பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-திருப்பணியா, மரபுப் பெருமையா?

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-திருப்பணியா, மரபுப் பெருமையா?

ஒரு அரிசோனன்

(நினைவூட்டல்)

இதுவரை நடந்தது…

முதல் பாகம் – பொது ஆண்டு 2411

ருபத்தைந்தாம் நூற்றாண்டில் வல்லரசான பாரத ஒருங்கிணைப்பில், தமிழ்நாடு மாநிலம் 'தக்கன்கண்ட்' என்று அழைக்கப்பட்டது. ஆங்கிலமும், இந்தியும் கலந்த ஒரு மொழியே அங்கு பேசப்பட்டது.  வாழ்க்கை வசதிக்காகத் தமிழ்மொழி கற்பதைத் தமிழர்கள் துறந்ததனால், தமிழ் ஒரு கூற்றுமொழியாகிப்போய், வெறும் ஆயிரக்கணக்கான மக்களால் மட்டுமே பேசப்பட்டது.  அவர்களும் உடலூழியம் செய்யும் 'எடுபிடி'கள் ஆகிப்போகிறார்கள். மொழிமாற்றுக்கருவி மூலமே அவர்கள் மற்றவர்களுடன் பேசிவருகிறார்கள். தமிழை எழுதப் படிக்க அறிந்த ஒருசில குடும்பங்களில் வந்த ஈஸ்வரன், அழகேசன், காமாட்சி, அவள் தம்பி ஏகாம்பரம், ஆகியோர் பல்வேறு இடங்களில் வசித்தாலும், உரிமைக் குடிமகளான நிமிஷாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சந்திக்கிறார்கள்.

அச்சமயத்தில், கடும் சூரியக் கதிர்வீசல் மற்றும் மின்காந்தப் புயலினாலும், புவிதூண்டிய மின் அழுத்தத்தாலும், உலகமே தனது காந்த சக்தியின் ஒழுங்கமைப்பை இழந்து மின்சக்தி இல்லாமல் போகிறது.  உலகமே கற்காலத்திற்குத் திரும்புகிறது. காமாட்சி, ஏகாம்பரம், ஈஸ்வரன், அழகேசன் இவர்களுடன் நிமிஷா சேர்ந்துகொள்கிறாள்.  ஐவரும் ஈஸ்வரனின் பெற்றோருடன் ஒரு கிராமத்தில் வசிக்கிறார்கள். இந்நிலையில் ஒரு நிலநடுக்கத்தால், கங்கைகொண்ட சோழபுரத்துக் கோவிலின் சுவரிலுள்ள கல் பெயர்ந்து ஒரு இரகசிய அறை தென்படுகிறது. இராஜராஜ சோழனுக்கு அவரது அரசகுரு கருவூர்த் தேவர் அளித்த தங்கச்சுருள் அடங்கிய குழல் அந்த அறையில் கிடைக்கிறது.

ஈஸ்வரன் தங்கச் சுருளில் எழுதியிருப்பதை மற்றவர்களுக்குப் படித்துச் சொல்ல ஆரம்பிக்கிறான்…

இரண்டாம் பாகம் – திருப்பணித் துவக்கம்

ஞ்சைப் பெருவுடையார் கோவிலைக் கட்டிமுடித்த, 'பொன்னியின் செல்வன்' இராஜராஜ சோழர் தன் பேரரசில் தமிழைப் பரப்ப விரும்பியதால், அவரது ஆசான் கருவூர்த்தேவர் அதற்கான திட்டத்தைத் தங்கச்சுருள் அடங்கிய குழலைக் கொடுத்து விளக்கிவிட்டுத் திருக்கயிலைக்குப் பயணிக்கிறார். கருவூராரின் சீடன் சிவாச்சாரியை நண்பனாக ஏற்றுக்கொண்ட இராஜேந்திரன், அவனை அத்திருப்பணிக்கு ஆலோசகனாகப் பரிந்துரைக்கிறான். இராஜராஜரின் புதல்வியும், வேங்கை நாட்டு ராணியுமான குந்தவியின் மகன் இராஜராஜ நரேந்திரன், தமிழைப் பரப்ப அங்கு வந்த நிலவுமொழியிடம் மையல் கொள்கிறான். அவள் அவனை ஏற்காததால், அவனுக்குத் தமிழ் மீதும், தமிழ்த்திருப்பணி ஆலோசகனுமான சிவாச்சாரியின்மீதும் வெறுப்பேற்படுகிறது. இராஜராஜரைச் சிறைப்பிடிக்கச் சிங்களவருடனும், சேரனுடனும் பாண்டியன் அமரபுஜங்கன் திட்டம் தீட்டித் தோல்வியுற்றுச் சிறைப்பட்டு மரிக்கிறான். இராஜேந்திரனின் மகள் அருள்மொழிநங்கை சிவாச்சாரியைக் காதலித்து மணக்கிறாள். தான் பாண்டியருடன் சமாதானமாகப் போகாததுதான் கருவூரார் திடுமெனத் திருக்கயிலைக்குச் சென்ற காரணம் என்றறிந்து இராஜராஜர் மனம் வெதும்பிப் படுத்தபடுக்கையாகிறார். உதகைக்குத் திறை வசூலிக்க இராஜராஜ நரேந்திரனுடன் சென்ற சிவாச்சாரி இளஞ்சேரனிடம் சிறைப்படுகிறான். இராஜேந்திரனின் மகன் இராஜாதிராஜன் போரிட்டு அவனை விடுவிக்கிறான். திரும்பி வந்த சிவாச்சாரியைத் தன் ஆசானென்று எண்ணி மயக்க நிலையிலிருந்த பொன்னியின் செல்வன் இராஜராஜர் இறைவனடி சேர்கிறார்.

மூன்றாம் பாகம்

இராஜேந்திர சோழனின் பேரரசு

முக்கிய இடங்களும், கதாபாத்திரங்களும்

இடங்கள்:

சோழப் பேரரசு: தென்னிந்தியாவில் துங்கபத்திரை நதியிலிருந்து கலிங்கம் (ஒரிசா) வரை வடக்கிலும், குமரி வரை தெற்கிலும், இலங்கையும் அடங்கியது வங்கம். கடாரம் (மலேசியா), ஸ்ரீவிஜயம் (சுமத்ரா) திறை செலுத்தி வந்தன. தலைநகர்: கங்கைகொண்ட சோழபுரம்.

பாண்டிநாடு: வெள்ளாற்றுக்குத் தெற்கிலிருந்து குமரி வரையும், வங்கக் கடலிலிருந்து, மேற்குத் தொடர்ச்சி மலை வரையிலான அரசு; சோழப் பேரரசுக்குக் கட்டுப்பட்டது.
தலைநகர் மதுரை.

சேரநாடு: தற்பொழுதைய கேரளா. சோழப் பேரரசுக்குக் கட்டுப்பட்டது.
தலைநகர் மகோதயபுரம்.

வேங்கை நாடு: வெங்கியைத் தலைநகராகக் கொண்ட கீழைச் சாளுக்கிய நாடு சோழப் பேரரசுக்குக் கட்டுப்பட்டது.

வட இலங்கை: சோழப் பேரரசால் நேரடியாக ஆளப்பட்டது. அனுராதபுரம், பொலனருவை போன்ற நகரங்களை உள்ளடக்கியது.

ரோகணம்: இலங்கைச் சிங்கள மன்னனால் ஆளப்பட்ட தென் இலங்கைப் பகுதி.

கருநாடு: இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டைய கர்நாடக மாநிலம். சோழப் பேரரசுக்குக்
கட்டுப்பட்டது.

அரச பரம்பரைகளும், குலங்களும்!

சோழ அரச பரம்பரை

இராஜேந்திர சோழன்:  சோழப் பேரரசன்.  இயற்பெயர் மதுராந்தகன். பட்டப்பெயர் கோப்பரகேசரி.

திரிபுவன மகாதேவி:  இராஜேந்திரனின் மூத்த மனைவி. பட்டத்து அரசி.

பஞ்சவன் மகாதேவி: இராஜேந்திரனின் இரண்டாம் மனைவி.

வீர மகாதேவி: இராஜேந்திரனின் மூன்றாம் மனைவி.

இராஜாதிராஜன்: இராஜேந்திரன்-திரிபுவன மகாதேவியின் மூத்த மகன்.

இராஜேந்திர தேவன்:  இராஜேந்திரன், திரிபுவன மகாதேவியின் இரண்டாம் மகன்.

மதுராந்தகி:  இராஜேந்திர தேவனின் மகள். இராஜேந்திர நரேந்திரனின் மனைவி.

வீரன் (வீர ராஜேந்திரன்): இராஜேந்திரன், வீர மகாதேவியின் மகன்.

அதிராஜேந்திரன்: வீரராஜேந்திரனின் மகன். விஜயாலய சோழ வம்சத்தின் கடைசி ஆண் மகன்.

அருள்மொழி நங்கை: இராஜேந்திரன்- பஞ்சவன் மகாதேவியின் மகள், சிவசங்கர சிவாச்சாரியின் மனைவி.

அம்மங்கை: இராஜேந்திரன், திரிபுவன மகாதேவியின் மகள், இராஜராஜ நரேந்திரனின் மனைவி.

ஆளவந்தான்: இராஜேந்திரனுக்கும், வேளிர் அரசர் சேதுராயரின் மகளுக்கும் பிறந்தவன்.

கீழைச் சாளுக்கிய அரச பரம்பரை

விமலாதித்தன்: கீழைச் சாளுக்கிய அரசன்.

குந்தவி:  விமலாதித்தனின் பட்டத்து அரசி, இராஜராஜ சோழனின் மகள்.  இராஜேந்திரனின் தங்கை.

இராஜராஜ நரேந்திரன்: விமலாதித்தன், குந்தவியின் மகன்.

இராஜராஜ நரேந்திரன்:  இராஜராஜ நரேந்திரன். அம்மங்கையின் மகன்.  பட்டப் பெயர் முதலாம் குலோத்துங்கன். முதல் சாளுக்கிய சோழன்.

விஜயாதித்தன்: விமலாதித்தனுக்கும், இரண்டாம் மனைவிக்கும் பிறந்த மகன்.

பாண்டிய அரச பரம்பரை

விக்கிரம பாண்டியன்: பாண்டிய மன்னன்.

சேர அரசர்கள்

பாஸ்கர ரவி வர்மன்: வட சேர நாட்டு அரசன்.  மகோதயபுரத்திலிருந்து (திரிச்சூர்) அரசாண்டான்.

பிரம்மராயர்: சிவாச்சாரி குலம்

சிவசங்கர சிவாச்சாரி (பிரம்மராயர்): தமிழ்த் திருப்பணி ஆலோசகர், திருமந்திர ஓலைநாயகம். இராஜேந்திரனின் தலைமைப் படைத்தலைவர்.  பட்டப்பெயர் இராஜேந்திர சோழ பிரம்மராயர். முதல் பகுதியில் வந்த ஈஸ்வரனின் மூதாதை.

சிவாச்சாரியின் முதல் மனைவி: பெயர் கொடுக்கப்படவில்லை.

சிவகாமி: சிவாச்சாரி – அவன் முதல் மனைவியின் மகள்.

மறையன் அருள்மொழி:  சிவாச்சாரி-அருள்மொழி நங்கையின் மகன்.

சிவசுப்பிரமணியன்: சிவகாமியின் மகன்.

வெற்றிமாறன் குலம்

வெற்றி வீரன்:  விக்கிரம பாண்டியனின் முதல் மெய்காப்பாளன்.

காளையப்பன்: திருமாறனின் மகன். விக்கிரம பாண்டியனின் மெய்காப்பாளன்.

முருகேசன்: வெற்றி மாறனின் பேரன். வெற்றிவீரனின் தம்பி. ரோகணத்தில் (தென் இலங்கை) மறைத்து வைக்கப்பட்ட பாண்டியர் பொக்கிஷத்தின் காவலன்.

வள்ளி: சொக்கனின் மனைவி.

சொக்கன்: முருகேசனின் மகன்.

மீனாட்சி: சொக்கனின் மனைவி.

முத்துவீரப்பன்: சொக்கனின் மகன்.

நிலவுமொழி குலம்

நிலவுமொழி: குலத்தலைவி; முதல் பகுதியில் வரும் காமாட்சி, ஏகாம்பரநாதனின் குல முதல்வி.

பொன்னம்பல ஓதுவார்: நிலவுமொழியின் தந்தை.

காடவன்: நிலவுமொழியின் கணவன். வேளிர் இளவரசன்.

நப்பின்னை: காடவன். நிலவுமொழியின் மகள்.

சந்திரை: காடவனின் இரண்டாம் மனைவி.

சேந்தராயன்: நப்பின்னையின் கணவன்.

அழகிய மணவாளினி: நப்பின்னை-சேந்தராயனின் மகள்.  கருணாகரத் தொண்டைமானின் மனைவி.

மணவாள நம்பி:  நப்பின்னை – சேந்தராயனின் மகன்.

சேதுராயர் பரம்பரை

சேதுராயர்: வேளிர் அரசர்.

காடவன்: சேதுராயரின் பேரன். நிலவுமொழியின் கணவன்.

தொண்டைமான் குலம்

ஈராயிரவன் பல்லவராயர்: இராஜராஜ சோழனின் மையப் படைத்தலைவர்.  பல்லவ அரச பரம்பரை.

கருணாகரத் தொண்டைமான்:  ஈராயிரவன் பல்லவராயரின் பேரன்.  பல்லவ இளவரசன்.

வங்க மன்னன் பரம்பரை

மகிபாலன்: வங்க மன்னன்.

மினோத்தி: மகிபாலனின் மகள்.

பண்டைய நகர்களின் பெயர்கள்

திருமயிலை: மயிலாப்பூர், சென்னையின் ஒரு பகுதி.

தில்லை: சிதம்பரம்.

நெல்லை: திருநெல்வேலி.

பொன்னமராவதி: வட பாண்டிநாட்டின் தலைநகர். தற்பொழுது ஒரு சிற்றூராக உள்ளது.

பழையாறை: சோழர்களின் பழைய தலைநகரம். இப்பொழுது ஒரு சிற்றூராக உள்ளது.

கங்கைகொண்ட சோழபுரம்: சோழப் பேரரசின் தலைநகர். தற்பொழுது ஒரு சிற்றூராக இருக்கிறது.

இராஜமகேந்திரபுரம்: வேங்கை நாட்டின் புதிய தலைநகர்.  தற்பொழுதைய ராஜமுந்திரி, ஆந்திரா.

விக்கிரம சிம்மபுரி: நெல்லூர், ஆந்திரா.

***

இடைச்செருகல் 2

ஈஸ்வரனின் வீடு

தாது, தை 1 – ஜனவரி 15, 2416

"லட்சியம் நிறைவேறிச்சா? ராஜராஜர் செத்துப் போனதுக்கப்பறம் என்ன ஆச்சு? ராஜராஜருக்கு அப்புறம் ராஜேந்திர மகாராஜா தொடர்ந்து திருப்பணி வேலை பார்த்தாரா?  பாண்டியர்கள் தொடர்ந்து கஷ்டப்படுத்தினாங்களா? இல்லை கஷ்டப்பட்டாங்களா?" என்று கேள்வி மேல் கேள்வியாகத் தொடுக்கிறான் ஏகாம்பரநாதன்.

"பழையகாலத் தமிழர்களுக்கு இவ்வளவு பெரிய ராஜ்ஜியம் இருந்துச்சா? அவங்களை யாரும் கட்டி ஆளலயா? அப்புறம் எப்படி நம்ம மாதிரி எடுபிடி ஆனாங்க?" கேள்வி பிறக்கிறது, அழகேசனிடமிருந்து. "பெரிசா ராசாங்கம் பண்ணின நாமா இப்படி அடிமையா ஆயிட்டோம்?" அவனது குரலில் வியப்பும், நம்பிக்கை இன்மையும், பச்சாத்தாபமும் கலந்திருக்கிறது.

"நிலவுமொழி என்ன ஆனா? தன்னோட பொண்ணு மாதிரி பாத்துக்கறேன்னு ராஜேந்திர மகாராஜா சொன்னாரே? அவளை நல்லபடியா ஆக்கறேன்னு சிவாச்சாரியரும் அவ அப்பாவுக்கு வாக்கு கொடுத்திருந்தாரே? அதெல்லாம் என்ன ஆச்சு?" ஆவலும், கவலையும் தோய்ந்திருக்கிறது காமாட்சியின் குரலில்.

"இவ்வளவு பவர்ஃபுல்லா, சக்தியோடவா அந்தக் காலத்து தமிழ் ராஜாக்கள் இருந்தாங்க? பின்ன எப்படி இங்கே தமிழ்ராஜாக்களே இல்லாம போனாங்க?" நிமிஷா கேட்கிறாள்.

"நிமிசா?" காமாட்சி அவள் பக்கம் திரும்பிப் பேச ஆரம்பிக்கிறாள்.

நிமிசாம்மா என்று கூப்பிடுவதை அவள் நிறுத்தி நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டிருக்கிறது. தங்களுடன் சேர்ந்து அவள் ஒன்றாக வாழ ஆரம்பித்ததிலிருந்து நிமிஷாவைத் தன் தங்கையாகவே கருதி வருகிறாள்.  நிலவுமொழியின் வழித்தோன்றலான அவள் நிமிஷாவுக்குத் தமிழ்பேச மட்டுமல்லாது, எழுதவும் கற்றுக்கொடுத்திருக்கிறாள்.

"நிமிசா, நீதான், பள்ளிக்கூடத்தில் சரித்திரப் பாடம் படிச்சியே, அதுல இதப்பத்தி ஒண்ணும் சொல்லலியா?" என்று கேட்கிறாள்.

"காமாச்சி அக்கா, பாரதத்தின் பழைய சரித்திரம் படிச்சவங்களுக்கு அது தெரியுமோ என்னவோ, எங்களுக்கு அதைப் பத்தி எதுவும் சொல்லித் தரலை. பொது ஆண்டு 2200லேந்துதான் சரித்திரம் சொல்லிக் கொடுத்தாங்க. பாரதம் எப்படி ஒரு பெரிய வல்லரசாச்சு, சீனாவும் பாரதமும் எப்படி ஒண்ணா உழைச்சது அப்படீன்னுதான் படிச்சேன். மத்தப்படி யாருக்கு என்ன தெரியும்?" உதட்டைப் பிதுக்குகிறாள் நிமிஷா.

"நிமிஷா சொல்றதுதான் உண்மையா இருக்கணும், காமாட்சி!  நாம எடுபிடியாவே வளர்க்கப் பட்டோம்.  நம்ம அப்பா, அம்மா தமிழ் கற்றுத் தராவிட்டால் எழுதப் படிக்கக்கூடத் தெரியாத தற்குறியாத்தான் வளர்ந்திருப்போம். ஒரு அதிசயம் பாத்தியா!  நீ, நான், அளகேசன் மூணு பேரும் மூணு இடத்துலேருந்து வந்திருந்தாலும், நம்ம மூணு போரோட பெற்றோரும் நமக்கு தமிழ் எழுதப்படிக்கச் சொல்லிக் கொடுத்திருக்காங்களே! அதை நினைச்சுப் பாத்தா என்னால நம்பவே முடியலை!"  ஈஸ்வரனின் குரலில் வியப்பு இருக்கிறது.

"ஆமாம் ஈஸ்வரா, எனக்கும் அப்படித்தான் இருக்கு.  ஏதோ முக்கியமான விசயத்துக்காகத்தான் நாம ஒண்ணு சேந்திருக்கோம்னு நினக்கறேன்" என்கிறான் அழகேசன். வழக்கப்படி மீசையை அவனது கை நீவிவிடுகிறது.

"அது போகட்டும். எங்கோ பெங்கால்லேந்து எங்க தாத்தா பாட்டி தக்கண் கண்ட்டுக்கு என் அம்மாவோட வந்தாங்களாம். எங்கம்மாவும் உங்கள் மாதிரி இருக்கற எல்லாரையும் எங்களுக்கு வேலை செய்யறதுக்காவே பொறந்தவங்க அப்படீன்னு நிறையத் தடவை சொல்லி வளத்திருந்தாங்க. நான் ஒங்களோட சேந்து இருப்பேன், தமிழ் பேசறவரைக் கல்யாணம் செய்துப்பேன், இப்படி ஒங்ககூட தமிழிலே பேசிக்கிட்டு இருப்பேன்னு ஆறு வருஷம் முன்னாலவரை நினச்சுக்கூட பாத்திருக்க மாட்டேன்.  ஏதோ விதிதான் நம்ம எல்லாரையும் சேத்து வச்சிருக்குன்னு நினைக்கறேன்" என்று அவர்களுடைய உரையாடலில் கலந்துகொள்கிறாள் நிமிஷா.

அவள் சொல்வதில் இருந்த பழைய உண்மை கசப்பான ஒன்றாக இருந்தாலும், அவள் மனதில் அப்பொழுது தான் உயர்மட்டத்தைச் சேர்ந்தவள், அவர்கள் கீழ்மட்டத்தில் இருந்தவர்கள் என்ற நினைப்பு அணுவளவும் இல்லை என்றும், அவள் அவர்களில் ஒருவராகவே ஆகிவிட்டாள் என்றும் அவர்களுக்கு நன்றாகவே தெரிந்ததால் யாரும் அவள் பேச்சைத் தவறாகவே கருதவில்லை.

"நீ சொல்றது உண்மைதான் நிமிசாக்கா.  உன்ன மாதிரி எனக்கு இன்னொரு அக்கா, ஈஸ்வரன் மாதிரி ஒரு அண்ணா, அழகேசன் மாதிரி ஒரு பெரியண்ணா கிடைப்பாங்கன்னு நானும் நினைக்கவே இல்லை" என்று குதூகலத்துடன் கூறுகிறான், ஏகாம்பரநாதன். அவனுக்கு எல்லாமே மிகவும் மகிழ்வாகத்தான் இருக்கிறது.

ஈஸ்வரனின் கழுத்தில் தொங்கிய சங்கிலியை உற்றுக் கவனித்த ஏகாம்பரநாதன் திடுமென்று, "ஈஸ்வரண்ணா, உங்க கழுத்தில தொங்கற சங்கிலியை நான் பார்க்கலாமா?" என்று கேட்கிறான்.

இதென்ன திடுமென்று கேட்கிறான் என்று நினைத்த ஈஸ்வரன், சங்கிலியைக் கழட்டி ஏகாம்பரநாதனிடம் கொடுக்கிறான்.

சங்கிலியில் தொங்கும் பதக்கத்தை தடவித் தடவி உற்றுப் பார்க்கிறான், ஏகாம்பரநாதன்.  தாவும் புலி, மீன், வில்-அம்புடன் சில எழுத்துக்கள் காணப்படுகின்றன.

"ஈஸ்வரண்ணா, இதில் ஏதோ எழுத்துக்கள் இருக்கு. ஆனா, அதையெல்லாம் அழுக்கு மாதிரி ஏதோ மறைச்சுக்கிட்டிருக்கே?" என்று சங்கிலியை அவனிடமே திருப்பிக்கொடுக்கிறான்.

"இது பரம்பரைச் சொத்து.  நானும் அந்த எழுத்தை மறைச்சுக்கிட்டிருக்கிற அழுக்கை நீக்க எதெதெல்லாமோ போட்டுத் தேச்சுப் பார்த்தேன், முடியலை" என்று பதில் சொல்கிறான் ஈஸ்வரன்.

அவனிடமிருந்து சங்கிலியை வாங்கிப் பார்த்த அழகேசன், "புலி, மீன், வில்-அம்பு இந்த மூணும் எதைக் காட்டுது?" என்று எல்லோரும் கேட்கும்படி தனக்குத்தானே கேட்டுக்கொள்கிறான்.

அழக்கேசனின் வலதுபுயத்தில் கட்டப்பட்டிருக்கும் பெரிய வெள்ளித் தாயத்து கறுப்புக் கயிற்றால் கட்டப்பட்டிருப்பதைப் உற்றுப்பார்த்த ஏகாம்பரநாதனிடமிருந்து, "அழகேசண்ணா, உங்க வலது புஜத்திலே ஏதோ கட்டியிருக்கீங்களே, அது என்ன?" என்ற கேள்வி பிறக்கிறது.

அதைத் தடவிக்கொண்ட அழகேசன், "ஏகாம்பரம், இதுவும் ஈஸ்வரனோட சங்கிலி மாதிரி எங்க பரம்பரைச் சொத்துதான். எங்க பாட்டன், முப்பாட்டன் கட்டிக்கிட்டிருந்த தாயத்து இது. மூத்த பசங்களுக்கு இது வருமாம். எங்க அப்பா படுத்தபடுக்கையாய் இருக்கறபோது இதைக் கழட்டி, என்கிட்ட கொடுத்து, 'அழகு, இதைக் கட்டிக்க.  இது எப்பவும் உன் புஜத்துலே இருக்கணும்.  உங்காலம் முடியறப்போ உன் மூத்த பையனுக்குக் கொடு' அப்படீன்னு சொல்லிட்டுப் போய்ச் சேந்தாரு" என்று பதில் சொல்கிறான்.

அவனருகில் சென்று அந்தத் தாயத்தை உற்றுப்பார்க்கிறான் ஏகாம்பரநாதன்.  ஒரு மீனும், அதற்குக் கீழே இரண்டு வாள்கள் குறுக்காகவும் புடைப்புப் படமாக வடிக்கப்பட்டுள்ளன. 

"அழகண்ணா, இந்த மீனுக்கும், கத்திகளுக்கும் என்னண்ணா அர்த்தம்?" என்று கேட்கிறான்.  

உதட்டைப் பிதுக்குகிறான் அழகேசன்.

"ஒரு ஒத்துமை பார்த்தீங்களா? நீங்க ரெண்டு பேரும் போட்டுக்கிட்டு இருக்கறதுல்ல பொதுவா மீன் இருக்கு பாத்தீங்களா?" என்று ஏகாம்பரநாதன் அவர்களைப் பார்த்துச் சொல்கிறான்… இல்லை, வினவுகிறான்.

இருவருக்கும் மூளையில் ஏதோ பளிச்சிடுகிறது.  இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர்.

ஜன்னல் வழியாக காலைக் கதிர்கள் அவர்கள் மேல் அடிக்க ஆரம்பிக்கிறது. அனைவரின் கண்களும் இரவு முழுவதும் விழித்திருந்ததால் சிவந்து போயிருக்கின்றன. அதிலும் ஈஸ்வரனின் கண்கள் கொவ்வைப் பழமாகச் சிவந்திருக்கின்றன.

"இன்னுமா நீங்கள் தூங்கலை?  விடிய ஆரம்பிச்சுட்டுதே!  இரவு முழுக்க என்ன செஞ்சீங்க?!" என்று கேட்டபடி அங்கு வருகிறார் ஈஸ்வரனின் தந்தை சங்கரன்.

"கங்கைகொண்ட சோழபுரத்துக் கோவில் குழல்ல இருந்த சுருளைப் படிச்சுக்கிட்டே இருந்ததுலே பொழுது போயிட்டது அப்பா!" என்று பதில் சொல்கிறான் ஈஸ்வரன்.

"முழுசையும் படிச்சு முடிச்சுட்டீங்களா?" என்று அவர் கேட்கவே, "இல்லையப்பா, இன்னும் நிறைய இருக்கு.  நம்ம தமிழ்நாட்டை அரசாண்ட ராஜராஜசோழச் சக்ரவர்த்தியைப் பத்தியும், அவர் ஆரம்பிச்சுவச்ச தமிழ்த்திருப்பணியைப் பத்தியும் அதிலே எழுதியிருந்தது. அவர் காலம் முடியற வரைக்கும் எழுதியிருந்ததைப் படிக்கவே ஒரு ராத்திரி ஆயிட்டது அப்பா!" என்று பதில்சொல்கிறான் ஈஸ்வரன்.

"அப்படியா!  போய் பல்லை விளக்கிட்டு வாங்க.  மத்த வேலையைக் கவனிக்கலாம்.  வயல் வேலை நிறையக் காத்துக்கிடக்கு. ராவு முழுக்க கண் முழிச்சா எப்படி வேலை செய்யறது?" என்று செல்லமாகக் கடிந்துகொள்கிறார். அனைவரும் மெல்லக் கலைந்து தத்தம் வேலையைக் கவனிக்கச் செல்கிறார்கள்.

சங்கரன் மனதில் ஏதேதோ எண்ணங்கள் படர்கின்றன.

ஈஸ்வரன் இரவு முழுவதும் படித்ததை அவரும் படுத்தவாறு கேட்டுக்கொண்டுதான் இருந்திருக்கிறார். அவர்கள் கையில் இப்படிப்பட்ட ஒரு பொக்கிஷம் கிடைத்திருப்பது ஏதோ ஒரு முக்கியமான விஷயத்திற்குத்தான் என்று உள்மனம் சொல்கிறது. எத்தனையோ நாட்கள் தங்கள் நிலை இப்படி ஆனது ஏன் என்று மனதிற்குள் அழுதிருக்கிறார். அதற்கு விடை இச்சுருளில் இருக்கக்கூடும் என்று மனதில் படுகிறது.

தமிழைக் கற்றுக்கொள்ள வேண்டும், அதிலும் முக்கியமாகக் கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்களையும் மறக்கக்கூடாது என்று அவரது தந்தை அவருக்குக் கற்றுக்கொடுத்ததும், அதைத் தான் ஈஸ்வரனுக்குக் கற்றுக கொடுத்ததும், இந்தச் சுருளில் உள்ளதைத் தெரிந்துகொள்ளத்தானோ என்றும் படுகிறது. தமிழ் அறிவு உள்ள மூன்று குடும்பத்தினர் ஒன்று சேர்ந்ததும் தமிழ் இனத்திற்கு விடிவைக் கொண்டு வருவதற்காகவோ என்றும் நினைத்துப் பார்க்கிறார். ஆனால், தமிழே தெரியாத ஒரு பெண் தனக்கு மருமகளாக வந்து தமிழறிவு பெற்றதை நினைத்துப் பார்த்தால் அவருக்கு மலைப்பாக இருக்கிறது. ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் கனவில்கூட அவரால் கற்பனைசெய்து பார்க்க இயலாத ஒன்று, ஈஸ்வரன்-நிமிஷாவின் திருமணம்.

"ஈஸ்வரா, காப்பாற்று!" என்று சிவபெருமானை மனதில் துதித்தவாறு வயலை நோக்கி நடக்கிறார் சங்கரன்.

அன்றைய வேலைகளை முடித்துக்கொண்டு இரவு உணவை உண்ட பின் தங்கச்சுருள் உள்ள உருளையைக் கையில் எடுக்கிறான் ஈஸ்வரன். அவனைத் தடுத்த சங்கரன், "ஈஸ்வரா, நேத்திக்குத்தான் நீங்க யாரும் தூங்கவே இல்லை. ரெண்டு நாள் வயல் வேலை முடியட்டும்.  ராத்திரி முழுக்க கண் முழிக்காம, பகல்லே படியுங்க!" என்று சொல்கிறார்.  அனைவரும் ஒப்புக் கொள்கிறார்கள்.

***

(தொடரும்)

Other Articles

No stories found.