பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -நான்காம் பாகம்-அத்தியாயம் 14

மார்க்கோ போலோ
மார்க்கோ போலோ

வங்கக்கடல், தமிழ்நாடு அருகில்

விஜய, தை 25 - ஜனவரி 26, 1294

மூச்சை நன்றாக இழுத்துவிடுகிறான் மார்க்கோ போலோ. அவன் மனம் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் போர்த்திறமையைப் பற்றி, சதாசிவ சாஸ்திரி விவரித்ததை எண்ணிப் பார்க்கிறது…

…போசளரை விரட்ட வேண்டும், கங்கைகொண்ட சோழபுரத்தை அழித்துச் சோழரையே நிர்மூலமாக்க வேண்டும் எனச் சூளுரைத்து, மதுரையில் ஒன்றுகூடி முடிவெடுத்தாலும், முதலில் சடையவர்மன் சேர நாட்டுக்குத்தான் படையெடுத்துச் சென்று வென்றான். சேர மன்னன் வீரரவி உதயமார்த்தாண்டனை எமனுலகுக்கு அனுப்பினான். தான் வடக்கு நோக்கிப் படையை நகர்த்தும்போது, மேற்கிலிருந்து சேரர் தாக்க முடியாது செய்வதே அதற்குக் காரணம் என்று காட்டினான். அதற்குப் பின் மூன்றாண்டுகள் கழித்தே, காவிரியைக் கடந்து, கண்ணனூரைக் கைப்பற்றினான். அதை நிறைவேற்ற நடந்த மாபெரும் போரில் சிங்கணன் உட்பட, பல போசளப் படைத்தலைவர் மாண்டனர். போசளர் சில நூற்றாண்டுகளாய் சேமித்து வைத்திருந்த செல்வம் அனைத்துடன் நூற்றுக்கணக்கான யானைகளும், ஆயிரக்கணக்கான குதிரைகளும் சடையவர்மனின் பிடியில் சிக்கின.43

“பாண்டியர் இருக்கும் வரை இனி தமிழ்நாட்டில் கருநாட்டார் ஆட்சி ஒருபோதும் நடக்காது” என்று தன்னைச் சுற்றியிருந்த பாண்டியப் படை வீரருக்கு அவன் தன் வீரவாளை உயர்த்தி உறுதிமொழி அளித்தபோது விண்ணே அதிருமாறு ஒலியெழுந்தது. ஆயினும், சடையவர்மன் உடனே வடக்கே படையெடுத்துச் செல்ல மறுத்துவிட்டான்.

“ஒரு நாட்டைக் கைப்பற்றுவது பெரிதல்ல; அதை நம்முடையதாக நிலைநிறுத்துவதே மிகப்பெரிது. நம்மை நிலைநிறுத்தாது தொடர்ந்து போர்புரியச் சென்றால், இங்கு வெற்றிடத்தைத்தான் விட்டுச்செல்வோம். வெற்றிடத்தில் எவர் வேண்டுமானாலும் புகுந்துகொள்ளலாம். பாண்டியரின் ஆட்சிமுறை இங்கு நிறுவப்படுதல் வேண்டும்.  அதற்குமுன் இந்தக் கண்ணனூர் கோட்டை தரைமட்டமாக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தான். அதற்கு அவன் சொன்ன காரணம் இதுதான்: “கண்ணனூர் கோட்டை இருக்கும் வரை போசளருக்குத் தங்கள் தெற்குத் தலைநகரை மீட்க வேண்டும் என்ற அவா இருந்துகொண்டேதான் இருக்கும். எனவே, இந்நகரை மீட்கக் கட்டாயம் படையெடுத்து வருவர்.  அவர்களுக்கு இக்கோட்டையின் இரகசியம், இதன் மூலைமுடுக்குகள், வலிமை மற்றும் குறைபாடு ஆகியவை நன்கு தெரிந்திருக்கும். அப்படியிருக்கும்போது, இக்கோட்டையில் நாம் இருப்பது அவர்களுக்கு மிதமிஞ்சிய சாதகத்தைக் கொடுப்பதற்கு நிகராகும். இந்தக் கோட்டை தரைமட்டமாகிவிடில், மீட்டுக்கொள்ள போசளருக்கு என்ன உள்ளது? எதைக் கைப்பற்றுவர்?  ஆகையால், கண்ணனூரை அழித்து, இந்தக் கோட்டையையும் இருக்குமிடம் இல்லாது செய்வோம். இது இனி ஒரு சிற்றூராகத்தான் இருக்க வேண்டும். சோழரையும், காடவரையும் அடக்கிய பின்னர், கொங்குநாட்டை வளைத்துப் பிடிப்போம்.

 “முதலில் காவிரியின் தென்கரையோரமாகவே சென்று கருவூரைக் கைப்பற்றுவோம். எனது உடன்பிறப்பு வீரபாண்டியன், கொங்குநாட்டுப் பாண்டிய மன்னாக முடிசூடட்டும்!”44 என்று மேலே செல்லத் துடித்தவரை அடக்கிவிட்டு, வீரபாண்டியனின் தலைமையில் கருவூருக்கு ஒரு படையை அனுப்பி வைத்தான். கருவூரும் எளிதாக வீரபாண்டியனின் வாளுக்கு அடிபணிந்தது…

------------------------------

[43. ‘சடையவர்மன் சுந்தரபாண்டியன், போசளன் சோமேஸ்வரனை வென்று திருவரங்கத்தை மீட்டு, அக்கோவிலுக்கு மானியம் அளித்தான்.’ - திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் இரண்டாம் பிரகாரத்தில் வடக்குச் சுவற்றில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு - (Archeological Record no. 45 of 1891, No. 194 of Page 217)

44. ‘சடையவர்மன் சுந்தரபாண்டியன் சேரரைத் தோற்கடித்துத் தன் தம்பி வீரபாண்டியனை கொங்கு நாட்டு அரசனாக்கினான்.’ - திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் சந்தன மண்டபத் தெற்குச் சுவற்றில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு - (Archeological Record no. 81 of 1938-39, No. 197 of Page 217)]

…“இதை எப்படி அரச தந்திரம் என்று சொல்ல இயலும்? வெற்றி தன்னைத் தழுவும்போதே முன்னேறிச் சென்று, எல்லா எதிரிகளையும் அழிப்பதுதானே அரச தந்திரமாகும்?” என்று சதாசிவ சாஸ்திரியைக் கேட்டதும், அதற்கு அவர் சொன்ன மறுமொழியும் மார்க்கோ போலோவின் நினைவுக்கு வருகிறது…

…”வெவ்வேறு அரசர்கள் வெவ்வேறு விதமான அரச தந்திரத்தைக் கையாண்டிருக்கின்றனர்.  பல தலைமுறைகளாகத் தமிழ்நாட்டில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்கள் நாட்டைச் சுதந்திரமாகத்தான் ஆண்டு வந்தனர். எங்களது இராஜராஜசோழர்தான் முதலில் ஒரு பேரரசை நிறுவ முற்பட்டு, அதில் வெற்றியும் கண்டார். தமிழகத்துடன், கருநாடு, வேங்கைநாடு, வட இலங்கை, நக்காவரம் தீவுகள், இலட்சத் தீவுகள் இவற்றைத் தன் ஆட்சிக்குள் கொணர்ந்து சோழப் பேரரசை நிறுவி, அதன் முதல் சக்ரவர்த்தியாகவும் திகழ்ந்தார். அவர் காலத்திலிருந்து பாண்டிநாடு சோழர்களில் நேரடி ஆட்சிக்குள்தான் இருந்தது.

“அதை விடுவித்த மாறவர்மர் சுந்தரபாண்டியர், சோழரைச் சில காலம் திறை செலுத்தவும் வைத்தார். ஆயினும், மூன்றாம் இராஜேந்திரன் சோழ அரியணை ஏறியதும், போசளரின் உதவியால் சோழநாடு தன்னாட்சி பெற்றது. மாறவர்மன் சுந்தரபாண்டியர் இறைவனடி சேர்ந்ததும் அதற்கு உதவியாக இருந்தது. இராஜராஜசோழர் சோழப்பேரரசை நிறுவியதுபோல, மாறவர்மர் சுந்தரபாண்டியரின் புதல்வரான சடையவர்மன் சுந்தரபாண்டியர் பாண்டிநாட்டை விரிவுபடுத்திப் பேரரசை நிறுவ விரும்பினார்” என்று நிறுத்தினார்.

“அதற்கும், பெற்ற வெற்றியைத் தொடர்ந்து மற்ற வெற்றிகளை நிலைநாட்டத் தயங்குவதற்கும் என்ன காரணம்? அதில் என்ன இராஜ தந்திரம் உள்ளது?” என்று கேட்டான் மார்க்கோ போலோ.

மார்க்கோ போலோ
மார்க்கோ போலோ

அதற்குப் பெரிய வரலாற்று விளக்கத்தை அளித்தார் சதாசிவ சாஸ்திரி: “இராஜராஜசோழர் தன் அரசை விரிவுபடுத்த விரும்பியபோது அவருக்கு இருந்த சாதகமான சூழ்நிலை, சடையவர்மருக்கு இல்லை. பாண்டிநாடு தலைதூக்கக்கூடாது என்று இராஜராஜசோழரின் மைந்தர் இராஜேந்திரசோழர், தனது புதல்வர்களையே மதுரைக்கு அனுப்பி, ‘சோழபாண்டியன்’ என்ற பட்டத்துடன், பாண்டிநாட்டை அரசாள வைத்தார். இந்நிலை முதலாம் குலோத்துங்க சக்ரவர்த்தியின் காலம் வரை நீடித்தது.

“சோழரின் நேரடி ஆண்வழித் தோன்றலாக இல்லாததால் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் குலோத்துங்கருக்கு ஏற்பட்டது. ஆதலால், வழக்கம் போலச் சோழ இளவரசர்கள் மதுரையில் பாண்டிநாட்டை அரசாளுவதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

“ஆயினும், பாண்டிநாடு வலிமை பெறக்கூடாது என்பதற்காக அதை ஐந்து மண்டலங்களாகப் பிரித்து, பங்காளிகளான பாண்டியச் சகோதரர்களுக்கு அளித்து, திறையளித்து ஆட்சி செய்யும்படி பணித்துச் சமாளித்தார்.

“இதனால், கட்டுப்பாடு எதுவுமின்றித் தன்னாட்சி செய்துவந்த பாண்டிய மன்னர்கள் ஒன்று சேராது இருந்து வந்தனர். சேர நாடுகூட ஒரு மன்னரின் குடைக்கீழ் இருந்தது. ஆனால், பாண்டிநாடு ஐந்து துண்டங்களாகப் பிரிந்திருந்தது. அவர்களுக்கு இடையில் அவ்வப்போது நிகழ்ந்த பங்காளிச் சண்டையும் சோழருக்குச் சாதகமாகவே அமைந்தது.

“சிங்களவர் ஒருபுறமும், சோழர் மறுபுறமும் இப்பங்காளிச் சண்டையில் தலையிட்டு, பாண்டிநாடு ஒன்றுசேர விடாது தடுத்தனர்.

“இந்நிலையில்தான் ஐந்து பாண்டிய மன்னரையும் மாறவர்மர் சுந்தரபாண்டியர் தனது அரச தந்திரத்தால் ஒன்றுசேர்த்தார். மூன்றாம் குலோத்துங்க மாமன்னர் மதுரையை அழித்து, கழுதைகளைக்கொண்டு உழச்செய்ததும் மாறவர்மருக்குச் சாதகமாக அமைந்தது. மற்ற பாண்டிய மன்னர்கள் அவரைத் தம் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். அந்த வழக்கம்தான் இன்றும் தொடர்ந்து நடந்தேறுகிறது.

“தன்னிகரில்லாப் பேரரசராகத் தமிழகம் முழுவதும் குலசேகரபாண்டியர் கோலோச்சினும், மற்ற நான்கு பாண்டி மண்டலங்களிலும் தன்னாட்சிதான் நடந்து வருகின்றது.

“இப்போதே அப்படியிருக்கும்போது, மாபெரும் குறிக்கோளை நிறைவேற்ற விரும்பிய சடையவர்மர் சுந்தரபாண்டியருக்கு, அதை அடையப் பலவிதமான சிக்கல்கள் இருந்தன. தன் விருப்பப்படி உடனுக்குடன் முடிவெடிக்க அவரே விரும்பினாலும் மற்ற பாண்டிய மன்னர்களின் உடன்பாடும் அவருக்குத் தேவைப்பட்டது.

“முதலில், வெற்றியினால் கிட்டிய செல்வங்களை மற்ற பாண்டிய மன்னர்களுடன் பகிர்ந்து, மெல்ல மெல்லத் தன் அதிகாரத்தைப் பெருக்கத் தொடங்கினார். இப்பொழுது தமிழ்நாடு, கொங்குநாடு, கருநாட்டின் தென்பகுதி, வட இலங்கை முதலான நிலப்பரப்பு பாண்டியர் வசமாகி உள்ளது என்றால் - அது சடையவர்மர் சுந்தரபாண்டியரின் மதி நுட்பமும், போர்த்திறனுன், அரச தந்திரமும், பேரரசை நிறுவ அவர் எடுத்துக்கொண்ட தளராத விடாமுயற்சியினாலும்தான்” என்று முடித்தார் சதாசிவ சாஸ்திரி.

“ஒப்புக்கொள்கிறேன். சடையவர்மர் சுந்தரபாண்டியரின் நிலைமை இப்பொழுது எனக்கு நன்கு விளங்கிவிட்டது. ஒரு வகையில் அவரது அதிகாரம் எங்களது ஜூலியஸ் சீசரைப் போன்றது எனச் சொல்லலாம். இது ரோமானிய செனட்டை நினைவுபடுத்துகிறது. எங்கள் நாடான இத்தாலியில் நகர நாடுகள் இப்படித்தான் உங்கள் பாண்டியரின் மண்டலங்களைப் போலத் தனித்தனியாக இயங்குகின்றன.

“அது போகட்டும். அந்தக் காடவேன்; அதுதான் அந்தக் காடவ அரசன்… சோழ ராஜாவுக்குத் துணையாகப் புறப்பட்டானே, அது என்ன ஆயிற்று? எனக்குச் சொல்லுங்கள்!” என்று கேட்டான் மார்க்கோ போலோ.

சதாசிவ சாஸ்திரி அவனை அக்காலத்திற்கு அழைத்துச் சென்றார்:

“கண்ணனூரும் கருவூரும் பாண்டியர் கைக்குள் வந்து அடங்கிய பின்னரும், கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் அமைதியாக இருந்த பின்னர், பாண்டியப் படைகளை மும்மடங்கு பெரிதுபடுத்தினார் சடையவர்மர். அதை இரண்டாகப் பிரித்து, ஒரு பிரிவை காடவரின் தலைநகரான சேந்தமங்கலம் கோட்டைக்கு நடத்திச் சென்றார். இன்னொரு பிரிவு சோழர் தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்தை நோக்கிச் சென்றது. ‘நான் வந்துசேரும் வரை, கொள்ளிடத்தைக் கடந்து வடக்கே செல்லக்கூடாது’ என்ற ஆணையையும் இட்டுவிட்டுத்தான் சென்றார்.

“அதற்கு முன்னர் தனது ஒற்றர் படையை விரிவாக்கி, அது செயல்படும் முறையையும் மாற்றினார். தங்களது படைகள் அணிவகுத்துச் செல்வது மற்ற அரசர்களுக்குத் தெரியாத வண்ணம் மறைப்பதில் வெற்றி கண்டார்.

“ஆகவே, அவரது திட்டம் செயல்படும் முறை எவருக்கும் தெரியாமலே போயிற்று. இந்நிலையில்தான் அவரது படை கங்கைகொண்ட சோழபுரம் செல்கிறது என்ற செய்தியை அறிந்த காடவ மன்னன் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் சோழ மன்னர் (மூன்றாம்) இராஜேந்திரனுக்கு உதவியாகச் செல்லத் தீர்மானித்தான். ஆனால், அவனுக்குப் பெரிய ஏமாற்றமே காத்திருந்தது. அவனுடைய படைகளால் சேந்தமங்கலம் கோட்டையை விட்டு வெளியேறிச் செல்வதில் வெற்றி பெற இயலவே இல்லை.”

சேந்தமங்கலம் கோட்டை

நள, ஆவணி 15 - ஆகஸ்ட் 18, 1256

மெச்சும்படி வாழ்ந்து வந்த தனக்கும், தன் பட்டத்து ராணிக்கும், தன் மகளுக்கும் இக்கதியா என்று புழுங்கினான் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் என்று அழைக்கப்பட்ட ஆளப்பிறந்தான்.

சோழ மன்னன் (மூன்றாம்) இராஜேந்திரனுக்கு உதவி செய்யவேண்டுமென்று, கோப்பெருஞ்சிங்கனின் படை, கங்கைகொண்ட சோழபுரம் செல்லும் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் படையை வழிமறித்துத் தாக்குவதற்காகச் சேந்தமங்கலம் கோட்டைக் கதவைத் திறந்து புறப்பட்டது. அங்கே, அவர்களுக்கு எதிர்பாராத வியப்பு காத்திருந்தது.

அவர்களுக்காகவே மறைந்து காத்திருந்த சடையவர்மனின் பாண்டியப்படை கடுமையான தாக்குதலைத் தொடங்கியது. அதைத் தாங்க இயலாது என்றறிந்த கோப்பெருஞ்சிங்கன், கோட்டைக் கதவுகளை மூடிவிட உத்தரவிட்டான். வெளியிலிருந்த காடவரின் படையால், பாண்டியரின் ஆவேசத் தாக்குதலுக்கு முன் மூன்று சாமங்கள் கூட ஈடுகொடுக்க இயலவில்லை. இரவு வருவதற்குள் வெளியிலிருந்த படைகள் முற்றும் அழிக்கப்பட்டன. மறுநாளிலிருந்து முற்றுகை தொடங்கியது.

கோட்டைக் கதவுகளை யானைகள் தாக்கின. மதில்களில் நின்று போரிட இயலாதவண்ணம் பாண்டியரின் வில்லாளிகள் காடவ போர் வீரரைத் தங்கள் கூரிய அம்புகளுக்கு இரையாக்கினர். கோட்டை மதில்களின் உயரத்திற்கு வடிவமைக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த பெரிய கட்டுமான அமைப்புகள், கோட்டைச் சுவர்களுக்கு அருகில் தள்ளிக்கொண்டு வரப்பட்டன.

அவற்றின் மீது கணக்கற்ற வீரர்கள் ஏறிவந்து கோட்டைச் சுவர்களில் குதித்துப் போரிடத் தொடங்கினர். பதினைந்து நாள்கள் நடந்த போரில் சேந்தமங்கலம் கோட்டை சடையவர்மனுக்குச் சரணடைந்தது. கோப்பெருஞ்சிங்கன் பிடிபட்டான்.

எதிரிகளின் தாக்குதலை எதிர்த்து நிற்க வேண்டும் என்று பார்த்துப்பார்த்து தன் தந்தை (முதலாம்) கோப்பெருஞ்சிங்கன் கட்டிய சேந்தமங்கலம் கோட்டை பதினைந்து நாள்களில் பாண்டியப் படையின் இடைவிடாத் தாக்கலுக்கு ஈடுகொடுக்க இயலாமல் அவர்கள் பிடியில் சிக்கிவிடும் என்று (இரண்டாம்) கோப்பெருஞ்சிங்கனால் நம்ப இயலவில்லை.

தங்கள் கோட்டையின் வலிமை மிகுந்த இடம் எது என்பதை முன்கூட்டியே அறிந்து, அதைத் தாக்காமல் விட்டுவிட்டு, வலி நலிந்த இடங்களை முன்னதாகவே அறிந்ததுபோல் இடைவிடாது தாக்கியதும் அவனுக்குப் பெரும் வியப்பாகத்தான் இருந்தது.

பாண்டியருக்குத் தங்கள் கோட்டையின் நுணுக்கங்கள் எப்படித் தெரிந்திருக்கக்கூடும் என நினைத்தால் அவனுக்குக் குழப்பமாகவே இருந்தது. மாறவர்மன் சுந்தரபாண்டியனுக்கு அவனது தந்தை நட்புடன் இருந்தபோது - இளைஞனான சடையவர்மன் தனது தந்தை மாறவர்மனுடன் சிலமுறை சேந்தமங்கலம் கோட்டைக்கு வந்ததும் - அப்போது கோட்டையைச் சுற்றிப்பார்த்து, அதன் வலிமை, வலிமைக்குறைவு இவை பற்றிச் சடையவர்மனுக்கு மாறவர்மன் சொல்லிக்கொடுத்ததும் அவனுக்குத் தெரிய நியாயமில்லைதான்.

சடையவர்மனின் நினைவாற்றலும், மனிதர் எப்படிச் செயல்படுவர் என்று அனுமானிக்கும் திறனும் கோப்பெருஞ்சிங்கன் அறியாத ஒன்றுதான். ஆகவேதான், பாண்டியப்படை கங்கைகொண்ட சோழபுரத்தை நோக்கி முன்னேறுகிறது என்ற தகவலை அவனுக்குக் கிடைக்க வைத்து, அவர் எவர் பக்கம் சேரப்போகிறான் என்பதைத் தெரிந்துகொள்வதற்காகவே, தன் படைகளைச் சதுரங்கக் காய்களைப் போலத் திறமையாக நகர்த்தி கோப்பெருஞ்சிங்கனை கோட்டைக்குள்ளேயே சடையவர்மன் கட்டிப் போட்டுவிட்டான்.

பிடிபட்டு நிற்கும் அவனைச் சடையவர்மன் தன் கூடாரத்திற்கு வரவழைத்தான். அவனைக் கண்டதும், சடையவர்மனின் முகத்தில் வெற்றிப்புன்னகை மலர்ந்தது.

சடையவர்மன்
சடையவர்மன்

“வாரும் ஆளப்பிறந்தானே, உம்மை இப்படிச் சந்திக்க நேரிடும் என நான் நினைக்கவேயில்லை” அவன் குரலிலிருந்தது இலேசான குத்தலா?

கோப்பெருஞ்சிங்கனால் அனுமானிக்க இயலவில்லை. தன்னுடைய பட்டப்பெயரை விடுத்து, தன்னை இயற்பெயரால் அழைப்பதன் காரணத்தை உணர்ந்ததும், அவனுக்கு அவமானமாக இருந்தது. என்ன மறுமொழி அளிப்பது எனத் தெரியாமல் மௌனமாக இருந்தான்.

“நமது தந்தையர் நண்பராய் இருந்தபோது உம்மைச் சந்தித்திருக்கிறேன். அப்போது உம்மை என் தமையனாகத்தான் நினைத்து வந்தேன். அந்த நினைப்பை மாற்றும்வண்ணம் நீர் நடப்பீர் என்று நினைக்கவே இல்லை.”

சடையவர்மனின் குரலில் எந்தவிதமான குற்றச்சாட்டோ, ஏமாற்றமோ இல்லை.

“நீர் இப்போது என்ன நினைக்கிறீர் என்று அறிய விரும்புகிறோம். எமது, பாண்டிநாட்டின் நண்பராகச் சிற்றரசராக இருக்க முடிவு செய்திருக்கிறீரா? அன்றி, இராஜேந்திரசோழனின் நண்பனாக, எமது எதிரியாக, அதன் விளைவுகளை ஏற்க ஆயத்தமாக உள்ளீரா?”

பாதி பேசும்போதே தன் மனக்கிடக்கையைச் சொன்ன சடையவர்மனிலிருந்து - தன்னைத் தமையனாக நினைத்த இளம் சிறுவனின் மனநிலையிலிருந்து - பாண்டிய மன்னனாக மாற்றிக்கொண்டு தன் முடிவைக் கேட்டது ஆளப்பிறந்தானைத் தூக்கிவாரிப்போட்டது.

தான் சொல்லப்போகும் மறுமொழியில்தான் தன் எதிர்காலம் உள்ளது என்று நன்றாக அவனுக்குப் புரிந்தது. பாண்டியனின் திறமையைக் குறைவாகவும், எவ்விதத் தாக்குதலை எதிர்கொள்ளும் என்று சேந்தமங்கலம் கோட்டையின் திறமையை அதிகமாகவும் மதிப்பிட்டதற்குத் தன்னைத்தானே நொந்துகொண்டான்.

தந்தைக்குக் கொடுத்த உறுதிமொழிக்காகத் தான் கொடுத்திருக்கும் விலை மிகவும் அதிகம் என்றும் அறிந்துகொண்டான். சோழருக்கும் பாண்டியருக்கும் இடையே பாலமாக விளங்காது, பாண்டியருக்கு எதிரியாக இருப்பதையே தேர்ந்தெடுத்தது எவ்வளவு தவறு என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிந்தது. தான் என்ன மறுமொழி கூறினாலும், அது கண் கெட்டபின் செய்யும் கதிரவ வழிபாட்டுக்கு ஒப்பாகவே இருக்கும் என்றும் உணர்ந்தான்.

ஆகவே, ஒவ்வொரு சொல்லையும் கவனமாகத் தேர்ந்தெடுத்து குரலில் மரியாதையை வரவழைத்துக்கொண்டு பதில் கூறத் தொடங்கினான்: “சடையவர்மரே!  தாங்கள் என்னைத் தமையனாகக் கருதி வந்ததை அறியாதது எனது அவப்பேறே அன்றி, வேறொன்றுமில்லை.  பரம்பரை பரம்பரையாக நாங்கள் சோழப்பேரரசுக்குப் பணியாற்றிவந்ததைத் தாங்கள் அறிவீர்கள். அவர்கள் எங்களுக்குப் பேரரசர்களாகவே விளங்கி வந்தார்கள். இப்பொழுதுதான் அவர்கள் எங்களுக்குச் சமமாக இருக்கின்றனர். எனவே, இராஜேந்திரசோழன் நட்புக்கரம் நீட்டியவுடன், என் தலைக்கனம் அறிவை அழுத்திவிட்டது. போசளருக்கு எதிராக என் தந்தைக்குத் தோள்கொடுத்த பாண்டியரின் நட்பையும், நன்றிக்கடனையும் மறக்கச்செய்துவிட்டது…”

சற்று நேரம் தயங்கிய பின் மீண்டும் தொடங்கினான்: “இப்போது நான் சொல்வது எதுவும் வில்லிலிருந்து விடுத்த அம்பைப் பிடிக்க ஓடுவதுபோலத்தான் இருக்கும். இருப்பினும், என் தந்தையார் மீதும், எங்கள் காடவர் பரம்பரையின் கௌரவத்தின் மீதும் ஆணையிட்டுக் கூறுகிறேன். இனி உங்களுக்கு எதிராக என்றும் போர்க்கொடி உயர்த்த மாட்டேன்.  தங்களுக்கும், சோழருக்கும் இடையில் நட்புப்பாலமாக இருக்க விரும்புகிறேன்.

அவனை உற்றுநோக்கிய சடையவர்மன் கடகடவென்று பெரிதாக நகைத்தான்.

“உமது குரலில் இருக்கும் கழிவிரக்கம் எமது மனத்தைத் தொடுகிறது. ஆயினும் இல்லாது போகப்போகின்ற நாட்டுக்கு நட்புப்பாலத்தின் தேவை எமக்கு இல்லை. இனி எமக்கெதிராகப் போர்க்கொடி உயர்த்த மாட்டேன் என வாக்குறுதி கொடுக்கிறீரே, அது எப்படி? உம்மால் தனித்து நின்று போர்க்கொடி உயர்த்த இயலுமா? யாம் சேந்தமங்கலத்தை உமக்குத் திருப்பி அளித்தால்தானே அது நடக்கக்கூடும்?”

பாண்டியனின் குரலில் ஏளனம் தொனித்ததை கோப்பெருஞ்சிங்கன் உணராமலில்லை. ஆகவே, பதிலேதும் சொல்ல இயலாது தலைகுனிந்தான். இப்படித் தலைகுனிவதற்குப் பதிலாகத் தன் படைத்தலைவரைப் போல வீர மரணம் எய்தியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று எண்ணிப்பார்த்தான்.

மீண்டும் சடையவர்மனின் சிரிப்பொலி எதிரொலித்தது.

“கவலையை விடும் கோப்பெருஞ்சிங்கரே!” ‘கோப்பெருஞ்சிங்கர்’ என்று தன் பட்டப்பெயரைக் கொண்டு விளிப்பது அவனுக்கு நம்பிக்கையை வரவழைத்தது. தலைநிமிர்ந்து சடையவர்மனைப் பார்த்தான்.

“உம் நாட்டை உம்மிடமே யாம் திருப்பிக்கொடுக்கத் தீர்மானிக்கிறோம் - நீர் எமக்குத் திறை செலுத்தி எமது சிற்றரசராக இருந்துவர ஒப்புக்கொள்ளும் பட்சத்தில்” என்றான் சடையவர்மன். 

கோப்பெருஞ்சிங்கனுக்குத் தன் செவிகளை நம்ப இயலவில்லை. விரைவிலேயே இந்த முடிவுக்குப் பாண்டியன் எப்படி வந்தான்?

சடையவர்மன் மேலும் மொழிந்தான்: “இருப்பினும் இத்தனை பாண்டிய வீரர், உமது படைகளின் தேவையற்ற சாவுக்கு நீர் பொறுப்பானதை உணரும் வகையில் உமக்குத் தண்டனையையும் கொடுக்க யாம் தீர்மானித்துள்ளோம்!”

கோப்பெருஞ்சிங்கனுக்கு சவுக்கடி விழுந்தாற்போலிருந்தது. தண்டனையா? தோல்வியுற்றுத் தலைகுனிந்து நிற்பதை விடப் பெரிதாக எத்தண்டனையை இப்பாண்டியன் தனக்குக் கொடுத்துவிட முடியும் என்று தன்னையே கேட்டுக்கொண்டான். எனவே, பாண்டியனை நிமிர்ந்து உற்றுப்பார்த்தான்.

“உம் மீது யாம் போர் தொடுத்தோ அல்லாது நீர் எம் மீது போர் தொடுத்தோ, அதில் நீர் தோல்வி அடைந்திருந்தாலோ – திறை செலுத்தச் சொல்லிவிட்டு, நமது வழக்கப்படி உம் நாட்டை உம்மிடமே ஒப்படைத்திருப்போம். ஆனால், உம் மீது போர் தொடுக்காது சோழர் மீது போர் தொடுக்க விழைந்த எம்மைச் சோழனுக்கு ஆதரவாகத் தாக்கத் தீர்மானித்துப் புறப்பட்ட உமக்கு - வாழ்நாள் முழுவதும் நினைவிருக்கும்படி சடையவர்மன் சுந்தரபாண்டியனை முதுகில் குத்தத் தீர்மானிப்பவருக்கு எப்படிப்பட்ட பின்விளைவு உண்டாகும் என்று மற்றவர் அறிந்துகொள்ள, உம்மை ஓர் உதாரணமாகக் காட்ட விரும்புகிறோம். எனவே…” என்று நிறுத்திய சடையவர்மன், மீண்டும் ஒவ்வொரு சொல்லுக்கும் அழுத்தம் கொடுத்துத் தன் முடிவை அறிவித்தான்.

“உமது பட்டத்தரசியையும், உமது ஒரே மகளையும் குற்றேவல் செய்து வாழ்நாளைக் கழித்துவரும்படித் தண்டனை அளிக்கிறோம்.45 அதுவும் எமக்கல்ல; எந்தவொரு பாண்டிநாட்டாருக்கும் அல்ல; எந்தச் சோழ மன்னனுக்கு உறுதுணையாக நீர் எம்மைத் தாக்க விழைந்தீரோ, அந்தச் சோழநாட்டார் ஒருவருக்கு, பாண்டிய மன்னருக்குத் தமிழ்த்திருப்பணி செய்துவரும் ஒரு அந்தணருக்குக் குற்றேவல் செய்துவரும்படி அனுப்பப்போகிறோம். மேலும், உம் பட்டத்தரசி, புதல்வியைப் பற்றிய செய்தி எதுவும் உம் வாழ்நாள் முழுவதும் கிட்டாதபடியும் பணிக்கிறோம். நீர் செய்த நட்புத் துரோகத்துக்கு உமது வாழ்நாள் முழுவதும், வருந்தி மனம் புழுங்கும் தண்டனையை அளிக்கிறோம்!”

வங்கக்கடல், தமிழ்நாடு அருகில்

விஜய, தை 25 - ஜனவரி 26, 1294

மேகங்கள் திரண்டு வருவதைப் பார்க்கிறான் மார்க்கோ போலோ. அவற்றின் கரிய நிறம் கடும் மழை வருவதற்கு அறிகுறியாக அவனை எச்சரிக்கின்றது. அதை உறுதிபடுத்துவதுபோல ஓரிரு மழைத்துளிகள் அவன் முகத்தில் விழுகின்றன. அதையும் பொருட்படுத்தாது மரக்கலத்தின் கைப்பிடிக் கிராதியைப் பிடித்தவாறே நிற்கிறான்.

சடையவர்மன் இப்படிப்பட்ட தண்டனையை ஏன் (இரண்டாம்) கோப்பெருஞ்சிங்கனுக்கு அளித்தான், ஏன் அவனது பட்டத்தரசியையும், மகளையும் பாண்டிநாட்டுக்குக் கொண்டுசெல்லாமல், சோழநாட்டில் வாழும் ஓர் அந்தணருக்குக் குற்றேவல் செய்ய அனுப்பி வைத்தான் என்று கேட்டதும், தன் பாட்டனாரிடம்தான் அவர்கள் அனுப்பப்பட்டனர் எனச் சதாசிவ சாஸ்திரி பதிலளித்தது மார்க்கோ போலோவின் நினைவுக்கு வருகிறது. ஒரு மன்னனின் பட்டத்தரசி தனது பாட்டனாரிடம் குற்றேவல் செய்ய அனுப்பப்பட்டதை எவ்வளவு சாதாரணமாகச் சொல்கிறார் என்பதனை மனக்கண்முன் நிறுத்திப் பார்த்தால் இப்பொழுதும் அவனால் நம்ப இயலாதுதான் போகிறது…

…“ஆனாலும் என் பாட்டனார் அவர்களைப் பணியாளராய் நடத்தவில்லை. அவர்களுக்கென்று நல்ல வீட்டைத் தன் மானியத்திலிருந்து கட்டுவித்து, அவர்களுக்காகச் சில பணியாளர்களையும் நியமித்தார். ஆயினும், மனமுடைந்துபோன அரசி ஓரிரு ஆண்டுகளில் இறந்துவிட்டார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்” என்று பதில் சொன்னார் சதாசிவ சாஸ்திரி.

------------------------------------

[45. தன்னிடம் தோல்வியடைந்த இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனுக்கு அவனது நாட்டைத் திருப்பிக் கொடுத்தாலும், அவனது பட்டத்து ராணியையும், வாரிசுகளையும் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கவர்ந்து சென்றான் என்பது வரலாறு.]

“உங்கள் பாட்டனாரைச் சடையவர்மன் சுந்தரபாண்டியன் எப்படித் தேர்ந்தெடுத்தார்?  இப்போது அரசகுமாரி எப்படி இருக்கிறாள்?” என மார்க்கோ போலோ வினவினான்.

“மாறவர்மர் சுந்தரபாண்டியருக்கு எனது முப்பாட்டனார் நீலகண்ட தீட்சிதர் அறிமுகமானதிலிருந்தே, அவர்கள் இருவருக்குமிடையில் நட்பு பரிணமித்ததை உங்களுக்கு ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அவரது மகனை, என் பாட்டனாரைத்தான் சடையவர்மர் சோழநாட்டு அந்தணர் எனக் குறிப்பிட்டர். எங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் தடையில்லாது பாண்டிநாடு வந்து போக அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

“அரசியாரையும், அவரது புதல்வியையும் சடையவர்மர் பாண்டிநாட்டுக்கு ஏன் அழைத்துச் செல்லவில்லை என்று கேட்டீர்கள். அங்கு அழைத்துச் சென்றால், இருவருக்கும் குற்றேவல் செய்யும் நிலைதான் ஏற்படும் என்பது சடையவர்மருக்கு நன்றாகவே தெரியும்.  கோப்பெருஞ்சிங்கனை முழுவதும் அவர் நம்பவில்லை; ஆகையால், அவன் மனம் வருந்த வேண்டும், பாண்டியருக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தக்கூடாது என்பதற்காகத்தான் அப்படிச் சொன்னார். ஆனால், இருவரையும் நன்கு நடத்த வேண்டும் என்று குறியீட்டாக எழுதித்தான் அனுப்பினார். அதை அறிந்த என் பாட்டனார், சடையவர்மரின் ஆணையை நிறைவேற்றினார்.

“இளவரசியைத் தகுந்த இடத்தில்தான் எனது பாட்டனார் திருமணம் செய்துகொடுத்தார். அவளும் ஒரு ஆண் மகவை ஈன்றவுடனேயே குளிர்க்காய்ச்சலில் இறைவனடி சேர்ந்துவிட்டாள்.  அவளின் கணவரும் அவளைத் தொடர்ந்து இவ்வுலகைவிட்டுச் சென்றுவிடவே, அக்குழந்தையை என் தந்தைதான் வளர்த்தார். இப்பொழுது அக்குழந்தை பெரியவளாகித் திருமணமும் நடந்து ஒரு பெண் குழந்தைக்கும் தாயாகி உள்ளாள்” என்று மார்க்கோ போலோவின் ஐயத்தை சதாசிவ சாஸ்திரி தீர்த்து வைத்தார்.

“அதற்குபின் என்ன ஆயிற்று? சோழநாட்டைச் சடையவர்மன் சுந்தரபாண்டியன் தாக்கினாரா?” என்று கதை கேட்கும் குழந்தையை போல ஆர்வமுடன் கேட்டான்.

“கங்கைகொண்ட சோழபுரம் எளிதில் வீழ்ந்துவிட்டது. அழகாகத் திகழ்ந்த அம்மாநகரைத் தரைமட்டமாக்கி அழிக்க வேண்டும் என்று புறப்பட்டுச் சென்ற சடையவர்மரை ஏதோ ஒன்று தடுத்து நிறுத்தியது. அரச மாளிகைகளை மட்டும் இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டு, நகரை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டார். அதற்கு ஒருவகையில் காரணம் எனது பாட்டனார்தான்.

“அரச மாளிகைகள் இடிபடத் தொடங்குகின்றன என்பதை அறிந்ததும் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு ஓடோடியும் வந்தார். பாண்டிய மன்னரைச் சந்தித்து, நகரை அழிக்க வேண்டாம் என்று பலவாறும் வேண்டிக்கொண்டார். அதற்கு இரங்கிய சடையவர்மர், இராஜேந்திரசோழர் திறை செலுத்திக் குறுநில மன்னராக வாழ்ந்து வர ஒப்புதல் அளித்தால், மேலே எந்தவிதமான நாசமும் செய்யாமல் விட்டுவிடச் சம்மதித்தார். இராஜேந்திரசோழரும் அதற்குச் சம்மதிக்கவே, அன்று கங்கைகொண்ட சோழபுரம் தப்பியது” என்று நிறுத்தினார் சதாசிவ சாஸ்திரி.

“அன்று தப்பியதென்றால்...?”

“பின்னர் கங்கைகொண்ட சோழபுரம் அழிந்துவிட்டது என்றுதானே பொருள்?” சாஸ்திரியிடமிருந்து பெருமூச்சு பிறந்தது.

“அது ஏன் அப்படி நிகழ்ந்தது? பாண்டிய மன்னர் ஒருசில மாளிகைகளை அழித்ததோடு விட்டுவிட்டார் என்று சொன்னீர்களே?”

“விநாச காலே, விபரீத புத்தி, அதாவது ‘அழியும் காலத்தில் மாறுபாடான அறிவு’ என்று வடமொழியில் ஒரு பழமொழி உண்டு. பன்னிரண்டு ஆண்டுகள் சென்ற பிறகு கோப்பெருஞ்சிங்கனுக்கும், இராஜேந்திரசோழருக்கும் அது உண்டாகியது.”

“பன்னிரண்டு ஆண்டுகளா? அப்படி என்ன நடந்தது?”

“அந்த ஆண்டில்தான் சடையவர்மர் சுந்தரபாண்டியர் இறைவனடி சேர்ந்தார். இடைவிடாது போர் புரிந்து விழுப்புண்களைத் தாங்கி நலிந்த உடலில், அப்புண்கள் புரையோடி உள்ளுறுப்புகளைப் பாதித்துவிட்டன. ஆகையால், தன் அறுபதாம் அகவையிலேயே சிவபெருமானை சேர்ந்து விட்டார் - கொங்கு ஈழம் கொண்டு, கொடுவடுகு கோடழித்து கங்கை இருகரையும் காவிரியும் கைக்கொண்டு, வல்லாளனை வென்று, காடவனைத் திறைகொண்டு, தில்லை மாநகரில் வீராபிஷேகமும் செய்தருளிய கோச்சடை பன்மரான திரிபுவனச் சக்ரவர்த்திகள் ஸ்ரீ வீரபாண்டிய தேவர்.”46

“சடையவர்மரின் இளையோனான வீரபாண்டியர், பேரரசர் நீண்டகாலம் ஆட்சி செய்தால்தான் பேரரசு நிலைக்கும் என விரும்பினார். ஆகவே, முதியவரான தான் மதுரையில் அரியணை ஏறுவதை விட இளைஞரும், சடையவர்மரின் புதல்வருமான குலசேகரர் அரியணை ஏறுவதே சாலச்சிறந்தது எனக் காரணம் காட்டினார். மாறவர்மர் குலசேகரபாண்டியரும், பாண்டியரின் மாமன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறிய தகப்பனாரின் விருப்பத்திற்கிணங்க குலசேகரபாண்டியர் மதுரையில் பாண்டிய மாமன்னராகத் தலைமைப் பொறுபேற்று முடிசூடினார்.

“அச்சமயம்தான், சிங்கமாக விளங்கிய சடையவர்மரின் மறைவு பாண்டிநாட்டை நிலைகுலையச் செய்திருக்கும் எனத் தப்புக்கணக்குப் போட்டு, இராஜேந்திரசோழரும், கோப்பெருஞ்சிங்கரும் ஒன்றிணைந்து மீண்டும் பாண்டிநாட்டுக்கெதிராகப் போர் துவங்கினர்.

“வீரத்தில் தன் தந்தையாருக்கு நிகரானவரும், அவரிடமும் சிறிய தந்தையார் வீரபாண்டியரிடமும் போர்முறைகளைக் கற்றுத்தேர்ந்தவருமான குலசேகரபாண்டியரின் தினவெடுத்த தோள்களுக்கு வேலை கொடுத்தனர் அவ்விருவரும். அவர்கள் இருவரையும் எமனுலகுக்கு அனுப்பினார் குலசேகர பாண்டியர்.

“’கங்கைகொண்ட சோழபுரம் தலைநகரமாக இருப்பதால்தானே, சோழர் பாண்டியருக்கு எதிராகச் சமர் புரியத் துணிகின்றனர்’ என்று சினந்த குலசேகரபாண்டியர், பெருவுடையார் கோவிலைத் தவிர வேறு எந்தக் குடியிருப்புமே இல்லாதவாறு தரைமட்டமாக்கி அழித்துவிட்டார்.”

இதைச்சொன்ன சதாசிவ சாஸ்திரியின் கண்களில் நீர் கசிந்தது. மேலாடையால் அதை ஒத்தியெடுத்த அவர், “தமிழ்நாட்டில் மதுரையை விடப் பெரிதாக விரிந்து படர்ந்திருந்ததும், (முதலாம்) இராஜேந்திரசோழரால் நிறுவப்பட்டு இருநூறாண்டாடுகளாகச் சோழப்பேரரசின் தலைநகராகச் சிறந்து விளங்கிய கங்கைகொண்டசோழபுரம் அடியோடு அழிந்தது. அத்தனை காலம் அவர்களால் அடிமைபடுத்தப்பட்டு, அவமதிக்கப்பட்டு, நசுக்கப்பட்டுப் பழிவாங்கத் துடித்த பாண்டியரால் - எந்த இராஜேந்திரர் அந்நகரைப் பார்த்துப் பார்த்து எழுப்பப்பட்டு, கங்கை நீரைத் தருவித்துப் புனித நீராட்டியதால் ‘கங்கைகொண்ட சோழபுரம்’ எனப் பெயர் பெற்றதோ - அதே இராஜேந்திரரின் பெயரைச் சூட்டிக்கொண்டிருந்தவர் செய்த முட்டாள்தனத்தால் - இருந்த இடம்தெரியாது அழிந்துபோனது!” இதைச்சொன்ன சதாசிவ சாஸ்திரியால் தன் கண்ணீர்ப்பெருக்கைத் தடுக்க இயலவில்லை. மன வருத்தத்தில் ஆழ்ந்து அமைதியாகி விட்டார்.

பத்துப் பதினைந்து மணித்துளிகள் எவரும் பேசவில்லை. அந்த அமைதியின் பேரிரைச்சலை மார்க்கோ போலாவினால் தாங்க முடியவில்லை. பொறுத்துப் பார்த்துப் பொறுத்துப் பார்த்து, அமைதியிழந்தவன், “செனோர் ஸாஸ்ட்ரீ (திருவாளர் சாஸ்திரியாரே)! எனக்கும் வருத்தமாகத்தான் உள்ளது. மேலே சொல்லுங்கள்” என்று தூண்டினான்.

“பெருவுடையார் கோவில் மட்டும் மிஞ்சியில்லாதுபோனால், கங்கைகொண்ட சோழபுரம் என்றவொரு நகரம் இருந்ததையே இன்று யாரும் அறிய முடியாது போயிருக்கும். யாத்திரீகரே! இருபத்தாறு ஆண்டுகளுக்குமுன் அந்த அவலம் நடந்தேறியது. அப்போது எனக்கு எட்டு வயதிருக்கும். திருத்தலப் பயணத்துக்குக் காலஹஸ்தி சென்றிருந்த என் தகப்பனார், செய்தி தெரிந்ததும் ஓடோடியும் வந்தார்.

தான் குடியிருந்த வீடுகூட எங்கிருந்தது என்று தெரியாத அளவுக்கு அங்கு குவிந்திருந்த குவியலைக் கண்டு துடிதுடித்தார்.  தங்களது பழிவாங்கும் வெறியைத் தீர்ப்பதற்காக மன்னர்கள் நகரங்களை அழிப்பது எவ்விதத்தில் நியாயம் என்று துடித்தார்.

-----------------------------------------

46. சடையவர்மன் சுந்தரபாண்டியனின் மெய்கீர்த்தி

“கிட்டத்தட்ட முந்நூறு ஆண்டுகளாகத் தமிழகத்தின் பேரரசர்களாய்த் திகழ்ந்த சோழர்கள் அடியோடு அழிக்கப்பட்டனர். இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக அடக்கிவைக்கப்பட்டதால் பாண்டியர் இதயத்தில் அடங்காமல், அணையாது கொழுந்துவிட்டு எரியச் செய்துகொண்டிருந்த பழிவாங்கும் வெறிக்கனல் சோழரின் மூன்று தலைநகரங்களான தஞ்சை, உறையூர், கங்கைகொண்ட சோழபுரம் இவற்றை எரித்து அழித்துக் கொளுத்திவிட்டது. இந்த மூன்றில் தஞ்சை மட்டுமே சிறிது தப்பிப் பிழைத்தது. மற்ற இரண்டும் அடியோடு அழிந்துபோயின, யாத்திரீகரே அடியோடு அழிந்துபோயின!

“கங்கைகொண்ட சோழபுரத்தில் இறுதியாக ஆண்டுவந்த இராஜேந்திரசோழரின் மரணத்திற்குப்பின் - கடந்த கால் நூற்றாண்டாக – பெயர் சொல்லிக்கொள்ளக்கூட சோழ மன்னர் எவரும் இல்லாது போய்விட்டனர். அவர்கள் தேடித்தேடி அழிக்கப்பட்டனர். மன்னர்கள் அனைவரையும் வென்ற குலசேகரபாண்டியர், ‘கோனேரின்மை கொண்டான்’ என்ற பட்டத்தையும் அடைந்தார்!”

பொங்கிவந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்ட சதாசிவ சாஸ்திரி, மேலே எதுவும் பேச விரும்பாமல் அங்கிருந்து அகன்று விட்டார்…

…மழை வலுக்கத் தொடங்குகிறது. மார்க்கோ போலோ தொப்பலாக நனைந்துபோகிறான். இருந்தபோதிலும், தமிழகத்தை நோக்கி நிலைத்திருந்த கண்களை அவனால் அகற்ற முடியவில்லை.

அன்று காலை சதாசிவ சாஸ்திரியிடமும், அப்துல்லாவிடமும் விடைபெற்றுக்கொண்டது இன்னும் பசுமையாக உள்ளது. வடமொழியில் ஏதோ சொல்லி அவர் வாழ்த்தியது, அதன் பொருளைத் தனக்கு உரைக்குமாறு கேட்டுக்கொண்டதும், ஒவ்வொரு சொல்லுக்கும் வெளி மற்றும் உட்பொருள்களை விளக்கியதும் நினைவுகூர்கிறான்.

‘எனக்கு இவ்வளவு மதிப்புக் கொடுத்து, உங்கள் நாட்டைச் சுற்றிப்பார்க்க ஆதரவளித்த உங்கள் பாண்டிய மாமன்னருக்குப் பதில் உதவி செய்ய வேண்டும். சிறிதாக லாடம் அடிப்பது மூலம் குதிரைகளை நிறைய காலம் பராமரிக்க இயலும். குதிரையின் குளம்புகள் தேய்ந்து வலியில் துடிக்கும்போது, வேறு வழியின்றி அதைக் கொல்லவேண்டி உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான குதிரைகள் அவற்றின் உபயோகமான காலத்திற்கு முன்பே கொல்லப்படுகின்றன. பணத்தைப் பெரிதாக நினைக்கும் அரபு வணிகர்கள் இந்தச் சிறு விஷயத்தை உங்களிடம் மறைத்துக்கொள்ளை ஊதியம் தீட்டிக்கொண்டுள்ளனர்.47 இதை உங்களுக்குத் தெரிவிப்பதன் மூலம் தங்கள் குதிரைகள் நீண்டகாலம் பராமரிக்கப்பட்டு, உங்கள் அரசருக்கு ஆகும் செலவு குறையும். இந்தச் சிறு உதவியைத்தான் இத்தனை காலம் என்னைச் சிறந்த விருந்தினனாக நடத்திய உங்கள் மாமன்னருக்குச் செய்ய இயலும்’ என்று விளக்கியவுடன் அவரது முகம் தாமரையாக விரிந்து மலர்ந்தது கண்முன் நிழலாடுகிறது.

“தலைவரே, கொட்டும் மழையில் என்ன செய்கிறீர்கள்? காற்றும் பலமாக அடிக்கிறது. உங்களைக் கப்பலுக்கு வெளியில் அது தூக்கியெறிந்துவிடப் போகிறது. உள்ளே வாருங்கள்!” என்று மீகாமன் அழைத்ததும், திரும்பிப் பார்த்துவிட்டு, மீண்டும் தமிழகம் இருந்த திக்கைப் பார்க்கிறான்.

தமிழகத்தின் கரை கண்ணிலிருந்து மறைந்துபோகிறது. பதில் எதுவும் சொல்லாமல், மீகாமனைப் பின்பற்றிச் சென்று கப்பலின் உள்ளே, மழை தாக்காத அறைக்குள் கனத்த மனத்துடன் நுழைகிறான் மார்க்கோ போலோ.

-----------------------------------

[47. ‘குதிரைகளுக்கு லாடம் அடிப்பதன் மூலம் அவற்றை நீண்ட காலம் பராமரிக்கலாம் என்ற செய்தியை, லாபம் கருதி அரபு வணிகர்கள் பாண்டியரிடமிருந்து மறைத்து வந்தனர்.’ - மார்க்கோ போலோவின் குறிப்புகள்.]

***

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com