பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -நான்காம் பாகம்-அத்தியாயம் 15

பாண்டியர் அரண்மனை
பாண்டியர் அரண்மனை

பாண்டியர் அரண்மனை, மதுரை 

கீலக, பங்குனி 6 - மார்ச் 8, 1309 

மையிருட்டாக இருக்கும் அந்த அறைக்கு ஒளியைத் தர முயன்ற அந்தத் தூங்காவிளக்கு தோல்வியைத்தான் தழுவிக்கொண்டிருக்கிறது. கண்களைக் கசக்கிவிட்டுக்கொண்டு பார்த்தால், அறையிலிருக்கும் மஞ்சத்தில் யாரோ படுத்திருப்பது தெரிகிறது. படுத்திருக்கும் உருவத்திடமிருந்து விட்டுவிட்டு வரும் மூச்சு, கரகரவென்ற மெல்லிய ஒலியாக அந்த இருட்டறையின் அமைதியை அவ்வப்போது கலைத்து வருகிறது. சிலசமயம் அந்த உருவம் மிகவும் சிரமத்துடன் இருமுவதும் பெரிய ஒலியாகக் கேட்கிறது. 

மாறவர்மன் குலசேகரபாண்டியன்
மாறவர்மன் குலசேகரபாண்டியன்

நம்பத்தான் முடியவில்லை - அந்த உருவத்துக்குச் சொந்தக்காரர், ‘கோனேர் இன்மை கொண்டான்’ என்ற பட்டப்பெயருடன் தென்னிந்தியாவை ஒரு குடைக்குக்கீழ் மதுரையிலிருந்து கோலோச்சி வந்த மாறவர்மன் குலசேகரபாண்டியன் என்பதை அறியும்போது… கடந்த ஆறு திங்களாக வாட்டிவரும் கடும் நோயினால் உருக்குலைந்து போயிருக்கிறார். அரச மருத்துவர்களும் பலவிதமான மருந்துகளைக் கொடுத்து, அவரைக் குணப்படுத்த முயன்று, அம்முயற்சியில் தோல்வியையே தழுவி வருகின்றனர். ஆகையால், கடந்த இரண்டு மாதங்களாக எவ்விதச் சிகிச்சையும் வேண்டாமென மறுத்துவிட்டிருக்கிறார் குலசேகரபாண்டியன். தனிமையே அவருக்குப் பெரும் அருமருந்தாக இருக்கிறது. 

தனக்குப் பிறகு, பாண்டியப் பேரரசு எப்படி இருக்குமோ, அதன் நிலை என்னவாறு ஆகுமோ என்ற கவலை அவரைப் பெரிதும் வாட்டியெடுக்கிறது. முப்பத்தைந்து வயதில் பாண்டியப் பேரரசுக்குக் காவலனாக மதுரையில் முடிசூடி, போசள மன்னன் இராமநாதனையும், சோழ மன்னனான (மூன்றாம்) இராஜேந்திரனையும் புறங்கண்டு, கங்கைகொண்ட சோழபுரத்தைத் தரைமட்டமாக்கிச் சோழப் பரம்பரைக்கே முற்றுப்புள்ளி வைத்துவிட்ட பாண்டியன் என்ற பெருமையைச் சேர்த்து, தான் கலந்துகொண்ட அனைத்துப் போரிலும் வெற்றியால் மீண்டும் மீண்டும் விரும்பித் தழுவப்பட்டு, நாற்பதாண்டுகளாகச் சீரும் சிறப்புடன் மக்களிடம் பெருமதிப்புப் பெற்று ஆட்சி செய்து வந்த அவருக்கு என்ன கவலை இருக்கக்கூடும்?! எந்த எதிரிகளை நினைத்து அவர் அப்படி உடலே உருகுமளவுக்குக் கவலைப்படுகிறார்? 

அதற்குக் காரணமில்லாமலும் இல்லை. உடன்பிறந்தே கொல்லும் நோய் என்பதைப்போல் தன் இரண்டு மைந்தர்களும் ஒருவருக்கெதிராக மற்றொருவர் போர்க்கொடி உயர்த்தும் நிலைக்குப் போயிருப்பதுதான் அவரை அப்படி உருக்கி, மீளாக் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. 

அவரது மூத்த மைந்தன் வீரபாண்டியன், அரச குடும்பத்தில் பிறக்காத அவரது ஆசை மனைவிக்குப் பிறந்தபோதிலும், மன்னனுக்குரிய சிறப்புகள் அனைத்தையும் பெற்று, பல போர்களில் எதிரிகளை வீழ்த்தித் தன் திறமைகளை வெளிக்காட்டி வருவதால் - பட்டத்தரசிக்குப் பிறந்த சுந்தரபாண்டியனை விடுத்து - வீரபாண்டியனுக்கே பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் இளவரசுப் பட்டத்தைச் சூட்டி மகிழ்ந்தார் குலசேகரபாண்டியன். 

அச்செயல் பலருக்கும் பிடிக்கவில்லை. சுந்தரபாண்டியனுக்குப் பேரரசை நிர்வகிக்கும் திறமையில்லை, முன்கோபத்தினால் எதையும் சீர்தூக்கிச் செயலாற்றும் ஆற்றலும் குறைவாகவே உள்ளது என்பதை அறிந்தும், பாண்டிய மன்னர் ஐவரில், மூவர் அவன் பக்கம் இருக்கின்றனர் என்ற செய்தி அவருக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது… 

…“வீரபாண்டியன் எனது இரத்தம்! அதை அறிந்தும் அவனுக்கெதிராக எப்படிச் சுந்தரனுக்கு ஆதரவாகப் பேசுகின்றீர்?” என்று சினத்தில் சீறியவருக்கு அவர்கள், “தமையனாரே, கடுங்கோன் பாண்டியர் முதலாகச் சோழர்தம் பிடியிலிருந்து மதுரையை மீட்ட மாறவர்மன் சுந்தரபாண்டியர், நமது பாண்டியப் பேரரசினை மீண்டும் உயிர்ப்பித்த தங்கள் தந்தையார் சடையவர்மர், அதற்குப் பின்னர் தமிழகம் மட்டுமன்றி, தென்பாரதம், வட இலங்கை இவற்றை நம் பாண்டிநாட்டுக்கு அடிபணியச் செய்து, மதுரையில் கோலோச்சி, நிகரற்ற மாமன்னராக விளங்கும் தாங்கள் – இத்தனை பேர் அமர்ந்து ஆட்சி செய்துவரும் நமது பரம்பரை அரியணையில் - தங்கள் குருதியில் தோன்றியவனாகவே இருப்பினும், அரச குலத்தில் பிறக்காத பெண்ணுக்குப் பிறந்த ஒருவனை - எப்படி எங்களால் தலைவனாக ஏற்க இயலும்?” என்று மறுத்துப் பேசி, மேலும் தொடர்ந்தனர்: 

“இந்நாள் வரை பாண்டிய மன்னர் ஐவரும் ஒருமனதாகத்தானே மதுரைக் காவலரைத் தேர்ந்தெடுத்து வந்திருக்கிறோம்? ஐவரில் மூவர் எதிர்த்தும், வீரனுக்கு இளவரசுப் பட்டம் கட்டியது எங்களைத் தாங்கள் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்பதைத்தானே காட்டுகின்றது! இச்செயல் எங்கள் மனதை எப்படிப் புண்படுத்திக் கிழிக்கும் என்பதைத் தாங்கள் எண்ணிப் பாராது, அலட்சியமாக முடிவெடுத்தது எவ்விதத்தில் நியாயமானது?  பாண்டிநாட்டுக்குத் தாங்கள் செய்த சேவையை எண்ணித்தான் இதுகாறும் எங்களை அடக்கிகொண்டிருக்கிறோம்; எங்கள் வாயை இறுக மூடிக்கொண்டிருக்கிறோம்” எனப் பலவிதமாகக் குறைப்பட்டுக்கொண்டபோதும், தனது மட்டற்ற செல்வாக்கினால், அவர்களின் எதிர்ப்பைச் சமாளித்தார் குலசேகரபாண்டியன்…  

…ஆயினும், பன்னிரண்டாண்டுகளில் அவர்களது மனக்கசப்பு குறைந்துவிடும், வீரபாண்டியன் அவர்களிடம் தனது செல்வாக்கை உயர்த்திக்கொண்டுவிடுவான் என்ற எதிர்பார்ப்பு பயனற்றுப்போனது என்பதை அவர் அறிந்திருக்கிறார். அதேசமயம், சுந்தரபாண்டியன் அவர்களிடமிருக்கும் தனது செல்வாக்கை உயர்த்தி வருகிறான் என்பதும் அவரது கவனத்துக்கு வராமலில்லை. 

அரசுவழிப் பெண்ணுக்குப் பிறக்காத ஒரே காரணத்தால் திறமைமிக்க வீரபாண்டியனுக்கு ஆதரவு குறைவது அவரை மிகவும் அரித்து வருகிறது. இப்படித் திறமையில்லாத ஒருவனுக்கு, அவனது பிறப்பு ஒன்றினாலே ஆதரவைத் தருவதால், பாண்டியப் பேரரசைப் பலவீனப்படுத்துகிறார்களே என்பதை எண்ணும்போது இதயத்துடிப்பே நின்றுவிடும்போல இருக்கின்றது. இக்கவலைகளே அவரை மிகவும் உருக்குலைத்து, எழுபத்தி நான்கு வயதானவரை எலும்புக்கூடாக உருமாற்றியிருக்கிறது. 

அறைக்கதவு திறக்கப்படும் ஒலியெழுகிறது. காலடிச் சத்தமும் கேட்கிறது. உறக்கம் வராது படுத்திருப்பவர், இந்த இரவு வேளையில் தன்னைத் தேடி எவர் வரக்கூடும் என்ற நினைப்பில் மெதுவாக எழ முயற்சிக்கிறார். தூங்காவிளக்கு தூண்டப்பட்டதால், அறையில் வெளிச்சம் அதிகரிக்கிறது. சுந்தரபாண்டியனின் முகம் புலப்படுகிறது. 

இந்த நேரத்தில் இவன் தன்னை எதற்குத் தேடி வந்திருக்கிறான் என்ற நினைப்புடன் தலையணையில் சாய்ந்து அமர்கிறார். வழக்கம்போல அவரைக் கடுகடுத்த முகத்துடன் பார்க்கிறான் சுந்தரபாண்டியன். 

“எனக்கு அமைதி தேவை என உனக்குத் தெரியாதா? ஏனிந்த இரவு நேரத்தில் இங்கு வந்து என்னைத் தொந்தரவு செய்கிறாய்?” என்ற இரண்டே கேள்விகள் வாயிலாகக் குலசேகரபாண்டியன் அவனைப் பார்க்க விரும்பவில்லை என்று தெரிவிக்கிறார். 

“எனக்கும் உங்களை வந்து பார்க்கப் பிடிக்கவில்லைதான். ஆயினும், எனது நெல்லைச் சிற்றப்பனார்தான் அனுப்பி வைத்தார்” என்று சுந்தரபாண்டியன் சொற்களைக் காறி உமிழ்கிறான். அவனிடமிருந்து மதுவின் நெடி குப்பென்று வீசுகிறது. 

முகத்தைச் சுளித்தவாறே, “அது காலை வரை பொறுக்காதா என்ன?” என்று குலசேகரபாண்டியன் கேட்கிறார். 

“நன்று செய்ய நினைத்தால் அதை அன்றே செய் எனப் பெரியோர் உரைத்த சொற்படிதான் வந்துள்ளேன்” கிண்டலுடன் பதில் வருகிறது. 

“பாண்டிநாட்டுக்கு நீ அப்படியென்ன நல்லதைச் செய்துவிடப் போகிறாய்? நான், எனது, எனக்கு இந்தச் சுயநலச் சொற்களை விடுத்து, உன்னிடமிருந்து வேறெந்த சொற்களும் இதுவரை என் செவிகளில் விழுந்ததே இல்லையே!” 

இத்தனை நலம் குலைந்த நிலையிலும் தன் மிடுக்கை விடாது, தன் மகனின் போக்கைத் தான் விரும்பவில்லை என வெட்டொன்று துண்டிரண்டாகத் தெரிவிக்கிறார். அவர் சொல்வதின் பொருள் நன்றாகப் புரிந்திருந்தாலும், ஏதோ நகைச்சுவைப் பேச்சைக் கேட்டது போலப் பெரிதாக நகைத்த சுந்தரபாண்டியன், “பாண்டிநாட்டுக்கு மாபெரும் தீமையைத்தான் தாங்கள் செய்துவிட்டிருக்கிறீர்களே - அதையும் நன்றாகத் தெரிந்துகொண்டே! சிறிய தந்தைகள் வேண்டாம் என்று தடுத்தும், நம் நாட்டின் பழம்பெருமையைக் குலைத்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாய் நீங்கள்தான் செயல்பட்டு வருகிறீகள்” என்றவன் தொடர்கிறான்: 

“பட்டத்தரசியின் வயிற்றில் உதித்த நான் இருக்கும்போது, ஆசைநாயகியின் பிறப்புக்கு இளவரசுப் பட்டத்தைச் சூட்டி, பாண்டிநாட்டிற்கே களங்கத்தைத் தேடிக்கொடுத்துள்ளீர்கள். அப்படியிருக்க, என்னை ‘என்ன நல்லது செய்யப்போகிறாய்’ என்றா கேட்கிறீர்கள்?  பாண்டிநாடே தலைகுனிந்து நிற்பது உங்களுக்குத் தெரியாதுபோனது, கண்ணிருந்து குருடராகியுள்ளீர்கள் என்பதைத்தானே காட்டி நிற்கிறது?’ என உறுமுகிறான். 

குலசேகரபாண்டியனின் உதடுகள் சினத்தில் துடிக்கின்றன. அதை அடக்கிக்கொண்டு, “பாண்டியப் பேரரசை நிறுவிய உன் பாட்டனார் சடையவர்மன் சுந்தரபாண்டியரின் பெயரை உனக்கு ஏன் சூட்டி மகிழ்ந்தேன் தெரியுமா? ஐந்து பாண்டிய மன்னர்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒருங்கிணைந்த பாண்டிநாட்டைப் பேரரசாகச் செய்த அவரைப்போல் சிறந்து விளங்கவேண்டும் என்றுதான். ஆனால், பெயரை மட்டும் சூடிக்கொண்டால் போதுமா?  அவரைப்போல் செயல்பட வேண்டாமா? 

“அவர் தமிழ்நாட்டிலிருந்து போசளரை விரட்டியடித்தார். தமிழகம் முழுவதிலும் மீனக்கொடியைப் பறக்கவிட்டார். பாண்டிநாட்டையே தலைநிமிர்ந்து பெருமையுடன் மார்தட்டச் செய்தார். ஆனால், நீ என்ன செய்கிறாய்? வீர(பாண்டிய)னுடன் இணைந்து இரு கரங்களாக நம் நாட்டை ஒன்றிணைப்பதற்குப் பதிலாகத் துண்டாட முனைகிறாய்.  உடன்பிறந்தே கொல்லும் வியாதியாய் இந்த நாட்டை அரித்துக் கொல்ல முற்படுகிறாய்.  மனதைத் தொட்டுச் சொல். வீரனை விட எவ்விதத்தில் சிறந்தவன் என்று உன்னைச் சொல்வாய்?” இருமல் அவரது பேச்சை நிறுத்துகிறது. 

தன் இதயத்தில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கும் பொறாமைக் கனலை எகத்தாளத் தொனியுடன் கலந்து, “நம் படைத்தலைவர் நம்மை விட நன்கு போரிடுகிறார் என்பதற்காக அவரை அரியாசனத்தில் அமர்த்திவிடுகிறோமா என்ன? பரம்பரை பரம்பரையாக நம்மைக் காக்க உயிரையும் தயங்காது கொடுக்கத் துணிகின்றனர் என்பதற்காக, நம் மெய்காப்பாளருக்கு நாட்டின் ஒரு பகுதியைப் பிரித்துக்கொடுத்து, அவர்களை மன்னர்களாக்கி விடுகிறோமா? இல்லையே! அப்படியிருக்க, வீரனுக்கு இளவரசுப் பட்டம் அளித்திருப்பது கேலிக்கூத்தாக அல்லவா இருக்கிறது! வேண்டுமெனில் அவனுக்குக் கொங்குநாட்டையோ, தொண்டைநாட்டையோ அல்லது வட இலங்கையையோ தானமளித்திருக்கலாமே! மதுரையின் வருங்காலக் காவலனாக முடிசூட்ட வேண்டுமா என்ன?” உமிழ்ந்து தள்ளுகிறான் சுந்தரபாண்டியன். 

“இவற்றைப் பலமுறை கேட்டு என் காதுகள் புளித்துப்போய்விட்டன. மீண்டும் மீண்டும் இதைச் சொல்லவா, இந்த இரவில் இங்கு வந்தாய்?” அவர் குரலில் சிங்கத்தின் சீற்றம் தொனிக்கிறது. 

“நீங்கள் செய்துள்ள தவறான செய்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் வந்துள்ளேன்” என்று தன் இடுப்பில் சொருகியிருந்த குழலை எடுத்து விரித்துக் குலசேகரபாண்டியனுக்குக் காட்டுகிறான். 

“ஆசைநாயகியின் கட்டாயத்தால் பாண்டிநாட்டுக்குச் செய்த கொடுமையை நினைத்து, மனம் வருத்தித் திருந்தி, நீங்கள் வீரனுக்குக் கொடுத்த இளவரசுப் பொறுப்பைத் திரும்பப் பெறுவதாகவும், அந்த இளவரசுப் பட்டத்துடன் மதுரைக் காவலன் என்ற பொறுப்பையும் என்னிடம் ஒப்படைப்பதாகவும் இந்தச் சுருளில் எழுதியிருக்கிறது. இதில் உங்கள் அரச இலச்சினையை இட்டு எனக்குத் தரவேண்டும்; பாண்டிநாட்டின் பழம்பெருமையைப் புதுப்பிக்க வேண்டும்!” 

அதைக்கேட்ட குலசேகரபாண்டியன் கடகடவென நகைக்கிறார். நகைப்பு இருமலாக வெடிக்கிறது. சிறிது நேரத்தில் இருமல் அடங்கியதும் மீண்டும் நகைப்பு கிளம்புகிறது. 

“இந்தவொரு நகைப்பான செய்தியைச் சொல்லி என்னைச் சிரிக்க வைத்தமையால், இரவு நேரத்தில் என் தனிமையைக் கெடுத்ததையும் பொருட்படுத்தாது உன்னை மன்னிக்கிறேன்.  எனது நல்ல மனதினை மாற்றிக்கொள்வதற்குள் இங்கிருந்து அகன்றுவிடு!” 

“இல்லாவிடில்...?” 

“உன்னை நானே அகற்ற வேண்டியிருக்கும்.” 

குலசேகரபாண்டியன் தான் சொன்னதைச் செய்ய முனையக்கூடியவர் என்ற உண்மையை சுந்தரபாண்டியன் நன்கு ஐயமற அறிவான். 

இருந்தும், “வயதான கிழவர் நீர். என்னை எப்படி...?” என்று சொல்லி வாய்மூடுவதற்குள் எழுந்த குலசேகரபான்டியன் அவனது மார்பில் கையை வைத்துத் தள்ளுகிறார். 

இந்தத் தள்ளாத வயதிலும் அவருக்கு எப்படி இவ்வளவு வலிமை உள்ளதென வியக்கிறான், அந்தத் தள்ளலால் நிலைதடுமாறிய சுந்தரபாண்டியன். 

“முருகா, விரைந்து வா! இங்கு குள்ளநரி ஒன்று புகுந்துவிட்டது” என்று தன் மெய்காப்பாளன் முருகையனை அழைக்கிறார் குலசேகரபாண்டியன். ‘மருத்துவரை அழைத்து வா’ என அவனைச் சுந்தரபாண்டியன் தந்திரமாக அனுப்பியிருப்பது அவருக்குத் தெரியவா போகிறது? 

“நீர் என்ன கத்தினாலும் உமது முருகையன் இங்கு வரமாட்டன். வேசி மகனுக்குப் பரிந்து பேசாமல் இந்தத் திருமுகத்தில் உமது ஒப்புதலை அளியும்” என்று சுந்தரபாண்டியன் விரட்டுகிறான். 

அவன் சொன்ன வேசிமகன் என்ற சொல், குலசேகரபாண்டியனைக் கொதித்தெழ வைக்கிறது. 

“என்னடா சொன்னாய், சின்னப்பயலே? உனது சிறிய தாயடா அவள்! தாயைப் பழிக்கும் உன்னை இந்த மண் சுமப்பதே ஒரு பாவம். உன்னைப் போன்ற கயவர்களை விட்டுவைத்தால் பாண்டிநாடே அழிந்துபோய் விடும்” என்று அவன் மீது பாய்கிறார். 

வாளைச் சுழற்றிக் காய்ப்பேறிய அவரது கைகள் சுந்தரபாண்டியனின் கன்னத்தில் மாறி மாறி அறைகின்றன. சுந்தரபாண்டியனின் கண்களைச் சுற்றிப் பூச்சி பறக்கிறது. தடுமாறி நின்ற அவனின் தோள்களைப் பற்றி உலுக்குகிறார். 

தன்னைச் சமாளித்துக்கொண்டு, சுந்தரபாண்டியன் வெறியுடன் அவரைக் கீழே தள்ளுகிறான். 

அந்த வேகத்தில் நிலைதடுமாறிக் கீழே விழுந்த அவரது தலை அருகிலிருக்கும் ஆளுயரப் பாவைவிளக்கில் மோதுகிறது. பாவை கைகளில் பிடித்திருக்கும் விளக்கின் நுனி அவரது நெற்றிப்பொட்டைப் பிளக்கிறது. பேச்சு மூச்சின்றித் துவண்டு அடியற்ற மரமாய்க் கீழே விழுகிறார் குலசேகரபாண்டியன்.  அவரிடமிருந்து எந்தவிதமான அசைவும் இல்லை. பாவைவிளக்கும் அந்த மாமன்னனுடன் கீழே விழுகிறது. 

சுந்தரபாண்டியன் குனிந்து பார்க்கிறான். அவரது தலையிலிருந்து குருதி பெருகித் தரையில் பரவுகிறது. அவரது வலக்கை நாடியைப் பார்க்கிறான். நாடித்துடிப்பு நின்றுபோயிருக்கிறது.  அப்படியானால்…? குலசேகரபாண்டியன் இப்பூவுலகை விட்டு நீங்கிவிட்டாரா? மதுரையில் நாற்பதாண்டுகளாகத் தன்னிகரின்றிக் கோலோச்சிய பாண்டிய தீபம் அணைந்துபோய்விட்டதா? 

“நான் அவரைக் கொல்லவில்லை. அவர்தான் பாவைவிளக்கில் மோதி விழுந்தார். விளக்கின் நுனி அவர் தலையைப் பிளந்துவிட்டது. அவரது இறப்புக்கு நான் காரணமில்லை. தந்தையை நான் கொலைசெய்யவில்லை”48 என்று அவன் உரக்க வாய்விட்டுச் சொல்லிக்கொள்வதற்கும், குலசேகரபாண்டியனின் மெய்காப்பாளன் முருகையன் உள்ளே நுழைவதற்கும் சரியாக இருக்கிறது. 

---------------------------------------- 

[48. ‘சுந்தரபாண்டியன் தனது தந்தையாரான குலசேகரபாண்டியனைக் கொன்றுவிட்டு ஆட்சியை அபகரித்துக்கொண்டான்; அதன் விளைவாகப் பாண்டிநாட்டில் உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட்டது.’        - இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள் அப்துல்லா வாசஃப் மற்றும் அமீர் குஸ்ரு ஆகியவர்களின் குறிப்புகள் கூறுகின்றன. இருப்பினும், அரசுக்காகத் தந்தையைக் கொன்ற தனயனாக ஒரு தமிழனைச் சித்தரிப்பது சரியாகாது என்ற எண்ணத்தால், குலசேகரபாண்டியனின் மறைவு சுந்தரபாண்டியனால் ஏற்பட்டது தற்செயலான விபத்தால் ஏற்பட்டது என்று இங்கு புனையப்பட்டுள்ளது.]

வாரங்கல் கோட்டை, ஆந்திரநாடு 

சௌம்மிய, மாசி 3 - பிப்ரவரி 4, 1310 

மொய்த்துவரும் ஈக்களை விரட்டுகிறான் மாலிக் காஃபூர். தன் எஜமானன் தில்லி சுல்தான் அல்லாவுத்தீன் கில்ஜி அனுப்பிய ஃபிர்மானை (உத்திரவு) மீண்டும் படித்துப் பார்க்கிறான்.  மனதில் எரிச்சல் மேலிடுகிறது. 

வாரங்கல் கோட்டையைத் தாக்கிப்பிடிக்க எவ்வளவு வீரர்களை காவு கொடுக்க வேண்டியிருந்தது என்பதை எண்ணிப்பார்க்கிறான். இரட்டை மதில்களுடன் கூடிய அந்தக் கோட்டையைக் கைப்பற்றத்தான் எத்தனை மெனக்கெடவேண்டியிருந்தது? ஒரு மாதம் இடைவிடாத தாக்குதலுக்குப் பின்னர், வெளிமதிலைத் தகர்த்து உள்ளே நுழைந்தபோது இரண்டாவது மதிலிலிருந்து வந்த சரமாரியான அம்புகளின் தாக்குதலில் தன் தலை தப்பித்தது அல்லாவின் அளவற்ற கருணையே அன்றி, வேறொன்றுமில்லை என்பது அவனுக்கு வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது. அப்படி வந்த அம்புகளில் ஒன்று ஓரிரு அங்குலங்கள் தன் தலைப்பக்கம் நகர்ந்திருந்தால், முஜாஹதீனான (புனிதப் போர் வீரன்) தான் அன்றே மரித்து, அல்லாவுக்காக நடத்திய புனிதப் போரில் ஷஹீதுன் ஆகி (வீரமரணம் அடைந்தவன்) சுவனம் (இஸ்லாமிய சுவர்க்கம்) சென்றுவிட்டிருப்போம் என்று எண்ணும்போது மேனி கொஞ்சம் சிலிர்க்கிறது. 

அப்படித் தான் தப்பித்திருக்காவிட்டால், வாரங்கல்தான் விழுந்திருக்குமா? வாரங்கல் அரசன் பிரதாப ருத்திரன்தான் வேறு வழியின்றி பேச்சுவார்த்தை நடத்த முன்வந்திருப்பானா? அப்போதுதானே, அல்லாவுத்தீன் கில்ஜியின் அடிமையும், படைத்தலைவனும், ஹஜார் தீனாரி49யுமான - மாலிக் காஃபூர் என்றழைக்கப்பட்ட தான், தனது பேரம் பேசும் திறமையை வெளிப்படுத்த முடிந்தது! முற்றுகையிட வைத்து, தில்லி சுல்தான் அல்லாவுத்தீன் கில்ஜிக்கு நஷ்டம் ஏற்படுத்தியதற்காக, வாரங்கல் கோட்டைக் கருவூலத்தில் அளவு கடந்த செல்வத்தையும், நிறைய யானைகளையும், குதிரைகளையும், ஆண்டுதோறும் கப்பத்தொகையும் தருவதாகப் பிரதாப ருத்திரனை ஒப்புக்கொள்ள வைத்தது50 தில்லி சுல்தான் மேல் அவன் வைத்திருந்த அளவு கடந்த ஈமானும் (விசுவாசம்) அன்பும்தானே! 

இத்தனை செல்வங்களைத் தில்லிக்குக் கொண்டுசென்று, சுல்தானைச் சந்தித்து, அவருடைய பாராட்டைப் பெற்று, அவரது அரண்மனையில் இருக்கும் - தன்னை ஒரு அலி என்று ஏளனம் செய்யும் - தன்னைப் பிடிக்காத சைத்தான்களின் வாயை அடைக்கத் தான் தீட்டிய திட்டத்தில் சுல்தானின் ஃபிர்மான் மண்ணை அல்லவா வாரிப்போட்டிருக்கிறது!? 

‘மப்பாரில்51 இருக்கும் செல்வம் அளவற்றது என்று நமக்குத் தகவல் வந்திருக்கிறது. அங்கு மதுரை என்று பெரிய ஷஹர் (நகர்) இருக்கிறதாம்; அது நம் திருக்குரானில் சொல்லப்பட்டிருக்கும் சுவனம் போல இருக்கிறது என்று அங்கு சென்றுவந்த நம் கவிஞர்கள் சொல்லுகிறார்கள். அங்கு இருக்கும் செல்வத்திற்கு அளவே இல்லையாம். யானைகளுக்குக்கூட தங்கக்குமிழ் உள்ள முகப்புத் துணி போர்த்தியுள்ளதாம். கல்லைக் கும்பிடும் காஃபிர்களின் (காட்டுமிராண்டி) ஷஹரை அழித்து, அங்குள்ள செல்வத்தை நம் தில்லைக்குக் கொண்டு வா. அல்லாவின் அருள் உனக்குக் கிட்டட்டும். அல்லாவின் கருணைக்கு நிகர் எதுவுமில்லை.’ 

---------------------------------------- 

[49. கம்பாட்டைச் சேர்ந்த க்வாஜா என்பவரிடமிருந்து தில்லி சுல்தான் அல்லாவுத்தீன் கில்ஜி, மாலிக் காஃபூரை ஆயிரம் தீனார்கள் கொடுத்து அடிமையாக வாங்கினான் - The African Dispersal in the Deccan: From Medieval to Modern Times by Shanti Sadiq Ali, 1996; Kafur, Malik in Encyclopaedia of Islam, 1990; இஸ்லாமிய வரலாற்றாளர் இப்ன் பதூதாவும் மாலிக் காஃபூரை அப்படிக் குறிப்பிடுகிறார். 

50. தனது முற்றுகைக்கு ஈடாக மாலிக் காஃபூர் வாரங்கல் மன்னன் பிரதாப ருத்திரனிடம் என்னென்ன செல்வங்களைப் பெற்றான் என்று கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, அவருடைய வரலாற்று நூலில் விவரித்துள்ளார். - A History of South India by K.A. Nilakanda Sastri, Oxford University Press, 1955 

51. கொல்லத்திலிருந்து நெல்லூர் வரையிலான பகுதியை ‘மப்பார்’ என்று அராபியர்களும், தில்லியை ஆண்ட சுல்தான்களும் அழைத்துவந்தனர். பின்னர் கேரளக் கடற்கரை மட்டுமே ‘மலபார்’ என்று ஆங்கிலேயரால் அழைக்கப்பட்டது.]

ஃபிர்மானில் வைக்கப்பட்டிருந்த சுல்தானின் அரக்கு முத்திரை, தனது எதிர்பார்ப்புக்கெல்லாம் மொத்தமாகப் போடப்பட்ட இரும்புப் பூட்டாக மாலிக் காஃபூருக்குத் தோன்றுகிறது. 

“ஆ!” என்று பெரிதாகக் கூச்சலிடுகிறான். 

என்னவென்று பார்க்கப் பதற்றத்துடன் ஓடி வந்த அவனது அடிமைப் பணியாளன் சித்திக்கின் மீது தன் கையில் கிடைத்ததை வீசி எறிகிறான். 

சித்திக்கின் மழுங்கச் சிரைத்த தலையில் காயம்பட்டு இரத்தம் வழிகிறது. 

மாலிக் காஃபூர்
மாலிக் காஃபூர்

“சைத்தானே, உன்னை யார் இங்கு அழைத்தார்கள்? போ வெளியே!” என்று மாலிக் காஃபூர் பெரிதாகக் கத்துகிறான். 

மாலிக் ‘நைப்’பின் இந்த ஆர்ப்பாட்டங்களை நன்கு அறிந்திருந்த பணியாளன் சித்திக் அமைதியாக நிற்கிறான். 

தன்னை வெளியே போகச்சொல்லிவிட்டார் என்பதற்காகத் திரும்பிப்போனால் மாலிக் காஃபூரின் கூரிய பிச்சுவா தன் முதுகில் பாய்ந்துவிடும் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும். அப்படிப் பிச்சுவாவினால் தாக்கப்பட்டு இறந்த ஐந்து பணியாளர்களின் சடலங்களை அவன்தானே இழுத்துப்போய்ப் புதைத்திருக்கிறான்! என்ன அடி விழுந்தாலும், உதை விழுந்தாலும் அதைத் தாங்கிக்கொண்டு அமைதியாக இருந்தால்தான் தன் உயிர் இன்று தப்பும் என்பதை நன்றாக அறிந்துள்ளான். அதனால் பதிலேதும் பேசாமல் நிற்கிறான். 

சிறிது நேரம் மரண அமைதி கழிந்த பின்னர், மெதுவாகத் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு, “மாலிக் நைப், தங்கள் முன் நிற்கக்கூடத் தகுதியில்லா இந்த அடிமை வாயைத் திறந்து பேசுவதற்கு என்னை அல்லாவும், தாங்களும் அருள்கூர்ந்து மன்னிக்க வேண்டும். அல்லாவின் கட்டளையை நிறைவேற்றுவதில் தங்களை மிஞ்சியவர் இந்த துனியா (உலகம்)வில் வேறு யார் உளர்? கல்லைக் கும்பிடும் காஃபிர்களை நடுநடுங்க வைக்கும் தங்களின் குரல் பெரிதாகக் கேட்டது. தாங்கள்தான் இந்தத் தகுதியற்ற அடிமையை அழைக்கிறீர்கள் என்று தவறாக நினைத்துத் தங்கள் விருப்பமென்ன என்று அறிந்து, அக்கட்டளையை உடனே நிறைவேற்ற ஓடோடியும் வந்தேன்.” 

மாலிக் காஃபூரின் முகபாவத்தைக் கவனித்து, மேலே பேசலாம் என்று அறிந்து, “தவறிழைத்திருந்தேன் என்றால், இந்தத் தகுதியற்ற அடிமையின் தோலை உரித்து எடுத்துவிடுங்கள். தங்களின் விருப்பத்தை நிறைவேற்றத்தான் அல்லா இந்த அடிமையைப் படைத்திருக்கிறார்” என்று சாதுரியமாகப் பேசி, மாலிக் காஃபூரின் சினத்தைத் தணிக்க முயல்கிறான். 

அவனைக் கண்ணிமைக்காது நோக்கியவாறு, “மூளையில்லாத ஒட்டகத்துக்குப் பிறந்தவன் நீ!  இருந்தாலும், அல்லாவின் சேவகனான எனக்கு எப்படித் தொண்டாற்றுவது என்பதை அறிந்து வைத்திருக்கிறாய்! ஆகையால், பிழைத்துப் போ! இன்று உன் உயிரை உனக்கு ‘ஷக்கத்’(பிச்சை)தாக அளிக்கிறேன். அல்லா வகுத்த வழியில் செல்லவிரும்பும் உன்னை என் அளவு கடந்த குஸ்ஸா(கோபம்)வுக்கு ஆளாகுவதை அல்லா விரும்ப மாட்டார். உன் தோலை உரிப்பதற்குப் பதிலாக - நாம் பிடித்துவைத்திருக்கும் கைதிகளில், கல்லைக் கும்பிடும் நால்வரை என் விளையாட்டுக் கம்பங்களில் கட்டிவை” என்று விரட்டும் குரலில் ஆணையிடுகிறான் மாலிக் காஃபூர். 

“ஹுக்கும் (உத்தரவு) மாலிக் நைப்” என்று அவனுக்குப் பலமுறை சலாம் வைத்துவிட்டுப் பின்புறமாகவே நடந்து, கூடாரத்தை விட்டு வெளியேறுகிறான் சித்திக். இன்று இரவு முழுவதும் தனக்குத் தூக்கமே இருக்காது என்று அவனுக்கு நன்றாகத் தெரிகிறது. 

மாலிக் காஃபூர் செய்யப்போகும் சித்தரவதையில் அந்த நான்கு கைதிகளும் இடும் மரணக்கூச்சல் அந்த வட்டாரத்தையே கலக்கியெடுக்கும்; இரவு முழுவதும் தொடரும் என்பது அவன் அறிந்த ஒன்றே.  

மாலிக் காஃபூருக்குக் கோபம் வந்தால், அதற்கு வடிகாலாக காஃபிர் கைதிகளைச் சித்திரவதை செய்து கொல்வது வழக்கம். காஃபிராகப் பிறந்துவிட்ட ஒரே காரணத்துக்காகக் குற்றமற்ற அவர்கள் இப்படிச் சித்திரவதைப்படுவதைக் கண்டால் சித்திக்குக்கு மிகவும் பரிதாபமாக இருக்கும். பரிதாபப்பட்டு என்ன செய்வது? அது மாலிக் நைப்பின் குணம். 

அப்படியில்லாதுபோனால் இந்த ஹிந்துஸ்தானில் தில்லி சுல்தானுக்காகச் செல்வம் சேகரிக்கும் சிங்கமாகச் செயல்பட முடியுமா? அல்லது மாலிக் காஃபூர் என்ற பெயரைக் கேட்டவரைக் குலைநடுங்கச் செய்ய முடியுமா? 

ஆனால், மறுநாள் காலையில் இறந்துகிடக்கும் கைதிகளின் சடலங்களைத் தொடக்கூடச் சித்திக்குக்கு அருவருப்பாக இருக்கும். அந்த அளவுக்கு மனிதரா, ஆணா, பெண்ணா என்ற அடையாளமே தெரியாமல் உருத்தெரியாமல் குலைந்து சிதைந்து கிடக்கும், அவர்களது உடல்கள். 

சுறா மீனின் பற்களை வைத்துக் கட்டிப் பின்னப்பட்ட கசையினால் அவர்களை வெளுத்துவாங்கி, அவர்களின் தோல் முழுவதையும் உரித்தெடுத்து விடுவான் மாலிக் காஃபூர்.52 

அனைத்துப் பிணங்களின் முகத்தில் கண்கள், மூக்கு, உதடுகள் காதுகள் எதுவுமே இருக்காது.  எல்லாம் கசையடியினால் பிய்த்து எடுக்கப்பட்டிருக்கும். ‘அந்தப் பிணங்களின் உடல்களைத் துண்டு துண்டாக வெட்டி, காக்கைகளுக்கும், கழுகுகளுக்கும், நரிகளுக்கும் விருந்தாகத்தான் தூக்கியெறிய வேண்டும். அவர்களின் உடல்களைப் புதைக்கவே, எரிக்கவோ கூடாது; தன் கோபத்துக்கு ஆளாபவர்களின் கதி என்னவாகும் என்று மற்றவர்கள் கண்டு உணர்ந்துகொள்ள வேண்டும்’ என்பது மாலிக் காஃபூரின் கட்டளை. 

தனது விதியை மனதுக்குள் நொந்துகொண்டே - வாரங்கல் கோட்டை முற்றுகையின்போது அக்கம்பக்கத்திலிருந்த ஊர்களிலிருந்து பிடித்து வந்திருக்கும் காஃபிர் கைதிகள் பலரில், மாலிக் காஃபூரின் சினத்திற்கு வடிகாலாகப்போகும் நால்வரை கூட்டி வர விரைந்து செல்கிறான் சித்திக். 

துவாரசமுத்திரம்,53 போசளநாடு 

சௌம்மிய, மாசி 5, - பிப்ரவரி 6, 1310 

“மோசமான நிலையில் பாண்டிநாடு இருக்கின்றதா? அங்கு உள்நாட்டுப் போர் நிகழ்கிறதா? குலசேகரபான்டியன் இறந்ததற்குப் பிறகு பாண்டிநாட்டின் ஆட்சி பட்டத்து இளவரசனான வீரபாண்டியனுக்குச் செல்லவில்லையா?” எனக் கண்களை உருட்டி விழித்தவண்ணம் கேட்கிறான் போசள மன்னன் வீரவல்லாளன்(பல்லாளா). 

“ஆம், அரசே! பாண்டிய மன்னர் ஐவரில் மூவர் குலசேகரபாண்டியனின் பட்டத்தரசியின் புதல்வன் சுந்தரபாண்டியனுக்கு ஆதரவாம். ஆகையால், சுந்தரபாண்டியன் தன்னை மதுரைக்குக் காவலராக அறிவித்துக்கொண்டாராம். பாண்டியச் சக்ரவர்த்தி காலமான சமயம், பட்டது இளவரசர் வீரபாண்டியன் மதுரையில் இல்லாததும் சுந்தரபாண்டியனுக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டதாம். வீரபாண்டியன் செய்தியறிந்து மதுரை திரும்பு முன்னரே, சுந்தரபாண்டியன் பாண்டிய மன்னராக முடிசூட்டிக்கொண்டாராம்” எனத் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும் ஒற்றர் குழுத் தலைவன் தெரிவிக்கிறான். 

“கேட்பதற்கே விசித்திரமாக இருக்கிறது. மக்கள் ஆதரவு யார் பக்கம் உள்ளது?” 

------------------------ 

[52. ‘கைதிகளின் தோல் முழுவதும் வழண்டுபோகும் அளவுக்குக் கசையடி கொடுத்துக் கொல்லும் சித்திரவதையை தில்லி சுல்தான்களும், அவர்களது படைத்தலைவர்களும் கையாண்டிருக்கிறார்கள்.’ - இஸ்லாமிய வரலாற்றாளர்கள் அப்துல் வாஸஃப், அமீர் குஸ்ரோ. 

53. மாலிக் காஃபூரால் அழிக்கப்பட்ட துவாரசமுத்திரத்தின் இடிபாடுகள் காணப்படும் தொல்பொருள் தளம், தற்பொழுது ‘ஹளபீடு’ என்று அழைக்கப்படுகிறது.]

வரைபடம்
வரைபடம்

“மக்கள் இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவிக்கிறார்கள் அரசே! குலசேகரபாண்டியரின் விசுவாசிகள் வீரபாண்டியன் பக்கமும், அரச பரம்பரை நிலைக்க வேண்டும், சாதாரண ஆசைநாயகிக்குப் பிறந்தவர் அரசராவதா என எண்ணுபவர் சுந்தர பாண்டியன் பக்கமும் பிரிந்துள்ளார்களாம். இப்போது வட பாண்டிநாடும், சோழநாடும் வீரபாண்டியன் வசமும், மதுரையும் தென்பாண்டிநாடும் சுந்தரபாண்டியனிடமும் உள்ளனவாம். இதுதான் சாக்கென்று சில பாண்டிய மன்னர்கள் தங்கள் பகுதி தனித்து இயங்க வேண்டும் என்று விரும்பிச் செயல்படத் துவங்கியுள்ளார்களாம். ஆங்காங்கு போர் நிகழ்வதால், யார் யார் எவரெவர் பக்கம் சார்ந்திருக்கின்றனர் என்று தெரியவில்லையாம். நேற்று நண்பரானவர், இன்று எதிரிகளாக மறுபக்கம் பிரிந்து சென்றுவிடுகிறாராம்” என்று செய்தியைச் சொல்லி முடிக்கிறான் ஒற்றர் தலைவன். 

“சரி, நீ போகலாம்” என்று அவனை அனுப்பி விட்டு வீரவல்லாளன் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்கிறான். 

தனது அமைச்சர், படைத்தலைவன் இவர்களை நோக்கி, “இதுபற்றி நீவிர் என்ன நினைக்கின்றீர்? இந்நிலைமையை நமக்குச் சாதகமாக்கி எப்படிப் பயன்படுத்திக்கொள்ளலாம்?” என்று கேட்கிறான். 

“அரசே, தங்கள் தந்தையாரின் காலம் வரை இரண்டாகப் பிரிந்திருந்த நம் போசள நாட்டை ஒன்றாக்கிய பெருமை தங்களையே சாரும். அதை இன்னும் மேன்மைப்படுத்தத் தங்களுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது” என்று முதலில் ஆரம்பிக்கிறான் படைத்தலைவன். 

“போசள நாட்டின் தமிழ் பேசும் பகுதிகளான கொங்குநாடு, திருவண்ணாமலை, கண்ணனூர், கொப்பம் முதலிய பகுதிகளைப் பாண்டிய மன்னன் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கவர்ந்துகொண்டான் அல்லவா? இதுதான் தகுந்த தருணம். நமது படையுடன் சென்றால், இழந்த பகுதிகளை மீட்டு விடலாம். போசள நாடு பழையபடி பெரிதாகி, இழந்த பெருமையைப் பெற்றுவிடும்” என்று முடிக்கிறான். அதைக் கேட்ட வீரவல்லாளனின் முகம் மலர்கிறது. அமைச்சரை நோக்குகிறான். 

“அரசே, தாங்கள் அறியாததல்ல. நமக்கு வடக்கே இருக்கும் துலுக்கத்54 தில்லி சுல்தானின் படைத்தலைவன் வாரங்கல் கோட்டையைக் கைப்பற்றிக்கொண்டதாகச் செய்தி வந்துள்ளது.  அந்தத் துலுக்கப் படைத்தலைவன் நம் துவாரசமுத்திரத்தின் செழிப்பை அறிந்து நம் மீது படையெடுத்து வர வாய்ப்பிருக்கிறது. எனவே, நாம் நமது படையைப் பெருக்கி, கோட்டை கொத்தளங்களைப் பலப்படுத்தி, எதிரியின் தாக்குதலுக்கு நம்மை ஆயத்தமாக்கிக் கொள்ள வேண்டும். ஆபத்து நம்மை நோக்கி வரவிருக்கும் இச்சமயத்தில் தாங்கள் படைகளுடன் தமிழ்நாட்டுக்குச் செல்வது, நம் நிலையைப் பலவீனப்படுத்திவிடுமோ என ஐயுறுகிறேன்” என்று தம் கருத்தை அமைச்சர் முன்வைக்கிறார். 

வீரவல்லாளனின் நெற்றியில் சிந்தனைக் கோடுகள் வடிவெடுக்கின்றன. அதைக் கவனித்த படைத்தலைவன், “அரசே… சில ஆண்டுகளுக்கு முன் வாரங்கல் அரசர் பிரதாபருத்திரர் தில்லி சுல்தானின் படைகளைத் தோற்கடித்தார்.55 அதனால் தில்லி சுல்தானின் மதிப்பு குறைந்துபோகவே, தேவகிரி அரசர் சங்கமராஜா திறைப் பணத்தை அனுப்ப மறுத்து விட்டார்.  அதற்குப் பழிவாங்குவதற்காகத் தில்லி சுல்தான் தன் படைத்தலைவன் மாலிக் காஃபூரைத் தேவகிரிக்கும், வாரங்கலுக்கும் அனுப்பியிருக்கக்கூடும் அல்லவா? தில்லி சுல்தானுக்கும், நமக்கும் எவ்விதமான பகை இருக்கிறது? அப்படி இருக்கையில் மாலிக் காஃபூர் நம் மீது படையெடுத்து வர என்ன முகாந்திரம் உள்ளது?" என்று அமைச்சரின் கருத்துக்கு மாறு சொல்கிறான். 

------------------------------------- 

[54. இஸ்லாமியர் முதலில் துருக்கியிலிருந்து வந்ததால், அவர்களைத் ‘துருக்கர்’, ‘துலுக்கர்’ என்று அக்காலத்தில் அழைக்கத் தொடங்கிய பழக்கம் இன்றும் தொடர்கிறது. 

55. 1903-04ல் தில்லி சுல்தான் அல்லாவுத்தீன் கில்ஜியின் தளபதிகளில் ஒருவனான மாலிக் ஃபக்ருத்தீன் ஜுனா (பிற்காலத்திய முகம்மது பின் துக்ளக்) வின் தலைமையில் வந்த படையெடுப்பை, வாரங்கல் வருவதற்கு முன்னரே, ஆந்திர மன்னன் பிரதாபருத்திரன் தாக்கி முறியடித்துப் பின்வாங்கச் செய்தான்.]

“அரசே, பக்கத்து வீடுதானே பற்றியெரிகிறது என்று வாளாவிருக்கலாமா? அவர்களின் வீட்டுத் தீயை அணைக்க உதவிக்குப் போகாவிட்டாலும், அங்கிருந்து சிதறும் தீக்கங்குகள் நம் வீட்டுக் கூரையில் விழுந்து பற்றாதவண்ணம் தண்ணீரை ஊற்றியாவது வைக்கலாமே? தவிரவும், தில்லி சுல்தான் தேவகிரியைத் தற்பொழுது ராமதேவருக்குக் கொடுத்துவிட்டது தங்களுக்குத் தெரியாத விஷயமா? ராமதேவர் தில்லி சுல்தானின் துலுக்கப் படைத்தலைவரைத் தங்களுக்கு எதிராகத் தூண்டிவிட வாய்ப்புள்ளதே! நம்மைச் சுற்றி இவ்வளவு நடக்கும்போது, நம்முடைய பாதுகாப்பை விடுத்து, தமிழ்நாட்டுக்குப் படையுடன் செல்வது நம்மைத்தானே பலவீனப்படுத்தும்? யோசியுங்கள் அரசே!” என்று அமைச்சர் இறைஞ்சுகிறார். 

“அரசே, மாலிக் காஃபூர் படையெடுத்து வருவதற்கு அமைச்சர் கூறும் காரணங்களைக் கேட்டால் - கொக்கு தலையில் வெண்ணையை வைத்தால் அது உருகிவிடும், அப்படி உருகினால் கொக்கு கண்களை மூடிக்கொள்ளும், உடனே அதைப் பிடித்துவிடலாம் என்பதுபோல் உள்ளது. ராமதேவருக்கு நம்மைப் பிடிக்கவில்லை என்னும் ஒரேயொரு காரணத்துக்காகத் தில்லி சுல்தானின் துலுக்கத் தளபதி நம் மீது படையெடுத்து வந்து விடுவானா? அவன் நம் நாட்டுப் பக்கம் ஓரடி எடுத்துவைக்கும் முன்னரே, நாமாக நம் நாட்டை அவனிடம் கொடுத்து விட வேண்டும் என்பார் போல இருக்கிறதே” எனப் படைத்தலைவன் தன் கருத்தை வலியுறுத்துகிறான். 

அதை மறுத்துப் பேச முற்பட்ட அமைச்சரைக் கையமர்த்துகிறான் வீரவல்லாளன். 

“அமைச்சரே, போதும். நிறையக் கேட்டாகிவிட்டது! படைத்தலைவரே தமிழ்நாடு செல்வதற்கு நம் படைகளை ஆயத்தப்படுத்தும்!” 

*** 

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com