பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -நான்காம் பாகம்-அத்தியாயம் 11

பாண்டியர் அரண்மனை
பாண்டியர் அரண்மனை

பாண்டியர் அரண்மனை, பொன்னமராவதி

தாது, தை 1 - ஜனவரி 1, 1217

பைய நடந்து வருகிறான் மூன்றாம் குலோத்துங்கன். அவனது நடையும், முக பாவமும் அடிபட்டு வலுவிழந்த புலியை ஒத்ததாக இருக்கிறது. அவன் கண்களுக்கு மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஒரு வெறிபிடித்த சிங்கமாகத் தென்படுகிறான். தன்னை நாடு கடத்திய அவன் சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டு திரும்ப அழைத்தது வியப்பாக உள்ளது.

இது போதாதென்று, தன்னிடமே பணியாற்றி, தன் உடன்பிறப்பின் மகளையும் மணந்துகொண்டு, தனக்கே எதிராகப் பாண்டியனுடன் கூட்டணி வகுத்த காடவன் அழகியசீயன் - தன்முன் தலைநிமிர்ந்து நிற்கக்கூடத் தயங்கும் சிற்றரசனான அவன் தற்பொழுது கோப்பெருஞ்சிங்கன் என்ற பட்டத்துடன், கால் மேல் கால் போட்டு எக்காளத்துடன் இருக்கையில் அமர்ந்திருப்பதும் தன்னை அவமதிப்பதே என்று உணர்கிறான்.

“காலத்தின் விபரீதப் போக்கு இது! இல்லாவிடில் எனக்குப் பணிந்து மதுரையை யாசித்துப் பெற்ற பாண்டியனிடம் சோழநாட்டை யாசித்துப்பெறும் நிலமைக்கு வந்திருப்பேனா?” என்று தனக்குள் புழுங்குகிறான்.

போசள மன்னன் வீரவல்லாளன் அவனது மகன் நரசிம்மனை படையுடன் தனக்கு உதவியாக அனுப்பிவைத்ததையும் - அப்போது நடந்த போர் சாதகமாக அமையாததால், நரசிம்மனுடன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் சமாதான உடன்படிக்கை செய்துகொண்டதையும் - பாண்டியனுக்குத் திறை செலுத்தி வரச் சம்மதித்தால், குலோத்துங்கனுக்குச் சோழநாட்டைத் திருப்பிக்கொடுக்க ஒப்புதல் அளித்ததையும் - அதை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட அனைவரையும் பொன்னமராவதி அரண்மனைக்கு அழைத்ததையும் எண்ணிப்பார்த்தால் வியப்பாக இருக்கிறது.

அதைவிட வியப்பு, பாண்டியனின் வலிமையை அறிந்த போசளன் நரசிம்மன், தன் மகனுக்குப் பாண்டியனின் மகளையும் மணமுடிக்கச் சம்மதித்துக் குலோத்துங்கனைத் திறை செலுத்தும்படி வற்புறுத்தியதுதான்!

தன் மைந்தன் இராஜராஜன் திறமைசாலியாக இருந்தால் தனக்கு இந்நிலை வந்திருக்குமா? முந்நூறு ஆண்டுகளாகச் சிறந்து விளங்கிய சோழப்பேரரசு தன் காலத்தில் சிற்றரசாகும் அவலம் ஏற்பட்டிருக்குமா என்று நினைத்தால் அவன் நெஞ்சு கனக்கிறது.

வலிமை மிக்க பாண்டியனை தன் பொருட்டுப் பகைத்துக்கொள்ளப் போசளன் நரசிம்மன் விரும்பவில்லை என்பதை எண்ணினால், ‘அற்ற குளத்தின் அருநீர்ப் பறவை போல் உற்றுழித் தீர்வார் உறவல்லர்’ என்ற ஔவையின் பாட்டுதான் நினைவுக்கு வருகிறது.

“வாரும் குலோத்துங்கரே!” என்று சுந்தரபாண்டியன் அவனை வரவேற்கிறான். அவனது குரலில் பெருமிதம் தொனிக்கிறது. “நாம் மூன்றாம் முறையாகச் சந்திக்கிறோம்!” மூன்றாம் முறையாக எனும்போது அதில் அழுத்தத்துடன் பொருட்செறிவும் கலந்திருப்பதாகக் குலோத்துங்கனுக்குத் தோன்றுகிறது.

சுந்தரபாண்டியன்
சுந்தரபாண்டியன்

மேலும், மாமன்னரே என்றோ, சக்ரவர்த்திகளே என்றோ விளிக்காமல், குலோத்துங்கரே என்று தனக்குக் கீழானவனை விளிப்பதுபோல மீண்டும் மீண்டும் தன் பெயரைச் சொல்லிச் சுந்தரபாண்டியன் (மாறவர்மன் சுந்தரபாண்டியன் என்பதைச் சுருக்கி இனி சுந்தரபாண்டியன் என்றே குறிப்பிடலாம்) அழைப்பது சாட்டையடியாக விழுகிறது.

அவனது முகபாவம் மாறுவதைக் கண்டு தனக்குள் மகிழ்ந்த சுந்தரபாண்டியன், முகத்தில் எந்தவொரு உணர்வையும் காட்டாது, “முதன்முறை எக்காரணத்திற்காக நாம் சந்தித்தோமோ, அதே காரணத்திற்காகத்தான் இப்போதும் சந்திக்கிறோம். ஆனால், இடம்தான் மாறியுள்ளது.  அன்று நீவிர் எமக்கு மதுரையை அளித்தீர். இன்று யாம் உமக்குச் சோழநாட்டைத் திரும்ப அளிக்கிறோம். அன்று சமநிலையற்ற ஒரு வாளை எமக்கு அளித்தீர். அந்த வாளைச் சமநிலைப்படுத்தி, அதைச் சுழற்றியே உமது சோழநாட்டை யாம் கைப்பற்றினோம். உமது உயிர் இருக்கும் வரை பாண்டிநாட்டிற்கு எதிராக வாளெடுக்க மாட்டோம் என்று நீரும், உமது வழித்தோன்றல்களும் பாண்டிநாட்டுக்கு திறை செலுத்துவீர்களென்றும், எந்த வாளால் நீர் இதுவரை சோழப்பேரரசை கோலோச்சினீரோ, அந்த வீரவாளின் மீது உறுதி எடுத்து, அதை எமக்குக் காணிக்கையாக்கி, உமது சோழநாட்டைத் திரும்பப் பெற்றுக்கொள்வீராக!” என்று அறிவிக்கிறான்.

அவனது குரலில் பெருமிதம் இருந்தாலும், எகத்தாளமோ, ஏளனமோ இல்லாததைக் கவனிக்கிறான் குலோத்துங்கன். அவனது கண்கள் போசளன் நரசிம்மனின் கண்களை ஒரு கணம் பார்க்கின்றன. நரசிம்மன் மெல்லத் தலையாட்டுகிறான்.

மெல்ல எழுந்திருந்து, தனது உடைவாளை அவிழ்த்து சுந்தரபாண்டியனிடம் நீட்டி, வாளின் மேல் கை வைத்து, உறுதிமொழி உரைக்கிறான்.

எழுந்திருந்து அதைப் பெற்றுக்கொண்ட சுந்தரபாண்டியன் தலையசைக்கவே, அவனருகிலிருந்த செந்தில்நாதன், மணிமகுடமுள்ள ஒரு தங்கத்தட்டை எடுத்து வருகிறான்.  குலோத்துங்கனின் வாளை அத்தட்டில் வைத்துவிட்டு, மணிமகுடத்தை குலோத்துங்கனுக்கு அணிவிக்கிறான்.

“குலோத்துங்கரே! இது பாண்டிநாட்டில் செய்த மணிமகுடம். இதை அணிந்திருப்பதன் மூலம், பாண்டிநாட்டுக்குச் சிற்றரசாக இருக்க இங்கு குழுமியிருக்கும் அவையோர் முன் எனக்கு ஒப்புதலளிக்கிறீர். உம்மிடமிருந்து எமக்குத் திறை வந்துகொண்டிருக்கும் வரையில் உமது நண்பர் எமது நண்பர்; உமது பகைவர் எமது பகைவர். உமது நாட்டுக்கு பாண்டிநாட்டினால் தொல்லையேதும் வராது. எமது நண்பராய் இந்த இருக்கையில் அமருவீர். இந்நிகழ்ச்சியைக் கொண்டாட யாம் ஏற்பாடு செய்திருக்கும் கேளிக்கைகளைக் கண்டு களிப்பீராக!” என்று பெருந்தன்மையுடன் கூறுகிறான்.

குலோத்துங்கன் இருக்கையில் மெல்ல அமர்கிறான். பஞ்சு வைத்துத் தைத்த இருக்கை, முள்ளாக உறுத்துகிறது.

அவனுக்கு எந்தக் கேளிக்கையிலும் மனம் செல்லவில்லை. சோழப்பேரரசு சோழ அரசாக மாறிவிட்டது; அதுவும் அதிக காலம் நிலைக்காது என்று அவன் மனதுக்குள் ஏதோ ஒன்று பெரிதாக ஓலமிடுகிறது. இதயம் கனத்து வலிப்பதையும், உயிர்வாழும் விருப்பம் மெல்ல மெல்லத் தன்னிடமிருந்து நீங்குவதையும் உணர்கிறான்.

சுந்தரபாண்டியனுக்கு அருகிலிருக்கும் ஒரு சிறுவனை கவனிக்கிறான். அச்சிறுவனின் பார்வை அவன் மீது விழுந்து நிலைக்கிறது; அவன் கருத்தைக் கவர்கிறது. அவனையும் அறியாமல் முகத்தில் புன்னகை மலர்கிறது.

அழைத்தவுடன் மிடுக்குடனும், கம்பீரத்துடனும் அவனருகில் வருகிறான் அச்சிறுவன். அதைக் கவனித்தவுடன் பிற்காலத்தில் அச்சிறுவன் மிகச் சிறந்த வீரனாக வரப்போகிறான் என்று படுகிறது. சிறிது நேரம் பேச்சுக்கொடுத்ததில், சிறுவன் சுந்தரபாண்டியனின் புதல்வன் என்றும், அவனுக்கும் சுந்தரபாண்டியன் என்ற பெயரே வைத்திருக்கிறது என்றும் தந்தைக்கு மரியாதை கொடுக்கும் விதத்தில், அவனைச் சடையவர்மன் என்று அழைக்கிறார்கள் என்றும் அறிந்துகொள்கிறான்.

அறிவிப்பாளன் அவையோரின் கவனத்தைத் திருப்பிய பின், சுந்தரபாண்டியன் கையை உயர்த்துகிறான். அவையை அமைதி ஆட்கொள்கிறது.

“எனதருமை பாண்டியக் குடிமக்களே, உடன்பிறப்புகளே, சிறப்பு விருந்தினராக அவையை அலங்கரிக்கும் போசள மன்னர் நரசிம்மரே, காடவ மன்னர் கோப்பெருஞ்சிங்கரே, சோழமன்னர் குலோத்துங்கரே, இதர பிரதானிகளே, படைத்தலைவர்களே! இந்த நன்னாள் பாண்டிநாட்டின் சிறப்பை மிகவும் உயர்த்திய நாள்! எனவே, பாண்டிநாட்டின் சிறப்பை இன்னும் உயர்த்தவிருக்கும் ஓர் அறிவிப்பை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

“தஞ்சையையும், கங்கைகொண்ட சோழபுரத்தையும் கண்டபோது என் கருத்தைக் கவர்ந்தவை அங்கு உயர்ந்து நின்று, சோழநாட்டின் பெருமையைப் பாருக்குப் பறைசாற்றிய கோவில்கள்தாம். அவை கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளாகச் சிறந்து விளங்குகின்றன. நம் மதுரை சொக்கநாதர் கோவில் அவற்றை விடப் பழமையானது. ஆனாலும், இறைவனின் திருவிளையாடல்களாலும், தமிழ்ச்சங்க நூல்களைத் தேர்வு செய்த பொற்றாமரைக் குளத்தினாலும், அம்மை மீனாட்சி பிறந்த ஊர் என்ற பெருமையாலும் சிறந்து நிற்கிறதே தவிர, தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரத்தைபோல, மதுரைக்கு வருவோருக்குப் பல காதங்களுக்கு முன்னரே தன் சிறப்பைப் பறைசாற்றும் தான் இருப்பதைப் பெருமையுடன் அறிவிக்கும் சின்னம் எதுவும் மதுரைக்கு இல்லாமல் இருப்பது ஒரு பெருங்குறைதான்.

“அக்குறையை நீக்கும் வகையில், இதுவரை இல்லாதவொரு சின்னத்தை எழுப்பத் தீர்மானித்திருக்கிறேன். இச்சின்னம் நமது சொக்கநாதர், மீனாட்சி அம்மையின் கோவிலுக்கு நுழைவாயிலாகத் திகழும். தஞ்சைக்கும், கங்கைகொண்ட சோழபுரத்திற்கும் நிகராக அதுவும் உயர்ந்து நிற்கும். இப்படி எழும்பப்போகும் நுழைவாயிலைப் பின்பற்றி ஒவ்வொரு கோவில்களுக்கும் நுழைவாயில்கள் எழப்போவதை என்னால் உணர முடிகிறது” என்று உணர்வுப் பெருக்குடன் அறிவித்த சுந்தரபாண்டியன் தலையசைக்கிறான்.

இருவர் சிவப்புப் பட்டுத்துணி போர்த்திய ஒரு வண்டியைத் தள்ளிக்கொண்டு வருகின்றனர்.  அதைச் சுந்தரபாண்டியனின் அருகில் கொணர்ந்து நிறுத்துகிறார்கள். கம்பீரமாக அவையோரை நோக்குகிறான் சுந்தரபாண்டியன்.

“நான் அறிவித்த நுழைவாயில் இதுதான்!” என்று பகர்ந்தவன், போர்வையின் ஒரு புறத்திலுள்ள குஞ்சம் கட்டிய கயிறை இழுக்கவே, போர்வை ஒரு மூலைக்கு அகன்று கிட்டத்தட்ட ஆளுயரமான நுழைவாயிலை வெளிப்படுத்துகிறது.

யாரும் இதுவரை காணாத நுழைவாயில் அமைப்பு காணப்படுகிறது. நடுவில் பெரியதோர் முகப்பு தென்படுகிறது. முகப்பின் இரு கதவுகளும் கலைநுணுக்கத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. கதவிருக்கும் நிலைக்கு மேலே கோவில் விமானம் போன்ற செவ்வகக் கூம்பான அமைப்பு பாலமாக விளங்குகிறது. அது ஒன்பது அடுக்காகக் கட்டப்பட்டிருகிறது. ஒவ்வோர் அடுக்குக்கும் நடுவில் ஓட்டைகள் உள. ஒவ்வொரு ஓட்டைக்கு இருபுறமும் காவலாளிகள் போன்ற பொம்மைகள் உள்ளன. கூம்பின் உச்சில் பதினொரு சிறு தங்கக் கலசங்கள் காணப்படுகின்றன. இருபுறமும் பூத வடிவம் தென்படுகிறது. ஒவ்வோர் அடுக்கிலும் பலவிதமான சிலைகள் உள்ளன. அனைவர் கருத்தையும் கவர்கிறது அந்த அழகான நுழைவாயில்.

“இந்த நுழைவாயில் கிட்டத்தட்ட நூறு முழ உயரமாகக் கட்டப்படும். மதுரை இங்குதான் இருக்கிறது என்று வரும் அனைவரையும் இது வரவேற்கும். கோவிலுக்கு நுழைவாயிலாக இருப்பதால், விமானம் என்று வழங்கப்படாது கோபுரம் என்றே அழைக்கப்படும். கோவில் கோபுரங்களிலேயே இது பெரிதாக இருக்கும் என்பதாலும், இங்குதான் கோவில் உள்ளது என்று நிமிர்ந்து நின்று அறிவிப்பதாலும் கோவிலின் தலைமை நுழைவாயிலாக இருக்கப்போவதாலும் இராஜகோபுரம் என வழங்கப்படும். சொக்கநாதர்-மீனாட்சி அம்மை கோவிலுக்குக் கிழக்கு வாயிலாக இது அமையும்!” என்று பகர்ந்துவிட்டு அமர்ந்துகொள்கிறான்.

அனைவரும் ஆவலுடன் அந்த இராஜகோபுரத்தின் வடிவமைப்பைக் கண்ணுற்று வியக்கின்றனர். சுந்தரபாண்டியனின் முகத்தில் புன்னகை தவழ்கிறது. அது நுழைவாயில் மட்டும் அல்ல என்பதும், மதுரையின் காவலுக்கு ஒரு அமைப்பாகவும் விளங்கப்போகிறது, அதன் அனைத்து அடுக்குகளிலும் வீரர்கள் நிறுத்தப்படுவார்கள், அவர்கள் மதுரையை நோக்கிவரும் எதையும் முன்பே கண்டுகொள்ள வழிவகுப்பதால், காவல் கோபுரமாகவும் அது அமையும் என்பதைத் தன் மனதிற்குள் நிலைநிறுத்துகிறான்.

அரசனுக்கு உதவியாகவும், நகருக்குக் காவலாகவும் நிற்கப்போகும் இதை இராஜகோபுரம் என அழைப்பதும் மிகவும் பொருத்தமானதே என நினைக்கும்போது அவனுள் மகிழ்வு கிளைக்கிறது.

“இனி பாண்டிநாடு ஒருபோதும் சோழநாட்டுக்குப் பணியப்போவதில்லை. பேரரசாவது திண்ணம். அதற்கு முதல் அடிக்கல்லே இந்த நுழைவாயில்!” என்ற முடிவுக்கு வருகிறான்.

தான் தொடங்கிவைக்கும் இந்த இராஜகோபுரப் பணி தமிழ்நாடு மட்டுமல்லாது, ஆந்திரம், கருநாட்டுக் கோவில்களிலும் தொடரும், தென்னாட்டுக் கோவில்கள் என்றால் இராஜகோபுரங்கள் இல்லாது இருக்கா என்ற நிலை உண்டாகும், தான் சூட்டிய இராஜகோபுரம் என்ற பெயரே அவற்றுக்கும் நிலைத்து நிற்கும் என அறிய வாய்ப்பு இல்லைதான்.

அப்படிப்பட்ட ஒரு சிறந்த மரபைப் பாண்டியனான தான் தொடங்குகிறோம் என்பதை முன்கூட்டியே அறிய முடிந்திருந்தால் அவனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி இன்னும் பல்லாயிரம் மடங்கு பெருகியிருக்கும் அல்லவா!

பாண்டிநாட்டில் ஒரு சிறிய வீடு

விஜய, வைகாசி 14 - மே 15, 1233

பொசுக்கும் வெய்யிலையும் பொருட்படுத்தாது வேகமாக நடக்கிறார் நீலகண்ட தீட்சிதர்.  அவருடன் நடந்துவரும் ஒரு பாண்டிநாட்டு இளைஞன், “ஐயா, இவ்வளவு விரைவாக நடக்கவேண்டிய தேவை இல்லையே! அதுவும் இக்கடும் வெய்யிலில் நடந்தால் களைத்துப்-போகுமே! நம்மிடமிருக்கும் தண்ணீர்கூடத் தீர்ந்துவிட்டதே! நாம் செல்லவேண்டிய சிற்றூர் இன்னும் நான்கு கல் தொலைவில் அல்லவா இருக்கிறது. பாருங்கள், தங்களுக்கும் எப்படி மூச்சு வாங்குகிறது! தங்களுக்கு ஏதாவது ஆகிவிடால் நான் எப்படி மன்னருக்குப் பதில் சொல்வேன்? சிறிது நேரமாவது இந்த மர நிழலில் சற்று இளைப்பாறுங்கள்” என மிகப்பரிவுடன் உரைக்கிறான்.

அவனை மதிக்கும் வகையில் மர நிழலில் நிற்கிறார் நீலகண்ட தீட்சிதர். அவருடைய மேலாடை பாதிக்கு மேல் வியர்வையால் தொப்பலாக நனைந்திருக்கிறது. உலர்ந்த பகுதியால் வியர்வையைத் துடைத்தவர், இடுப்பில் செருகியிருக்கும் பனையோலை விசிறியால் சற்று விசிறிக்கொள்கிறார். அவரிடமிருந்து விசிறியை வாங்கி அவருக்கு நன்றாகக் காற்று வருமாறு விசிறுகிறான் அந்த இளைஞன், மாறவர்மன் சுந்தரபாண்டியனின் மெய்காப்பாளன் செந்தில்நாதனின் இளைய மகன் சின்ன வீரப்பன்.

தீட்சிதருக்கு எழுபத்தி மூன்று வயதாகிறது. நீண்ட வெண்ணிறத் தாடி அவருக்குக் கம்பீரத்தைத் தந்து அவரது முதுமையை உறுதிப்படுத்துகிறது. பனிவண்ணத் தலைமுடியைச் சுற்றி மேலே முடிந்து, உருத்திராட்ச மாலையைச் சுற்றியிருக்கிறார். இருந்தபோதிலும், ஒழுக்கமான பழக்க வழக்கத்தாலும், தினமும் செய்யும் யோகாசனப் பயிற்சியும் அவரது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. ஆகவே, அந்த வெய்யிலிலும் அவர்கள் வந்த மாட்டுவண்டி பழுதடைந்தும், அவரால் ஆறு கல் தூரம் நடந்தே வர முடிந்திருக்கிறது. மேலும் நான்கு கல் சென்றால் கவியரசு கம்பர் குடியிருக்கும் சிறிய கிராமத்தை அடைந்துவிடலாம்.  இருப்பினும், தீட்சிதருக்கு எந்த உடல்நலக் குறைவும் வந்துவிடக்கூடாது என்ற கவலையில்தான் அவரை இளைப்பறுமாறு வேண்டிக்கொண்டிருக்கிறான் சின்ன வீரப்பன்.

இளந்தென்றல் வீசுகிறது. தீட்சிதரின் மனம் பின்னோக்கிச் செல்கிறது…

…பாண்டிநாட்டுக்குச் சிற்றரசாகச் சோழநாடு ஆகிய ஒரே ஆண்டுக்குள் மனம் வெதும்பி இறைவனடி சேர்ந்து விட்டார் மூன்றாம் குலோத்துங்க மன்னர். அவர் இறந்ததும் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் கை வலுத்தது. அவனுடன் கூட்டுச் சேர்ந்த காடவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன், சேந்தமங்கலத்தையும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளையும் கைவசப்படுத்திக் கொண்டான். சில ஆண்டுகள் சென்றதும் சோழ மன்னனான மூன்றாம் இராஜராஜன் திறை செலுத்த மறுத்துச் சுந்தரபாண்டியனின் நண்பனான கோப்பெருஞ்சிங்கனுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தினான்.

தெள்ளாற்றுப் போரில் இராஜராஜனை வென்று வெற்றிவாகை சூடிய கோப்பெருஞ்சிங்கன், அவனையும் அவனது மந்திரிகளையும் சிறைப்பிடித்தான்.31 சோழப் பேரரசை முதன் முதல் நிலைநாட்டிய இராஜராஜ சக்ரவர்த்தியின் பெயரைச் சூடிக்கொண்டிருந்தவன் சிறைப்பட்டது, சோழநாட்டிற்கு விழுந்த மரண அடி என்பதை உணர்ந்துகொண்டார் நீலகண்ட தீட்சிதர்.

இந்நிலையில் சுந்தரபாண்டியனிடமிருந்து திடுதிப்பென அவருக்கு ஒரு நாள் அழைப்பு வந்தது.  தமிழ்க் கவிஞர்களை இனம் கண்டுகொண்டு, அவர்களை ஆதரிக்கும் பணியை அவரிடம் ஒப்படைத்திருப்பதாகவும், உடனே மதுரைக்கு வரும்படியும் மடல் தெரிவித்தது.

-----------------------------

[31. ‘தென்னிந்திய வரலாறு (History of South India)’ - கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி]

இத்தனை காலம் கழித்துத் தன் நினைவு சுந்தரபாண்டியனுக்கு எப்படி வந்தது என்று எண்ணிய தீட்சிதர் மனத்தில், ‘பரம்பரை பரம்பரையாகச் சோழருக்குப் பணியாற்றிய தாங்கள் இனிமேல் எதிரியான பாண்டியருக்குப் பணியாற்றப்போவதா’ என்ற கேள்வியும் எழுந்தது.

சிறைப்பிடிக்கப்பட்ட இராஜராஜன் இனி தமிழுக்கு என்ன தொண்டாற்ற இயலும் என்ற கேள்வியும் தொடர்ந்து தோன்றியது. தமிழ்ப்பணி தொடர வேண்டும், அது சோழநாட்டு எல்லையையும் கடந்து செல்ல வேண்டும் என அவரது உள்ளுணர்வு உணர்த்தியது. ஆகவே, பாண்டியன் ஆணைப்படி நடப்பது, சோழர் மேற்கோண்ட தமிழ்ப்பணியைத் தொடருவது என்றும், அது சோழநாட்டுக்குச் செய்யும் துரோகம் அல்ல என்றும் அவர் மனம் அறுதியிட்டு அறிவுறுத்தியது.

அதனால், சுந்தரபாண்டியனின் அழைப்பை ஏற்றுக்கொண்டு, தில்லைக்கும் மதுரைக்குமாக மாறிமாறிச் சென்று தமிழ்க் கவிஞர்களைப் போற்றி வளர்க்கும் கடமையை மேற்கொண்டார்.

இந்நிலையில்தான் அவர் மதுரையிலிருக்கும்போது கவியரசர் கம்பரிடமிருந்து ஒரு மடல் தில்லைக்குச் சென்று சுற்றிவிட்டு மதுரை வந்தது. அதில் தமது உடல் நலம் மிகவும் குன்றியிருப்பதாகவும், முடிந்தால் தம்மை ஒருமுறை உடனே வந்து பார்த்துப் போகுமாறும் மடல் தெரிவித்தது.

இருப்புக்கொள்ள இயலாமல், உடனே கிளம்பினார் தீட்சிதர். சின்ன வீரப்பனை அவருக்குத் துணையாக அனுப்பி வைத்தான் சுந்தரபாண்டியன்.

கம்பரை நினைத்தால்தான் தீட்சிதருக்கு நெஞ்சு கனத்தது. எப்படிப்பட்ட மகாகவி! இளமைக் கோளாறால் சோழமன்னர் மகளைக் காதலித்தான் என்பதற்காக கம்பரின் மகனைக் கவிதைப் போட்டிக்கு அழைத்து, அதில் அவன் தோல்வியுறவே, அவனுக்கு மரண தண்டனை விதித்து விட்டனர். கம்பர் எவ்வளவு போராடியும் பயனில்லை. வெந்த புண்ணில் வேலைச் செலுத்துவது போல கம்பரின் அரசவைக் கவிஞர் பதவியும் பறிபோயிற்று.

அதில் மனமுடைந்த கம்பரைத்தான் உறையூருக்கு அழைத்துச் சென்றார் தீட்சிதர். அச்சமயம்தான் சுந்தரபாண்டியன் உறையூரின் மீது படையெடுத்துச் சூறையாடி அழித்தான்.  அங்குதான் அவனை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டியது.

மகனின் இழப்பையும், தனக்கு ஏற்பட்ட சிறுமையையும் தாங்க இயலாத கம்பர், சோழநாட்டிலேயே இருக்க விரும்பவில்லை. அத்துடன், கவி இயற்றுவதிலும் அவருக்கு நாட்டமில்லாது போயிற்று.

இதை அறிந்த சுந்தரபாண்டியன் அவரை பாண்டிநாட்டுக்குக் குடிபெயரும்படி பரிந்துரை செய்தான். கம்பரும் அதை ஏற்றார்.

மதுரைக்குக் கிழக்கில் இருபத்தைந்து கல் தொலைவிலுள்ள சிறிய கிராமத்தில் தன் வாழ்வைக் கழித்து வந்தார் கவிப் பேரரசர் கம்பர்.32

கோப்பெருஞ்சோழனுக்கும் பிசிராந்தையாருக்கும் இடையில் நிலவிய நட்பைப் போலத்தான் கம்பருக்கும் நீலகண்ட தீட்சிதருக்கும் இடையில் நட்பு மலர்ந்து வளர்ந்திருந்தது. எனவே, கம்பர் தன்னைப் பார்க்க விரும்புகிறார் என்றறிந்ததும் தீட்சிதருக்கு இருப்புக்கொள்ளவில்லை.  உடனே நண்பரைச் சந்திக்கக் கிளம்பிவிட்டார்…

…கண்களைத் திறந்த தீட்சிதரை, “புறப்படலாமா ஐயா?” எனச் சின்ன வீரப்பன் கேட்டதும், அவர் திடுக்கிட்டு உணர்வுக்கு வருகிறார்.

---------------------------------

[32. கம்பர் தன் கடைசிக் காலத்தைச் சிவகங்கைக்கு ஆறு கி.மீ. (நான்கு மைல்) தொலைவிலிருக்கும் நாட்டரசன்கோட்டையில் கழித்தார். அவரது சமாதியும் அங்கு உளது. ஒவ்வோர் ஆண்டும் கம்பன் திருநாள் ஒரு நாள் நாட்டரசன்கோட்டையில் நடத்தப்படுகிறது.]

“கிளம்பலாமப்பா. வெகுநேரம் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டேனா?” என்று வினவியருக்கு, “களைப்பில் கண்ணயர்ந்திருந்தீர்கள் ஐயா. உங்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம் எனக் காத்திருந்தேன்” எனப் பணிவாக பதில் வருகிறது.

தீட்சிதர் எழுந்துகொள்கிறார். இருவரும் நடக்கத் தொடங்குகின்றனர். கம்பரின் கிராமத்தை அடைந்து அவர் வீட்டை அடைவதற்குள் பொழுது சாய்கிறது.

சின்ன வீரப்பன் வீட்டுக் கதவைத் தட்டுகிறான். பதில் வராதிருக்கவே, மீண்டும் பலமாகத் தட்டுகிறான்.

“யாரது?“ என மெல்லிய குரலில் பதில் வருகிறது.

“கவிஞர் ஐயாவைத் தேடி வந்திருக்கிறோம்.”

“என்னைத் தேடியா?  குரல் புதிதாக உள்ளதே! தாளிடப்படவில்லை. திறந்துகொண்டு வருக.”

கம்பரின் குரலை இனம் கண்டுகொண்ட தீட்சிதர் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார். உள்ளே நுழைந்த அவர்கள் கண்ட காட்சி இருவரின் மனத்தையும் உருக்கிப் பிழிகிறது.

கிழிந்ததோர் பாயில், நரைத்த தாடி மீசையுடன், பஞ்சடைந்து குழி விழுந்த கண்களுடன் கிழித்துப்போட்ட நாராகப் படுத்திருக்கும், எலும்புக்கூட்டுக்குத் தோல் போர்த்தியதைப் போலிருக்கும் அந்த உருவம்தான் கம்பீரமாக விளங்கிய கவிச்சக்ரவர்த்தி கம்பரா? மனநோய் ஒரு மனிதரை இப்படியா உருக்குலைத்துவிடும்?

கம்பரின் தலைமாட்டில் தூண்டாவிளக்கு ஒன்று எரிந்து மெல்லிய ஒளியைப் பரப்புகிறது.  அருகில் மூடப்படாத கலயத்தில் தண்ணீர் பாதி நிரம்பியிருப்பது தெரிகிறது. அவர் கண்களில் கசிந்துகொண்டிருக்கும் நீரை இரண்டு ஈக்கள் மொய்க்கின்றன. அவற்றை விரட்டக்கூடத் திராணியின்றி படுத்திருக்கிறார்.

“கவிஞரே! உமக்கா இந்த நிலைமை? உமக்குத் துணையாக இங்கு யாருமே இல்லையா? உம்மைக் கவனித்துக்கொள்ளப் பாண்டிய மன்னர் நியமித்தவர் எங்கே? திருவரங்கத்தில் இராம காதையை அரங்கேற்றிய நீரா இப்படி யாருமில்லாது தனித்துத் துன்புற்றுப் படுத்திருக்கிறீர்?”

தீட்சிதருக்கு அதற்கு மேல் சொற்கள் எழவில்லை. நாக்குத் தழுதழுத்துத் தொண்டை கம்முகிறது.

கம்பரின் அருகில் மண்டியிட்டு அமருகிறார்.

அவர் கைகளை மெல்லப் பற்றிக்கொள்கிரார் கம்பர்.

மெலிதாக, “யார்? தீட்சிதர் அவர்களா?” என்று கேட்கும் குரலில் நண்பரை இனம் கண்டுகொண்ட மகிழ்ச்சியும் கலந்திருக்கிறது.

“வந்துவிட்டீர்களா ஐயா! எங்கே உம்மைப் பார்க்காமலேயே இவ்வுலகை விட்டுப் போய்விடுவேனோ என இனி நான் கவலையுற வேண்டியதில்லை” இதைப் பேசுவதற்குள் கம்பருக்கு மூச்சு வாங்கிவிடுகிறது.

“எவ்வளவு பணம் கொடுத்தாலும், அல்லும் பகலும் இந்த வியாதிக்காரன் அருகில் யாரய்யா இருப்பார்கள்? எனக்கு வந்துள்ள நோய் தங்களுக்கும் தொற்றிக்கொள்ளுமோ என அச்சம்.  என்னை உருக்குவது மனநோய்தான் என்று அறியாத பைத்தியக்காரர்கள்!” சிரிக்க முயலும் கம்பரை இருமல் குலுக்கி எடுக்கிறது.

அவரது தலையை தீட்சிதர் தன் மடியில் எடுத்துத் தாங்கி வைத்துக்கொள்கிறார். தன் மேலாடையைத் தண்ணீரில் நனைத்துக் கம்பரின் முகத்தைத் துடைக்கிறார்.

தீட்சிதர் - கம்பர்
தீட்சிதர் - கம்பர்

குறிப்பறிந்த சின்ன வீரப்பன் குவளையில் தண்ணீர் எடுத்துக் கொடுக்கிறான். தீட்சிதர் கம்பரின் வாயில் சிறிது சிறிதாக நீரை ஊற்றுகிறார். தண்ணீர் அருந்திய கம்பர், சற்று கண்களை மூடிக்கொள்கிறார்.

“வீரப்பா, வீட்டில் உணவு ஏதாவது இருக்கிறதா என்று பார்!” என்று தீட்சிதர் சொன்னதும் உள்ளே சென்று பார்த்தவன் உதட்டைப் பிதுக்குகிறான்.

“கவலைப்படாதீர்கள் ஐயா. கோவிலிலிருந்து சிறிது நேரத்தில் பிரசாதம் கொணர்வார்கள்.  அதில் ஒரு கவளம் உண்டு இன்றிரவைப் போக்கிவிடுவேன்” என்று சமாதானப்படுத்தும் குரலில் கூறிய கம்பர், “வீட்டுக்கு விருந்தாக வந்திருக்கிறீர்கள். உங்களை எழுந்து உபசரிக்கும் நிலையில்கூட இல்லாது போய்விட்டேனே!” என்று வருந்துகிறார்.

“உம்மை கவனிக்க ஆள் இல்லையே என்று நான் கவலையுற, எம்மை கவனிக்க இயலவில்லையே என்று வருந்துகிறீரே! மருத்துவர் அடிக்கடி உம்மை வந்து பார்க்கிறாரா?   உம் நிலையைப் பார்த்தால் யாருமே உமது உடல்நிலை குறித்துக் கவலையுறுவதாகத் தெரியவில்லை” என்ற தீட்சிதர், வீரப்பன் பக்கம் திரும்பி, “கோவில் அர்ச்சகர் வீட்டிற்குச் சென்று, உடனே கவிஞருக்கு நொய்யரிசிக் கஞ்சியும், காய்ச்சிய நீரும் வாங்கி வா. அப்படியே நமக்கு இரவு உணவுக்காகக் கோவில் மடைப்பள்ளியில் ஏற்பாடு செய்யச்சொல்லு. நான் அதுவரை இங்கிருந்து கவிஞரைக் கவனித்துக் கொள்கிறேன். அப்படியே ஒரு மருத்துவரையும் கையோடு அழைத்து வா” என்று அடுக்கடுக்காக ஆணைகளைப் பிறப்பிக்கிறார்.

அவசர நிலையைப் புரிந்துகொண்ட சின்ன வீரப்பன் உடனே கிளம்புகிறான்.

தீட்சிதர் கண்களில் நிரம்பிய நீர், அவர் பார்வையை மறைக்கிறது. அவரது கை விரல்களைக் கம்பர் மெல்ல அழுத்தவே, மறு கையால் கண்களைத் துடைத்துக்கொண்டு, “சொல்லும், கவிஞரே! இங்கு இப்படித் தன்னந்தனியாகப் பதினாறு வருடங்கள் வனவாசம் வாழ்ந்திருக்கத்தான் வேண்டுமா? பாண்டிய மன்னரின் அரசவைக்குச் சென்று, அங்கு உமது கவித்திறனைக் காட்டிச் சீரும் சிறப்புடன் வாழ்ந்திருந்தால் குறைந்தா போய்விட்டிருக்கும்?   யாரும் கவனிக்காத நிலையில், இப்படித் தனியராக அவதியுற வேண்டிய கட்டாயம்தான் என்ன?” குரல் தழுதழுக்கிறது.

தொண்டையை மெல்லச் செருமிக் கொள்கிறார் கம்பர்.

“ஐயா, நடந்த கதையை ஏன் பேச வேண்டும்? வாழவேண்டிய வயதில் என் மகனின் உயிர் அநியாயமாகப் பறிக்கப்பட்டதை என்னால் மறக்கவே முடியவில்லை. அந்தப் பாவிமகனிடம் கெஞ்சினேன். ‘மன்னன் மகளிடம் உனக்கு நாட்டம் வேண்டாமடா! நாம் அவர்களை அண்டிப் பிழைப்பவர்கள். மன்னர்கள் நெருப்பைப் போன்றவர், அருகில் செல்லக்கூடாது. மன்னன் மகள் நெருப்புப் பொறி! உன் மேல் விழுந்தால் நீ பற்றி எரிந்துதான் போவாயடா!’ என்று இறைஞ்சினேன். கேட்கவில்லை அந்தப் பாவி. எரிந்தே போனான்.

“மாமன்னரிடம் மன்றாடினேன், சிரச்சேதம் செய்ய வேண்டாம், ஆயுள் தண்டனை கொடுங்கள், கவிதையே புனையக்கூடாது என்றும் கட்டளையிடுங்கள். இல்லாவிடில் நாடு கடத்தி விடுங்கள். அவனுடன் நானும் சென்று விடுகிறேன் என்று அழுது கெஞ்சினேன். மாமன்னர் எதையும் காதில் வாங்கவில்லை. தாங்களும் அருகிலில்லை. அவனது துண்டிக்கப்பட்ட தலையை எடுத்து, முண்டமான உடலுடன் சேர்த்துவைத்து, அவனுக்கு ஈமச்சடங்கு நடத்தினேன் என்பது தாங்கள் அறியாததல்ல. அவனுடன் என்னுள் இருந்த கவிதை உணர்வும் செத்துவிட்டது ஐயா. எனக்குச் சோழநாட்டில் வாழவோ, யார் முகத்திலும் விழிக்கவோ, பெருவாழ்வு வாழவே விருப்பமில்லை. பாழும் இறப்புதான் விரைவில் வரமாட்டேன் என்கிறது.”

குலுக்கியெடுக்கும் இருமல், கம்பரின் உடலைத் தூக்கித் தூக்கிப் போடுகிறது. அவரது கடைவாயிலிருந்து இரத்தம் ஒழுகித் தாடியைச் சிவப்பாக்குகிறது.

தன் மேலாடையால் இரத்தத்தைத் துடைக்கிறார் தீட்சிதர். கம்பரின் கண்கள் மேலே சொருகிக் கொள்வதைப் பார்த்ததும் அவர் மனம் பதறுகிறது.

“கவிஞரே, பதற்றப்படாதீர். நடக்கக்கூடாதது நடந்துவிட்டது. தெய்வீகக் கவிஞரான உமது மகனின் உயிரைப் பறித்த சோழ மன்னர் தம் சாம்ராஜ்ஜியத்தையே இழந்து விரட்டப்பட்ட கதையையும் அறிவீரல்லவா? இறைவன் அவரைத் தண்டித்துவிட்டான். மாமன்னர் குறுநிலமன்னராகி, இறைவனடியும் சேர்ந்துவிட்டார்” கம்பருக்கு சமாதானம் கூறுகிறார் தீட்சிதர்.

சிறிது நேரம் கண்களை மூடிக்கொண்டிருந்த கம்பர், மெல்லக் கண்களைத் திறக்கிறார்.

“மன்னர் எதை இழந்தால் எனக்கென்ன ஐயா! இறந்த என் மகன் திரும்பி வரவா போகிறான்? அவனுக்கு இழைத்த அநீதிதான் நியாயமாகி விடுமா? பதினெட்டே பிராயமான பாலகனய்யா அவன்! நல்லதெது, கெட்டதெது என்று அறியாத பருவம். பொங்கிவரும் இளமை, சூடான இரத்தம், பருவக் கோளாறு - இவையெல்லாம் சேர்ந்து, தன் கவிதையைக் கண்டு மயங்கிய மன்னர் மகளைக் காதலிக்கத் தூண்டிவிட்டது. எட்டாக்கனி கிட்டாதென்றோ, அதன் மீது இச்சை வைப்பது தவறென்றோ தெரியவில்லை. கவிபாடும் திறமை கொடுத்த கர்வம், மன்னரிடமே துடுக்காகவும் நடந்துகொள்ள வைத்தது. காதற்சுவை எதுவுமின்றி நூறு கவிதைகள் இயற்ற வேண்டும் என்ற நிபந்தனையை உயிரை பணயம் வைத்து நிறைவேற்ற முற்படவும் செய்தது.

“காதலியிடம் கொண்ட நம்பிக்கை, கவிதைகளை எண்ணும் பொறுப்பையும் அவளிடமே கொடுத்தது. எண்ணும் கணக்கில் பிழை இழைத்து, தொண்ணூற்று ஒன்பது கவிதைகள் முடிந்தவுடன் அவைக்கு வந்த காதலியான மன்னன் மகளைக் கண்டதும் காதற்சுவை சொட்டும் கவிதையையும் உடனே என் அசட்டுப் பிள்ளையைப் பாட வைத்தது. அதற்காக?  அச்சிறுவனுக்குக் கொடுக்கப்பட்ட மரண தண்டனை எந்த விதத்தில் நியாயம்? கணக்கில் பிழை என்று சொன்னால் இன்னும் நூறு கவிதைமழை பொழிந்திருக்க மாட்டானா?”33

மீண்டும் இடைவிடாத இருமல் கம்பரின் ஆற்றாமைப் புலம்பலை நிறுத்தி, அவர் வாயிலும், மூக்கிலும் குருதியை வரவழைக்கிறது.

மேல் துண்டால் இரத்தத்தை ஒற்றியெடுத்த தீட்சிதர், “கவிஞரே, அமைதியாக இரும். பேசும் நிலையில் நீர் இல்லை. ஓய்வெடுத்துக் கொள்ளும். சில நாள்கள் இங்கு தங்கியிருந்து உம்மை மருத்துவரிடம் காண்பித்துத் தக்க சிகிச்சையைத் தொடங்கிவைத்துவிட்டுப் பாண்டிய மன்னரைச் சந்திக்க மதுரை செல்கிறேன்” என்று கம்பரை அமைதிப்படுத்துகிறார்.

அவரது பரிவு, கம்பரை அமைதிகொள்ள வைக்கிறது. தீட்சிதரின் வலது கையை இறுகப் பற்றிக்கொள்கிறார்.

“ஐயா, மருத்துவர் எனக்கு நாள் குறித்துவிட்டார். தங்களைப் பார்க்கத்தான் இதுவரை நான் உயிரைக் கையில் பிடித்துவைத்திருக்கிறேன். தங்களைக் கண்டதும் என் மனம் நிறைந்துள்ளது. தாங்கள் இங்கிருக்கும்போதே என் உயிர் போகுமாறு அன்னை கலைவாணியை வேண்டிக்கொண்டிருக்கிறேன். நான் தகவல் சொல்லி அனுப்பியதும் ஓடோடி வந்துவிட்டீர்களே! சிறிதும் அருவருப்பில்லாது என் இரத்தத்தைத் தமது மேலாடையால் வழித்து எடுக்கும் பரிவு எவருக்கு ஐயா வரும்? நான் தங்கள் மடியில் தலை வைத்துச் சிறிது நேரம் உறங்குகிறேன். அதற்கு மட்டும் அனுமதி கொடுங்கள்!” கவிஞரின் குரல் இறைஞ்சுகின்றது.

“தாராளமாக கவிஞரே! நிம்மதியாக உறங்கும். இதற்கா அனுமதி கேட்பது? நானல்லவா பெரும்பேறு பெற்றவன், நீர் இப்படிக் கேட்பதற்கு” என்று கம்மிய குரலில் பதிலிருக்கிறார் தீட்சிதர்.

இரத்தம் படிந்திருந்த தன் மேலாடையைச் சற்றுத் தள்ளிப் போட்டுவிட்டுக் கம்பரின் தலையைத் தன் மடியில் வைத்துக்கொள்கிறார். கம்பரின் முகம் மலர்கிறது. நிம்மதியாகக் கண்களை மூடிக்கொள்கிறார். அவரது வலக்கை தீட்சிதரின் வலது கையைப் பிடித்தவாறே இருக்கிறது. தாயின் மடியில் தலைவைத்துப் படுத்திருக்கும் குழந்தையைப் போன்று அமைதி தவழும் அவர் முகத்தைப் பரிவுடன் பார்க்கிறார் தீட்சிதர். கவலைக்கான அறிகுறி ஏதும் கம்பரின் முகத்தில் இல்லை. உதடுகளில் இலேசான புன்னகை தவழ்கின்றது.

--------------------------------------

[33. கம்பரின் மகன், மன்னன் மகளைக் காதலித்ததாகவும், அவள் கரம் பிடிக்க வேண்டி, காதற்சுவை கலவாத நூறு கவிதைகளை இறைவன் மீது இயற்றிப் பாடவேண்டும் என்று மன்னர் விதித்த நிபந்தனையை ஏற்று, கணக்குப் பிழையால் நூறாவது பாட்டைச் சிருங்காரரசம் சொட்டப் பாடியதும், தோல்வியடைந்ததாக முடிவுகட்டி, அவன் சிரச்சேதம் செய்யப்பட்டதாக ஒரு கதை சொல்லப்படுகிறது. இதற்கு வரலாற்றுச் சான்று எதுவுமில்லை.]

வாயில் கதவு திறக்கும் ஒலி கேட்டு தலையைத் திருப்புகிறார் தீட்சிதர். சின்ன வீரப்பன் மருத்துவருடன் உள்ளே நுழைகிறான்.

அருகில் வந்து அமர்ந்து, இரத்தம் தோய்ந்த மேலாடையைக் காட்டி, மருத்துவர் கேட்ட கேள்விக்கு மிகுந்த வருத்தத்துடன் ஒன்றும் பேசாமல் கண்களால் மெல்ல பதிலிறுத்த தீட்சிதரிடமிருந்து கேவல் உடைத்துக் கிளம்புகிறது.

“கவிஞர் மீளா உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டார் மருத்துவரே! இனி, நீர் செய்வதற்கு ஒன்றும் இல்லை!” என்று வறண்ட குரலில் பதில் சொல்கிறார்.34

---------------------------------

[34. கம்பர் இறந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் தேதி கற்பனையே. இதற்குச் சான்று எதுவும் இல்லை.]

***

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com