
ஜயங்கொண்ட சோழபுரம்
காளயுக்தி, சித்திரை 8 – ஏப்ரல் 21, 1018
கேட்பதற்கு இனிமையாக மங்கள இசை ஒலித்துக் கொண்டிருக்கிறது. அது மற்றவர்கள் பேசும் தேவையற்ற சொற்களை முழுகடிக்கிறது. வேதங்கள் ஓதப்படுகின்றன. தேவார, திருவாசகப் பாடல்கள் பாடப்படுகின்றன. இறைவனடிமைகள் தங்கள் ஆடலால் அனைவரையும் மகிழ்வித்துக்கொண்டிருக்கின்றனர். ஊரே மகிழ்ச்சிக் கடலில் நீந்திக் களிக்கிறது.
பெரிதாகப் போடப்பட்ட தென்னங்கீற்றுப் பந்தலில் மெல்லிய வெள்ளைத் துணிகளால் கூரையின் உள்பக்கம் மறைக்கப்பட்டிருக்கிறது. மலர்ந்த தாமரைகளைப்போன்ற விதானங்கள், மயில்கள், சுற்றிப் பிணைந்திருக்கும் திராட்சைக் கொடிகள், அன்னங்கள், இவ்வாறு பலவிதமான ஓவியங்களால் ஆங்காங்கு அந்த வெள்ளைத் துணியில் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. விதானங்களின் மையத்திலிருந்து அலங்காரமாகப் பட்டுக் குஞ்சங்கள் தொங்குகின்றன. துணியின் ஓரங்களில் பலவித வண்ணங்களில் கரைகள் கட்டப்பட்டிருக்கின்றன. கம்பங்கள்தோறும் தொம்பைகள் தொங்குகின்றன. கம்பங்களிலும் பலவண்ணத் துணிகள் சுற்றப்பட்டிருக்கின்றன. அவற்றின்மேல் மலர்ச் சரங்கள் சுற்றப்பட்டு எங்கும் நறுமணம் கமழ்கிறது.
கொள்ளிடத்திலிருந்து கொண்டுவரப்பட்டுத் தரையில் தூவப்பட்ட மணல் மீது மெல்லிய கோரைப்பாய்கள் அமருவதற்காக விரிக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கு பளபளக்கும் மண்பானைச் சால்களில் கிழக்கே ஒண்ணரை கல் தொலைவில் இருக்கும் ஒரு ஏரியிலிருந்து குளிர்ந்த நீர் கொணரப்பட்டு நிரப்பியிருக்கிறது. அச்சால்களுக்கு அருகிலேயே மரமணைகளில் குடிநீர்க்குவளைகள் உள்ளன. நடுவே பெரிய மேடை அமைக்கப்பட்டு அதில் அரியாசனங்கள் போடப்பட்டிருக்கின்றன. நடுவில் இருவர் அமரக்கூடிய பெரிய சிம்மாசனம் இருக்கிறது. இலங்கையிலிருந்து கொண்டுவந்த பாண்டியர்களின் பரம்பரைச் சிம்மாசனம் அது. அது மட்டும் காலியாக இருக்கிறது.
அதற்கருகில் இன்னொரு பெரிய சிம்மாசனத்தில் இராஜேந்திரனும், திரிபுவன மகாதேவியும் அமர்ந்திருக்கிறார்கள். மற்ற அரியாசனங்களில் இராஜேந்திரனின் மற்ற மனைவியர்களும், இராஜேந்திரதேவன், வீர(ராஜேந்திர)ன், அம்மங்கை மற்றும் பின் வரிசைகளில் சேதுராயர், முத்தரையர், அமைச்சர்கள், சிவாச்சாரி, அருள்மொழிநங்கை, இன்னும் பலர் அமர்ந்திருக்கிறார்கள்.
மேடைக்குக் கீழே வேள்விக் குண்டங்களில் பெரிய வேள்வி நடந்து கொண்டிருக்கிறது. அவற்றுக்கு நடுநாயகமாக விளங்கிய வேள்விக் குண்டத்தின் அருகில் இராஜாதிராஜனும், அவனது மனைவி மூவுலக மகாதேவியும் (திரிலோக்கிய மகாதேவி) வேதியர் சொற்படி நெய்யை வேள்வித் தீயில் சொரிந்து கொண்டிருக்கின்றனர். வேள்வி முடிந்ததும், வேதியர் புடைசூழ, காவலர் வெற்றிக்குடை பிடிக்க, அரசகுரு வேள்வியால் சிறப்பிக்கப்பட்ட மகுடத்தை ஏந்திவர, இராஜாதிராஜனும் அவனது மனைவியும், மேடைப்படியில் ஏறுகிறார்கள். இராஜேந்திரன் எழுந்து, தன் மகனுக்கு கைலாகு கொடுத்து பாண்டியரின் பரம்பரை அரியாசனத்தில் அமர்த்திவைக்கிறான். இராஜாதிராஜன் நீட்டிய கையைப் பற்றி, அவனருகில் அமர்ந்துகொள்கிறாள், அவனது பட்டத்து அரசியான மூவுலக மகாதேவி.
வேதியர் மந்திரங்களை ஓதி முடித்ததும், அரசகுரு மகுடத்தை எடுத்து இராஜேந்திரனின் கையில் கொடுக்கிறார். அதைத் தொட்டு ஆசிநல்கிய இராஜேந்திரன், அவரிடமே அம்மகுடத்தைத் திருப்பி அளிக்கிறான். அரசகுரு மகுடத்தை இராஜாதிராஜனுக்கு அணிவிக்கிறார். அடுத்தபடியாக ஒரு செங்கோல் அவனுக்கு வழங்கப்படுகிறது. அனைவரும் மலர்மாரிப் பொழிகின்றனர். இராஜாதிராஜனின் தலைக்கு மேலிருக்கும் ஒரு மலர் மூட்டை அவிழ்ந்து அவன்மீதும், அவனது மனைவி மீதும் பூமாரி பெய்கிறது. எங்கும் கெட்டி மேளம் இடைவிடாது முழங்குகிறது.
"சோழப் பட்டத்து இளவரசர் இராஜாதிராஜர் வாழி! ஈழத்திலிருந்து பாண்டியர் சிங்காதனத்தைக் கொணர்ந்து அதில் அரசேறிய மன்னர் வாழி! விஜய இராஜாதிராஜ சோழர் பல்லாண்டு வாழிய வாழியவே!" என்று மக்கள் அனைவரும் உரக்க வாழ்த்துகின்றனர்.
சோழப் பட்டத்து இளவரசாகத் தனது இருபத்திமூன்றாம் வயதிலேயே பொறுப்பேற்கிறான் இராஜாதிராஜன். சோழப் பேரரசனாகி நான்கு ஆண்டுகளுக்குள்ளேயே தன் மூத்த மகன்தான் சோழப் பேரரசின் வாரிசு என்று தந்தை இராஜேந்திரன் முடிவு செய்து விட்டதுதான் அவனுக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது. ஏற்கெனவே இதுபற்றித் தந்தையிடம் கேட்டபொழுது இராஜேந்திரன் சிரித்துக்கொண்டே அவனுக்குச் சொன்ன பதில் இதுதான்:
"எனது தந்தையார், அதாவது உனது பாட்டனார் இராஜராஜர் எனக்கு இளவரசுப் பட்டம் சூட்டிய போது எனக்கு வயது நாற்பத்திமூன்று. தந்தையார் என்னை அத்தனை காலம் அரசு உரிமை இல்லாமல்தான் வைத்திருந்தார். அதற்கு இரண்டு காரணங்கள்: ஒன்று, அவருக்குத் தெரியாமல் நான் காதல் கடிமணம் புரிந்துகொண்டது. பொறுப்பற்ற முறையில் நான் செயல்பட்டேன் என்ற சினம் அவருக்கு. ஒரு பேரரசை நிர்வகிக்கும் திறமை உள்ளவன் இவ்வாறு செய்யக்கூடாது, அதுவும் முதல் திருமணம் யாருக்கும் தெரியாமல் நடக்கக்கூடாது என்று நினைத்தார். எனவே, அவர் மனது மிகவும் பாதிக்கப்பட்டு விட்டது.
"சேதுராயர் மகளை நான் விரும்பியதையோ, அவளை மணம் செய்து கொள்வதையோ அவர் ஒரு குற்றமாகக் கருதவில்லை. தனக்கு அந்தச் செய்தி தெரிந்திருந்தால், தக்க தருணத்தில் அவளை எனக்கு மணமுடித்து வைத்திருப்பேன் என்றுதான் சொன்னார். எனினும் சேதுராயரின் மகள் சோழநாட்டின் பட்டத்து ராணியாக வருவதை அவர் விரும்பவில்லை. எந்த ஒரு அரசனின் முதல் திருமணமும் நாட்டின் நலத்தைப் பெருக்குவதாகவோ, விரிவாக்கிப் பலமாக்கும் விதமாகவோதான் நடக்கவேண்டும் என்று விரும்பினார். எனவே, நான் எதிர்காலத்தில் எப்படி நடந்துகொள்கிறேன் என்று கண்காணித்து வந்தார். அவர் மனநிறைவு அடையும் வரை எனக்கு இளவரசுப் பட்டத்தைக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.
"இரண்டாவது காரணம், பல அரசு விஷயங்களில் நானும், அவரும் ஒரே நோக்குடன் செயல்படவில்லை. எந்த ஒரு திட்டத்தைப்பற்றி விவாதித்தாலும், அவரின் அணுகுமுறையும், எனது அணுகுமுறையும் வெவ்வேறாகவே இருந்தன. தந்தை எதையும் நன்கு சிந்தித்து – சில சமயம் ஆறப்போட்டுதான் முடிவெடுப்பார். நானோ உடனுக்குடன் செயல்பட விரும்புவேன். எனக்கு இளவரசுப் பட்டம் வழங்கினால் அவரின் அணுகுமுறைக்கு எதிர்மாறாக நான் தன்னிச்சையாக செயல்படுவதைத் தடுக்க இயலாமல் போய்விடுமோ என்ற ஐயமும் அவருக்குச் சிறிது இருந்து வந்தது.
"எத்தனையோ போர்களில் தந்தையாருக்கும், சோழநாட்டிற்கும் வெற்றியைத் தேடிக் கொடுத்தேன். தமிழ்நாடு மட்டுமன்றி, கருநாட்டிலும், ஆந்திரத்திலும், கீழைச்சாளுக்கிய நாட்டிலும், இலங்கையிலும் புலிக்கொடியைப் பறக்கவிட்டேன். நான் படையுடன் வருகிறேன் என்றாலே புலியைக் கண்ட மான்கூட்டமாக எதிரிகள் சிதறி ஓடும் அளவுக்கு மதிப்பையும், மரியாதையையும் ஈட்டினேன். அது தந்தைக்கு என் திறமையில் நம்பிக்கையையும், மரியாதையையும் கூட்டியது. படைத்தலைவர்களும், அமைச்சர்களும், ஏனைய அதிகாரிகளும் பட்டம் சூட்டப்படாமல் இருந்தாலும்கூட என்னைச் சோழப் பேரரசின் இளவரசனாகவே மரியாதை கொடுத்து நடத்த ஆரம்பித்தார்கள்.
"கடைசியில் தந்தையாருக்குத் தமிழ்த்திருப்பணிமீது நாட்டம் வந்ததும் கருவூர்த்தேவர் அரசுரிமையை என்னிடம் ஒப்படைக்கும்படி தந்தையாருக்கு ஆணையிட்டார். அப்படி அவர் ஆணையிடாது போயிருந்தால்…" அப்பொழுது இராஜேந்திரன் சிரித்த சிரிப்பில் சிறிது கசப்பும் கலந்து இருந்ததை இராஜாதிராஜனால் உணர முடிந்தது.
அப்பொழுதே நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன், எவ்வளவு விரைவில் உனக்கு இளவரசுப் பட்டம் சூட்டிவிட இயலுமோ, அவ்வளவு விரைவிலேயே உனக்குப் பட்டம் சூட்டிவிட வேண்டும் என்று. காரணம், எனக்குச் சோழப் பேரரசைப் பற்றிப் பெரிய கனவொன்று இருக்கிறது. வரலாறு என்னைத் திரிபுவனச் சக்ரவர்த்தி இராஜராஜரின் மகன் என்று மட்டுமல்லாமல், என்னுடைய சாதனைகளுக்காக மட்டுமே என்னைச் சிறந்த சோழநாட்டுத் தமிழனாக போற்றி வரவேண்டும் – அதை நிறைவேற்ற வேண்டுமென்றால் என்னைப்போல நினைத்துச் செயல்படும் மகன் ஒருவன் என்னுடன் இணைந்து துணைநிற்க வேண்டும்.
"அதற்குத் தகுந்தாற்போல் நீயும் உன் கன்னிப்போரிலேயே தென்சேரனை யானைப் போரில் வீழ்த்தினாய்! தமிழ்நாட்டிலும், என் தந்தையாரிடத்தும் உன் மதிப்பை உயர்த்திக் கொண்டாய்! எனவே, எனக்கு அரசுப்பட்டம் கிட்டுமுன்னரே இந்த முடிவை நான் எடுத்துவிட்டேன். என் கனவு நிறைவேற நீதான் எனக்கு வலக்கையாக விளங்கவேண்டும்!" என்று இராஜேந்திரன் கேட்டதும் இராஜாதிராஜனின் மனம் உருகிவிட்டது…
… "அப்படியே செய்வேன் தந்தையே! உங்கள் கனவு நிறைவேற என் உயிரையும் கொடுப்பேன்" என்று தான் உறுதிமொழி அளித்ததும், இராஜேந்திரன் தன்னை ஆரத் தழுவிக் கொண்டு ஆசி அளித்ததும் நினைவுக்கு வருகிறது.
"நீதான் அதைச் செய்ய ஆரம்பித்து விட்டாயே, இராஜாதிராஜா! பாண்டியர்களின் பரம்பரைச் சொத்தை என்று எனக்குக் காணிக்கையாக அளித்தாயோ, அன்றே அந்த அரியாசனத்திலேயே உன்னை இளவரசனாகப் பட்டம் சூட்டவேண்டும் என்ற முடிவையும் எடுத்துவிட்டேன்!" என்று தன் தந்தை பெருமையுடன் கூறியதும் அவன் கண்முன் ஓடுகிறது. அதை நினைத்து நெஞ்சம் விம்முகிறது. கண் இலேசாகக் கலங்குகிறது.
"நெய்ப்புகை உங்கள் கண்ணில் எரிச்சலை மூட்டுகிறதா?" என்று மெல்லக் கேட்கிறாள் மூவுலகமகாதேவி.
"இல்லை தேவி, இல்லை. இது ஆனந்தக் கண்ணீர்!" என்று பதிலளிக்கிறான் இராஜாதிராஜன். அவன் கையை அன்புடன் மெல்ல அழுத்துகிறாள் அவள்.
ஜயங்கொண்ட சோழபுரம்
காளயுக்தி, சித்திரை 28 – மே 13, 1018
கைதியாக இழுத்து வரப்படுகிறான், இலங்கை மன்னன் மகிந்தன். கிட்டத்தட்ட ஆறு மாதங்களாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால் பொலிவிழந்து காணப்படுகிறான். மணிமகுடமும், அரசனுக்குரிய அணிகலன்கள் எதுவும் இல்லாமல் ஒரு சாதாரணக் கைதியாகவே சங்கிலியால் பிணைக்கப்பட்டு நிற்கிறான்.
அரசவையில் இராஜேந்திரன் தனது அமைச்சர்கள் மற்ற முக்கிய அதிகாரிகளுடன் கொலு வீற்றிருக்கிறான். மகிந்தன் வந்துநின்றதும் அரசவையில் ஒருவிதமான அமைதி நிலவுகிறது.
அரசு அதிகாரி ஒருவன் உரத்த குரலில் அறிவிக்கிறான், "சோழநாட்டின் அமைதிக்கு இடையூறு விளைவித்ததற்காகவும், வணிக நாவாய்கள் எழுபத்தைந்தை வழிமறித்துக் கொள்ளையடித்து, அவற்றை முழுகடித்ததற்காகவும், சோழநாட்டின் நிழலில் கப்பம் கட்டி வாழும் பாண்டியருக்கு அடைக்கலம் கொடுத்து, அவர்களது பரம்பரைச் சொத்தைப் பாதுகாத்து வந்து, அவர்களைச் சோழர்களுக்கு எதிராகச் செயல்படத் தூண்டியதற்காகவும், இலங்கைவாழ் தமிழர்களைத் தேவையின்றித் துன்புறுத்தியதற்காகவும், அவர்கள் சொத்துகளைச் சூறையாடியதற்காகவும், சோழநாட்டுத் துரோகியாகக் குற்றம் சாட்டப்பட்டு கோப்பரகேசரி இராஜேந்திரசோழ தேவர் முன் இலங்கை மன்னர் மகிந்தர் நிறுத்தப்பட்டிருக்கிறார்!"
கையை உயர்த்தி அவையில் எழும் ஆரவாரத்தைக் கட்டுக்குள் கொணர்கிறான் இராஜேந்திரன்.
"சோழநாட்டுத் தரப்பில் வாதாட திருமந்திர ஓலைநாயகத்தை அழைக்கிறோம்!" என்று அறிவித்த இராஜேந்திரன், "மகிந்தரே, உமது தரப்பில் வாதாட யாராவது இருக்கிறார்களா?" என்று வினவவும் செய்கிறான்.
அதை அவனுக்குச் சிங்களத்தில் மொழிபெயர்த்துச் சொல்கிறார் ஒரு சோழ மொழிபெயர்ப்பாளர்.
இல்லை என்று தலையாட்டுகிறான் மகிந்தன்.
"யாராவது இலங்கை மன்னருக்காக வாதாட முன் வருகிறார்களா?" என்று அவையை வினவுகிறான் இராஜேந்திரன்.
அரசவையில் மரண அமைதி நிலவுகிறது.
"இந்தச் சோழ அவையில் என் பக்கம் பேச யாராவது இருப்பார்களா? இது ஒரு நாடகம்தானே! என் நாட்டை வஞ்சகமாகக் கவர்ந்துகொண்டீர்கள். இப்பொழுது கண்ணீர்த் துடைப்பாக இந்த விசாரணையையும் நடத்துகிறீர்கள். செய்யுங்கள். ஆயிரம் ஆண்டுகள் கழித்தாவது இதற்கு நாங்கள் பழிதீர்த்துக் கொள்வோம்!" என்று சீறுகிறான் மகிந்தன்.
இதுவும் அரசவைக்கு தமிழில் மொழிபெயர்க்கப்படுகிறது.
இராஜேந்திரனின் முகத்தில் சீற்றம் தோன்றி மறைகிறது. பின்னர் கடகடவென்று நகைக்கிறான்.
"மன்னர் மகிந்தரே! கன்றுக்குட்டியைக் கொன்றதற்காகத் தன் மகனையே தேர் ஓட்டிக் கொன்ற மனுநீதிச் சோழன் வழிவந்தவர்கள் நாங்கள். நாங்கள் குற்றம் சாட்டியிருக்கிறோம். உம் சார்பாக வாதாட எவரும் முன்வராததால் நாமே ஒருவரை நியமிக்கிறோம். எமது வழித்தோன்றலும், சோழநாட்டு பட்டத்து இளவரசுமான இராஜாதிராஜனையே உம் தரப்பில் வாதாடுமாறு பணிக்கிறோம். இதன் மூலம் சோழநாட்டில் கண்துடைப்பாக எதையும் செய்யமாட்டோம் என்று அறிந்துகொள்வீராக!" என்று இராஜேந்திரன் அறிவித்தும் அரசவையில் "ஆ!" என்ற உரத்த ஒலி எழுகிறது.
மகிந்தனே இராஜேந்திரனிடமிருந்து இப்படி ஒரு முடிவு வரும் என்று கனவில்கூட நினைக்கவில்லை. அவனுக்கு உள்ளூர ஒரு நம்பிக்கை பிறக்கிறது. அதேசமயம் ஒரு அவநம்பிக்கையும் தொடர்கிறது.
பதினாயிரக்கணக்கான வீரர்களைக் களபலி கொடுத்த இராஜாதிராஜன் முழுமனதுடன் தன் பக்கம் எப்படி வாதாடுவான் என்றும் நினைத்துப் பார்க்கிறான். அவனுக்குத் தன்னைப் பற்றி என்ன தெரியும், யானைப் படைகொண்டு சிங்களப் படைவீரரைச் சிதறடித்தவன் தன்னைப் பற்றி என்ன நல்வார்த்தைகள் கூறப் போகிறான் என்று சிந்திக்கிறான்.
இளவரசனே தன் பக்கம் வாதாடும்பொழுது திருமந்திர ஓலைநாயகத்தின் சொல் எப்படி எடுபடும் என்றும் எண்ணுகிறான்.
"அரசே, சோழ இளவரசனாக இருந்துகொண்டு சோழநாட்டிற்கு எதிராக என்னால் எப்படி வாதாட இயலும்? அப்படி நான் வாதாடுவது சோழநாட்டிற்கு நான் இழைக்கும் துரோகம் ஆகாதா? இப்படி ஒரு இருதலைக் கொள்ளி எறும்பின் நிலைமைக்கு என்னைத் தாங்கள் ஆளாக்குவது முறையா? என்னை இந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கலாகாதா?" என்று இராஜேந்திரனைப் பணிவாக இராஜாதிராஜன் கேட்டுக்கொள்கிறான்.
"ஒரு மன்னனாகப் போகிறவனுக்கு மற்றவர்களின் கண்ணோட்டத்தில் அணுகத் தெரிந்திருக்கவேண்டும்! அப்பொழுதுதான் அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள், நாம் எப்படிச் செயல்படவேண்டும் என்று முடிவெடுக்க இயலும். நீ மற்றவர்களின் கண்ணோட்டம் அறிந்தவன் என்பதை இந்த அரசவைக்குக் காட்ட இது சிறந்த வாய்ப்பாக அமைகிறது. எனவே, சோழநாட்டைப் பிற்காலத்தில் நீ எப்படி நடத்திச் செல்லப் போகிறாய் என்பதை இது காட்டுமே தவிர, யாரும் உன்னை ஒரு நாட்டுத் துரோகியாகக் காணவைக்காது. எனவே, நீ வாதாடு! வாதாடுவதும் ஒரு சொற்போர்தானே! நீ சோழ நாட்டுக்கு எதிராக வாதாட வேண்டியதில்லை! இலங்கை மன்னருக்காக வாதாட வேண்டும், அதுவும் முழு மனதுடன் வாதாட வேண்டும் என்று யாம் பணிக்கிறோம்!" இராஜேந்திரனின் குரலில் தனது முடிவு மாற்றிக் கொள்ளப்பட மாட்டாது என்ற உறுதி தொனிக்கிறது.
தனது அரியணையில் இருந்து வேண்டாவெறுப்புடன் எழுந்து, அருகிலிருக்கும் முக்காலியில் தனது மணிமுடியையும், உடைவாளையும் கழட்டி வைக்கிறான் இராஜாதிராஜன்.
"சோழநாட்டின் மணிமுடியை அணிந்துகொண்டு என்னால் இலங்கை மன்னர் தரப்பில் வாதாட இயலாது! எனவே இவ்வழக்கு முடிந்து கோப்பரகேசரியார் தீர்ப்பளிக்கும்வரை நான் மணிமுடி இல்லாமல் இருக்க அனுமதி வழங்கக் கோருகிறேன்!" என்று கேட்டதும், இராஜேந்திரன் தலையசைத்துத் தன் அனுமதியை வழங்குகிறான்.
இராஜாதிராஜன் மெல்ல மகிந்தன் அருகில் சென்று இராஜேந்திரனை நோக்கி அறிவிக்கிறான்.
"அரசே! முதலாக இலங்கை மன்னர் சார்பில் நான் தங்களுக்கு விடுவிக்கும் கோரிக்கை இதுதான்! மகிந்தர் ஒரு அரசர். என்னதான் குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும் தீர்ப்பளிக்கும் வரை அவரை நாம் ஒரு அரசராகத்தான் நடத்த வேண்டும். அவர் அமர்ந்துகொள்ள ஒரு இருக்கையை அளிக்குமாறும், அவரைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளை அவிழ்க்குமாறும் வேண்டிக்கொள்கிறேன். அவர் மீது குற்றம்தான் சாட்டப்பட்டிருக்கிறதே தவிர, அவர் குற்றவாளி என்று இதுவரை தீர்ப்பாகவில்லை!" அதிர்ந்து போகிறான் மகிந்தன்.
எடுத்த எடுப்பிலேயே தான் செய்யப்போகும் வேலையைச் சரியாகச் செய்யப்போவதை அவனுக்கு உணர்த்தி விட்டானே அவன்! நம்பிக்கை துளிர்விடுகிறது அவனுக்கு.
"ஓலைநாயகத்திற்கு இதில் மறுப்பு ஏதாவது இருக்கிறதா?" என்று வினவுகிறான் இராஜேந்திரன்.
இல்லையென சிவாச்சாரி தலையசைக்கிறான். இராஜேந்திரன் கையசைக்கவே, ஒரு இருக்கை கொண்டு வரப்படுகிறது. மகிந்தன் அருகே இருந்த காவலன் ஒருவன் அவனைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளை அவிழ்த்து எடுக்கிறான்.
இருக்கையில் கால் மேல் கால்போட்டு அமர்ந்துகொண்ட அவனை நோக்கி, "நீர் இலங்கை மன்னர்தான்! இருந்தாலும் கோப்பரகேசரியார் முன்னர் இப்படி அமர எவருக்கும் அனுமதி இல்லை! இரு கால்களையும் தொங்கவிட்டு அமர்ந்துகொள்ளும்!" என்று உத்தரவிடும் தொனியில் எச்சரிக்கிறான் இராஜாதிராஜன்.
அவன் சொல்வதைப் புரிந்த கொண்ட மகிந்தன் சரியாக அமர்ந்துகொள்கிறான். அவன் தனக்காக வாதாடுவானே தவிர, வேறு எந்த சலுகையையும் தரமாட்டான் என்றும் அறிந்துகொள்கிறான்.
சிவாச்சாரி தன் இருக்கையை விட்டுக் கீழிறங்கி வருகிறான்.
"கோப்பரகேசரி அவர்களே! தாங்கள் அறியாததை நான் அரசவையில் கூறவரவில்லை. கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை மன்னர் அவர் விருப்பப்படி ரோகணத்தை ஆண்டு வந்திருக்கிறார். நாம் அவரைத் தொந்தரவு செய்யாமல் இருந்திருக்கிறோம். சோழநாட்டின் அமைதியைக் குலைப்பதற்கென்றே இலங்கை மன்னர் நமக்குத் திறை செலுத்திவந்த பாண்டிய மன்னரை நமக்கு எதிராகச் செயல்படுத்த ஆதரவு நல்கி வந்திருக்கிறார். மேலும்…" என்று மகிந்தன் மீது ஒன்றொன்றாகக் குற்றங்களை அடுக்கிக்கொண்டே செல்கிறான்.
"இலங்கை மன்னர் தரப்பில் பேசப்போகும் சோழ இளவரசரே இதை நன்றாக அறிவார். இலங்கை மன்னர் பாண்டிய மன்னரின் பரம்பரைச் சொத்தை அங்கு வைத்திருக்க உதவி செய்திருக்கிறார். அங்கு இருந்து வந்த ஐயாயிரம் பாண்டிய வீரர்களுக்கு உண்ண உணவும், இருக்க இடமும் அளித்துச் சோழர்களுக்கு எதிராகச் செயல்பட்டிருக்கிறார். இதனால் சோழ வீரர்கள் பத்தாயிரம் பேர்களுக்குமேல் உயிரிழக்க நேரிட்டது."
கிட்டத்தட்ட ஒரு நாழிகைக்கும் மேலாக மகிந்தன்மேல் குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டே போகிறான் சிவாச்சாரி. அரசவையில் அனைவரும் மகிழ்வடைகின்றனர்.
உயிர்நஷ்டம், பணநஷ்டம் என்று கணக்குக் கொடுத்து, அனைவரும் விரும்பியதற்கும் மேலாகவே சிவாச்சாரி சோழநாட்டுத் தரப்பு வாதத்தைத் திறமையாக எடுத்துரைப்பது அனைவருக்கும் நிறைவாகவே இருக்கிறது.
"இப்படிப்பட்ட குற்றத்திற்காக, இலங்கை மன்னரின் படைத்தலைவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, அது அங்கேயே நிறைவேற்றப்பட்டதும் கோப்பரகேசரியார் அறிந்ததே! அரசர்தான் குடிமக்களின் செயலுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்பது அரச நீதி என்பது ஆன்றோர் வாக்கு. இவரது அனுமதியில்லாமல், ஆணையில்லாமல் இவரது படைத்தலைவர்கள் நம்முடன் போருக்கு வரவில்லை. எனவே, அவர்களுக்கு அளித்த தண்டனையான மரண தண்டனையையே இலங்கை மன்னருக்கும் அளிக்க வேண்டும் என்றும், அவரது மனைவி, மக்களை சோழநாட்டின் அடிமைகளாக்கி வாழ்நாள் முழுதும் குற்றேவல் செய்துவர தீர்ப்பளிக்குமாறும் சோழ நாட்டின் சார்பில் விண்ணப்பித்துக் கொள்கிறேன்" என்று தன் தரப்பு வாதத்தைச் சிவாச்சாரி முடித்துக்கொள்கிறான்.
இலங்கை மீது படையெடுத்துச் சென்ற இராஜேந்திரனுக்குத் தோள்கொடுத்து, சிங்களப் படைகளைச் சிதறடித்து, பாண்டியர் பொக்கிஷங்களைக் கைப்பற்றிய இராஜாதிராஜன், இலங்கை மன்னன் மகிந்தனுக்குச் சார்பாக எப்படி சிவாச்சாரியின் ஆணித்தரமான வாதங்களை எதிர்த்து வாதாடப்போகிறான் என்று திகைத்தவாறு, அந்த அரசவையே அவனை நோக்குகிறது.
"கோப்பரகேசரி அவர்களுக்கும், ஆன்றமர்ந்து அடங்கிய பெரியோர்களும், தங்கள் உயிரை விடச் சோழநாட்டின் பெருமையையே பெரிதாக நினைக்கும் மாவீரர்கள் பல்லோரும் நிறைந்த இந்த அரசவைக்கும் என் தலைசாய்த்து வணங்கிவிட்டு இலங்கை மன்னரின் சார்பில் வாதாட முற்படுகிறேன். அதனால் நான் சோழநாட்டுக்கு எதிராக வாதாடுகிறேன் என்று யாரும் நினைக்க வேண்டாம் என்ற கோரிக்கையையும் இந்த அரசவைக்குமுன் வைக்கிறேன். நான் சொல்லப்போவதெல்லாம் இலங்கை மன்னரின் பார்வையை, அவர் தரப்பில் இருப்பதாக அவர் நினைக்கும் நியாயத்தைத்தான்!" என்ற பீடிகையுடன் தன் வாதத்தைத் துவங்குகிறான் இராஜாதிராஜன்.
அவன் சொல்வதை உடனுக்குடன் சோழ மொழிபெயர்ப்பாளர் மகிந்தனுக்குச் சிங்களத்தில் மொழிபெயர்த்துச் சொல்கிறார். இதைக் கேட்டதும் மகிந்தனின் முகம் சற்றுச் சுருங்குகிறது. பெயருக்குத்தான் இவன் தன்பக்கம் வாதாடப்போகிறான், முழுமனதுடன் அல்ல என்ற முடிவுக்கு வருகிறான்.
"எனக்கு வாட்போர்தான் தெரியும். பல நூல்களும், மறைகளும், அரச நீதியும் கற்றுத்தேர்ந்த ஓலைநாயகத்துடன் சொற்போர் புரிய நான் வல்லவன் அல்லேன். எனக்குத் தெரிந்த எளிய தமிழில் இலங்கை மன்னருக்கான வாதத்தை முன்வைக்கிறேன்.
"அனைவரும் சற்று சிந்தித்துப் பாருங்கள். சிங்களத் தீவினை அனுராதபுரத்தில் ஒரு குடையின் கீழ் ஆண்டு வந்த மகிந்தர் தனது சேரநாட்டு வேலைக்காரப் படைகளின் புரட்சிக்கும், எனது பாட்டனாரின் சீற்றத்துக்கும் ஈடுகொடுக்க இயலாது, பரம்பரைத் தலைநகரான அனுராதபுரத்தை விட்டு நீங்கி, பொலனருவையைப் புதுத் தலைநகராகக் கொண்டு, பாதி இலங்கையை ஆண்டுவந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு எனது பாட்டனாரின் படைகள் முன்னேறி வரவே, பொலனருவையை விட்டு ஓடி, எஞ்சியிருக்கும் தென்னிலங்கையான ரோகணத்தில் குடியேறினார்.
"அவரது பரம்பரையோர் ஸ்ரீலங்கா என்று அழைத்து வந்த இலங்கையை, பொன்னியின் செல்வரான எனது பாட்டனார் கைப்பற்றி, மும்முடிச் சோழமண்டலம் எனப் பெயரிட்டு அழைத்தார். அனுராதபுரத்தை அழித்தார், பொலனருவையின் பெயரை ஜனநாதபுரம் என மாற்றினார். அரசவையோரே, சிந்தியுங்கள்! நமது சோழநாட்டை சிங்களவர்கள் கைப்பற்றிச் சிங்கள பூமி என்று அழைத்தாலோ, தஞ்சைக்கு உத்தரலங்காபுரி என்று பெயரிட்டாலோ, நாம் சும்மா இருப்போமா!
"அதைத்தான் அவரும் செய்தார். எப்படியாவது இலங்கையை நம்மிடமிருந்து விடுவிக்கவேண்டும் என்று முயற்சி செய்தார். எனவே, சிங்கள அரசர்களுடன் நட்பு பூண்டிருந்த பாண்டியர்களின் உறவினை நாடினார். அவர்களின் பரம்பரைச் சொத்தைப் பாதுகாக்க ரோகணத்தில் இடம் கொடுத்தார். பாண்டியர்களின் படை வீரர்கள் ஐயாயிரம் பேர்களுக்கு உதவியாகத் தன் படைகளையும் ஈந்து உதவினார். இது இலங்கைக்காக அவர் செய்ததுதானே! தாய்நாட்டின் மீது பற்றுள்ள எந்த மன்னரும் இதைத்தானே செய்வார்?"
இராஜாதிராஜன் சிறிது நேரம் தனது வாதத்தை நிறுத்தி, அவையினரைக் கவனிக்கிறான். இதன் மொழிபெயர்ப்பைக் கேட்ட மகிந்தனின் முகம் மலருகிறது. தன்னால்கூட இவ்வளவு அழகாக வாதாட முடிந்திருக்காது என்று உணர்ந்துகொள்கிறான். அதேசமயம் இராஜேந்திரன் முகத்தில் எந்த விதமான மாற்றமும் தோன்றாமல் இருப்பதையும் கவனிக்கிறான்.
இராஜாதிராஜன் மீண்டும் தொடர்கிறான்.
"நாட்டுப் பற்றுள்ள மன்னன் எதைச் செய்ய வேண்டுமோ, அதைதான் இலங்கை மன்னரும் செய்தார். பலம் வாய்ந்த சோழப் படையினை நேருக்க நேர் எதிர்த்துப் போராட தனக்கு வலிமையில்லை, தன்னிடம் படை பலமும் இல்லை என்பதை நன்றாகவே அறிந்திருந்த அவர், வேறு வழியைக் கையாண்டார்.
"எங்கு அடித்தால் நமக்கு வலிக்குமோ, அங்கு அடிக்க முயற்சி மேற்கொண்டார். பாண்டியர்களின் துணையுடன் நமது வணிக நாவாய்களை வழிமறித்தார். அவர்கள் வணிகம் செய்து ஏற்றிவந்த செல்வத்தைக் கொள்ளையடித்தார். இலங்கையில், குறிப்பாக ரோகணத்தில் அமைதியாக வாழ்ந்து வந்த தமிழ் மக்களைத் துன்புறுத்துவதன் மூலம் நமக்கு இடைவிடாத தலைவலியை உண்டாக்கினார்.
"இப்படிச் செய்வது முறையான செயல் என்று நான் வாதாட முன்வரவில்லை. இப்படியும் மறைமுகமாகப் போரிடலாம் என்று அறிந்து, அப்படிச் செய்தார். நாளை, ஏன்? எதிர்காலத்தில் இப்படிப்பட்ட முறையற்ற போர்கள் நடத்துவதும் ஒரு வழிதான் என்பதற்கு முன்னோடியாக4, நமக்கு இடைவிடாது தொந்தரவு கொடுத்து வந்தார்.
"இதைத் தனது ஆதாயத்திற்காகச் செய்தாரா என்றால், அதுதான் இல்லை. நம்மிடமிருந்து கொள்ளையடித்த செல்வம் அவரது படைகளுக்கு ஊதியம் கொடுக்கக்கூடப் போதுமானதாக இல்லை. செல்வத்தில் பெரும்பகுதி பாண்டியர்களுக்குத்தான் சென்றது. இருந்தும் அவர் இத்தகைய தலைவலியை நமக்குக் கொடுத்துவந்ததற்குக் காரணம் – அப்படியாவது நாம் இலங்கையை விட்டு வெளியேற மாட்டோமா என்றுதான்.
"சோழ நாட்டின் கண்ணோட்டதிலிருந்து பார்த்தால் இது முறையற்ற செயல்தான்" என்ற இராஜாதிராஜன், அருகிலிருந்த குவளையிலிருந்த நீரைச் சற்றுப் பருகிவிட்டு மேலும் தொடருகிறான்:
"சேரர்கள், கருநாட்டார், கங்கர்கள், வேங்கைநாட்டார் போல நமக்குத் திறை செலுத்தி நன்கு வாழ்ந்திருக்கலாம். நமது நட்பைப் பெற்று நிம்மதியாக ரோகணத்தை ஆண்டு கொண்டிருக்கலாம். அப்படி அவர் செய்யாதது நமக்குச் சினத்தை வரவழைத்தாலும், அது அவரது நாட்டுப்பற்றைத்தானே காட்டுகிறது? நாட்டின் மீது அளவற்ற பற்று வைக்கும் வீரர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதைக் கண்கூடாக, இலங்கையில் தங்கள் பரம்பரைப் பொக்கிஷத்தைக் காப்பாற்றப் போர்புரிந்த பாண்டிய வீரர்களிடம் கண்டேன். அவர்கள் எனக்கு எதிராகப் போராடியதால் அவர்களை அழித்தேன். ஆயினும், அவர்களது வீரத்திற்கு இன்னொரு வீரனாகத் தலைவணங்கியதால், அவர்களுக்கு வேதியர்கள் மூலம் முறைப்படி ஈமக்கடன்களையும் செய்வித்தேன்.
"இலங்கை மன்னர் ஒரு வீரரைப் போல நடந்து கொண்டு நம்மிடம் போரிட்டு நமது மதிப்பைப் பெறவில்லை. அப்படி இருந்தால் இப்படி ஒரு வழக்காடத் தேவையே இருந்திருக்காது. ஆயினும் அவர் செய்த செயலுக்குக் காரணம் நாட்டுப்பற்று என்பதால் – அவருக்கு எப்படிப்பட்ட தண்டனை வழங்கினாலும் – இழிவான தண்டனையை வழங்கக்கூடாது என்று பகைவனுக்கும் அருளும் பரம்பரையில் வந்த கோப்பரகேசரியாரைக் கேட்டுக்கொள்கிறேன். எனக்குத் தெரிந்த அளவுக்கு நான் முழுத் திறமையுடன் வாதாடி இருக்கிறேன். இது போதாது என்றால், வேறு எந்தக் கருத்தையும் நான் விட்டுவிட்டேன் என்று மனதிற்குத் தோன்றினால், அதை இலங்கை மன்னர் எனக்குத் தெரிவித்தால், அதை கோப்பரகேசரியாருக்கும் இந்த அரசவைக்கும் முன் வைக்க ஆயத்தமாக உள்ளேன்" என்று தனது வாதத்தை முடித்துக் கொண்டு இலங்கைமன்னன் மகிந்தனை நோக்குகிறான் இராஜாதிராஜன். மகிந்தன் நன்றியுடன் கைகூப்புகிறான். அனைவரும் இராஜேந்திரனை நோக்குகிறார்கள்.
தனது இறுதி முடிவு அவன் கையில்தான் இருக்கிறது என்று அறிந்த மகிந்தன் அவனை ஏறிட்டு நோக்குகிறான். ஒருசில கணங்கள் இராஜேந்திரனது பார்வையைச் சந்தித்த அவன், பிறகு தனது கண்களைத் தாழ்த்திக்கொள்கிறான்.
அரசவையில் இருக்கும் அமைதி அனைவருக்கும் தாங்கமுடியாத ஒன்றாக இருக்கிறது.
இராஜேந்திரன் சிறிதுநேரத்திற்குப் பிறகு தனது செங்கோலை உயர்த்துகிறான். அனைவரும் அவனை உற்றுநோக்குகின்றனர்.
[4.இப்படிப்பட்ட மறைமுகத்தாக்குதல் தீவிரவாதம் மூலமாகவும் நடத்தி நிலைகுலையச் செய்வது, அண்டைநாடுகள் மூலம் அதை நிறைவேற்றிக்கொள்வது, ஒரு போர்க்கலையாக இப்பொழுது நடத்திவருவதை, அப்பொழுதே இராஜாதிராஜன் தொலைநோக்காளனாகக் கூறுவதாகப் புனையப்பட்டுள்ளது.]
"இரு தரப்பு வாதத்தையும் கேட்டோம். பொதுவாக, கடற் கொள்ளையருக்கும், நாட்டின் அமைதியைக் குலைப்பவருக்கும், குற்றமற்ற மக்களைத் துன்புறுத்துபவருக்கும், சோழநாட்டில் அளிக்கப்படும் தண்டனை மரணம்தான். அவரது குடும்பத்தினர் அடிமைகளாகிக் குற்றேவல் செய்வதுதான் மரபு. இதை ஓலைநாயகம் மிக அழகாக எடுத்துரைத்தார்."
அரசவையையும், இலங்கை மன்னனையும் கவனிக்கிறான் இராஜேந்திரன். அவன் சொல்வதை ஆமோதிப்பதுபோலக் கைகளை உயர்த்தியும், தலைகளை ஆட்டியும், அரசவையினர் தங்கள் கருத்துகளை ஆரவாரத்துடன் தெரிவிக்கின்றனர். அவன் மீண்டும் கையை உயர்த்தவே, ஆரவாரம் அடங்குகிறது.
"ஆயினும் இளவரசன் இராஜாதிராஜன் சொன்ன வாதத்திலும் பொருள் பொதிந்துள்ளது. நாட்டுப்பற்றினால் உந்தப்பட்டே, இலங்கை மன்னர் இத்தகைய கொடிய செயல்களைச் செய்திருக்கிறார் என நம்புவோம். இத்தகைய செயல்களைச் செய்பவர்களை ஐந்தாம்படைகள் என்றுதான் நாம் அழைப்போம். ஐந்தாம்படைகளுக்குச் சோழநாட்டில் மட்டுமல்ல, எந்த நாட்டிலும் மரணதண்டனைதான் விதிப்பார்கள்."
இராஜேந்திரன் இப்படிச் சொன்னதும் மகிந்தனின் சப்தநாடிகளும் அடங்கிவிடுகின்றன. மரண தண்டனை என்றுதான் உறுதியாகிவிட்டது. இருப்பினும், ஐந்தாம் படை என்ற பழியுடனா சாகப்போகிறோம் என்று வருந்துகிறான்.
"இருப்பினும், பகைவனுக்கும் கருணைகாட்டுவது நமது வழக்கம்தான். நம்முடன் போரிட்ட மன்னர்களுக்கே நாம் கருணைகாட்டி விடுவித்து, நமக்குத் திறைசெலுத்தி வாழுமாறு பணித்து, அவர்களுடைய நாட்டினையும் திரும்ப அளித்திருக்கிறோம். நாட்டிற்காக நம்மிடம் போரிட்டுத் தோற்றுப் பிடிபட்டிருந்தால் – அப்படிப்பட்ட கருணையைக் காட்டியிருக்க இயலும். அதுவும் இல்லை.
"இவரை இப்படியே விட்டுவிட்டால் நாளை சோழர்களை எல்லோரும் கிள்ளுக்கீரையாக நினைத்து ஐந்தாம்படையாகச் செயல்பட ஆரம்பித்துவிடுவர். எனவே இவர் செய்ததுபோலச் செயலாற்றினால் சோழர்களிடமிருந்து தப்ப இயலாது; அதேசமயம் நாட்டுப்பற்றினால் தவறாக செயலாற்றினார் என்பதால் சிறிது கருணையும் காட்டினோம் என எதிர்காலம் அறிந்துகொள்ள வேண்டும். எனவே இவருக்கும், இவரது குடும்பத்திற்கும் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கிறோம்!"
தனது செங்கோலை உயர்த்தித் தன் முடிவைத் தெரிவிக்கிறான் இராஜேந்திரன்.
அரசவையே கைதட்டி ஆரவாரம் செய்கிறது. "சரியான தண்டனை! சரியான தண்டனை!!" என்ற முழக்கம் அரசவையையே பிளக்கிறது.
இராஜேந்திரன் மீண்டும் கையை உயர்த்துகிறான். அரசவை உடனே அமைதியாகிறது.
"ஆயினும் இளவரசன் இராஜாதிராஜன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இலங்கை மன்னருக்கும் அவரது குடும்பத்திற்கும் நாம் மேலும் கருணைகாட்டப் போகிறோம். வாழ்நாள் முழுவதும் சிறையில் இருந்தாலும், மற்ற சாதாரணக் கைதிகளைப்போல நடத்தாமல், அவருக்குச் சிறந்த முறையில் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கிறோம். சோழநாட்டின் விருந்தாளியாக, பாதுகாப்புக் கைதியாகவே அவரும், அவரது குடும்பமும் நடத்தப்படுவார்கள். சிறையில் யாரேனும் அவரை முறைதவறி நடத்தினால் எமது சீற்றத்திற்கு ஆளாக நேரிடும். ஆயினும், அவருக்கோ, அவரது குடும்பத்திற்கோ வெளியுலகத் தொடர்பு ஏதும் இருக்கமுடியாதபடி பாதுகாப்புச் சிறையில் அடைக்கப்படுவாராக! இது சோழநாட்டின் எதிரிகளுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்."
இராஜேந்திரன் எழுகிறான். அரசவை எழுந்து நிற்கிறது. உடனே சிவாச்சாரி தனது பக்கத்தில் இருந்த ஒரு அதிகாரியை அழைத்து காதில் ஏதோ சொல்கிறான். உடனே அவன் இலங்கை மன்னனின் அருகில் இருக்கும் காவலாளிகளிடம் ஏதோ தெரிவிக்கிறான்.
காவலாளிகள் இலங்கை மன்னன் மகிந்தனை மரியாதையாக அழைத்துச் செல்கிறார்கள்.
தான் வெளி உலகைப் பார்ப்பது இதுவே கடைசித் தடவை என்று உணர்ந்த மகிந்தன், சோழ அரசவையை நன்கு சுற்றிப் பார்த்துக் கொண்டு செல்கிறான். அங்கு நின்ற இராஜாதிராஜனைப் பார்த்து நன்றியுடன் கைகூப்புகிறான். "என் உயிரைக் காப்பாற்றியதற்கு நன்றி!"
"சக்ரவர்த்திகள் உம்மைக் கழுவில் ஏற்றும்படி தீர்ப்பளிக்க வேண்டும் என்றுதான் நான் முதலில் விரும்பினேன். இப்பொழுது சக்ரவர்த்திகள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன்!" என்று முரட்டுத்தொனியில் கூறிவிட்டு, அங்கிருந்து அகலுகிறான் இராஜாதிராஜன்.
இராஜேந்திரனிடம் ஒரு தூதுவன் ஏதோ சொல்வதையும், உடனே தன் தந்தையின் முகம் திடுமென்று இருளடைந்து கலங்குவதைக் கண்டவுடன், பரபரப்புடன் அவனருகில் சென்று, "என்ன தந்தையே, என்ன கலக்கம்?" என்று வினவுகிறான்.
"இராஜாதிராஜா! வேங்கை மன்னர் விமலாதித்தர் இறந்துவிட்டாராம்! உன் அத்தை குந்தவி உடன்கட்டை ஏறிவிட்டாளாம்! இப்பொழுதுதான் செய்தி வந்தது" என்று தழுதழுத்த குரலில் கூறுகிறான்.
திகைத்து நிற்கிறான் இராஜாதிராஜன்.
(தொடரும்)