குந்தவையின் மனம் கவர்ந்த கொடும்பாளூர் இளவரசி!

குந்தவையின் மனம் கவர்ந்த கொடும்பாளூர் இளவரசி!
-இந்திராணி தங்கவேல், மாடம்பாக்கம்.

ஓவியங்கள்: வினு, பத்மவாசன்

காப்பிய நாயகன் அருள்மொழிவர்மனின் திருத் தமக்கையார் குந்தவை பிராட்டியாரின்  பேரன்பைப் பெறும் பேறு பெற்றவர் கொடும்பாளூர் இளவரசியான வானதி.

பழையாறை அரண்மனையில் இளையபிராட்டிக்கு எத்தனையோ தோழிப் பெண்கள் இருந்திருக்கலாம். இருப்பினும் அவர்கள் அனைவரும் பார்த்து பொறாமைப்படுகிற அளவுக்கு குந்தவையின் மனம் கவர்ந்தவர் இந்த வானதி.

பயங்கொள்ளி அப்பாவி பெண்ணாக அறிமுகமாகிற வானதி கதை வளர வளர அதி தீவிரமான சாகசங்களை செய்வது சுவாரசியமானது. குறிப்பாக பூங்குழலியும் வானதியும் யானை மீது ஏறி வந்து பழுவேட்டரையர்களின் ஆணைகளையும் மீறித் தஞ்சைக் கோட்டைக்குள் நுழைய போராடும் துணிவு. அவள் பேசுவதைக் கண்ட 'சேனாதிபதி பெரியப்பா'வே பாராட்டுவார் :மகளே! கொடும்பாளூர் பூமகள் பேச வேண்டியவாறு பேசினாய்' என்று.

இவ்வாறு வானதியின் மீது ஏற்பட்ட இனம்புரியாத பாசத்தால் அவளை தம்முடைய இளைய சகோதரன்  அருள் மொழிக்கே மணமுடித்து வைக்க ஆசைப்பட்டாள் குந்தவை. பயந்த சுபாவம் கொண்டவளான  வானதியை தன்னுடைய தம்பிக்கு ஏற்ற முறையில் வீராங்கனையாக ஆக்கினாள்.

இத்தனை பெருமைகளுக்கும் உரியவரான வானதி அருள்மொழிவர்மன் ஆட்சிபீடம் ஏறியபோது பட்டத்தரசியாக விளங்கும் பேறு பெற முடியவில்லை. திரிபுவன மாதேவி என்ற பெயர் மட்டும் பெறுகிறாள்.

ராஜராஜனின் பட்டத்து அரசியாக சிம்மாசனம் ஏறியவர் லோகமாதேவி என்னும் இன்னொரு பெண்மணி. கும்பகோணம் அருகில் உளள திருவிசலூர் சிவயோகிஸ்வரர் கோயிலில் உள்ள சிற்ப திருமேனியிலும் ஆமதாபாத் கவுதம் சாராபாய் அருங்காட்சியகத்தில் உள்ள செப்புப் படிமத்திலும் ராஜராஜனுடன் காணப்படுகிறவர் இந்த லோகமாதேவியே.

கதையை முடிக்கும்போது வானதி ராஜராஜனுடன் சிம்மாசனம் ஏற முடியாமல் இருந்தது மனதை கனத்தது.

*******************

வீரமங்கை நந்தினி:

கா சௌந்தர்ய வதியான நந்தினியும் கம்பீரமான குந்தவை தேவியும் தஞ்சைக் கோட்டை வாயிலில் சந்திக்கும் காட்சியை 'இரண்டு பூரண சந்திரர்கள்' என்று கல்கி வர்ணனை செய்திருப்பது ஓர் உன்னதமான கவிதை. அதைப் படிக்கும்போது எந்த ஒரு ஓவிய கலைஞரின் உதவியும் தேவைப்படாமல்

அவர்களின் தோற்றப்பொலிவு உரைநடையிலேயே நம் கண் முன்னால் வந்து நிற்கும்.

சோழர்களின் பொற்காலத்தைச் சொல்லும்' பொன்னியின் செல்வன் மகாகாவியத்தில் மைய பொன் சரடாகத் திகழ்கிறவள் நந்தினி. அவள் எவ்வளவுதான் நஞ்சினும் கொடியாள் என்று வர்ணிக்கப்பட்டாலும், வஞ்சகமான முறையில் கரிகாலன் படுகொலை அரங்கேறிய பிறகும் கூட நந்தினியின் மீது ஒரு விதமான பரிவு உண்டாவதைத் தவிர்க்க முடியவில்லை.

வலுவான பூர்வ பீடிகையோடு தன்னுடைய பிறப்பின் ரகசியத்தைக் கரிகாலன் காதில் மட்டும் கேட்கிற மாதிரி நந்தினி சொல்வதாக கல்கி எழுதுகிறார். என்னைப் பெற்ற தந்தை…தான்" என்று அவனிடம் சொல்லிவிட்டு அவள் விம்மி விம்மி அழுகிறாள். அமரபுஜங்கன் இறந்த பிறகு நந்தினி உயிர் துறக்கிறாள். அதற்கு முன்னால் அவளை ராஜராஜசோழன் சந்திக்கிறார். அவரிடம் நந்தினி தன் பிறப்பைப் பற்றிய உண்மையைக் கூறிவிட்டு இறக்கிறாள்.

ஆக, தம்முடைய வாசகர்களுக்கு கல்கியே வெளிப்படுத்தாத மர்மம் அது. ஒரு கட்டத்தில் கதையை முடிக்க வேண்டி இருந்த போதிலும் கூட நந்தினியின் பிறப்பைப் பற்றிய உண்மை வாசகனுக்கு சொல்லப்படவே இல்லை.

ஆக, நந்தினியின் தந்தை யார் என்னும் ரகசியம் தெரிந்தவர் இந்த இருவர் மட்டுமே. இந்த நிகழ்வைத் தொடர்ந்து கரிகாலன் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். நந்தினியும் ஒரு குதிரையில் ஏறி வாசகர்களின் பார்வையில் இருந்து அறவே மறைந்து விடுகிறாள்.

அரசர்க்கரசி பெரிய பிராட்டி செம்பியன் மாதேவியார்! 

செம்பியன் மாதேவியார் ஒரு வரலாற்றுப் பாத்திரம். இவருடைய கணவர் சிவபக்தரான கண்டராதித்தர் .இன்றைக்கும் இவர் பெயரில் அமைந்த நகரம் தஞ்சாவூர் அருகில் பெயர் மருவி கந்தர்வகோட்டை என்று வழங்கப் படுகிறது. சில பத்தாண்டுகளுக்கு முன்னால் கூட பாமர வழக்கில் இது கண்டரக்கோட்டை என்று இருந்தது.

இளம் பிராயத்திலேய தம்முடைய முதல் மனைவி வீர நாரணியை இழந்தகண்டராதித்தர் வெகுகாலம் சென்று மணம் புரிந்து கொண்டது மழவரையர் மகளான செம்பியன்மாதேவியை. இவர்களுக்குப் பிறந்தவர் மதுராந்தகன் என்ற பெயரில் கல்கி காட்டுகிற உத்தமச்சோழர்.

குந்தவையின் பேர் அன்புக்கு பாத்திரமாக விளங்கும் செம்பியன் மாதேவியார் தம்முடைய கணவரின் அடியொற்றி சிவத்தொண்டுக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர் திருநல்லம் ,திருமுதுகுன்றம், திருமணஞ்சேரி, குத்தாலம் திருவக்கரை உட்பட பத்து செங்கல் கட்டுமானங்களை கருங்கல்லாலான கோயில்களாக உருவாக்கி வரலாற்றில் சிறப்பிடம் பெற்றவர் இவர்.

தன்னுடைய கணவரின் மறைவுக்குப் பின் அரிஞ்சய சோழர் முதல் ராஜராஜன் என்ற வரலாற்று புகழ்பெற்ற நம்முடைய கதாநாயகன் அருள்மொழிவர்மன் வரை ஆறு சோழ மன்னர்களை அரியணையில் காணும் பேறு பெற்ற இந்தப் பெருமாட்டியார் எண்பது ஆண்டுகளுக்கு ம்  மேல் வாழ்ந்தார் என்றும் இந்த கட்டுரையில் காணப்படுகிறது.

எதையுமே ஒரு தடவைக்கு பல தடவை நிதானமாக யோசித்து செயல்படுவதில் இவருக்கு நிகர் வேறு யாருமே இருக்க முடியாது. நுண்ணிய அறிவும் தெள்ளியதெளிவும் கொண்டவர். இளநீரைப் போன்ற தூயவள். எவ்வித இறுமாப்பும் இல்லாதவர். சிவபக்தரான இவர் தலையில் மணி மகுடமும் வேறு ஆபரணங்களும் அணியாது இருந்த போதிலும் அவருடைய கம்பீரத் தோற்றமும் மிகவும் பிரகாசமான முகமும் அரச குலத்தில் பிறந்தது அரச குலத்தில் புகுந்த அரசர்க்கரசி என்பதை உணரவைக்கும். தேவாலயத் திருப்பணிகளில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். தன் மகன் மதுராந்தகரிடம் சிவஞானத்தை வளர்த்தவர்.

செம்பியன் மாதேவிக்கு தமிழகத்தில் ஏற்கனவே ஆறு இடங்களில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவரது பிறந்த ஊரான செம்பியன் குடியில் சிலை இல்லை என்பதால் ஊர்மக்கள் ஒன்றுகூடி சிலைவைத்துள்ளனர். பத்தாம் நூற்றாண்டில் வாழந்தவரை இன்றுவரை மக்கள் நினைவில் வைத்து இருப்பதற்கு கல்கியின் படைப்பான பொன்னியின் செல்வன் உயிர் கொடுத்தது எனலாம்.

நான் சிறுமியாக இருந்த பொழுது எங்கள் கிராமத்தில் செம்பியம் என்று ஒரு பாட்டி இருந்தார். இந்தப் பெயர் மிகவும் வித்தியாசமாக இருக்கவே எனது அப்பாவிடம் இந்தப் பெயர் காரணம் பற்றிக் கேட்டேன். எனது அப்பா இப்பெயர் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழனுடன் தொடர்புடைய பெயர் என்று மட்டும் கூறியிருந்தார். அப்போது எனக்கு பொன்னியன் செல்வனை படிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. பிறகு அதைப் படித்த போது செம்பியன்மாதேவி பற்றிய வாசிப்பும் அவர் செய்த சிவத்தொண்டுகளும் என் மனதில்  நீங்கா இடம் பெற்று விட்டன.

அரசரும் அரசியரும் பொதுமக்களும் போற்றும்படி திகழ்ந்த செம்பியன் மாதேவி நினைவாக தமிழகத்தில் பல ஊர்கள், ஆறுகள், மண்டபங்கள், கால்வாய்கள் சேரிகள் செப்புத்திருமேனிகள், சிலைகள் அமைக்கப்பட்டன. தஞ்சை மாவட்டம் நாகப்பட்டினம் வட்டத்தில் உள்ள செம்பியன் மாதேவி, அரியலூர் வட்டத்தில் திருமழப்பாடி க்கு அருகிலுள்ள செம்பியன்மாதேவிக் குடி, (செம்பியக்குடி) சேலம் மாவட்டம் திருச்செங்கோடு வட்டத்திலுள்ள செம்பக மாதேவி ஆகியனவும், மன்னார்குடி அருகில் உள்ள செம்பியன் மாதேவி என்ற ஊரும், உளுந்தூர்பேட்டை  வட்டத்தில் உள்ள செம்பியன்மாதேவி  நினைவால் எழுந்த சில ஊர்கள் ஆகும் என்று பட்டியலிடுகிறார் எழில் ஆதிரை.

இதன் அடிப்படையில்தான் எங்கள் ஊர் பாட்டிக்கும் 'செம்பியம்' என்று பெயரிட்டு இருக்கவேண்டுமென்று  தெரிகிறது.

திருமழபாடிக்கு அருகில் உள்ள செம்பியக்குடியில் ஊரார்கள் இன்றும் தங்கள் ஊர் செம்பியன் மாதேவி பிறந்த ஊர் என்ற பெருமையோடு செம்பியன் மாதேவி பிறந்த நாளன்று கைலாசநாதர் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள செம்பியன்மாதேவி கற்சிலைக்கு புதிய சேலைகள் மற்றும் பொருட்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று படைத்துப் போற்றுகின்றனர். அவ்வாறே செம்பியன்மாதேவி ஊரைச் சேர்ந்தவர்களும் மங்கல இசை, பட்டுச் சேலை மற்றும் பொருட்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று செம்பியன்மாதேவி சிலைக்கு சீதனமாக அளித்து மகிழ்கின்றனர் என்ற  செய்தி   அறிந்து மகிழ்ந்தேன்.

ஆட்சி அதிகாரத்தில்  அரசகுல பெண்மணிகளும் ஆக்கப்பூர்வமான முறையில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு எவ்வாறு தன்னலமற்ற தொண்டாற்றினார்கள் என்பதற்கு மிகச் சரியான எடுத்துக்காட்டாக திகழ்கிறவர் இந்தப் பெருமாட்டியார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com