மறையவர்  மன்னர்
மறையவர் மன்னர்

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -நான்காம் பாகம்-அத்தியாயம் 10

உறையூர்

தாது, ஆடி 20 - ஜூலை 23, 1216

பூச்சிகள் தீவட்டியைச் சுற்றிப் பறக்கின்றன. மாறவர்மனையும், நீலகண்ட தீட்சிதரையும் சுற்றி நிற்கும் பாண்டிய வீரர்களின் முகத்தில் ஈயாடவில்லை. மாறவர்மனைக் கண்டு சிறிதும் அஞ்சாமல் நிற்கும் அம்மறையவரின் துணிவு அவர்களுக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது. அதேசமயம், மாறவர்மனின் முகத்தில் தவழும் புன்சிரிப்பையும் அவர்களால் நம்ப முடியவில்லை. முதல் நாள் இரவு படையெடுப்பைத் தொடங்க ஆணை பிறப்பித்ததிலிருந்து அவன் முகத்தில் சினத்தையும், வெறியையும், ஆத்திரத்தையும் மட்டுமே கண்ட வீரர்கள், முதன்முறையாகப் புன்சிரிப்பை அவனிடம் காண்கின்றனர். ஒருவேளை, சிரித்துக்கொண்டே அம்மறையவர் தலையை…

அந்த நினைப்பே அவர்களை அச்சமுறச் செய்கின்றது. எனவே, மன்னனையும், மறையவரையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள்.

மறையவர்
மறையவர்

“சோழர்கள் தமிழை வளர்ப்பதில்கூட தற்பொழுது கவனம் செலுத்துகின்றனரா?” கடகடவென்று சிரிக்கிறான் மாறவர்மன். அவன் குரலில் எள்ளலும் இழையோடுகிறது.  “மறையவரே! உம்மைக் கண்டால் வடமொழியில் மறை கற்றவர் போலுள்ளது. நீர் தமிழ் வளர்ச்சிக்கு என்ன செய்திருக்கிறீர் இதுவரை?”

“பாண்டிய மன்னரே! முச்சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியர் வழிவந்தவரே! பாண்டியர் அளவுக்குத் தமிழை வளர்ப்பதில் சோழர் பெயரை ஈட்டாவிட்டாலும், அம்முயற்சியில் சற்றும் சளைத்தவரல்லர். திராவிட வேதம் எனப் புகழப்படும் சைவத் திருமுறைகளை தில்லை அந்தணர்களிடமிருந்து பெற்று, அவற்றை உயிர்ப்பித்தவர், எங்கள் திரிபுவனச் சக்கரவர்த்தியாரான இராஜராஜசோழர். பன்னிரண்டாம் திருமுறையாக ஏத்தப்படும் திருத்தொண்டர் புராணத்தை, இறைவனே அடியெடுத்துக் கொடுத்த அதிசயம் நிகழ்ந்ததும் இரண்டாம் குலோத்துங்க மாமன்னரான அநபாயச் சோழர் காலத்தில்தான்!” பெருமிதத்துடன் நீலகண்ட தீட்சிதரிடமிருந்து மறுமொழி வருகிறது.

“இராஜராஜச்சோழச் சக்கரவர்த்தியாரின் காலத்திலிருந்து தமிழ் வளர்க்கும் பணிக்காகப் பரம்பரை பரம்பரையாக நாங்கள் நியமிக்கப்பட்டு வந்திருக்கிறோம். அதுமட்டுமல்ல, பாண்டிய மன்னரே! இராம காதையைப் பன்னிரண்டாயிரம் செய்யுள்களில் திருவரங்கத்தில் அரங்கேற்றிய கம்பநாட்டாரை இத்தமிழ்கூறும் நல்லுலகுக்கு அறிமுகப்படுத்தியது மூன்றாம் குலோத்துங்கர்தாம். அவருக்கு உதவி செய்ததில் எனக்கும் பங்குள்ளது. இன்னும் பல தமிழ்க் கவிஞர்களைச் சோழர் அரசவையில் ஆதரித்து வருகிறோம். அப்படிப்பட்ட கவிஞர்களைத் தேடி அழைத்து வருவது எனது பணி!” என்று பணிவுடன் பதில் சொல்கிறார் நீலகண்ட தீட்சிதர்.

“நன்று, மிக்க நன்று! சோழர் நடுவில் தமிழ் வளர்க்கும் ஒருவரைச் சந்திப்பது எனக்கு மகிழ்வாக உள்ளது” என்று அவரைப் பாராட்டுகிறான் மாறவர்மன். “அது போகட்டும். சோழ வீரனாக இல்லாவிடினும், உயிருக்கும் அஞ்சாமல் அரசினர் மாளிகையைக் காக்கப் போராடினீர். அத்துணிவு பாராட்டத்தக்கது. சில நாள்களே தங்கப்போகும் ஒரு கட்டடத்திற்காக ஏன் இந்தப் போராட்டம்?”

“ராம காதையை எழுதிய கவி கம்பநாட்டார் அந்த மாளிகையில் உடல்நலம் குன்றிப் படுத்திருக்கிறார். மன்னர்தம் செல்வாக்கை இழந்த அவரை நான்தான் இங்கு அனுப்பிவைத்து அடைக்கலம் கொடுத்து வருகிறேன். அவரது உடல்நிலை தேறும்வரை உடன் இருக்கலாம் என்றுதான் சில நாள்கள் முன்பு இங்கு வந்தேன். தமிழுக்கு ஒரு சிறந்த காவியத்தைப் பரிசாகக் கொடுத்தவருக்காகத்தான் உங்கள் வீரர்களைத் தடுக்க நேர்ந்தது” என்று விடை வருகிறது.

“ம்ம்ம்” சில கணங்கள் யோசித்த மாறவர்மனின் முகம் மலர்கிறது. 

“நானும் கம்பரின் இராம காதையைப் பற்றி மட்டுமல்ல, கம்பன் வீட்டுத் தறியும் கவி பாடும் என்ற வழக்கையும் கேள்வியுற்றுள்ளேன். நல்லது. ஒரு சிறந்த தமிழ்க் கவியை நேரில் பார்த்து நலம் விசாரிக்கிறேன்.”

தன் மெய்க்காப்புப் படைத் தலைவன் பக்கம் திரும்பி, “செந்தில், இந்த அந்தணருடன் நாமும் கவி கம்பரைச் சந்திக்கச் செல்வோம். அவர் இருக்கும் மாளிகையை இடிக்காது விட்டுவிடச் சொல்லி உடனே தகவல் அனுப்பு” என்று ஆணை பிறப்பித்த பின், நீலகண்ட தீட்சிதரிடம், “மறையவரே! நீர் குலோத்துங்க சோழரின் தமிழ்க்காரியஸ்தர் எனச் செப்பினீர். உமது குடும்பம் எங்கு உளது?” என்று வினவுகிறான்.

“அரசே! கங்கைகொண்ட சோழபுரத்தில் என் தாயும், மனைவியும் என் மகனுடன் உள்ளனர். எனது இன்னொரு மகளைத் தில்லையில் வாழும் ஒரு அந்தணருக்கு மணம்செய்து கொடுத்திருக்கிறேன்.”

புன்முறுவலுடன், “உமக்கு இரண்டேயிரண்டு பிள்ளைச் செல்வங்கள்தானா?” என்று கேட்கிறான் மாறவர்மன். தன்னையுமறியாமல் அவ்வந்தணர்பால் ஓர் ஈர்ப்பு ஏற்படுவதும் ஏனோ எனத் தன்னைத் தானே கேட்டுக்கொள்கிறான்.

“கொடுத்துவைத்தது அவ்வளவுதான் அரசே! இறைவன் ஏழு மக்கட்செல்வங்களைக் கொடுத்தான். அவனே மூவரை இளம் வயதிலேயே திரும்ப அழைத்துக்கொண்டான். மேலும், இரண்டு செல்வங்கள் குறைப்பிரசவம் ஆகிவிட்டன. இருக்கும் இருவரையும் என் கண்ணின் மணிகளாய்க் காத்து வருகிறேன்” தீட்சிதரின் குரலில் சிறிது கரகரப்பு தோன்றுகிறது.

இருவரும் மெல்ல நடைபோடுகின்றனர். அவர்களைச் சுற்றிச் செந்தில்நாதனும், இன்னும் இருபது வீரர்களும் காவலாக நடந்து வருகின்றனர்.

ஒரு சோழியருடன் மன்னர் இவ்வளவு நட்புடன் அளவளாவுவதும், யாரோ ஒரு கவிஞரைக் காண்பதற்காக எல்லா வேலையையும் அப்படியே விட்டுவிட்டுச் செல்வதும், செந்தில்நாதனுக்குப் பிடிக்காவிட்டாலும், மன்னர் காரணமின்றி எதையும் செய்ய மாட்டார் என்று தன்னைத்தானே அடக்கிக் கொள்கிறான்.

“நீர் தமிழ்க் காரியஸ்தர் ஆயிற்றே, உமது மகனுக்குத் தமிழ் பயிற்றுவித்திருக்கிறீரா?”

“ஆம், அரசே! நாங்கள் பரம்பரை பரம்பரையாகத் தமிழை முறைப்படிக் கற்றுக்கொண்டு வருகிறோம். எங்கள் குடும்பத்தார் அனைவரும் தமிழை எழுதப் படிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும், தமிழ் அறிவை எங்கள் சந்ததியாரிடம் வளர்க்க வேண்டும் என்று எங்கள் மூதாதையர் இராஜேந்திரசோழப் பிரம்மராயர் எங்கள் குடும்பத்திற்கு ஆணையிட்டுச் சிவ பதவி அடைந்தார். இருநூறு வருடங்களாக அந்த ஆணையை நிறைவேற்றி வருகிறோம்.  எத்தனை ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும் அதை நாங்கள் நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று நீலகண்ட தீட்சிதர் பெருமிதத்துடன் கூறுகிறார்.

“நன்று, மிக நன்று. நீர் இப்படிச் சொல்வது, சங்கத்தமிழ் வளர்த்த பாண்டியர் பரம்பரையில் வந்த எனக்கு மிகவும் மகிழ்வாக உளது. உமது தமிழ்ப்பற்று மெய்சிலிர்க்க வைக்கிறது” என்றவன் செந்தில்நாதனை விளித்து, “செந்தில், இம்மறையவர் சொன்னதைக் கேட்டாயா?   எமது மூதாதையர் உன் மூதாதையருக்கு அளித்த கட்டளையை நிறைவேற்றுகிறாய் அல்லவா?” என்று பொருட்செறிவுமிக்க புன்னகையுடன் கேட்கிறான்.

தீட்சிதர் முகத்தில் கேள்வி பிறக்கிறது. இலேசாகத் தலையைக் குனிந்துகொள்கிறான் செந்தில்.

“நீ தலையைக் குனிந்துகொள்வதிலிருந்து அரசக் கட்டளையை மதிக்கவில்லை என்று நாம் எடுத்துக்கொள்வதா?”

மாறவர்மனின் குரலில் இருப்பது கிண்டலா அல்லது சீற்றமா என்று தீட்சிதருக்குப் புரியவில்லை.

“அரசே! என் மகன்கள் பாண்டியப் படைகளில் பயிற்சி பெறுவதற்கே முதல்நிலை அளித்து வருகின்றனர். இருப்பினும் தாங்கள் அனுப்பிய தமிழ் ஆசிரியர் என் பெண் பிள்ளைகளுக்கு நன்றாகத் தமிழைக் கற்றுக் கொடுத்துவிட்டார்…” என்று இழுக்கிறான் செந்தில்.

“உன் பெண் பிள்ளைகளா பாண்டிய மன்னர்களுக்கு மெய்காப்பாளர்களாகப் பணியாற்றப் போகிறார்கள்?” என்ற மாறவர்மன், “அவர்களுக்குத் திருமணமாகிவிட்டதா?” என வினவுகிறான்.

“வயசுக்கு வந்ததுமே கண்ணாலம் கட்டிவச்சுட்டேன் அரசே! எனக்குப் பேரப்பிள்ளைங்ககூட பிறந்திருக்காங்க” என்று பெருமையாகச் சொல்கிறான்.

“அதையும் இரகசியமாக வைத்துக்கொண்டிருக்கிறாய் போலிருக்கிறது” என்று சிரித்த மாறவர்மன், “ஓய் மறையவரே! உமக்குப் பெயரன் பெயர்த்திகள் இருக்கிறார்களா?” என வினவுகிறான்.

“எல்லாம்வல்ல கூத்தபிரான் அருளால் அதற்குக் குறைவில்லை அரசே! எனக்கு ஒரு பேரனும், மூன்று பெயர்த்திகளும் அருளப்பட்டுள்ளனர்” தலையாட்டியபடியே சொல்கிறார் தீட்சிதர்.

“அந்தப் பெயரன்தான் உமது பரம்பரைக்கு இடப்பட்ட கட்டளையைத் தொடர வேண்டும் போலிருக்கிறது!” பெரிதாகச் சிரிக்கிறான் மாறவர்மன்.

தீட்சிதரின் முகம் மலர்கிறது. “அரசே! இறைவனருளால் அது அப்படி நடந்தேறட்டும்.  இருப்பினும் பெயர்த்தியர்க்கும் தமிழ்க் கல்வி புகட்ட ஏற்பாடு செய்திருக்கிறேன்.”

அதற்குமேல் எதுவும் கேட்காமல் அமைதியாக அவருடன் நடைபோடுகிறான் மாறவர்மன்.

தீட்சிதரின் மனம் அலைபாய்கிறது. தனது சோழநாட்டின் பழம்பெரும் தலைநகரான உறையூரை எரியூட்டிக் கொளுத்திய எதிரியான பாண்டிய மன்னனிடம் தமது குடும்ப விவரங்களைப் பற்றிப் பேசுவோம் என்று அவர் சிறிதுகூட எதிர்பார்க்கவில்லை. அதேசமயம், கரிகாலன் காலத்திலிருந்து சோழர்களின் தலைநகராகச் சிறந்து விளங்கிய இக்கோழியூர் சின்னாபின்னமாகியிருப்பதை நினைத்துபார்க்கும்போது நெஞ்சு வலிக்கிறது.

குலோத்துங்க மாமன்னர் மதுரையைத் தரைமட்டமாக்கினார் என்பதைத் தீட்சிதர் அறிந்திருந்தாலும், அதை நேரில் கண்டதில்லை.

பாண்டியன் மனதில் எப்படிப்பட்டதொரு பழிவாங்கும் உணர்ச்சி இருந்திருந்தால், அழகு மிகுந்த இந்த உறையூரை அழித்திருப்பான்? அந்த வெறி அவன் மனதில் தோன்றி, அதைச் செயல்படுத்தும் திறனையும் கொடுத்திருந்தால், மதுரை எப்படிப்பட்ட அழிவைச் சந்தித்திருக்கக்கூடும்?

அப்படிப்பட்ட வெறி மிகுந்த, சோழர்களின் எதிரி தன்னுடன் எப்படி மிகக்கனிவுடன், எதுவுமே நடக்காததுபோல இந்த இடிபாடுகளுக்கு இடையிலும், எரியும் தீச்சுடர்களுக்கு நடுவிலும் நடந்துகொள்கிறான்?!

கவியரசர் கம்பரைப் பற்றித் தெரிந்துவைத்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல், அவரது உடல் நலத்தைப் பற்றி விசாரிக்க எப்படியொரு ஆதுரத்துடன் தன்னுடன் வந்துகொண்டிருக்கிறான்?!

உறைய வைக்கும் கடுங்குளிரிலில் - தகிக்கும் கனலில் நின்றுகொண்டிருப்பதைப்போல இருக்கிறது.

சோழர்களின் முதல் தலைநகரான பூம்புகாரை கடல் விழுங்கிவிட்டது; அதற்கடுத்ததாக இப்பொழுது இந்த உறையூர், பாண்டியன் பற்ற வைத்த தீக்கு இறையாகிக் கொண்டிருக்கிறது.  இது தீட்சிதருக்கு ஒரு பெரிய தீய அறிகுறியாகத் தோன்றுகிறது. 

இவ்வளவு துணிச்சலுடன் உறையூரைத் தாக்கியழித்த இப்பாண்டியன் அடுத்து என்ன செய்யப்போகிறான்? இவனது தாக்குதலை எதிர்கொள்ள இயலாது சோழப்படை ஒரேயடியாக அழிந்துபோய்விட்டதே!

எதிரிகளைச் சிதறடிக்கும் புலிகளான சோழ வீரர்கள் எப்படி எலிகளாகத் தோற்றார்கள்?  

ஒரோர் பாண்டிய வீரனின் கண்களில் சுடர்விட்ட வெறி - உறையூர் பற்றியெரியும்போது முகத்தில் மலர்ந்த வெறித்தனமான மகிழ்ச்சி - அவர்தம் விழிகளில் பிரதிபலித்த தீயின் நாக்குகள் - இவற்றைப் பார்க்கப் பார்க்க அவரது குலை நடுங்குகிறது.

தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் கண்ணூறப் பார்த்து இரசிக்கும் மாறவர்மனை உற்று நோக்குகிறார்.

சிறிது கருப்பான நிறம், குலோத்துங்கன் அளவுக்கு உயரமாக இல்லாவிட்டாலும் அவனை விட விரிந்து பரந்த மார்பு, நிமிர்ந்த நடை, விண்ணென்று விம்மிப் புடைத்திருக்கும் திண்தோள்கள், போரில் தாங்கிய விழுப்புண்களிலிருந்து கசிந்து உறைந்துபோன இரத்தச் சிராய்ப்புகள் - சுருண்டு பறந்த தலைமுடியை அவிழ்த்துவிட்டிருந்ததால், காற்றில் அது பறக்கும்போது உருத்திர தாண்டவமாடும் சிவபெருமான்போல அவன் தோன்றினான்.

சிவனாருக்கு எத்தனை கோவில்கள் எழுப்பினார்கள் சோழர்கள்! அவர்களின் தலைநகரை எரியிட்ட இவனா தன் கண்களுக்குத் தில்லையில் நடமிடும் ஆடலரசனாகத் தென்படுகிறான்?!!

தனது மன ஓட்டத்தை அவராலேயே அறிந்துகொள்ள இயலவில்லை. இவனிடம் மாட்டிக்கொண்டிருக்கிறோமே, தம்மை என்ன செய்யப்போகிறானோ என்று அச்சத்துடன் சிந்திக்கிறார் தீட்சிதர்.

தனது வாழ்வு, தனது சந்ததியாரின் வாழ்வு - இந்தப் பாண்டியனால் பெரிதாக மாற்றப்படப் போகிறது, சோழத் திருநாட்டின் தலையெழுத்தே மாற்றப்படப் போகிறது என்று அவருள் ஏதோ ஒன்று கூக்குரலிட்டு ஓலமிடுகிறது. அவரது மேனி சிலிர்க்கிறது. கவியரசு கம்பர் தங்கியிருக்கும் அரச மாளிகையை அடைகிறார்கள்.

கங்கைகொண்ட சோழபுரம் அரண்மனை

தாது, ஆவணி 15 - ஆகஸ்ட் 18, 1216

பெரிதாக பித்துப்பிடித்தவனாக வெறிச்சிரிப்புச் சிரிக்கிறான் குலோத்துங்கன். “என்னுடன் விளையாடதீர், ஒற்றர் தலைவ! பாண்டியப்படை கொள்ளிடத்தைக் கடக்க ஆயத்தமாகிறதா?  உறையூர் தரைமட்டமாகியதா? தஞ்சையும் தீக்கிரையானதா? இது எப்படி நடந்தது?   சோழவீரர் தூங்கிக்கொண்டா இருந்தனர்? பாண்டியனின் படையெடுப்பு முயற்சி நமது கவனத்திற்கு வராது தப்பியது எப்படி?

“எமது காலில் விழுந்து வணங்கி, எமது காலைத் தன் தலையில் வைத்து மதுரையைப் பிச்சையாகப் பெற்றுக்கொண்ட மாறவர்மனா இதைத் துணிந்து செய்தான்? உடனே கிளம்புங்கள்! பாண்டியரை அழித்து ஒழிப்போம்!” என்று பொங்குகிறான், சோழ மாமன்னன் (மூன்றாம்) குலோத்துங்கன்.

சினப்பெருக்குடன் பேசியதால் சிறிது மூச்சு வாங்குகிறது. கிட்டத்தட்ட எழுபது வயதான குலோத்துங்கனுக்கு உடல் தளரத் துவங்கிச் சில ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. முப்பத்தெட்டு ஆண்டுகளாகச் சுமந்த சோழப் பேரரசின் பாரம், அவனது முதுகையும் சற்றுக் கூன வைத்திருக்கிறது.

ஒற்றர் தலைவன் தயங்கித் தயங்கிப் பேசத் தொடங்குகிறான்: “சக்ரவர்த்தி அவர்களே!   சடையவர்ம குலசேகரபாண்டியர் இறைவனடி சேர்ந்த துக்கத்தில் பாண்டிநாடே செயலிழந்து கிடக்கிறது என்றுதான் நமது ஒற்றர்கள் அனைவருக்கும் செய்தி கிடைத்து வந்தது. அவரது இளையவர் மாறவர்மரும் முடிசூட மாட்டேன் என்று நெல்லைப் பான்டியரையே மதுரையில் முடிசூடச் செய்தார். அதன்பிறகு தேவாரத் திருத்தலங்களில் நீராடி, தமையனாரின் மறைவுக்காக நீத்தார் சடங்கை நிறைவேற்றப் புறப்பட்டுச் சென்றுவிட்டதாகவும் செய்தி கிட்டியது. மாறவர்ம பாண்டியர் அவ்வப்போது நீத்தார் சடங்குகளை அந்தணர் உதவியுடன் செய்வதை நமது ஒற்றர்கள் நேரில் கண்டு நமக்குச் செய்தி அனுப்பி வந்தனர். எனவே, மாறவர்மர் தமது தமையனார் மறைவினால் மிகவும் பாதிக்கப்பட்டார் எனத் தப்புக்கணக்குப் போட்டுவிட்டோம். தவிரவும், உறந்தை (உறையூர்), தஞ்சையிலிருந்து ஐயம் ஊட்டக்கூட்டக்கூடிய செய்தியொன்றும் வரவேயில்லை. திருமறைக்காடும், நாகையும் அப்படியே.

“இந்நிலையில் ஆடி மாதத்தில் அபாரமாகக் குடகில் பெய்த மாரிக்காலப் பெருமழையால் காவிரியில் வெள்ளப் பெருக்கெடுத்துக் கொள்ளிடமும் நிறைந்து வழிந்தது சக்ரவர்த்தி அவர்களே! இச்சமயம்தான் உறையூரைப் பாண்டிய இளவரசர் மாறவர்மர் வளைத்துக் கொண்டதாகவும், அது அவர்களிடம் விழும் நிலையில் இருப்பதாகவும் செய்தி வந்தது. உடனே செய்தி தெரிவிக்கத் தஞ்சையைவிட்டுக் குடந்தை வந்து சேர்ந்த என்னால் கடக்க முடியாத அளவுக்கு வெள்ளப்பெருக்கினால் இருபது நாள்களாகக் கொள்ளிடத்தைக் கடக்க இயலவில்லை.”

உணர்ச்சிப் பெருக்கால், ஒற்றர் தலைவனால் தொடர்ந்து பேச இயலாத அளவுக்கு
நா தடுமாறுகிறது. துக்கம் தொண்டையை அடைக்கிறது. சமாளித்துக்கொண்டு தொடர்கிறான்.

“ஒரு நாள் இரவு தஞ்சை இருந்த இடத்திலிருந்து தீயின் செந்நாக்குகள் எழக் கண்டேன். மறுநாள் அங்கிருந்து வந்த ஒற்றன் தஞ்சையும் வீழ்ந்துவிட்டதாகத் தெரிவித்தான். உறையூரைக் காக்க, அதை மீட்கத் தஞ்சைக் கோட்டையிலிருந்து கிளம்பிய சோழ வீரர்கள் அதைச் சுற்றிவளைத்திருந்த பாண்டியருக்குப் பலிகடா ஆனார்களாம். இதற்கிடையில் தஞ்சைக்குள் நிறையக் குடிசைகள் தீக்கு இரையாகின. அவற்றைக் கட்டுப்படுத்தும் சமயம், பாண்டியர் மடைதிறந்த வெள்ளம்போல் தடையை உடைத்தெறிந்து உட்புகுந்து விட்டனர்.

“இதிலும் அவக்கேடு என்னவென்றால், வணிக வேடம் பூண்டு முன்னமேயே தஞ்சைக்குள் புகுந்திருந்த ஆயிரக்கணக்கான பாண்டியர் கோட்டைக் கதவைத் தகர்க்க உதவி செய்தார்களாம். அவர்கள் எப்படி, எப்போது வந்தனர் என்றே தெரியவில்லை. கண்கட்டு வித்தையாகத்தான் இருந்தது. இனியும் தாமதிக்கக் கூடாதென்று - உங்களுக்குத் தகவல் தெரிவிக்கவேண்டுமென்று நானும் - என் பிரிவிலுள்ள ஐம்பது ஒற்றரும் கொள்ளிடத்தைக் கடந்துவர முற்பட்டோம். என் ஒருவனால் மட்டுமே கொள்ளிடத்தைக் கடக்க முடிந்தது” ஒற்றர் தலைவனின் குரல் தழுதழுக்கிறது:

“பாண்டியர் பல்லாண்டு காலமாக இரகசியமாகத் திட்டமிட்டுச் சிறிது சிறிதாகச் செயல்பட்டுள்ளனர் சக்ரவர்த்தி அவர்களே! இந்தக் கவனமின்மைக்கு நான் முழுப் பொறுப்பும் எடுத்துக்கொள்கிறேன். தாங்கள் எத்தண்டனை அளிப்பினும் அதை ஏற்றுக்கொள்கிறேன்” இதைச் சொல்லி முடித்ததும், அமைதியாகிவிட்டுக் கூனிக்குறுகி நின்று விடுகிறான்.

குலோத்துங்கனின் மகனும், பட்டத்து இளவரசனுமான (மூன்றாம்) இராஜராஜன் வாயைத் திறவாமல் அருகில் நிற்கிறான். அவனுக்குத் தன் தந்தையின் முகத்தைப் பார்க்கவே தயக்கமாக இருக்கிறது. வடமேற்கில், காடவமன்னன் அழகியசிங்கன் திறை செலுத்தாததால் படைகள் சேந்தமங்கலத்தை முற்றுகையிடச் சென்றிருக்கும் சமயத்தில் - காவிரியிலும், கொள்ளிடத்திலும் வெள்ளப் பெருக்கேற்பட்டு உறையூரும், தஞ்சையும் சோழப் பேரரசிலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கும் சமயத்தில் - தந்திரமாகப் படைகளை நகர்த்தித் தென் சோழநாட்டைக் கைபற்றியிருக்கிறான் மாறவர்மன் என்பதை அறிந்ததும் மிகவும் ஆத்திரமாக இருக்கிறது.

தன் வாழ்நாள் முழுவதையும் போர்களிலேயே கழித்த தன் தந்தையிடம், கரிகால் சோழனால் நிறுவப்பட்ட பழம்பெரும் உறையூரையும், தனது பேருக்கு முன்னோடியான திரிபுவனச் சக்ரவர்த்தி இராஜராஜசோழர் அரசாண்ட தஞ்சையையும் காப்பாற்ற இயலாது போயிற்று என்று கையை விரித்து நிற்கும் நிலை வந்துவிட்டதை நினைத்தால் மிகவும் அவமானமாக இருக்கிறது.

தன் உடன்பிறப்புகள் எவரும் ஆண் பிள்ளைகளாக இல்லாத காரணத்தால்தான் திறமையற்ற தனக்கு இளவரசுப் பட்டம் கிடைத்தது என்று தெரிந்ததால், தந்தைக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் வாயடைத்து நிற்கிறான்.

சிறுத்தையாகச் சீறுகிறான் குலோத்துங்கன்: “நமது படைகள் அனைத்தையும் கொள்ளிடக்கரையில் குவியுங்கள்! ஒரு பாண்டிய வீரன் கூட உயிருடன் கால் வைக்கக்கூடாது.  நானே படைக்குத் தலைமைதாங்கிச் செல்கிறேன். விஜயாலய சோழர் விதையிட்டு, இராஜராஜர் உரமிட்டு வளர்த்து, இராஜேந்திரர் வேலியிட்டுப் பரப்பி, குலோத்துங்கரால் நிலைநிறுத்தப்பட்ட சோழப்பேரரசு என் காலத்தில் பாண்டியருக்குப் பணிவதைத் தவிர வேறென்ன அவக்கேடு இருக்க முடியும்? மதுரையைத் தாக்கித் தரைமட்டமாக்கிக் கழுதைகளைக் கொண்டு உழச்செய்தேன். அப்படியிருந்தும் களைகளாய் முளைத்து வந்திருக்கின்றனர் இப்பாண்டியப் பதர்கள்! கங்கைகொண்ட சோழபுரத்து ஒவ்வொரு வீரனும் நூறு பாண்டியப் பதர்களுக்குச் சமம்.  கிளம்புமின். என் இரத்தக் குழாய்களில் திரிபுவனச் சக்ரவர்த்தியின் சோழ இரத்தம்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. எங்கே, தண்டநாயகர்?” என்று ஆவேசமாகக் கத்துகிறான். உடனே, இருமலும் பலமாக அவனிடமிருந்து கிளம்புகிறது.

“தந்தையே, தாங்கள் கவலையற்க. கோழியடிக்கக் குறுந்தடியா தேவை? பாண்டியரைப் புறங்காண நான் போதும். உடனே சென்று வெற்றிச் செய்தியுடன் திரும்பி வருகிறேன்” என்று வீரமாகப் பேசிக் குலோத்துங்கனை அமைதிப்படுத்த முயல்கிறான் இராஜராஜன்.

குலோத்துங்கன்
குலோத்துங்கன்

குலோத்துங்கன் மெல்ல இருக்கையில் அமர்ந்துகொள்கிறான். அவன் உடல் பதறுகிறது.  உறையூரும், தஞ்சையும் வீழ்ந்தன என்றால் - பாண்டியனின் படைப் பலம் சிறந்துதானே இருக்கும். அப்படையுடன்தானே அவன் கொள்ளிடத்தைக் கடந்து வரப்போகிறான்!   அப்படிப்பட்ட பாண்டியனை இராஜராஜனால் வெல்ல இயலுமா? அவன் மனம் படபடக்கிறது.

தண்டநாயகர் நுழைகிறார். “வணக்கம், சக்ரவர்த்திகளே!” அவரது தலை சாய்ந்து வணங்குகிறது.

“தண்டநாயகரே, இளவரசுக்கு உதவியாகப் போருக்குப் படையை நடத்திச் செல்லும்.  இளவரசைக் கண்ணின் மணியாகக் காப்பது உம் பொறுப்பு. வெற்றியுடன் திரும்புவீராக!”   களைப்பு மேலிடக் கண்களைச் சிறிது மூடிகொள்கிறான் குலோத்துங்கன். அவனது கைவிரல்கள் அவரைப் போகச் சொல்லி அசைகின்றன. தண்டநாயகரும் இராஜராஜனும் கிளம்புகிறார்கள்.

“ஒற்றர் தலைவ, நிற்பாயாக!” என்று ஆணையிடுகிறான் குலோத்துங்கன்.

ஒற்றர் தலைவன் நடுங்கியவாறே நிற்கிறான். இனி தன் உயிர் செல்லாக்காசுக்குக்கூட ஈடாகாது என்று உள்ளூர அறிகிறான். அவன் எதிர்நோக்கியது குலோத்துங்கன் வாயிலிருந்து சொற்களாக வெளிவருகின்றன.

“உறையூரையும் தஞ்சையையும் ஒருங்கே அழிப்பது என்னும்போது, அதுவும் சோழ வீரர்களைச் செயலிழக்கச் செய்வதென்னும்போது, மதுரைப் பாண்டியன் திட்டமிட்டுச் செயல்பட்டிருக்கிறான் என்றே பொருளாகிறது. நமது ஒற்றர்படைக்குத் தெரியாமல் பாண்டிப்படைகளைத் திறமையாக நகர்த்திச் சுற்றிவளைத்திருக்கிறான். மேலும், இரு நகர்களுக்குள்ளும் தன் படைகளை நமக்குத் தெரியாமல் உட்புகுத்தியிருக்கிறான். இது நமது கவனத்திலிருந்து தப்பியதென்னும்போது - நீ எதற்காக ஒற்றர் தலைவனாகத் தொடர்ந்து செயலாற்ற வேண்டும்?

‘மறைந்தவை கேட்கவற்றாகி அறிந்தவை

ஐயப்பாடு இல்லதே ஒற்று‘

என்று வள்ளுவப் பெருந்தகை சொன்ன கூற்றுக்கு உன்னால் இழுக்கு வந்துவிட்டதே, ஒற்றர் தலைவ! நீயும் மற்றவர்களின் - நம் எதிரி பாண்டியனின் இரகசியங்களைப் பற்றி ஆராய்ந்து ஐயமின்றி அறிந்து கூறவில்லை. யாமும் உன்னை நம்பி சோழவளநாட்டின் இரு கண்களாய் இருந்த உறந்தையையும், தஞ்சையையும் இழந்து விட்டோம். சோணாடு கண்ணற்ற காரிகையாக வாழும் அவல நிலை நேரிட்டுவிட்டது. இந்த நிலைக்கு நம்நாட்டை ஆளாகிய நீ உயிருடன் இருந்துதான் என்ன பயன்?

“உன் கண்களில், உன் ஒற்றர் குழாத்தின் கண்களில் பாண்டியப் படைகள் மண்ணைத் தூவ அனுமதித்த நீ இனி வாழத்தான் வேண்டுமா? நீயே முடிவு செய்து செயலாற்றுவாயாக! உன் முகம் இனி எமது கண்ணில் படுவதோ, உன்னைப் பற்றிய சேதி எமக்குத் தெரிவதோ,
நீ எமக்கிழைக்கும் துரோகமாக யாம் எண்ணுவோம்! எம்மை விட்டு உடனே நீங்குவாயாக!” குலோத்துங்கனின் கை உயர்ந்து வாயிலைச் சுட்டிக்காட்டுகிறது.

தான் தன்னுயிரைப் போக்கிக்கொள்வதோடு மட்டுமன்றி, அச்செய்திகூட அரசனின் காதுக்கு எட்டாதபடி செய்வதுதான் - அரசன் தனக்கு இட்ட கடைசி ஆணை என்பதை உணர்ந்து பதிலேதும் கூறாமல் அமைதியாக வெளியேறுகிறான் ஒற்றர் தலைவன்.

“யாரங்கே?” குலோத்துங்கனின் குரல் பெரிதாக எழுகிறது.

“சக்ரவர்த்திகளே!” என்றபடி அவன்முன் ஒரு பணிப்பெண் வந்து நிற்கிறாள்.

“அமைச்சரை நான் வரச்சொன்னதாகச் சொல்” என்று அவன் சொல்வதற்கும், அமைச்சரே அங்கு வருவதற்கும் சரியாக இருக்கிறது.

“நல்லவேளை, நீரே வந்துவிட்டீர். பாண்டியப்படை கங்கைகொண்ட சோழபுரத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. போசளப்படைகளுடன் விரைந்து உதவிக்கு வரச்சொல்லி உடனே எமது மருமகனும், போசளமன்னருமான வீரவல்லாளருக்குச் செய்தி அனுப்பும். சேந்தமங்கலத்தை முற்றுகையிட்டுக் கொண்டிருக்கும் நமது படைகளை உடனே கங்கைகொண்ட சோழபுரத்தின் பாதுகாப்புக்காக வரச்சொல்லும்படி தண்டநாயகருக்கு யாம் கட்டளை பிறப்பித்ததாகவும் தெரிவியும். வீரவல்லாளருக்கு எமது திருமுகத்தை எழுத ஏற்பாடு செய்யும். யாம் இலச்சினையைப் பதித்துக் கொடுக்கிறோம்.”

குலோத்துங்கனின் குரல் உறுமலாகத்தான் வெளிவருகிறது. அப்படியே செய்வதாகத் தெரிவித்துவிட்டு அமைச்சர் வெளியேறுகிறார்.

களைப்பு மிகுதியால் கண்களை மூடிக்கொள்கிறான் குலோத்துங்கன். மதுரையை மாறவர்மனுக்குத் திருப்பிக் கொடுத்ததுதான் தன் வாழ்க்கையில் தான் செய்த மிகப்பெரிய தவறோ என்று தன்னையே நொந்துகொள்கிறான். இதுவரை தான் கட்டிப்பிடித்து நிறுத்திய சோழப்பேரரசு தனக்குப் பிறகு நிலைக்குமா என்று நினைக்கும்போது அவனது நெஞ்சு வலிக்கத் தொடங்குகிறது.

முடிகொண்ட சோழபுரம்

தாது, ஐப்பசி 25 - அக்டோபர் 31, 1216

பேரிகைகள் முழங்குகின்றன. தாரை, தப்பட்டை, கொம்புகளின் ஒலி செவிகளைப் பிளக்கிறது. அயிரட்டளி28 ஊரே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. அங்கு குழுமியிருக்கும் ஒவ்வொரு பாண்டியனின் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது. கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளாகச் சோழர்களின் கைவசமிருந்த பாண்டியர்களின் மணிமகுடம், வீரவாள், அரியணை இவற்றுடன் பரம்பரைப் பொக்கிஷங்கள் திரும்பவும் அவர்கள் கைக்கு வந்து சேர்ந்திருக்கின்றன.

இத்தனை காலமாகச் சோழர்களுக்குத் திறை செலுத்திய பாண்டிநாடு, அத்தளையை அறுத்தெறிந்து, சோழநாட்டையும் தனக்குக் கீழ் கொணர்ந்திருக்கிறது.

சோழர்களின் பெருமையை நிலைநாட்டி வந்த - தமிழகத்துடன் கருநாடு, ஆந்திரம், இலங்கை, கடாரம், நக்காவரம் (அந்தமான், நிக்கோபார்), இலட்சத் தீவுகள் இவற்றில் அவர்களின் ஆதிக்கம் பரவியிருந்ததைப் பெருமையுடன் பறைசாற்றி வந்த தலைநகரம் கங்கைகொண்ட சோழபுரம் மாறவர்மனுக்கு அடிபணிந்திருக்கிறது. உறையூர் இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது. தஞ்சையில் பெருவுடையார் கோவில்தான் எஞ்சி நிற்கிறது.29 கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழ மன்னர் எவருமோ, அவரது உறவினரோ தற்சமயம் இல்லை - இல்லவே இல்லை!...

…மாறவர்மனின் தலைமையில் கொள்ளிடத்தைக் கடந்த பாண்டிய வீரர்களின் சீற்றத்துக்கு முன்னால் ஈடுகொடுக்க இயலாமல் சோழர்கள் தவிடுபொடியாகிப் போனார்கள்.

சேந்தமங்கலைத்தை முற்றுகையிட்ட சோழர்களுக்கு ஒரு வியப்பு காத்திருந்தது. அருகில் காட்டில் ஒளிந்துகொண்டிருந்த காடவன் அழகியசீயனின் படை வீரர்கள் திடுமென்று ஒருநாள் காலையில் கோட்டைக்கு வெளியிலேயே சோழர்களைச் சுற்றிவளைத்துத் தாக்கினர். அதேசமயம், கோட்டைக் கதவு திறந்தது. அழகியசீயன் தலைமையில் வெளிவந்த காடவப்படை சோழர் அணிவகுப்பைப் பிளந்து சிதறடித்தது.

----------------------------------

[28. ‘பாண்டியன் மாறவர்மன் அயிரட்டளி என்ற முடிகொண்ட சோழபுரத்தில் சோழர்களின் அரசாணி மண்டபத்தில் பாண்டிய அரசனாக முடிசூட்டிக்கொண்டான்’ – கல்வெட்டுகள்.

அயிரட்டளி கும்பகோணத்திற்கு அருகிலுள்ள வீரசிங்கம்பேட்டை என்று வரலாற்றறிஞர் குடவாசல் பாலசுப்பிரமணியம் ‘நந்திபுரம்’ என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.

29. நாயக்கர் காலத்தில் திருச்சிராப்பள்ளி பெருநகரானவுடன், உறையூர் நகர்ப்புறமாகக் கிளைத்தது. இப்பொழுது திருச்சியின் புறநகராக விளங்குகிறது. மராட்டிய மன்னர்கள் ஆட்சியில் அவர்களின் தலைநகரான தஞ்சை தனித்துப் பெருநகராகியது.]

ஆகவே, அவர்களை கங்கைகொண்ட சோழபுரத்திற்கு திரும்பிவரும் செய்தியைச் சுமந்து சென்ற தூதுவர் சோழர்களின் தோல்வியைத்தான் கண்ணுற்றனர். தனித்து விடப்பட்ட குலோத்துங்கன் தன் தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்திலேயே முதன்முறையாகத் தோல்வியைத் தழுவினான். பாண்டிய வீரர்கள் புடைசூழ உட்புகுந்த மாறவர்மன் சோழர் தலைநகரைக் கைப்பற்றினான்.

அவனது முதல் செயல், இழந்த பாண்டியப் பொக்கிஷங்களைத் திரும்பப் பெறுவதாகத்தான் அமைந்தது. அதன்பின், குலோத்துங்கன், அவனது மைந்தன் இராஜராஜன் மற்றும் ஏனையோரையும் தன்முன் வரவழைத்தான். உறையிலிருந்த வாளை எடுத்துச் சுழற்றியதும் அங்கிருந்தவரின் இரத்தமே உறைந்துபோனது; மூச்சும், இதயத்துடிப்பும் சில கணங்கள் நின்றுபோயின.

சுடுகாட்டில் பூதகணங்களுடன் நடமிடும் பித்தனான சிவபெருமானைப் போன்று வெறிச்சிரிப்புச் சிரித்தான் மாறவர்மன். சுழற்றிய தனது வாளைக் குலோத்துங்கனுக்குக் காட்டியவாறு கணீரென்று உரத்து மொழிந்தான்:

“குலோத்துங்கரே! இந்த வாளைச் சற்று உற்றுப்பாரும். மதுரையில் என் தலையில் காலை வைத்து, ஆணவச் சிரிப்புடன், உமக்கு அடிமையாக, திறை செலுத்தி வாழ்ந்து வருமாறு பணித்து, மதுரையுடன் சேர்த்து எனக்குப் பரிசளித்தீரே, அந்த வாள்தான் இது” மீண்டும் வாளை வேகமாகச் சுழற்றினான்.

“அதை முதலில் எடுத்துச் சுழற்றியபோதே, அது சரியாக வடிவமைக்கப்படவில்லை என அறிந்தேன். சமநிலையில்லாத வாளோடு போரிடுவது தற்கொலைக்கு ஈடாகும். தனது மாமன்னர் இன்னொரு மன்னருக்குப் பரிசாகக் கொடுக்கும் வாளைக்கூடச் சரியாக வடிவமைக்காத நிலையில் சோழநாடு இருக்கிறதென்பதை அது தெள்ளத்தெளிவாக உணர்த்தியது; மதுரையை மீட்டு விடலாம் என்ற நம்பிக்கையையும் விதைத்தது. உடனே, அந்த வாளைச் சமன்செய்து, அதன் மூலமாகவே மதுரையையும், பாண்டிநாட்டையும் அடிமைத் தளையிலிருந்து மீட்க உறுதியெடுத்தேன். நிறைவேற்றவும் செய்தேன். ஆகவே, அப்படிப்பட்டதொரு வாளை எனக்குத் தந்துதவிய உமக்கு மிக்க நன்றி. 

“ஒருவிதத்தில் இந்த வாள்தான் உமது உயிரை விட்டுவைக்கக் காரணமாக அமைகிறது. என் மனதில் உறுதியை நிலைநிறுத்திய இவ்வாளை எமக்கு அளித்த நன்றிக்கடனாக உம் உயிரை உமக்குப் பிச்சையாக நான் இடுகிறேன். அத்துடன் உமது மனைவி, மக்கள், உறவினரின் உயிர்களையும் பிச்சையாகத் தருகிறேன்” உயர்த்திப் பிடித்திருந்த வாளைத் தளர்த்திக் கீழே ஊன்றினான் மாறவர்மன்.

“நீர் மதுரையில் எங்கள் பரம்பரை அரசாணி மண்டபத்தை அழிக்காமலும், மதுரையைச் சூறையாடிக் கழுதைகளால் உழச்செய்யாமலும் இருந்திருந்தால் - மதுரையில் குழுமியிருந்த அனைவரின் கண்ணெதிரில் என் தமையனார் தலையில் கால் வைத்து அவமதிக்காமலும் இருந்திருந்தால் - உறந்தையையும் தஞ்சையையும் தரைமட்டமாக்கியிருக்க மாட்டேன். எமது பரம்பரைப் பொக்கிஷங்களை மீட்டு, உம்மிடமே இந்தச் சோழத் தலைநகரைத் திரும்ப ஒப்படைத்துவிட்டுத் திரும்பியிருப்பேன்.

“என் நோக்கம் சோணாட்டை அடக்கி ஆள்வதல்ல; பாண்டிநாட்டையும், மதுரையையும் அடிமைத் தளையிலிருந்து மீட்பதே! அது நிறைவேறிய மகிழ்ச்சியுடன் உம்மையும், உமது வழித்தோன்றல்களையும் இங்கேயே விட்டுவிட்டுச் சென்றிருப்பேன்.”

மாறவர்மனின் உதடுகள் துடிக்கின்றன. அடிக்கும் காற்றில் அடங்காத அவனது கேசம் அலையாகப் பறக்கிறது.

“ஆனால், நான் அப்படிச் செய்யப்போவதில்லை. நியாயமான போர் முறைகளை நீர் மீறினீர்.  பாண்டியர்களை எவ்வளவு தூரம் அடக்கி ஒடுக்க முடியுமோ, எப்படியெல்லாம் உங்கள் கால்கள் எங்களை நசுக்கி மிதிக்க முடியுமோ, அவ்வளவு அவச்செயல்களை இச்சோழநாடு இருநூறு ஆண்டுகளாகச் செய்திருக்கிறது. சில காலம் சோழரே சோழ பாண்டியராய் ஆட்சி செய்தனர். இதைவிடச் சிறுமையை எம்நாட்டுக்கு எவரும் நல்க முடியாது. தமையனைக் கொன்ற சளுக்கியருடன் சம்பந்தம் வைத்துக்கொண்ட நீங்கள், கங்கணம் கட்டிக்கொண்டு எங்களை மிதித்து நசுக்கினீர். எந்த முப்பாட்டனாருக்கு முப்பாட்டனார் பெயரை நீர் வைத்துக்கொண்டிருக்கிறீரோ, அந்த (முதலாம்) குலோத்துங்கர் எங்கள் பாண்டிநாட்டைத் துண்டுதுண்டாக்கி, எங்களையும் குறுநில மன்னராக வாழச்செய்தார். அதன் விளைவு, உடன்பிறப்புகளான நாங்களே ஒருவரையொருவர் அடித்துத் தாக்கி, பாண்டியர் குருதியை ஓட விட்டோம். எதிரிகள் உட் புக அது இடமும் கொடுத்தது.

“சொல்லொணா இக்கொடுமைகளை நீங்கள் எந்தவொரு நாட்டிற்கும் செய்யவில்லை.  உங்களது வெறித்தனமான விளையாட்டுக்கு பாண்டிநாட்டைப் பகடைக்காயாகப் பயன்படுத்தினீர்கள். இன்றுடன் இது முடிகிறது. பேரரசாகத் திகழ்ந்த சோழர் வரலாறுக்கும் இன்று சாவுமணி அடிக்கப்படுகிறது. இனி உமக்கு நாடும் கிடையாது, வீடும் கிடையாது, நகரும் கிடையாது, ஊரும் கிடையாது. நீரும், உமது மனைவி மக்களும் நாடோடிகளாய் வாழ்வீர்!” இரத்தச் சிவப்பாயிருந்த விழிகளால் குலோத்துங்களை உற்றுநோக்கினான் மாறவர்மன்.

“எந்தப் பேரரசை ஆண்டு வருகிறோம் என்ற செருக்கினால் எம்மை அடிமை செய்தீரோ, அந்தப் பேரரசிலிருந்தே உம்மை நாடு கடத்துகிறோம். ஆம். இனி உமது நாட்டில் உமக்கு இடமில்லை. நீரும், உமது மனைவி மக்களும், உறவினரும் இந்த நாட்டை விட்டு நீங்குவீராக.30 இனி முத்தமிழ் நாட்டிலிருக்கும் உரிமையினை நீர் இழந்துவிட்டீர். இங்கிருந்து நீங்க உமக்கு வண்டிகள், வசதிகள் யாவும் செய்துகொடுக்கப்படும். பாண்டியர் கோலோச்சப்போகும் இத்தமிழகத்தில் உமக்கு இடமில்லை. நீர் செல்லலாம்!” திரும்பிய மாறவர்மன், குலோத்துங்கனைப் பாராது வீரநடைபோட்டான். செயலிழந்து தள்ளாடிய குலோத்துங்கனை அவனது மெய்காப்பாளன் தாங்கிக்கொண்டான்.

…மாறவர்மனுக்கு முடிசூட்டும் விழா நடக்கும் தருணம் வருகிறது. எங்கும் மங்கல வாத்திய ஒலி முழங்குகின்றது. வேத கோஷம், திருமுறை ஓதல் வானைப் பிளக்கின்றன. “வாழ்க, வாழ்க! மாறவர்ம பாண்டியர் வாழ்க!” என்ற வாழ்த்தொலி விண்ணை அதிர வைக்கிறது. மாறவர்மன் கையை உயர்த்தியதும் சோழர்களின் அரசாணி மண்டபமே அமைதியாகிறது.

“எனது பாண்டியப் பெருமக்களே! நாம் இனி யாருக்கும் அடிமையில்லை. மதுரை தலைநிமிர்ந்து திகழ்கிறது. சோழமன்னன் குலோத்துங்கன் மதுரையில் முடிசூட்டிக்கொண்டான். அதுபோல, உங்களுக்கு மன்னனாக, பாண்டிய மன்னனாகச் சோழர்தம் அரசாணி மண்டபத்தில், மதுரையை மாற்றார் பிடியிலிருந்து மீட்ட மகிழ்வுடன் முடிசூட்டிக்கொள்கிறேன். மதுரையை ஆண்டுவரும் சுந்தரேசப் பெருமானின் பெயரே இனி பாண்டிய மன்னர்களுக்கு ஒரு பட்டமாக இருக்க வேண்டும் என்ற அவாவினால் சுந்தரபாண்டியன் என்ற பட்டப்பெயருடன் முடிசூடுகிறேன்!” என்று கைகூப்புகிறான்.

உணர்ச்சிப்பெருக்கால் எழுந்த ஆர்ப்பரிப்பில் அரசாணி மண்டபமே அதிருகிறது. பாண்டியரின் பரம்பரை மணிமகுடம் அவனுக்குச் சூட்டப்படுகிறது. பரம்பரை வீரவாள் அவனிடம் தரப்படுகிறது. பரம்பரை அரியணையில் பெருமிதத்துடன் அமர்கிறான் மாறவர்மன் – இல்லையில்லை… மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்.

----------------------------------

[30. போரில் தோற்ற மூன்றாம் குலோத்துங்கனை அவன் மனைவி மக்களுடன் மாறவர்மன் நாடு கடத்தினான் என்று வரலாற்றறிஞர் எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார் அவரது, ‘தென்னிந்தியாவும் அதன் முகமதியப் படையெடுப்பாளர்களும்’என்ற வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளார். - ‘South India and her Mohammadan Invaders’, by S.  Srivasa Aiyangar, Oxford University Press,1921]

***

(தொடரும்)

Other Articles

No stories found.