0,00 INR

No products in the cart.

வாசிப்பின் அனுபவத்தைப் புரியவைத்த பொன்னியின் செல்வன்!

– சரித்திர நாவலாசிரியர் விஷ்வக்ஸேனன்

வ்வொரு மனிதனின் வாழ்விலும் பள்ளிப் பருவமும், கல்லூரிக் காலமும்தான் பசுமையானவை, ஆனந்தம் நிறைந்தவை, முதுமையை அடைந்த பின்னரும் இளமையைத் திரும்பத் தருபவை. வாழ்வின் அந்த அனுபவங்கள் தரும் சுகத்தை, ஆனந்தத்தை வேறெதுவும் தருவதில்லை. நிச்சயம் இது உண்மைதான். ஆனால், அதற்கு ஈடாக, ஏன் அதைவிட அதிகமாகவே அனுபவங்களை அள்ளித் தரும் காலம் ஒன்று உண்டு. அது வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கே உரியது. கற்பனையும் உண்மையும் கலந்து காட்சிகளையும், பாத்திரங்களையும் படைத்து கதையென்னும் நூலால் நம்மை ஆடவிட்டு, நம் மனதில் ஆச்சரியத்தையும், மகிழ்வையும், வருத்தத்தையும், சோகத்தையும் உணர வைத்து, நம்மையும் அவர்களுடனேயே வாழ வைத்து, அதே அனுபவங்களை நாம் பெற வைக்கும் மந்திரம் அறிந்த எழுத்தாளப் பெருமக்கள் தரும் ஆனந்தம்தான் அது.

‘வாசிப்பின் அனுபவம் உள்ளவர்கள் கண்டிப்பாய் இதை ஏற்றுக்கொள்வார்கள். கதை வாசிப்பதைப் போய் வாழ்வின் அனுபவம் என்பதா? இதெல்லாம் கொஞ்சம் ஓவராத் தெரியலை?’ என்று கையை உதறிக்கொண்டு செல்பவர்களுக்கு ஒரு வார்த்தை. கொஞ்சம் என் அனுபவத்தைக் கேளுங்கள். பொன்னியின் செல்வனை வாசிக்கத் தொடங்கிய பிறகு நான் ஆயிரம் வருஷங்கள் பின்னே போய்விட்டேன். சோழ ராஜ்யத்திலேயே வசித்தேன்.

ன்று அலுவலகம் போய்கொண்டிருந்தேன். ஆசிர்வதிப்பதைப் போலக் கையைக் காட்டி நிறுத்தினார் போலீஸ்காரர்.

“ஐயா, நான் அவசரமாக கருவூலத்துக்குப் போக வேண்டும்” என்றேன்.

அவருக்குப் புரிந்ததா என்று தெரியவில்லை. “மொதல்ல அப்படி வண்டிய ஓரங்கட்டுங்க” என்றார்.

எனக்குக் கொஞ்சம் கோபம் வந்தது. என்ன இந்த போலீஸ்… மனுஷன் அவசரம் புரியாமல்… “ஐயா… ஐயா…” என்றேன்.

மறுபடி அலட்சியமாக நெருங்கி வந்து, “என்ன?” என்றார். கூடவே இன்னும் ஒரு போலீஸ், அவரது நண்பர் போலிருக்கிறது.

“ஐயா, நான் அவசர வேலையாகப் போகிறேன். மந்திரி அன்பில் அநிருத்தர் அனுப்பியிருக்கிறார்” என்றேன்.

“என்னது? மந்திரியா? எந்த டிபார்ட்மென்ட்?” என்றார்.

பக்கத்தில் நின்ற அவரது நண்பர், “யோவ். இது நம்ம ஆளுய்யா. அன்பில்… இருக்காரே… அவர் வேலை போலிருக்கு” என்றார். என் வாகனத்தில் பின்புறம் கட்டாக வைத்திருந்த கோப்புக்களைப் பார்த்தார். எல்லாவற்றிலும் அரசின் கோபுரச் சின்னம் மேலே தெரிந்தது.

போலீஸ்காரர் முகத்தில் அலட்சியம் சட்டென்று மாறியது. “சார்… சார்… சாரி சார். நீங்க போங்க… போங்க. ஒரு கையால் வாயைப் பொத்திக் கொள்ளாத குறையாக நெருங்கி வந்து, “சார்கிட்ட ஒண்ணும் போட்டுக் குடுத்துடாதீங்க. ப்ளீஸ்” என்றார் அதிபவ்யமாக.

“சரி, சரி… வழி விடுங்க” நான் புரவியைத் தட்டி முன்னால் பாய விட்டேன்.

து என் அலுவலகமா? ஆம். நிறைய பழகிய முகங்கள் தென்பட்டன. படிகளில் ஏறும் வழியில் குந்தவை மேடம், கூடவே தோழி வானதி. அதோ ஆதித்தகரிகாலர், பார்த்திபேந்திரன்… அட, இது நம்ம சேந்தன் அமுதனாயிற்றே.

மாலையாயிற்று. கைநிறைய பைல்களோடு சூப்பரின்டென்டன் அறையை விட்டு வெளியே வந்தேன். சின்னப் பழுவேட்டரையரிடம் கையெழுத்து வாங்கியாயிற்று. அடுத்து என் நண்பரை போகச் சொல்ல வேண்டும். நண்பர் விஜயராகவனை நெருங்கி, “விஜயராகவா, உன்னை சின்னப் பழுவேட்டரையர் வரச் சொன்னார்” என்கிறேன்.

அவன் நிதானமாக என்னைப் பார்த்து சிரித்தபடி எழுந்து நின்றான்.

ஒருமுறை என்னைப் பார்த்தவன், “ஆபிசர் நந்தினி வரச் சொன்னார். மாடிக்குப் போகிறேன். சொல்லிவிடு” என்று நகர்ந்து மாடிப்படிகளை நோக்கிப் போய்விடுகிறான்.

என் நண்பனாயிற்றே, வேறெப்படி இருப்பான்?

“சின்னப் பழுவேட்டரையருக்கு அந்த நந்தினி ஆபிசரை அவ்வளவாகப் பிடிக்காதே… சொல்லலாமா வேண்டாமா?” நான் குழம்பிக்கொண்டே வந்துவிட்டேன்.

ப்படித்தான், படிக்கப் படிக்க பொன்னியின் செல்வன் பித்து அதிகரித்து ஒரு நல்ல சுபயோக சுபதினத்தில், பத்துப் பொருத்தங்களையும் பார்த்து, கல்கியின் மந்திரம் ஒலிக்க, அந்த வேலையிலிருந்து ராஜினாமா செய்துவிட்டேன்.

அரசாங்கப் பணி. பெயர், கௌரவம், பாதுகாப்பு, ஓய்வு பெற்றாலும் இறுதிவரை யார் கையையும் எதிர்பாராது வாழக்கூடிய ஆதரவு, அத்தனையும் தரக்கூடிய பணி. உண்மைதான்.

ஆனானப்பட்ட சோழநாட்டு மகுடத்தையே வேண்டாம் என்றாராம் எங்கள் சோழ இளவல் அருள்மொழிவர்மர். இது என்ன… ஒரு ஆடிட்டிங் வேலைதானே…?

என்னை ஏதோ எட்டுக்கால் பிராணியைப் போலப் பார்த்தார்கள் அத்தனை பேரும். என் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளவே பல மாதங்கள் ஆயின.

ஆசிரியர் திரு.ராஜேந்திரன் அவர்களை வந்து சந்தித்து நான் பணியை விட்டு விலகியதைச் சொன்னேன்.

“ரொம்ப சந்தோஷம்” என்றார்.

“ஒன்று செய். அரசாங்க வேலையை விட்டாயிற்றல்லவா? இங்கு கல்கி அலுவலத்துக்கு வந்து உதவி ஆசிரியர்களோடு கலந்துகொள்” என்றவர் தொடர்ந்து, ஆனால்…” என்று இழுத்தார்.

“ஆனால் என்ன சார்?”

“ஒரு நிபந்தனை இருக்கிறது.”

“நிபந்தனையா? சொல்லுங்கள் சார்” என்றேன் தயக்கத்தோடு.

“இங்கு வரும்போது ஒரு புதிய சரித்திர நாவலோடு வர வேண்டும்” என்றார்.

இதற்குப் பெயர்தான் கரும்பு தின்னக் கூலி என்பது. ஆனந்தமாக ஒப்புக் கொண்டு வந்து கல்கி நிறுவனத்தோடு இணைந்து கொண்டேன். முதல் நாவல் முடிந்ததும் என் புதிய நாவலும் தொடர்ந்து வெளிவரத் தொடங்கியது. இரண்டாவது முடிந்தது. மறுபடி மூன்றாவது நாவல். வேறென்ன வேண்டும் எனக்கு? சரித்திர உலகிலேயே ஐக்கியமாகிப் போனேன்.

அந்த ஆனந்தம் போதாதென்று, வந்தியத்தேவன் சென்ற வழியில் நாமும் செல்ல வேண்டும் என்று, ‘பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவை’ என்ற குழு, சரித்திர ஆர்வலர்களும், பொன்னியின் செல்வனைப் படித்து என்னைப் போலவே பித்துப் பிடித்த இளைஞர்களும் கல்கி நிறுவனத்தை அணுக, 2003ம் ஆண்டு அவர்களை அந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணி எனக்கிடப்பட்டது.

மலக்கண்ணன் என்று என்னைப் போலவே ஒரு பொன்னியின் செல்வன் பித்தர். அவர் தலைமையில் 12 பேர் என்னுடன் புறப்பட்டார்கள். அது பேருந்துமில்லை, காருமில்லை. குதிரையைப் போலவே போகும் வேன். அந்த ராஜபாட்டை அப்படி. மயிலாடுதுறையில் எங்கள் சக பித்தர் சீதாராமன் என்றொருவர். அவரது ஓட்டலில் தங்க இடமும் உணவும் அளித்தார். மறுதினம் பதினெட்டாம் பெருக்கைப் பார்க்க வீராணம் ஏரிக்கு வந்தோம். அத்தனை பேருக்கும் மனக்கண்ணில் மக்கள் கூட்டம் தெரிந்தது. ஆகா, என்ன கொண்டாட்டம், கோலாகலம். கொஞ்ச தூரம் இறங்கி நடந்த கமலக்கண்ணன் அலறிக்கொண்டு ஓடி வந்தார். வடவாற்றில் படகுகளில் பழுவேட்டரையர்களின் வீரர்கள் ஈட்டிகளுடன் வருகிறார்களாம். அனுமதியின்றி எரிக்கரையில் உலவுபவர்களை பிடித்துப் போகிறார்களாம். ஓட்டமாக ஓடி வந்து அப்படியே வேனுக்குள் தாவியதும், டிரைவர் பயத்தில் பின் பக்கமாகவே ஓட்டிக்கொண்டு கடம்பூர் வரை வந்து விட்டார்.

அங்கு மாடமாளிகையோ, மண்டபங்களோ, அரண்மனையோ இல்லை. வைக்கோல் கொட்டி வைத்திருக்கும் கட்டாந்தரைதான் பார்க்கக் கிடைத்தது. சோகத்துடன் குடந்தை நகருக்கு வந்தோம். கொஞ்ச நேரத்தில் எங்களுடன் வந்த லாவண்யாவைக் காணோம். பதறிப் போய் தேடினதில் தூரத்தில் அவளைப் பார்த்தோம். விசாரித்ததில் அவள், “குடந்தை ஜோதிடரைப் பார்த்துவிட்டு வருகிறேன்” என்றாள்.

“அட, அவர் அட்ரஸோ, போன் நெம்பரோ, ஈ மெயிலோ கூட இல்லையே. சரி எப்படியோ கண்டுபிடித்துப் பார்த்துவிட்டாய். அதற்கு ஏன் இத்தனை சோகமாக இருக்கிறாய்?” என்றோம். “அவர் என் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு இங்கு உனக்கு இடமில்லை, இனி சோழநாட்டில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலேயே இருக்காதே என்று சொல்லிவிட்டார்” என்றாள். (இப்போது லாவண்யா அமெரிக்காவில் இருக்கிறாள்)

அடுத்து தஞ்சைக்கு வந்தோம், பெருவுடையார் கோயிலைச் சுற்றிக்காட்ட கல்கி ஏஜன்ட் ஜெயராமன் வந்திருந்தார். எல்லாவற்றையும் பார்த்த பிறகு கடைசியாகக் கேட்டோம், “சரி, வந்தியத்தேவன் எங்கே?”

அவர் விழித்தார். எங்களுடன் ஆழ்வார்க்கடியானின் பரமார்த்த சீடர் ஒருவரும் வந்தார், கிருபாசங்கர். ஆகாயத்தைப் பார்த்தபடியே அவர் சொன்னார், “இப்போது நடந்ததே, அந்த பஸ் ஸ்ட்ரைக். அதற்கு முன்னாலேயே வந்தியத்தேவர் கோடிக்கரைக்குப் போய்விட்டார்” என்று. கோடிக்கரைக்கு வண்டியைத் திருப்பினோம்.

அங்கு போய்ச் சேரவே மாலை மணி ஐந்து. “இருட்டிய பிறகு மனிதர்கள் யாரும் கடற்கரைக்கோ, காட்டுக்குள்ளேயோ போகக்கூடாது” என்றார் வனத்துறை அதிகாரி அன்பழகன்.

“நாங்கள் மனித இனமே இல்லை. அனுமதி தாருங்கள்” என்றோம். அவர் முகவாய்க்கட்டையைப் பிடித்துத் தொங்கி ஊஞ்சலாடிய பிறகு, “சரி, சரி சீக்கிரம் திரும்பி விடுங்கள்” என்று அனுமதி கொடுத்தார்.

கொள்ளிவாய்ப்பிசாசைக் காட்டும் புதைமணல் குழிகள், தறிகெட்டு எங்கோ ஓடும் காட்டுக் குதிரைகள், இடிந்து போய் பழைய ஞாபகங்களிலேயே கடலை வெறித்துப் பார்க்கும் கலங்கரை விளக்கம்… அலையில்லாத கடலை வெறித்தபடி மெல்லத் திரும்பினோம்.

திரும்ப வேனில் ஏறியதும் இடிந்த கலங்கரை விளக்கத்தின் பக்கத்திலிருந்து பாடல் ஒலித்தது, சுசீலாவோ, ஜானகியோ, சித்ராவோ இல்லை. அவர்களுடையதை விட மதுரமான குரல். பூங்குழலியின் இனிய குரல்.

‘அலைகடலும் ஓய்ந்திருக்க, அகக்கடல்தான் பொங்குவதேன்?’

எல்லாரும் வாயை மூடிக்கொண்டு கண்களை மிதக்கவிட்டுக் கொண்டு குடந்தைக்குத் திரும்பினோம்.

மறுதினம் திருப்புறம்பயம் வந்தோம் சதிகளும், போர்களும், பல கொலைகளும் நடந்த இடம். பள்ளிப்படை எங்கேயென்று புலப்படவில்லை. இப்போதுகூட அந்தப்பக்கம் போகிறவர்கள் விளையாட்டாகவே ஒருத்தரையொருத்தர் வெட்டிக் கொள்கிறார்களாம். பயத்தில் அடித்துப் பிடித்துக் கிளம்பி பழையாறைக்கு வந்தோம்.

பழையாறை… சோழ வம்சம் வளர்ந்த ஊர், நம் அருள்மொழி வளர்ந்த ஊர். கனவில் நடப்பதைப் போல் நடந்து அநிருத்தரின் பூட்டிய மாளிகைக்குள் நுழைந்து மெதுவாக பின்புறம் வந்தோம். நீரோடையில் படகு வந்தது. ஏதோ ஓவியமொன்று ஹோலோகிராம் போல் தெரிகிறது. இல்லை இல்லை. குந்தவை உட்கார்ந்திருக்கிறாள். ஈசான பட்டரும் வந்தியத்தேவனும் வந்து இறங்குகிறார்கள்.

வந்தியத்தேவன் குந்தவையைப் பார்க்க, அவள் குனிந்து மலரையும், அதன் மீது படபடத்து அமரும் பட்டாம்பூச்சியையும் பார்க்க… எங்களுக்கு இளையராஜாவின் கோரஸ் பாடகிகள், “ல…ல…லலா… ல…லல…” மெதுவாகக் கேட்டது.

அவர்களைத் தொல்லை செய்ய மனமில்லாமல் கிளம்பி விட்டோம்.

ப்படியொரு வரலாற்றுப் பயணம், எத்தனை இளைஞர்கள், இளைஞிகள், எத்தனை ஆர்வம், இடங்கள் ஒவ்வொன்றையும் கண்டு அடைந்த பரவசம், எத்தனை கேள்விகள், எத்தனை பதில்கள். எத்தனையோ பணிகளைச் செய்திருந்தாலும், இந்தப் பணி எனக்களித்த ஆனந்தத்தையும், நிறைவையும் வார்த்தைகளால் வடித்துப் புரிய வைக்கவே முடியாது.

எனவே, வாசிப்பு என்பது ஓர் அனுபவம்தான். இல்லையென்று மறுப்பவர்கள் ஒருமுறை நிதானமாக, சற்று ஆழ்ந்து ‘பொன்னியின் செல்வனை’ வாசித்துப் பாருங்கள். நான் கூறியவை எத்தனை உண்மை என்பது தெரியும். வாசிக்க வாசிக்க, தினம் தினம் கொண்டாட்டம்தான், குதூகலம்தான்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பொன்னியின் செல்வன் கதையும்… நானும்!

- சீர்மிகு எழுத்தாளர், முற்போக்கு சிந்தனையாளர், சமூக ஆர்வலர் சிவசங்கரி ‘பொன்னியின் செல்வன்’ தொடர் முதன் முதலில் கல்கி பத்திரிகையில் 1950ஆம் ஆண்டு துவங்கியபோது எனக்கு வயசு 8. கதைகளைப் படிப்பதில் அதிக ஆர்வம் காட்டாத...

ஆயிரம் வரைந்தாலும் அவர் கதைக்கு ஈடாகாது!

- ஓவியர் தமிழ் அமரர் கல்கியின் படைப்புகள் என்றாலே மனதுக்குள் ஓர் உற்சாகம் பீறிட்டுக் கிளம்பும். ‘பொன்னியின் செல்வன்’ நாவல் பெயரை உச்சரிக்கும்பொழுதே மனதிற்குள் குதிரை ஓடத் தொடங்கும். வாசகன் ஒவ்வொருவனையும் காட்சிவழியே கடந்த...

பொன்னியின் செல்வனுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்!

- 'கிரைம் கதை மன்னன்' ராஜேஷ்குமார் மகாபாரதம் எனும் காவியத்தை நம்மால் எப்படி மறக்க முடியாதோ, அதைப்போலத்தான், ‘பொன்னியின் செல்வன்’ என்கிற சரித்திர நாவல் தொடரையும் தமிழ் வாசகர்களால் மறக்க முடியாது. ‘பொன்னியின் செல்வன்’...

நினைவில் கலந்த முதல் சந்திப்பு!

0
- ஓவியர் லலிதா என் மனம் கவர்ந்த பெரும் சிறந்த காவியம் அமரர் கல்கியின், ‘பொன்னியின் செல்வன்.’ இந்த காவியத்தின் அனைத்துப் பகுதிகளுமே சுவையும் சுவாரசியம் மிகுந்தவைதான். எதை எழுத, எதை விட எனும்...

பொன்னியின் செல்வனைப் பாராயணம் செய்வேன்!

- எழுத்தாளர் த.கி.நீலகண்டன் பொன்னியின் செல்வன் தொடர் 60களில் கல்கியில் வந்துகொண்டிருந்த காலகட்டம். அப்போதெல்லாம் அம்மாவின் ஆபீஸில் சர்குலேடிங் லைப்ரரியில்தான் வாரப் பத்திரிகைகள் வந்து சர்குலேட் ஆகும். எங்கள் டர்ன் வரும் வரை வீட்டில்...