பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு – இரண்டாம் பாகம் – அத்தியாயம் 12

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு – இரண்டாம் பாகம் – அத்தியாயம் 12

ஒரு அரிசோனன்

தஞ்சைக் கோட்டைச் சிறை

பரிதாபி, ஆவணி 30 – செப்டம்பர் 15, 1012

ன்றாகக் கண்களைத் திறந்து பார்க்கிறான் அமரபுஜங்கன். சிறையின் கற்சுவர்கள் அவனைத் திரும்ப நோக்குகின்றன. உடலில் பட்ட காயங்கள் முக்கால்வாசிக்கு மேல் ஆறியிருக்கின்றன. திருமாறன்தான் அருகில் இருந்து தன்னைக் கவனித்துக்கொள்கிறான் என்பதைத் தவிர அவனுக்கு வேறு எந்த ஆறுதலும் இல்லை.

இராஜராஜர் தேர்ந்தெடுத்த வாளில் போர் செய்து பழக்கம் இல்லாததால் அது தனக்கு ஒரு சுமையாக அமைந்து தன்னைத் தோற்கடிக்கவும் காரணமாக அமைந்துவிட்டதை நினைத்துப் பார்த்து நினைத்துப் பார்த்துக் குமுறுகிறான்.

அவ்வப்பொழுது அரசு மருத்துவரே வந்து பார்த்து தன்னைக் கவனித்துக் கொள்வது அவனுக்கு ஒரு புதிராகவும் இருக்கிறது. சிறையில் கைதியாக இருக்கும் தன்னை இராஜராஜர் இவ்வளவு மரியாதையுடன் நடத்துவது அவனுக்கு ஒரு வகையில் மகிழ்ச்சி அளித்தாலும், இன்னொரு வகையில் சிறைப்பிடிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு சேதியும் இல்லாமல் தனித்து விடப்பட்டிருப்பது – திருமாறன் மட்டுமே துணையாக இருக்கும்படி விடப்பட்டிருப்பது – பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கீழ்த்தரமான கைதி போல உணர வைக்கிறது. மெல்லப் புரண்டுபடுக்கிறான்.

"என்ன வேண்டும், அரசே?" என்று குரல் வருகிறது திருமாறனிடமிருந்து.

"ஒன்றுமில்லை திருமாறா, வெறுமேதான் புரண்டு படுத்தேன்" என்று பதிலளிக்கிறான்.

திருமாறனை நினைத்தால்தான் அவனுக்குத் தொண்டையை அடைக்கிறது. தான் சிறைப்பிடிக்கப்பட்டதும், மீனக்கொடியையும், சமாதானக் கொடியையும் பிடித்துக்கொண்டு, சோழர் பக்கம் வந்து, தன்னையும் பாண்டிய மன்னருடன் சிறைக்கைதி ஆக்கும்படி இராஜராஜரிடம் அவன் முறையிட்டது அவன் நினைவுக்கு வருகிறது.

இராஜராஜர் ஏன் என்று வினவியதற்குத் தான் பாண்டிய மன்னரின் மெய்க்காப்பாளன், காயம்பட்டு விழுந்திருக்கும் அவருடன் தான் இருந்தாக வேண்டும், அப்படி இருக்கவிடாது போனால், தனது தலையைக் கொய்த பின்னரே அங்கிருந்து அவர்கள் செல்ல இயலும் என்று திருமாறன் துணிச்சலாக அறிவித்ததும், அவனது அரசப்பற்றை மெச்சி, அவனது வேண்டுகோளுக்கு இராஜராஜர் சம்மதித்ததும் அமரபுஜங்கன் மனதில் பசுமையாகப் பதிந்திருக்கிறது.

தனது நிலைமையைக் கருத்தில் வைத்து நல்ல படுக்கை அளித்திருப்பதையும், உடல்நிலை தேறும் வகையில் உணவு அளிக்கப்படுவதையும் நினைத்துப்பார்க்கிறான்.

வலது கையில் இராஜராஜர் தாக்கியதில் ஏற்பட்ட காயத்தால் அதன் உபயோகம் மிகக் குறைந்த நிலையில் திருமாறன்தான் தனது வலது கையாக இருந்து வருகிறான் என்பது அவனை நெகிழ வைக்கிறது. இப்படி அரசப் பற்றுள்ள ஊழியனுக்குத் தகுந்த வெகுமதி அளிக்கக்கூட இயலாத நிலையில் தான் இருப்பதைப் பார்க்கும்போது தன் மீதே அவனுக்கு வெறுப்பாக இருக்கிறது.

சேரமான், சிங்களப் படைத்தலைவன், போரிடாமல் அநியாயமாகத் தங்கள் உயிரை இழந்த ஆறாயிரம் வீரர்கள் போல், தானும் வீரசொர்க்கமடைந்து, இழிநிலையை அடையாது இருந்திருக்கலாமே என்று எண்ணிப் பார்க்கிறான்.

வாட்போரில் இராஜராஜரைக் கொல்லும் வாய்ப்புகள் இரண்டு கிடைத்தும், அதைப் பயன்படுத்தாமல் அவரைத் தோற்கடிக்க வேண்டும், அவரைச் சிறைப்பிடிக்க வேண்டும் என்று விட்டது அவனை அதிகமான விழுப்புண்கள் பெறச்செய்து, கடைசியில் தோல்வியும் அடையச் செய்துவிட்டதே என்பதை எண்ணும்பொழுது மனம் குமுறுகிறது. இராஜராஜரைத் தான் கொன்றிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று எண்ணிப் பார்க்கிறான்.

அன்று அதோடு போர் நின்றிருக்கும். திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜரை எமனுக்கு அனுப்பிய பாண்டியன் என்ற பட்டப்பெயர் கிடைத்திருக்கும். தன்னைத் தேடிப்பிடித்து அழித்த பின்னால் இராஜேந்திரனால் மதுரை சூரையாடப்பட்டிருக்கும்.

இருந்தபோதிலும், பாண்டி நாட்டை அடிமைகொண்ட இராஜராஜரை – பாட்டனார் வீரபாண்டியரின் தலையைக் கொய்து சிறுமைப்படுத்திய சோழனின் தம்பியைக் கொன்ற புகழாவது கிடைத்திருக்கும். அதை ஏன் செய்யாமல் விட்டுவிட்டோம், மீன் கும்பலுக்கு ஆசைப்பட்டுக் கையில் கிடைத்த ஒரு பெரிய மீனை விட்டுவிட்டோமே என்று வருந்துகிறான்.

கடைசியில், இராஜராஜரிடம் போரிட்டு அமரபுஜங்கன் சிறைப்பிடிக்கப்பட்டான் என்றுதானே வரலாறு கூறும்? அவரைக் கொல்லக் கிடைத்த இரண்டு வாய்ப்புகளை சோழர்கள் பிடியிலிருந்து பாண்டிநாட்டை விடுவிக்கும் உன்னதமான முயற்சிக்காக விட்டுக்கொடுத்து ஏமாந்தான் என்றா கூறும்?

அவனையும் அறியாமல் அவனிடமிருந்து ஒரு பெருமூச்சு வெளியேறுகிறது – இரு கண்களில் இருந்தும் நீர் கோர்த்து வழிகிறது.

"அரசே, என்ன ஆயிற்று? ஏனிந்தக் கண்ணீர்?" பதற்றத்துடன் வினவுகிறான் திருமாறன்.

"திருமாறா! இப்படி ஒரு நிலைமை எனக்கு ஏற்பட்டிருக்கிறதே! இளவரசன் விக்கிரமன் என்ன செய்வான்? நான் உத்தரவிட்டபடி உன் தம்பி வெற்றிவீரன் அவனைப் பத்திரமாக இலங்கைக்குக் கூட்டிச் செல்வானா? இல்லை, விக்ரமன் மதுரையில் இருந்து என்னைச் சிறைமீட்கப் படையுடன் வருவானா? அப்படிச் செய்தால் இராஜேந்திரன் அவனை அழித்துவிட மாட்டானா? இராஜராஜன் மாதிரி கருணையா காட்டுவான்? இப்படிப் பலவிதமான எண்ணங்கள் என்னைச் சுற்றிச்சுற்றி வந்து வாட்டுகின்றன திருமாறா! சேரமானும், சிங்களவனும் வீரசொர்க்கம் அடைந்துவிட்டனர். இனி, இலங்கை மன்னன் மகிந்தன் எப்படி நமக்கு உதவுவார்? பாண்டிநாடு எத்தனை காலம்தான் சோழர்களுக்கு அடிமையாக இருக்கும்?" ஆற்றாமையில் புலம்பலாக அமரபுஜங்கனின் பேச்சு வெளிவருகிறது.

"நிலைமை மாறும், அரசே! பாண்டிய வீரர்கள் கண்டிப்பாகச் சோழர்களைத் தோற்கடிப்பார்கள். உறையூரையும், தஞ்சையையும் நெருப்பிற்கு இரையாக்குவார்கள்" என்று கோபத்துடன் சூளுரைக்கிறான்.

 அது நிறைவேற இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாகும் என்பது அவனுக்கோ, அமரபுஜங்கனுக்கோ தெரிய நியாயமில்லைதான்!

"அந்தப் பெருமைதரும் நாளைப் பார்க்க நான் இருக்கமாட்…" திடுமென்று அமரபுஜங்கனிடமிருந்து இருமல்கள் பீறிட்டுக்கொண்டு கிளம்புகின்றன.

உடனே அவனைத் தாங்கிப் பிடிக்கிறான் திருமாறன். இருப்பினும் நிலைகொள்ளாமல் இருமுகிறான் அமரபுஜங்கன். அடங்காத இருமல்கள் அவனது உடலைத் தூக்கித்தூக்கிப் போடுகின்றன. அவனது வாயிலிருந்து இரத்தம் கலந்த கோழை வழிகிறது. அதை வழித்து எறிகிறான் திருமாறன். அவன் முகம் கவலையில் வாடுகிறது.

"யாரங்கே? அரசருக்கு மருத்துவ உதவி தேவை! உடனே வாருங்கள்!" என்று கத்துகிறான்.

மீண்டும் மீண்டும் இருமுகிறான் அமரபுஜங்கன். கோழைக்குப் பதிலாக இரத்தமாகவே வாந்தி எடுக்கிறான். தூக்கிப்போடுவது வலிப்பாக மாறுகிறது. கைகளும், கால்களும் வெட்டிவெட்டி இழுக்கின்றன. அவனது உடலில் இருக்கும் ஆறாத காயங்கள் சிலவற்றிலிருந்து இரத்தம் கசிய ஆரம்பிக்கிறது.

திருமாறன் திரும்பத் திரும்ப உரத்த குரலில் கத்தி, உதவிக்கு அழைக்கிறான். யாரோ தடதடவென்று படிகளில் இறங்கிவரும் ஒலி கேட்கிறது.

காவலர்கள் இரண்டு பேர் மருத்துவர் ஒருவருடன் வருகிறார்கள். காவலரில் ஒருவன் பூட்டைத் திறந்து கதவைத் திறக்கிறான். பாண்டிய மன்னனின் துடிப்பைப் பார்த்த மருத்துவர் அவசரமாக வந்து அவனது கையைப் பிடித்து நாடியைப் பார்க்கிறார்.

அமரபுஜங்களின் உடல் துடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அடங்குகிறது. திறந்த கண்களில் விழிகள் அசையாமல் நின்றுவிடுகின்றன. மருத்துவர் அவன் கையை மெல்லக் கீழே வைக்கிறார்.

கோதாவரி ஆற்றங்கரை, வேங்கைநாடு

பரிதாபி, புரட்டாசி – செப்டெம்பர் 18, 1012

திரிபுவன மகாதேவியாருடன் சிவாச்சாரி கோதாவரி நதிக்கரைக் கூடாரத்தில் பேசிக்கொண்டிருக்கிறான். அவன் பேசுவதை கவனமாகக் கேட்டாலும், அவள் அதை ரசிக்கவில்லை என்பதை முகமே காட்டுகிறது.

"சிவாச்சாரியாரே! நீர் என்ன சொன்னாலும் சரி, நானில்லாமல் மன்னருக்குப் பட்டாபிஷேகமா? இது என்ன கூத்து? நான்தானே பட்டத்துராணி! நானில்லாமல் இவரும் எப்படி மகிழ்வாக மகுடத்தைச் சூடிக்கொள்ளச் சம்மதித்தார்? நீங்கள் எல்லோரும் சக்கரவர்த்திகள் சொன்னார் என்று எதிர்க்கேள்வி கேட்க அஞ்சுகிறீர்கள்; அது சரி, ஆனால் மன்னராவது எடுத்துச் சொல்லவில்லையா? தந்தையாருடன் பேச அஞ்சுபவர் அல்லரே அவர்!" என்று பொரிந்துதள்ளி, மன்னர் என்று இராஜேந்திரனைக் குறிப்பிட்டுப் பேசியவள், மேலும் தொடர்கிறாள்.

"எத்தனை காலம் மன்னர் காத்துக்கொண்டிருந்தார்!  நாற்பத்தியிரண்டு வயது ஆகும் வரை முடிசூடக் காத்திருந்தாரே, இன்னும் சில திங்கள் காத்திருக்க இயலவில்லையா?  அதைவிட அவலமான சேதி என்னவென்றால், நீரே முடிசூட்டுவிழாவுக்கான அனைத்தையும் நடத்திவைத்துவிட்டு வந்திருக்கிறீர்!  உம்மீது அருள்…" உதட்டைக் கடித்தவாறே மேலே எதுவும் பேசாது நிறுத்திவிகுகிறாள் திரிபுவன மகாதேவி.

"இன்றுவரை என் மீது அருள்காட்டி வந்திருக்கிறீர்கள் மகாராணி.  அதற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். அருள்கூர்ந்து அவ்வருளைத் தொடருமாறு இறைஞ்சுகிறேன். சோழவளநாட்டின் தலைவியார், நீங்கள்! உங்கள் அருளன்றி சோணாட்டில் எப்பணியை நான் நிறைவேற்ற இயலும் மாகாராணியாரே?" எனச் சிவாச்சாரி இறைஞ்சுகிறான்.

திரிபுவன மகாதேவி மனதிற்குள் பெருமூச்சு விடுகிறாள். அவள் சொல்லவந்ததை அவன் தவறாகப் புரிந்துகொண்டது அவளுக்கு நிம்மதியாக உள்ளது. தன் கணவர் மூலமாகத் தெரியவேண்டிய சேதியைத் தானே போட்டுடைப்பது நன்றாகவா இருக்கும்?

தனக்கு இராஜேந்திரன் சிவாச்சாரி மூலம் கொடுத்தனுப்பிய திருமுகத்தில் கண்ட ரகசியச் செய்தியைத் தன் சினத்தால் அவசரப்பட்டு வெளியிட இருந்தோமே எனத் தன்னைத்தானே கடிந்துகொள்கிறாள்.

இருப்பினும் தன் குரலிலுள்ள கோபத்தொனியை விட்டுவிடாமல் தொடர்கிறாள்: "ஆமாமாம்!  இப்பொழுதான் திருமந்திர ஓலைநாயகப் பதவி கிட்டியாயிறே!  சோழநாட்டை நடத்திச்செல்லும் பெரும்பொறுப்பைக் கையூட்டாய்க் கொடுத்து உம் வாயைச் சக்கரவர்த்தியார் மூடி விட்டார்.  போர் ஆலோசனைகளிலும், தமிழ்த்திருப்பணி விஷயங்களிலும்தானே நீர் வாயைத் திறப்பீர்? போதாக்குறைக்கு மன்னரும் உம்மைத் தம் நண்பனாகவேறு வரித்துவிட்டார்.  இனி என் அருள் உமக்கு எதற்காகத் தேவைப்படும்?  நான்தான் உம்மிடம் கையேந்தி நிற்க வேண்டும்!"

சிவாச்சாரி தூண்டிலில் சிக்கிய மீனாகத் துடிப்பதைக் கண்டு மனதிற்குள் ரசிக்கிறாள்.

"மகாராணியாரே!  என்னைப் பொருத்தருள்வீர்களாக! சக்ரவர்த்தியார் யாரையும் இவ்விஷயத்தில் ஆலோசனை கேட்கவே இல்லை. கோப்பரகேசரியாரிடம், 'யாம் சிவாச்சாரியாரைத் திருமந்திர ஓலைநாயகமாக நியமிக்கிறோம்.  இதை நீ மற்றவருக்கு உடனே அறிவிப்பாயாக' என ஆணையிட்டுவிட்டு, அடுத்த கணமே என்னிடம், 'ஓலைநாயகரே, உமக்கு எம் முதல் ஆணையைப் பிறப்பிக்கிறோம். இன்னும் ஒரே வாரத்தில் இராஜேந்திரனுக்கு முடிசூட்டு விழா நடத்த விருப்பமாக உள்ளோம். அதை நீர் உடனே நிறைவேற்றுவீராக' என்று சொன்னபின் அவரது ஆணைகளக் கோப்பரகேசரியாரோ, நானோ மீற இயலுமா? மாறாகச் செயல்படத்தான் கூடுமா? நீங்களே சொல்லுங்கள் மகாராணியாரே!" என்று அவளைச் சமாதானப்படுத்த முயல்கிறான்.

தனக்குள் பொங்கிவரும் சிரிப்பை அடக்கிக்கொண்டு, "என்னைச் அமைதிகொள்ள என்னென்னவோ கதைகளைச் சொல்கிறீர் சிவாச்சாரியாரே! அதுபோகட்டும்.  முடிசூட்டுவிழாவில் மன்னரருகில் பட்டத்து ராணியாக யாரை அமர்த்திவைத்தீர்?" என்ற கேள்விக்கணையைத் தொடுக்கிறாள்.

"மகாராணியாரே!  சக்கரவர்த்தியாரின் ஆணையை மீறக்கூடாது. ஆனால், தன் பட்டத்துராணிதான் தனதருகில் இருக்க வேண்டும் என்று மன்னர் உறுதியாகக் கூறிவிட்டார்.  ஆகவே, உங்கள் திருவுருவப்படத்தை அருகில் வைத்து, அதில் தாங்கள் இருப்பதாக மந்திரத்தின் வாயிலாக உறுதிசெய்ய வைத்த பின்னரே முடிசூடினார்.

"சக்கரவர்த்தி அவர்களைத் தாங்கள் நேரில் காணவில்லை, மகாராணியாரே!  ஆறாயிரம் பாண்டிய வீரர்களை உயிரிழக்கச் செய்ததற்குப் பிராயச்சித்தம் தேடவும், சோழர்தம் பெருமையை நிலைநாட்டவும் – அறுபத்தைந்து வயதிலும் தன்னைவிட வயதில் மிகவும் இளையவரான பாண்டிய மன்னருடன் இருநாழிகைப் பொழுது வாட்போர் புரிந்து – இருபத்தொன்று விழுப்புண்களைச் சுமந்து வெற்றிவாகை சூடித் திரும்பியவர் ஆணையிடும்போது – தனது உயிர் தங்குமோ, சோழவள நாடு மன்னனின்றிப் போய்விடுமோ என்ற அச்சத்துடன் அவர் பிறப்பித்த ஆணையை யாரால் மறுக்க இயலும் மகாராணியாரே?"

சிவாச்சாரியின் உருக்கம் அவள் மனத்தை உருக்கி விடுகிறது.

"சிவாச்சாரியாரே!  அறியாமை இருளில் மூழ்கி இருந்துவிட்ட என்னை வெளிச்சத்திற்குக் கொணர்ந்தீர்களைய்யா! சக்கரவர்த்தியாரின் உடல்நிலையைப் பற்றி மன்னர் அவரது திருமுகத்தில் எதுவும் எழுதவில்லை; நீரும் அதைப்பற்றிப் பேசவில்லை. பாண்டியரைப் போரில் வெற்றிவாகை சூடிச் சக்கரவர்த்தியார் தஞ்சைக்கு வீரவிஜயம் தந்துள்ளார் எனப் பூரித்திருந்தேன். மன்னர் இல்லாதபோதும் சோழப்புலியாகப் பாண்டியர்தம்மை வேட்டையாடினார் என்றல்லவா எண்ணினேன்? அதனால்தான் உம்மைச் சீண்டினேன். நாம் விரைவில் தஞ்சை செல்ல வேண்டும்.  அதற்கான ஏற்பாட்டைச் செய்யும்.  நல்லவேளையாகக் குந்தவியையும் அழைத்து வந்திருக்கிறீர்.  சக்கரவர்த்தியாரை நேரில் கண்டால்தான் என் மனம் நிம்மதியடையும்" திரிபுவன மகாதேவியின் குரலில் இருந்த ஆதங்கம், சிவாச்சாரியனுக்கு நன்றாகத் தெரிகிறது.

"மகாராணியாரே!  சக்ரவர்த்தியாரின் உடல்நிலை நன்றாகத் தேறிவருகிறது.  இனிமேல் அரசுநிர்வாகத்தைக் கோப்பரகேசரியாரே நடத்திவர வேண்டும் என்ற தன் விருப்பத்தைத் தெரிவித்தார்கள். தான் ஓய்வெடுத்துக்கொண்டு தமிழ்த் திருப்பணியில் முழுக் கவனத்தையும் செலுத்தப்போவதாகவும், அதற்காக நான் அவர்களுடன் பணியாற்ற வேண்டும் என்றும் ஆணையிட்டுவிட்டார்கள். சக்கரவர்த்தி அவர்களின் உடல்நிலை பற்றி வதந்தி எதுவும் பரவக்கூடாது என்றுதான் நான் வேங்கைநாட்டு மன்னரிடமோ, குந்தவி ராணியாரிடமோ எதுவும் கூறவில்லை. தங்களுக்கு நிலைமை தெரிந்தாக வேண்டும் என்றே தனியாக உங்களுக்கு எல்லா விவரத்தையும் தெரிவிக்கிறேன். எனவே, தாங்களும் தஞ்சை வந்து சேரும்வரை சக்கரவர்த்தி அவர்களின் உடல்நிலை பற்றிய சேதியை ரகசியமாக வைத்துக்கொள்ளும்படி வேண்டுகிறேன்." தணிந்த குரலில் வேண்டிக்கொள்கிறான் சிவாச்சாரி.

"அப்படியே செய்கிறேன் சிவாச்சாரியாரே!" என்று உறுதி அளிக்கிறாள் திரிபுவன மகாதேவி. 

"அம்மா, நிலவுமொழியைப் பாரம்மா, நான் விளையாடக் கூப்பிட்டால் வரமாட்டேன் என்கிறாள்" என்று செல்லமாகக் குறைகூறிக்கொண்டே கூடாரத்திற்குள் நுழைகிறாள் அம்மங்கை.

நெல்லை அரண்மனை, தென்பாண்டிநாடு

பரிதாபி, புரட்டாசி 20 – அக்டோபர் 5, 1012

விக்கிரம பாண்டியனின் முகத்தில் தோன்றிய உணர்ச்சிகளை வெற்றிவீரனால் புரிந்துகொள்ள இயலவில்லை. தந்தை அமரபுஜங்கன் தஞ்சை சிறையில் இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கொணர்ந்த தூதுவனை ஒன்றுமே பேசாமல் திருப்பி அனுப்பிவிட்டு கன்னத்தில் கைகளை ஊன்றியவாறு அமர்ந்திருக்கிறான் விக்கிரமன். அவனது நிலைமை வெற்றிவீரனுக்கு இனம்புரியாத கலக்கத்தை உண்டாக்குகிறது.

தஞ்சை சிறையில் அமரபுஜங்கன் இருபது நாட்களுக்கு முன்னர் இறந்துவிட்டார் என்ற இராஜராஜரின் அனுதாபச் செய்தியை சோழத்தூதுவன் மதுரைக்குக் கொணர்ந்தான். அமரபுஜங்கன் இறந்தவுடனேயே அருகில் இருந்த சிறைக் காவலனின் உடைவாளைச் சட்டென்று உருவி, தங்கள் குலவழக்கப்படி வீரத்திருமாறன் தனது கழுத்தைத் தானே அறுத்துக்கொண்டு உயிர்நீத்தான் என்றும் அச்செய்தி தெரிவித்திருந்தது.

நெல்லை மாளிகையில் இருக்கும் விக்கிரமனுக்கு இச்செய்தி பற்றி பாண்டிய அமைச்சர் அனுப்பிய ஓலைதான் சற்றுமுன் வந்துசேர்ந்திருக்கிறது. அந்த ஓலையில் இருக்கும் செய்தியை அறிந்த விக்கிரமன்தான் இப்படிப் பித்துப்பிடித்தவன்போல அமர்ந்திருக்கிறான்.

தமையனை இழந்த வருத்தம் வெற்றிவீரனுக்கு இருந்தாலும், போரில் மன்னர் உயிர் துறந்தால் தானும் உயிரைத் துறக்க வேண்டும் என்னும் குலவழக்கத்தைச் சிறையில்கூட நிலைநாட்டியது அவனுக்கு ஒருபுறம் பெருமையாகத்தான் இருக்கிறது. தனது பாட்டனார் வெற்றிமாறன் தனது மன்னருக்காகப் பழிவாங்கிவிட்டுத்தானே தனது உயிரை மாய்த்துக் கொண்டார்!

இனி, விக்கிரமனின் உயிருக்காக உயிரைக் கொடுக்கும் கடமை தனக்கு வந்து சேர்ந்திருக்கிறது என்பதையும் அறிந்துகொள்கிறான். விக்கிரமனுக்கு ஏதாவது ஆறுதல் சொல்ல வேண்டும் போலத்தான் இருக்கிறது. வெற்றிவீரன் அவனைத் தூக்கி வளர்த்தவனாயிற்றே! இனி விக்கிரமனை மறைவாக வைத்துப் பாதுகாக்கும் பொறுப்பு அவனுக்கு வந்து சேர்ந்திருக்கிறது. அதைப் பற்றி அமரபுஜங்கனின் ஆணையை வீரமாறன் அவனுக்குத் தெளிவாகவே சொல்லிவிட்டுத்தான் சென்றிருந்தான்.

… "வெற்றிவீரா! போரில் நாம் வெற்றி பெறுவது உறுதிதான். தற்பொழுது அரசர் இல்லாதபோது மதுரை அவ்வளவு பாதுகாப்பான இடம் அல்ல. சோழ ஒற்றர்கள் நடமாட்டம் அதிகமாகிவிட்டது. ஆகவே, இளவரசரை நெல்லைக்கு அழைத்துச் சென்றுவிடு. என்றுமே தென்பாண்டிச் சீமையில் உள்ளவர்களுக்கு அரசப்பற்று மிக அதிகம். எங்களது வெற்றிச்செய்தி வந்ததும் இளவரசரை அழைத்துக்கொண்டு மதுரை வந்துசேர். இருப்பினும், மாறாக ஏதாவது நடந்தால் இளவரசரை சோழர்களிடமிருந்து மறைத்துவைத்துக் காப்பாற்றுவது உன் பொறுப்பு" என்று தெள்ளத் தெளிவாகச் சொன்னதொடு மட்டுமல்லாமல், வீரமாறன் தன்னிடம் அமரபுஜங்கன் மீன் இலச்சினை பதித்துக் கொடுத்த திருமுகத்தையும் கொடுத்து, "மாறான செய்தி வந்தால் மட்டுமே இத்திருமுகத்தை இளவரசரிடம் நீ கொடுக்க வேண்டும். வெற்றிச் செய்தி வந்தால் இதைத் திரும்ப என் மூலம் அரசருக்கு சேர்ப்பித்துவிட வேண்டும் என்பது மன்னரின் ஆணை. காளையப்பனை இளவரசரின் வலதுகரமாக இருக்கச் சொல்" என்றும் சொல்லியிருந்தான்.

… விக்கிரமனின் நெடுநேர அமைதி அவனுக்கு யுகக்கணக்காகக் காத்திருப்பதுபோலத் தோன்றுகிறது. கடைசியாக அமைதியைக் கலைக்கிறான் விக்கிரமன். "எழுந்திரும், வெற்றிவீரரே, நாம் மதுரைக்குச் செல்வோம். படையைத் திரட்டி தந்தையாரின் அவப்பெயரை நீக்கத் தஞ்சையைத் தவிடுபொடியாக்குவோம். என் உயிரைக் கொடுத்தாவது இதைச் சாதிப்போம்!" விக்ரமனின் குரலில் வீரம் இருக்கிறது. கண்களில் இலேசாகப் பனித்த கண்ணீரும் வீரத்தின் அனலில் வற்றியது வெற்றிவீரனுக்கு நன்றாகத் தெரிந்தது.

"அரசே!" வழக்கமாக அழைக்கும் இளவரசே என்ற அடைமொழியை விட்டுவிட்டு, முதன்முதலாக, அரசே என்று விக்கிரமனை விளிக்கிறான்.

"அரசே! தான் வீரசொர்க்கம் அடைந்தால் தங்களிடம் கொடுக்கச்சொல்லி மன்னர் இத்திருமுகத்தை என் அண்ணன் மூலம் அனுப்பியிருந்தார். இதோ, அத்திருமுகம்" என்று தனது இடுப்பில் கட்டிவைத்திருந்த திருமுகத்தை விக்கிரமனிடம் கொடுக்கிறான் வெற்றிவீரன்.

விக்கிரமனின் கண்கள் பெரிதாக விரிகின்றன. தன் தந்தையார் தனக்குக் கடைசியாக அனுப்பிய செய்தியா? அப்படியானால் தான் தோல்வியுறுவோம் என்று எதிர்பார்த்தாரா அல்லது வீரசுவர்க்கம் அடைந்தாலும் அடைவோம் என்று நினைத்தாரா? வெற்றி நிச்சயம் என்று அனைவரிடமும் வீரமுழக்கம் செய்தவர், மரண சாசனத்தை ஏன் எழுதிக் கொடுத்திருந்தார்? அவசரம் அவசரமாக மீன் இலச்சினையை உடைத்து, திருமுகத்தைப் பிரித்து வாய்விட்டுப் படிக்கிறான்.

"நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க! என் அருமை மைந்தா, இத்திருமுகத்தை நீ படிக்க நேரிட்டால் நான் இவ்வுலகை விட்டுச் சொக்கநாதனின் திருவடிகளைச் சேர்ந்துவிட்டேன் என்று அறிவாயாக. 'தென்னாடுடைய இறைவனான நீ ஆண்ட மதுரை மாற்றானுக்குத் திறை செலுத்தவேண்டிய சூழ்நிலையால் ஏற்பட்ட அவச்சொல்லை எத்தனை நாட்கள்தான் தாங்குவேனய்யா, உன்னிடம் சேர்த்துக்கொள்!' என்று அவனுடைய திருவடியைச் சரணடைந்து விட்டேன் என்பதுதான் உண்மையாகும். என் இறைவன் திருவிளையாடல்கள் பல நிகழ்த்திய மதுரையைத் திறை செலுத்தும் அடிமையாகவிட்ட நான், நமது முன்னோர்களின் அரியணையில், அவர்கள் அணிந்த மகுடத்தை அணிந்து, அவர்களது வீர வாளையும், செங்கோலையும் ஏந்தி எப்படி ஆட்சிசெய்வது என்று நொந்துதான். அவற்றையெல்லாம் இலங்கையில் பாதுகாப்பாக வைத்துவிட்டேன் என்பது உனக்கே தெரியும்.

"அந்நிலையை மாற்ற வேண்டும். மதுரையின் பெருமையை நிலைநாட்ட வேண்டும் என்ற அவாவில்தான் நான் அலைந்து திரிந்து படை திரட்டி இராஜராஜனைச் சிறைப்பிடிக்கச் செல்கிறேன். அந்த உன்னதமான முயற்சி நிறைவேறக்கூடாது என்று சொக்கநாதன் முடிவு எடுத்துவிட்டால்தான் இத்திருமுகம் உன் கைக்குக் கிடைக்கும்.

"அப்படி இது உன் கையில் கிடைத்தால், உன் தந்தை உன்னிடம் கேட்டுக்கொள்வது இதுதான். அவசரப்பட்டு உடனே தஞ்சைக்குப் படையெடுத்து வராதே! உன் உயிரைக் காப்பாற்றிக்கொள். மதுரைக்கு வராதே! உன் தந்தை இப்படிச் சொல்கிறானே என்று நினைக்காதே!

"யாருக்கும் அடிபணியாமல் மதுரையை ஆட்சி செய்பவன் மட்டும்தான் நமது முன்னோர்கள் நமக்கு அளித்த அரியணையில் அமரவோ, வீரவாளையும், செங்கோலையும் தாங்கவோ உரிமையுள்ளவன். ஆகவே, எனது இந்தக் கடைசி விருப்பத்தை நமது சந்ததிகளுக்குச் சொல்லி வருவாயாக. எந்தப் பாண்டிய மன்னனுக்கும் தனது முன்னோரின் அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்ய வேண்டும் என்ற அவா இருக்கத்தான் இருக்கும். அதை நிறைவேற்ற வேண்டும் என்றால், மதுரையை மீட்க வேண்டும். அப்படி மதுரையை மீட்பவன்தான் தன்னை உண்மையாகவே பாண்டிய மன்னன் என்று சொல்லிக்கொள்ளும் தகுதியை அடைகிறான். அப்படிப்பட்ட பெருமையைப் பெறும் வரை நமது வழித்தோன்றல்கள் ஒவ்வொருவரும் முயன்றுகொண்டே இருக்கவேண்டும் என்பதுதான் எனது கடைசி அவா.

"இந்த அவாவை நிறைவேற்ற வேண்டும் என்றால் கவனமாகச் செயல்பட வேண்டும். சரியான நேரம் வரும்வரை அமைதியாக இருந்து மதுரையை மீட்க வேண்டும். இப்பொழுது நீ இருக்க வேண்டிய இடம் மதுரை அல்ல; நெல்லைதான். பொறுமையாகச் செயல்படு. பாண்டியரை அடக்கி விட்டோம் என்று சோழர்கள் ஒரு நாள்கூட அமைதியாகத் தூங்கக்கூடாது. கடலில் இறங்கிய சோழப்புலியை, பாண்டிய மீன் என்று விழுங்கி ஏப்பம் விடுமென்று பயந்து கொண்டேதான் இருக்கவேண்டும். இந்த உணர்ச்சிப் பெருக்கை, வேட்கையை, மதுரையை மீட்க வேண்டும் என்ற வெறிச்சுடரை, அணையாமல் நமது வழித்தோன்றல்களின் ஒவ்வொரு மூச்சிலும் கலக்கச் செய்வாயாக. இதுதான் நீ பாண்டியனாக எனக்குச் செய்ய வேண்டிய இறுதிச் சடங்கு.

"மதுரையை மீட்கும் வரை நமது வழித்தோன்றல்கள் ஒவ்வொருவருக்கும் இத்திருமுகத்தைக் காட்டி வளர்க்க வேண்டும்.

"தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!" 

திருமுகத்தைப் படித்து முடித்த விக்கிரமனின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாகப் பெருகுகிறது.

"தந்தையே! உறையூரும், தஞ்சையும் நெருப்பில் கருகும் வரை இனி சோழர்களுக்கு நிம்மதி இருக்காது! உங்கள் இலட்சியம் நிறைவேறும். மதுரை மீட்கப்படும்! இது உங்கள் மீது ஆணை! மதுரையை ஆளும் சொக்கநாதன் மீது ஆணை!! உலகநாயகியான மீனாட்சி மீது ஆணை!!!" என்று உரக்கக் கத்திய விக்கிரமன், தனது உடைவாளை எடுத்து வலது உள்ளங்கையைக் கீறிப் பெருகும் குருதியில் உறுதிமொழி எடுக்கிறான்.

வங்கக் கடலில், நாகைப்பட்டினத்திற்கு அருகில்

பரிதாபி, புரட்டாசி 21 – அக்டோபர் 6, 1012

த்தனை தடவைகள் வாந்தியெடுத்தோம் என்ற கணக்கே நிலவுமொழிக்கு மறந்து போய்விடுகிறது.

… யானை மீதோ, குதிரை பூட்டிய ரதத்திலோ சென்றால் அதிக நாட்கள் ஆகிவிடும் என்று நினைத்த சிவாச்சாரி, விரைவாகச் செல்லவேண்டிச் சோழநாட்டின் சிறப்பான நாவாய் ஒன்றில் அனைவரும் பயணிக்க ஏற்பாடு செய்திருந்தான். நிலத்தில் பயணம் செய்தால் அலுப்பாக இருக்கும். உண்ண, உறங்க, ஓய்வெடுக்க என்று நேரம் கழிந்துவிடும். ஆனால், நாவாய் இரவு பகலாகச் சென்றுகொண்டே இருக்கும். எனவே, பயணம் மெதுவாக இருப்பினும் விரைவில் முடிந்துவிடும் என்று காரணம் கூறினான்.

அரச குடும்பத்தினர் யாரும் அதற்குத் தடையேதும் கூறவில்லை. சோழ மகாராணியாரும், இளவரசியும் மற்றும் வேங்கைநாட்டு மகாராணியும், இளவரசரும் வருகிறார்கள் என்று நாவாயில் உபசாரம் தடபுடலாக இருந்தது. அவர்கள் பயணிக்கும் நாவாய்க்குப் பாதுகாப்பாக அதைச் சுற்றிலும் ஐந்து நாவாய்கள் கடற்படை வீரர்களுடன் வந்துகொண்டிருந்தன.

அவர்களுக்குக் கிடைத்த இன்ப அதிர்ச்சி என்னவென்றால், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக ஸ்ரீவிஜயத்திற்குச் சென்றிருந்த இராஜேந்திரதேவன் நாவாயில் அவர்களை வரவேற்றதுதான்.

அண்ணனைக் கண்ட மகிழ்ச்சியில் அம்மங்கை ஆரவாரித்தாள். இத்தனை பெண்களுக்கு நடுவே எப்படிப் பொழுதைக் கழிக்கப்போகிறோம் என்று தயங்கிய இராஜராஜ நரேந்திரனும் அம்மானின் மகனைக் கண்டதும் உவகைகொண்டான். அவர்கள் இருவரும் ஒவ்வொரு கப்பலாகச் சென்று பார்த்துப் பொழுதைப் போக்கினார்கள்.

ஆனால், அலையில் நாவாய் தொப்தொப்பென்று ஒவ்வொரு தடவை எழுந்து விழும்பொழுதும் அது சாய்ந்துவிடுமோ, கடலிலேயே தாங்கள் மூழ்கிவிடுவோமோ என்று பயந்த நிலவுமொழிக்குத்தான் வயிற்றைக் கலக்கியது தலைசுற்றியது.

திருமயிலையில் வாழ்ந்து வந்த அவளுக்குக் கடல் புதிதல்ல. பல தடவை கடற்கரையில் அலைகளில் நின்று, அவை கால்களை வருடுவதை இரசித்திருக்கிறாள். சிலசமயம் தன் தோழிகளுடன் நீராடவும் செய்திருக்கிறாள். இருந்தாலும், பருவத்திற்கு வந்த பிறகு தந்தையின் விருப்பத்திற்கிணங்க கடலில் நீராடுவதை விட்டுவிட்டாள். கால்கள் நிலத்தில் பதிந்து இருக்கும்பொழுது அலையில் விளையாடுவது வேறு, அலைகள் தூக்கிப்போட்டு விளையாடும் நாவாயில் இருப்பது வேறு என்று அவளுக்கு நன்றாகவே அந்தப் பயணம் விளக்கியது.

அவளது அச்சம் அம்மங்கைக்கு விளையாட்டாக இருந்தது.

"நிலா! பொதுவாகக் கருவுற்ற பெண்கள்தான் வாந்தியெடுப்பார்கள். நீ எதற்காக வாந்தியெடுக்கிறாய்?" என்று கேட்டுக் கிண்டல் செய்தாள்.

குந்தவிதான், "மங்கை! இவளே பாவம் கடல்நோவால் வருந்துகிறாள். இதுவா நகையாடும் நேரம்? ஆறுதலாக இரண்டு சொற்கள் கூறாவிட்டாலும் பரிகசிக்காதே!" என்று விளையாட்டாக அதட்டினாள்.

திரிபுவன மகாதேவியோ தினமும் ஓரிரு மணி நேரம் சிவாச்சாரியனுடன் ஏதோ அரசுச் செய்திகளையே பேசிக்கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் அவர்கள் இருவரும் அதற்காகவே ஆலோசனை அறைக்குச் சென்றுவிடுவார்கள். எனவே, சிவாச்சாரி அவர்களுடன் வருவது அவர்களுக்குத் துணையாக மட்டுமல்ல, இராஜேந்திரன் சோழப்பேரரசின் பட்டப்பொறுப்பை ஏற்றதால், பட்டத்துராணியான திரிபுவன மகாதேவிக்கு அரசு விவகாரங்களை எடுத்துச் சொல்லவும்தான் என்று அனைவரும் புரிந்துகொண்டனர்.

தனது கடல் நோவிலிருந்து மனதைத் திருப்ப நிலவுமொழி அவ்வப்பொழுது நரேந்திரனுக்குத் தமிழ்ப்பேச்சு கற்றுக்கொடுக்கும் பணியைச் செய்து வந்தாள். அப்பொழுதெல்லாம் சிவாச்சாரியனும் தானும் பேசியது நினைவுக்கு வந்தது.

குந்தவியின் அரண்மனையில் அவனைத் தனியாகச் சந்தித்த நிலவுமொழி கண்ணீர் விட்டு அழுததைக் கண்டு பதறிவிட்டான், சிவாச்சாரி. "ஏனம்மா நிலா, என்ன ஆயிற்று? வீட்டு நினைவு வந்துவிட்டதா?" என்று பரிவுடன் விசாரித்தான்.

"இல்லை ஐயா. மறந்தால்தானே வீடு நினைவுக்கு வரும்? அதுவல்ல, என் கண்ணீருக்குக் காரணம். வேங்கைநாட்டு இளவரசரை நினைத்தால்தான் எனக்கு பயமாக இருக்கிறது!"

"ஏன்? அவர் தமிழ் கற்றுக்கொள்ள மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறாரா? இல்லை கற்றுக்கொடுக்கும்போது உன்னை அதட்டுகிறாரா? உன்னிடம் சினம்கொள்கிறாரா?" என்று மீண்டும் பரிவுடன் சிவாச்சாரி கேட்டதற்கு இல்லையென்று தலையை ஆட்டினாள் நிலவுமொழி. 

"அவர் தமிழைக் கற்பதைவிட என்னைக் கற்கத்தான் விரும்புகிறார்போலத் தெரிகிறது. இளவரசரான அவர் எங்கே? கோவிலில் ஓதுவாராகப் பணியாற்றுபவரின் மகளான நானெங்கே? தவிர, கற்றுக்கொடுப்பவளைக் கற்றுக்கொள்ள நினைப்பது தகுமா? அது அறமாகுமா?" என்று கேள்விகளாகப் பதில்சொல்லும்பொழுது நிலவுமொழியின் கண்களில் தாரைதாரையாகக் கண்ணீர் வழிகிறது.

"அழாதே அம்மா!" என்று தனது உத்தரீயத்தால் அவளது கண்ணீரைத் துடைத்தான் சிவாச்சாரி.

"உன்னை மகளாக மன்னர் இராஜேந்திரர் ஏற்றுக் கொண்டிருக்கிறாரே! அரசிளங்குமரிக்கு இணையான நீ அழலாமா? நான் இங்கு புறப்பட்டு வருவதற்கு முன்னர்கூட தனது தத்து மகளான நீ எப்படி இருக்கிறாய், உனக்குக் குறையேதும் இல்லையே என்று பார்த்து வரும்படி என்னைப் பணித்தார். உன் மீது சோழப் பேரரசரே அக்கறை எடுத்துக் கொள்ளும்போது உன் மதிப்பு எவ்வளவு உயர்வானது என்று அறிந்துகொண்டாயா! அதனால் உன் மதிப்பை நீயே குறைத்து மதிப்பிட்டுக் கொள்ளாதே! ஆனால், இப்படி ஒரு இக்கட்டான நிலை உனக்கு வந்துசேரும் என்று நான் நினைக்கவில்லை. நிலைமை கையைமீறிப் போனால் உன்னைப் பாதுகாத்துக் கொள்ள இவ்வாறு செய். வேங்கைநாட்டு இளவரசர் அடங்கிவிடுவார்!" என்று தணிந்த குரலில் அவளுக்கு நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்று எடுத்துரைத்தான் சிவாச்சாரி.

அதைக் கேட்டதும் நிலவுமொழியின் முகத்தில் நிம்மதி பிறந்தது.

"அப்படியே செய்துவிடுகிறேன் ஐயா! உங்களோடு பேசியதில் என் மனதில் இருந்த பெரிய பளு இறங்கிவிட்டது" அவள் முகத்தில் இலேசான புன்னகை மலர்ந்தது.

"கவலைப்படாதே. உன் மன நிம்மதிக்கு எக்குறையும் வராது" என்று சொல்லிவிட்டு, நம்பிக்கையூட்டும் புன்னகையுடன் அவளை விட்டுவிட்டுச் சென்றான் சிவாச்சாரி.

சிவாச்சாரி ஒரு சிறந்த ராஜதந்திரி என்று நிலவுமொழி கேள்விப்பட்டிருக்கிறாள். நரேந்திரனைச் சமாளிக்க அவன் சொல்லிக்கொடுத்த வழி எவ்வளவு எளிதானது, அது எப்படித் தன்னைக் காப்பாற்றும் என்று நினைத்துப் பார்த்துப்பார்த்து நிம்மதிகொண்டாள்.

ஆனால், அந்த வழி அவளைக் காப்பாற்றினாலும், மற்றொரு வகையில் அது சிவாச்சாரியனின் இலட்சியத்திற்கு எதிராகச் செயல்படும் என்பதைச் சிவாச்சாரியானாலும் அறிந்துகொள்ள இயலாமல்தான் போய்விட்டது.

…"அத்தை, நாகைப்பட்டினம் தெரிகிறது, வந்து பாருங்கள்" என்று தனகே உரித்தான குழந்தைத்தனத்துடன் குதூகலத்துடன் குந்தவியை அம்மங்கை அழைப்பது நிலவுமொழியின் காதில் விழுகிறது. ஒருவழியாகத் தனது கடல்நோவுக்கு ஒரு முடிவு வரப்போகிறது என்பதை உணர்ந்து நிம்மதிகொள்கிறாள் அவள்.

ஒரு நாழிகை சென்றவுடன் நாவாய் கடலிலேயே நின்றுவிடுகிறது. மீகாமன் ஒருவன் நங்கூரத்தைத் தூக்கிக் கடலில் வீசுகிறான். மீண்டும் படகில்தான் கரைக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தால் நிலவுமொழிக்கு வயிற்றைக் கலக்குகிறது.

அருகில் இருந்த ஒருவனிடம், "ஏன் நாவாயைக் கரைக்குச் செலுத்தக்கூடாது? நடுக்கடலில் நிறுத்துகிறீர்கள்?" என்று வினவுகிறாள்.

ஏதோ ஒரு நகைச்சுவையைக் கேட்ட மாதிரி அந்த மாலுமி அவளைப் பார்த்துச் சிரிக்கிறான். நாவாய்க்குச் சொந்தக்காரரான நகரத்தார் ஒருவர் அவளைப் பரிவாகப் பார்க்கிறார்.

"அம்மா, இந்த நாவாய் நிற்க நிறைய ஆழம் வேண்டும். நாகைக் கடற்கரைக்கு அருகில் அந்த அளவு ஆழம் இல்லை. அதனால், குறைந்த ஆழத்தில் செல்லக்கூடிய படகுகளில் உங்களை அழைத்துச் செல்லப்போகிறோம்" என்று புன்னகையுடன் கூறுகிறார்.

காவிரிப்பூம்பட்டினத்துத் தன வணிகர்களான அவர்கள் திரைகடலோடியும் திரவியம் தேடுபவர் ஆவர். அவர்களுடைய கடல்கடந்த வணிகம், சுங்கவரி வாயிலாகச் சோழநாட்டுக்கு அளவற்ற செல்வத்தைக் கொணர்கிறது. அதனால் அவர்களின் கடலாடும் வணிகத்திற்குச் சோழப் பேரரசும் பாதுகாப்பு கொடுத்து வருகிறது. அந்த நன்றிக்காக தங்களுடைய ஆடம்பரமான, நீண்ட பயணம் போகக்கூடிய நாவாய்களை அரசுப்பணிக்கு அவ்வப்போது கொடுத்து உதவி வருகிறார்கள்.

அந்த நகரத்தாரைப் பார்த்தால் நிலவுமொழிக்குத் தனது தந்தையின் நினைவு வருகிறது.

"ஐயா, ஏன் கடற்கரையை ஆழப்படுத்தக் கூடாது? பெருவுடையார் கோவிலைக் கட்டிய சக்கரவர்த்திகளிடம் தாங்கள் வேண்டிக்கொள்ளலாமே?" என்ற கேள்விக்குப் புன்னகையே பதிலாகத் தருகிறார் நகரத்தார்.

அவளுடைய கருத்து எதிர்காலத்தில் அமுல்படுத்தப்பட்டுப் பெரிய துறைமுகங்கள் எழுப்பப்படும் என்பதை அப்போது அவரால் அறிய இயலுமானால் அப்படி அவர் புன்னகைத்திருக்க மாட்டார்.

அரச குடும்பத்தினரை கரைக்கு அழைத்துச்செல்ல நாவாய்க்கருகில் படகுகள் நிறுத்தப்படுகின்றன.

(தொடரும்)

Other Articles

No stories found.