படிப்போரை கட்டுண்டு கிறங்கடிக்கும் கல்கியின் காவியப் புதினம்

படிப்போரை கட்டுண்டு கிறங்கடிக்கும் கல்கியின் காவியப் புதினம்

மாபெரும் காவியம் பொன்னியின் செல்வன் வாசித்து சுவாசித்தவர்களின் பார்வையில்… சுவாரஸ்ய அலசல்கள்.

சேலம் சுபா, பத்திரிக்கையாளர், சேலம்.

பொன்னியின் செல்வன் லட்சக்கணக்கான மக்களின் மனங்கவர்ந்த ஒரு மாபெரும் காவியம் கல்கி அவர்களின் மிகப்பெரிய உன்னதப் படைப்பு. காலங்கள் மாறினாலும் வாசிக்கும்போது எழும் பிரமிப்பும் ஆர்வமும் என்றும் குறையாத வரலாற்றுப்புதினம் . வாசிக்கும் பழக்கமுள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ஏதோ ஒரு தருணத்தில் இந்தக் காவியத்துடன் நிச்சயம் கட்டுண்டு கிறங்கிக் கிடந்திருப்பது உறுதி. குந்தவை நாச்சியார் பூந்குழலி ஆதித்த கரிகாலன் அருள்மொழிவர்மன் வந்தியத்தேவன் நந்தினி முதல் இன்னும் இங்கு குறிப்பிடப்படாத இக்காவியத்தில் வரும் அத்தனை பெரிய சிறிய கதாபாத்திரங்களும் ஏதோவொரு விதத்தில் சிறப்பானவர்களாக நம் நினைவில் நீங்காது நிலைத்து நிற்கும் திறன் படைத்தவர்கள் என்றால் மிகையல்ல.

சேலம் சுபா
சேலம் சுபா

கல்கி அவர்கள் கதைக்கு தொடர்பான வரலாற்று சிறப்பு மிக்க பல ஊர்களுக்கும், இடங்களுக்கும் சென்று நேரில் அந்த அனுபவங்களை தனக்குள் வாழ்ந்து ரசித்துப் பின் அதை அப்படியே இந்தக் காலத்திற்கு ஏற்ப நாவலாக சித்தரித்திருப்பது அற்புதமானது. ஐந்து பாகங்கள் இரண்டாயிரம் பக்கங்கள் எனினும் வாசிக்க கையில் எடுத்த பின் எவராலும் அவ்வளவு எளிதில் பின் படிக்கலாம் என்று மூடிவைக்கவே முடியாது. அவ்வளவு சுவாரஸ்யமான விவரித்தல்கள். அந்தக் குதிரைகளின் குளம்பொலி ஓசையும் கடலின் அலைகளும் வாள்களின் வீச்சும் ஆண்டாண்டு காலம் நம் காதுகளில் ஒலித்த வண்ணமே இருக்கும். இதோ நான் பதினைந்து வயதில் வாசித்து அருள்மொழிவர்மன் மீது கொண்ட நேசம் இந்த ஐம்பது வயதில் வாசிக்கும்போதும் அப்படியே இருப்பதுதான் இந்நாவலின் வெற்றி. அன்று நான் படித்து தற்போது என் மகள் படித்து எதிர்காலத்தில் என் பேத்தியும் படிக்கத்தயாராக உள்ளார் பொன்னியின் செல்வனை.

***************************

சக்தி அருளானந்தம்,
எழுத்தாளர், கவிஞர்
சேலம்.
ஆட்டிப் படைக்கும் நந்தினி
சக்தி அருளானந்தம்,
சக்தி அருளானந்தம்,

பொன்னியின் செல்வன் – புத்தக காதலர்களுக்கு பரவசம் தரும் பெயர். கல்லை செதுக்கி சிற்பி சிலை வடிப்பதுபோல கல்கி அவர்கள் சொல்லால் உருக்கொடுக்க மணியம் அவர்களின் தூரிகை உயிர்கொடுத்து உலவ விட்டது.கையிலெடுத்தால் கீழே வைக்க மனம் வராது என்பார்களே அதை மெய்ப்பிக்கும் விறுவிறுப்பு. படிக்கத் தெரியாத என் அம்மாவிற்கு படித்துக் காட்டியதுதான் முதல்முறை. அப்போது ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பிறகு எனக்காக சில முறைகள் படித்திருக்கிறேன். ஐந்தாம்  பாகத்தை ஓர் இரவில் படிக்கத் தொடங்கி பொழுது விடிந்தேவிட்டது!

வந்தியத்தேவன் போல முதன்மை பாத்திரமானாலும், ரவிதாஸன் போல சிறு பாத்திரமானாலும் தம் கதாபாத்திரங்களின் முழுமையான சித்திரத்தை வாசகர்கள் மனங்களில் தீட்டிவிடுவார் கல்கி. கதைக்களத்தில் நாமும் இருப்பதுபோன்ற உணர்வை எழுப்பும்.பொன்னியின் செல்வனில் பிரமிப்பும் வியப்பும் தரும் பாத்திரம் நந்தினி. கல்கியின் புனைவில் உருவாகி நாவலில் தன்னை சந்திக்கும் ஒவ்வொருவரையும் ஆட்டிப்படைப்பவள் நம் மனங்களையும் ஆள்கிறாள். அவளின் அறிவு, அழகு. அந்த அழகு ஏற்படுத்தும் அச்சம், அரசருக்கும் அஞ்சாத கிழவர் பெரிய பழுவேட்டரையரிலிருந்து ஆதித்த கரிகாலனின் நண்பன் இளைஞன் கந்தமாறன் வரை அவள் கடைக்கண் பார்வையில் சுழல்கிறார்கள். வில்லியாக இருந்தாலும் அவளை வெறுக்க முடிவதில்லை. அவள்பால் அனுதாபத்தைக் கூட ஏற்படுத்திவிடுகிறது கல்கியின் எழுத்தின் வலிமை. இப்போது நினைவு கூர்கையில் மீண்டும் இன்னொருமுறை பொன்னியின் செல்வன் படிக்க மனம் தயாராகிவிட்டது.

***************************

நீரை பாத்திமா முன்னாள் ஆசிரியை
நீரமுளை, நாகை.
அதிபுத்திசாலி பூங்குழலி
நீரை பாத்திமா
நீரை பாத்திமா

த்தனையோ காவியங்களை படித்திருந்தும் ஏனோ இந்த பொன்னியின் செல்வன் மட்டும் என் மனதோடு ஒன்றிப் போய் விட்டது. கல்கி அவர்களின் பாத்திரப் படைப்புகள் எத்தனையோ வித்தியாசங்களை உள்ளடக்கி நிறைந்து கிடக்கின்றன என்றாலும் ஏனோ பூங்குழலி என்ற ஒரு பெண்ணின் பாத்திரப்படைப்பு என்னை மிகவும் ஈர்த்தது. அவளை அறிமுகப்படுத்தும் பொழுதே  கோடியக்கரையில் ஆரம்பித்ததால் அவள் ஏனோ எனக்கு மனதுக்கு மிகவும் நெருக்கமானவளாக தென்பட்டாள் எங்கள் ஊருக்கு அருகாமையில் கோடியக்கரை இருப்பதால். அந்தப் பெண் ஒரு படகோட்டி யாக தன்னந்தனியாக இலங்கைக்கு படகோட்டி சென்றாள் என்பது மிகப் பெரிய ஆச்சரியத்தை தந்தது எவ்வளவு திறமைசாலியாக தைரியம் வாய்ந்தவளாக ஒரு சமுத்திரத்தை கடந்து செல்லும் படகோட்டி ஆக இருந்தாள் என்பது ஆச்சர்யத்தைத் தந்தது.

ஒரு  சோழ சாம்ராஜ்ய இளவரசன் அவளை நம்பி அவளோடு பயணித்தார். ஒரு பெண் இவள் என்ன செய்துவிட முடியும் இந்த கடலைத் தாண்டி விட முடியுமா என்பதை எல்லாம் யோசிக்காமல் அவளோடு பயணித்தார். இது எனக்கு மிகவும் பிடித்தது. அந்த பயணத்தில் இலங்கைக்கு சென்று பகைவர்கள் உடன் போராடி மீண்டு வந்த இளவரசரை லாவகமாக மீண்டும் படகில் ஏற்றி தமிழகத்தை நோக்கி பயணிக்கும் பொழுது ஏற்பட்ட மழை காற்று சூறாவளியில் காய்ச்சல் கண்ட இளவரசரை கோடியக்கரையில் காத்திருந்த சேந்தன் அமுதன் உதவியோடு பத்திரமாக நாகப்பட்டினம் புத்த விகாரத்தில் கொண்டு சேர்த்த அந்த பூங்குழலியின் சேவை அவளை மேலும் ஓர் உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்கிறது. ஏனோ அவளின் புத்திசாலித்தனம், ஒரு மாபெரும் சோழப்பேரரசின் இளவரசரை அன்று அவள் போராடி காப்பாற்றியது சோழப் பேரரசையே காப்பாற்றியதற்கு சமமாக எனக்கு தோன்றியது.

இளவரசனின் மேல் இவள் காதல் கொள்கிறாள் ஆனால் இவள் அந்த காதலை வெளிப்படுத்தவே இல்லை. இவ்வளவு தைரியம் மிக்க பெண்ணிற்குள் ஒரு மாபெரும் பய உணர்வை இன்னொரு நிகழ்வில் காட்டிச் செல்கிறார் கல்கி. அமாவாசை இரவில் நரி ஊளையிடுவது, கூடவே மீத்தேன் வாயு தீப்பிடித்து எரிந்தது இரண்டையும் சேர்த்து கொள்ளிவாய் பிசாசு கத்துவதாக நினைத்து அங்கு சென்று தூரமாக நின்று இவள் கத்தி அழுவதை படித்த பொழுது இவள் மேல் ஒரு ஆதங்கம் ஏற்படுகிறது. இளவரசனின் மேல்  அரச குடும்பத்தை  சேர்ந்த வானதி கொண்ட காதலை அறிந்தும் 'நான் இளவரசரை திருமணம் செய்வேன்' என்று வானதியிடம் ஒரு சாதாரண ஒடக்காரப் பெண்ணான  இவள் சவால் விடுவது ஆச்சரியத்தை உண்டாக்கியது.

ரு காலகட்டத்தில் இவளின் முறைப்பையனான சேந்தன் அமுதன் இவள் மேல் கொண்ட காதலை உணர்ந்து, தன் எண்ண்ங்களை மாற்றிக்கொண்டு அவனைத் திருமணம் செய்து கொள்ள ஒத்துக்கொள்கிறாள். இந்த இடத்தில் அவளின் குடும்ப நலம் காக்கும் பண்பு வெளிப்படுகிறது. சேந்தன் அமுதன் உண்மையில் செம்பியன் மாதேவி அவர்களின் புதல்வன் என்பது தெரியவருகிறது. அப்பொழுதும் பூங்குழலி இருவரும் மணமுடித்து கோடியக்கரை சென்று வாழ அனுமதி கேட்டது அவளின் நல்ல குணத்தை காட்டுகிறது. இருப்பினும் அருள்மொழிவர்மனின் சொல்லிற்க்கிணங்கி சேந்தன் அமுதன் உத்தம சோழன் என்ற சோழப் பெயரோடு பூங்குழலி பட்டத்தரசி யாகி சோழநாட்டை ஆண்டது மிக சிறப்பானது. ஒரு சாதாரண பெண்ணின் வீரமும், திறமையும், வெகுளித்தனமும், அவளின் தியாகமும், பேரதிர்ஷ்டமும் என்னை மிக கவர்ந்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com