பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அன்றே உருவாக்கியவர் கல்கி!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அன்றே உருவாக்கியவர் கல்கி!

– எழுத்தாளர் தேவிபாலா

மரர் கல்கி எழுதிய, 'பொன்னியின் செல்வன்' கதையை நான் எத்தனை முறை படித்திருக்கிறேன் என்று எனக்கே தெரியாது. ஒவ்வொரு முறை கல்கியில் வரும் போதும் அந்தக் கதையை நான் படித்துக்கொண்டேதான் இருக்கிறேன். நான் எனது பத்தாவது வயதில் இருந்தே தொடர்கதைகளைப் படிக்க ஆரம்பித்துவிட்டேன். அதுதான் என்னை ஒரு எழுத்தாளன் ஆக்கி இருக்கிறதோ என்னமோ தெரியவில்லை.

கல்கி அவர்களின் எழுத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். பொன்னியின் செல்வன் கதையை அவர் எழுதியது போன்று வேறு யாராலும் எழுதியிருக்க முடியாது என்றுதான் சொல்வேன். அப்படி ஒரு தெளிந்த நீரோட்டமான கதை. அவர் எப்போதுமே நல்ல தெளிவான நடையில் அற்புதமான சம்பவங்களைத் தொகுத்து கதைகள் எழுதும் நல்ல கதாசிரியர்.

பொன்னியின் செல்வன் நாவலைப் படிக்கும்போது கல்கி அவர்களை வெறும் கதாசிரியர் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. அந்தக் கதையில் வருகிற பிரதான கதாபாத்திரங்கள் அனைத்தையும் உருவாக்கி ஒரு திரைப்படம் போல இயக்கியவர் அமரர் கல்கி அவர்கள். அதில் பல பரிமாணங்களில் அவர் வெளிப்படுவார். நல்ல திரைக்கதையாசிரியராகத் தெரிவார். கதாபாத்திரங்களை அருமையாகச் சித்தரித்திருப்பார். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மூலமாகவும் கதை சொல்லும் உத்தியை திறம்படக் கையாண்டிருப்பார். அப்படிப் பல கதாபாத்திரங்களின் வழியாகவும் பல திருப்பங்களைக் கொண்டுவந்து சுவாரஸ்யமான முடிச்சுகளைப் போட்டு, அற்புதமான ஒரு திரைக்கதையாகப் படைத்து இருப்பார். இன்றைய தொலைக்காட்சித் தொடர்களுக்குத் திரைக்கதை அமைப்பவர்கள் எல்லாருக்குமே ஒரு திரைக்கதை ஆசான் அமரர் கல்கி அவர்கள்தான்.

அடுத்ததாக, வசனங்களைச் சொல்ல வேண்டும். கதாபாத்திரங்களின் வழியே நடைபெறும் உரையாடல்கள் சுவாரஸ்யமாக இருக்கும். அந்த உரையாடல் வழியாகவும் கதை நகர்வதை உணர முடியும். அப்போது அவர் ஒரு நல்ல வசனகர்த்தாவாகத் தெரிவார். இந்த நாவலின் ஐந்து பாகங்களிலும் இதை நிரூபித்திருப்பார் அமரர் கல்கி அவர்கள்.

அதன்பிறகு அவர் ஒரு சிறந்த இயக்குநராகவும் தன்னை வெளிப்படுத்தி இருப்பார். அவர் பாத்திரங்களைச் சித்தரித்திருப்பதும் அவர்களுடைய குணச்சித்திரங்களை வெளிப்படுத்துவதும் மிக அழகாக இருக்கும். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அவர் வர்ணிக்கும்போது அவர்களது இயல்புகள் வெளிப்படும். அதோடு அந்தப் பாத்திரம் படிப்பவர் மனதில் வந்து அமர்ந்து கொள்ளும். அப்படித்தான் வந்தியத்தேவன் ஆகட்டும், பூங்குழலி ஆகட்டும், நந்தினி, சுந்தர சோழர், அருள்மொழிவர்மன், குந்தவை, வானதி, செம்பியன் மாதேவி, பழுவேட்டரையர் போன்ற முக்கியமான பாத்திரங்கள் மட்டுமல்ல; உப கதாபாத்திரங்கள் கூட நம் மனதோடு நெருக்கம் ஆகி விடுவார்கள்.

அவர் ஒரு இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா மட்டுமல்ல; பொன்னியின் செல்வன் என்கிற கற்பனை திரைப்படத்திற்கு உடையலங்கார நிபுணராகவும், கலை இயக்குநராகவும், ஒளிப்பதிவாளராகவும் ஒவ்வொரு கலைஞராகவும் கூடுவிட்டு கூடு பாய்ந்து இருப்பார். இது கதை படிக்கும் ஒவ்வொருவருக்கு நன்கு தெரியும். கதைக் களங்களையும் காட்சிகளையும் ஒரு தேர்ந்த ஒளிப்பதிவாளரைப் போல் தனது எழுத்தின் வழியாக நம் கண்முன்னே விரிய வைத்திருப்பார்.

பொன்னியின் செல்வன் கதையை அந்தக் காலத்திலேயே அனைவரும், அதை ஒரு திரைப்படம் போல காட்சி வடிவத்தில் அவரவர் மனதிற்குள் பார்த்துவிட்டார்கள். வந்தியத்தேவன் என்று சொல்லும்போதே அந்தக் கதாபாத்திரத்தை மையமாக வைத்து படம் எடுக்கப் பலரும் முயற்சி செய்தார்கள். முதலில் எம்ஜிஆர் முயற்சி செய்தார். பிறகு கமல் முயற்சி செய்தார் என்று தகவல் வந்தது. பிறகு விஜய் முயற்சி செய்தார் என்றும் பேச்சு வந்தது. இப்போது மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிக்கிறார் என்று அறிய முடிகிறது. ஆனால், பொன்னியின் செல்வன் கதையைப் படிக்கிற ஒவ்வொருவருக்கும் வந்தியத்தேவன் கதாபாத்திரம் ஒவ்வொரு மாதிரியாக மனதில் உருவெடுத்திருக்கும். அவர்கள் கற்பனை உலகத்தில் வந்தியத்தேவனை ஒரு மாதிரியாக சித்தரித்து வைத்திருப்பார்கள். அந்த எதிர்பார்ப்புகளுக்கும் கற்பனைகளுக்கும் ஏற்ற மாதிரி அந்தக் கதாபாத்திரத்தை, திரையில் கொண்டு வருவது என்பது மிகவும் சிரமமான ஒன்று. இப்படி ஏற்கெனவே கற்பனை செய்யப்பட்ட ஒரு கதாபாத்திரத்தை நல்ல மாதிரியாக கொண்டு வருவது என்பது இயக்குநரின் சாதுரியம் மட்டுமல்ல; அது ஒரு சவாலும் கூட.

பொன்னியின் செல்வன் கதையைப் பற்றிச் சொல்லும்போது மணியம் அவர்களது ஓவியங்களையும் சொல்ல வேண்டும். அந்தக் காலத்தில் கதைக்கான ஓவியங்களை மணியம் வரைந்தார். கதையைப் படிக்கும்போது கதையோடு அந்த ஓவியங்களையும் மனதில் பதிய வைத்துக் கொண்டார்கள் வாசகர்கள். கோபுரக் கொண்டை என்றால் குந்தவை, வட்டமான கொண்டை என்றால் நந்தினி என்று அந்தப் பாத்திரங்களின் சிகை அலங்காரங்கள் கூட பேசப்பட்டன.

இப்படி அனைவரும் மனதளவில் ஒரு திரைப்படமாகத்தான் பொன்னியின் செல்வனைப் பார்த்திருக்கிறார்கள். அவ்வகையில் வாசகர்கள் மனதில் அந்தத் திரைப்படம் அழியாமல் பதிந்து இருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியில் ஒரு முடிச்சைப் போட்டு, பிறகு அடுத்த அத்தியாயத்தில் அதை அவிழ்ப்பது அவரது பாணியாக இருந்தது. அத்தியாயம் முடியும்போது வரும் பஞ்ச்சை அடுத்த வாரம் வேறுவிதமாக உருமாற்றியிருப்பார். இப்படி ஒவ்வொரு அத்தியாய முடிவிலும், 'தொடரும்' என்று போடுவதற்கு முன் ஒரு திருப்பமான முடிச்சு போடுவது என்பது இன்றைய தொலைக்காட்சித் தொடர்களின் பாணியாக இருக்கிறது. இதற்கெல்லாம் முன்னோடியாக இருந்தவர் அமரர் கல்கி அவர்கள்தான். அந்த பஞ்ச்சை அடுத்த அத்தியாயத்தில் அவர் வித்தியாசமாக எடுத்து, வேறு வகையில் காட்டுவதைப் பார்க்கும்போது அவரை ஒரு சிறந்த எடிட்டர் என்றும் சொல்லத் தோன்றும். இப்படித் தன்னை பலவகைக் கலைஞராக வெளிப்படுத்தி ஒவ்வொரு, கலையிலும் உள் நுழைந்து கூடுவிட்டு கூடு பாய்ந்து ஒரு அற்புதமான காவியத்தைப் படைத்ததால்தான் அவரைப் பற்றி இன்றும் பேசுகிறோம். அதுதான் அந்தப் படைப்பின் வெற்றியாகவும் உள்ளது.

Other Articles

No stories found.