பொன்னியின் செல்வனின் தமிழ்க் கனவு – முதல் பாகம்  – அத்தியாயம் 2

பொன்னியின் செல்வனின் தமிழ்க் கனவு – முதல் பாகம் – அத்தியாயம் 2

ஒரு அரிசோனன்

ஹோட்டல் சாம்ராட் ராஜ்ராஜ், தஞ்ஜு

பிரபஜாற்பத்தி, ஆனி 24 – ஜூலை 10, 2411

ஆறு நாட்களுக்கு மேல் தங்க வைத்துவிடுகிறது. இரண்டு நாள்களில் திரும்பி வந்து விடுவதாகச் சொன்ன ஷிஃபாலியை, அவளுடைய வேலை. எனவே, காமாட்சியையும், அவள் தம்பியையும் தன் வீட்டிலேயே நிமிஷாவுக்குத் துணையாக இருக்கும்படி ஷிஃபாலி கட்டாயப்படுத்துகிறாள்.

ஏகாம்பரநாதன் உடல்நிலை தேறிவருவதற்கு ஷிஃபாலியின் வீட்டில் தங்கியிருப்பது உதவியாக இருக்கும் என்பதால் அதற்குக் காமாட்சி ஒத்துக்கொள்கிறாள். நிமிஷாவின் உதவியுடன் தனது பெற்றோருக்கு தகவல் கொடுக்கிறாள். பெரிய இடத்தில் வசதியாகத் தங்கியிருக்கட்டும் என்று அவள் பெற்றோர்களும் சம்மதித்துவிடுகின்றனர்.

"மிஸ்டர் லீ, இந்தத் திட்டத்தில் கொஞ்சம் ப்ராப்ளம் இருக்கு. நாம் எதிர்பார்க்கும் முடிவுகள் கிடைப்பது கஷ்டம்!" என்று தன்னம்பிக்கையுடனும், தன்னால் இப்படி ஒரு பிரச்சினையைக் கண்டுபிடிக்க முடிந்தது என்ற கர்வத்துடனும் சொல்கிறாள், ஷிஃபாலி.

கம்பெனியின் பாரதக் குழுவுக்கு இந்த இளம்வயதிலேயே தலைவியாகிவிட்டாளே, கர்வம் இல்லாமலா இருக்கும்?

"மிஸ் ஷிஃப்ஸ், ஏன் இப்படிச் சொல்றீங்க?" என்று கேட்டதும், மிகவும் உற்சாகத்துடன் விளக்கம் கொடுக்க ஆரம்பிக்கிறாள்.

லீ அவளது அறிவுத் திறனை வியப்பாகக் கவனிக்கிறார். அரைமணி நேர விளக்கத்திற்குப் பிறகு அளது முடிவை ஏற்றுக்கொள்கிறார். "மிஸ் ஷிப்ஸ். எக்ஸலன்ட்! எக்ஸலன்ட்! உங்கள் ஐடியா நூத்துக்கு நூறு கரெக்ட். இந்த ப்ராப்ளத்தை எப்படி ரெக்டிஃபை செய்யலாம் என்று சொல்கிறீர்கள்?"

ஷிஃபாலி வானத்தில் மிதக்க ஆரம்பிக்கிறாள். லீ தன்னைப் பற்றி உயர்வாக நினைக்கிறார் என்பது அவளுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.  இது பதவி உயர்வுக்கு வழி வகுக்குமே!

"மிஸ்டர் லீ! நான் சொல்லும் மாற்றங்களைச் செய்தால் திட்டம் இரண்டு மாதம் முன்னதாகவே முடிந்து விடும். திட்டச் செலவும் பத்து பர்ஸண்ட் குறையும். அதுமட்டுமல்ல, இரண்டு மாதங்கள் முன்னால் நமது பொருள் மார்க்கெட்டுக்கு வருவதால் நமது கம்பெனிக்கு அதிக லாபமும் கிடைக்கும். ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிப்பது மாதிரி.." என்று ஆரம்பிக்கிறாள்.

மதிய உணவையும் சாப்பிட்டவாறு கூட்டம் தொடர்கிறது. கூட்டம் முடியும்பொழுது மாலை ஆறு மணி ஆகிவிடுகிறது. இருதரப்பாருக்குமே மிகவும் நிறைவான வகையில் முடிவுகள் எடுக்கப்பட்டதனால் அங்கு மகிழ்ச்சி நிலவுகிறது.

"மிஸ் ஷிப்ஸ். இந்த நல்ல முடிவை நான் மிகவும் வரவேற்கிறேன். ஐ ஆம் வெரி எக்ஸைடட். இந்த அக்கேஷனை நன்றாகக் கொண்டாடணும். என்ன செய்யலாம்? நீங்களே சூஸ் செய்யுங்கள். மிகவும் பெரிய முறையில் கொண்டாடலாம்."

மகிழ்ச்சி கலந்த உற்சாகத்தால், ஷிஃபாலியின் கைகளைப் பிடித்துக் குலுக்கிச் சேர்த்து அணைத்துக்கொள்கிறார். அந்த அணைப்பில் ஷிஃபாலி தன் தந்தையைக் காண்கிறாள்.

சிறிது நேரம் யோசித்துவிட்டு, "மிஸ்டர் லீ, தஞ்ஜூவில் மிகவும் பிரசித்தியானது பெரியகோவில். ஆயிரத்துநானூறு வருஷங்களுக்கு முன்னால் கட்டப்பட்டது. அதுதான் இங்கே பெரிய டூரிஸ்ட் ஸ்பாட். நைட்-லைட் அரேஞ்ச்மேன்ட்ஸ் ரொம்ப நல்லா இருக்கும். ட்ரெடிஷனல் டான்ஸ், மீல்ஸ் எல்லாம் உங்களுக்கு வித்தியாசமான அனுபவமாக ஃபீல் பண்ணுவீர்கள். எல்லோருமே போய் என்ஜாய் செய்துவிட்டு வரலாமே!" என்று சிபாரிசு செய்கிறாள்.

"மை டியர் ஷிப்ஸ், அப்படியே செய்யலாம்!" என்கிறார் லீ.

இருபத்தைந்து பேர் அடங்கிய குழு உல்லாசத்துடன் அந்த முப்பத்தைந்து மாடிக் கட்டிடத்தை விட்டுக் கிளம்புகிறது.

*          *          *

பெரியகோவில், தஞ்ஜு

பிரஜோற்பத்தி, ஆனி 24 – ஜூலை 10, 2411

தஞ்சைப் பெரியகோவில் திருவிழாக்கோலம் கொண்டிருக்கிறது. கட்டிமுடித்த ஆயிரத்திநானூறு ஆண்டுகளில் கோவில், பெரிய நந்தி, நுழைவாயில்கள், மதில்கள் இவற்றில் மாற்றம் எதுவும் இல்லாமல் இருந்தாலும், அதன் சுற்றுப்புரம் மிகவும் மாறிவிட்டிருக்கிறது.

உள்ளே பெரிய அரங்கம் கட்டப்பட்டிருப்பது தெரிகிறது. விளக்குகள் கோவில் கோபுரத்தில் பலவித வண்ணங்களை மாறிமாறி வீசிக்கொண்டிருக்கின்றன. கண்ணைக் கவரும் அலங்காரத்துடன், அழகிய பெண்களின் நடனம் நடக்கிறது. ஆங்காங்கு மேஜை, நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. அதில் பரிமாறப்படும் உணவின் பசியூட்டும் மணம் நாசியைத் துளைக்கிறது. அந்த மணம், ஏற்கனவே நிறையச் சாப்பிட்டு வந்தவர்களுக்கும் உண்ணவேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுகிறது. உள்ளே நுழைவதிலிருந்து வெளியே வரும்வரை மின்நடைகள் போடப்பட்டு அவற்றில் நாற்காலிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

உள்ளே நுழையும்போதே, அனைவருக்கும் விளக்கம் கேட்க வசதியாக இருக்கவேண்டி காதுக்கருவிகள் கொடுக்கப்படுகின்றன. மின்நடையில் ஏறி அமர்ந்துகொண்டவுடன் நாற்காலிகள் மெல்ல நகர்ந்துசெல்கின்றன.

ஓர் இனிய பெண்குரல், "அன்பர்களே! தஞ்ஜூப் பெரியகோவிலுக்கு உங்கள் அனைவரையும் சுற்றுலாக் குழு வரவேற்கிறது. இந்தக் கோவில் ராஜ்ராஜ் சோழச் சக்கரவர்த்தியால் பொது ஆண்டு ஆயிரத்துப் பத்தில் கட்டப்பட்டது. இங்கு இருக்கும் சிவலிங்கம் மிகவும் பெரியது. இந்தக் கோவிலின் உச்சியில் இருக்கும் கலசக் கல்லை பதினாறு கிலோமீட்டர் தூரம் சாய்தளம் அமைத்து மேலேகொண்டு சென்றார்கள், அக்காலத்து மக்கள்…" என்று வர்ணித்துக்கோண்டே போகிறது.

"முன்பு ஐந்துகால பூசைகள் நடந்து கொண்டிருந்தன. அர்ச்சகர்களை யாரும் திருமணம் செய்துகொள்ள முன்வராத காரணத்தாலும், மக்களிடையே அவர்களுக்கு மதிப்புக் குறைந்து போனதாலும், இருபத்தொன்றாம் நூற்றாண்டுக் கடைசியில் அர்ச்சகருக்கான கல்வியைக் கற்க முன்வருபவர் மிகவும் குறைந்தனர். கடந்த இருநூற்றைம்பது ஆண்டுகளாக அர்ச்சகர்கள் இல்லாது போய்விட்டதால், கோவில்களில் ஆகமமுறைப்படியான பூசைகள் நின்றுவிட்டன. இதனால் தற்பொழுது புராதன வழிபாடுகளும் விழாக்களும் நடப்பதில்லை.

"எனவே, எல்லாக் கோவில்களிலும் தெய்வச் சிலைகளை நன்கு துடைத்துப் பராமரிக்க ஆட்கள் ஏற்பாடு செய்யப்பட்டனர். முப்பரிமாண அலை வரிசைகள், ஹோலோகிராம் டிரான்ஸ்மிஷன் இவைகளின் முன்னேற்றத்தால், வீட்டில் இருந்தபடியே எந்தக் கோவிலில் இருக்கும் கடவுளரையும் வணங்கவும், பூசைசெய்யவும் வசதியாகிவிட்டது. இதனால் கோவில்களுக்கு வழிபாட்டாளர்கள் வருவதும் குறைந்து நின்றும் போய்விட்டது. இதே நிலைமைதான் மற்றசமய வணங்குமிடங்களான மசூதிகளுக்கும், தேவலாயங்களுக்கும் ஏற்பட்டது. இதனால்தான் இவை எல்லாம் சுற்றுலா மையங்களாக மாற்றப்பட்டுவிட்டன.

"கோவிலில் இருக்கும் கல்வெட்டுகள் தமிழ் என்ற ஒரு மொழியில் வடிவமைக்கப்பட்டவை. இப்பொழுது இவற்றின் மொழிபெயர்ப்புகள் இணைய நூலகங்களில் இருப்பதால், அனைவரும் படித்துத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

"கோவில்கள், மற்றசமய வழிபாட்டுத் தலங்கள் சுற்றுலாத்தலங்களாக மாற்றப்பட்டாலும் அவைகளின் பழம்பெருமைகளை உணர்த்தும்படியாகவே சுற்றுலா நிகழ்ச்சிகள் இருக்கும் என்று மிகமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். நிகழ்ச்சிகளை நிதானமாக அனுபவித்து மகிழுங்கள்!" என்று அந்தப் பெண்குரல் வரவேற்புரையை முடிக்கிறது.

நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கின்றன. ஷிஃபாலியுடன் வந்த குழுவினர் நிகழ்ச்சிகளை நன்றாக அனுபவித்து மகிழ்கின்றனர். ஷிஃபாலிக்கு ஒரே பெருமை. தன் மதிப்பு வேலை விஷயத்தில் மட்டுமல்லாமல், மனித உறவு விஷயத்திலும் கூடுகிறது என்பதால் அவளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது.

இதை உறுதி படுத்துவதுபோல இருக்கிறது, லீ சொல்லிய ஒரு விஷயம்.

"மிஸ் ஷிப்ஸ், இந்த திட்டத்திற்கு திறமையாக வழிகாட்ட நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சியைப் பாராட்டவே இந்தக் கம்பெனி ஒரு முடிவு எடுத்திருக்கிறது…" என்ற பீடிகையுடன் ஆரம்பிக்கிறார், லீ.

ஷிஃபாலி ஆவலுடன் காதுகளைக் கூர்மையாக்கிக்கொள்கிறாள்.

"இந்த திட்டத்திற்கு உங்களைத் தலைவியாக நியமிப்பது என்று தீர்மானம் எடுத்திருக்கிறோம். நீங்கள் இதை மறுக்கக்கூடாது, ஓகே?" என்று கட்டைவிரலை உயர்த்துகிறார்.

ஷிஃபாலி மகிழ்ச்சியால் திக்கு முக்காடுகிறாள். இப்படிப்பட்ட பதவி உயர்வை அவள் எதிர்பார்க்கவே இல்லை.

நன்றி பெருக்கெடுத்தோடும் குரலில், "ஷ்யூர் மிஸ்டர் லீ. உங்களை நான் மிகவும் பெருமைப்படச் செய்வேன். இத திட்டத்தின் தலைவியாக எனக்குக் கொடுக்கப்பட்ட மாபெரும் பொறுப்பைக் கனகச்சிதமாக நிறைவேற்றுவேன்!" என்று தன் கட்டைவிரலையும் உயர்த்திப் பதில் சைகை செய்கிறாள்.

ஆனால் அவர் அடுத்தபடி சொன்ன விஷயம்தான் அவள் மகிழ்ச்சியை ஊசி குத்தப்பட்ட பலூனினுள்ளே இருக்கும் காற்றைப்போல அவளுள்ளிலிருந்து வெளியேறிவிடுகிறது.

* * *

அங்கு நடக்கும் கோலாகலங்களுக்காக 'எடுபிடி' வேலை செய்துகொண்டிருக்கும் ஈஸ்வரன், அமைதியாகச் சாப்பாட்டுத் தட்டுகளைக் கழுவுவதற்காக அடுக்கிவைத்துக் கொண்டிருக்கிறான். தஞ்சைப் பெரியகோவிலில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களையும் சுற்றுலா நிகழ்ச்சிகளையும் பார்க்கப் பார்க்க அவனுக்கு நெஞ்சில் உணர்ச்சி பொங்கிப்பொங்கி அடைக்கிறது. தக்கண்கண்டில் தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த ஒரு சிலரில் அவனும் ஒருவன்.

தமிழ் கல்வெட்டுகள் நிறைந்த சுவரில் சிறப்புக் காறைப்பூச்சுப் பூசி, அதன்மீது பலவண்ணக் கலவைகளால் ஓவியங்கள் வரையப்பட்டபோது அவனுக்குத் தன் உடலின் மீதே யாரோ காறைப் பூச்சுப் பூசியதுபோல மூச்சுத் திணறியது. தமிழைக் கொல்வதற்கென்றே உயிருடன் சமாதிகட்டி, அவளைப் பிற்காலத்தில் யாரும் அறிந்துகொள்ளக்கூட முடியாது செய்கிறார்களே என்று அவன் துடித்ததை யாரும் புரிந்துகொள்ளவில்லை.

பிற்காலத்தில் மறந்துகூட தமிழ் உயிர்பெற்று வரக்கூடாது என்பதற்காகத்தான் உயர்மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு அவ்வாறு செய்யப்படுகிறது என்பதை அறிந்துகொள்ள அவனுக்கு வாய்ப்பு இல்லைதான்.

தட்டுத் தடுமாறித் தானாகவே இந்தி கற்றுக்கொண்ட அவன், அந்த முடிவுக்கு எதிராக பெரியகோவில் சுற்றுலா மட்டத்துத் தலைவருடன் பேச அனுமதிபெற்றதை நினைவு கூர்கிறான். . .

. . . அவனுக்கு இந்தி பேசத் தெரியும் என்பதே சுற்றுலாத் தலைவருக்கு மிகவும் வியப்பாக இருந்தது. இந்தி பேசத்தெரிந்த எடுபிடி என்பதால் இரக்கத்துடன் அவனைக் காண அனுமதி தந்தார். ஆனாலும் அவன் வந்த காரணம் தெரிந்ததும் அவருக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்தது.

"ஈஸ்வ், நீ நல்ல உழைப்பாளி என்பதால்தான் உனக்கு ஐந்து ஆண்டுகளில் மூன்று பதவி உயர்வுகள் தந்து, கடைநிலை எடுபிடியாய் இருந்த உன்னை சூப்பர்வைஸர் ஆக்கி இருக்கிறோம்." அவனுடைய ஆவணங்களை தன் ஒளி ஈர்ப்புக் கண்ணாடி மூலம் பார்த்துக் கொண்டே பேசினார் .

"நீ நாட்டுமொழியான இந்தியைத் தானாகவே கற்றுகொண்டுவிட்டாய் என்பது உன்னை எடுபிடி நிலையிலிருந்து உயர்த்திவிடும் என்பதையும் சொல்லவிரும்புகிறேன். நீ நினைத்தால், உன் பழைய பழக்கவழக்கங்களை விட்டுவிட்டுப் பாரத முன்னேற்றப் பிரதிக்ஞையில் கையெழுத்திட்டால், நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு முன்னேறலாம். அதை விட்டுவிட்டு, செத்தமொழியான தமிளுக்கு வால்பிடிப்பதை நாங்கள் நல்லபடியாய் எடுத்துக்கொள்ள முடியாது!" பெரிதாக இரைந்தார், சுற்றுலாக்குழு முனைவர்.

"ஐயா, ஸம்ஸ்கிருதம் செத்தமொழிதானே! இருந்தபோதிலும் அது உயர்மட்டத்தில் வைக்கப்படவில்லையா? அதைப்பற்றி ஆராய்ச்சிகள் இன்றும் செய்யப்பட்டு வருகின்றன! அந்த அளவுக்காவது இல்லாவிட்டாலும் தமிழை அடையாளம் தெரியாமல் அழிக்கவேண்டாமே! தமிழ்க் கல்வெட்டுகள்மீது காறையைப் பூசவேண்டாமே!" கெஞ்சினான் ஈஸ்வரன்.

இதைக் கேட்ட சுற்றுலாக்குழுத் தலைவர் தீயை மிதித்தவர் மாதிரி அலறினார்.

"முட்டாள்! திருட்டுப் பயலே! தேவமொழியான, வேதமொழியான ஸம்ஸ்கிருதத்தை செத்தமொழி என்று சொல்ல உனக்கு எத்தனை துணிச்சல்? அதுவும் தமிளும் ஒன்றா? பாரதம் முழுவதும் இன்றும் உயர்வாகப் போற்றப்படுகிறது, ஸம்ஸ்கிருதம். பணம் வருகிறதே என்று அடகு வைக்கப்பட்டு, பேச்சைக்கூடக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது, உன் தமிள்!

"பாரதத்தின் பெருமைகள் மறைந்து போய்விடக்கூடாதே என்றுபோனால் போகட்டும் என்றுகோவில் கல்வெட்டுகளைப் படம் எடுத்து, அதற்கு மொழிபெயர்ப்பும் செய்து கணிணி மையத்தில் ஏற்றிவைத்திருக்கிறோம். நீ தேவைக்கும் அதிகமாகவே தெரிந்து வைத்திருக்கிறாய். ஒரு எடுபிடி நாய்க்கு இவ்வளவு சலுகை கொடுத்துப் பேசியதே என் தப்பு.

"ஸம்ஸ்கிருதத்தை அவமதித்ததற்காக நான் உன்னைப் பதவி இறக்கம் செய்து மீண்டும் கடைநிலை ஊழியன் ஆக்குகிறேன். இருப்பதிலேயே கீழ்த்தரமான எடுபிடி வேலைதான் நீ செய்யவேண்டும். வெளியே போ." தன் இருக்கையில் இருந்து எழுந்து வந்து அவன் கன்னங்களில் மாறிமாறி அறைந்து விட்டார்.

இந்தச் சத்தத்தைக் கேட்ட அவரது உதவியாளர் உள்ளே ஓடிவந்தாள்.

"இந்த நாயைப் பதவி இறக்கம் செய்துவிட்டேன். இனி இவன் எச்சில்தட்டு கழுவும் வேலைதான் செய்யவேண்டும். வாழ்நாளுக்கும் இனி இவனுக்குப் பதவி உயர்வு கிடையாது என்று பதிந்துகொள். இனிமேல் கார்டுகள் இவனைத் தனிப்பட்ட முறையில் கண்காணிக்க வேண்டும். இனிமேல் இவன் இந்திபேசினால் இவன் உரிமைகள் பறிக்கப்படவேண்டும். இவனது வசதியான குடியிருப்பைப் பறித்து, கடைநிலை ஊழியனுக்கான குடியிருப்புக்கு மாற்று." என்று உதவியாளருக்கு உத்தரவிட்டார்.

"ஐயா, இனி எனக்கு இது தேவையில்லை." என்று தமிழில் பேசிவிட்டு, தன் காதிலிருந்த மொழிமாற்றுக் கருவியைக் கழட்டி, அவரது மேசையில் பணிவுடன் வைத்துவிட்டுத் திரும்பினான் ஈஸ்வரன்.

அவரது கோபம் இன்னும் அதிகமாகியது. ஏதேதோ கெட்டவார்த்தை சொல்லி அவனைத் திட்டி, அவன் முதுகில் எட்டி உதைத்தார்.

எடுபிடி என்பதால் அவனுக்கு உரிமைகளும் இல்லை. அவன் உரிமைக்காக யாரும் பரிந்துபேசவும் மாட்டார்கள்.

ஆகவே, இந்த அநியாயத்தை மனச்சலனம் துளிகூட இன்றி அவரது உதவியாளர் பார்த்துக் கொண்டிருந்தாள்.

கீழே விழுந்த ஈஸ்வரனுக்கு மூக்கில் அடிபட்டு ரத்தம் ஒழுகித் தரையில் கொட்டியது.

 தன் அலுவலக அறையில் ரத்தகறை படுவதைக் கண்டு பொருமிய சுற்றுலாக்குழுத் தலைவர், " குட்டிச் சாத்தானே! உன் எடுபிடி ரத்தம் இந்த உயர்ந்த இடத்தில் பட்டு அசுத்தப் படுத்திவிட்டதே! இதை நன்றாகத் துடைத்து விட்டுப் போ!" என்று கத்தினார்.

பதில் பேசாமல் அவர் சொன்னதைச் செய்தான் ஈஸ்வரன்.  

அவனுக்கு நேர்ந்ததைக் கண்டு துடித்துவிட்டாள், அவனது தாய்.

"ஏண்டா மகனே! ஏழைசொல் அம்பலம் ஏறுமா? உனக்கு ஏண்டா இந்த வேலை? உனக்கு அவங்க பாஷை தெரிஞ்சதுனால நல்லது நடக்கும்னா ஏண்டா அதை விட்டுட்டு நாயடி படணும்? இப்படியா உன் வாழ்க்கையைக் கெடுத்துப்ப?" என்று கண்ணீரும் கம்பலையுமாகப் புலம்பினாள்.

ஈஸ்வரனின் தந்தை சங்கரன், "பெரியநாயகி, இது என்ன பேச்சு? நம்மை நம் நாட்டிலேயே எடுபிடி ஆக்கினவங்களுக்கு அடிவருடி ஆகணும்னா சொல்றே? இப்படி எல்லாரும் நினைச்சதுனாலதானே நம்மமொழிக்கு இந்த நிலைமை வந்துசேர்ந்துது? இந்த நாட்டை ஆண்டவங்க நாம. இப்ப நம்ம நாட்டிலேயே எடுபிடி ஆயிட்டோம். எதுனால? உன்மாதிரி எல்லாரும் உரிமைக்கு குரல்கொடுக்காம பணம், வசதிக்கு பின்னால போனதுனாலதான். ஏதோ விடாப்பிடியா நம்ம மொழியைப் பேசிவர்றது மட்டுமில்லாம, அதை எழுதப் படிக்கவும் தெரிஞ்சு வச்சுக்கிட்டுருக்கோம். அதையும் விட்டுப்புட்டு ஒரேயடியாகத் தலைமுழுகிடுன்னு சொல்றியா?" என்று தன் மனைவியைக் கடிந்துகொண்டார்.

இராஜராஜசோழச் சக்கரவர்த்தியின் அரசகுரு கருவூர்த் தேவரின் மாற்றாந்தாய்க்குப் பிறந்த தங்கையின் வழித்தோன்றல்கள் அவர்கள் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்காவிட்டாலும் தமிழ்மீது அளவிலாப் பக்தியும் காதலும் கொண்ட அவரது ரத்தம் அவர் உடலிலும், ஈஸ்வரன் உடலிலும் ஒரு துளியாவது ஓடிக்கொண்டுதானே இருக்கிறது?

எனவே, தமிழ்மீது இருக்கும் ஈர்ப்பு அவர்களுக்கு எப்படிக் குறையும்?

தந்தையின் துடிப்பு, தவிப்பு ஈஸ்வரனுக்கும் நன்றாகப் புரிந்துதான் இருந்தது. தனக்கு ஏற்பட்ட அவநிலை அவர் மனதை எந்த அளவுக்குப் பாதித்திருக்கும் என்றும் அவனுக்குத் தெரிந்துதான் இருந்தது. ஆயினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன் தாயின் மனநிலை தவறு என்று எடுத்துரைக்க அவருக்கு எத்தனை பக்குவம் இருக்கவேண்டும் என்பதைப் பார்த்து பெருமை கொண்டான்.

"அப்பா, இவர்கள் என் உடலை வருத்தியிருக்கலாம். என் மனம் என்றும் உறுதியாகத்தான் இருக்கும். நம் தமிழுக்காக உரிமைக் குரல் கொடுத்தேன் என்ற மன நிறைவு இருக்கிறதே, அதை யாராலும் குறைக்கமுடியாது! அம்மா, எனக்காகக் கலங்காதீங்க. நம்ம நாட்டிலேயே இப்படி வாழற வாழ்வும் ஒரு வாழ்வா? பணம், வசதி கிடைக்கும்னு உன்னை விட்டுட்டு வேற ஒருத்தியை அம்மான்னு கூப்பிட்டுக்கிட்டு அவ பின்னால நான் போனா, நீ எப்படி மனசு வருத்தப்படுவே? நம்ம தமிழை விட்டுட்டு, அதை மறந்துட்டு நாமும் மத்தவங்க மாதிரி மாறினா அது நாம தமிழுக்குச் செய்யற துரோகம் இல்லையா, அம்மா?" என்று பெரியநாயகியைச் சமாதானப் படுத்த முயன்றான் ஈஸ்வரன்.

"நீங்க ரெண்டு பெரும் சொல்றது எனக்குப் புரியாம இல்லைடா, நான் பெத்த ராசா. ஆனாலும் இப்படி நீ மூக்கை உடைச்சுக்கிட்டு, கண்டவன் கால்ல உதையை வாங்கிக்கிட்டு, எல்லாத்தையும் இழந்துட்டு வந்து நிக்கறதப் பார்த்தா பெத்தவயறு எரியாதாப்பா, ராசா?" என்று அங்கலாய்த்தாள் பெரியநாயகி.

"இப்ப ரொம்ப ராஜா மாதிரியா வாழறோம், அம்மா? விட்டுத்தள்ளு. நமக்கு ஒரு நல்ல நிலைமை வராமலா போகும்?" என்று அவளைச் சமாதானப் படுத்தினான் ஈஸ்வரன்.

அந்த நிலைமை விரைவிலேயே எதிர்பாராத அதிர்ச்சியுடன் வரத்தான் போகிறது என்று யாருக்குமே தெரிந்திருக்க நியாயம் இல்லைதான் . . .

. . . மனது ஒருமாதம் முன்பு நடந்ததை அசைபோடப் போட, எச்சில்தட்டுகளை கழுவும் இயந்திரத்தில் அடுக்கிவைக்கிறான், ஈஸ்வரன்.

*      *       *

கோட்கல் விண்நோக்கு நிலையம்

பிரஜோற்பத்தி, ஆனி 24 – ஜூலை 10, 2411

ண்களைக் கசக்கிக்கொண்டு கணிணியில் தெரிந்த விவரங்களைப் பார்க்கிறாள், ஸஹஜா. இது உண்மையாக இருக்கமுடியுமா என்ற கேள்வி அவளுக்குள் எழுகிறது. தன்னுடன் வேலை செய்யும் ஸாத்விக்கை அழைக்கிறாள்.

"என்ன ஸஹ்ஜ், என்ன வேணும்? ஒரே பரபரப்பாக இருக்கியே?" என்றவாறு அவள் அருகில் வருகிறான் ஸாத்விக்.

"ஸாத்வ், இந்த போட்டாவைப் பார். ஒரே குழப்பமா இருக்கு. சூரியக் கதிர்வீசல் (Solar Storm) திடும்னு அதிகமாகி இருக்கு. இது தவிர, சூரியன் பின்னாலேந்து ஏதோ கோடு கோடாகத் தெரியுதே, அது என்ன? அது சூரியனிடமிருந்து வருவதாகத் தெரியவில்லை. கொஞ்சம் ஃபாரின்…" என்று கணிணியில் தெரிந்த புள்ளிவிபரக் காட்சியின் ஒரு பகுதியைக் காட்டுகிறாள், ஸஹஜா.

"ம்," என்று பேனாவை வாயில் கடித்தபடியே உற்று நோக்குகிறான் ஸாத்விக். அவன் நெற்றியில் கோடுகள் கீழும் மேலும் எழுந்து வளைகின்றன. பேனாவால் உச்சி மண்டையில் இரண்டு தட்டுத் தட்டிக்கொள்கிறான்.

"ஸஹ்ஜ், இரு, இந்தக் கோடுகள் நிஜமா, இல்ல ஸ்டாடிக்கான்னு சரிபார்த்துடறேன்." என்று கணிணியில் இணைத்திருந்த ஒரு கருவியைக் காதில் மாட்டிக்கொள்கிறான்.

அது ஒரு மூக்குக் கண்ணாடியை ஒத்திருக்கிறது. அதிலிருந்து ஒரு சிறிய குழல் அவன் வாய் வரை வந்து தொங்குகிறது. வலதுகாதுக்குப் பக்கத்திலிருந்த ஒரு பொத்தானைத் தட்டி, கையில் இருந்த பேனாவால் ஏதேதோ சைகை செய்கிறான். அவர்களுக்கு முன்னால் ஒரு ஹோலோகிராம் விரிகிறது. அதில் உள்ள கோடுகள் சூரியனுக்குப் பின்னால் இருக்கின்றன. பேனாவினால் மீண்டும் சைகை செய்கிறான். ஆனாலும் கோடுகள் விரிவடையவில்லை. ஆனால், அவைகள் கொஞ்சம் அசைவதுபோலத் தோன்றுகிறது.

"ஸ்டாடிக் என்றும் சொல்ல முடியவில்லை. இல்லை என்றும் சொல்ல முடியவில்லை…" என்று இழுத்தவன், மீண்டும் பேனாவினால் சைகை செய்கிறான். இருந்தபோதிலும் கோடுகள் விரிவடையவில்லை. அசைவுகள்தான் தெரிகின்றன.

"இது என்னை மீறிய ஃபினாமினன் (நிகழ்ச்சி) ஸஹஜ். மேலிடத்திற்குத்தான் தெரியப்படுத்த வேண்டும்."

"ஸாத்வ், எக்ஸ்பர்ட்ஸ்களிடம் தெரியப்படுத்தாமல் மேலிடத்திற்கு விஷயத்தைக் கொண்டுபோக வேண்டுமா? மேலிடத்தில் மேற்கொண்டு கேள்வி கேட்டால் என்ன செய்வது?" என்று இழுக்கிறாள்.

"அப்பொழுது எக்ஸ்பர்ட்ஸ்களிடம் எடுத்துக்கொண்டு போவோம். இது பெரிய நிகழ்ச்சியாக இருந்தால் நமக்குத்தானே நல்லபேர் கிடைக்கும்!" என்று சாதுர்யமாகப் பேசுகிறான் ஸாத்விக். "மேலிடத்திலிருந்து பதில் வருவதற்குள் இதற்கு விடை கிடைத்துவிட்டால் நமக்குப் பிரமோஷன் கிடைத்தாலும் கிடைக்கலாமல்லவா?"

ஸஹஜாவுக்கு ஸாத்விக்கின் பேச்சு அவ்வளவு சமாதானமாகப் படவில்லை. தான் பார்த்தது தங்களுக்கு அப்பாற்பட்ட விஷயம் என்றும், நிபுணர்களிடம் தெரிவிப்பதுதான் சரி என்றும் அவளது உள்மனது கூறுகிறது. மேலிடத்திலிருந்து உடனே பதில் வராது. மேலும் நிபுணர்களுக்கு இதை ஏன் தெரிவிக்கவில்லை என்று கேள்வி வந்தால் என்ன பதில்சொல்லமுடியும்?

ஒருக்கால் இது ஒன்றுக்கும் உதவாத நிகழ்ச்சியாக இருந்துவிட்டால்?

எது எப்படி இருந்தாலும் இந்தக் கோடுகளைத் தொடர்ந்து கவனித்துவரலாம் என்று முடிவுசெய்துவிட்டு, அரைகுறை மனத்துடன் ஸாத்விக்குக்கு சம்மதம் தெரிவிக்கிறாள்.

இந்த உரையாடல் கொடைக்கானல் என்று அழைக்கப்பட்ட 'கோட்கல்' விண்ணோக்கு நிலையத் தொலைநோக்கிக் கூடத்தில் நடைபெறுகிறது. தென்பாரதத்தின் தலைமை வானஆராய்ச்சி மையம் 'காரைகட்'டில் (இருபதாம் நூற்றாண்டுக் காரைக்குடி) மிகப் பெரிதாக நிறுவப்பட்டிருக்கிறது. அங்குதான் ஸாத்விக் குறிப்பிட்ட மேலிடம் இருக்கிறது.

கிட்டத்தட்ட எண்ணூறு ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டிருக்கும் அந்த மையத்திற்கு உலகத்தைச் சுற்றிவரும் ஏராளமான செயற்கைக் கோள்களில் இருந்து தகவல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. இதுதவிர, பாரதத்தில் பல இடங்களில் மலை உச்சிகளில் நிறுவப்பட்டிருக்கும் தொலைநோக்கிக்கூடங்கள் காரைகட் மையத்திற்குத் தகவல்களை அனுப்பிவருகின்றன.

கிட்டத்தட்ட மூவாயிரத்தைநூறு நிபுணர்கள், ஐயாயிரத்து அறுநூற்றுக்கும் மேற்பட்ட உதவியாளர்கள், நூற்றைம்பது மேலதிகாரிகள், இவர்களுக்கு உதவி செய்யும் 'எடுபிடிகள்' என்று நிறையப்பேர் அங்கு பணிபுரிகிறார்கள். உலகத்திலேயே தலைசிறந்த விண்வெளி ஆராய்ச்சி மையமாக அது திகழ்கிறது.

இந்த மையத்திலிருக்கும் ஒரு மேலதிகாரியிடம்தான் ஸஹஜாவும், ஸாத்விக்கும் தாங்கள் பார்த்த கோடுகளைப் பற்றித் தெரிவிக்கத் திட்டம்தீட்டி விபரம் அனுப்பியிருக்கின்றனர்.

பொதுவாக 'முக்கியம்' என்று குறியிட்டு அனுப்பியிருந்தால் அவருக்கு உடனே விஷயம் போயிருக்கும். ஆனால் 'பார்வைக்கு மட்டுமே' என்று குறியிட்டு அனுப்பியதால் அவரே வந்து நேரில் பார்க்கும்வரை அவரது அலுவலகத்தில் அந்த கணிணி அஞ்சல் காத்துக் கிடக்கிறது.

*       *       *

பெரியகோவில், தஞ்ஜூ

பிரபஜோற்பத்தி, ஆனி 24 – ஜூலை 10, 2411

மூன்று மாதங்கள் சீனாவுக்குச் சென்று, அங்கேயே தங்கித் திட்டம் முடியும்வரை பொறுப்பேற்க வேண்டும் என்று லீ தெரிவித்தது, ஷிஃபாலியின் மகிழ்ச்சியைக் காற்றிறங்கிய பலூனாக ஆக்கிவிடுகிறது.

தன் மகள் நிமிஷாவைச் சீனாவுக்கு அழைத்துச்செல்லவோ, ஷெனாயில் தனியாகவோ விட்டுச்செல்லவோ முடியாது. இப்படி இரண்டும் கெட்டான் நிலைமைக்குத் தன்னை லீ தள்ளுகிறாரே என்று பரிதவிக்கிறாள். ஆனால் இப்படிப்பட்ட உயர்பதவி வாய்ப்பு மீண்டும் கிடைக்கவே கிடைக்காது என்றும் அவனுக்குப் புரிகிறது.

அதனால், தன்னைச் சுற்றி நடந்துகொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் அவனுக்கு கவனமே செல்லவில்லை.

"ஷிப்ஸ், நான் கேட்டதற்கு ஏன் பதிலே சொல்லவில்லை? உங்களுக்கு இதில் சம்மதம்தானே? என்ன யோசனை?" என்று கேட்டார் லீ. தன்னை உடனே கட்டுக்குக் கொண்டுவந்தாள், ஷிஃபாலி.

"எப்பொழுது நான் சீனாவுக்குச் செல்லவேண்டும்?" அவள் கேட்டதன் பொருள், எத்தனை நாள் கழித்துச் செல்லவேண்டும் என்பதுதான்.

ஆனால் அதை உடனேயே சீனாவுக்குச் செல்ல விரும்புகிறாள் என்று பொருள் செய்துகொண்ட லீ, "இப்படித்தான் இருக்கணும், ஷிப்ஸ்! நான் என்ன நாளையே என்னுடன் கிளம்புன்னா சொல்வேன்? நீ இங்கு இன்னும் ஒரு வாரம் இருந்து உனக்கு உதவியாளர்கள் யார் யார்னு முடிவு செய்துகொண்டு சீனா கிளம்பி வா. மத்ராவுக்கும் ஒரு நாள் போய், உன் உதவியாளர்களை நேர்முகத் தேர்வு செய்வது நல்லது என்றுதான் சிபாரிசு செய்வேன். சீனா வந்தவுடன் முதலில் ஷாங்ஹையில் ஒரு வாரம் கலந்தாலோசனை. இரண்டு நாள் பெய்ஜிங்கில் மேலிடத்திற்கு விளக்கவுரைக் கூட்டம். அதன்பின் தொழிற்சாலைக்குச் சென்று திட்டத்தை முடிக்கவேண்டியதுதான் பாக்கி," என்று நிறைவுடன் அடுக்கடுக்காக மேலே என்ன செய்யவேண்டும் என்று அன்பு உத்தரவுகளையும் போட்டுக்கோண்டு, அவள் முதுகில் தட்டியவாறு பதில்சொல்கிறார்.

ஷிஃபாலிக்கு மிகவும் தர்மசங்கடமாக இருக்கிறது. தன் மகளைப் பற்றி ஒரு முடிவும் எடுக்காமல் எப்படிச் சீனா செல்வது? அவரிடம் குடும்ப விவகாரங்களைப் பற்றிப் பேசினால் நன்றாகவா இருக்கும்? எனக்கு ஒரு வாரம் விடுப்பு கொடுங்கள், சில முக்கியமான வேலைகளைச் செய்து முடித்துவிட்டு வருகிறேன் என்றா சொல்லமுடியும்?

உடனே ஷிஃபாலி ஒரு முடிவுக்கு வருகிறாள். ஆகவே, லீயிடம் கொஞ்ச நேரத்திற்குத் தனக்குத் தனி வேலை இருப்பதாகச் சொல்லிவிட்டுத் தன் குழுவிடமிருந்து மெல்ல விலகிச்சென்று கூட்டமில்லாத இடத்திற்குச் செல்கிறாள்.

தன் மகளிடம் இதைப்பற்றி பேசித் தன் முடிவை அவளீடம் சொல்லலாம் என்று தீர்மானிக்கிறாள்.

மூக்குக்கண்ணாடி மாதிரி இருக்கும் ஹோலோ புரொஜெக்டரை அணிந்துகொள்கிறாள். அக்கருவியின் காதுப்பகுதியில் உள்ள ஒரு பொத்தானைத் தட்டுகிறாள். அவள் கண்முன் ஷெனாயில் அவள் வீட்டின் டிராயிங் ரூம் தெரிகிறது. அங்கு மணி அடிப்பது அவள் காதுகளில் விழுகிறது.

சில விநாடிகளுக்குப் பிறகு நிமிஷா அங்கு வந்து அவள் அணிந்து கொண்டிருப்பது மாதிரி ஒரு ஹோலோ புரொஜெக்டரை அணிந்துகொண்டு நிற்பது தெரிகிறது.

"என்ன மம்மி, என்ன ஆச்சு? ரெண்டு நாள்னு சொல்லிட்டு ஒரு வாரம் லேட் ஆக்கிட்டாய்? என்ன, பழையபடி இன்னும் லேட்டாக்கப் போறியா?" என்று கேட்கிறாள் நிமிஷா.

அவளை விட்டுவிட்டு சீனாவுக்கு மூன்று மாதம் செல்லவேண்டும் என்று எப்படிச் சொல்வது என்று ஒரு விநாடி தயங்கிய ஷிஃபாலி, "நிம்ஸ் கண்ணு. மம்மிக்கு ஒரு பெரிய பதவி உயர்வு கிடைச்சுருக்கு. உனக்கு நான் அதுக்காக ஒரு கிஃப்ட் கொடுக்கணும். என்ன வேணும், சொல்லு!" என்று கேட்கிறாள்.

"மம்மி. எனக்கு ரொம்ப சந்தொஷம். கிஃப்டுன்னா..," சிறிது நேரம் யோசித்தவள், "இப்ப நான் ஹோலோ ப்ரொக்ஷன்லதான் என் ஃப்ரன்ட்ஸோட டான்ஸ் ஆடறேன். அவங்ககூட நேரில ஆடினா, ரொம்ப சந்தோஷமா இருக்கும். உன்னால ஏற்பாடு செய்யமுடிஞ்சா அதுதான் எனக்கு ரொம்பப் பெரிய கிஃப்ட்!" என்று பதில்சொல்கிறாள்.

"கட்டாயம் ஏற்பாடு செய்யறேன். எனக்கு நீ ஒரு ஹெல்ப் செய்யணும். செய்யறியா?" மகளை பரிசு என்ற தூண்டில்போட்டுப் பிடிக்க முயல்கிறாள், ஷிஃபாலி.

"கண்டிஷன் போடாம நீ எதுவும் செய்யமாட்டியே! என்ன ஹெல்ப் மம்மி வேணும், உனக்கு? என்னால செய்ய முடிஞ்சதைச் சொல்லு. க்ளாஸ்லேயே ஃபர்ஸ்ட்டா வரணும். அப்படி இப்படின்னு செய்ய முடியாததைக் கேக்காதே!" என்று செல்லமாகக் கோபிக்கிறாள், நிமிஷா.

"அப்படியேல்லாம் கேட்பேனா, நிம்ஸ் கண்ணு? செய்ய முடியறதைத்தான் கேட்கப்போறேன். தஞ்ஜூவுல நான் இப்ப இருக்கற இடத்துக்கு வா. நீ கேட்ட கிஃப்ட்டைக்கொடுக்கிறேன். மத்ராவுல உன் ஃப்ரன்ட்ஸ் எங்கே இருக்காங்கன்னு சொல்லு. அவங்களையும் இங்கே வரவழைக்கிறேன். நீ வந்துசேர்றதுக்கும் அவங்க இங்கே வர்றதுக்கும் சரியா இருக்கும். அப்படியே தஞ்ஜூல இருக்கற ஃப்ரன்ட்ஸ்களையும் கூப்பிட்டுப் பெரிசா விருந்து கொடுத்தாப் போச்சு."

தூண்டிலைப் பெரிதாகப் போட்டுத் தன் மகள் கவ்வுவதற்காக முயற்சி செய்கிறாள், ஷிஃபாலி.

"மம்மீ, மம்மீ.. நீ இன்னும் என்ன வேணும்னு சொல்லவே இல்லே. ரொம்பப் பெரிசா, என்னால செய்யமுடியாத ஹெல்ப்பைத்தான் கேக்கப்போறே! அதுனாலதான் இப்படி நான் கனவுலகூட நம்பமுடியாத கிஃப்டைத் தரேன்னு சொல்றே! என்னால ஸஸ்பென்ளஸத் தாங்க முடியல! நான் கேட்டதைச் செய்யாட்டாலும் பரவாயில்ல. என்ன வேணும்னு சொல்லு!" நிமிஷாவின் குரலில் இருந்த பரபரப்பு மட்டுமல்ல, அவள் முகத்தில் இருந்த ஆர்வமும் ஷிஃபாலிக்கு நன்றாகவே தெரிகிறது.

"சொல்றேன், நிம்ஸ் கண்ணு," என்று இழுத்தவாறே ஆரம்பிக்கிறாள் ஷிஃபாலி. "மம்மிக்கு பதவி உயர்வு கிடைச்சதோட மட்டுமில்ல; நிறையப் பொறுப்பும் கூடவே வந்துருக்கு. எங்க முக்கிய மானேஜர் என்னை உடனடியா சீனாவுக்கு புறப்பட்டு வான்னு சொல்றார்…," என்று தயங்கியவாறு இழுத்தவளை இடைமறித்த நிமிஷா, "கண்டிஷன் இப்பதான் வர்றது, மம்மி. எத்தனை நாள் நீ சீனா போகணும்? உடனடியா சீனா போகணும்னா எப்ப நீ சீனாவுக்குப் புறப்படணும்? எனக்கு இவ்வளவு பெரிய விருந்தை எப்பக் கொடுக்கப் போறே? அதுவும் வெறும் ப்ராமிஸ்தானா? நீ சீனாவுக்கு என்னைக் கூட்டிப் போவியா? இல்லை நீ மட்டும் தனியாப் போனா நான் ஷெனாய்ல தனியா எப்படி இருப்பேன்?" என்று பொரிந்து தள்ள ஆரம்பிக்கிறாள்.

அவள் குரலில் இருந்த ஆர்வம் மாறி, ஏமாற்றமும் கோபமும் வருவது ஷிஃபாலிக்கு நன்றாகவே தெரிகிறது.  "நிம்ஸ் கண்ணு. கோவிச்சுக்காதேம்மா. எனக்கு மட்டும் உன்னைத் தனியா விட்டுட்டு சந்தோஷமாப் போக முடியுமா? இது மாதிரி பதவி உயர்வு வரவே வராதும்மா. லைஃப்ல இந்த மாதிரி வாய்ப்பு அம்மாவுக்கு கிடைக்கவே கிடைக்காதும்மா. கொஞ்சம் அட்ஜஸ்ட் செஞ்சுக்கோம்மா, கண்ணு!" என்று குழைகிறாள் ஷிஃபாலி.

"மம்மி. நான் கேட்ட கேள்விகள் ஒண்ணுக்குமே பதில்சொல்லாம அட்ஜஸ்ட் பண்ணிக்கோன்னு சொன்னா – நான் உன்னை விட்டுட்டு சீனா போக முடிவு செஞ்சுட்டேன், அட்ஜஸ்ட் பண்ணிக்கோ அப்படீன்னுதானே அர்த்தம்? முடிவு பண்ணிட்டே, சரி. நான் தனியா இருக்க வேண்டியதுதான், வேற வழியில்லை. எனக்குத் துணையா காம்ஸ் இருப்பான்னுதான் நினைக்கிறேன். இல்லை, வேற யாரையும் ஏற்பாடு பண்ணி இருக்கியா? எப்ப சீனா போப்போறேன்னு சொல்லறியா?"

நிமிஷா எரிச்சலுடன் கொடுத்த பதில் அவள் கன்னத்தில் அறைந்ததுபோலத்தான் இருக்கிறது.

"ஸாரிம்மா நிம்ஸ், என்னை அப்படி கட்டாயப் படுத்திட்டாங்க இங்கே. என்னம்மா செய்யறது? இன்னும் ஒரு வாரத்தில நான் சீனா போகணும். மூணு மாசம் அங்கே இருக்கவேண்டி வரும்மா, காம்ஸைத்தான் உனக்குத் துணையா இருக்கவைக்கணும். வேணும்னா அவளோட காப்பாளி கிட்டச் சொல்லி கட்டாயப்படுத்த வேண்டியதுதான்!"

மகளைச் சமாதானப் படுத்த முயல்கிறாள், ஷிஃபாலி.

"எனக்கு நல்லாத் தெரியும், மம்மி. எங்கே போகணும்னாலும் உன் வழி, இல்லைனா எந்த வழியுமே இல்லதானே — உன்னைப் பொறுத்தவரைக்கும்! அதுதான் என் அப்பா யாருன்னுகூடச் சொல்ல மாட்டேங்கறே! சொன்னா, ஒண்ணாச் சேர்ந்து இருக்கணும்னு நான் பிடிவாதம் பிடிப்பேன்னுதானே!

"சரி, நீ சீனா போகறதுக்கு முன்னால என் டான்ஸ் பார்ட்டியையாவது அரேன்ஜ் பண்ணு. நான் காம்ஸ் கட்டக் கெஞ்சிக் கூத்தாடி எனக்குத் துணையா இருக்கும்படி கேட்டுக்கறேன். நீ ஒண்ணும் காப்பாளி, காப்பாளினு சொல்லி அவளைப் பயமுறுத்தவேணாம். அவள் தம்பி இங்கே நம்ம ஃப்ளாட்ல இருக்கட்டும்னு சொன்னா, அவ உடனே சரின்னு சொல்லிடுவா. அவளையும் அவ தம்பியையும் தஞ்ஜூவுக்கு கூட்டிட்டு வறேன். எனக்கு விருந்து நடக்கறச்சே ஹெல்ப்பா இருக்கும்." ஷிஃபாலியின் பிரச்னைகளை தீர்த்து வைத்தாற்போலப் பதில்சொல்கிறாள், நிமிஷா.

அதே நேரத்தில் அவள் தன் தந்தையைப் பற்றி பேசியது ஷிஃபாலியின் இதயத்தைப் பிழிகிறது. திருமணம் செய்துகொண்டு சேர்ந்துவாழும் அளவுக்குப் பணம் இருந்தும், தன் வேலைக்கு, தொழில் முன்னேற்றத்திற்கு இடையூறு வரக்கூடாது என்று – தான் உண்டாகியிருப்பதைக்கூட நிமிஷாவின் தந்தையான தன் துணைவனிடம் சொல்லாமல் – வேறு வேலை பார்த்துக்கொண்டு – தான் எங்கு போகிறோம் என்றுகூடத் தெரிவிக்காமல் – அவனுக்குத் தெரிவிக்காமல் பிரிந்து வந்ததை நினைவு கூர்கிறாள்.

தப்பித் தவறிக்கூட நிமிஷாவின் தந்தைப் பாசம் தன் மாஜித் துணைவனையும், தன்னையும் இல்லற வாழ்வில் பிணைத்து, தன் தொழில் முன்னேற்றத்திற்கு இடையூறு ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக – தன் மகள் எத்தனையோ முறை கேட்டும் — அவள் தந்தை யார் என்பதே அவளுக்குத் தெரியாமல் வளர்த்து வந்திருப்பதையும் நினைத்துப் பார்க்கிறாள்.

ஷிஃபாலியின் இந்தப் பிடிவாதத்தைப் பற்றி இதுவரை நிமிஷா இப்படி அவமரியாதையாகப் பேசியதே இல்லை. தான் சீனா செல்வது என்று தீர்மானித்த முடிவு நிமிஷாவை எப்படிப் பாதித்திருக்கிறது என்று சிந்தித்துப் பார்க்கிறாள். எப்படியும் நிமிஷா சில ஆண்டுகளில் தன்னை விட்டுப் பிரிந்து, அவள் வழியைப் பார்த்துக்கொண்டு சென்றுவிடுவாள். எனவே, இந்தச் சில ஆண்டுகளுக்காகத் தன் முன்னேற்றத்தை விட்டுக்கொடுப்பதில் அர்த்தமே இல்லை என்ற முடிவுக்கு வருகிறாள். தன் முகத்தில் ஓடும் உணர்ச்சிகளை நிமிஷா பார்க்கமுடியாமல் இருப்பதும் நல்லதுக்குத்தான் என்று பெருமூச்சுவிடுகிறாள்.

"ஸாரிம்மா, நிம்ஸ். நீங்க மூணு பேரும் வர்றதுக்கு டிரெய்ன் டிக்கெட்ஸ் அனுப்பறேன். இங்கே நம்ம ரெண்டுநாள் ரொம்ப ஜாலியா இருக்கலாம்." பிரச்சினை ஒரு வழியாக இவ்வளவு சுலபமாகத் தீர்ந்ததில் அவளுக்கு இரட்டை மகிழ்ச்சி. தனக்கும் நிமிஷாவுக்கும் இருக்கும் இணைப்பைத் துண்டித்துவிட்டுத் திரும்புகிறாள் ஷிஃபாலி.

தன்னை உற்று கவனித்துக் கொண்டிருக்கும் அந்த இளைஞனைத் திரும்பிப் பார்க்கிறாள். அவனுக்கு வயது இருபத்திரண்டு அல்லது இருபத்திமூன்று இருக்கலாம். ஐந்தடி ஒன்பது அங்குலம் உயரம், அதற்கேற்ற பருமன். சுருள் சுருளான தலைமயிர், அவனது உடைகளைப் பார்த்தால் 'எடுபிடி' என்று தோன்றுகிறது. ஆனால் எல்லா எடுபிடிகளும் அணிந்திருக்கும் மொழிமாற்றக் கருவி அவன் காதில் இல்லை.

ஷிஃபாலியைப் பார்த்துச் சிரித்து, "ப்ரணாம், ஸாஹிபா (வணக்கம் அம்மா)!" என்று இந்தியில் வணக்கம் தெரிவிக்கிறான், அந்த இளைஞன் — ஈஸ்வரன்.

எடுபிடியால் எப்படி இந்தியில் பேசமுடியும்? ஒருவேளை மொழிமாற்றக் கருவி எங்காவது மறைந்திருக்குமோ என்ற சந்தேகத்துடன் அவனை நோக்கி வினவுகிறாள், ஷிஃபாலி.  "உனக்கு இந்தி தெரியுமா?" அவள் குரலில் வியப்பு ஒலிக்கிறது.

"எனக்கு இந்தி தெரியும் அம்மா. அதனால்தான் நான் மொழிமாற்றக் கருவி அணியா ட்டாலும் நீங்கள் சொல்வதைப் புரிந்துகொள்ள முடிகிறது," என்று புன்னகைக்கிறான்.

"நீங்கள் உங்கள் மகளுடன் பேசியதைக் கேட்கவேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டுவிட்டது. ஏனென்றால் செய்யும் இந்த வேலையை விட்டு எங்கேயும் நான் செல்லக்கூடாது. ஆகவே, உங்கள் அந்தரங்கப் பேச்சைக் கேட்கவேண்டி நேர்ந்ததற்கு என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் மகளுடன் இங்கு பொழுதை நல்லபடி கழிக்க எனது வாழ்த்துக்கள். உங்கள் சீனப் பயணம் இனிதாக இருக்கட்டும்."

*       *       *

                                                                                                              (தொடரும்)

Other Articles

No stories found.