பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு – இரண்டாம் பாகம் – திருப்பணித் துவக்கம்

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு – இரண்டாம் பாகம் – திருப்பணித் துவக்கம்

ஒரு அரிசோனன்

அறிமுகம்

ஆசிரியன் குறிப்பு:  எனது முகநூல் நண்பர்களும், வாட்ஸ் அப் குழும உறுப்பினரும், இன்னும் சிலபலரும் என்னுடன் தொடர்பு கொண்டு சில கேள்விகளைக் கேட்டார்கள்.   அவர்களுக்குக் கொடுத்த விளக்கத்தை உங்களுக்கும் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.  என்னை நேரடியாகத் தொடர்புகொள்வதற்குப் பதிலாக, உங்களுக்குத் தோன்றும் நிறை, குறைகள் அனைத்தையும் அந்தந்த அத்தியாயங்களில் இறுதியில் கல்கி இணையத்தில் பதிந்தால்  — என்னையும் ஒரு பொருட்டாக மதித்து, அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தின் பெயரை என் புதினத்திற்கும் சூட்டிய கல்கி இணையத்தோருக்கு மகிழ்வுட்டும்;  ஆசிரியனான எனக்கும், புதினத்தைப் படிக்கும் மற்றருக்கும் உற்சாகத்தைக் கொடுக்கும்.

'ஏனைய்யா, ஒரு அரிசோனரே!  சரித்திரக்கதை என்று சொல்லிவிட்டு, எதிர்காலத்தைப் பற்றி ஏதேதோ எழுதினீர்?  அதற்கு ஏதேதோ சமாதானமும் சொன்னீர்?  பொன்னியின் செல்வன் என்று எங்களைத் தூண்டில்போட்டு இழுத்துவிட்டு, ஹோட்டல் சாம்ராட் ராஜ்ராஜ் என்று மாடிக் கட்டிடத்தையும், தஞ்சைப் பெரியகோவிலையும் மட்டும் காட்டினால் போதுமா?  எப்போதையா பொன்னியின் செல்வனைக் அறிமுகப்படுத்துவீர்? முதல்பாகமும் முடிந்துவிட்டது.  பொன்னியின் செல்வனைக் காணவிடாது, இரண்டு கட்டுரைகள் எழுதிப் 'போர'டிக்கிறீரே?' என்று நீங்கள் அலுத்துக்கொள்வதுபோல எனக்கும் படுகிறது.  அதற்குத்தான் இந்த அறிமுகம்.

இரண்டாம் பாகம்: அறிமுகம்:

ஒரு பேரரசர் அரசவைக்கு வருகிறார் என்றால், அதை அறிவிக்கக் கட்டியங்காரன் தடபுடலாக அறிவிப்பதில்லையா?  அதுபோல 'பொன்னியின் செல்வர் வருகிறார்,' என அறிவித்துத்தானே உங்கள்  ஆவலைத் தூண்டமுடியும்?  அதைத்தான் இப்பொழுது செய்கிறேன்.

"மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை

வரிவளர்க்கை மடமானி

பங்கயற்செல்வி பாண்டிமா தேவி'

என்று மங்கையற்கரசியாரைப் புகழ்ந்து பாடுகிறார், காழிப்பிள்ளையாரான திருஞானசம்பந்தர்.  அப்படியொரு பெருமை, மங்கையர்க்கரசியாருக்கு!  வளவர் என அறியப்பட்ட சோழர்குலத்து இளவரசி, மதுரைக் கூன்பாண்டியனை மணந்து பாண்டிமாதேவியாகிறாள்.  சமணத்தில் மூழ்கிச் சைவத்தை மறந்துதுறந்த அவனைச் சைவத்துக்கு ஈர்க்கிறாள்.  அப்படிப்பட்ட மண உறவுகொண்டு நட்புடன் பழகிய சோழரும், பாண்டியரும் எப்படிப் பரமவிரோதிகள் ஆனார்கள்? சோழருக்கும் பாண்டியருக்கும் தீராப்பகை உருவான காரணத்தை இப்புதினத்தின் இரண்டாம் பாகத்து இடைச்செருகல் தெரிவிக்கிறது.

அமரர் கல்கி அவரது அழியாக் காவியமான பொன்னியின் செல்வனில், அருண்மொழித் தேவர் அரியணையை விட்டுக்கொடுத்த காரணத்தை அழகுறத் தீட்டினார்.  ஆதித்த கரிகாலனின் இறப்பை நமது ஊகத்துக்கு விட்டுவிட்டார்.  ஆதித்தனின் இறப்பை ஏரணமூலம் இப்புதினத்தில் வரைந்துள்ளேன்.

இப்புதினம் அருண்மொழித் தேவர், இராஜராஜசோழப் பேரரசராகத் தஞ்சைப் பெரியகோவிலைக் கட்டியபின்னர் தொடங்குகிறது.  அவரது தமிழ்க்கனவையும், அவரது பேரரசு முழுவதும் தமிழன்னை கோலோச்ச, அதற்கு அவரது குரு கருவூர்த்தேவர் தீட்டிக்கொடுத்த திட்டத்தையும் விவரிக்கிறது.

இரண்டாம் பாகத்தில் வரும் முக்கிய பாத்திரங்களை – வரலாற்று நாயகர்களையும், புனைவுப்பாத்திரங்களையும் — உங்களுக்குக் கட்டியங்காரனாக அறிமுகப்படுத்துகிறேன்.

முதலில், அனைவரும் அறிந்த சோழப்பேரரசர் இராஜராஜர்; அவரின் தமிழ்க்கனவு, தமிழ்த்திருப்பணி இங்கு அறிமுகமாகிறது.

அவரது குருநாதர், கருவூர்த்தேவர்; கருவூரார் என்றும் அழைக்கப்படுகிறார். ஒன்பதாம் திருமுறையில் அவரது பதிகங்கள் உள.  தமிழ்த்திருப்பணித் திட்டத்தைத் தீட்டிக்கொடுக்கிறார்.

மதுராந்தகன் என்ற இயற்பெயருடைய இராஜேந்திரன்.  எப்போரிலும் வெற்றிக் கன்னியைத் தழுவிய மாவீரன்.  தமிழ் மன்னரிலேயே மிகப்பரந்த பேரரசை நிறுவியவன்.

ராமன் கிருஷ்ணன் என்ற இயற்பெயருடைய – இராஜராஜரின் திருமந்திர ஓலைநாயகமாகவும் (Chief Administrative Officer), பின்னர் இராஜேந்திரசோழ பிரம்மராயர் என்ற பட்டப்பெயருடன், படைத்தலைவராகவும் பணியாற்றியவன்.  புதினத்தில் சிவசங்கர சிவாச்சாரி என்ற புனைவுப் பெயர் கொடுக்கப்பட்டிருகிறது.

குந்தவைப் பிராட்டியார், இராஜராஜரின் தமக்கையார்.

குந்தவி, இராஜராஜரின் மகள், வேங்கை(வெங்கி)நாட்டு இளவரசன் விமலாதித்தனைக் காதல்மணம் புரிந்தவள். அவளது மகன் இராஜராஜ நரேந்திரன்; தெலுங்குப் பற்று நிறைந்தவன்.

நிலவுமொழி, தமிழைப் பரப்ப இராஜராஜரால் வேங்கைநாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டவள்; முற்றிலும் புனைவுப் பாத்திரம்.

பாண்டியமன்னன் அமரபுஜங்கன், பாண்டிநாட்டின்மீது அளவிலாப் பற்றுள்ளவன்;  அவன் மகன் விக்கிரமன்.

அமரபுஜங்கனின் மெய்காப்பாளன், பாண்டிய மெய்காப்பாளர்கள்; புனைவுப் பாத்திரங்கள்.

இலங்கைமன்னன், நான்காம் மகிந்தன்.

அத்துடன் இராஜராஜரின் தமையன் ஆதித்த கரிகாலன், அவனால் கொல்லப்பட்ட வீரபாண்டியன்;  இடைச்செருகலில் மட்டும் வருவர்.

இப்பகுதி நிகழும் சமயம்தான் பாண்டியருக்கும் சோழருக்கும் மீண்டும் போர் நிகழ்கிறது.  அதற்கான காரணத்தையும், போருக்கு உங்களைக் கற்பனைக் குதிரையில் அழைத்துச்செல்கிறேன்.  நான் குறிப்பிடும் இடங்கள் தமிழகத்தில் உள்ளன.  குறிப்பிடப்படும்ம் இடங்கள் கற்பனை அல்ல.  ஆறு, குன்று, மறைவிடம் என்று குறிப்பிடப்படும் இடங்கள் இன்னும் உள்ளன.

பல நிகழ்வுகளுக்கும், வரலாற்று நாயகர்களுக்கும், அவர்கள் தோன்றும், செய்யும் செயலுக்குச் சான்றுகள் கொடுத்துள்ளேன்.  ஏன் அப்படிப்பட்ட செயல்கள் நடக்கின்றன என்பது கற்பனையே!

உடன்பிறந்தே கொல்லும் வியாதி என்பதுபோல இராஜராஜருக்கு எப்படிப்பட்ட எதிர்ப்புகள் தோன்றுகின்றன என்பதை இப்பொழுதே சொல்லிவிட்டால் ஈர்ப்ப்பு குறைந்துவிடும்.  அதற்காகவே, இந்தப் புதினம் ஒரு துப்பறியும் கதைபோலத் தொடரும்;  தொடர்ந்து படிக்க  உங்கள் ஆவலைத் தூண்டும் என்றே நம்புகிறேன்.

முன்பே குறிப்பிட்டபடி புதினம் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் கோணத்திலிருந்தும் எழுதப்பட்டுள்ளது.  அவர்கள் பக்கத்து நியாயமும் எடுத்துச் சொல்லப்படுகிறது.

'ஏ' டைப் குணம் கொண்ட தந்தையும், தனயனும் இருந்தால் அவர்கள் எப்படிச் செயல்படுவார்கள் என்பதை இராஜராஜர், இராஜேந்திரன் வாயிலாகச் சித்தரித்திருக்கிறேன்.

கருவிலிருக்கும்போதே ஆசையுடன், பாசத்துடன் ஊட்டப்படும் தாய்மொழியைத், தன்மொழியான தமிழைத் தன் தனயன் வெறுத்தொதுக்கும் நிலையில் ஒரு தாயின் மனநிலை எப்படி இருக்கும் என்பதையும் இரண்டாம் பாகம் எடுத்துரைக்கிறது.

அரசபோகத்தில் நாட்டமே இல்லாத ஒருவன், பல அரசபதவிகள் அவனைத் தேடிவந்தும், அரசிளங்குமரியை மணக்கும் சூழ்நிலையில் எப்படி நடப்பான் என்பதும் வியப்பைத் தரும்.  தன் விருப்பத்திற்கும், விசுவாசத்திற்கும் இடையில் ஊசலாடும் மனம் அவனை எவ்வழியில் நடத்திச்செல்லும் என்பதும் ஆர்வத்தைத் தூண்டும்.

தன் நாட்டை விடுவிக்கப் போரிட முயலும் பாண்டியமன்னன் எப்படிப்பட்ட எதிர்ப்புகளை எதிர்கொள்கிறான், ஒரு பேரரசனுக்கு எதிராக எப்படிக் காய்நகர்த்துகிறான் என்பதும் நமக்கு அவன்பால் பாராட்டையும், கருணையையும் கொண்டுசெல்லும்.

இராஜராஜர் தான் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சினையையும் எவ்வாறு சிந்தித்துத் தீர்வுகாண்கிறார், தமிழ்க்கலைகளை வளர்க்க எப்படித் திட்டமிடுகிறார் என்பதைக் காணும்போது அவர் எப்படிப் பேரரசரனார் என்று வியக்கமாட்டோம்.  அவருடைய குருபக்தி நம்மை மெய்சிலிர்க்கவைக்கும். மலைநாட்டுத் தமிழ்மொழி மலையாளமாக மாறிவரும் நிலைமையும் விவரிக்கப்படும்.  இன்னும் பலப்பல ஆர்வமூட்டும் நிகழ்வுகளைச் சரமாகக் கோர்க்கப்பட்ட, தமிழன்னைக்கு மாலையாக அமைகிறது இரண்டாம் பாகம்.

தமிழன்னையுடன் அவளது பெருமைபொங்கும் பயணத்தில் பங்குகொள்ள அழைக்கிறேன்.

இப்புதினத்தின் நிறை-குறைகளைக் கட்டாயம் கல்கி இணையத்தில் பதியுங்கள். ஒரு கலைஞனுக்கும், அவனை ஆதரிப்பவருக்கும், இரசிகரின் பாராட்டு, அவர்களின் சிணுங்கல்கள், முணுமுணுப்புகள்தான் மேலும் எழுத, பதிப்பிக்க ஆர்வமூட்டும்.

(தொடரும்)

Other Articles

No stories found.