பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-அத்தியாயம் 13

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-அத்தியாயம் 13

ஒரு அரிசோனன்

சோழர் அரண்மனை, கங்கைகொண்ட சோழபுரம்

தாரண, ஆணி 27 – ஜூலை 12, 1044

சௌந்தரராஜப் பெருமாள் கோவிலில் திருமாலை வணங்கிவிட்டு, மனைவி சந்திரை, மகள் நப்பின்னை, மருமகப்பிள்ளை சேந்தராயன், அவர்களின் கைக்குழந்தையான தன் பேத்தி ஆகியோரை அழைத்துக்கொண்டு கங்கைகொண்ட சோழபுரம் வந்த காடவராயன், அச்சமயம் இராஜேந்திரசோழர் இறந்துவிடவே, அங்கேயே தங்கிவிட்டான்.

நீத்தார் சடங்குகள் முடிந்துவிட்டபடியால், இராஜாதிராஜனைச் சந்தித்து விடைபெற்றுக்கொள்ளலாம் என்று சோழர் அரண்மனை வளாகத்தில் காத்திருந்தான்.  அச்சமயம்தான் அரண்மனைக்குள்ளே வேங்கைநாட்டுக்கு எவர் படையுடன் செல்வது என்ற சர்ச்சை நடந்துகொண்டிருந்தது.

இராஜராஜரைப்போலவே மூடிமூடித் திறந்த தன் விரல்களை இறுக மூடிக்கொண்டான், இராஜாதிராஜன்.  பிரம்மராயாரின் வேண்டுகோளால் அவனுற்ற ஏமாற்றம் முகத்தில் தாண்டவமாடியது.  அதில் ஒரு அதிருப்தியும் தென்பட்டது.

"பிரம்மராயரே!  உம்முடைய வாதத்தை நன்கு செவியுற்றோம்.  எம் முடிவைச் சொல்லுகிறோம்.  எமது தந்தையார் கடைசியாக ஒருமுறை அவருக்காக உம்மைப் போரிட அனுப்பி, யாம் வந்து உம்மை விடுவிப்பதாகவும் சொல்லியிருப்பதால், அதை நிறைவேற்றுவோமாக.  எம்முடன் வேங்கைநாட்டுக்கு வருவீராக.  அங்கு யாம் உம்மைப் படைத்தலைவர் பொறுப்பிலிருந்து நிரந்தரமாக விடுவிக்கிறோம்.  வெற்றிக்கன்னியை யாம் தழுவும்வரை – கண்ணன் அருச்சுனனுக்குச் சொல்லியதுபோல எமக்கு ஆலோசனை சொல்லிவருவீராக!  இப்போரில் வெற்றிவாகை சூடிவந்தால் யாம் இப்பேரரசை ஆளத் தகுதிபெற்றவர் ஆவோம்.  எனவே, இது எமக்கும் உமக்கும் ஒரு தேர்வாகவே அமையட்டும்!  இல்லாவிடில்…," என்று சற்று நிறுத்திய இராஜாதிராஜன், மேலே தொடர்ந்தான்:

"அதுபற்றி இப்போது விவாதிக்கவேண்டிய தேவையில்லை.  நம்முடன் நீர் பரிந்துரைத்த படைத்தலைவரும் நமக்கு உதவியாக வருவர்.  நாம் திரும்பும்வரை இராஜேந்திரதேவன் உறையூர் செல்லாமல் கங்கைகொண்ட சோழபுரத்தில் நாட்டுவிவகாரங்களைக் கவனிப்பானாக!  உமது புதல்வன் மறையன் அருள்மொழி கடந்த ஓராண்டாக மேலைச்சளுக்கியரைக் கிருஷ்ணையின் வடகரையிலேயே நிறுத்திவைத்திருக்கிறான்.  அவனது திறமை மிகவும் மெச்சத்தகுந்தது.

"இன்னும் ஏதாவதுமுக்கிய அலுவல்கள் நமது முடிவை எதிர்நோக்கி நிற்கின்றனவா?" என்று அனைவரையும் பார்த்து வினவினான்.

அவனது பொங்கிவந்த உற்சாகம், தண்ணீர் ஊற்றிய பாலாகத் தணிந்து நீங்கி விட்டிருந்தது அனைவருக்கும் மிகவும் நன்றாகவே தெரிந்தது.

"இது சரியான நேரமில்லைதான், அரசே!  இருப்பினும் இதையும் தங்கள் கவனத்திற்குக் கொணரக் கடமைப்பட்டிருக்கிறேன்" என்று இழுத்தார், பிரம்மராயர்.

என்னவென்று இராஜாதிராஜன் புருவத்தை உயர்த்தினான்.

"தங்கள் பாட்டனார் திரிபுவனச் சக்ரவர்த்தியார் என்னைத் தமிழ்த் திருப்பணி ஆலோசகராக நியமித்தார்.  அப்பணியைச் செவ்வனே செய்துவந்தேன்.  பின்னர், திருமந்திர ஓலைநாயக பிரம்மராயப் பணிகளும் என்னிடம் ஒப்படைத்ததால், பலபந்துகளைத் தூக்கியாடும் அம்மானையாகத்தான் அப்பணிகளைச் செய்துவர நேரிட்டது.  அதனால் தமிழ்த்திருப்பணியின் தீவிரம் மிகவும் குறைந்துவிட்டது.  அதைச் சீர்ப்படுத்த ஆவன செய்யவேண்டும்.  தங்களுடன் வேங்கைநாடு வரும்படி தாங்கள் பணித்திருப்பதால், தற்பொழுது அதைத் தொடர ஓர் ஆலோசகரை நியமிக்கவேண்டும்" என்று விண்ணப்பித்தார்.

அனைவரும் பிரம்மராயரை அதிர்ச்சியுடன் நோக்கினர்.  அவரைத் தவிர வேறு எவரையும் அப்பதவியில் கற்பனை செய்துபார்க்கக்கூட யாராலும் இயலவில்லை.

"தாற்காலிகமாகத்தானே…?"  இராஜாதிராஜனிடமிருந்து கேள்விபிறக்கிறது.

"இல்லை, அரசே!  அப்பணியிலிருந்தும் விடைபெற விரும்புகிறேன்!"

அவையே அதிர்ந்துபோனது.  இராஜாதிராஜனின் கண்களில் தெரிந்தது சினமா, அல்லது எதிர்பாராத ஏமாற்றத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியா?

"எமது தந்தையாருடன் உமது சோணாட்டுப்பணி தீர்ந்துவிட்டது என்றெண்ணுகிறீர் போலும்!"  மேலே ஏதோ சொல்லவந்தவன் தன் உதட்டைக் கடித்துச் சிலகணங்கள் அமைதியாகிறான்.

"சரி அதிலிருந்தும் உம்மை இப்போதே விடுவிக்கிறோம்.  அருள்மொழிநங்கையைத் தாற்காலிகமாக அப்பணிக்கு நியமிக்கிறோம்.  அவளிடம் பணியை விளக்கி, விடுப்புப் பெறுவீராக.  நாளைமறுநாள் எம்முடன் கடைசிப்போருக்குப் புறப்படுவீராக!" என்றவன், மூச்சை இழுத்துவிட்டபடி, "பிரம்மராயரே, நீர் கிளம்பலாம்!" என்றபோது அவன் குரலில் இருந்தது கடுமையா?

தன் கன்னத்தில் அறைவிழுந்திருந்தாலும் பிரம்மராயர் வருந்தியிருக்க மாட்டார்.  இப்படி அரசவையிலிருந்து தன்னை வெளியேறச் சொன்னதை அவரால் தாங்க இயலவில்லை.

தந்தைக்குமட்டும் பணிசெய்பவர், தனக்கு மறுப்பவர் என்னும் அளவுக்கு அவன் நினைத்துப் பகர்ந்தது, அவர் இதயத்தில் ஈட்டியாகத் தைத்தது.

இராஜாதிராஜனை உற்றுநோக்கினார்.  அதில் ஆயிரமாயிரம் சொற்கள் பரிமாறப்பட்டன.  ஒன்றுமே பேசாது திரும்பி நடக்கத் தொடங்கியவரை அவனது குரல் தடுத்துநிறுத்தியது.  பிரம்மராயர் மெல்லத் திரும்பினார்.

"இந்தாரும்; தந்தையார் தமது காலத்திற்குபின் உமக்குக் கொடுக்கச் சொல்லிவிட்டுச் சென்றது; பெற்றுக்கொள்ளும்!"

தனது அரியாசனத்திற்கு அருகிலுள்ள முக்காலியில் சிவப்புத்துணியில் சுற்றப்பட்டிருந்த முடிப்பை எடுத்து அவரிடம் நீட்டினான்.  அதை வாங்கிக்கொள்ளும்போது அவனது கைகள் இலேசாக நடுங்குவதைக் கவனித்தார்.

வீராதிவீரான அவனுக்கு ஏனிந்த நடுக்கம்?

அம்முடிச்சைப் பெற்றுக்கொண்டு, எதுவுமே பேசாது, திரும்பிப்பார்க்காது வெளிநடந்தார்.

அவரைப் பின்தொடர்ந்த அருள்மொழிநங்கையிடம், "நங்கை, அரசர் என்னைமட்டும்தான் கிளம்பச்சொன்னார்.  உன்னையல்ல.  அவர் உன்னை அனுப்பும்வரை தமிழ்ப்பணி ஆலோசகராக இருந்து, அவரது ஆணைகளை அறிந்துகொள்," எனச் சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

வாயிலில் அவரைக்கண்ட காடவனும், சந்திரையும் கைகூப்பினர்.  நப்பின்னை, "ஐயா, வணக்கம்!" என்று அவரைப் பணிந்தாள்.  அவர்களைக் கனிந்து வாழ்த்தினார்.

"ஐயா, இதுதான் என் மகள்.  பிறந்து ஆறுதிங்கள் ஆகிறது," என்று பெருமையுடன் தன் மகளைச் சுட்டினாள்.

அம்மகவின் உச்சந்தலையில் கைவைத்து ஆசிநல்கிய பிரம்மராயர், "என்ன பெயர் வைத்திருக்கிறாய், நப்பின்னை?" என்று வினவினார்.

"சௌந்திரராஜப் பெருமாளின் அருளினால் பிறந்தவள் என்று இவளது தந்தை திருமாலின் 'அழகிய மணவாளர்,' என்ற பெயரைச் சற்று மாற்றி, 'அழகிய மணவாளினி,' என்று பெயரிட்டிருக்கிறார்," என்று பெருமையுடன் பகர்ந்தாள்.

"அழகிய மணவாளினி…" வாய்விட்டுச் சொன்னார், பிரம்மராயர்.  "மிகவும் நல்ல பெயர்."

அவரைப் பார்த்துத் தன் பொக்கைவாயைத் திறந்து புன்னகைத்தது, அக்குழந்தை.  சற்றுமுன் நடந்த அதிர்ச்சிதந்த நிகழ்வைச் சற்று மறந்து குழந்தையின் சிரிப்பில் லயித்தார்.  நிலவுமொழியின் சாயல் அப்படியே இருந்தது.  அவள் உயிருடன் இருந்திருந்தால் தன் பேத்தியைப் பார்த்து எப்படிப் பூரித்திருப்பாள்?!

தனது மகளைச் சைவப்பெண்ணாக வளர்க்க ஆசைப்பட்டாள் என்பதற்காகக் காடவன் நப்பின்னைக்கு சைவத்தைப்பற்றிச் சொல்லியே வளர்த்திருந்தாலும், நப்பின்னை திருமாலிடமே அதிகப்பற்று வைத்திருந்தாள்.  அவளுக்கு வைணவனான சேந்தராயனை மணமுடித்து, அவளது மகளுக்கும் வைணவப் பெயரே வைக்கப்பட்டிருந்தது, அவள் பற்று வைணவத்தில் சென்றிருந்ததைக் காட்டியது.

"ஊருக்குத் திரும்புமுன் அரசரிடம் விடைபெற்றுச் செல்லலாம் எனக் காத்திருக்கிறேன்," என்று அவரிடம் காடவன் பணிவாகக் கூறினான்.

"இப்பொழுதுதான் அரசர் என்னை அனுப்பினார்.  இன்னும் சிறிதுநேரத்தில் உங்களை அழைக்கக்கூடும்," எனச் சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

அவரை நேராகப் பெருவுடையார் கோவிலுக்குக் கால்கள் இழுத்துச்சென்றன.  அங்கு ஒதுக்குப்புறமாக இருந்த மண்டபத்தில் ஒரு தூணில் சாய்ந்து தன் நண்பன் தனக்குக் கொடுத்த முடிச்சில் என்ன இருக்கும் என்று எண்ணியவண்ணம், அதைப் பிரித்தார்.

அழகான குஞ்சத்தால் கட்டப்பட்ட ஓலைச்சுவடிகள் உள்ளே காட்சியளித்தன.

ஆவலுடன் பிரம்மராயர் அதைப் பிரித்தார்.  நண்பர் இராஜேந்திரனின் எழுத்துக்களைச் சுமந்திருக்கின்றன, அச்சுவடிகள்; அவற்றின் மூலம்தான் அவன் தனக்கு இறுதிச்சேதி அனுப்பியுள்ளான் என்பதைப் புரிந்துகொண்டார்.  நெகிழும் நெஞ்சுடன் ஓலைகளில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களைத் தடவினார்.

கண்களில் கோர்த்த நீர், எழுத்துகளை மறைத்தது.  மேலாடையால் கண்ணீரை ஒத்தியெடுத்து, படிக்கத் தொடங்கினார்.

'எனது அன்பு நண்ப, இதை நீ படிக்கும்போது, நான் சிவனாரின் திருவடிகளைச் சேர்ந்திருப்பேன்.  எனக்காகவும், சோணாட்டுக்காகவும், உனது வாழ்வை வேள்வியாகவே இயற்றி வாழ்ந்துவரும் உனக்கு எவ்விதத்தில் நன்றிசொல்லுவேன்?  தந்தையார் சிவபதம் சேர்ந்து முப்பதாண்டுகள் கழியப்போகின்றன.  அவர்சென்ற இடத்தை விரைவில் அடைவேன் என உள்ளுணர்வு உரைக்கிறது.  உன்னை அழைத்துவர ஓலை அனுப்பியுள்ளேன்.  அதற்குள் உலகைவிட்டு நீங்கிவிட்டால் என்செய்வது என்றுதான் என் இதயத்தில் உள்ளதை எழுத்தில் வடித்துள்ளேன்.'

தன் நண்பனின் இதயத்தில் என்னதான் இருந்தது, எதைத் தனக்குத் தெரிவிக்க விரும்பினான் என்ற ஆவலுடன் அவ்வோலையைப் புரட்டி, அடுத்தடுத்த ஓலைகளைப் படிக்க ஆரம்பித்தார்.

'தந்தையார் இன்றும் உயிருடன் இருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று இப்போது எனக்குத் தோன்றுகிறது.  அப்படி இருந்திருந்தால் நீ அவருடைய தமிழ்த்திருப்பணி ஆலோசகனாகவே பணியாற்றி இருப்பாய்.  நானும் உன்னை வேறுபக்கம் திசைதிருப்பியிருக்க மாட்டேன்.  கருவூரார் சொன்ன நாற்பது ஆண்டுகள் நிறைவேறச் சில ஆண்டுகளே இருந்திருக்கும்.  தந்தையாரின் திருப்பணியை முக்கால்வாசிக்கும் அதிகமாக நிறைவேற்றியிருப்பாய்.

'ஆனால் என்னால் அது தடைப்பட்டுப் போயிற்று.  தந்தையாரின் இலக்கும், எனதும் வெவ்வேறாகவே இருந்தன.  தந்தையார் தமிழ் ஆட்சிசெய்ய வேண்டும் என விரும்பினார்.  நான் தமிழன் ஆட்சிசெய்ய வேண்டும் என விரும்பினேன்.  தமிழன் ஆட்சிசெய்தால், தமிழ் தன்னாலேயே பரவிவரும் என முடிவெடுத்தேன்.  தமிழ்த்திருப்பணிக்கு முதலிடம் கொடுக்கவில்லை.  தமிழனின் மரபுப் பெருமைக்கும், தமிழனின் ஆட்சி பரவுவதற்குமே முதலிடம் கொடுத்து, அதை நிறைவேற்றினேன்.

'அந்த முடிவு சரியா தவறா, அதனால் தமிழ் பாரதம் முழுவதும் பரவுமா என்று எனக்குத் தெரியவில்லை.  ஆகவே, ஒருவகையில் பார்த்தால் தமிழ்த்திருப்பணிக்குத் தடையாகவே இருந்துவந்திருக்கிறேன்.  நாட்டில் அமைதியை நிலைநாட்டியபின் தமிழ்த்திருப்பணியை முனைந்து நிறைவேற்றும்படியும், அதற்கு நீ துணைநிற்பாய் என்றும் இராஜாதிராஜனிடம் கூறியிருக்கிறேன்.  அதுவே அவனது மரபுப்பெருமையாக் விளங்க வேண்டும்.

'ஆகவே, எனக்கு உதவிசெய்ததைப்போல் அவனுக்கும் உதவிசெய்.  அவன் கள்ளம்கபடற்றவன்.  சோழநாட்டை ஆளும் திறமை தன் புதல்வருக்கு இல்லையென்றும், தனக்குப் பிறகு திறமையுள்ளவர்க்கே சோழ அரியாசனத்தை அளிக்கப்போவதாகவும் கூறியிருக்கிறான்.  இப்படிப்பட்ட சிறந்த வீரனுக்கு உன் அறிவுரையையும் துணையையும் நல்கிவா.  தன் வழித்தோன்றல்களைவிடச் சோணாட்டுக்கே முதலிடம் கொடுக்கும் அவனைத் தனித்து விடக்கூடாது.  இந்த உதவியை நீ எனக்குக் கட்டாயம் செய்வாய் என நம்புகிறேன் நண்பா…'

பெருவுடையார் கோவில், கங்கைகொண்ட சோழபுரம்

தாரண, ஆனி 27 – ஜூலை 12, 1044

ஞாயிறு மேற்குத் திசையில் விழுந்து இருட்டு உலகைக் கவ்வுகிறது.  நினைவு தெரிந்ததிலிருந்து தன் வாழ்நாளில் அழுதறியாத பிரம்மராயர், குலுங்கி அழுதவாறே நிகழ்காலத்திற்கு வருகிறார்.

'இராஜாதிராஜா!  மென்மையான இதயமுள்ள உனக்குப் பெரிய அநீதியை இழைத்துவிட்டேனடா!  இளவரசுப் பட்டத்துக்கு ஒருவரை நியமிக்கவேண்டும் என்றபோது நீ ஏன் மிகவும் தயங்கினாய் என்று எனக்கு இப்பொழுதுதானடா தெரிகிறது! அதுவும், என் நண்பனின் ஓலையைப் படித்தபின்னர்!  இன்று காலை உன்மனதை எவ்வளவு காயப்படுத்தியிருந்தால், 'எமது தந்தையாருடன் உமது சோணாட்டுப்பணி தீர்ந்துவிட்டது என்றெண்ணுகிறீர் போலும்,' என்று கூறியிருப்பாய்!  என் அவசரப் புத்தியால் எவ்வளவு பெரிய தவற்றைச் செய்துவிட்டேன்!  உனக்கு எப்படிப்பட்டதோர் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளேன்!  உன்னை எவ்வளவுக்கு மனம் வெதும்பும்படி என் சொற்கள் ஆக்கியிருந்தால், 'நீர் கிளம்பலாம்,' என்று என்னை அரசவையிலிருந்தே விரட்டியிருப்பாய்!  நானாகவே திரும்பிவந்தாலும் இனி நீ எப்படியடா இருகரம் நீட்டி என்னை உன்னுடன் சேர்த்துக்கொள்வாய்?' என்று மனதிற்குள் புழுங்கினார், பிரம்மராயர்.

'எத்தனை நாள்களாக, ஆண்டுகளாக என் மனத்தைக் கட்டிப்போட்டேன்?  எனக்கு விருப்பமில்லாததை இராஜேந்திரன் செய்யச்சொன்ன போதெல்லாம், முழுமனதுடன் செய்தேனே!  என் உயிரை இளஞ்சேரனிடமிருந்து காப்பாற்றிக் கொணர்ந்த இராஜாதிராஜன் கேட்ட முதல்விருப்பத்தைக்கூட மறுத்தேனே!  தில்லையில் காலங்காலமாக நிறுத்தாமல் நடமிடும் நடராஜனே!  இதுவும் உன் திருவிளையாடலா?  உடைந்த இராஜாதிராஜனின் மனதை எப்படி ஒட்டவைப்பேன்?' என்று பரிதவிக்கிறார்.

விரல்கள் மீண்டும் ஓலைகளைப் புரட்டுகின்றன.

'வேங்கைநாட்டைப் பொறுத்தவரையில் நீயும் இராஜாதிராஜனும் சிறந்த வழிகளைக் காட்டினீர்கள்.  என் பிடிவாதத்தால் திறமையற்ற என் மருமகனைத் தூக்கிநிறுத்தினேன்.  அம்மங்கையின் கண்ணீருக்கு உருகாத மனத்திண்மை எனக்கு இல்லாததே அதற்குக் காரணம்.  கருவூராருக்கும் என் தங்கைக்கும் வாக்குக் கொடுத்திராவிட்டால் அவர்களின் திருமணத்தை நடத்தியே இருக்கமாட்டேன்.  கொட்டிய பாலின் கீழ் கூவியழுவதால் ஆவதென்ன?  நான் எடுத்த முடிவுக்கு நானே பொறுப்பு.

'என்றும் உன்னிடம் நான் பணிந்து பேசியதில்லை.  காரணம்கூடத் தெரிவிக்காது நான் நினைத்ததை மட்டுமே செய்தேன்.  இராஜாதிராஜன் அப்படியிருக்க மாட்டான்.  அவன் கையை பிடித்து அழைத்துச்செல்வது உனது பொறுப்பு.  உனக்குப் பிறகு உன் குடும்பத்தினரும் வழித்தோன்றல்களும்தான் தமிழ்த்திருப்பணி ஆலோசகர்களாய்ப் பணிபுரியவேண்டும் என இறுதிச் சாசனமாக அவனுக்கு வலியுறுத்தியுள்ளேன்.  அதுதான் செல்வத்தை விழையாத உனக்கு உன் இணைபிரியா நண்பன் கொடுக்கும் கடைசிப் பரிசு – இங்ஙனம், மதுராந்தகன்'

ஏழே ஓலைகள்தான்.  அவற்றில் தன் இதயத்தைப் பிளந்து காட்டியிருந்தார், இராஜேந்திரர்.

இதுவரை அழாத கண்கள் சிந்திய நீர்ப்பெருக்கைத் துடைத்துத் துடைத்துப் பிரம்மராயரின் மேல்துண்டின் ஒருபகுதி ஈரமாகியிருக்கிறது.  என்னசெய்வது என்று அறியாது ஓலைகளைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தவாறே தூணில் சாய்ந்தவர், கண்மூடிச் சிந்தனையில் ஆழ்கிறார்.

முதுமையின் தள்ளாமை திடுமென்று தன்னுடைய கிடுக்கிப்பிடியில் அவரைப் பிடித்துக் கொண்டாற்போலத் தோன்றுகிறது.

"தந்தையாரே…" என்ற பெண்குரல் அவரைத் திடுக்கிட்டுத் திரும்பவைக்கிறது.

விழித்துப் பார்த்தால், முப்பத்தொன்று வயதே ஆன அவர் புதல்வி சிவகாமி எதிரில் அமர்ந்திருப்பது தெரிகிறது.

வெறுமையான நெற்றியில் சிறிய திருநீற்றுக் கோடு; உடலையும் தலையையும் சுற்றிப் போர்த்திய வெண்ணிற ஆடை; மூளியான கழுத்து, மூக்கு, கைகள், காதுகள்!

மதிப்புக் கொடுக்கத் தூண்டும் அருள்ததும்பும் அமைதியான முகத்தில் கவலையும் பரிவும் தாண்டவமாடுகிறது.

"தந்தையாரே," என்று மீண்டும் விளித்த சிவகாமி, "உங்களை எங்கெல்லாம் தேடுவது?  முற்பகலில் அரண்மனையை விட்டுக் கிளம்பிவந்த உங்களைத் தேடிக்கொண்டு நடுப்பகலில் சிற்றன்னையார் இல்லத்திற்கு வந்தார்.  அரசர் இராஜாதிராஜரும் ஏதோ மனவருத்தத்தால் தங்களைக் கடிந்து பேசியதற்குக் கழிவிரக்கப்பட்டுத் தன்னைத்தானே நொந்துகொண்டு தங்களைச் சமாதானப்படுத்த அவருடன் வந்தார்.  கிட்டத்தட்ட இரண்டு நாழிகைப்பொழுது காத்திருந்து பார்த்துவிட்டுத் திரும்பிச்சென்றார்.

"பாவம், அவர் முகமே சரியாக இல்லை.  கங்கைகொண்ட சோழபுரம் முழுவதும் தங்களைத் தேடி அலைகின்றனர்.  இப்படி ஒதுக்குபுறமான மண்டபத்தில் கண்ணில் எளிதில்படாத தூணின் பின்புறத்தில் சாய்ந்து கண்மூடி என்னதான் செய்கிறீர்கள்?  தங்களது உத்தரீயம் பறந்ததால்தான் என்னவென்று பார்க்கலாம் என்று வந்து, தாங்கள் அமர்ந்திருப்பதைக் கண்டேன்.  என்னதான் ஆயிற்று?  பாருங்கள், சிற்றன்னையார் கீழே நின்றுகொண்டிருக்கிறார்," என்று மண்டபத்தில் கீழே நிற்கும் அருள்மொழிநங்கையைச் சுட்டிக்காட்டுகிறாள்.

அழுதழுது அவள் முகமும், கண்களும் சிவந்துபோயிருக்கின்றன.  அவளருகில் பதினைந்து வயதான 'சிவகாமியின் செல்வன்' சிவசுப்பிரமணியன் நின்றுகொண்டிருக்கிறான்.

வேதம் கற்றுவரும் அந்தணன் ஆதலால் முன்னால் மழித்த தலை; பின்னல் முடிந்த குடுமி; கள்ளம்கபடற்ற முகம்.  மாமன் மறையன் அருள்மொழியின் வீரவிளையாட்டுகள், போர்த்திறன், அரசியல் அறிவு – இவையெதுவும் அவனுக்குக் கற்பிக்கப்படவில்லை.  வேதம், தேவாரம், திருவாசகம், திருமறைகள் இவற்றுடன் தமிழும் வடமொழியும் மட்டுமே அவன் பயின்று, சிறந்த மாணவனாகத் தேறிவருகிறான்.

படிகளில் இறங்கிவரும் பிரம்மராயரைப் பார்த்து, "பாட்டனாரே, நாங்கள் யாவரும் பதறிப் போய்விட்டோம்.  ஊரெங்கும் உங்களைத் தேடுகிறார்கள்.  நான் தவறேதும் செய்துவிட்டேன் என்ற கோபமா உங்களுக்கு?" அவன் கேள்வியில் கலக்கமிருக்கிறது.

"இதுவரை நான் உங்கள் சொல்லை மீறியதில்லை.  அதனால்தான் உங்கள் சொல்லை மதித்து அரண்மனையில் தங்கிவிட்டேன்.  ஆனால் உங்கள் சொல்லை மீறியிருக்கவேண்டும் என்று என்னை எண்ணவைத்து விட்டீர்களே, ஐயனே!  தாங்கள் பல்லாயிரக்கணக்கான எதிரிகளுடன் போரில் பொருதச் சென்றபோதுகூட நான் கலங்கியதில்லை.  இன்று என்னை முதன்முதலாகக் கலங்கவைத்து விட்டீர்களே!  இது முறையா?" என்னும் அருள்மொழிநங்கையின் குரல் தழதழக்கிறது.  கண்களில் நீர் பெருகியவண்ணம் இருக்கிறது. அது அவரைக் காணாததால் அல்ல; கண்டுவிட்ட நிம்மதியால்.

"வாருங்கள், தந்தையாரே!  தங்களைப் பார்த்தால் உணவு உண்டதாகத் தோன்றவில்லை.  தங்களைக் காணாத கவலையால் எவரும் உண்ணவில்லை; எது எப்படியிருப்பினும் அகத்திற்குச் சென்று பேசிக்கொள்ளலாம்!"  சிவகாமியின் குரலில் உரிமைகலந்த அதட்டல் இருக்கிறது.

பிரம்மராயர் மெல்ல நடக்கிறார்.

'தன்னைச் சினந்து பேசியது இராஜாதிராஜனுக்கே தவறாகத் தோன்றியதா?  அவனே தன்னைத் தேடிவந்தானா?  அப்படியென்றால்?' என்ற எண்ணம் தோன்றியதும், "நங்கை, வா!  உடனே அரண்மனைக்குச் செல்வோம்.  இராஜாதிராஜன் கவலையுடன் காத்துக்கொண்டு இருப்பான்," என்று நடையை விரைவுபடுத்துகிறார்.

ராஜமகேந்திரபுரம் அரண்மனை, வேங்கைநாடு

விய, ஆவணி 17 – செப்டம்பர் 2, 1046

கடகவென்று மரக்குறடுகளின் ஒலி இராஜராஜ நரேந்திரனின் காதில் விழுகிறது.  அவன் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது.  இத்தனை காலம்சென்று மீண்டும் வேங்கைநாடு தன் கைக்கு வந்திருக்கிறது என்பதை நினைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.  அம்மங்கையை மணந்ததும் இவ்விதத்தில் நல்லதாகிவிட்டது என்று தன்னைத்தானே பாராட்டிக்கொள்கிறான்.

நல்லவேளை, அந்தக் கரும் அழகி நிலவுமொழி பின்னால் போய் மாட்டிக்கொள்ளாததை மெச்சிக்கொள்கிறான்.  அவள் தேவையின்றித் தன்னை அவமானப் படுத்திவிட்டாள் என்றும், அதற்குக் காரணம் அந்த சிவாச்சாரிப் பிரம்மராயன் என்றும் பொருமுகிறான்.

'என்மீது ஏற்பட்ட பொறாமையால்தான் கடந்த முப்பத்திரண்டு வருஷங்களாக எனது மாமனாரைக் கைக்குள் போட்டுக்கொண்டு எனக்குக் கிடைக்கவேண்டிய மருமகன் என்ற மரியாதையைக் கிடைக்கவிடாது செய்து விட்டான்.  இப்பொழுது வேங்கைநாடு திரும்பக் கிட்டிவிட்டது.  பழிவாங்கும் படலம் தொடங்கிவிட்டது,'என இறுமாப்படைகிறான்.

'எதற்காக என் தாய்வழிப் பாட்டனார் இராஜராஜர் அவனைப் பீடத்தில் ஏற்றிவைத்தாரோ, அப்பீடத்திலிருந்து அவனை இறக்க ஏற்பாடுகளைச் செய்யத்தொடங்கும் நாள் வந்துவிட்டது,' என்று வெற்றிப் புன்னகை செய்துகொள்கிறான்.

மரக்குறடுகளின் ஒலி பெரிதாகக் கேட்கிறது.

"ராஜாலு, நன்னைய பட்டாரககாரு ஒஸ்துன்னாரு (அரசே!  நன்னைய பட்டர் வருகிறார்)!" என்று காவலன் பணிவுடன் அறிவிக்கிறான்.

நரேந்திரனின் முகம் மலர்கிறது, "மிக நல்லது.  அவரை இங்கே உடனே அழைத்துவா!" என்று உற்சாகமாக விரட்டுகிறான்.

சில கணங்களில் நன்னைய பட்டாரகர் அவனை அணுகுகிறார்.

ஒல்லியான, உயரமான உடலமைப்பு; எழுபத்தைந்து வயதானாலும் நிமிர்ந்த நடை; பின்தலையிலிருந்து தொங்கும் நீண்ட குடுமி; காதுகளில் பெரிய கடுக்கன்கள்; நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு; கழுத்தில் தங்கப்பூணில் கட்டிய மேலாடைக்கிடையில் தெரியும் உருத்திராட்ச மாலை; வெள்ளைவெளேறென்ற பஞ்சகச்சம் வைத்துக் கட்டிய வேட்டி, இவற்றுடன் காட்சியளிக்கிறார், நரேந்திரனின் தெலுங்கு ஆசான், நன்னைய பட்டாரகர்.

அவரைத் தனக்கருகில் இருக்கும் ஆசனத்தில் அன்புடன் உட்காரவைத்து நலம் விசாரிக்கிறான்.

"ராஜய்யா, என்னை வரவழைத்த காரணம் என்னய்யா?  உன் முகத்தில் கோடிசூரியப் பிரகாசம் இருக்கிறதே!  ராஜ்ஜியம் கிடைத்ததைவிடப் பெரிய அளவுக்கு உன்னைச் சந்துஷ்டியாக்க என்னால் என்ன செய்யமுடியும்?  சொல்லய்யா, என்ன வேணுமோ, அதைச் சந்தோஷமாச் செய்யறேன்," என்று பற்கள் தெரியப் புன்னகைசெய்கிறார்.

"நீங்கள் என் குரு.  தாய்ப்பாலைவிடத் தெலுகை எனக்கு இனிமையாகப் புகட்டினீர்கள்.  அப்படிப்பட்ட தெலுகை அழித்து இந்நாட்டில் அரவத்தைப்28 புகுத்த என் தாய்வழிப்பாட்டனார் திட்டம் தீட்டினார்.  அதற்கு என் தாயும் உதவிசெய்தாள்.  சுந்தரத் தெலுங்கைப் பேசிவரும் இந்த வேங்கைநாட்டு அரண்மனையிலேயே அரவம் ஒலிக்கத் தொடங்கியது.

———————————-

[28.தமிழை, அரவம் என்று மரியாதைக்குறைவாக அழைக்கும் பழக்கம் ஆந்திராவில் தொன்றுதொட்டு இன்றுவரை இருந்துவருகிறது.]

அதைக்கேட்டு என் ரத்தம் கொதித்தது, ஆச்சாரியாரே!  தாங்களும், என் தந்தையாரும் நல்கிய – முக்கியமாகத் தாங்கள் கொடுத்த அறிவுரை – தக்க சமயம் வரும்வரை பொறுத்துக்கொள்ள வேண்டும் என்ற நல்லுரை – என் மனதில் கொழுந்துவிட்டு எரிந்த தெலுங்கு பக்தியை வளர்த்துவந்தது.  தற்பொழுது அதற்கேற்ற தருணம் வந்திருக்கிறது.

"எனது மாமனார் காலமானதற்குப் பிறகு, தன் நிலைமையைப் பலப்படுத்துவதில் என் மைத்துனன் இராஜாதிராஜன் கவனத்தைச் செலுத்திக்கொண்டிருக்கிறான்.  மேலும், என் பாட்டனாரின் அரவத்திருப்பணி ஆலோசகனாகவும், என் மாமனாரின் பிரம்மராயனாகவும் பணியாற்றி, நம் சுந்தரத் தெலுகை அழித்தொழிக்கத் திட்டம் தீட்டிவந்த எனது சகலையிடமிருந்து அப்பதவி பறிக்கப்பட்டு, அவனது மனைவியிடம் கொடுக்கப்பட்டுள்ளது.  பெண்பிள்ளையான அவளுக்கு என்ன தெரியும்?  வடகோடியில் இருக்கும் நாம் என்ன செய்கிறோம் என்பதை அவளால்தான் அறிந்துகொள்ள முடியுமா?  கிட்டத்தட்ட நாம் நினப்பதை நன்றாக நடத்திக் கொள்ளலாம்" என்ற தன் நீண்ட முன்னுரையை முடித்துக்கொள்கிறான், இராஜராஜ நரேந்திரன்.

"ராஜய்யா, எனக்கு ரொம்பத் திருப்தியாகவும், சந்துஷ்டியாகவும் இருக்கிறதய்யா.  உனக்குக் கற்றுக்கொடுத்த நம்முடைய தெலுகு பாஷையின்மேல் நீ வைத்திருக்கும் அபிமானம், அதன் எதிரிகள் மேல் நீ வைத்திருக்கும் துவேஷம் – பாட்டனார், மாதா, சகலை, மைத்துனன் – எனக்கு என்னவென்று சொல்லத் தெரியவில்லை.  ஆச்சாரியனான நான் துவேஷிக்காதே என்று சொல்லக் கடமைப்பட்டிருந்தாலும், நான் கொடுத்த வித்யையை நன்றாக உள்வாங்கி வளர்ந்திருக்கிறாய் என்பதை நினைத்தால், அதீதமான சந்துஷ்டி உண்டாகிறதய்யா."

மிகமகிழ்வுடன் இதைச்சொன்ன நன்னைய பட்டாரகர், "நீ என்ன நினைக்கிறாய் என்பதை வெளிப்படையாகச் சொல்லைய்யா.  நம் பாஷைக்காக என்ன செய்யணும்னு நீ கேட்கிறாயோ, அதை இந்த ஆசார்யன் சரீரத்தில் பிராணன் இருக்கும்வரை உனக்காகச் செய்வானய்யா," என அகமகிழ்ந்து கேட்கிறார்.

"ஆச்சாரியாரே!  தங்களுக்குத் தெரியாததல்ல.  இந்த தட்சிண பாரதத்தில் தேவபாஷையான சம்ஸ்கிருதத்திற்கு அதிகப்படியாக பெரிதாக மதிக்கப்படுவது, அரவம்தான்.  அதற்கு அடுத்தபடியாக வருவது கன்னடம்.  நமது பாஷையை நிறைப்பேர் பேசினாலும், அதற்கு என்ன மதிப்பு உள்ளது?  நிறைய யோசித்துப் பார்த்தேன்.

"அரவத்தில் எத்தனை பக்திப் பாடல்கள், சித்தாந்தங்கள், காவியங்கள், புராணங்கள், வியாகரணங்கள் (இலக்கணம்) எழுதப்பட்டுள்ளன! சைவமும், வைணவமும் தந்த அறநூல்கள் அந்த அரவ மாதாவின் இரு கண்கள் என்று போற்றுகிறார்கள்.  சைவைத் திருமுறைகளையும், நாலாயிர திவ்யப் பிரபந்தங்களையும் திராவிடவேதம்29 என்றே சதுர்வேதங்களுக்கு (ரிக், யஜுர், சாமம், அதர்வம்) இணையாகப் ஏற்றிவைக்கிறர்கள்."

தான் சொல்வதைத் தன் ஆசான் உன்னிப்பாகக் கவனிக்கிறார் என்பதை அறிந்த நரேந்திரன், "ஆச்சாரியாரே!  சமண, புத்த காவியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, சீவக சிந்தாமணி, குண்டலகேசி இவற்றை அரவத்தின் அணிகலன்களாக வர்ணிக்கிறார்கள்.  இதுமட்டுமா?  ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்னதாகவே, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு என்று எத்தனையெத்தனை நூல்கள் எழுதப்பட்டுள்ளன?  வள்ளுவரின் குறள் நூலைத் தமிழ் வேதம், தமிழ்மறை என்று போற்றுவதோடு மட்டுமல்லாமல், அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகுத்திக் குறுகத் தரித்த குறள் என்று ஒரு ஔவைப்பாட்டி எழுதிவைத்துப் போயிருக்கிறாள்."

தமிழ் ஏன் சிறந்துவிளங்குகிறது என்பதை நன்கு விவரித்த நரேந்திரன், "அரவத்தை விட்டுத்தள்ளுங்கள்.  நமக்கு அண்டைதேசமான கர்நாடகத்தில் விக்ரமார்ஜுன விஜயம், கடயுத்தம், என்று கன்னடத்தில் மகாபாரதத்தை எழுதிப் பிரபலப்படுத்தியிருக்கிறார்கள்.

————————-

[29.சிவன், திருமால் கோவில்களில் கடவுளர்களுக்கு நான்கு வேதங்களை ஓதியபின் திராவிடவேதம் என்று தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யப் பிரபந்தங்களை ஓதித்தான் பூசை நிறைவடைகிறது என்று கருதப்பட்டு, அவ்வாறே இன்றும் வழிபாடுகள் நடந்துவருகின்றன.]

நம் தெலுகில் இப்படிப்பட்ட காவியங்கள், சமயநூல்கள் எத்தனை இருக்கின்றன?  ஸம்ஸ்கிருதம் தேவபாஷைதான்.  அதிலேயே சமயநூல்களைப் படிக்கிறோம்.  அது சாதாரண ஜனங்களுக்குப் புரியுமா?  எல்லோருக்கும் புரியும் அளவுக்குத் தெலுகில் என்ன எழுதப்பட்டிருக்கிறது?  இப்படிப்போனால், சாதாரண ஜனங்கள் அரவத்தில் எழுதியிருக்கும் புஸ்தகங்களையும், பாட்டுக்களையும்தானே படிப்பார்கள்?  நாம் தெலுகை வளர்க்கவேண்டும் என்றால் பெரிதாகச் செய்யவேண்டும்.  தெலுகை இலக்கியம் நிறைந்த பாஷையாக மாற்றவேண்டும்.  அதற்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள், ஆச்சாரியாரே!  வெங்கிராஜ்யம் நம் கைக்கு வந்துவிட்டது.  ராஜ்யத்தின் செல்வங்கள் அனைத்தையும் இந்தப் பிரயத்தினத்துக்குச் (முயற்சி) செலவிடவும் சித்தமாக இருக்கிறேன்." என்று முடித்துவிட்டு, நன்னைய பட்டாரகரின் முகத்தைப் பார்க்கிறான்.

"சால சந்தோஷமா இருக்குதய்யா.  நீ சொல்றது எனக்குப் புளகாங்கிதமா இருக்குதய்யா.  உன் பிரயத்னம் ஜயமாக உழைக்க அந்த உமாமகேஸ்வரன்தான் கொடுக்கணுமய்யா!" என்று மகிழ்வுடன் கூறிய நன்னைய பட்டாரகரின் கண்கள் மூடிக்கொள்கின்றன.

அவர் சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார் என்று கண்டுகொண்ட நரேந்திரன் அமைதியாக இருக்கிறான்.

விநாடிகள், மணித்துளிக்களாகப் பரிணமிக்கின்றன.  அருகிலிருக்கும் சாமரத்தை எடுத்து விசிறிவிடுகிறான்.  கிட்டத்தட்டப் பதினைந்து நிமிடங்களாக ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிப்போன ஆச்சாரியரின் முகத்தில் புன்னகை மலர்கிறது.  கண்களை மெல்லத் திறக்கிறார்.

"கிடைத்துவிட்டது, ராஜய்யா, கிடைத்துவிட்டது!  நீ கேட்ட கேள்விக்கு விடை கிடைத்துவிட்டதய்யா.  உன் இஷ்டப்ப்படி நமது தெலுகை எல்லோரும் ஸ்வீகாரம் செய்வது என் பொறுப்பு.  அதற்கு ஒரு நல்ல திட்டமும் கிடைத்துவிட்டது," என உற்சாகமாகச் சொல்கிறார்.

"என்ன திட்டம், ஆச்சாரியாரே!"

"இது ஒரு சுவர்ணமயமான பிரயத்னம்.  தெலுகில் நல்ல புஸ்தகங்கள் இல்லை என்று நீ சொன்னாய்.  வாஸ்தவம்.  பாரதம் முழுவதும் எல்லோருக்கும் தெரிந்த இதிஹாசம், மகாபாரதம்.  அதை பெருந்தேவனார் என்ற காவ்யகர்த்தா அரவத்தில் எழுதியிருக்கிறார்.  இலக்கியச் செறிவோடு, காவிய மகிமை தெரியும்படி மகாபாரதத்தை எழுதப்போகிறேன்.  அதுமட்டுமல்ல, இப்பொழுது நாம் எழுதுவது ஒருவிதமாகவும், பேசுவது இன்னொரு விதமாகவும் உள்ளது.  நமது பாஷை அரவம்மாதிரி இல்லாமல் சம்ஸ்கிருத சப்தங்களோடும், வார்த்தைகளோடும் எழுதப்படணும்; திராவிடபாஷைகளில் ஒகடி நம் தெலுகு என்று சொல்லாமல், தேவபாஷை சம்ஸ்கிருதத்திலிருந்து ஜனித்தது என்று பிற்காலத்தில் சொல்லவேண்டும்.  அதற்காகச் சம்ஸ்கிருதச் சப்தங்களைக் குறிக்கும் எழுத்துக்களை சிருஷ்டிக்க இருக்கிறேன்.30  ஸ்லோகங்களையும் சம்ஸ்கிருத வியாக்யானப்படி எழுதப்போறேன்," என்று விவரிக்கிறார், நன்னைய்ய பட்டாரகர்.

"உன் அரண்மனையில் தெலுகு பாஷையில் பாண்டித்யம் பெற்ற பண்டிதர்களுக்கு நிறையச் சன்மானங்களும், நிலபுலங்களும் கொடுத்து ராஜகவிகளாகவும், பண்டிதர்களாகவும் நியமித்துக் கொள்ளய்யா.  ஒவ்வொரு தெலுங்கனும் தலைநிமிர்ந்து நடக்கும்படி செய்யலாம்.  நம் ஆந்திரதேசம் அரவதேசத்தாரின் அடக்குமுறையிலிருந்து விடுபட்டுத் தன் ஸ்வபாவத்துடன் ப்ரகாசிக்கச் செய்வோம்!"

நரேந்திரன் அவரைப் பார்த்து இருகைகளையும் கூப்புகிறான்.

—————————

[30.நன்னைய்ய பட்டாரகர், அவரது காலத்திலிருந்த தெலுங்குச் சொல்வளத்தை ஆராய்ந்து, அதில் வடமொழிச் சொல்வளத்தையும் சேர்த்து, நன்றாக விரிவடைந்திருந்த கன்னட இலக்கியங்களின் மரபையும் எடுத்துகொண்டு, தனித்தன்மை வாய்ந்த தெலுங்கு இலக்கிய நடையையும், கவிதை வடிவமைப்பையும், இலக்கணத்தையும் பின்பற்றியே எழுத்துக்களை வடிவமைத்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மகாபாரதத்தின் ஆதி, சபா, ஆரண்ய பர்வங்களைத் தனித்தன்மையுடன் தெலுங்கில் எழுதினார் என்றும் சொல்லப்படுகிறது.]

"என் காதில் அமிர்தத்தை வர்ஷிக்கிறீர்கள், ஆச்சாரியரே!  கிட்டத்தட்ட முப்பத்திரண்டு வருஷங்களாக எனக்குள் புழுங்கிய புழுங்கலைச் சாந்திசெய்யக் குளிர்ந்த ஜலத்தால் எனக்கு அபிஷேகம்செய்து திக்குமுக்காடச் செய்துவிட்டீர்கள்!  நீங்கள் விவரித்த திட்டத்தை உடனே நிறைவேற்ற ஆரம்பிப்போம்!"

அவனது குரலில் தொனித்த மகிழ்ச்சி நன்னைய்ய பட்டாரகரை மிகவும் நெகிழ்த்திவிடுகிறது.  எழுந்துவந்து அவனை இறுகத் தழுவுகிறார்.

"ராஜய்யா, நீ என் அபிமான புத்ரனய்யா!  ஒரு அரவதேசத்து ராஜகுமாரிக்குப் பிறந்தும், அதே அரவதேசச் சக்ரவர்த்தியின் புத்ரியை விவாகம் செய்தும், உன் பிதாவின் தெலுகு பாஷையை சிரேஷ்டமான பீடத்தில் வைத்து ஆராதனை பண்ணிப் பார்க்கப் ப்ரியப்படுவது என் ஜென்மத்தையே சாபல்யமாக்கி விட்டதய்யா!  நான் பூஜிக்கற உமாமஹேஸ்வரன் உன்னைத் தீர்க்காயுசா வச்சுருப்பாரய்யா.  இது நிச்சயம்.  நம்ம தெலுகு பாஷையைப் பேசற, பேசப்போற ஒவ்வொருவரும் உனக்குக் கடமைப்படப் போறா.  இதுல ஒருதுளிகூட சம்சயம் இல்லை.  எனக்கு மேலே பேச்சே வரலை, ராஜய்யா.  நீ மகராஜனா இருப்பே!  சத்யமாச் சொல்றேன், உன் வாரிசுகள் இந்த தட்சிண பாரதத்தையே ஆளுமய்யா.31 இந்தக் கிழவனின் ஹிருதயத்திலிருந்து வரும் வார்த்தை நிச்சயம் பலிக்கும்," என உள்ளமுருக ஆசிநல்குகிறார்.

இன்னும் பலவிதமாகத் தெலுங்கைச் செம்மைப்படுத்தும் திட்டத்தைப்பற்றி உரையாடியபின்னர் அவனை மீண்டும் உள்ளம் குழைந்து வாழ்த்திவிட்டுப் புறப்படுகிறார், நன்னைய்ய பட்டாரகர்.

'சிவாச்சாரியப் பிரம்மராயனே!  உனது திட்டம் என்னால் தவிடுபொடியாய்விடப் போகிறது, பார்.  என் பாட்டனார் வலிந்து அரவத்திருப்பணித் திட்டத்தை உருவாக்கினால்தான் என்ன?  அவரது பெயரை வைத்துக்கொண்டிருக்கும் பெயரனாக நான் இருந்தாலென்ன?  மனத்தளவில் நான் தெலுங்கன்தான்.

'பாட்டனார் என்மீது என்ன அக்கரையைக் காட்டிவிட்டார்?  முப்பத்திரண்டு வருஷங்களுக்கு முன்னால் இளஞ்சேரனின் உதகைக்கு உனக்குத் துணையாகத்தானே அனுப்பினார்?  என் மாமனாரும் எனக்கு என்ன மதிப்பைக் கொடுத்துக் கிழித்தார்?  உனக்குக் கீழே பணியாற்றி வருமாறுதானே என்னை வங்கப் போருக்கு அனுப்பினார்?

'வேலைக்காரியான நிலவுமொழியை என் பிரியநாயகியாக ஆகும்படிக் கேட்டதற்கு என் அம்மா எத்தனை கடுஞ்சொற்களை அள்ளிவீசினார்?  என் சிற்றன்னைக்குப் பிறந்த தம்பி விஜயாதித்தனை இன்னும் உயிரோடு விட்டதால்தானே திரும்பத்திரும்ப வெங்கியை இழக்கவேண்டியிருந்தது?  இதையெல்லாம் எண்ணியெண்ணி நான் குமுறிய குமுறலுக்கு முன்னால் தாய்ப்பாசமாவது, பாட்டன் பாசமாவது?  உங்கள் அனைவரையும் பழிவாங்கி நான் சிரிக்கப்போகும் சிரிப்புதான் கடைசியாக ஒலிக்கப்போகிறது,' என்று மனத்தில் பொருமிய இராஜராஜ நரேந்திரன், "ஆ!  ஹா, ஹா, ஹ!!" என்று அட்டகாசமாக உரக்கச் சிரிக்கும் சிரிப்பு அரண்மனை முழுவதும் எதிரொலிக்கிறது.

[31.இராஜராஜ நரேந்திரனின் மகன் இராஜேந்திர நரேந்திரன் பிற்காலத்தில் குலோத்துங்கன் என்ற பட்டப்பெயருடன் சோழப்பேரரசை ஆளத்தொடங்கினான். அவனும் அவனுடைய வாரிசுகளும் சளுக்கிய சோழர்கள் என்ற அடைமொழியுடன் இறுதிவரை ஆட்சி புரிந்தனர்.]

***

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com