பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-[நினைவூட்டல்]

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-[நினைவூட்டல்]

ஒரு அரிசோனன்

இதுவரை நடந்தது...

முதல் பாகம் - பொது ஆண்டு 2411

ருபத்தைந்தாம் நூற்றாண்டில் வல்லரசான பாரத ஒருங்கிணைப்பில், தமிழ்நாடு மாநிலம் ‘தக்கன்கண்ட்’ என்று அழைக்கப்பட்டது. ஆங்கிலமும், இந்தியும் கலந்த ஒரு மொழியே அங்கு பேசப்பட்டது. வாழ்க்கை வசதிக்காகத் தமிழ்மொழி கற்பதைத் தமிழர்கள் துறந்ததனால், தமிழ் ஒரு கூற்றுமொழியாகிப் போய், ஆயிரக்கணக்கான மக்களால் மட்டுமே பேசப்பட்டது. அவர்களும் உடலூழியம் செய்யும் ‘எடுபிடி’கள் ஆகிப்போகிறார்கள். மொழிமாற்றுக்கருவி மூலமே அவர்கள் மற்றவர்களுடன் பேசி வருகிறார்கள். தமிழை எழுதப் படிக்க அறிந்த ஒருசில குடும்பங்களில் வந்த ஈஸ்வரன், அழகேசன், காமாட்சி, அவள் தம்பி ஏகாம்பரம் ஆகியோர் பல்வேறு இடங்களில் வசித்தாலும், உரிமைக் குடிமகளான நிமிஷாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சந்திக்கிறார்கள். அச்சமயத்தில், கடும் சூரியக் கதிர்வீசல் மற்றும் மின் காந்தப் புயலினாலும், புவிதூண்டிய மின் அழுத்தத்தாலும், உலகமே தனது காந்தசக்தியின் ஒழுங்கமைப்பை இழந்து மின்சக்தி இல்லாமல் போகிறது. உலகமே கற்காலத்திற்குத் திரும்புகிறது.

காமாட்சி, ஏகாம்பரம், ஈஸ்வரன், அழகேசன் இவர்களுடன் நிமிஷா சேர்ந்துகொள்கிறாள். ஐவரும் ஈஸ்வரனின் பெற்றோருடன் ஒரு கிராமத்தில் வசிக்கிறார்கள். இந்நிலையில் ஒரு நிலநடுக்கத்தால், கங்கைகொண்ட சோழபுரத்துக் கோவிலின் சுவரிலுள்ள கல் பெயர்ந்து ஒரு ரகசிய அறை தென்படுகிறது. இராஜராஜ சோழனுக்கு அவரது அரச குரு கருவூர்த்தேவர் அளித்த தங்கச்சுருள் அடங்கிய குழல் அந்த அறையில் கிடைக்கிறது. ஈஸ்வரன் தங்கச் சுருளில் எழுதியிருப்பதை மற்றவர்களுக்குப் படித்துச் சொல்ல ஆரம்பிக்கிறான்.

இரண்டாம் பாகம் - திருப்பணித் துவக்கம்

ஞ்சைப் பெருவுடையார் கோவிலைக் கட்டி முடித்த ‘பொன்னியின் செல்வன்’ இராஜராஜ சோழர் தன் பேரரசில் தமிழைப் பரப்ப விரும்பியதால், அவரது ஆசான் கருவூர்த்தேவர் அதற்கான திட்டத்தைத் தங்கச்சுருள் அடங்கிய குழலைக் கொடுத்து விளக்கிவிட்டுத் திருக்கயிலைக்கு பயணிக்கிறார். கருவூராரின் சீடன் சிவாச்சாரியை நண்பனாக ஏற்றுக் கொண்ட இராஜேந்திரன், அவனை அத்திருப்பணிக்கு ஆலோசகனாகப் பரிந்துரைக்கிறான். இராஜராஜரின் புதல்வியும், வேங்கைநாட்டு ராணியுமான குந்தவியின் மகன் இராஜராஜ நரேந்திரன், தமிழைப் பரப்ப அங்கு வந்த நிலவுமொழியிடம் மையல் கொள்கிறான். அவள் அவனை ஏற்காததால், அவனுக்குத் தமிழ் மீதும், தமிழ்த்திருப்பணி ஆலோசகனுமான சிவாச்சாரியின் மீதும் வெறுப்பேற்படுகிறது. இராஜராஜரைச் சிறைப்பிடிக்கச் சிங்களவருடனும், சேரனுடனுடம் பாண்டியன் அமரபுஜங்கன் திட்டம் தீட்டித் தோல்வியுற்றுச் சிறைப்பட்டு மரிக்கிறான். இராஜேந்திரனின் மகள் அருள்மொழிநங்கை சிவாச்சாரியைக் காதலித்து மணக்கிறாள். பாண்டியருடன் சமாதானமாகப் போகாததுதான் கருவூரார் திடுமெனத் திருக்கயிலைக்குச் சென்ற காரணம் என்றறிந்து இராஜராஜர் மனம் வெதும்பிப் படுத்தபடுக்கையாகிறார். உதகைக்குத் திறை வசூலிக்கச் சென்ற சிவாச்சாரி இளஞ்சேரனிடம் சிறைப்படுகிறான். இராஜேந்திரனின் மகன் இராஜாதிராஜன் போரிட்டு அவனை விடுவிக்கிறான். திரும்பி வந்த சிவாச்சாரியைத் தன் ஆசானென்று எண்ணி மயக்க நிலையிலிருந்த பொன்னியின் செல்வன் இராஜராஜர் இறைவனடி சேர்கிறார்.

மூன்றாம் பாகம் – திருப்பணியா? மரபுப் பெருமையா?

ராஜராஜருக்குப் பிறகு சோழப்பேரரசனான இராஜேந்திரன் புதிதாகத் தலைநகரைத் எழுப்பி, அதில் பெருவுடையாருக்குக் கற்றளி கட்டி, அதற்குக் குடமுழுக்குச் செய்ய கங்கை நீரைக் கொணர சிவாச்சாரியையும், இராஜராஜ நரேந்திரனையும் அனுப்புகிறான். இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால், நரேந்திரன் தமிழ்த்திருப்பணித் திட்டத்தை தகர்க்க முடிவெடித்து, தான் வேங்கியநாட்டுக்கு அரசனானதும் தன் தெலுங்கு ஆசான் நன்னைய பட்டாரகரைத் தெலுங்கு மொழியில் மகாபாரதத்தை எழுதப் பணிக்கிறான். இராஜேந்திரன் தன் மகள் அம்மங்கையை நரேந்திரனுக்கு மணமுடித்ததால் - சிவாச்சாரி, இராஜாதிராஜனின் பரிந்துரையை ஏற்காது - திறமையற்ற அவனைத் தூக்கிநிறுத்தப் பலமுறை படையை அனுப்பவேண்டி நேரிடுகிறது. பிரம்மராயர் பதவிக்குச் சிவாச்சாரி உயர்த்தப்படுகிறான். இராஜேந்திரன் இறந்ததும், பிரம்மராயர் தமிழ்த்திருப்பணி ஆலோசகர், படைத்தலைவர் ஆகிய பணிகளிலிருந்து விலகுகிறார். மேலைச்சளுக்கியருடன் நடந்த கொப்பம் போரில் இராஜாதிராஜன் வீர மரணம் எய்தவே, அவனது தம்பி இராஜேந்திரதேவன் போர்க்களத்திலேயே முடிசூடி வெல்கிறான். அவனது காலத்திற்குப் பிறகு, அரியணை ஏறிய கடைசித் தம்பி வீரராஜேந்திரன், இராஜாதிராஜனை வஞ்சகமாகக் கொன்ற மேலைச்சாளுக்கிய மன்னனின் மகன் விக்ரமாதித்தனுக்குத் தன் மகளை மணமுடித்து வைக்கிறான். அவனது திறமையற்ற மகன் அதிராஜேந்திரன் வீரராஜேந்திரனுக்குப் பின்னர் அரியணை ஏறுவதை விரும்பாத படைத்தலைவர்கள் பிரம்மராயரைச் சந்தித்து அறிவுரை கேட்கிறார்கள். உள்நாட்டுக் குழப்பம் வரக்கூடாது, சோழப்பேரரசு நிலைக்க வேண்டும் என்பதால், தமிழர் வழிவந்த இராஜேந்திரனின் பெண் வயிற்றுப் பெயரனான இராஜேந்திர நரேந்திரன் பதவிக்கு வரத் திட்டம் தீட்டிக்கொடுக்கிறார் பிரம்மராயர். அதன்படி சோழ அரியாசனத்தைக் கைப்பற்றிய இராஜேந்திர நரேந்திரனுக்குச் சோழர் குலத்தை உய்விக்க வந்தவன் என்ற பொருளுடைய ‘குலோத்துங்கன்’ என்ற பட்டத்தைச் சூட்டி அறிவுரை நல்கிய பிரம்மராயர் மீளாப் பெருந்துயிலில் ஆழ்கிறார்.

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு - நான்காம் பாகம்

பாண்டியர் எழுச்சி - தமிழர் வீழ்ச்சி?!

நான்காம் பகுதியின் முக்கிய இடங்களும், கதாபாத்திரங்களும்

இடங்கள்:

சோழப்பேரரசு: தென்னிந்தியாவில் துங்கபத்திரை நதியிலிருந்து கலிங்கம் (ஒரிசா) வரை வடக்கிலும், குமரி வரை தெற்கிலும், கர்நாடக மாநிலம் நீங்கலாக உள்ள நிலப்பரப்பு தலைநகர்: கங்கைகொண்ட சோழபுரம்.

பாண்டிநாடு / பேரரசு: வெள்ளாற்றுக்குத் தெற்கிலிருந்து குமரி வரையும், வங்கக்கடலிலிருந்து மேற்குத் தொடர்ச்சிமலை வரையிலான அரசு; பின்னர் தமிழ்நாடு முழுவதும் ஆந்திராவின் சில பகுதிகளும் உள்ளடங்கிய பேரரசாக விரிந்தது. தலைநகர் மதுரை.

சேர நாடு: தற்பொழுதைய கேரளா.

வேங்கை நாடு: வெங்கியையும், பின்னர் இராஜமகேந்திரபுரத்தையும் தலைநகராகக் கொண்ட கீழைச்சாளுக்கியநாடு; சோழப்பேரரசுக்குக் கட்டுப்பட்டது.

போசள நாடு: இருபத்தொன்றாம் நூற்றாண்டைய கர்நாடக மாநிலம்; முதலாம் குலோத்துங்கனின் இறுதிக்காலத்தில் சோழப் பேரரசிலிருந்து தன்னாட்சியைப் பெற்றது.

காடவ அரசு: சிற்றரசு முதலில் சோழர்களுக்குக் கீழும், பின்னர் பாண்டியர்களுக்கு அடங்கியும் இருந்தது. சில காலம் தன்னாட்சி பெற்று இயங்கியது; தலைநகர் சேந்தமங்கலம்.

அரச பரம்பரைகளும், குலங்களும்!

சாளுக்கிய சோழ அரச பரம்பரை

இரண்டாம் குலோத்துங்கன்: சோழப் பேரரசன்; பட்டப்பெயர் அநபாயன்.

மூன்றாம் குலோத்துங்கன்: சோழப் பேரரசன்.

பாண்டிய அரச பரம்பரை

குலசேகர பாண்டின்: பாண்டிய மன்னன்.

மாறவர்மன் சுந்தர பாண்டியன்: குலசேகர பாண்டினின் தம்பி.

சடையவர்மன் சுந்தர பாண்டியன்: மாறவர்மனின் மகன். பாண்டியப் பேரரசன்.

மாறவர்மன் குலசேகர பாண்டியன்: சடையவர்மன் சுந்தர பாண்டியனின் மகன். பாண்டியப் பேரரசன்.

வீரபாண்டியன்: குலசேகர பாண்டியனின் முதல் மகன்; அரச பரம்பரையில் பிறக்காத மனைவிக்குப் பிறந்தவன்.

சுந்தர பாண்டியன்: குலசேகர பாண்டியனின் இரண்டாம் மகன்; பட்டத்து அரசிக்குப் பிறந்தவன்.

பிரம்மராயர் சிவாச்சாரி குலம்:

பாலசுப்பிரமணிய சிவாச்சாரி: பிரம்மராயர் சிவசங்கர சிவாச்சாரியின் வழித்தோன்றல்; சோழப்பேரரசின் தமிழ்த்திருப்பணி ஆலோசகர்.

அம்பிகா: பாலசுப்பிரமணிய சிவாச்சாரியின் மகள்.

நீலகண்ட தீட்சிதர்: மூன்றாம் குலோத்துங்கனின் அரசவையில் பணி செய்தவர்; கவிப்பேரரசர் நண்பர் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் நட்பையும் பெற்றவர்.

சதாசிவ சாஸ்திரி: மாறவர்மன் குலசேகர பாண்டியனின் அரசவையில் தமிழ் வளர்க்கும் பணியில் ஈடுபட்டவர். வீரபாண்டியன், சுந்தர பாண்டியன் இவர்களின் தமிழ் ஆசான்.

ஈஸ்வரன்: இருபத்தைந்தாம் நூற்றாண்டில் எடுபிடியாக இருந்தவன் (முதல் பாகம்)

நிமிஷா: ஈஸ்வரனின் மனைவி; உரிமைக் குடிமகளாக இருந்தவள். (முதல் பாகம்)

சங்கரன்: ஈஸ்வரனின் தந்தை.

சிவசங்கரன்: ஈஸ்வரன் - நிமிஷாவின் வழித்தோன்றல் (26ம் நூற்றாண்டு)

வெற்றிமாறன் குலம்:

சரவணன்: பாண்டிய மன்னனின் மெய்காப்பாளன்.

முத்துக்கருப்பன்: சரவணின் தம்பி.

செந்தில்நாதன்: மாறவர்மன் சுந்தர பாண்டியனின் மெய்காப்பாளன்; படைத்தலைவன்.

சின்ன வீரப்பன்: சடையவர்மன் சுந்தர பாண்டியனின் மெய்காப்பாளன்; படைத்தலைவன்.

முருகையன்: குலசேகர பாண்டியனின் மெய்காப்பாளன்.

முத்தையன்: முருகையனின் மூத்த மகன்; வீரபாண்டியனின் மெய்காப்பாளன்.

நெல்லையப்பன்: முருகையனின் இரண்டாம் மகன்; சுந்தர பாண்டியனின் மெய்காப்பாளன்.

அழகேசன்: எடுபிடியாக இருந்த மல்லன்; காமாட்சியின் கணவன் (முதல் பாகம்)

வெற்றி மாறன்: அழகேசன் - காமாட்சியின் வழித்தோன்றல். (26ம் நூற்றாண்டு)

நிலவுமொழி / சேதுராயர் / தொண்டைமான் குலம்.

சேதிராயர்: காடவ அரசர்; மணவாள நம்பியின் வழித்தோன்றல். வைணவர்.

காடவராயர்: சேதிராயரின் தம்பி; மணவாள நம்பியின் வழித்தோன்றல்; வைணவர்.

திருப்பாவை: சேதிராயர் / காடவராயர் இவர்களின் தங்கை; சைவத்தைத் தழுவியவள்.

ஏகாம்பர பல்லவராயன்: கருணாகரத் தொண்டைமானின் வழித்தோன்றல்; திருப்பாவையின் கணவன்.

நிலமங்கை: ஏகாம்பர பல்லவராயன் / திருப்பாவையின் வழித்தோன்றல்.

கோப்பெருஞ்சிங்கன்: காடவராயரின் வழித்தோன்றல்; இயற்பெயர், அழகியசீயன்; நிலமங்கையின் கணவன்; காடவ மன்னன்.

இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன்: கோப்பெருஞ்சிங்கனின் மகன்; காடவ மன்னன்; இயற்பெயர் ஆளப்பிறந்தான்.

வெண்ணிலா: இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனின் பேத்தி.

காமாட்சி: நிமிஷா வீட்டில் எடுபிடியாகப் பணி ஆற்றியவள் (25ம் நூற்றாண்டு - முதல் பாகம்)

ஏகாம்பரநாதன்: காமாட்சியின் தம்பி (முதல் பாகம்)

நிலவுமொழி: ஏகாம்பரநாதனின் வழித்தோன்றல் (26ம் நூற்றாண்டு)

வரலாற்று நாயகர்கள்:

சேக்கிழார்: அநபாயச் சோழனின் முதலமைச்சர். பன்னிரண்டாம் திருமுறையான திருத்தொண்டர் புராணத்தை எழுதியவர்.

இராமானுஜாச்சாரியார்: விசிஷ்டாத்வைத கொள்கையையும், ஸ்ரீவைஷ்ணவத்தையும் நிறுவிய வைணவ ஆச்சாரியார்.

கூரத்தாழ்வான்: இராமானுஜாச்சாரியாரின் சீடன்.

கம்பர்: இராமாயணத்தைத் தமிழில் படைத்த மகாகவி. கவிச்சக்ரவர்த்தி என்று போற்றப்படுபவர்.

மார்க்கோபோலோ: இத்தாலியப் பயணி. குலசேகர பாண்டிய பேரரசர் காலத்தில் தமிழ்நாட்டிற்கு விஜயம் செய்து, புகழ்ந்து எழுதியவர்.

தக்கியுத்தீன் அப்துல் ரகுமான்: குலசேகர பாண்டினின் அவையில் அமைச்சர் பொறுப்பு ஏற்றவர். அரபு வணிகர் பரம்பரை; மரியாதையாக ‘பெரிய ராவுத்தர்’ என்று அழைக்கப்பட்டவர்.

ஹக்கன்: போசள மன்னன் இரண்டாம் வீரவல்லாளனின் படைத் தலைவன்.  விஜயநகரப் பேரரசை நிறுவிய ஹரிஹர - புக்க சகோதரர்களில் மூத்தவன்.

மாலிக்காஃபூர்: தமிழ்நாட்டிற்குப் படையெடுத்து வந்த தில்லி சுல்தானின் படைத்தலைவன்.

போசள [ஹொய்சள] மன்னர்கள்:

இரண்டாம் வீரவல்லாளன் (பல்லாளா): போசள அரசன்; மூன்றாம் குலோத்துங்கனின் குடும்பத்துடன் மண உறவுகொண்டவன்.

நரசிம்மன்: வீரவல்லாளனின் மகன்.

மூன்றாம் வீரவல்லாளன்: போசள மன்னன்.

இதர பாத்திரங்கள்:

அப்துல்லா:  தமிழ்நாட்டில் குடியேறிய அராபிய முஸ்லிம்களின் வழித்தோன்றல்.

பண்டைய நகர்களின் பெயர்கள்:

திருமயிலை: மயிலாப்பூர், சென்னையின் ஒரு பகுதி.

தில்லை: சிதம்பரம்.

நெல்லை: திருநெல்வேலி.

பொன்னமராவதி: வட பாண்டிநாட்டின் தலைநகர். தற்பொழுது ஒரு சிற்றூராக உள்ளது.

கங்கைகொண்ட சோழபுரம்: சோழப் பேரரசின் தலைநகர். தற்பொழுது ஒரு சிற்றூராக இருக்கிறது.

துவாரசமுத்திரம்: போசள நாட்டின் தலைநகர். இப்பொழுது ஹளபேடு என்னும் இடிபாடுள்ள சிற்றூராகக் கிடக்கிறது. மாலிக்காபூராலும், பின்னர் பாமினி சுல்தான்களாலும் அழிக்கப்பட்டது. போசளக் கட்டடக் கலையைச் சிறப்பித்துக் காட்டும் கோவில்கள் அங்கு உள்ளன.

இடைச்செருகல் 3

ஈஸ்வரனின் வீடு

ஈஸ்வர, ஆடி 16 - ஜூலை 31, 2417

தென்றல் காற்று வீசுகிறது. வீட்டுத் திண்ணையில் சுவரில் சாய்ந்தவாறு ஈஸ்வரன் அமர்ந்திருக்கிறான். அவனுக்குச் சற்றுத் தள்ளி ஏகாம்பரநாதனும், அழகேசனும் படுத்திருக்கிறார்கள். அழகேசனின் வாய் ஏதோ ஒரு தெம்மாங்குப் பாட்டை முணுமுணுத்துக்கொண்டிருக்கிறது. காமாட்சி ஒரு சொம்புடன் அங்கு வருகிறாள்.

(தொடரும்…)

Other Articles

No stories found.