Sekkizhar
Sekkizhar

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -நான்காம் பாகம்-அத்தியாயம் 1

ஒரு அரிசோனன்

கூத்தபிரான் நடராஜர் கோவில், தில்லை (சிதம்பரம்)1

நள, மாசி 1 - ஜனவரி 302, 1137

தேவாரத்தைப் பாணர்களும் ஓதுவார்களும் இனிமையாக ஓதுவதைக் கண்களை மூடியவாறு ரசித்துக்கொண்டிருக்கிறார் சேக்கிழார்.3 எவ்வளவு தடவைகள் கேட்டாலும் தெவிட்டாத இசைத்தேன் ஊற்று அல்லவா தேவாரம் என்பதை மனதில் நிறுத்தி பக்தி வெள்ளத்தில் மூழ்கித் திளைக்கிறார் அவர்.

தொண்டை நாட்டில் பிறந்திருந்தாலும், இரண்டாம் குலோத்துங்கனின் அமைச்சர் ஆனவுடன் சோழநாட்டிற்கு வந்து விட்டார் அவர். இடது பாதத்தைத் தூக்கிப் பொன்னம்பலத்தில் ஆடும் கூத்தபிரானான நடராஜரை என்று முதன் முதலாகத் தில்லையில் தரிசனம் செய்தாரோ, அன்றிலிருந்தே தில்லை அம்பலவாணனின் அடிமையாகி இருக்கிறார் அவர். நடராஜரைப் பார்க்கப் பார்க்க மீண்டும் மீண்டும் கண்ணை எடுக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்றுதான் அவருக்குத் தோன்றுகிறது. கண்ணைத் திறந்தாலும், மூடினாலும் அவனது கருணை பொழியும் புன்னகை தவழும் முகம்தான் கருத்தில் வந்து நிற்கிறது. அதற்குப் பொருத்தமாக திருநாவுக்கரசர் பாடிச் சென்ற தேவாரம் அவர் காதில் ஒலிக்கிறது.

‘குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்

பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்

இனித்தமுடன் எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்

மனித்தப் பிறவியும் வேண்டுவதே, இம் மாநிலத்தே!’

“ஆமாம். வில்லாய் வளைந்த அவனுடைய புருவங்களையும், கோவைப்பழ உதடுகளுக்கு இடையில் மலருகின்ற புன்சிரிப்பையும், விரிந்து பரந்த சடைகளையும், பவழமாகச் சிவந்திருக்கும் மேனியில் பாலைப் போன்று திகழுகின்ற வெண்மையான திருநீறு திகழும் பாங்கையும், ஆட்டக்கலையில் வல்ல, உலக அம்மையையே தோற்கடிக்க உயர்த்திய, தங்கத்திற்கு நிகரான திருவடிகளையும் காணக்கூடிய பேறு பெற்றால் - அதுவும் இத்தில்லை அம்பலத்தில் அவன் ஆடும் ஆனந்த தாண்டவத்தைக் காணும் பேறு கிடைத்தால் - விரிந்து படர்ந்து எழுகடல்கள் சூழ்ந்த இந்த மாபெரும் பூமியில் மனிதப் பிறவி கிடைப்பதற்கு அரிய தவம் செய்ய வேண்டுமல்லவா! எப்படி அருமையாகப் பாடியிருக்கிறார், நாவிற்கே அரசரான அப்பர் பெருமான்! அரிது, அரிது, மானிடராய் பிறத்தல் அரிது என்று ஔவைப் பாட்டி சொல்லிச் சென்றபடி கிடைத்தற்கரிய மனிதப் பிறவியையும் எனக்குக் கொடுத்து, உன் காலடியில் காலம் கழிக்கும்படி செய்த உனது அருளே அருள்! பிறவிப் பெரும்பயனை எய்தி விட்டேன்!” என்று மனம் கசிந்து தில்லை அம்பலவாணனை வேண்டுகிறார்.

---------------------------------

[1. தமிழ்நாட்டிலிருக்கும் சிதம்பரத்தின் பண்டைய காலத்துப் பெயர் தில்லை. தில்லை மரங்கள் நிறைந்திருந்ததால் அதற்கு அப்பெயர் வழங்கப்பட்டது. இன்றும் இலக்கியங்களில் தில்லை என்ற பெயரே நிலைத்து நிற்கிறது.

2. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், உலகின் சுழற்சியாலும், அதன் அச்சின் சாய்வினாலும், இப்போது பொது ஆண்டு மாதங்களில் வரும் தேதிகளில் தமிழ் மாதத் தேதிகள் வரவில்லை. எனவே, அப்பொழுதிருந்திருக்கும் பொருத்தமான வாக்கியப் பஞ்சாங்கப்படி, கணினி மூலம் கணிக்கப்பட்ட தமிழ் ஆண்டுகள், மாதங்கள், தேதிகளுக்குத் தகுந்த பொது ஆண்டு மாதங்களும், தேதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன - நன்றி: www.drikpanchang.com <http://www.drikpanchang.com>

3. ‘அநபாயச் சோழன்’இரண்டாம் குலோத்துங்கனுக்கு அமைச்சராகப் பணியாற்றிப் பன்னிரண்டாம் திருமுறையான, ‘திருத்தொண்டர் புராண’த்தையும் எழுதியவர் சேக்கிழார்.  அவரது இயற்பெயர் அருள்மொழி.]

பூசைகள் நடந்து முடிகின்றன. தில்லை வாழ் அந்தணர்களில் தலையாய அந்தணர் ஒருவர் அவரிடம் தீபத்தட்டை நீட்டுகிறார். தீபத்தைக் கண்களில் பயபக்தியுடன் ஒற்றிக் கொள்கிறார். தாயைப் பிரிய மறுக்கும் கன்றைப்போல - காலைத் தூக்கி ஆடும் அவனது உருவத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டே - பொன்னம்பலத்தை விட்டுக் கீழிறங்குகிறார் சேக்கிழார். அவரைப் பின் தொடர்கிறார்கள் மற்ற சோழப் பிரதானிகள்.

ஒருவர்பின் ஒருவராக அனைவரும் அவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு செல்கிறார்கள். இருப்பினும் தன்னை இன்னும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் நாற்பது வயதுள்ள அந்த அந்தணரைத் திரும்பிப் பார்க்கிறார் சேக்கிழார்.

Sekkizhar
Sekkizhar

“என்ன ஓய், பாலசுப்பிரமணிய சிவாச்சாரியாரே! என்ன வேண்டும் உமக்கு? நான் தில்லைக்கு வந்ததிலிருந்து என் மீது அட்டையைப் போல ஒட்டிக்கொண்டு வருகிறீரே!” என்று அவரிடம் கேட்கிறார்.

“எனக்கு என்ன வேண்டும், சேக்கிழார் பெருமானே? அம்பலவாணன் அருளால் எந்தவிதக் குறையும் எனக்கு இல்லை. இது நான் முன்பே தங்களிடம் பேசிய விஷயம்தான்!” என்று குழைகிறார் பாலசுப்பிரமணியர்.

“நீர் நிறைய விஷயங்களை என்னிடம் பேசியிருக்கிறீர். அதில் இது என்ன விஷயம்?”

“திரிபுவனச் சக்ரவர்த்தியாரிடம் தமிழ்த் திருப்பணி ஆலோசகராகவும், திருமந்திர ஓலைநாயகமாகவும், பின்னர் கோப்பரகேசரியாரின் தலைமைத் தளபதியாகவும் எனது முப்பாட்டனார் பணியாற்றியது தங்களுக்கு தெரியாத விஷயமில்லை. எனது பாட்டனார் சிவசுப்பிரமணிய சிவாச்சாரியார் குலோத்துங்க சோழர் காலத்தில் தமிழ்த் திருப்பணி ஆலோசகராகப் பணியாற்றினாலும், திருப்பணி நடக்கவே இல்லை...”

“ஆமாம். மற்றவர்கள் மாதிரி குலோத்துங்கருக்கு சோழ இளவரசுப்பட்டம் யாரும் கட்டவில்லை.  உள்நாட்டுக் குழப்பம் விளைந்த காலத்தில் சோழ அரியணை ஏறிய அவர், தனது ஆட்சியை நிலைப்படுத்திக் கொள்ளவே நிறைய ஆண்டுகள் போரிட்டு உரிமையை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டிய சூழ்நிலை. அதற்கென்ன இப்பொழுது?”

“கேரளத்தில் இப்பொழுது மொழி வேறாக ஆகிவிட்டது. இங்கிருந்து சென்றால் அவர்கள் பேசுவது நமக்குப் புரியவில்லை. நாம் பேசுவது அவர்களுக்குப் புரிவதில்லை. அங்காவது தமிழை நிலைநாட்டி இருக்கலாமே!” பாலசுப்பிரமணியரின் குரலில் ஆதங்கம் தொனிக்கிறது.

“சேரர்களோடும், பாண்டியர்களோடும் போர் நடத்துவதே ஒரு தொழிலாகப் போய்விட்டது, அந்நாளில். கடைசியில் அவர்களைக் கப்பம் கட்டிவர ஒப்புக்கொள்ள வைத்ததே பெரும் பாடாகிப் போய்விட்டது. இந்நிலையில் சேரர்களிடம் நல்ல தமிழில் மக்களைப் பேச வைப்பதுதான் நீங்கள் எங்களுக்குச் செலுத்தும் கப்பம் என்று சொல்லும் நிலையிலா குலோத்துங்கர் இருந்தார்?” பதிலாகக் கேள்வி தொடுக்கிறார் சேக்கிழார்.

“கலிங்கத்தின் மீது படையெடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் நமக்கு இருந்ததா?”   கேள்விக்கு எதிர்க் கேள்வியை வீசுகிறார் பாலசுப்பிரமணியர்.

“வேங்கைநாட்டைக் காப்பாற்றக் கலிங்கர்களைக் கதிகலங்க அடிக்க வேண்டியிருந்ததே!  எனது தொண்டைமண்டலப் பூபதியான கருணாகரத் தொண்டைமான் தனது வீரத்தை வெளிப்படுத்தி குலோத்துங்க சோழருக்குப் பேரையும் புகழையும் தேடிக் கொடுத்தாரே!  அதனால்தானே கலிங்கத்துப் பரணியும் பாடப்பட்டது!4 சோழர்களின் புகழ் இப்பூவுலகெங்கும் பாடப்படப் போகிறது!” சேக்கிழாரின் குரலில் பெருமிதம் பெருகுகிறது.

--------------------------------

[4. முதலாம் குலோத்துங்க சோழன் கலிங்கத்தின் மீது போர் தொடுத்து வென்றதை கலிங்கத்துப் பரணி விவரிக்கிறது.]

“சேக்கிழார் பெருமானே!  தாங்கள் திரிபுவனச் சக்ரவர்த்தியாரின் இயற்பெயரான அருண்மொழி என்ற பெயரைக் கொண்டிருக்கிறீர்கள்! அவர் விரும்பியபடி, அந்தப் பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவுப்படி தமிழுக்காக ஏதாவது செய்யக் கூடாதா? நமது அரசருக்குத் தமிழ் ஆர்வத்தை ஊட்டக் கூடாதா?  நின்று போன தமிழ்ப் பணியைத் தொடரக்கூடாதா? இப்பொழுதுதான் நாட்டில் எந்தவிதமான போரும் நடக்கவில்லையே!  கடைசிக் காலத்தில், கருநாட்டைப் போசளர்கள் கைவசப்படுத்தியும் போனால் போகட்டும் என்று அபயச் சோழரான முதலாம் குலோத்துங்கரே விட்டுவிட்டாரே! அவரது பெயரரான அநபாயச் சோழரும், குலோத்துங்கரின் பெயரைத் தாங்குபவருமான சோழ அரசரிடம் தாங்கள் எடுத்துச் சொல்லக்கூடாதா? தங்களது அறிவுத் திறனால் அவரைக் கவர்ந்திருக்கிறீர்கள். தங்கள்பால் அளவு கடந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறார் அநபாயச் சோழர். தாங்கள் என்னை அவரிடம் கூட்டிச் சென்றால் நானும் அவரது முப்பாட்டனாருக்கும் முப்பாட்டனாரான திரிபுவனச் சக்ரவர்த்தியாரின் திருப்பணியை மீண்டும் உயிர்ப்பிக்குமாறு வேண்டிக்கொள்ளலாம் அல்லவா! இதைப் பற்றித்தானே நான் முன்பே தங்களிடம் பல தடவை பேசியிருக்கிறேன், விண்ணப்பித்திருக்கிறேன்!”  பாலசுப்பிரமணியரின் குரல் தழைந்து இறைஞ்சுகிறது.

அவர் தோளை அன்புடன் தடவிக் கொடுக்கிறார் சேக்கிழார்.

“பாலசுப்பிரமணிய சிவாச்சாரியாரே!  நீர் பேசுவதைப் பார்த்தால் உமக்கு மட்டும்தான் தமிழ் மீது பற்று இருப்பதைப் போலவும், மற்ற யாருக்குமே இல்லை என்பது போலவும்தான் எனக்குப் படுகிறது. அம்மாதிரி நினைப்பு இருந்தால் அதை மாற்றிக்கொள்ளும்.

“அநபாயரால் தமிழ் வளரத்தான் போகிறது. அவர் காலத்தில் சைவம் சிறக்கத்தான் போகிறது.  அதற்கு வேண்டிய முயற்சியை நானும் எடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன். நீர் கேட்காமல் இருந்தாலும் நாளை இங்கு வரப்போகும் அநபாயருக்கு உம்மை அறிமுகம் செய்து வைத்து, உம்மிடம் அவரது தமிழ் ஆர்வத்தை வளர்க்குமாறு சொல்லலாம் என்றுதான் இருக்கிறேன்!”

Sivacharyar
Sivacharyar

அவரைப் பார்த்துக் குறும்பாகப் புன்னகைத்த சேக்கிழார், “நான் ஆறு மாதங்கள் புண்ணியத் தலங்களைத் தரிசித்துவிட்டு வரலாம் என்று இருக்கிறேன். அச்சமயத்தில் அவருக்கு தமிழில் ஆர்வம் வருமாறு தமிழ் நூல்களைப்பற்றி எடுத்துச் சொல்லும். உமக்குத் தெரிந்த தமிழ்க் கவிகளை அவரிடம் அழைத்துச்சென்று அவர்கள் தமிழின் இனிமையை அவருக்குப் புகட்டட்டும். நானும் மெல்ல மெல்ல அவருக்குத் திருப்பணியைப் பற்றி நினைவு படுத்துகிறேன். கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பணி தொடரும் என்று எதிர்பார்ப்போம்!”

கனிந்த குரலில் அவர் சொன்னது பாலசுப்பிரமணியரின் மனதில் நிறைவை ஏற்படுத்துகிறது.  சேக்கிழாரை நோக்கிக் கைகூப்புகிறார் அவர்.

“கோவிலில் இறைவனைத் தவிர வேறு எவருக்கும் கைகூப்பக் கூடாது! அது போகட்டும், வீட்டில் அனைவரும் நலமாக இருக்கிறார்களா?” என்று நலம் விசாரிக்கிறார் சேக்கிழார்.

“அம்பலவாணன் அருளால் அனைவரும் நலம்தான். இன்று இரவுப் பொழுது தாங்கள் எங்கள் வீட்டில் பசியாற வேண்டும். விடுதிச் சாப்பாட்டை விட, எனது மனைவியின் கைப்பாகம் நன்றாகவே இருக்கும்” என்று அழைக்கிறார் பாலசுப்பிரமணியர்.

“அப்படியே ஆகட்டும். எனக்கும் வீட்டுச் சாப்பாட்டை உண்டு பல நாட்கள் ஆகிவிட்டன.  என்னுடைய உதவியாளர்கள் நால்வர் வருவார்கள். அவர்களுக்கும் சேர்த்து அமுது படைத்துவிடச் சொல்லுங்கள்” என்று புன்னகைக்கிறார் சேக்கிழார்.

“தங்களைச் சேர்ந்தவர்களுக்கு எப்போதும் என் இல்லத்தில் உணவு இருக்கும். பொழுது சாய்ந்ததும், நான் விடுதிக்கு வந்து தங்களையும், தங்கள் உதவியாளர்களையும் அழைத்துச் செல்கிறேன்” என்று மகிழ்வுடன் சொன்ன பாலசுப்பிரமணிய சிவாச்சாரியாரிடம் விடைபெற்றுக்கொண்டு, கிழக்கு ரத வீதியில் இருக்கும் விடுதிக்குத் தனது உதவியாளர்களுடன் செல்கிறார் சேக்கிழார்.

தனது வீட்டை நோக்கி நடக்க ஆரம்பிக்கும் பாலசுப்பிரமணியர் மனதில் பிரம்மராயரின் பெயரர் சிவசுப்பிரமணியனின் மகனும் தனது தந்தையுமான சங்கரசுப்பிரமணிய சிவாச்சாரியார் சொன்ன விஷயங்கள் சிந்தனை அலைகளாய் எழுகின்றன.

குலோத்துங்கன் என்று பட்டப் பெயரைச் சூட்டிவிட்டு இராஜேந்திர நரேந்திரனையும், மற்றவர்களையும் தன் பெயரன் சிவசுப்பிரமணியனுடன் அனுப்பி விட்டுப் படுத்த பிரம்மராயர் மீளா உறக்கத்தில் ஆழ்ந்ததுகூட எவருக்கும் தெரியவில்லை. உணவு உண்டு விட்டு விடைபெற்றுக்கொண்டு சென்று விட்டார்கள். திரும்பி வந்து பார்த்த சிவசுப்பிரமணியனும் தனது பாட்டனார் உறங்குகிறார் என்று நினைத்து அவரைத் தொந்தரவு செய்ய மனமில்லாமல் குலோத்துங்கனுடனும், மற்றவர்களுடனும் கங்கைகொண்ட சோழபுரம் திரும்பி விட்டார். காலையில் அவரை எழுப்ப முயன்ற சுப்பனுக்குத்தான் பிரம்மராயர் இவ்வுலகை விட்டு நீங்கி இறைவனடி சேர்ந்துவிட்டார் என்று தெரிந்தது.

ஊர்க்கட்டுப்பாடு காரணமாக சுப்பன்தான் அன்றே அவரது பூத உடலை எரியிட்டு, ஈமச்சடங்குகளைச் செய்தான். கங்கைகொண்ட சோழபுரத்திற்கு ஆள் அனுப்பி சிவசுப்பிரமணியனை மற்ற சடங்குகளைச் செய்ய வரவழைப்பதற்குள் நான்கைந்து நாட்கள் கழிந்துவிட்டன. பிரம்மராயரின் ஒரே மகனான மறையன் அருள்மொழி கருநாட்டிலேயே ஒரு கன்னடம் பேசும் பெண்ணை மணந்துகொண்டு,5 அங்கே தங்கி பிரம்மராயரின் காலத்திற்கு முன்னரே இறைவனடி சேர்ந்துவிட்டதால் அவ்வழித் தொடர்பும் அற்றுப் போய்விட்டது.

குலோத்துங்கன் கிட்டத்தட்ட இருபத்தைந்திலிருந்து முப்பது ஆண்டுகளை தன்னுடைய ஆட்சியை நிலைநிறுத்துவதிலேதான் செலவழித்தார். தமிழைப் பரப்புவதைத் தவிர, மற்றபடி பிரம்மராயர் சொன்ன அறிவுரைகள் அனைத்தையும் நிறைவேற்றினார். ஒரு தமிழனாக வாழ்ந்தார். வணிகம் தழைக்கவேண்டி, சுங்க வரியை நீக்கி, சுங்கம் தவிர்த்த சோழன் என்ற பட்டப்பெயரையும் பெற்றார். பாண்டியர்களையே மதுரையிலிருந்து திறை செலுத்தி ஆட்சி செய்ய அனுமதித்தார்.

பிரம்மராயரின் திறமையில் பத்தில் ஒரு பங்குகூட இல்லாததால், அவரது பெயரரான சிவசுப்பிரமணியனுக்கு சோழ அரசில் இருந்துவந்த சிறிய செல்வாக்கு கூட அவரது மகனான சங்கரசுப்பிரமணியனுக்கு இல்லாது போய்விட்டது. ஆண்டுதோறும் நடப்பை மட்டும் திருப்பணிச் சுருளில் எழுதி வருவதைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலாது போய்விட்டது.  ஆனால், அவரது குடும்பத்திற்கு மட்டும் அர மானியம் கிடைத்து வந்தது. தனக்குப் பொறுப்பு வந்தவுடன்தான் எப்படிப்பட்ட சிறந்த திருப்பணி தடைபட்டுப் போயிருக்கிறது என்று பாலசுப்பிரமணிய சிவாச்சாரியாருக்குத் தெரிந்தது.

தமிழ்த்திருப்பணியைப் பற்றி எப்படியாவது சோழ அரசரிடம் பேசி, அதை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்ற அவா பாலசுப்பிரமணிய சிவாச்சாரியாரின் நெஞ்சில் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. ஆனால், கடந்த பத்தாண்டுகளாக அவருக்கு அந்த முயற்சி கைகூடி வரவே இல்லை. குலோத்துங்கசோழருக்குப் பின் அரியணை ஏறிய விக்கிரமசோழரைச் சந்திக்கப் பல தடவை முயற்சி செய்தார். ஒவ்வொரு தடவையும், விக்கிரமசோழருக்கு ஏதாவது ஒரு முக்கியமான வேலை வந்து அந்த சந்திப்பைத் தடுத்து வந்தது. தவிரவும், வேங்கைநாட்டிலேயே வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்த அவருக்கு, தமிழை வளர்ப்பதில் அவ்வளவு நாட்டம் இல்லாததும் அச்சந்திப்பு நிகழாததற்கு ஒரு முக்கியக் காரணம்.

அவருக்குப் பின் அரசுப் பொறுப்பேற்ற அநபாயச் சோழனான இரண்டாவது குலோத்துங்கனைச் சந்திக்கவும் சில ஆண்டுகளாக முயற்சி செய்து, அதிலும் வெற்றி பெறாமல்தான் இருந்து வந்தார் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார். ஒரு தடவை தில்லைக்கு வந்த சோழ அமைச்சர் சேக்கிழாரின் அறிமுகம் அவருக்குக் கிடைத்தது. அவரிடம் இராஜராஜரின் தமிழ்த் திருப்பணி பற்றியும் எடுத்துரைத்து, பிரம்மராயர் விட்டுச்சென்ற தங்கச் சுருளையும் காட்டினார். அதைப் பார்த்து வியப்பும், மகிழ்ச்சியும், மதிப்பும் அடைந்தார் சேக்கிழார். அதிலிருந்து இருவருக்குள்ளும் ஒரு நட்பு மலர்ந்தது.

--------------------------

[5. இது கற்பனையே.  இக்கூற்றுக்குச் சான்று எதுவுமில்லை.]

***

(தொடரும்)

Other Articles

No stories found.