இப்படித்தான் பொன்னியின் செல்வன் மறுபிரசுரம் ஆச்சு!

இப்படித்தான் பொன்னியின் செல்வன் மறுபிரசுரம் ஆச்சு!

– மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.வெங்கடேஷ்

'பொன்னியின் செல்வன்' நாவல் வரலாற்றில், எனக்கு ஒரு துளி இடம் கிடைக்கும் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. அந்த நல்வாய்ப்பு நான் கல்கி இதழின் பொறுப்பாசிரியராக இருந்ததால் அமைந்தது.

எழுத்தாளர் கல்கி சாருக்கு இருக்கும் வரவேற்பு எப்போதும் 'எவர் கிரீன்.' இந்த உண்மை கல்கி நிறுவனத்துக்கும் தெரியும். ஒவ்வொரு முறையும், கல்கி சாரின் 'பொன்னியின் செல்வன்' படைப்பு, கல்கி இதழில் தொடராக வெளிவருமேயானால், உடனே விற்பனை உயரும். பழைய வாசகர்கள், புதிய வாசகர்கள் என்று கலந்துகட்டி, கல்கி இதழை வாங்கத் தொடங்குவார்கள்.

1950களில் கல்கி சார் எழுதியபோது இருந்த பெரும் வரவேற்பு, அதற்குப் பின்னர் பத்தாண்டு, பதினைந்து ஆண்டு இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் மறுபிரசுரம் செய்யப்பட்டபோதும் தொடர்ந்து வந்துள்ளது.

2013 காலகட்டத்தில்தான், கல்கி இதழ் தன்னுடைய பழைய வடிவமைப்பில் இருந்து புதுப் பொலிவுக்கு மாற்றம் அடைந்தது. 'பெரிதினும் பெரிது கேள்' என்ற வாசகமும் அதன் முகப்புப் பக்கத்தில் இடம்பெறத் தொடங்கியது. அப்போது அடியேன் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியது எனது பாக்கியமே!

இந்த மாற்றத்தின் தொடர்ச்சியாக, பொன்னியின் செல்வன் தொடரை மீண்டும் ஆரம்பிப்பது பொருத்தமாக இருக்கும் என்ற முடிவுக்கு கல்கி நிர்வாகமும் ஆசிரியரும் வந்து சேர்ந்தனர். உடனே, இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கின.

பொன்னியின் செல்வன் நாவலில் எழுத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் உண்டோ, அதேபோன்று அதன் ஓவியங்களுக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு. கல்கி சார் இருந்தபோது, நாவலுக்கு அழகூட்டியவர் ஓவியர் மணியம். பின்னர், 1968களில் ஓவியர் வினு வரைந்தார். 1998ல் வெளிவந்தபோது, ஓவியர் பத்மவாசன் தன்னுடைய மலர்களால், கல்கி எழுத்துக்கு மாலை சூட்டினார்.

ஒவ்வொரு முறையும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற வரலாற்றைச் சித்திரமாக கண்முன் கொண்டுவருவது என்பது பெரும் சவாலாக இருந்திருக்க வேண்டும். ஒவ்வொரு ஓவியரும் இதற்காகவே நான்கு ஆண்டுகளேனும் ஒதுக்கித் தரவேண்டும். வேறு எந்தவிதமான கமிட்மெண்ட்டையும் எடுத்துக்கொள்ள முடியாது. இதுவே பெரிய சவால்.

அதேசமயம், நுணுக்கமாக சித்திரங்களாக ஒவ்வொரு ஓவியமும் அமைய வேண்டும். மணியம் சார், அந்தக் காலத்திலேயே வித்தியாசமான கோணங்களில், சித்திரம் தீட்டியிருப்பார். அவரை வீட்டுக்கே அழைத்து, என்ன காட்சி, என்ன பின்னணி, என்ன பாத்திரம் என்பதையெல்லாம் விளக்கிச் சொல்லி, அதற்கேற்ப முதலில், ஒரு 'ரஃப் ஸ்கெட்ச்' ஓவியத்தை வரையச் சொல்லி, அதை செம்மைப்படுத்தி, பின்னர் இறுதி வடிவம் கொடுக்கும் வரை, முழுமையாக ஓவியத்திலும் கல்கி சார் கவனம் செலுத்தியதாக கல்கியின் புதல்வர் கி.ராஜேந்திரன் சொல்லியிருக்கிறார்.

கல்கி சார் இலங்கை போனபோது, ஓவியர் மணியத்தையும் அழைத்துச் சென்றதாகவும், ஒருசில சமயங்களில், முழு ஓவியத்தையும் மாற்றி வரையச் சொன்னதாகவும் கி.ராஜேந்திரன் தெரிவித்திருக்கிறார்.

கஸ்ட் 2014ல் மீண்டும் பொன்னியின் செல்வன் தொடரை வெளியிடும் சமயம், இத்தனை உழைப்பு, அர்ப்பணிப்பு, கவனம், ஓவியத் திறன், எழில் எல்லாம் ஒருங்கே அமைந்துள்ள இன்னொரு ஓவியரைக் கண்டுபிடிக்க வேண்டுமே என்ற அச்சம் பொறுப்பாசிரியராக இருந்த என்னை ஆட்கொண்டது.

நல்லவேளையாக ஓவியர் வேதா கிடைத்தார். மிகவும் மகிழ்ச்சியுடன், பொன்னியின் செல்வன் மறுபிரசுரத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்க முன்வந்தார். அவருக்கான வேலைகள் தொடங்கின. தொடரை ஆரம்பிப்பதற்கு முன்னரே, ஒவ்வொரு வாரமும், அவர் என்ன ஓவியம் வரையவிருக்கிறாரோ, அந்த ஓவியத்துக்கான 'ரஃப் ஸ்கெட்சை' வரைந்து கொண்டுவர வேண்டும் என்ற ஏற்பாடு ஆயிற்று. கல்கி இதழின் முன்னாள் ஆசிரியரான சீதா ரவி அவர்கள், அந்த ரஃப் ஸ்கெட்சைப் பார்த்துவிட்டு, திருத்தங்கள் சொல்வார். மேம்படுத்துவார்.

ஓவியர் வேதா சளைக்கவே இல்லை. அவருக்கு இன்னொரு சுதந்திரமும் இருந்தது. ஓவியர் மணியம், வரைந்த காட்சிகளை மட்டுமல்லாது, வேறு காட்சிகளையும் தம் கற்பனைக்கு ஏற்ப தீட்டுவதற்கான வாய்ப்பு வேதாவுக்குக் கிடைத்தது. மனிதர் இதனையும் சவாலாக எடுத்துக்கொண்டார்.

டுத்த பெரிய பணி, கல்கி சாருடைய எழுத்து. ஒரு விஷயத்தில் நான் தெளிவாக இருந்தேன். கல்கி சார் முதன்முதலாக என்ன எழுதினாரோ, அதையேதான் நாம் மறுபிரசுரம் செய்ய வேண்டும். எந்தக் கூடுதலும் குறைத்தலும் இருக்கக் கூடாது.

இன்றைக்கு இணையத்தில் கிடைக்கும், ஒருசில பதிப்பகங்கள் வெளியிட்டிருக்கும், 'பொன்னியின் செல்வன்' பிரதிகளில் பாடபேதங்கள் இருக்கின்றன. பாடபேதம் என்ன, பல பகுதிகளையே காணோம். இந்தப் பிழையில் போய் நாம் மாட்டிக்கொள்ளக் கூடாது, கல்கி சாருடைய எழுத்தை அப்படியே கொடுக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டேன்.

உதவிக்கு வந்தவர், கல்கி எழுத்தில் ஆழங்கால்பட்ட மூத்த எழுத்தாளர் சுப்ர.பாலன் அவர்கள். அவர், கல்கி சார் எழுதி வெளிவந்த பொன்னியின் செல்வன் மூல கல்கி இதழின் பிரதிகளை வைத்திருந்தார். நாவலின் அத்தியாயங்களை தட்டச்சு செய்து, அவருக்கு அனுப்பி வைப்போம். அவர், மூலப் பிரதியோடு ஒப்பிட்டு, ஏதேனும் விடுபட்டிருக்கிறதா என்பதை சரிபார்ப்பார். பாடபேதங்களைக் களைவார்.

ற்றொரு பக்கம், விளம்பரம். இவ்வளவு பெரிய பணியைத் தொடங்கும்போது, ஊரெல்லாம் தம்பட்டம் அடித்துச் சொல்ல வேண்டாமா? மார்க்கெட்டிங் குழுவினர் அதற்கு ஒரு வழி கண்டுபிடித்தனர். தமிழகம் எங்கும் வாகனங்கள் செல்லும். பொன்னியின் செல்வன் தொடங்கும் செய்தியைச் சொல்லும். கூடவே துண்டு பிரசுரங்களை வழங்கும். கன்னியாகுமரியில் இருந்து ஒரு வேன், கோவையில் இருந்து மற்றொரு வேன் என்று திசைக்கொன்றாக வேன்கள் தயாராயின. ஓவியர் வேதா வரைந்த வண்ண ஓவியங்களைக் கொண்டே வேன்களை அலங்கரித்தோம்.

ஒரு சுபயோக சுபநாளில், இந்த வேன்களை எடிட்டர் லக்ஷ்மி மேடம் 'கர்ச்சீப்' அசைத்துத் தொடங்கிவைக்க, பொன்னியின் செல்வன் பயணம் இனிதே ஆரம்பித்தது.

2014 ஆகஸ்டில் மறுபிரசுரம் ஆரம்பித்தது. ஜே ஜே என்று நான்கரை ஆண்டுகள் பயணம். அதன் பின்னே இருந்த உழைப்பு, கவனம், திட்டமிடல் ஆகியவற்றை இன்று நினைக்கும்போதும், மகிழ்ச்சியாக இருக்கிறது.

இப்போது இந்தக் கட்டுரையின் முதல் வரியைப் படித்துப் பாருங்கள். நான் சொன்னதன் அர்த்தம் புரியும்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com