பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-அத்தியாயம் 16

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-அத்தியாயம் 16

ஒரு அரிசோனன்

பிரம்மராயர் குடில், கேரளாந்தக சதுர்வேதி மங்கலம், சோழநாடு

சௌம்மிய, ஆவணி 8 – ஆகஸ்ட் 23, 1069

துண்டை மேலே போர்த்திக்கொண்ட பிரம்மராயர், கதவைத் திறந்துகொண்டு வருவது யாரென்று கண்களை இடுக்கிக்கொண்டு பார்க்கிறார்.

நாற்பது வயதான அவரது பெயரன் சிவசுப்பிரமணியன் உள்ளே நுழைந்து சற்று உரக்க, "பாட்டனாரே, தங்களைப் பார்க்கவேண்டுமென்று சோழப் படைத்தளபதிகள், குருக்கள், பல்லவப் படைத்தளபதிகள் என்று ஒன்பது பேர் வந்திருக்கிறார்கள். மிகவும் தலையாய செய்தி பற்றித் தங்களுடன் கலந்துரையாட வேண்டுமாம்" என்று கூறுகிறான்.

அவனைப் பார்த்து ஆறு திங்கள் கழித்துவிட்டன. திடீரென இங்கு எப்படி படைத் தலைவர்களுடன்?

அவர் சிந்தனையைத் தொடர்வதற்குள், அவனைத் தொடர்ந்து சிறிய கூட்டமே குடிலுக்குள் நுழைகிறது. அனைவரையும் அன்புடன் அழைக்கிறார்.

"வரவேண்டும், வரவேண்டும்! சுப்பா, எல்லோரும் அமரப் பாயை எடுத்து விரி" என்று தன் உதவியாளன் சுப்பையனைப் பணித்தவர், "வராதவர் வந்துள்ளீர்கள். உங்களை உபசரிக்கக்கூட இங்கு என் பெயரனையும், இந்தச் சுப்பனையும் தவிர எவருமில்லை. நீங்கள் அமர இந்த ஏழையின் குடிலில் சரியான இருக்கைகள்கூட இல்லை. பொறுத்தருள வேண்டும்" என்றதும் அனைவரின் கண்களும் கலங்குகின்றன.

சோழநாட்டின் திருமந்திர ஓலைநாயகமாகவும், அமைச்சராகவும், படைத்தலைவாராகவும், கோப்பரகேசரி இராஜேந்திரசோழரின் மருமகனுமான பிரம்மராயர், ஒரு சிற்றூரில், சிறிய குடிலில் தன்னந்தனியாக ஒரேயொரு உதவியாளனுடன் ஏழையாக வாழ்ந்துவருவது அவர்கள் மனதை இரங்கச்செய்து இதயத்தைப் பிழிகிறது.

அதேசமயம், அவராகத் தேர்தெடுத்துக்கொண்ட வாழ்வுதானே அது?

"தங்களைக் காண்பதே பெரிய பாக்கியம். தங்களுக்குக் கீழே அமருவதுதான் எங்களுக்கு முறைமை" என்று அக்குழுவுக்குத் தலைமையாக வந்திருப்பவர் கூறுகிறார். அவர் ஒரு வைணவ அந்தணர் என்பதை அவரது பெரிய நாமம் பறைசாற்றுகிறது.

"இங்கு குடிலினுள் உள்ள வெளிச்சம் என் கண்களுக்குப் போதவில்லை. ஆகையால், அனைவரும் தங்கள் பெயரைச் சொன்னால் எனக்கு இனம்கண்டுகொள்ள உதவியாக இருக்கும். சற்றி உரக்கச் சொன்னால், திரும்பக் கேட்க வேண்டியதில்லை" என்கிறார் பிரம்மராயர்.

தலைமையாக வந்திருப்பவர் முதலில் தன்னை அறிமுகம் செய்துகொள்கிறார்: "என் பெயர் வாசுதேவபட்டன். நான் திருவரங்கத்தில் வேதமும், வைணவப் பாஞ்சராத்ர ஆகமமும் பயின்றுள்ளேன். பன்னிரண்டாண்டுகள் முன்பு தாங்கள் திருவரங்கம் வந்தபோது தங்களுடன் உரையாடியுள்ளேன். தாங்கள் திவ்வியப் பிரபந்தத்தின் சில பகுதிகளை விளக்கக் கேட்டுச் சைவரான தங்களின் வைணவ அறிவு என்னைப் பிரமிக்க வைத்தது" பிரம்மராயர் மெல்லச் சிரிக்கிறார்.

"அதற்குப் பிறகு திருவரங்கம் வர வாய்ப்பே கிடைக்கவில்லை. வாசுதேவ பட்டாச்சாரியாரே, உம்முடம் உரையாடியதும் நினைவுக்கு வருகிறது. அதுசரி, இப்போதும் நீர் தீவிர வைணவராகத்தான் இருக்கிறீரா?"

"இல்லை, ஐயா. சிறந்த வைணவனாக இருக்கிறேன். தங்களின் வைணவ அறிவு என் தீவிரத்தை நீக்கி சிறப்பைப் புகுத்திவிட்டது" என வாசுதேவபட்டர் பணிவுடன் மறுமொழியளிக்கிறார்.

"தற்போது என்ன செய்கிறீர்?"

"திவ்வியச் சேத்திரமான தில்லையில் கோவிந்தராஜப் பெருமாளுக்குக் கைங்கர்யம் செய்துவந்தேன். அங்கே தில்லைக்கூத்தரை வணங்க வந்த கருணாகரத் தொண்டைமான் அவர்களின் அறிமுகம் கிட்டியது. அவரின் அழைப்புக்கிணங்க காஞ்சிக்குச் சென்று அவருடன் இருந்து வருகிறேன். அவரும் உடன் வந்திருக்கிறார்" என்று தன் வலப்புறமிருக்கும் கருணாகரத் தொண்டைமானை வாசுதேவபட்டர் சுட்டிக்காட்டுகிறார்.

"கருணாகரா, நீயுமா வந்திருக்கிறாய்? அருகில் வா, அப்பா!" பிரம்மராயர் அன்புடன் அழைக்கிறார். கருணாகரத் தொண்டைமான் அவரருகில் சென்று, அவர் கால்களில் பணிகிறான்.

"வணக்கம், ஆசான் அவர்களே!  தங்களைப் பார்த்துத்தான் நெடுங்காலமாகிவிட்டது" என்றவனின் முதுகைப் பிரம்மராயர் அன்புடன் தடவுகிறார்.

அவரிடம் மறமும், அரச நீதியும் பயின்றவரில், தலைசிறந்த சீடனாயிற்றே அவன்!

"ஆம், கருணாகரா. உன்னைக் கண்டுதான் எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன. உனது முப்பாட்டனார் ஈராயிரவன் பல்லவராயரும், நானும் எத்தனை களங்களைக் கண்டிருக்கிறோம். அழகிய மணவாளினி எப்படி இருக்கிறாள்? இன்னுடம் இராஜேந்திர நரேந்திரனுடன் தொடர்புவைத்திருக்கிறாயா?"

"மணவாளினி நலமாக இருக்கிறாள் ஐயா. தங்களுக்குத் தன் வணக்கத்தைத் தெரிவிக்கச்சொன்னாள். இராஜேந்திர நரேந்திரர் இப்போது வேங்கைநாட்டுக்கு வடமேற்கில் சக்கரக்கோட்டத்தில் (தற்பொழுதைய பஸ்தர் மாவட்டம், சட்டீஸ்கட் மாநிலம்) தனக்கென்று ஒரு நாட்டை ஏற்படுத்திக்கொண்டு அரசாண்டு வருகிறாராம். மேலைச்சளுக்கியன் விக்கிலன் (விக்ரமாதித்தன்)…" என்றவன் நிறுத்திக்கொள்கிறான்.

"என்ன விபரீதம் இது, கருணாகரா? வேங்கைநாட்டை அரசாளாமல் இராஜேந்திர நரேந்திரன் வடமேற்கில் என்ன செய்கிறான்? அதற்கும் விக்கிலனுக்கும் என்ன தொடர்பு?" என்று பிரம்மராயர் கேட்கிறார்.

"ஐயா, நாட்டு நடப்பை எவரும் தங்களுக்குச் சொல்வதில்லையா?" கருணாகரனின் குரலில் வியப்பு தொனிக்கிறது.

"கடந்த நான்காண்டுகளாக நாட்டுநடப்பு பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது கருணாகரா. என்னிடம் சொல்ல எவரும் வருவதுமில்லை; அறிந்தகொள்ள நான் நாட்டமும் காட்டுவதில்லை" என்று விரக்தியாகச் சிரித்த பிரம்மராயர், ஒருகணம் தன் பெயரன் சிவசுப்பிரமணியனைப் பார்த்துவிட்டு, மீண்டும் கருணாகரன் பக்கம் திரும்புகிறார்.

"தமிழ்த்திருப்பணி தவிர வேறெதையும் பாட்டனார் காதில் வாங்கிக்கொள்வது கிடையாது, தொண்டைமான் அவர்களே!" எனத் தணிந்த குரலில் சொல்கிறான் சிவசுப்பிரமணியன்.  புரிந்ததெனத் தலையாட்டுகிறான் கருணாகரத் தொண்டைமான்.

"ஆசான் அவர்களே, அதைப் பற்றி விரிவாகச் சொல்லித் தங்களுடன் கலந்துரையாடவும், தங்கள் அறிவுரையைப் பெறவும்தான் இங்கு வந்திருக்கிறோம். எனது மாமனார் சேந்தராயரும், மணவாளினியின் தம்பி அழகிய மணவாளநம்பியும்கூட வந்திருக்கிறார்கள்" என்று அவர்களை முன்னால் வரும்படிக் கையசைக்கிறான்.

"சேந்தராயா, சிறிது அருகில் வா மகனே! உங்கள் அனைவரையும் ஒருங்கே பார்ப்பது பாலில் தேனைக் கலந்து பருகியதுபோல் உள்ளது. நீங்கள் அனைவரும் காஞ்சிக்கே சென்றுவிட்டீர்கள்!  காடவன் எப்படி இருக்கிறான்?"

அன்புடன் பிரம்மராயர் விசாரிக்கிறார். சேந்தன் தலையைக் குனிந்துகொள்கிறான்.

"பாட்டனார் இரண்டாண்டுகளுக்கு முன்னர் வைகுண்டப் பதவி அடைந்தார் ஐயா" என மணவாளநம்பி கரகரத்த குரலில் அறிவிக்கிறான்.

சில கணங்கள் கண்களை மூடிக்கொள்கிறார் பிரம்மராயர். முகத்தில் வருத்தம் இழையோடுகிறது.

"இறைவன் எனக்கு மட்டும் நீண்ட ஆயுளைக் கொடுத்துவிட்டு மற்ற நல்லோர் அனைவரையும் தன்னிடம் அழைத்துக்கொள்ளும் காரணம்தான் என்ன? என்னால் என்ன ஆக வேண்டும் என்று எனக்கு இந்த நீண்ட ஆயுளைக் கொடுத்திருக்கிறான்?" கலங்குகிறார் அவர்.

கருணாகரத் தொண்டைமான் தன் இடப்பக்கம் இருக்கும் இருவரை அவர்முன் நிறுத்துகிறான். "ஆசான் அவர்களே, இவர் வீரராசேந்திர அதிகைமான், கொங்குமண்டலக் காவலர்; மற்றவர் அரையன் பொன்னம்பலக் கூத்தன்;41 சளுக்கியப் போரில் வீர மரணம் எய்திய இளவரசர் இராஜமகேந்திரரின் தோழர், அவரது படைத்தலைவர்களில் ஒருவர்."

"தொண்டைமான் இவ்வளவு தூரம் படைத்தலைவர்களுடன் என்னை வந்து காணக் காரணம் என்னவோ?" பிரம்மராயர் தன்னைக் கருணாகரன் எனாது, தொண்டைமான் என்று குலப்பெயரைச் சொல்லி அழைப்பதன் காரணம் அவனுக்கு உடனே புரிகிறது. 'நலம் விசாரித்தது போதும், நீ வந்த காரணத்தைச் சொல்' என்று அவர் மறைமுகமாகச் சொல்கிறார் என அறிந்துகொள்கிறான்.

"அனைவருக்கும் ஒரே நோக்கம்தான் ஐயா. இன்னும் மூவரை அறிமுகம் செய்த பின் எல்லாவற்றையும் விளக்குகிறோம்" என்ற கருணாகரத் தொண்டைமான், "இவர் இருங்கோவேள்; நடுவில் இருப்பவர் வீரசோழ சக்ரபாணி; அவர் உடையான் ஆதித்தன்; மூவரும் சிறந்த வீரர்கள், படைத்தலைவர்கள்; சோழநாட்டுக்காக உயிரைக் கொடுக்கக் கண நேரமும் தயங்காதவர்கள்" என்று அறிமுகத்தை முடிக்கிறான்.

"இந்தக் கிழவனைத் தேடி சோழநாட்டின் படைத்தலைவர் பலரும் இங்கு குழுமியிருப்பதைக் காணும்போது, கோப்பரகேசரியாரின் காலத்திற்கே சென்றுவிட்டதுபோன்ற ஒரு மனப்பிரமை ஏற்படுகிறது. என்னை இப்படிக் கவுரவிக்கும் காரணம் என்னவோ?"

"ஐயா, எங்கள் அனைவரின் மனத்திலும், பெரியதொரு குழப்பமும், சோழநாட்டின் எதிர்காலத்தைப் பற்றிய அச்சமும் வாட்டியெடுக்கிறது. ஆகையால்தான் – காலம் சென்ற திரிபுவனச் சக்ரவர்த்திகளுக்கும், கோப்பரகேசரியாருக்கும் வலக்கையாக விளங்கிய தங்களிடம் அறிவுரை பெற வந்துள்ளோம்" தயக்கத்துடன் தங்கள் வரவின் தலையாய காரணத்தை நவில்கிறார் வாசுதேவபட்டர்.

"கடந்த நான்காண்டுகளாக அரசுநடப்பு எதுவுமே எனக்குத் தெரியாது எனச் சொன்னவுடனேயே, சோழநாட்டில் நான் ஒரு செல்லாக்காசு என்பது நீங்கள் அனைவரும் புரிந்துகொண்டிருக்க வேண்டுமே! அப்படியிருக்கையில், மூப்பில் கண் பார்வையும், காதுக் கூர்மையையும் இழந்துவரும் இக்கிழவன் தங்களுக்கு என்ன பெரிய அறிவுரையை நல்கிவிடப் போகிறான்? எத்தனையோ தலைசிறந்த அரசவை அரசநீதி அறிவாளிகள் உள்ளபோது அவர்களைத் தவிர்த்துவிட்டு என்னைத் தேடி, எதற்காக வந்துள்ளீர்கள்?" பிரம்மராயர் கேட்பது, அவர்களை உள்ளூர நடுங்க வைக்கிறது. சில கணம் அனைவரும் வாயடைத்துப் போகின்றனர்.

வீரராசேந்திர அதிகைமான் எச்சிலை விழுங்கிக்கொண்டு மிகவும் பணிவான குரலில், "ஐயா, எவ்வளவு பெரிய பதவிகளைப் பெற்றும், கோப்பரகேசரியாரின் மூத்த மகளை மணந்தும், தனக்கென்று எச்செல்வத்தையும் சேர்க்காமல், தன் வழித்தோன்றல்களுக்கு எவ்வித அரசுரிமையும் கோராது, சோழவள நாட்டின் மேன்மைக்காவே, விருப்பு-வெறுப்பின்றி தன்னைத்தானே அருப்பணித்துக்கொண்ட தங்களைவிடச் சிறந்த மதியூகியும், அரச தந்திரியும், இங்கு எவருமே இல்லை. வேறு யாரிடமும் நாங்கள் மனம்திறந்து உரையாட இயலாத சூழ்நிலையில் உள்ளோம் ஐயா!" என மொழிகிறான்.

"நீங்கள் சொல்வதைக் கேட்டால் இப்பொழுதிருக்கும் அரசருக்குத் தெரியாமலும், அவருக்கு எதிராகச் செயல்பட வேண்டியும்தானே என்னைச் சந்திக்க வந்திருக்கிறீர்கள் என்று என்னால் ஊகிக்கமுடிகிறது. அப்படித்தானே?" என்று உரக்கக் கேட்ட பிரம்மராயரின் குரலில் சூடேறுகிறது. அனைவரும் தலையைக் குனிந்துகொள்கின்றனர்.

———————————–

[41.இந்த அத்தியாயத்தில் அறிமுகமாகும் கருணாகரத் தொண்டைமான், வாசுதேவபட்டர் உள்பட அனைவரும் இராஜேந்திர நரேந்திரனின் (முதலாம் குலோத்துங்கன்) அரசவையில் பணியாற்றிவர் ஆவர்.]

சில மணித்துளிகள் அங்கு நிலவும் அமைதி அங்கிருப்பவரின் வயிற்றைக் கலக்குகிறது.  பிரம்மராயரின் சினம் எவ்வித விளைவை விளைவிக்குமோ, தங்கள் நோக்கம் தவிடுபொடியாகுமோ எனக் கலங்குகின்றனர்.

இறுதியில் பிரம்மராயரே அமைதியைக் கலைக்கிறார். "உங்கள் அனைவரையும் நன்கு அறியாவிட்டாலும், கருணாகரன், சேந்தன், மணவாளநம்பி, அதிகைமான் ஆகியோரை நன்கறிவேன். வாசுதேவபட்டர் சாணக்கியரின் அர்த்தசாத்திரத்தைக் கரைத்துக் குடித்தவர் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். பொன்னம்பலக் கூத்தனைப் பற்றி இராஜாதிராஜன் வாயிலாகவும் அறிந்துள்ளேன். மற்றவர்களைப் பற்றி நேர்முகமாகத் தெரிந்துகொள்ளாத போதிலும், அவர்கள் சிறந்த வீரர்கள் எனக் கருணாகரன் சொன்னதே போதுமானது.

"இப்படிப்பட்ட நீங்கள் அனைவரும் ஒருங்கே வந்திருக்கும்போது – நீங்கள் வந்திருக்கும் முறைமை எனக்கு ஒவ்வாமலிருந்தாலும் – உங்களுக்கு மதிப்புக் கொடுத்து, நீங்கள் சொல்லவந்ததைச் செவிமடுப்பதே வீடு தேடி வந்தவர்களுக்கு மரியாதை அளிப்பதாகும்" என்ற பிரம்மராயர், "சுப்பா, அனைவருக்கும் உணவுக்கு ஏற்பாடு செய்யப்பா.  எனக்குச் சமைப்பதுபோல சமைத்துவிடாதே. உப்பு உறைப்புப் போட்டு, நன்றாக உன் திறமையைக் காட்டு" என்று தன் கட்டிலுக்குப் பின்னால் அமர்ந்திருந்த சுப்பையனைப் பணிக்கிறார்.

சுப்பையன் எழுந்து உள்ளே செல்கிறான்.

பிரம்மராயர், "சிவா, இவர்கள் முக்கியமான நாட்டு நடப்பைப் பற்றிக் கலந்துரையாடப் போகிறார்கள். நீ வெளியே சென்று, யாரும் திடுமென்று வந்துவிடாமல் ஒரு கண் வைத்துக்கொள்" என்றதும், "ஐயா, அதற்கு அவசியமில்லை.  நாம் உரையாடுவது எவர் காதிலும் விழாத அளவுக்குக் காவல்காக்க, வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். தங்கள் பெயரர் இங்கு நடப்பதைத் தன் இதயத்தில் பூட்டி வைப்பார் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு உளது" என்று மொழிந்தான் கருணாகரத் தொண்டைமான்.

"சிவா, சிலசமயம் எனக்கு இடக்காது சரியாகக் கேட்பதில்லை. எனவே, இடது பக்கம் உள்ளவர் பேசுவதை என் வலக்காதில் சொல்லிவா" என்று பிரம்மராயர், தன் பெயரனைத் தன் வலப்பக்கம் நிறுத்திக்கொள்கிறார்.

முதலில் வாசுதேவபட்டர் உரையாடலைத் தொடங்குகிறார்: "ஐயா, வீரராஜேந்திரசோழர், கோப்பரகேசரியார் காலத்து அளவுக்குச் சோழப்பேரரசினை விரிவாக்கியுள்ளார் என்பது தங்களுக்குத் தெரிந்ததே. நமது ஜன்ம எதிரியான அகவமல்லன் சோமேஸ்வரன், வீரராஜேந்திரரைப் போருக்கழைத்ததால், நமது படைகள் அங்கு சென்றன. நமது படைகள் ஒரு மாதம் காத்திருந்தும் அவன் களத்திற்கு வரவே இல்லை. பிறகு அதனால் ஏற்பட்ட அவமானத்தைத் தாங்காது ஆற்றில் மூழ்கித் தற்கொலை செய்துகொண்டான்.42 அவனுக்குப் பிறகு அரசு யாருக்குச் சேருவது என்ற குடும்பச்சண்டையில் அவனது புதல்வர்கள் சோமேஸ்வரனும், விக்கிலனும் (விக்கிரமாதித்தன்) ஒருவரையொருவர் அடித்துக்கொண்டனர்.

"ஓடிவந்த விக்கிலன், வீரராஜேந்திரரின் கால்களில் விழுந்து, இரட்டைப்பாடியைச் சேர்ந்த ஏழரை இலட்சத்தையும் ஒப்படைத்து, அவருக்குத் திறை செலுத்தவதாக உறுதி கூறினான்.  அதை ஒப்புக்கொன்டு, மேலைச்சளுக்கியரின் தொல்லை ஒரு முடிவுக்கு வரவேண்டுமென்று, நமது மாமன்னர் விக்கிலனுக்கு மேலைச்சளுக்கிய மன்னனாக முடிசூட்டியதோடு நிறுத்தவில்லை; தன் மகளையும் அவனுக்குச் சில திங்கள் முன்னர் மணமுடித்ததையும் தங்கள் கவனத்துக்குக் கொணர விரும்புகிறோம்."

———————————-

[42.மேலைச்சளுக்கிய மன்னன் அகவமல்லன் சோமேஸ்வரன் குருவட்டிக்கருகில் (இன்றைய பெல்லாரி மாவட்டம்) துங்கபத்திரை ஆற்றில் முழுகித் (பொது ஆண்டு மார்ச் 29, 1068) தற்கொலை செய்துகொண்டான்.

43.p 384, A Textbook of Medieval Indian History by Sailendra Sen, 1999;

44.p170, A History of South India from prehistoric times to fall of Vijayanagar, by K.A. Nilakanta Sastri, Oxford University Press, 1955]

"என்ன? பரம எதிரிகளான மேலைச்சளுக்கியருடன் மண உறவா?" பிரம்மராயருக்கு நம்ப இயலாத வியப்பாக இருக்கிறது.

"இதை அரச தந்திரம் என்றே வைத்துக்கொண்டாலும், இதே மண உறவைப் பாண்டியருடனும், சேரருடனும் வைத்திருந்தால் தமிழ்நாடு ஒன்றாகப் போரின்றி இருந்திருக்குமே! கணக்கற்ற வீரர்கள் மாண்டிருக்க வேண்டாமே!" அவரின் குரலில் இருந்த கழிவிரக்கம் அனைவருக்கும் தெரிகிறது.

"அதுமட்டுமல்ல!" என்று வாசுதேவபட்டர் விட்ட இடத்திலிருந்து கருணாகரத் தொண்டைமான் தொடருகிறான்: "வீரராஜேந்திரருக்கு உதவியாக கோப்பரகேசரியார் இராஜேந்திரசோழரின் பெயரரும், வேங்கைநாட்டு இளவரசரும், என் ஆருயிர்த் தோழருமான இராஜேந்திர நரேந்திரர், களம்பல சென்று வெற்றியை ஈட்டித் தந்தது தாங்கள் அறியாததல்ல. அப்படியிருந்தும், அவரது சிற்றன்னையின் பெயரரும், சிற்றப்பர் விஜயாதித்தரின் மகனான சக்திவர்மனுக்கு வேங்கைநாட்டின் மன்னனாகப் பட்டம்சூட்டியதோடு விடாமல், மையப்பாரதத்தில் இருக்கும் சக்கரக்கோட்டத்தை நிர்வகித்துவருமாறு அனுப்பிவிட்டார்."

"ஈதென்ன முறையற்ற செயற்பாடு? தன் தங்கை மகன் என்பதற்காகத்தானே இராஜராஜ நரேந்திரனைக் கோப்பரகேசரியார் கடைசி வரை வேங்கைநாட்டு மன்னனாக நிறுத்தி வைத்தார்! அதற்காகத்தானே அவரும், இராஜாதிராஜரும், நானும் எத்துணை முறை மேலைச்சளுக்கியருடன் மோதியுள்ளோம்? அந்த உறவு தழைக்க வேண்டுமென்றுதானே, இராஜேந்திரதேவன் தன் புதல்வி மதுராந்தகியை இராஜேந்திர நரேந்திரனுக்கு மணமுடித்து வைத்தான்! எப்படிப்பட்ட சிறந்த வீரன் அவன்? அவனுக்குப் போர்முறையும், அரச நீதியும் கற்றுக்கொடுத்துள்ளேனே; சிறந்த மாணவனல்லவா அவன்! அவனுக்கா இந்த அவல நிலைமை? தந்தைக்கும், தமையன்களுக்கும் எப்போதும் உட்குத்திய முள்ளாக உறுத்திக்கொண்டருந்தவர்களை எப்படி வீரன் தன் உறவினராக்கினான்? அவனது மனம் ஏன் சீர்கெட்டு இப்படித் திரிந்துவிட்டது?" பிரம்மராயரின் குரல் அவரது மனவேதனையையும், வெதும்பலையும் நன்கு வெளிக்காட்டுகிறது.

அரசனுக்குள்ள மரியாதையைக் காட்டாது, வீரன் என்று வீரராஜேந்திரனின் பெயரை மட்டும் சொல்லிக் குறிப்பிட்டது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்துகிறது. எவ்வித உணர்ச்சிப்பெருக்கிலும், எவருக்கும் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கைவிடாத அவரே அப்படிக் குறிப்பிட்டது, வீரராஜேந்திரனின் நடவடிக்கை அவர் மனதை எப்படிப் புண்ணாக்கி இருக்கிறது என்று அவர்கள் அறிந்துகொள்கின்றனர்.

கருணாகரத் தொண்டைமான் நிறுத்திய இடத்திலிருந்து வீரராசேந்திர அதிகைமான் விவரங்களைத் தொடர்கிறான்: "ஐயா, இப்பொழுது சோழநாட்டின் பட்டத்து இளவரசரான அதிராஜேந்திரரை நான் நன்கறிவேன். அவர் கொங்குமண்டல நிவாகியாக இருந்தபோது அவருக்கும் எனக்கும் நல்ல பழக்கம் இருந்தது. அவரைப் பற்றிய உண்மையை வெளிப்படுத்துவது தங்களைத் துயர்ப்படுத்தினால் என்னை மன்னியுங்கள். அவருக்கு அரசு நிர்வாகத் திறமையே கிடையாது. கேளிக்கைகளிலும், களியாட்டங்களிலும்தான் பொழுதைக் கழிப்பார். இதை வெளியுலகம் அறியாதவண்ணம் மறைக்கும் அவலம் கொங்குநாட்டு வீரர் வழிவந்த எனக்குச் சோழ இளவரசரால் ஏற்பட்டது? இது தகுமா?" அவனது குரல் கரகரக்கிறது.

"அதிராஜேந்திரரைப் பற்றி நானும் நன்கறிவேனைய்யா" என்று உரத்தகுரலில் ஆரம்பிக்கிறான் அரையன் பொன்னம்பலக் கூத்தன்.

"காலம் சென்ற இராஜேந்திரதேவருக்கும், அவரது இளவல் இராஜமகேந்திரருக்கும் தோள்கொடுத்துப் போரிட்டுப் பல விழுப்புண்களைச் சுமந்துவருபவன் நான். மதுராந்தகர் என்ற கோப்பரகேசரியாரின் பெயரைக் கொண்டிருப்பினும், அதிராஜேந்திரர் மங்கையருடன் சரசப்போர் புரியும் கலையில் வல்லவரே தவிர, போர்க்களத்தில் எதிரிகளைச் சாடும் திறன் இல்லாதவர். போர்த்தந்திரம் ஏதும் அறியாதவர். அவரது தந்தை சோழ மாமன்னரின் போர்த்திறனில் இருபதில் ஒரு பங்குகூட அற்றவர்; சுருங்கச்சொன்னால், திரிபுவனச் சக்ரவர்த்தியாரும், கோப்பரகேசரியாரும் கட்டிக் காத்து வளர்த்த சோழப்பேரரசின் அரியணையில் அமரச் சிறிதுகூடத் தகுதியற்றவர்."

"என்னது?" அதிர்ந்து போகிறார் பிரம்மராயர்.

"வெகு நாளாக அரசு விவகாரங்களைக் செவியுறாமலிருந்து விட்டேனே! தகுதியற்றவனைப் பட்டத்து இளவரசாக முடிசூட்டலாமா? 'தந்தையார் வளர்த்த சோழப்பேரரசு இழந்த பகுதிகளைக் கைப்பற்றுவேன்' எனச் சூளுரைத்து வெற்றியும் கண்ட வீரனா இப்படிப்பட்ட தவற்றைச் செய்கிறான்? அவனுக்கு இன்னொரு மகனும் உண்டே? அவன் என்ன ஆனான்?" என வினவுகிறார்.

"ஐயா, அதற்கு என்னால் விடையளிக்க இயலும்" என இருங்கோவேள் முன்வருகிறான்.

"'கங்கைகொண்ட சோழன்'43 என அழைக்கப்பட்ட அவர் பாண்டிநாட்டை நிர்வகித்து வந்தார்.  தந்தையைப் போன்ற சிறந்த மாவீரர் அவர். அவரைக் கண்டு எதிரிகள் அனைவரும் அஞ்சுவர்.  அவர்தான் அரியணை ஏறுவார் என்று நாங்கள் மகிழ்வாகக் கனாக் கண்டுகொண்டிருந்தோம்.  அதில் மண் விழுந்ததே!"

இருங்கோவேளின் குரல் கம்மியது. தன்னை நிலைப்படுத்தியாவாறு, "ஒருமுறை குதிரையில் வேட்டையாடச் செல்லும்போது, சிறுத்தை ஒன்று தாவியதைக் கண்டு மிரண்ட அவரது குதிரை தறிகெட்டு ஓடியது. தாழ்ந்த மரக்கிளையுள்ள ஆலமரத்தின் கீழே நாலுகால் பாய்ச்சலில் தாவிச்சென்றது. இளவல் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மரக்கிளையில் மாட்டி அடிபட்டுக் கீழே விழுந்த அவரின் இடுப்பைக் கீழே இருந்த உடைந்த மரக்கொம்பு குத்திக் கிழித்தது. அதனால் ஏதோ முக்கியமான நரம்புகள் அறுத்து அவருக்கு வலக்கையும், வலக்காலும் விளங்காது போய்விட்டது.44 அதனால் அவருக்கு வரவேண்டிய அரியணையும், இளவரசுப் பட்டமும் அதிராசேந்திரருக்குச் சென்றுவிட்டதய்யா" என்று தழுதழுத்த குரலில் கூறி முடிக்கிறான்.

"பிறகு?"

"பிறகென்ன ஐயா? மனமுடைந்த அவர் எவர் கண்ணிலும் படாது நீங்கிவிட்டார். ஒரு காட்டில் தனிமையில் வாழ்க்கையைக் கழித்து வருகிறார். காலம்சென்ற இராஜாதிராஜச் சக்ரவர்த்தியின் குமாரர்கள் – துறவறம் பூண்டு காட்டில் வசித்துவரும் அவர்கள் – கங்கைகொண்ட சோழ இளவரசைத் தங்கள் பாதுகாப்பில் வைத்துக் கவனித்து வருகின்றனர்.  அவர் மதுரையை விட்டு நீங்கியது பாண்டியருக்குக் கொண்டாட்டமாகிவிட்டது. அதிலும், அதிராஜேந்திரர் பட்டத்து இளவரசராகியதிலிருந்து மிக மகிழ்வுடன் மதுரையை மீட்டுவிடலாமெனக் மனக்கோட்டை கட்டிக் கொண்டிருக்கிறார்கள்!" இருங்கோவேளின் குரலில் பாண்டியர் மீதும், அதிராஜேந்திரன்மீதும் இருக்கும் வெறுப்பு நன்றாகவே தெரிகிறது.

இவர்களுக்குப் பின்னால் அமர்ந்திருக்கும் உடையான் ஆதித்தனின் கட்டைக்குரல் கணீரென்று ஒலிக்கிறது: "கங்கைகொண்ட சோழர் உடல்நிலைக்குக் கேடு வந்ததிலிருந்து, மாமன்னர் மனமொடிந்து போய்விட்டார்.  அவர் சொல்லும், செயலும் ஒரு நிலையிலில்லை. இல்லாவிடில் தன் தமையனும், மாவீரரும், யானையில் துஞ்சிய சோழருமான இராசாதிராசரை வஞ்சகமாகக் கொன்ற அகவமல்லனின் மகனை மருமகனாக ஏற்றுக்கொண்டிருப்பாரா?  அவருக்குத் தோள்கொடுத்துச் சளுக்கியரைப் புறமுதுகு காட்டி ஓட வைத்த வேங்கைநாட்டு இளவல் விருதராச பயங்கரரான45 இராசேந்திர நரேந்திரரின் நாட்டைப் பிடுங்கி, நயவஞ்சகனான விசயாதித்தனின் மகனுக்கு அளித்திருப்பாரா? கலி முற்றிவிட்டதைய்யா!  தங்களைப் போன்ற அரசியல் மேதை அருகில் இல்லாததும் அதன் காரணமோ அறியோம்" என அலுப்புடன் முடிக்கிறான்.

——————————–

[43.வீரராஜேந்திரனுக்குக் கங்கைகொண்ட சோழன், மதுராந்தகன் என்று இரு புதல்வர்கள் இருந்தார்கள்; மதுராந்தகன் கொங்குநாட்டையும், கங்கைகொண்ட சோழன் மதுரையையும் நிர்வகித்தனர் என்பது வரலாறு. இதில் எவன் அதிராஜேந்திரன் என்பது பற்றித் தகவல் இல்லை.

44.இது கற்பனையே. இதற்குச் சான்று எதுவுமில்லை. அதிராஜேந்திரன் அரியணை ஏறிய பின்னர் மற்றவன் என்ன ஆனான் என்பது பற்றிய தகவல் கிட்டவில்லை.

45.மேலைச்சளுக்கிய மன்னன் அகவமல்லன் சோமேஸ்வரனின் புதல்வர்களான விக்கிரமாதித்தனும் இரண்டாம் சோமேஸ்வரனும் தலைமைதாங்கி நடத்திய போரில் அவர்களைப் புறமுதுகிடச் செய்ததற்காக இராஜேந்திர நரேந்திரன் (முதலாம் குலோத்துங்கன்) விருதராஜ பயங்கரன் என்ற அடைமொழியைப் பெற்றான்.]

"அரசரின் அமைச்சர்கள் அறவழி உரைப்பதில்லையா? எந்தவொரு பெரிய அரச முடிவையும் எடுப்பதற்கு முன் மன்னர்கள் அமைச்சர்களைக் கலந்து ஆலோசிப்பது வழக்கந்தானே?" எனப் பிரம்மராயர் வினவுகிறார்.

முதன்முறையாக அரையன் சேந்தன் வாயைத்திறக்கிறான்: "அக்காலம் மலையேறிவிட்டது ஐயா. எனது மாமனாரும், முப்பாட்டனாருமான சேதுராயருக்குத் திரிபுவனச் சக்ரவர்த்தியாரும் கோப்பரகேசரியாரும் எப்படி மதிப்புக் கொடுத்தார்கள் என்பது தாங்கள் அறியாததல்ல.  நாட்டில் நடக்கவிருக்கும் எப்பெரிய அரசு விவகாரத்திற்கும் அவையைக் கூட்டி, அனைவரின் கருத்தையும் அறிந்துகொண்டு அதற்குமேல்தான் முடிவெடுக்கப்படும்.  இருப்பினும், இராஜேந்திரதேவர் மறைந்தவுடன் அம்மாதிரியான கருத்துரையாடல்கள் நடப்பது வெகுவாகக் குறைந்துபோயின. சோழநாட்டு விசுவாசிகள் நாங்கள்…" மேலே பேச இயலாது நிறுத்திவிடுகிறான்.

"நீங்கள் இருவரும் ஒன்றுமே சொல்லவில்லையே?" என அழகிய மணவாளநம்பியையும், வீரசோழ சக்ரபாணியையும் நோக்கி வினவுகிறார். அவர்கள் ஏதோ சொல்லத்துடித்து, உதட்டைக் கடித்துக்கொள்வதுபோல அவருக்குப் படுகிறது. பார்வை மங்கியிருப்பதால் தனது கணிப்பு சரிதானா எனவும் அவருக்கு ஐயமாக உள்ளது.

"நாங்கள் என்ன சொல்வதையா?" ஒரேசமயத்தில் இருவரிடமிருந்தும் பதில் வருகிறது.  ஒருவர் மற்றவருக்காகப் பேச்சை நிறுத்துகின்றனர்.

சில கணங்கள் தாமதித்துவிட்டு, வீரசோழ சக்ரபாணி பேச ஆரம்பிக்கிறான்: "ஐயா, இதுதான் அரசர் என்று ஒரு பதுமையை நிறுத்திவைத்தாலும், அதற்காக உயிரையும் கொடுக்க ஆயத்தமாக உள்ளேன். ஆனால், அரசர் மக்கள் அனைவரையும் ஒருநிலைப்படுத்த – ஒற்றுமையாக ஒருதாய் மக்கள் போல் கருதவேண்டும் என்று விரும்புகிறேன். அதிராசேந்திரர் அப்படிப்பட்டவர் அல்லர்."

"ஏன் அப்படிச் சொல்கிறாய் மகனே? இதுவரை அதிராஜேந்திரனுக்குத் திறமையில்லை, நன்னடத்தையில்லை என்றுதான் அனைவரும் கூறிவந்திருக்கின்றனர். வீரனும் உங்களை மதிப்பதில்லை, எவருடன் அறிவுரை பெறுவதில்லை, எதிரியை நண்பனாகவும், நண்பனைப் புறக்கணித்தும் வருகிறான் என்றே காதில் விழுந்தது. எது எப்படியிருந்தாலும், சோழ மன்னர்கள் மக்கள் அனைவரையும் ஒன்றுபோலத்தானே நடத்தி வந்திருக்கின்றனர்?  அதிராஜேந்திரன் இதிலிருந்து பிறழ்வதாக எப்படிச் சொல்கிறீர்கள்?" பிரம்மராயரிடமிருந்து கேள்வி பிறக்கிறது.

சக்ரபாணிக்காக மணவாளநம்பி மறுமொழியளிக்கிறான்: "ஐயா, நான் வைணவன்தான்.  கோப்பரகேசரியாரை எனது அத்தைப் பாட்டியார் காதல் கடிமணம் செய்துகொண்டார்.  அதற்காக அவர்களது மைந்தனுக்கு அரசுரிமையே இருக்கக்கூடாது என்று திரிபுவனச் சக்ரவர்த்தியார் எழுதுவித்தார். அது அரசியல் நியதி காரணமே அல்லாது வைணவத்தின் மீது அவர் கொண்ட வெறுப்பு என எவரும் எண்ணவில்லை. கோப்பரகேசரியாரும் பின்னர் அவர்களின் மகன் ஆளவந்தாருக்கு மனுகுலகேசரி என்னும் பட்டப்பெயர் சூட்டி, சேரநாட்டை ஆண்டுவரும்படி அனுப்பினார். சோழ மன்னர்கள் சைவர்களாக இருப்பினும் வைணவத்தை நன்கு ஆதரித்துத்தான் வந்திருக்கின்றனர். ஆனால், இப்போது அதிராஜேந்திரர் ஒரு வைணவ அரசகுமாரியை மணந்துள்ளாராம். அந்த அரசகுமாரி அவர் வைணவராக மாற வேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்திருக்கிறாளாம். எனவே, இளவரசர் வைணவராக மாறி, வைணவத்தை அரசுச் சமயமாக உயர்த்தப்போவதாகவும் செய்தி கிட்டியிருக்கிறது.46 இது எப்படிப்பட்ட குழப்பத்தை விளைவிக்கும் என நினைத்துப் பாருங்கள்!"

————————————–

[46.அதிராஜேந்திரன் பட்டமேற்றவுடன் உள்நாட்டுக் குழப்பங்கள் விளைந்தன என்று வரலாறு கூறுகிறது. அதற்குச் சைவ-வைணவத் தகராறும் ஒரு காரணமாக இருக்கலாம் எனச் சிலர் ஊகிக்கின்றனர். எனவே, கதாசிரியரின் கற்பனைக் குதிரை படிப்போரை அத்திசையில் இழுத்துச்செல்கிறது.]

அவன் நிறுத்தியதும், மணவாளநம்பி தொடர்கிறான். "எனது பாட்டனார் காடவர் தங்களது மாணாக்கியான நிலவுமொழியை – ஒரு சைவப்பெண்ணைத்தான் மணந்தார். எனது பாட்டியும் இறுதி வரை சைவப்பெண்ணாகத்தான் வாழ்ந்தார்கள். ஆனால், என் தாய் நப்பின்னைக்கு வைணவத்தில் பற்று மிகுந்ததால், அவர் வைணவராக வாழ்ந்து வருகிறார்கள்.  எனது அக்காள் அழகியமணவாளினியோ சைவத்தில் நாட்டம் செலுத்திச் சைவரான கருணாகரத் தொண்டைமானை மணந்திருக்கிறாள். நான் திருமாலையே உய்விக்கும் கடவுளாகக் கருதிப் போற்றிப் பணிந்து வருகிறேன். எனவே, சைவமும் வைணவமும் ஒரே குடும்பமாகவே வாழ்ந்து வருகின்றன…" தொண்டை செறுமிக்கொள்ளவே பேசுவதை நிறுத்துகிறான் மணவாளநம்பி.

அவன் விட்ட இடத்தில், வாசுதேவ பட்டர் துவங்குகிறார். "இடையில் புகுவதற்கு மன்னிக்க வேண்டும். இன்னொரு தலையாய செய்தியை யாரும் தங்களுக்குத் தெரிவிக்கவில்லை.  தற்பொழுது உடல்நலம் குன்றிப் படுத்தபடுக்கையாய்க் கிடக்கிறார் மாமன்னர் வீரராஜேந்திரர். அவர் வாழ்வு இன்னும் சில திங்களே என மருத்துவர்கள் கருதுகின்றனர்.  ஆகையால், சோழப்பேரரசின் அரியணையில் அமரப்போகிறவர் அதற்குத் தகுதியானவரா என்ற கேள்வி எழுகிறது.

"வீரராஜேந்திரர் எவரை மதித்தார், எவரை மதிக்கவில்லை என்பது கேள்வியே அல்ல. அவர் சோழப்பேரரசினை மிகச் சில ஆண்டுகளிலேயே நன்கு நிலைநிறுத்திவிட்டார். அது பல்லூழிகாலம் தொடர வேண்டும் என்பதுதான் எங்கள் அனைவரின் அவா. அதனால்தான் எங்களின் மனக்கலக்கத்தைத் தங்களிடம் தெரிவித்துத் தக்க அறிவுரை பெற வந்துள்ளோம்.  எங்கள் வீரர்களும், மதியூகிகளும், அரசியல் நிபுணர்களும் உள்ளனர். ஆனால் எங்கள் எவருக்கும் அதிராஜேந்திரர் மீது மதிப்பில்லை. வீரராஜேந்திரருக்குப் பிறகு அவர் அரியணையில் அமர்ந்தால் நாங்கள் பதவியைத் துறப்பதைவிட வேறு வழியே தெரியவில்லை."

***

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com