும் கஷ்டப்பட்டு படித்து அழுவதாக நினைத்து, 'பரீட்சை மிகவும் சுலபமாகத்தான் இருக்கும் அழ வேண்டாம்' என்று சமாதானப்படுத்தியதை இத்தனை நாட்கள் கழித்து நினைத்துப் பார்க்கின்றபோதும் மிகவும் தித்திப்பாக இருக்கின்றது.

அன்று நான் ஏன் அழுதேன் என்பதை இன்று நினைத்தாலும்கூட புரிந்துகொள்ள முடியவில்லை. 'யார் இந்த ஆதித்தகரிகாலன்? அவனுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? அவன் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஒரு அரசிளங்குமரன். அவன் கொல்லப்பட்டதும்… இறந்ததும் வரலாற்றின் பதிவேடுகளில் இருக்கிறது. அவனுடைய மரணத்துக்காக ஆயிரம் வருடம் கழித்து யாராவது அழுதால் அதில் ஏதாவது ஒரு பொருள் இருக்கிறதா?' என்றுதானே நமக்குத் தோன்றும். ஆனால், அதில் ஒரு பொருள் இருக்கிறது. அந்தக் கதாபாத்திரங்கள் வாழ்கின்ற உலகத்தில் நாம் நுழைந்து விட்டோமே. திடீரென்று வாளை உருவி அருள்மொழிவர்மனான ராஜராஜசோழன் வந்தியத்தேவனை, 'என்னோடு போருக்கு வா' என்று அழைத்து, அவர்கள் இருவரும் சண்டை போடும்போது நூறு சதவிகிதம் எனது மனது என்ன விரும்புகிறது என்றால், இதில் வந்தியத்தேவன்தான் கதாநாயகன் என்றாலும் அவன் வீழ்ந்துவிட வேண்டும்; ராஜராஜசோழன்தான் வெற்றி பெற வேண்டும் என்று மனசுக்குள் ஒரு உணர்வு வருகிறது. அதற்குக் காரணம், அந்தக் கதாபாத்திரங்களோடு அப்படி நாம் கலந்துவிட்டோம் என்று நினைக்கின்றபோது அதுவே பிரமிப்பாக இருக்கின்றது.

இருநூற்று ஐம்பது வருடங்களுக்கு முன்பு வெள்ளைக்காரர்கள் நமது நாட்டை ஆக்கிரமிக்கின்றபோது, தஞ்சை பெரிய கோயில் போன்ற ஒரு பிரம்மாண்டத்தைப் பார்த்து, அந்தப் பகுதியில் வாழ்கின்ற மக்களிடம், 'இதைக் கட்டியது யார்?' என்று கேட்கின்றபோது, அதைக் கட்டியது ராஜராஜசோழன்தான் என்று அவர்களுக்குக் கூறத் தெரிந்திருக்கவில்லை. ஏனென்றால், அங்கிருந்த கல்வெட்டுகளைப் பார்த்து, அதில் இருக்கின்ற எழுத்துக்களை ஆராய்ச்சி செய்து, இதைக் கட்டியவன் ஒரு சோழ மன்னன்; அவன்தான் ராஜராஜசோழன் என்கிற அறிவு இருநூறு வருடங்களுக்கு முன்பு வரை நமக்கு இல்லை. எனவே, ராஜராஜசோழன் ஒருவகையில் பார்த்தால் மீள் கண்டெடுப்பு செய்யப்பட்ட ஒரு அரசன்தான். நடுவில் இருந்த காலங்களில் முழுவதுமாக மறக்கப்பட்டு, மறைக்கப்பட்டு, கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களால்மீள் கண்டெடுப்பு செய்யப்பட்டதால் இந்தக் கோயிலைக் கட்டியது ராஜராஜசோழன் என்பது நமக்குத் தெரியவந்தது. அந்த மீள் கண்டுபிடிப்பை விட மிகப்பெரிய ஒரு புத்துருவாக்கத்தை ராஜராஜ சோழனுக்கு கல்கி அவர்கள்தான் அளித்திருக்கிறார்.

எனக்கு இயல்பிலேயே பிரம்மாண்டமாகக் கனவு காண்பவர்களை மிகவும் பிடிக்கும். காலத்தின் முன்னே நாம் ஒரு கடுகு போன்று சுருங்கி நிற்கின்றோம். அந்த காலவெள்ளமெனும் பிரம்மாண்டத்தின் முன்னே, நாம் தெரிந்துகொள்ள வேண்டியது ஒன்றுமே இல்லை என்பதைத்தான். அப்படிப்பட்ட ஒரு பிரமிப்பில் வாழ்கின்ற நம்மைப்போல் எத்தனையோ பேருக்கு நம்முடைய வாழ்க்கையைத் தாண்டிய பெரிய கனவுகள் என்பதே ஒரு சுமையாக இருக்கின்றது. 'ஐயோ இதெல்லாம் நமக்கு சாத்தியமில்லை. ஏதோ வெந்ததைத் தின்று விதி வந்தால் மாண்டு போவோம்' என்ற மனநிலைக்கு வாழ்க்கையை ஒப்புக்கொடுத்துவிடுகிற ஒரு வாழ்க்கையைத்தான் நம்மைப்போல் பலரும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஆனால், காலவெள்ளத்தின் முன்பு நின்று ராஜராஜசோழன் என்ற மன்னன் எப்படி அந்தக் காலத்துக்கு சவால் விட்டான். ஆயிரம் வருடம் கழித்து நிற்கப்போகின்ற ஒன்றை நான் இன்று உருவாக்கிக் காட்டுகின்றேன் எனும் எண்ணம் அவனுக்கு எப்போது வந்தது?

கல்கி அவர்கள் மிகவும் அழகாக அந்தச் சரடை கொடுப்பார். இலங்கைக்குப் போய் பிரம்மாண்டமான புத்தர் சிலைகளைப் பார்க்கின்றபோது, 'ஏன் நம்முடைய கோயில்களில் இருக்கின்ற சிவலிங்கங்கள் இவ்வளவு சிறிது சிறிதாக இருக்கின்றன? ஏன் அவர்களின் மனது பெரிதாக வளரவில்லை? இந்த புத்தர் சிலைகளைப் போன்று பிரம்மாண்டமான ஒரு சிவலிங்கம் இருந்தால் எப்படி இருக்கும்? அவருக்கு முன்பு மிகவும் பிரம்மாண்டமான ஒரு நந்தி இருந்தால் எப்படி இருக்கும்?' என்று அருள்மொழிவர்மன் கனவு காண்பதாக அவர் எழுதி இருப்பார். உண்மையிலேயே அப்படித்தான் நடந்து இருக்க வேண்டும். நம்மைச் சுற்றி இருக்கின்ற கோயில்களில் சிறிது சிறிதாக சிவலிங்கங்களையும் உருவங்களையும் பார்த்து அதுதான் சம்பிரதாயம் என்று பழகிவிட்ட கண்களுக்கும் மனதுக்கும் இவ்வளவு பெரிய கோயிலைக் கட்டுகிற கனவு எந்தப் புள்ளியில் ஆரம்பித்திருக்க வேண்டும்? அதை கல்கி சொல்கிறபோது அது அப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

நந்தினி எல்லோரின் மனதையும் கவர்ந்த ஒரு கதாபாத்திரம். ஒரு நாகப்பாம்பு குட்டி போன்று விஷம் கக்குகின்ற அவளது வார்த்தைகள், மயக்குகின்ற அவளது கண்கள், எல்லோரையும் அவளது மோக வலையிலே வீழ்த்தி, அவர்களைத் தன்னோட சிப்பாய்களாக மாற்றிக்கொள்கின்ற ராஜ தந்திரம். அருள்மொழிவர்மனின் நண்பன் என்று சொல்லிக்கொண்டு சோழர்களின் நலம் விரும்பிகளாக இருக்கின்ற எல்லோரும் இவளை ஒரு முறை பார்த்து, அவளது கண்களின் அசைவை கவனித்த பிறகு அவளுக்கு அடிமையாகிப் போவதை அவ்வளவு நாகரிகமாகவும், கௌரவமாகவும் சொல்லியிருப்பார். அந்தக் கதாபாத்திரத்துக்கு பின்பு இருக்கிற சோகத்தினால்தான் அவள் இப்படி மாறினாள் என்பதை விளக்கி, நந்தினி எனும் கதாபாத்திரத்தை அவ்வளவு மரியாதையாக கல்கி அவர்கள் வடித்துக் கொடுத்திருப்பார். அப்பேர்ப்பட்ட நந்தினி தன்னோட அத்தனை சக்திகளை பிரயோகித்தும் கூட, குந்தவையிடம் மனதைக் கொடுத்திருக்கிற வந்தியத்தேவன் அதற்குக் கொஞ்சமும் மயங்காமல் அவளிடமிருந்து தப்பி வருகிற பகுதி இருக்கிறதே… அப்பப்பா… அபாரம்.

பொன்னியின் செல்வனிலேயே நான் படித்துப் படித்துக் கிட்டத்தட்ட ஒரு மனப்பாடம் ஆகிவிட்ட பகுதி என்றால் குந்தவையிடம் வந்தியத்தேவன் தனது காதலை சொல்கின்ற அந்த இடம்தான். கற்பனை என்கிற சிறகுகளை மாட்டிக்கொண்டு வானத்தை அளந்துவிட யாரால் முடியும்? கடலின் ஆழங்களுக்கு உள்ளே புறப்பட்டு கீழே… கீழே… கீழே… போய் முத்தெடுத்துக்கொண்டு வருவதற்கு யாருக்காவது சாத்தியம் இருக்கிறதா? ஆனால், அந்தப் பகுதியைப் படிக்கும்போது நமக்கு அப்படித்தான் இருக்கும். நமக்கு சிறகுகள் முளைத்து அந்த வானமெனும் பிரம்மாண்டத்தில் பறந்து கொண்டு இருப்பது போன்று தோன்றும். ஒரு மீனைப் போல கடலின் ஆழங்களை துழாவிக்கொண்டு இருப்பது போன்று இருக்கும். அப்படிப்பட்ட ஒரு பரவசம். காதல் என்பதன் பரவசத்தை வந்தியத்தேவன் குந்தவையிடம் தனது காதலைச் சொல்கின்ற அந்த இடத்தில் நாம் உணரவில்லை என்றால், நாம் வாழ்க்கையில் காதலித்திருக்கவே முடியாது என்ற முடிவுக்குத்தான் வர வேண்டும். அப்படிப்பட்ட ஒரு பரவசத்தை, அன்பின் பவித்ரத்தை நமக்குச் சொல்கின்ற அபாரமான அந்தக் கட்டம்தான் பொன்னியின் செல்வனிலேயே எனக்கு மிகவும் பிடித்தக் கட்டம்.

பூங்குழலியை மறக்க முடியுமா? அவளுக்குள்ளே ஏன் அப்படி ஒரு வெறி இருந்தது? அவளது வெறி யாரின் மீது? தனக்கு சபிக்கப்பட்ட அந்த வறிய வாழ்க்கையின் மீது அவளுக்குக் கோபமா? அல்லது அவள் பார்த்து பக்கத்திலே இருந்து அவளை சேர்த்துக்கொள்ளாத அந்த அரண்மனைவாசிகளின் மீது அவளது வெறியா? அல்லது இளவரசரைப் பார்த்துப் பார்த்து அவர் மீது அவள் வளர்த்துக்கொண்ட காதலா? அந்தக் காதல் நிறைவேறாது என்பதனால் அவளுக்கு அப்படி ஒரு வெறி வந்ததா? இளவரசரை கூட்டிக்கொண்டு போய் அந்தத் தோப்பின் பள்ளங்களிலே மின்மினிப் பூச்சிகள் போன்று தெரிகிற அந்த நெருப்புப் பிழம்புகளைக் காட்டி, 'இவர்கள்தான் என்னோட காதலர்கள்' என்று சொல்லி சிரிக்கின்றபோது, அந்த இரவின் அமைதியில் அந்தச் சிரிப்பு எப்படி இருந்திருக்கும்? என்று நம்மை துணுக்குற வைக்கிற ஒரு காட்சியை கல்கி அவர்கள் காட்டியிருப்பார். சதுப்பு நிலங்களிலே உள்ளே புகுந்து புறப்படுகின்ற காற்று சில சமயங்களில் நெருப்பு ஜுவாலைகளை உருவாக்கும். அதைப் பார்க்கிறபோது அதைத்தான் பேய் என்று சொல்லி மனிதர்கள் நெடு நாட்களாக பயந்து கொண்டு இருந்தார்கள் என்ற அறிவியல் உண்மையையும் கல்கி அவர்கள் அதிலே எழுதியிருப்பார். பூங்குழலியின் சிரிப்பு, அழுகை, ஆவேசம், கோபம், அறச்சீற்றம்… தன்னோட அத்தைக்கு இத்தகைய கொடுமை நிகழ்ந்திருக்கிறதே என்று சொல்லி, மன்னருக்கு எதிராகவே குரல் கொடுக்கிற அவளது அறச்சீற்றம்… இதனாலேயே எனக்குப் பூங்குழலியை மிகவும் பிடிக்கும்.

இப்படி எத்தனையோ கதாபாத்திரங்களை நாம் சொல்லிக்கொண்டே போகலாம். இவ்வளவு கதாபாத்திரங்களையும் தனது மனம் என்ற திரையிலே உலவவிட்ட கல்கி அவர்களுக்குத் தெரியுமா…; இது அவருக்குப் பிறகு காலம் காலமாக வாழப்போகிற ஒன்று என்று. ராஜராஜசோழன் மட்டுமா சாதனை படைத்துவிட்டுப் போனான். கல்கியும்தானே சாதனை படைத்துவிட்டுப் போயிருக்கிறார்.

ஆரம்பத்தில், 'பதியப்படாத ஒரு சங்கம்' என்று சொன்னேன். கல்கியின் பக்தர்கள், தீவிரமான வாசகர்கள், அதிலும் பொன்னியின் செல்வனுக்கு ஈடு இணை இந்த உலகத்தில் எந்தப் புத்தகமும் இல்லை என்று சொல்கிற பதியப்படாத அந்த சங்கத்தின் ஒரு உறுப்பினராகத்தான் நான் என்றைக்கும் இருக்க விரும்புகிறேன். கல்கி கொடுத்த தாக்கத்தினால்தான், பின்னாளில் சோழர்களைப் பற்றிய மிக நீண்ட ஆராய்ச்சிகள், மிக செம்மாந்த ஆராய்ச்சிகள் வருவதற்குக் காரணமாக அமைந்தது. பாலகுமாரன், 'உடையார்' எழுதுகிறபோது அதிலே அவர் காண்பித்த ராஜராஜ சோழன், கல்கி அவர்கள் நமக்குக் காண்பித்த அருள்மொழிவர்மனே அல்ல. ஆனாலும், உடையாரின் ஆரம்பப் பொறி என்பது கூட கல்கி என்பதிலிருந்துதான் கிளம்பியிருக்கிறது என்பதை பாலகுமாரன் அவர்களே பகிர்ந்து கொண்டார்.

இப்போது மணிரத்னம் படம் எடுக்கிறார். இதற்கு நடுவில் மிகவும் பிரம்மாண்டமாக நாடகமாக்கப்பட்டது பொன்னியின் செல்வன். வெளிநாட்டில் இருக்கிற தமிழர்கள் எத்தனையோ கஷ்டங்களுக்கு நடுவில், 'பொன்னியின் செல்வனை, டிராமாவாகப் போடப்போகிறோம்' என்று எனக்குச் செய்தி அனுப்புகிறார்கள். இப்படித் தொடர்ந்து ஆர்வத்தை வளர்த்துக்கொண்டு இருக்கிற ஒரு சாகா வரம் பெற்ற படைப்பை உருவாக்கிய கலைஞன் இந்த மண்ணில் தோன்றி, நம்முடைய தாய்மொழியில் சிந்தித்து எழுதி, இப்படி ஒரு படைப்பை விட்டுவிட்டுப் போயிருக்கிறான் என்பது தமிழர்களாகிய நமக்கு எத்தனை பெரிய பெருமை?!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com