வங்கக் கடல்
வங்கக் கடல்

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -நான்காம் பாகம்-அத்தியாயம் 13

வங்கக் கடல், தமிழ்நாடு அருகில் 

விஜய, மாசி 10 - பிப்ரவரி 10, 1294 

மிகுந்த வருத்தத்துடன் தமிழ்நாட்டின் கடற்கரை தன் கண்களிலிருந்து சிறிது சிறிதாக மறைவதைப் பார்க்கிறான் மார்க்கோ போலோ. தனது கண்கள் தன்னையும் அறியாமல் பனிப்பதையும் அவனால் உணர முடிகிறது. 

மார்க்கோ போலோ
மார்க்கோ போலோ

கடந்த மூன்று மாதங்கள்தாம் எவ்வளவு விரைவாகக் கழிந்துவிட்டன? அதிலும், அவனுக்குத் தமிழக வரலாற்றை விரிவாகச் சொல்லிய சதாசிவ சாஸ்திரியையும், அதை மொழிமாற்றம் செய்த அப்துல்லாவையும் அவனால் மறக்க இயலவில்லை. 

தனக்குத் தமிழ்நாட்டு வரலாற்றை எடுத்துச் சொல்லவும், தனது கேள்விகள் அனைத்துக்கும் பதிலளிக்கவும், நாற்பத்தி மூன்று வயதான அந்த மறையவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று பாண்டிய மாமன்னர் குலசேகர பாண்டியன் சொன்னதைப் பெரிய ராவுத்தர் தக்கியுத்தான் அப்துல் ரகுமான் தனக்கு மொழிபெயர்த்துச் சொன்னது அவன் காதுகளில் ஒலிக்கிறது… 

…அந்த மறையவரின் பெயர் சதாசிவ சாஸ்திரி என்றும், அவர் சோழ நாட்டவர் என்றும் தெரிவித்தார் பெரிய ராவுத்தர். 

வெளிநாட்டு யவனப் பயணி வருகிறார் எனத் தெரிந்ததும், தமிழ்நாட்டின் வரலாறு அறிந்த சதாசிவ சாஸ்திரியை குலசேகரபாண்டியன் கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து வரவழைத்தாராம். 

சதாசிவ சாஸ்திரியின் தோற்றம் மார்க்கோ போலோவுக்கு அவர் மீது அதிக மதிப்பைத் தரவில்லை. 

கட்டுக்குடுமி, பத்துப் பதினைந்து நாளாக மழிக்கப்படாத முகம், சுருக்கங்கள் மிகுந்த, பஞ்சகச்சம் வைத்துக் கட்டப்பட்ட வேட்டி, கழுத்தில் தொங்கும் உருத்திராட்ச மாலை - நெற்றி, கழுத்து, தோள்பட்டைகள், புஜங்கள், முன், முழங்கைகள், மார்பு, வயிறு இவற்றில் ஒளிரும் திருநீற்றுப் பட்டைகள் - இரண்டு தெற்றுப் பற்கள், சற்றுப் பெரிய தொந்தி இவற்றைப் பார்த்து அவனுக்கு சிரிப்புதான் வந்தது. 

ஆனால், ஐந்து மொழிகளை எழுத, படிக்க, பேச அறிந்தவர், வேதங்கள், தமிழ்மறைகள், தமிழ் இலக்கணம் இவற்றைக் கரைத்துக் குடித்தவர் - வேதபாடசாலைகள், தமிழ்ப்பள்ளிகள் நடத்திவருவதோடு தனது மானியத்தில் பெரும் பகுதியை இவற்றுக்குக் கொடையாக அளித்து வருகிறார் என்பதைப் பின்னர் அறிந்துகொண்டதும் அவர் மீது மதிப்பு வளரத் தொடங்கியது… 

…“நாங்கள் செல்வம் ஈட்டுவதற்காகக் கடல்கடந்து செல்கிறோம். அப்படி இருக்கையில் நீங்கள் அரச மானியத்தைக் கொடையாக ஏன் அளிக்கிறீர்கள்?” என்று கேட்டதற்கு, “ஐயா, செல்வத்தைச் சேர்த்துவைத்தால், அதைக் கட்டிக் காக்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் மனம் செல்லும். என்னிடம் அரசரால் ஒப்படைக்கப்பட்டிருக்கும் செல்வம் ஊருணி நீர் போல மக்களுக்குப் பயனளிக்க வேண்டும். ‘தேவைக்கு அதிகமாகச் செல்வம் சேர்ப்பவன் திருடனுக்குச் சமம்’ என்று எனது பாட்டனார் சொல்லிக்கொண்டே இருப்பார். உண்மையான செல்வம் அறிவும், கல்வியும்தான். அதை யார் என்னிடமிருந்து திருட முடியும்?” என்று கேட்டுவிட்டு சதாசிவ சாஸ்திரி கடகடவென்று சிரித்தது, மார்க்கோ போலோவுக்குப் பசுமையாக நினைவுக்கு வருகிறது. 

அடுத்தபடியாக மார்க்கோ போலோ அப்துல்லாவின் கள்ளம் கபடமற்ற முகத்தை நினைவுகூருகிறான். 

நாலரை அடிக்கும் குறைவான உயரமே இருந்தபோதிலும், வாழ்வில் முன்னுக்கு வர வேண்டும் என்ற அவா அவனிடம் எவ்வளவு பெரிதாகக் கொழுந்துவிட்டு எரிகிறது என்று நன்றாகவே தெரிந்திருந்தது. 

“ஐயா, நானும் உங்களுடன் வந்துவிடுகிறேன். இங்கு எனக்கு என்ன இருக்கிறது? மனைவியா, பிள்ளையா, குட்டியா? எனக்கும் உங்கள் ஊரைப் பார்த்த மாதிரி இருக்கும். அப்படியே வழியில் மக்கா சென்று ஹஜ் புனித யாத்திரையையும் முடித்து விடுவேன்” என்று கெஞ்சியதும் நினைவுக்கு வருகிறது. 

அவனுக்கு ஏற்ற பெண்ணைப் பார்த்துவைத்திருப்பதாகவும், வாப்பா விட்டுச் சென்ற வியாபாரத்தில் பங்கு தருவதாகவும் அவனது அண்ணன் அபுபக்கர், அல்லா மீது ஆணையாகச் சொன்ன பிறகே அப்துல்லா அரை மனத்துடன் தமிழ்நாட்டில் இருக்கச் சம்மதித்ததும் மனக்கண் முன்னர் நிழலாக ஓடுகிறது. 

வெவ்வேறு சமயத்தினராக இருந்தும் சதாசிவ சாஸ்திரியும், அப்துல்லாவும் ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நடந்துகொண்டதையும், சதாசிவ சாஸ்திரியின் மனம் வருந்தக்கூடாது என்று அவர் தங்களுடன் இருக்கும்போது, அப்துல்லா மரக்கறி உணவையே உண்டதையும் நினைவில் நிறுத்துகிறான். 

அதுபற்றிக் கேட்டதற்கு, அப்துல்லா சொன்ன பதிலையும் ஞாபகப்படுத்திப் பார்க்கிறான்…  

…”நான் வெறும் மீன் பிடிக்கற ஆளுதான். எங்க வேதமான குரான் கூட எனக்குச் சரியாத் தெரியாது. ஆனா, இவருக்கு வடமொழி வேதமும், தமிழ் வேதமும் தெரியும், எனக்கு ரெண்டு பாஷை தெரிஞ்சா, இவருக்கு அஞ்சு பாஷை தெரியும். உங்களுக்கு இந்த முலுக்கு வரலாத்தை எடுத்துச் சொல்லறதுக்குன்னு பாண்டிய பாதுஷாவே இவரு மேல மதிப்பு வச்சு இவரைத் தரவழைச்சிருக்காருன்னா, தற்குறியான நானு எவ்வளவு மதிப்பு வைக்கணும்? அதுனாலதான் அவருகூட இருக்கறவரைக்கும் கவிச்சம் சாப்பிட வேணாம்னு விட்டேன். 

“வேத்து மதத்துக்காரன்னு என்னை ஒருபோதும் எளக்காரமாப் பார்த்ததில்லே, பேசினதில்லே, நடத்தினதில்லே. எங்க மதத்தைப் பத்தியும் தெரிஞ்சுவச்சுக்கிட்டு இருக்காரு. எனக்குத் தெரியாத விசயம்கூட இவருக்குத் தெரிஞ்சிருக்கு. என்னடா இது, நம்ம மதத்தைப் பத்திக்கூட இவருக்கு இவ்வளவு தெரிஞ்சிருக்கேன்னு எனக்கு இன்னும் மதிப்பு அதிகமாயிருச்சு.  அதுனாலதான் மரியாதை கொடுக்கறேன்…” 

…கடந்த இரண்டரை மாதங்கள் சதாசிவ சாஸ்திரியும், அப்துல்லாவும் தன்னுடன் ஒன்றாகவே எல்லா இடங்களுக்குச் சென்றதையும், அவர் தமிழ்நாட்டு வரலாற்றைத் தனக்கு எடுத்துக்கூறியதையும் ஞாபகத்துக்குக் கொணர்கிறான். 

தான் கிறித்தவன், சாஸ்திரி சைவர், அப்துல்லா இஸ்லாமியன் - இருப்பினும், அவர்களால் எப்படித் தங்கள் சமயத்தைப் பற்றி அமைதியாக ஒருவருக்கொருவர் எடுத்துச்சொல்ல முடிந்தது? 

‘இறைவன் ஒருவனே, அவனை ஞானிகள் பலவாறு எடுத்துரைக்கிறார்கள்; ஆகவே, எந்தவொரு சமயத்தின் மீதும் வெறுப்புப் பாராட்டக் கூடாது; உயர்வு தாழ்வென்று பேசக்கூடாது’ என்று சதாசிவ சாஸ்திரி தனக்குச் சில சமயம் அறிவுரை பகர்ந்ததும் நினைவுக்கு வருகின்றது. அதற்குக் காரணம், மார்க்கோ போலோ ஒருமுறை மற்ற மதங்கள் பொய்யானவை என வாயாடியதே! 

அப்போது அவன் மீது சிறிது சினம் கொண்ட அப்துல்லாவை சாஸ்திரி அடக்கியதும் அவன்முன் நிழலாடுகிறது. அதற்குப் பிறகு மார்க்கோ போலோ மதத்தைப் பற்றி எது கேட்டாலும் அவர் பேச்சை மாற்றிவிட்டதும் அவனுக்குத் தெரிகிறது. 

‘என்னிடம் சினம் கொண்டாயே, ஆனால் அவர் சொன்னதும் ஏன் அடங்கினாய்?’ என்று தனியாக இருக்கும்போது அப்துல்லாவை கேட்டதற்கு, ‘ஐயா, இந்த நாடு அப்படீங்க. நாங்க வெவ்வேறு மதத்துக்காரங்களா இருந்தாலும், பாண்டிய பாதுஷா ஸபீ கோ (எல்லோரையும்) ஒண்ணாத்தான் பார்க்கறாரு, ஒண்ணாத்தான் நடத்தறாரு. எல்லா மதத்துக்காரங்களுக்கும் தொழுகை செய்யக் கோவில், மஸ்ஜித் கட்ட அல் வக்ஃபு (மானியம்) கொடுத்திருக்காரு.  எங்களுக்குள்ள எந்தவிதமான மதச்சண்டையும் இதுவரை வந்ததில்ல. ஆனா, உங்களோட மதம் பெரிசு, மத்ததெல்லாம் பொய்யி, தாழ்த்தி - அப்படீன்னு நீங்க பேசினது எங்க ரெண்டு பேருக்குமே குஸ்ஸாவை (கோபம்) வரவழைச்சுது. ஆனாலும், மரியாதைக்குரிய அவரே நீங்க சொன்னதை கோபப்படாம மறுத்துப் பேசறப்ப, நான் துள்ளிக் குதிக்கறது அவரை அவமதிக்கற மாதிரித்தானே! அதுனாலதான், அவர் சொன்னதும் கப்சிப்னு அடங்கிட்டேன்’ என்று பதில் சொன்னதும் நிழலாடுகிறது. 

‘இங்கே உன் மதத்துக்காரங்க அதிகம் இல்லையே? தவிரவும், நீங்கள் தனியாகவும், அவங்க தனியாகவும்தானே வசிக்கிறீர்கள்? அது உங்களை ஒதுக்கி வைப்பதாக உங்களுக்குத் தோன்றவில்லை?’ என்று அவன் கேட்டதற்கு, ‘ஐயா, பணம் உள்ளவுக தனியா வீடு கட்டிக்கிட்டுத் தனியா குடியிருக்கிறது இல்லையா? குடிசையும், மாளிகையும் அடுத்தடுத்தா இருக்கு? அவுக பழக்க வழக்கம் வேற, எங்க பழக்க வழக்கங்க வேற. எங்களுக்கு மஸ்ஜித் பக்கத்துல சத்தம் வரக்கூடாது. அவங்க கோவில் மஹ்ரஜன் (திருவிழா) சமயத்தில தாரை, தப்பட்டையோட நிறையச் சத்தம் போட்டுக்கிட்டு ஊர்கோலம் போகவேணும். ஒண்ணா இருந்தா ஒத்தர் பழக்கம் இன்னொருத்தருக்கு எடஞ்சலா இருக்காதா? அதுனாலதான் நாங்க தனித்தனியா வசிச்சாலும், ஒத்தரை ஒத்தர் மதிச்சு வாழறோம்’ என்ற பதில் கிடைத்தும், அதைத் தன்னால் நம்ப முடியாமல் போனதையும் நினைவுகூர்கிறான். 

‘இருந்தாலும் இது எனக்குச் சரியாகப் படவில்லை’ என்று வாயாடியதும் அப்துல்லா, ‘ஒரொரு முலுக்கிலேயும் (நாடு) ஒரொரு பழக்கம்; அதுமாதிரி, ஒரொரு மதத்துக்கும் ஒரொரு பழக்கம்; நாம எல்லாத்தையும் மதிக்கணும்னு சாஸ்திரியார் எனக்குச் சொல்லித் தந்திருக்காரு. இந்த நாட்டுக்காரங்க கிழக்குப் பக்கம் பார்த்துக் கும்பிட்டா, நாங்க மேற்கே பார்த்துத் தொழறோம். அவுக முகத்த மளிச்சுட்டுக் குடுமி வச்சுக்கிட்டா, நாங்க தலையையும், மீசையையும் மளிச்சுப்புட்டுத் தாடி வளக்கறோம். எது ஒசத்தி? எது தாழ்த்தி? அவுகவுக பழக்க வழக்கத்தைத்தான் இங்க சுயதர்மம் அப்படீன்னு சொல்லுதாங்க. அதை மதிக்கவும் செய்யுதாங்க’ என்று தன் வாயை அடைத்ததையும் இப்போது நினைக்கும்போதும் மார்க்கோ போலோவின் இதழ்களில் புன்னகை மலர்கிறது. 

‘அதுசரி, உங்க மதத்தில் பெண்கள் எல்லோரும் தலையை மூடி முக்காடு போட்டுக்கொள்கிறார்கள். இங்கு பெண் சிலைகளுக்கு மார்புக்கச்சைகள்கூட இல்லையே?’ என்று ஒருமுறை கேட்டதும், அப்துல்லாவால் பதில் சொல்ல இயலாது போனபொழுது, தன்னை சதாசிவ சாஸ்திரியிடம் கூட்டிச்சென்று விளக்கம் கேட்டது நினைக்கு வருகிறது. 

அதற்கு அவர், ‘யவன நாடுகளில் ஒன்றான கிரேக்கத்தில் ஆண், பெண் சிலைகள் ஆடை எதுவுமே இல்லாமல் இருக்குமாமே? அதற்கு என்ன விளக்கம் கொடுக்கிறீர்கள்?’ என்று தன்னைத் திருப்பியதும், ‘அது கலை; கலைக்கண்களுடன் பார்த்தால் அசிங்கம் தெரியாது,’ என்று சமாதானம் சொல்லி, ‘ஆனால், இங்கோ பெண் சிலைகளுக்கு இடுப்பின் கீழ் ஆடை இருக்கிறதே, அதற்கு என்ன சொல்கிறீர்கள்?’ என்றதும், ‘குழந்தைகளுக்குத் தாயின் மார்பகங்கள் இன உணர்ச்சியைத் தூண்டுவதில்லை; தெய்வப் பெண்கள் தாய்க்கு நிகரானவர். ஆகவே, மார்பகங்களை ஆடையால் மறைப்பதில்லை’ என்ற மறுமொழியை எண்ணிப் பார்க்கிறான். 

இப்படி எத்தனை விவாதங்கள் அவர்களுக்குள் நிகழ்ந்திருக்கின்றன? ஒவ்வொன்றிலும் அவர்களுக்கிடையில் எவ்வளவு கருத்துகள் பரிமாறப்பட்டிருக்கின்றன? கடைசியாக, ‘நீங்கள் சோழநாட்டார்; மன்னர் பாண்டியர்; பாண்டியரும் சோழரும் பரம விரோதிகள் என்றும், உங்கள் தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்தையே இந்தப் பாண்டியச் சக்ரவர்த்தியின் தந்தை அழித்தார் என்றும் கேள்விப்பட்டேன். அப்படியிருந்தும், நீங்கள் விரோதம் பாராட்டாமல் எப்படி சில தலைமுறைகளாக பாண்டியருக்குப் பணியாற்றி வருகின்றீர்?’ என்று கேட்டதும், சதாசிவ சாஸ்திரியின் முகம் சில கணங்கள் இருளடைந்ததும் இப்போதும் அவன் மனக்கண் முன் நன்றாகத் தெரிகிறது. 

புன்னகையை வரவழைத்தவாறே, ‘உங்கள் கேள்வி நியாயமானதே! என்னை அரசத் துரோகி என்று கூட நீங்கள் நினைக்கலாம். ஆயினும், நாங்கள் பாண்டியர்க்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம். நான் இன்று பிறந்து வளர்ந்திருக்கிறேனென்றால், அது இந்தப் பாண்டியச் சக்ரவர்த்தியின் மூதாதையரான மாறவர்மன் சுந்தரபாண்டியன் எனது முப்பாட்டனாருக்கு அளித்த உயிர்ப்பிச்சை. பாண்டிய வீரரால் உயிரிழக்க இருந்த அவரைக் காப்பாற்றியதோடு மட்டுமின்றி, அவர் தமிழறிஞர் என அறிந்ததும், அவரைக் கௌரவித்துக் காப்பாற்றினார். தமிழ்க் கவிஞர்களை ஆதரிக்கவும், தமிழ்ப்பள்ளிகள் நடத்தவும், மானியங்கள் அளித்துச் சிறப்பித்தார். சோழ மன்னரால் அவமதிக்கப்பட்ட கவிச்சசக்ரவர்த்தியான கம்பருக்கு அந்தப் பாண்டிய மன்னர் அடைக்கலம் தந்து ஆதரித்தார். 

‘பாண்டிய மன்னர்களும், சோழ மன்னர்களும் தமிழ்மொழிக்கு முதலிடம் தந்து போற்றி வந்திருக்கின்றனர். தமிழைப் பொறுத்தவரை எல்லை என்று ஒன்றும் கிடையாது.  பாண்டிநாடோ, சோழநாடோ, கொங்குநாடோ, தொண்டைநாடோ - எல்லாம் தமிழ்கூறும் நல்லுலகமே! இப்போது சோழ வம்சமே அழிந்துவிட்டது. ஆயினும், எங்கள் மூதாதையருக்கு இராஜராஜசோழச் சக்ரவர்த்தியாரால் கொடுக்கப்பட்ட கடமையை நாங்கள் சிறிதளவாவது செய்ய இயலுகிறதென்றால் அது பாண்டியரால்தான்’ என்று கம்மிய குரலில் மறுமொழி அளித்ததும் நிழலாடுகிறது. 

‘சோழ வம்சம் ஏன் அழிந்தது? அது எப்போது அழிந்தது? அந்த வரலாற்றை எனக்குச் சொல்லுங்களேன்’ என்று தான் கேட்கவும், சடையவர்மன்(ஜடாவர்மன்) சுந்தரபாண்டியனின் வரலாற்றை சதாசிவ சாஸ்திரி விளக்கத் தொடங்கியது அவந்து மனக்கண்முன் விரிகிறது… 

மதுரை அரண்மனை 

விரோதிகிருது, சித்திரை 5 - ஏப்ரல் 6, 1251 

மீனக்கொடி அரண்மனை வாயிலிலுள்ள பெரிய கம்பத்தில் காற்றில் படபடத்துப் பறந்து கொண்டிருந்தது. அரண்மனை வளாகத்தில் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் புதிதாகக் கட்டப்பட்ட அரசாணி மண்டபத்தில் பாண்டிய மன்னர் அனைவரும் குழுமியிருந்தனர்.  மதுரைக் காவலனாகவும், அனைத்துப் பாண்டிய மன்னருக்குத் தலைவனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த சடையவர்மன் சுந்தரபாண்டியன், பாண்டியரின் அரியணையில் நடுநாயகமாக அமர்ந்திருந்தான். 

சடையவர்மன் சுந்தரபாண்டியன்
சடையவர்மன் சுந்தரபாண்டியன்

மாமன்னனாக இரண்டு நாள் முன்னரே பட்டம் சூட்டப்பட்டிருந்தது. அந்தத் திருவிழா முடிந்து தங்கள் நகரங்களுக்குச் செல்லவிருந்த மன்னர்களைச் சடையவர்மன் சுந்தரபாண்டியன் இரகசிய ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைத்திருந்தான். 

‘விழா முடிந்த கையுடன், விழாவில் கலந்துகொண்ட களைப்பும் அலுப்பும் திரும்புவதற்கு முன் ஏன் இப்படி அழைக்கிறான்?’ என்று தமக்குள் முணுமுணுத்தவாறு அங்கு மற்ற பாண்டிய மன்னர் வந்திருந்தனர். 

எப்படி இருப்பினும், பாண்டிநாட்டை அடிமைத் தளையிலிருந்து விடுவித்த மாறவர்மனின் திறமைசாலியான மூத்த மகனின் அழைப்புக்கு ஏதேனும் முக்கியமான நோக்கம் இருந்துதான் ஆக வேண்டும் என்ற நினைப்பு அவர்களை இழுத்தது. அனைவரின் மனதிலும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. 

அரசாணி மண்டபத்தில் அவர்களின் வருகையைச் சடையவர்மன் எதிர்பார்த்துக் காத்திருந்தான். அவனுக்குப் பின்னால் அவனுடைய தலைமை மெய்காப்பாளன் நாச்சியப்பன் நின்றிருந்தான். பாண்டியரின் பரம்பரை மெய்காப்பாளரான வெற்றிமாறனின் வழித்தோன்றலான அவன், சின்ன வீரப்பனின் மூத்த மகன். 

அவன் சடையவர்மனின் காதில் மட்டும் விழுமாறு ஏதோ சொல்ல, சடையவர்மன் அதற்கு ஆமோதித்துத் தலையை ஆட்டினான். அவனுக்கு அடுத்த இருக்கையில் அவனது இளையோனான வீரபாண்டியன் அமர்ந்திருந்தான். 

அங்கு ஒருவர் பின் ஒருவராக வரும் பாண்டிய மன்னரைப் புன்னகையுடன் சடையவர்மன் வரவேற்றான். 

தங்களுக்கு முன்னதாகவே அவன் அங்கு வந்திருப்பது மற்ற மன்னருக்கு வியப்பாக இருந்தது.  கடைசியில் வந்து தன்னை உயர்வாகக் காட்டிக்கொள்ளாது, தங்களை வரவேற்றுச் சிறப்பித்தது அவர்களுக்குப் பெருமையாக இருந்தது. அனைவரும் வந்தவுடன் சடையவர்மன் நாச்சியப்பனைப் பார்த்துத் தலையசைத்தான். 

அவனும் குறிப்பறிந்து வெளியேறினான். அதைக்கண்டு மற்றவரும் தங்களுடன் வந்த மெய்காப்பாளர்களை வெளியனுப்பினார்கள். 

அனைவரையும் நலம் விசாரித்த பின் சடையவர்மன் பேசத் தொடங்கினான்: “அண்ணன்மாரே, தம்பிமாரே, என் அழைப்புக்கிணங்க இரகசிய ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. என் தந்தை மாறவர்மன் சுந்தரபாண்டியர் மதுரையைச் சோழரிடமிருந்து மீட்டார். குலோத்துங்கனையே அவன் தலைநகர் கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து விரட்டினார். ஆயினும், போசளரின் உதவியால் குலோத்துங்கன் இழந்த தலைநகரையும் நாட்டையும் திரும்பப் பெற்றான். 

“பாண்டியர், சோழருக்குக் கட்டடக் கலையில் எவ்விதத்திலும் சளைத்தவர் அல்லர் என்பதை நிலைநிறுத்தும் வண்ணம் மதுரையின் தெய்வங்களான அங்கயற்கண்ணி, அழகரின் ஆலயத்துக்குக் கலைமணம் திகழும் இராஜகோபுரத்தை நிறுவினார். அது அந்நியர் மதுரை நோக்கி வருவதை முன்னமேயே அறிந்துகொள்ளும் கண்காணிப்பு அமைப்பாகவும் திகழ்கின்றது. அதையொட்டி பாண்டிநாடெங்கும் இராஜகோபுரங்கள் எழுவதையும் காண்கிறோம். 

“அவர் காலம்சென்ற பின்னர், இருபதாண்டுகளில் இருவர் மதுரைக் காவலராய்த் தேர்ந்தெடுக்கப்பட்டனர். போசளர், காடவன் ஆளப்பிறந்தான் இவர்களிடம் உதவி பெற்ற சோழன் (மூன்றாம்) இராஜேந்திரனிடம் மாறவர்மருக்கு அடுத்தபடியாகப் பாண்டிநாட்டுத் தலைமையை ஏற்றுக்கொண்ட மன்னர் போரில் தோல்வியுற்றது, எனக்குத் தாங்கவொண்ணாத் துயரைத் தருகின்றது” என்று சடையவர்மன் நிறுத்தி அனைவரின் முகத்தில் எழும் எண்ண ஓட்டங்களைக் கவனிக்கிறான். 

“வருந்தி என் செய்வது? மேலே செய்யவேண்டியதுதான் என்ன? நம்முடன் நட்பாக இருந்த அழகியசீயன் கோப்பெருஞ்சிங்கனின் மகன் ஆளப்பிறந்தான் நமக்கு எதிரியாகத் திரும்பியது எதனால்? தன் தந்தை எவனைச் சிறைப்பிடித்தானோ, அவனுடன் இவன் உறவுகொண்டாடுவது எதற்கு?” என்று கேள்விக் கணைகளைத் தொடுத்துவிட்டு, மீண்டும் தொடர்ந்தான் சடையவர்மன். 

“இவை நடப்பது எதனால்? கன்னட மொழி பேசும் போசளரால்தானே! அவர்களைப் பகைத்துக்கொள்ள வேண்டாம் என்றுதானே ஆளப்பிறந்தான் சோழருடன் உறவு வைத்திருக்கிறான்? அத்துடன் அவர்களின் காவலனாகவும் தலையெடுத்துள்ளான்? அது மட்டுமா? போசளர் காவிரியின் வடகரைக்கு அருகிலுள்ள கண்ணணூரில்42 அல்லவா தமது இரண்டாம் தலைநகரை நிறுவியுள்ளனர்? அவர்கள் தமிழகத்தின் மேற்கு நடுப்பகுதியையும், வடக்குப் பகுதியையும் தங்கள் வசத்தில் வைத்திருக்கும் வரை நாம் என்றும் நிம்மதியாக உறங்க இயலாது” என்று நிறுத்தினான். 

“நாம் என்ன செய்ய வேண்டும் சடையரே? எப்பொழுதும் போசளரின் கருநிழலில் வாடி வதங்கும் செடிகளாய் வருந்த வேண்டியதுதானா? தமிழ்கூறும் நல்லுலகில் பாதி என்றும் போசளரின் பிடியில் சிக்கித் தவிக்க வேண்டியதுதானா?” என்னும் கேள்வி மற்ற பாண்டியரிடமிருந்து எழுந்தது. 

“இதையும் கேளுங்கள், உடன்பிறப்புகளே! திறமையற்ற தந்தையிடமிருந்து சோழ அரசை அடைந்த இராஜேந்திரன், இப்போது சோழநாட்டை விரிவுபடுத்தத் திட்டம் தீட்டி வருகிறான். எனவே, சோழரும், போசளரும் தமிழ்நாட்டில் கோலோச்சும் வரை பாண்டியரான நமக்கு என்றும் நிம்மதியான உறக்கம் இருக்கவே இருக்காது. மீண்டும் மீண்டும் அவர்களால் நமக்கு, நம் நாட்டுக்கு ஆபத்து காத்துக்கொண்டே இருக்கும். இந்த ஆபத்தை அழிக்கவேண்டுமெனில் பாண்டிநாட்டை வல்லரசாக்க வேண்டும், போசளரைத் தமிழகத்திலிருந்து துரத்தியடிக்க வேண்டும்; அவர்களையும், அவருக்குத் துணைபோகும் அனைவரையும் நமக்குத் திறை செலுத்தும் குறுநில மன்னராக்க வேண்டும்.” 

------------------------------------- 

[42. தற்போதைய சமயபுரத்தருகில்தான் கண்ணூர் இருந்தது என்று அகழ்வாராய்ச்சியர் தெரிவிக்கின்றனர்.] 

அவனது குரல் வீராவேசத்துடன் ஒலித்தது: “சோழரை பூண்டோடு ஒழித்து, அவர்களது தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்தைத் தரைமட்டமாக்கி, மதுரையை அடிமைகொண்ட அந்த இடம் தெரியாதவாறு அழிக்க வேண்டும். அந்நகரம் இருந்ததே உலகுக்கு அறியாதபடி செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான் சோழர் மீண்டும் தலையெடுக்க இயலாது போய்விடும். சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பாண்டியரான நாம் மட்டுமே, தமிழகத்தின் ஆளுநராகவும், காவலராகவும் புகழை நிலைநாட்டுவோம். 

“வடவேங்கடம் முதல் தென்குமரி வரைத் தமிழ்கூறும் நல்லுலகம் பாண்டியப் பேரரசுக்குள் அடங்க வேண்டும். என் இறுதி மூச்சு அடங்குவதற்குள் இதை நிறைவேற்ற விரும்புகிறேன்.  அதற்கு உங்கள் அனைவரின் அனுமதியையும், ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன்.” இதைச் சடையவர்மன் சொல்லி நிறுத்தியதும் அவையில் அமைதி நிலவியது. 

“மதுரையில் அதன் அரண்களுக்குள் சுகமாக இருந்து வர நான் விரும்பலில்லை. உங்களில் ஒருவரை மதுரையை ஆண்டு வர நியமித்துவிட்டு, இதுவரை நான் சொன்னதை நிறைவேற்றப் பெரும்படையுடன் கிளம்பவிரும்புகிறேன். இதை எவ்வளவு விரைவில் துவங்க வேண்டுமோ, அவ்வளவு விரைவில் துவங்க விழைகிறேன். 

“அதை நிறைவேற்ற முழு ஒத்துழைப்புக் கொடுக்க என்னுடன் குருதி ஒப்பந்தம் செய்துகொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இதோ, என் தந்தையார் குலோத்துங்கனை வென்ற - எனக்கு விட்டுச் சென்ற - மதுரையை மீட்ட வீரவாள். இதன் துணையுடன் சோழரை நிர்மூலமாக்குவோம்!” சிங்கமாகக் கர்ஜித்த சடையவர்மன் எழுந்து நின்று, தன் உடைவாளை உருவியெடுத்து, அதன் கூரிய முனையால் தன் உள்ளங்கையைக் கீறினான். சிவந்த குருதி அவனது விரல் நுனிகளிலிருந்து கீழே சொட்டியது. 

அவையிலிருந்த அனைவரும் திகைத்து மலைத்து நின்றாலும், சடையவர்மனின் இளையோன் வீரபாண்டியன் உடனே எழுந்து, சடையவர்மன் முன்பு தன் கையை நீட்டினான். முகத்தில் மலர்ந்த புன்னகையுடன் அவனது வலது உள்ளங்கையில் கீறிய சடையவர்மன், தன் குருதி வழியும் கையால் பற்றித் தழுவினான். 

“நீ பெயருக்கேற்றபடி வீரபாண்டியனடா! மிகவும் பெருமையுறுகிறேனடா!” 

ஒருவர் பின் ஒருவராக மற்ற பாண்டிய மன்னர்கள் எழுந்து வந்தனர். குருதி ஒப்பந்தம் நடந்தேறியது. அதன்பின் சடையவர்மனின் பெரிய திட்டத்தை, அவாவை எப்படி நிறைவேற்றுவது என நீண்ட நேரம் கலந்துரையாடல் நடந்தது. அது முடியவும், கதிரவன் மேற்குத் திசையில் சாயவும் சரியாக இருந்தது. மிகுந்த மகிழ்ச்சியுடன் பாண்டிய மன்னர் அனைவரும் இரவு உணவுகொள்ளச் சென்றனர். 

சேந்தமங்கலம் கோட்டை 

நள, ஆனி 15 - ஜூன் 16, 1256 

முள்ளின் மேல் அமர்ந்திருப்பது போல உணர்ந்தான், இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் என்ற பட்டப்பெயருடையவனும், முதலாம் கோப்பெருஞ்சிங்கனின் மகனுமான ஆளப்பிறந்தான். சோழ நாட்டிலிருந்து ஒற்றன் கொணர்ந்த செய்தியைக் கேட்டதும், இலவம் பஞ்சு வைத்துத் தைத்திருந்த இருக்கை திடுமென்று கூரிய முள்களால் நிரப்பப்பட்டது போலக் குத்தியது. 

“என்ன சொல்கிறாய்? பாண்டியன் சடையவர்மன் கங்கைகொண்ட சோழபுரத்தைச் சுற்றி வளைத்துக்கொண்டானா? அவனது படைகள் அவ்வளவு தூரம் வந்தது நமக்கு எப்படித் தெரியாது போயிற்று?” என்று பெரிய விழிகளை உருட்டிக்கொண்டு கேட்டது ஒற்றனின் குடலைக் கலக்கியது. 

எச்சிலை விழுங்கிக்கொண்டு, “அரசே… பாண்டிய மன்னரின் படைகள் முன்னேறும் வேகம் பொங்கும் கடல் கொந்தளித்து வருவதைப் போலவும், காட்டாற்று நீர்ப்பெருக்கு உருண்டடித்து வருவதைப் போலவும் இருந்தது. அதில் சிக்கிய எவரும் மீள்வதில்லை என்பதைப் போல பாண்டியப் படைகள், தான் நெருங்கிய அனைவரையும் அழித்துத் தீர்த்தன. நமது ஒற்றர்கள் இருபத்தைந்து பேர் பிடிபட்டு மிகவும் மோசமான முறையில் சித்திரவதைப்பட்டு உயிரிழந்தனர். பாண்டியர் மாற்றாரின் ஒற்றர் எவருக்கும் கடுகளவுகூட கருணை காட்டுவதில்லை. இங்கு தங்களுக்குச் செய்தி சொல்ல நான் தலைதப்பி வந்தது என் முன்னோர் செய்த புண்ணியம் என்றே நினைக்கிறேன்” என்று நடுங்கும் குரலில் பதிலிறுத்தான் ஒற்றன். 

“அது எப்படி பாண்டியரால் ஒற்றர்கள் என இனம் கண்டுகொண்டு பிடிக்க முடிந்தது?” 

“அவர்களின் படை வருவதற்கு முன்னரே, அவர்களின் ஒற்றர் குழாம் மாறுவேடம் அணிந்து செல்கிறது அரசே! அவர்கள் எந்த வேடம் பூண்டு செல்கின்றனர். எத்தனை பேர் செல்கின்றனர் என்றே நம்மால் அறிந்துகொள்ள இயலவில்லை. மாற்றாரின் ஒற்றர்களை அவர்களால் எளிதில் இனம் கண்டுகொள்ள முடிகிறது. அவர்களது ஒற்றர் குழாம் மாற்று ஒற்றர்களை அழித்தவுடனேயே, அந்த இடத்தை நோக்கிப் பாண்டிய சேனை அணிவகுத்து வந்துவிடுகிறது.” 

“ஒற்றர்கள் மாறுவேடம் புனைந்து செல்வதுதான் வழக்கம் ஆயிற்றே? பாண்டிய ஒற்றரை நம் ஒற்றரால் ஏன் அறிந்துகொள்ள இயலாது போய்விட்டது?” என்று கோப்பெருஞ்சிங்கன் சீறுகிறான். 

“அவர்கள் பலவித வேடம் பூணுகிறார்கள் அரசே! ஒரு முறை கையாண்ட வேடத்தை மறுமுறை புனைவதில்லை. ஒருமுறை ஆண்டி வேடம் தரித்தால், அடுத்த தடவை கழைக்கூத்தாடியாக வருகின்றனர். சில சமயம் சாமியாராகவும், மற்ற சமயம் சோழ வீரராகவும், வேறொரு சமயம் விவசாயிகளாகவும் தோன்றுகின்றனர். அவர்கள் பாண்டிய ஒற்றர் என அறிந்துகொள்வதற்குள் நம் ஒற்றர்களின் கதை முடிந்து போய்விடுகிறது.” 

“நீ மட்டும் எப்படித் தப்பித்து வந்தாய்?” 

“நான் அவர்களிடம் அகப்படவில்லை அரசே! மாண்டு விட்டான் எனப் பாண்டியர் விட்டுச் சென்ற நமது ஒற்றன் ஒருவன், உயிர் போவதற்கு முன், கங்கைகொண்ட சோழபுரத்தை பாண்டிய வீரர் சூழ்ந்துகொண்டனர் என்று ஓலையில் எழுதி வைத்ததைப் படித்ததால் அறிந்து கொண்டேன்.” 

“அதை எப்படி உண்மை என்று நம்ப முடியும்? நம்மை ஏமாற்றுவதற்காக பாண்டியர் செய்த சூழ்ச்சியாகவும் இருக்கலாம் அல்லவா?” என்று மன்னன் கேட்ட இக்கேள்வியை ஒற்றன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் சமாளித்துக்கொண்டு, “அப்படியொரு தவறான செய்தியைப் பாண்டியர் நமக்கு ஏன் விட்டுச் செல்ல வேண்டும் அரசே? கங்கைகொண்ட சோழபுரத்தைப் பாண்டியர் சுற்றிவளைக்கப் போகின்றன எந்த சேதியை நமக்குத் தெரிய வைப்பதால் அவர்களுக்கு என்ன நன்மை இருக்கக்கூடும்? நமது தோழமை அரசரான இராஜேந்திரசோழரின் உதவிக்கு நாம் வருவோம் என அவர்களுக்குத் தெரியாதா? தெரிந்தும் அவர்கள் இவ்வாறு செய்தார்கள் என்றால்…” என்ற ஒற்றனுக்கு மேலே என்ன சொல்வது என்று ஒற்றனுக்குத் தெரியவில்லை. 

“நமது ஒற்றன் எழுதிய ஓலை நம் குறியீட்டு மொழியில் எழுதப்பட்டிருந்ததா?” 

“ஆம், அரசே!” 

“ம்…” என்ற கோப்பெருஞ்சிங்கன் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தான். 

கையை ஆட்டி ஒற்றனை போகச் சொல்லிவிட்டு, அவன் சென்றதும் தன் தளபதியையும் அமைச்சரையும் கேட்டான்: “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒற்றன் எழுப்பிய ஐயங்களுக்கு உங்கள் மனதில் ஏதாவது பதில் தோன்றுகிறதா?” 

அமைச்சர் முதலில், “அரசே, இது தொடர்க்கொடியான சேதி. முதலாவது, நமது ஒற்றன் மாண்டதாக நினைத்துவிட்டுப் பாண்டிய ஒற்றர் சென்றதால், நமது ஒற்றன் நமக்குக் கிடைக்கட்டும் என ஓலையில் விவரத்தை எழுதிவிட்டு இறந்திருக்கலாம். அப்படி எழுதியவன், நமக்கு மட்டுமே புரியக்கூடிய குறியீட்டு மொழியில் எழுதியிருந்தால் அது உண்மை என்றுகூட நினைக்கலாம்” என்று சொல்லும்போது இடைமறித்தான் கோப்பெருஞ்சிங்கன். 

“உண்மை என நினைக்கலாமென்றால்…?” 

“நமது ஒற்றனோ பாண்டியரிடம் பிடிபட்டுச் சித்திரவதை செய்யப்பட்டான். அவனைத் தங்களுக்கு வேண்டியபடி எழுதுமாறு - அதுவும் குறியீட்டு மொழியில் எழுதுமாறு கட்டாயப்படுத்தி இருக்கலாம். அப்படி அவன் எழுதியிருந்தால் அது உண்மையாக இருக்காதல்லவா? அது பாண்டியர் எழுதச்சொல்லி எழுதியதுதானே? ஒருவேளை, பாண்டியர் நமது குறியீட்டு மொழியை மற்ற ஒற்றர் மூலம் அறிந்து, அவர்களே நமது ஒற்றன் எழுதியதுபோல ஓலையில் எழுதியும் இருக்கலாம். எனவே, நமக்குக் கிடைத்த செய்தி உண்மையா, பொய்யா என்று ஊகிப்பது மிகவும் கடினம் அரசே!” 

“அமைச்சரே, நீர் மிகவும் குழப்புகிறீர்!” கோப்பெருஞ்சிங்கன் வெடிக்கிறான். 

“அதுதான் பாண்டியரின் இலக்கு அரசே! நாம் செய்வதறியாது குழம்பித் தவிக்க வேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோள். மற்ற ஒற்றர்களைக் கொன்றுவிட்ட அவர்கள், ஏன் ஓர் ஒற்றனை மட்டும் குற்றும் குலையுமாக விட்டுச்சென்று, அவன் ஓர் ஓலையை எழுத அவகாசம் கொடுக்க வேண்டும்? இருக்கவே இருக்காது அரசே. இது பாண்டியரின் சூழ்ச்சிதான். ஆகவே, நாம் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.” 

அமைச்சர் சொன்னதற்கு எதிர்மொழியாக, “அரசே, அமைச்சர் சொல்வதிலிருந்து பார்த்தால், நாம் குழம்பிக் குழம்பி ஒன்றுமே செய்யாமல் இருக்க வேன்டும் என்பதுதான் பாண்டியரின் குறிக்கோள் என ஊகிக்க முடிகிறது. ஆகவே, குழம்பாது நமது நண்பரான இராஜேந்திரசோழருக்கு உதவியாக படை பலத்துடன் உடனே செல்வதுதான் சாலச் சிறந்தது என்று தோன்றுகிறது” என்று படைத்தளபதி தன் கருத்தைக் கூறினான். 

“அரசே, எனது கருத்தைத் தயக்கமின்றிக் கூறத் தங்கள் அனுமதியை வேண்டுகிறேன்” என அமைச்சர் விண்ணப்பித்ததும், கோப்பெருஞ்சிங்கன் தலையை ஆட்டினான். 

“அரசே! தங்கள் தந்தையார் பாண்டிய மன்னர் மாறவர்மர் சுந்தரபாண்டியருக்கு ஒரு நண்பராகத்தான் திகழ்ந்தார். மேலும், அவர் சோழ மன்னர் இராஜராஜனை தெள்ளாற்றுப் போரில் வென்று, சிறைப்பிடித்ததால், போசள மன்னர் வீரநரசிம்மன் படையெடுத்து வந்த போது - முதுமையால் நலங்குன்றி இருந்த மாறவர்மர் சுந்தரபாண்டியர், நேரில் போரில் கலந்துகொள்ள முடியாதுபோகவே, நமக்கு ஆதரவாகத் தோள்கொடுக்கப் பாண்டியப் படையை அனுப்பினார். தங்களது தந்தையார் அந்தப் போரில் தோல்வியைத் தழுவியதால், சோழ மன்னர் இராஜராஜரை விடுவித்ததோடு மட்டுமின்றி, சோழநாட்டையும் திரும்பித் தர நேர்ந்தது” என்று சுற்றிவளைத்த அமைச்சரை பொறுமையின்றி கோப்பெருஞ்சிங்கன் இடைமறித்தான். 

“அது தெரிந்த கதைதான் அமைச்சரே! மீண்டும் ஏன் அதை எனக்குக் கூறுகின்றீர்? போசளரால் நமக்கு மீண்டும் தொந்தரவு வரக்கூடாது என்பதற்குத்தானே சோழருக்கு நண்பரானோம்?  மண வினைகளும் வைத்துக்கொண்டோம்? நீர் சொல்லவந்ததை விரைவில் சொல்லும்!” என்று விரட்டினான். 

“அரசே, மண வினைகள் அரசியல் நோக்குடன் செய்யப்படுபவை. அதில் யாருக்கும் முழு விருப்பமிருக்காது. அது தங்களுக்குத் தெரியாததல்ல. பாண்டியரை ஏன் எதிர்க்க வேண்டும்?  நடுநிலைமை வகித்தால் என்ன? பாண்டியருடன் நட்புறவை புதுப்பித்தால்தான் என்ன?” என அமைச்சர் தன் கருத்தைத் தெரிவித்தார். 

“அமைச்சரே, சோழருடன் பல நூறாண்டு காலமாக நல்லிணக்கம் கொண்டவர் நாம். எனது தந்தையை குலோத்துங்க மாமன்னர் சரியாக நடத்தாத மன வருத்தத்தால், அவர் பாண்டியருடன் கைகோர்த்ததே உண்மை. மற்றபடி அதனால் வந்த துன்பமே அதிகம்.  இறக்கும் வரை, தான் செய்தது சரியா தவறா என்ற குழப்பத்துடனே வருந்தி வந்தார்.  மரணப் படுக்கையில் படுத்தவாறு என்னிடம் தன் மிகுந்த மனக்குழப்பத்தைப் பகிர்ந்துகொண்டு, ‘மகனே, என் தவறுகளைச் செய்யாதே.  சோழருக்குத் துணையாக இருந்து வா’ என்ற உறுதியை வாங்கிக்கொண்ட பின்னரே உயிர் நீத்தார். தந்தையும் கனவும் நனவாகித்தான் வந்திருக்கிறது. சோழ மன்னர் நமக்கு அடங்கித்தான் நடக்கிறார். ஆகையால், சோழருக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்த மாட்டேன்” என்ற கோப்பெருஞ்சிங்கன், சேனைத்தலைவர் பக்கம் திரும்பி, “தளபதியாரே! நமது படைகளை ஆயத்தம் செய்வீராக! கங்கைகொண்ட சோழபுரத்துக்கு நம் படைகள் விரையட்டும். சோழர்தம் தலைநகரை அழிவிலிருந்து காப்பாற்றுவோம்!” கோப்பெருஞ்சிங்கன் சிங்கமாக உறுமினான். 

*** 

(தொடரும்)

Other Articles

No stories found.