பூர்வ ஜன்மக் கொடுப்பினை!

பூர்வ ஜன்மக் கொடுப்பினை!

– சுப்ர.பாலன்

ந்தக் கட்டுரையை எழுத எனக்கு உள்ள ஒரே தகுதி நான் கல்கி அவர்களையோ அவர் உருவாக்கிய பொன்னியின் செல்வனையோ நேரில் பார்த்ததில்லை என்பதே! இந்தக் காவியம் கல்கியில் வெளியான 1950 – 1954 காலகட்டத்தில் நான் பள்ளி மாணவன். என் அம்மாவுக்காக அக்கம்பக்கத்து வீடுகளில் போய்த் தவம் கிடந்து கல்கி, ஆனந்த விகடன் பத்திரிகைகளை வாங்கித் தந்த திருப்பணிக்கு மேல் எதுவும் இல்லை. தவிர, அந்த நாள்களில் எனக்கு அறிமுகமான திராவிட அரசியல் பற்று, இந்தி எதிர்ப்பு காரணமாக 'காங்கிரஸ் பத்திரிகை' என்று நான் நினைத்திருந்த கல்கியின் மீது ஒரு கசப்புணர்வைக்கூட ஏற்படுத்தியது என்பதே உண்மை.

இன்றைக்கும் என் திராவிட இயக்க விசுவாசம் இம்மியளவும் குறையவில்லை. ஆனாலும், அந்தக் கல்கி குடும்பத்தில் ஒருவனாக வளைய வருகிற பேறு பெற்றது அதிசய‌ நிகழ்வுதான். அதற்குக் காரணம் அவ்வப்போது புரட்டிப் பார்த்த பக்கங்களில் தென்பட்ட கல்கி அவர்களின் அழகான தமிழ் நடை என்னைக் கவர்ந்திருந்ததே. 1955 எஸ்.எஸ்.எல்.சி. முடித்ததும் அந்தக்கால சம்பிரதாயத்தின்படி தட்டச்சு, குறுக்கெழுத்துக் கற்றுக்கொண்ட காலத்தில் காலை வேளைகளில் அந்த அதிகாலை வகுப்பு முடிந்து திரும்புகையில் இரண்டு மணி நேரமாவது எங்களூர் 'டவுன் ஹால்' நூலகத்தில் அடைக்கலப்பட்டு தினமும் நிறையப் படித்தேன்.

மு.வ. அவர்களின் பெற்ற மனம், கரித்துண்டு போன்ற படைப்புக்களை அறிமுகம் செய்து படிப்பார்வத்தை வளர்த்த அந்த நாள் தமிழாசிரியர்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். நூலகத்தில்தான் கல்கியின் 'பொன்னியின் செல்வ'னை முறையாகப் படித்து உள்வாங்கிக் கொண்டது. ஏறக்குறைய மனப்பாடம் ஆகிற அளவுக்குப் படித்தேன். 1960களின் தொடக்கத்தில் சர்க்கார் வேலையில் சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்ததும் முதல் காரியமாகப் புத்தகங்கள் வாங்குகிற 'தைரியம்' வந்தது. முதலில் வாங்கியது 3.75 ரூபாய்க்குக் 'கழக' வெளியீடான 'திருவாசகம்'! அடுத்து, மாதம் ஒரு தொகுதியாகப் பொன்னியின் செல்வன்! மங்கள நூலகம் வெளியிட்டது. முதல் நாலு பாகங்கள் ஒவ்வொன்றும் ஏழு ரூபாய். ஐந்தாம் பாகம் பன்னிரண்டு ரூபாய்! ஐந்தையும் சேர்த்து வாங்கினால் முப்பத்தைந்து ரூபாய் என்று சலுகை விலைகூட அறிவித்தார்கள்.

நூறு ரூபாய் சம்பளத்தில் அது சிறிய தொகை இல்லை. அதே காலகட்டத்தில் எனக்குத் திருமணமும் ஆகிக் குழந்தை பிறந்தபோது என்னைக் கவர்ந்தவர் 'குறிஞ்சிமலர்' தந்த மணிவண்ணன் என்கிற தீபம் நா.பார்த்தசாரதி. எங்கள் குடும்பங்களில் நானே முன்மாதிரியாகக்கூட இருப்பேன். முதல் மகனுக்குக் குறிஞ்சிமலர் நினைவாகக் குறிஞ்சிவாணன் என்று பெயரிட்டோம். அடுத்த பெண்ணுக்கும் நா.பா.வின் கதாபாத்திரமான சுரமஞ்சரி என பெயர் வைத்தோம். மூன்றாவது மகளுக்கு மனதில் எப்போதும், ஓயாமல் அலையடித்துக் கொண்டிருந்த கோடியக்கரை ஓடக்காரி பூங்குழலியின் பெயரைச் சூட்டினோம். பொன்னியின் புதல்வர் வரலாறை எழுதிய பெரியவர் சுந்தா, நான் இப்படிப் பெயரிட்டதை, 'பாத்திரமும் பெயரும்'
என்ற‌ தலைப்பிலான அத்தியாயத்தில் பதிவு செய்து எனக்குப் பெருமை
சேர்த்தார்.

நானும் ஓர் எழுத்தாளன் என்று பிரபலமாகப் பேசப்படாதவனாக இருந்தபோதிலும் இலக்கியப் புகழ் வாய்ந்த அந்தக் குடும்பத்தில் ஒருவனாக மதிக்கப்படுகிறேன் என்றால், அதற்கு முக்கியமான காரணம், பள்ளிக்கூடம் போகிற வாய்ப்பே பெறாத என் தாயாருக்கு அந்த நாள்களில் ஓசியில் படிக்க நான் வாங்கித் தந்த கல்கி இதழ்களும் அதில் மலர்ந்த 'பொன்னியின் செல்வ'னும்தான்! பகுத்தறிவு பேசுகிற சூழ்நிலையில் வளர்ந்தவன்தான் என்ற போதிலும், பூர்வ ஜன்மக் கொடுப்பினை என்பதிலும் ஏனோ எனக்கு நம்பிக்கை வருகிறது!

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com