பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -நான்காம் பாகம்-அத்தியாயம் 17

போசள நாடு
போசள நாடு

வாரங்கல்லுக்கும் துவாரசமுத்திரத்துக்கும் நடுவே, போசள நாடு

சாதாரண, சித்திரை 5 - ஏப்ரல் 7, 1310

யுகங்களாகக் காத்திருப்பது போலத் தோன்றுகிறது மாலிக் காஃபூருக்கு. மப்பாரில் போர் எப்போது முடிவது, தான் எப்போது தில்லிக்குத் திரும்புவது என்பதை எண்ணிப் பார்த்தால் மிகவும் எரிச்சலாக இருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களில் இதுவரை இருபத்தி நான்கு கைதிகளைத் தோலுரித்துச் சித்திரவதைப்படுத்தி பலியிட்டும் தனது சினம் தணியாமல் கொழுந்துவிட்டு எரிவது அவனுக்கு வியப்பு கலந்த எரிச்சலை ஏற்படுத்துகிறது.

“அல்லா! கருணைக் கடலே! எனக்குள் ஏன் இப்படியொரு கொந்தளிக்கும் கடலை, கொழுந்துவிட்டு எரியும் செங்கனலை, கொதித்துக் குழம்பைக் கக்கும் எரிமலையை உண்டாக்கியுள்ளாய்? எத்தனை முஹாவலா (முயற்சி) செய்தாலும், உன் முதலிலுன்னை(புகழை)ப் பாடவும் என்னால் முடியுமா? எப்படியாவது எனக்கு சலாமுன்னைக்(அமைதியை) கொடு. உன் திருநாமம் பரவுவதற்கும், கல்லைத் தொழும் காஃபிரை அடக்கி, உன் கருணைவெள்ளத்தை அவர்கள் உணர்ந்து, நீ அருளிய இஸ்லாமை ஏற்றுக்கொள்ளவோ அல்லது உன் காலிஃப்களின் ஆட்சிக்குள் அடங்கிய திம்மி57களாகவோ ஆக்க வேண்டும் என்றுதானே முயற்சிக்கிறேன். எல்லாம்வல்ல அல்லாவே! அதை நிறைவேற்ற எனக்கு சலாமுன் வேண்டும்.

“கருணைக்கடலான அல்லா! என் தலைக்குள் புகுந்து என்னை ஆதாபுன்(சித்திரவதை) செய்யும் புழுக்களை நீதான் நீக்க வேண்டும். கூர்ஜர (குஜராத்) நாட்டில் ஆண்மை சிதைக்கப்பட்ட அலியாக, அடிமையாக ஆமலுஸ்சுக்ரச்சி(குற்றேவல்) செய்த என்னை… நான் பிறந்த சனாதன மதத்தின் கடவுளர்களைப் பலவாறு வேண்டியும் காப்பாற்றப்படாத என்ன… இப்படிப்பட்ட இழிநிலைக்குத் தள்ளப்பட்ட என்னை… தில்லி சுல்தான் மூலமாகக் காப்பாற்றினாய்! அவர்தான் அப்போது எனக்குக் கடவுளாகத் தென்பட்டார். அவர் மூலமாகத்தான் கருணைக்கடலான உன்னை அறிந்துகொண்டேன். நீ காட்டிய வழியான இஸ்லாமை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டேன்.

“என்னைக் காப்பாற்றாத – கற்களாகி நின்ற அக்கடவுளர்களைத் துறந்து மறந்தேன். உன் கருணை மிகுந்த மதத்தின் வாளையும், போர்க்கொடியையும் தில்லி சுல்தான் எனக்குக் கொடுத்தார். அன்று முதல் உன் வாசீஃபாக(பணியாளன்)ப் பணியாற்றுகிறேன். அல்லா!  எனக்கு அஸ்ஸலாமையும், உன் முதலிலுன்னை மப்பாரில் பரப்பும் குதரத்(சக்தி)தையும் கொடு” என்று மாலிக் காஃபூர் மனமுருகி வேண்டிக்கொள்கிறான்.

அவன் உரக்க வேண்டிக்கொண்டு தொழுவதை அவனது பணியாளன் சித்திக் கேட்டுக்கொண்டு நிற்கிறான்.

மாலிக் காஃபூர்
மாலிக் காஃபூர்

அவனும், “கருணைக் கடலான அல்லா! இன்றாவது மாலிக் நைப் மன நிம்மதி பெற வேண்டும்.  அருவருப்பான செயல்களிலிருந்து என்னைக் காப்பாற்று! இருபத்தி நாலு கைதிகளின் உடல்களைத் துண்டுபோட்டுப் போட்டு என் கைகள் களைத்து அலுத்துவிட்டன. அஸ்ஸலாமு ஆலேகும்!” என்று அல்லாவை வேண்டிக்கொள்கிறான்.

தொழுகையை முடித்த மாலிக் காஃபூர் எழுந்து, “சித்திக்! ஒட்டகத்துக்குப் பிறந்தவனே!” என்று உரக்க அழைக்கிறான்.

“வந்துவிட்டேன் ஹுஸுர்” என்று ஓடி வருகிறான் சித்திக். உச்சந்தலையிலிருந்து பெருகும் வியர்வை அவனது நெற்றியில் வழிந்தோடுகிறது.

“நாஸ்தாவைக் கொண்டு வா!”

-----------------------------------

[57. ‘இஸ்லாமிய ஆட்சியில் இஸ்லாமியர் அல்லாதோரை ‘திம்மி’ என அழைத்து, மாறாக நடத்துவது வழக்கம்.’ - இஸ்லாமின் திம்மி சட்டம் (Islam’s Law of Dhimmi), by டேவிட் க்ளௌட், வழிமுறை இலக்கியம் (Way of Life Literature), 2010 - <https://www.wayoflife.org/reports/islams_law_of_dhimmi.html>]

“ஒரே நொடி ஹுஸுர்” என்று விரைவில் காலை உணவைக் கொண்டு கம்பளத்தில் வைக்கிறான்.

மாலிக் காஃபூர் அமைதியாக உணவை உட்கொள்கிறான்.

‘நல்லவேளை பிழைத்தேன்! நாஸ்தா பிடிக்காவிட்டால் அது மாலிக் நைப்பின் வாய்க்குள் செல்லாமல் என் முகத்தில் அல்லவா பாத்திரங்களுடன் விசிறியடிக்கப்பட்டிருக்கும்’ என்று மெதுவாகப் பெருமூச்சு விடுகிறான்.

“வாஹ ரே வாஹ்! என்னை மிகவும் குஷியாக்கி விட்டாய். ஒட்டகத்துக்குப் பிறந்திருந்தாலும், அல்லாவின் சேவகனுக்கு எப்படிப் பணியாற்ற வேண்டும் என்று உனக்குத் தெரிந்திருக்கிறதடா சித்திக்! என்ன நாஸ்தா, எப்படிப்பட்ட நாஸ்தா!  பாவர்ச்சி(சமையற்காரன்)க்கு நான் குஷியானதைத் தெரிவித்துவிடு. இப்படியே நல்லபடியாகச் சாப்பாடு போட்டுக்கொண்டிருந்தால், அவன் கசையடியிலிருந்து தப்பலாம் என்று எச்சரித்ததாகவும் தெரிவி” என்று முகமலர்ச்சியுடன் மாலிக் காஃபூர் சொல்கிறான்.

எஜமானனின் மகிழ்வைக் கண்டு வாயெல்லாம் பல்லாகச் சிரிக்கிறான் சித்திக்.

அவனைப் பார்த்து, “மிச்சம் வைத்திருக்கும் இந்த நாஸ்தாவைச் சாப்பிட்டுவிடு!” என்று கட்டளையிடும் குரலில் மாலிக் காஃபூர் சொல்கிறான்.

“ஹுஸுர், இந்த கரீப்(ஏழை)பிடம் நீங்கள் வைத்திருக்கும் கருணைக்குக் கருணை மிகுந்த அல்லாவுக்கு நன்றி சொல்கிறேன்” என்று அவனுக்குச் சலாம் வைக்கிறான் சித்திக்.

“அல்லாவின் சேவகனான என்னைக் குஷிப்படுத்திக்கொண்டே இரு. அல்லாவின் பெயரைப் பரப்பும் நான், என் காலம் முடிந்த பின் நான் செல்லப்போகும் சுவனத்திலும், உன்னையே என் அடிமையாக வைத்துக்கொள்வேன். என்னுடன் சேர்ந்து நீயும் அல்லாவின் அளவற்றை கருணையை அனுபவிக்கலாம்!”

“இந்த அடிமையைச் சுவனத்துக்குக் கூட்டிச்செல்ல தாங்கள் நிச்சயித்திருப்பது தங்கள் மனதில் அல்லா என்னைப் பற்றி ஏற்படுத்தியுள்ள மேஹர்பானி(நல்லெண்ணம்)தான்.  அல்லாவின் கருணையே கருணை! அல்லாவைத் தவிர வேறு தெய்வம் எவருமில்லை!  கட்டளையிடுங்கள் ஹுஸுர்… இந்த அடிமை மேற்கொண்டு என்ன செய்ய வேன்டும்?” சித்திக் நன்றாகக் குழைகிறான்.

“மிஞ்சியிருக்கும் நாஸ்தாவைச் சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு, நக்கீப்(படைத்தலைவன்)களை வரச்சொல்லு. ஆஜ்(இன்று) நாம் துவாரசமுத்திரம் செல்ல அணிவகுக்க வேண்டும். இன்று சென்றால்தான் ஃபௌஜ்(வெற்றி) கிடைக்கும் என்று அல்லா எனக்கு தலாபுன் திஜாரி(கட்டளை) இட்டுவிட்டார்” என உற்சாகமாக மாலிக் காஃபூர் விரட்டுகிறான்.

இன்று தன் தலை தப்பியது அல்லாவின் கருணை என்று மனதுக்குள் அல்லாவுக்கு நன்றி செலுத்திய சித்திக், மாலிக் காஃபூர் மிச்சம் வைத்திருக்கும் உணவை வேகமாக எடுத்து விழுங்குகிறான். நைப்பைப் பற்றி எதுவும் சொல்லவே முடியாது. இந்தக் கணம் சிரிப்பவர், அடுத்த கணம் கோபத்தில் கொதித்து எழக்கூடும். எவ்வளவு சீக்கிரம் அவர் எதிரிலிருந்து அகல்கிறோமோ, அவ்வளவுக்கு நல்லது என்று எண்ணியவாறே, பாத்திரங்களை எடுத்துக்கொண்டு கூடாரத்தை விட்டு வெளியேறுகிறான்.

மப்பாரில் தனக்காகக் காத்திருக்கும் செல்வங்களை எப்படிக் கவர்வது என்ற சிந்தனையில் மாலிக் காஃபூர் தன்னை முழுகடித்துக் கொள்கிறான்.

அந்தச் செல்வத்தையெல்லாம் கண்டால், மகிழ்ச்சியடையும் சுல்தான் அல்லாவுத்தீன் தனக்கு என்னவிதமான பதவி உயர்வுகள் தருவார் என மனக்கோட்டை கட்டுகிறான்.

துவாரசமுத்திரத்துக்கு அருகே, போசள நாடு

சாதாரண, வைகாசி 20 - மே 23, 1310

யூகித்து யூகித்து மூளையில் வலி கண்டதே தவிர, தன் முன் நிற்கும் பூதாகாரமான பிரச்னைக்கு எப்படித் தீர்வு காண்பது என்றுதான் வீரவல்லாளனுக்குப் புரியவில்லை. ஹக்கா உள்பட, அனைத்துப் படைத்தலைவர்களும் மாலிக் காஃபூரை முழுமூச்சுடன் தாக்கி துவாரசமுத்திரத்தை விடுவிக்கத்தான் விரும்புகின்றனர். ஆயினும், அவர்களை எப்படித் தன் விருப்பத்தின் வழிநடக்கச் செய்வது என்று வீரவல்லாளன் திகைக்கிறான்.

“அரசே, எக்காரணத்துக்காக வீரபாண்டியரின் உதவியை ஏற்கவேண்டாமென்று முடிவெடுத்தோமோ, அக்காரணம் இப்பொழுது நம்முன் இல்லை. துலுக்கத் தளபதி மாலிக் காஃபூர் நம் துவாரசமுத்திரத்தின் கோட்டைச் சுவர்களைத் தகர்த்துக்கொண்டிருக்கிறான்.  அருகிலிருந்த கிராமங்களைச் சூறையாடித் தீக்கிரையாக்கி விட்டான். இந்நிலையில் எப்படி அவனுடன் சமாதானமாகப் போக முடியும்? அப்படிச் செய்தால், போசள நாட்டின் செல்வம் அனைத்தையும் நஷ்ட ஈடாகக் கேட்பான். துலுக்கத் தில்லி சுல்தானுக்குக் கப்பம் கட்டி வாழ வேண்டிய நிலைமை ஏற்படும். வேண்டாம் அரசே, வேண்டாம்! உடனே விரைந்து சென்று துலுக்கப் படையைத் தாக்குவோம். அதற்குள் செய்தியனுப்பி, வீரபாண்டியரை நம் உதவிக்கு வரக்கோருவோம். நம் பகையை மறப்போம். அன்னியன் முன்பு கைகோர்ப்போம்” என்று படைத்தலைவர்களும், ஏனைய பிரபுக்களும் பலவாறு வேண்டுகின்றனர்.

“சற்று நேரம் உமது புலம்பலை நிறுத்துவீராக!” என்று வீரவல்லாளன் சீறுகிறான்.

“எனக்கு ஆலோசனை சொல்வதுடன் உங்கள் வேலை முடிந்து விட்டது. முடிவெடுக்கும் பெரும் பொறுப்பு அரசனான எனதே! அதன்படி நடப்பது உங்கள் கடமை! நீங்கள் புரிந்துதான் பேசுகிறீர்களா அல்லது புரியாமல் உளறுகிறீர்களா என்று எனக்குத் தெரியவில்லை. நம் நாட்டின் கிராமங்களை அழித்தொழித்து, கோட்டை மதில்களைத் தகர்க்கும் துலுக்கத் தளபதியுடன் சமாதானமாகப் போக மனமாற ஆசைப்படுகிறேன் என்றா நினைக்கின்றீர்?  அவனுடைய படை பலத்தைப் பற்றிச் சிந்தித்தீர்களா? இப்போது நமது நிலைமை நமக்குச் சற்றும் சாதகமாகவே இல்லை. கோட்டைக்குள் இளவரசன் வீரவிருபாட்சன் மாட்டிக்கொண்டுள்ளான். எப்போது பாண்டியனுக்குச் சேதியனுப்பி, அவனது சைன்யம் எப்போது உதவிக்கு வருவது?

“சமாதானம் செய்யாது போரிட்டுத் தோற்றால், துலுக்கத் தளபதி நம்மைச் சிறைப்பிடித்துத் தோலுரித்துச் சித்திரவதை செய்து மகிழ்வான்! போசள நாடு துலுக்க ஆட்சிக்கு உட்பட நேரும்.  சமாதானம்தான் இப்போது சிறந்த வழி” என்று வீரவல்லாளன் தன் முடிவைத் தெரிவிக்கிறான்.58

“இதுதான் உங்கள் இறுதியான முடிவா அரசே?” என்று ஹக்கா மீண்டும் கேட்கிறான்.’

“ஹக்கா, உனக்குக் காது செவிடாகி விட்டதா? இதுதான் என் முடிவு. சமாதானக் கொடி பிடித்து உடன்படிக்கைக்கு வருவதே என் இறுதியான, உறுதியான முடிவு. துவாரசமுத்திரத்தையும், போசள நாட்டினையும் மேற்கொண்டு அழிவிலிருந்து காக்கப்போகும் கவசம்தான் என்னுடைய தீர்மானம்!”

வீரவல்லாளனின் குரலில் சினத்தின் சீற்றமிருப்பதை அனைவரும் உணர்கின்றனர்.

இருப்பினும், தனது நல்லவேளையா, கெட்டவேளையா என்பதை உணராத ஹக்கா, வீரவல்லாளனிடம், “அரசே, இப்படிச் செய்வதற்குப் பதிலாக, நாம் அனைவருமே துலுக்கத் தளபதிக்கு அடிபணிந்து துலுக்கர் ஆகிவிடலாமே!” என தனது உள்ளத்து எரிச்சலைக் கொட்டிவிடுகிறான்.

வீரவல்லாளன் ஒரு கணம் அதிர்ந்துபோகிறான். ஹக்காவை உற்றுநோக்குகிறான். கோபத்தில் பெரிதாகின்றன விழிகள்; மூக்கு மடல்கள் அகன்று விரிகின்றன. இரைந்து கத்துகிறான்:

------------------------------------

[58. ‘படைத்தலைவர்களும், ஏனைய பிரபுக்களும் மாலிக் காஃபூருடன் போரிடுமாறு பலவாறு எடுத்துச்சொல்லியும், வீரவல்லாளன் அதற்குச் சம்மதிக்காது சமாதான உடன்படிக்கை செய்துகொண்டான்.’ - தென்னிந்திய வரலாறு - கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி (A History of South India by K.A. Nilakanda Sastri, Oxford University Press, 1955)]

“என்ன சொன்னாய் ஹக்கா? நாம் துலுக்கர் ஆகிவிடலாம் என்றா? எனது அரச தந்திரம் பற்றி நன்கறிந்த நீ என்னெதிரில் அனைவரின் முன்னே இப்படிச் சொல்ல முடிகிறது என்றால், அது நான் உனக்குக் கொடுத்த இடம்தான். இத்தனை காலம் எனக்குச் சேவை செய்ததற்காக உன்னை மன்னிக்கிறேன். இப்படிப் பேசியதற்குப் பின்விளைவு என்ன என்பதைப் பொறுத்திருந்து பார். எவரும் இனி எனக்கு ஆலோசனை கூற முன்வர வேண்டியதில்லை.  ஆலோசனைக் கூட்டம் முடிந்தது. சமாதானக் கொடியுடன் துவாரசமுத்திரத்துக்கு உடனே கிளம்பப் போகிறோம். வெளியே கலைந்து செல்லுங்கள்.”

வீரவல்லாளன் பின்விளைவு என்று சொன்னதற்கு என்ன காரணம், அது எதுவாக இருக்கும் என்று சிந்தித்தவாறே வெளியேறுகிறான்.

கண்ணுக்குத் தெரியாத ஆலமரத்தின் வித்தாக அவன் மனதில் அவனையும் அறியாமல் விழுந்து புதைந்த - தென்பாரதத்தை அன்னியப் படையெடுப்பிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமாகிய வித்தின் மீது விழுந்த மழைத்துளிகளாகி விடுகிறது அந்நிகழ்ச்சி.

கூத்தபிரான் நடராஜர் கோவில், தில்லை

சாதாரண, ஆடி 12 - ஜூலை 17, 1310

யோகாசனங்களை முடித்துவிட்டு சதாசிவ சாஸ்திரி எழுந்திருக்கிறார். திருக்குளத்தில் குளிக்கு முன்னர், குளத்தைச் சுற்றியும் கட்டப்பட்டிருக்கும் படித்துறை மண்டபத்து நிழலில் ஒரு நாழிகைப்பொழுது யோகாசனம் செய்வது அவர் வழக்கம். மார்க்கோ போலோவைச் சந்தித்தபோது இருந்த தொந்திகூட சிறிது கரைந்திருக்கிறது அறுபது வயதாகியும் அவரது உடல் நலத்துக்கு யோகாசனம் காரணமாகி வந்துள்ளது.

சதாசிவ சாஸ்திரி
சதாசிவ சாஸ்திரி

சிவகங்கை என்று அழைக்கப்படும் தில்லை நடராஜர் கோவில் திருக்குளத்தில் நன்கு முழுகிக் குளிக்கிறார் சதாசிவ சாஸ்திரி.  அச்சமயம் படித்துறை மண்டபத்திற்கு வெளியில் பரபரப்பு ஏற்படுவதைக் குளத்துவாயிலின் இடைவெளி வழியாகக் கண்டவுடன், தன் குளியலை நிறுத்திவிட்டு படிகளில் ஏறி வெளியே என்ன பரபரப்பு எனக் கவனிக்கிறார்.

அரச ஊர்வலம் செல்வது அவர் கண்ணில் படுகிறது.  அரசர் வந்தால் பூரண கும்பத்துடனல்லவா வரவேற்பார்கள்? அப்படி இருக்கையில், ஆரவாரம் ஏதுமின்றித் திடுமென்று அரசர் வருவதென்றால் முக்கியமான காரணம் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆகவே, அவசரம் அவசரமாகத் தன் ஆடைகளை உடுத்தி, மண்டபத் திண்ணையில் வைத்திருந்த சிறிய சம்புடத்திலுள்ள திருநீற்றைக் குழைத்து இட்டுக்கொண்டு, ஊர்வலத்தை நோக்கி விரைகிறார். அவர் உள்மனது திக்திக்கென்று அடித்துக்கொள்கிறது.

அவர் திருக்குளத்தை விட்டு வெளி வருதற்கும், அரசன் வீரபாண்டியனின் யானை கோவில் வாயிலுக்குள் நுழைவதற்கும் சரியாக இருக்கிறது. 

அரசன் வரும் செய்தியைக் கேட்ட தில்லை அந்தணர்கள் வேத கோஷங்களை முழங்கியவண்ணம் வீரபாண்டியனை வரவேற்கின்றனர்.

வீரபாண்டியன் யானையை விட்டுக் கீழிறிங்கித் தனக்கு அளிக்கப்பட்ட மரியாதையை ஏற்றுக்கொண்டு, தன்னைச் சுற்றிலும் கண் பார்வையைச் செலுத்துகிறான். அவனது பார்வை, ஓரமாக நிற்கும் சதாசிவ சாஸ்திரியின் மீது வந்து நிலைக்கிறது. தன்னருகில் நிற்கும் மெய்காப்பாளன் முத்தையனிடம் ஏதோ சொல்லவே, அவன் உடனே சாஸ்திரியின் அருகில் வந்து, “அரசர் தங்களை அழைக்கிறார்” என்று கூப்பிடவும் அவர் திடுக்கிடுகிறார்.

“என்னையா?”

“ஆம், உங்களைத்தான். தாமதிக்காமல் உடனே என்னுடன் வாருங்கள்” என்று மீண்டும் முத்தையன் அழைக்கவே, அவனுடன் வீரபாண்டியன் அருகில் சென்று, “அரசே, எல்லாம்வல்ல தில்லைக்கூத்தனின் அருள் தங்களுக்குக் கிட்டுமாறு பிரார்த்திக்கிறேன். எப்பொழுதும் நினைத்த செயலில் வெல்வீர்களாக!” என அவனை வாழ்த்தி வணங்குகிறார்.

“சாஸ்திரிகளே! என் தமிழ் ஆசானான தாங்கள் என்னை வணங்கலாமா? உங்கள் பள்ளியில் எனக்கு ஆறாண்டுகள் தமிழ்க்கல்வி அளித்திருக்கிறீர்களே! தங்களை எப்படி மறப்பேன்? தந்தையாருக்கு மிகவும் அணுக்கமானவரல்லவா நீங்கள்! உங்களைப் பார்த்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டனவே! இருந்தபோதிலும், தாங்கள் அன்று கண்டதுபோலத்தான் இருக்கிறீர்கள். அதனால்தான் என்னால் தங்களை உடனேயே அடையாளம் கண்டுகொள்ள இயன்றது. தாங்கள் இங்கே எப்படி?” என்று வீரபாண்டியன் வினவுகிறான்.

ஒரு சாதாரண மறையவரிடம் அரசன் இப்படிக் குழைந்து குசலம் விசாரிக்கிறானே என்று தில்லை அந்தணர்கள் சிறிது முகம் சுளிக்கின்றனர். அது வீரபாண்டியனின் கவனத்துக்குத் தப்பாவிட்டாலும், அதை வெளிக்காட்டாது புன்னகைக்கிறான். தலைமைத் தில்லை அந்தணரிடம், “இவர் எனது தமிழ் ஆசான்! தாங்கள் எனக்குச் செய்யவிரும்பும் மரியாதை அனைத்துக்கும் இவரும் உரியவர். இவர் என்னுடன் வருவதற்குத் தங்களுக்குத் தடையேதும் இல்லையே?” என்று வினவியதும், தலைமை அந்தணரின் முகம் சிறிது சுருங்குகிறது. அதை உடனே மாற்றிக்கொண்டு, “மன்னருக்கு ஆசானாக இருக்க எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்! எவ்வளவு எளிமையாக இருக்கிறார்? அகத்தின் அழகு முகத்தில் ஒளிருகின்றது. நிறைகுடம் தளும்பாது என்பதை இவரைப் பார்த்தே அறிந்துகொள்ளலாம்” என்று சதாசிவ சாஸ்திரிக்குப் புகழாரம் சூட்ட முற்படுகிறார்.

தில்லை அம்பலவாணனின் தரிசனம் முடிந்ததும், தலைமை அந்தணரையும், சாஸ்திரியையும் வீரபாண்டியன் தன்னுடன் வருமாறு அழைக்கிறான். தொடர முற்படும் மற்ற தில்லை அந்தணர்களை அனுப்பிவிடுமாறு கையைக் காட்டவே, முத்தையன் அதை நிறைவேற்றுகிறான். மூவரும் கோவில் மண்டபத்தில் தனியான இடத்தில் அமர்கின்றனர். வீரபாண்டியனின் முகத்தில் கவலைக் கோடுகள் பரவுகின்றன. தான் சொல்லவருவதை எப்படி வெளிப்படுத்துவது என சிறிது நேரம் தயங்க, அவன் தொண்டையைச் செறுமிக்கொண்டு ஆரம்பிக்கிறான்.

“அந்தணர்களே, நான் தில்லைக்கு வந்தது அம்பலவாணனை தரிசித்து அருள்பாலிக்கும்படி வேண்ட மட்டுமல்ல, அவனையே காப்பாற்றும் நோக்குடன் வந்துள்ளேன்” என்றதும் இருவருக்கும் தூக்கிவாரிப்போடுகிறது.

“கலங்க வேண்டா! நான் சொல்வதை கவனமாகக் கேளுங்கள்” என்று விவரிக்கத் தொடங்குகிறான் வீரபாண்டியன். அவன் சொல்லச் சொல்ல, இருவரின் முகங்களிலும் கவலையும், கலவரமும் குடிகொள்கின்றன.

“...ஆகவே, போசள மன்னனுடன் ஒன்றிணைந்து அன்னியப் படையெடுப்பை முறியடிக்க முயன்ற என் முயற்சி தோல்வியைத் தழுவியது. போசள மன்னன் தன் நாட்டைக் காப்பாற்றிக்கொள்ள, துலுக்கப் படைத்தலைவனுக்கு உதவி செய்வான் என்றே ஊகிக்கின்றேன். அவர்கள் மிகவும் வலிமை மிகுந்த, எண்ணிக்கையில் அதிகமான படையுடன் விரைவிலேயே இங்கு வரக்கூடும்.

“இதுவரை நீங்கள் பார்த்த போர்கள் போல இந்தப் போர் இருக்கப்போவதில்லை. எனக்குக் கிடைத்த தகவல்களைக் கொண்டு பார்த்தால், நமது செல்வங்களைக் கொள்ளையடித்துத் தில்லிக்குக் கொண்டு செல்வதே, துலுக்கத் தளபதியின் நோக்கம் என்று தெரிகிறது” இதைச் செவியுற்றதும் இருவரின் முகங்களிலும் திகில் படர்கிறது.

“செல்வத்தைக் கவர்ந்து செல்வதுடன் அவர்கள் நிறுத்திவிடுவதில்லையாம். கோவில்களையும் சமயப் பெரியவர்களான அந்தணர்களையும், இளம் பெண்களையும் கூட விட்டுவைப்பதில்லையாம். உருவ வழிபாட்டை எதிர்க்கும் அவர்கள், கோவிலிலுள்ள நம் கடவுளரின் தெய்வத் திருமேனிகளை உடைக்க முற்படுகின்றார்களாம். அந்தணரைப் பிடித்து, பசுவின் இறைச்சியை உண்டு, அவர்கள் சமயத்திற்கு மாறுமாறு வற்புறுத்துகின்றனராம். மறுத்தால், அவர்களைக் கொன்றும் விடுகின்றார்களாம்.59 ஆகவே, நம் கோவிலுக்கும், உங்கள் உயிருக்கும் கேடு காத்திருக்கிறது.”

இதைக் காதுற்ற தில்லைத் தலைமை அந்தணரின் முகம் வெளிறிப்போகிறது.  உடல் தன்னையுமறியாமல் நடுங்குகிறது.

------------------------------------

[59. கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியும், எஸ்.ஸ்ரீநிவாச ஐயங்காரும் தங்கள் வரலாற்று நூல்களில் தகுந்த சான்றுகளுடன் எழுதியதுதான் வீரபாண்டியன் வாயிலாக இங்கு விவரிக்கப்படுகிறது. ‘A History of South India’, ‘South India and her Mohammedan Invaders’.]

“இப்படியுமா நடந்துகொள்வார்கள்? போரில் பெண்கள், குழந்தைகள், முதியவர், மறையோர் இவர்களை ஒன்றும் செய்யக்கூடாது என்ற போர் முறையை துலுக்கப் படைத்தலைவன் அறிய மாட்டானா?” என்று சுரத்தே இல்லாது வினவுகிறார்.

“அவர்களின் போர் முறையே முற்றிலும் வேறுபட்டது. நம் போர் முறையை அவர்கள் மதிப்பதில்லை. ஆகையால், அவர்களிடமிருந்து தப்பலாம் என்று மனப்பால் குடிக்க வேண்டாம். அவர்களிடமிருந்து தப்ப இயலாது, விதிவிலக்கும் கிடையாது” என்று வீரபாண்டியன் சொன்னதும், தில்லை அந்தணரின் நடுக்கம் இன்னும் அதிகமாகிறது.  வாயைப் பொத்திக்கொள்கிறார்.

“தெற்கே என் இளையோனிடம் நடந்துவரும் போரில் படைத்தளவாடங்களில் பெரும்பகுதி அழிந்ததுடன், எண்ணற்ற வீரரும் வீர சுவர்க்கம் புகுந்துவிட்டனர். பாண்டியப் பேரரசின் வலிமை கால் பங்குக்கும் கீழாகப் போய்விட்டது. அப்படியிருக்கச் சோழநாட்டுக்கு எவ்விதப் பாதுகாப்பு இருக்கும்?

“இருப்பினும், அத்துலுக்கப் படை தில்லையை அடைவதைத் தடுக்க என்னால் இயன்ற அளவுக்கு முயல்வேன். தற்பொழுது, துலுக்கப் படையையும், போசளப் படையையும் ஒருங்கே எதிர்த்து வெல்லும் அளவுக்கு படைகள் என்னிடம் இல்லவே இல்லை. தெற்கிலிருக்கும் என் படைகளில் ஒரு பகுதியை இங்கு விரைந்து வரச் சொல்லி சேதியனுப்பியுள்ளேன்.

“எந்த அளவுக்கு என்னால் போராட இயலும் என்று எனக்குத் தெரியவில்லை. துலுக்கத் தளபதியின் இலக்கு செல்வம் நிறைந்த மதுரைதான் என்றே நினைக்கிறேன். ஆகவே, மதுரையை காக்கும் பொறுப்பும், கடமையும் பாண்டியனான எனக்கு உள்ளது. எனது இளையோன் சுந்தரனுடன் சமாதான உடன்படிக்கை செய்துகொண்டாவது மதுரையைக் காத்துதான் ஆக வேண்டும்.”

வீரபாண்டியன் பேசப் பேச, இருவரின் இரத்தமும் உறையத் தொடங்குகிறது. மன்னன் தில்லைக்குப் பாதுகாப்பு தராவிடில் அவர்களால் என்ன செய்ய இயலும்? அம்பலவாணனின் பொற்கூடத்தையும், கோவிலையும் எவர் காப்பர்? அவர்களையும் சேர்த்து, மக்களின் உயிருக்கு எவர் உத்திரவாதம் அளிப்பர்?

அவர்களின் மனவோட்டத்தை உணர்ந்த வீரபாண்டியன், மேலே தன் திட்டத்தைச் சொல்ல ஆரம்பிக்கிறான்: “முதலில் ஆலயப் பாதுகாப்பைப் பற்றிப் பேசுவோம். கோவிந்தராஜப் பெருமாள், ஈசரின் சன்னிதிகளைக் கற்களால் சுவரெழுப்பி மூடிவிடுங்கள்.60 அம்பலவாணரின் திருவுருவச் சிலையை பாதுகாப்பான வேறு இடத்துக்குக் கொண்டுசென்று விடுதலே சிறந்தது.  அந்தணர் அனைவரும் தில்லையை விட்டு நீங்கி, சிறிய கிராமங்களுக்குச் சென்று மறைந்துகொள்ளுங்கள். படையெடுப்பு முடிந்தவுடன் நீங்கள் மீண்டும் தில்லைக்குத் திரும்பி வரலாம்” என்ற வீரபாண்டியன், சதாசிவ சாஸ்திரியை நோக்கி, “ஆசானே, அம்பலவாணரின் திருமேனியை எங்கு எடுத்துச்சென்றால் பாதுகாப்புடன் வைத்திருக்கலாம் என எண்ணுகிறீர்கள்?” என்ற கேள்வியுடன் நிறுத்துகிறான்.

-------------------------------------

[60. இரண்டாவது இஸ்லாமியப் படையெடுப்பின்போது, மதுரை ஆலயத்தில், சொக்கநாதரின் கருவறையைக் கற்சுவற்றால் அடைத்துவிட்டு, அர்த்த மண்டபத்தில் ஒரு சிவலிங்கத்தை வைத்து, அதைப் படையெடுப்புக்குக் காவு கொடுத்ததாகச் செவிவழிச் செய்தியும் உண்டு - மதுரை மீனாட்சி கோவிலில் அர்ச்சகராக இருந்து அமெரிக்காவில் பல கோவில்களுக்குக் குடமுழுக்குச் செய்துவரும் தங்கரத்தின பட்டர் கதாசிரியருக்குக் கூறியதும் இதில் அடக்கம்.  இதுபோன்ற பல கோவில்களில் கடவுளர் சிலைகளை அகற்றிப் படையெடுப்பின் சேதத்திலிருந்து காப்பாற்றியதுண்டு. கல்வெட்டு ஆதாரங்களும் உள. இங்கு வீரபாண்டியன் சொல்வது அச்செவிவழிச் செய்திகளை ஒட்டியே புனையப்பட்டுள்ளது.]

“அரசே, தாங்கள் பகர்வதைப் பார்த்தால், துலுக்கத் தளபதி தில்லையைத் தாக்கிவிட்டுக் கொள்ளிடத்தின் வடபுறமாகவே சென்று, திருவரங்கத்தைத் தாக்க வாய்ப்பும் உளது. ஏனெனில், திருவரங்கத்தில் செல்வம் நிரம்பி வழிகிறது. அதைப் பற்றி அவன் அறிந்திருக்கவும் கூடும். ஆகவே, கொள்ளிடத்தைக் கடந்து, தெற்கே இருக்கும் மயிலாடுதுறையும்
தாண்டி, திருவாரூரில் இருக்கும் ஆரூரனின் கோவிலில் கூத்தபிரானின்
திருமேனியைச் சில காலம் மறைத்துப் பாதுகாத்து வைக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.61 ஆரூர்க் கோவில் பெரிதானாலும், அங்கு செல்வம் மிகுதியாக இல்லை. மேலும், திருவரங்கத்துக்கு அது சுற்றுவழி; பல ஆறுகளைக் கடந்து செல்ல வேண்டும். ஆகவே, துலுக்கத் தளபதி அதை தவிர்த்துச் செல்வான் என எண்ணுகிறேன். ஆகவே, அதுதான் பாதுகாப்பான இடம்” என ஆலோசனை அளிக்கிறார் சதாசிவ சாஸ்திரி.

என்ன பேசுவது என்றே தெரியாமல் தில்லைத் தலைமை அந்தணர் வாயடைத்துப் போயிருக்கிறார். வாய் மட்டும், “நடராஜா! உனக்கா இந்தக் கதி?” என்று முணுமுணுத்தவாறே இருக்கிறது.

“ஆசானே, தங்கள் குடும்பம் இப்போது தில்லையில்தானே உள்ளது?” என்று வினவுகிறான் வீரபாண்டியன்.

“இல்லை அரசே! குடந்தையை அடுத்த கிராமத்தில் இருக்கிறார்கள். என் மகள் தன் கணவருடன் தில்லையில் இருப்பதால், அவளையும், என் பெயரனையும் பார்த்துவிட்டு, அம்பலவாணனையும் தரிசித்துவிட்டுச் செல்லலாம் என்று வந்தேன்.”

“காடவ மன்னரின் வழித்தோன்றல்கள்?”

“இப்பொழுது சிங்கமுகன் என்ற ஆணும், அவனது மகளும்தான் உயிருடன் இருக்கிறார்கள்.  அவளுக்கு மணமுடிக்க வேண்டும் என்று வரன் பார்த்துக் கொண்டிருக்கிறேன். திருமயிலையில் நல்ல பிள்ளை ஒருவன் இருப்பதாகத் தெரிகிறது. மணமுடித்து அவளைத் திருமயிலைக்கே அனுப்பி விடலாம் என்றிருக்கிறேன்.”

“முதலில் அம்பலவாணரின் திருமேனியை திருவாரூக்குக் கொண்டுசெல்லும் பணியை உங்கள் இருவரிடமும் ஒப்படைக்கிறேன். கடவுளர் சன்னிதிகளை கருங்கற்களால் மூடும் பணி உடனே துவங்கட்டும். குடந்தைக்கருகிலுள்ள உங்கள் குடும்பத்தையும், திருவாரூருக்கே கூட்டிச் சென்று விடுங்கள். பிறகு நிலைமையைப் பார்த்துக்கொண்டு மெல்ல மதுரைப்பக்கம் வந்து சேருங்கள். எவர் கண்ணிலும் படாது பயணிப்பது நன்று. தம்பி சுந்தரனுக்கும் நீங்களே தமிழாசான் ஆனதால் எங்களுக்குள் உடன்படிக்கை செய்துகொள்ள உங்கள் உதவி தேவைப்பட்டாலும் படலாம். நான் உடனே கிளம்ப வேண்டும். சந்தித்ததில் மகிழ்ச்சி” என்று வீரபாண்டியன் புறப்படுகிறான்.

சதாசிவ சாஸ்திரியும், தில்லைத் தலைமை அந்தணரும் அரசனின் ஆணையை எப்படி நிறைவேற்றுவது என்று எண்ணியபடியே கல்லாய்ச் சமைந்துவிடுகிறார்கள்.

போசளர் அரண்மனை, துவாரசமுத்திரம்

சாதாரண, ஆடி 12 - ஜூலை 17, 1310

த்தம் கொதித்து தலைக்கு ஏறுவதைப் போசள மன்னன் வீரவல்லாளனால் உணர முடிகிறது. தமிழ்நாட்டுக்குக் கிளம்புமுன்னர் எவ்வளவு அழகாகத் திகழ்ந்த தனது தலைநகரம் துவாரசமுத்திரமா இப்பொழுது இப்படி இடித்துத் தகர்க்கப்பட்டிருக்கிறது?! அவனால் நம்பவே இயலவில்லை. மதில்கள் இடித்து கற்குவியலாக்கப்பட்டு, மாளிகைகள் குட்டிச்சுவர்கள் ஆக்கப்பட்டு, தன் அழகையே இழந்த கைம்பெண் போலல்லவா துவாரசமுத்திரம் காட்சியளிக்கிறது!

எந்த நகரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று வீரபாண்டியனின் நட்புக்கரத்தை உதறிவிட்டு ஓடி வந்தானோ, அந்த நகரமே மாலிக் காஃபூரின் வெறித்தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாது பாதிக்கும் அதிகமாகச் சிதறிவிட்டதே! வீரவல்லாளனுக்கு நெஞ்சை அடைக்கிறது.

----------------------------------------------

[61. மாலிக் காஃபூர், உலூக்கானின் படையெடுப்பு காலத்தில் தில்லை நடராஜர், திருவாரூர் தியாகராஜரின் திருமேனிகள் உடையார்பாளையத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அது எந்த அளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை.]

தனது சமாதானக் கொடியைக் கண்டு, தாக்குதலை நிறுத்திவிட்டுப் பேச்சுவார்த்தைக்கு வந்திருக்கும் மாலிக் காஃபூரை ஏறெடுத்துப் பார்க்கிறான். அவனின் எகத்தாளமான சிரிப்பு வீரவல்லாளனுக்கு எரிச்சலூட்டுகிறது. அதை அடக்கியவாறு புன்னகைக்கிறான். அவன் பேசப் பேச, கன்னடத்திலிருந்து அரபு மொழிக்கு மாற்றிச் சொல்லப்படுகிறது:

“மேன்மை தாங்கிய தில்லி சுல்தான் அல்லாவுத்தீன் கில்ஜியாரின் பெருமதிப்புக்குப் பாத்திரமான சிறந்த படைத்தலைவர் மாலிக் காஃபூர் அவர்கள், தாக்குதலை நிறுத்திவிட்டு சமாதானப் பேச்சுவார்த்தைக்குச் சம்மதித்திருப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியையும் ஆறுதலையும் ஒருங்கே தருகிறது. நான் வரும்வரை என் மைந்தனும், துவாரசமுத்திரத்தில் இருக்கும் என் சேனைகளும் தங்களுடன் சமரிட்டதையும் மனதில் வைத்துக்கொள்ளாது நட்புக்கரத்தை நீட்டியிருப்பது, தில்லிக்கும் துவாரசமுத்திரத்துக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் நல்லிணக்கத்தயே காட்டு…” என்றவனை மாலிக் காஃபூர் கையைக் காட்டித் தடுத்து நிறுத்துகிறான். கண்களை உருட்டி விழித்தவாறே, கோபத்தில் அவன் பேசுவது, கன்னடத்துக்கு மொழிமாற்றம் செய்யப்படுகிறது:

“எமக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பை உமது நாடு ஈடுகட்ட வேண்டும். எமது படையில் இறந்தவரை ஈடுசெய்யும் அளவுக்கு, இறந்தவரின் எண்ணிக்கையைப்போல் இருமடங்கு எண்ணிக்கையில் உமது படையினர் எமது சமயத்துக்கு மாறி, எமது படையினராகச் சேர வேண்டும். மேலும், எமக்கு ஏற்பட்ட துன்பத்துக்காக எவ்வளவு நஷ்டஈடு தரப்போகிறீர்? உமது கஜானாவில் எவ்வளவு ஐவேஜ் உள்ளது? எமக்குக் கணக்குத் தெரிந்தாக வேண்டும்” என்று மாலிக் காஃபூர் கேட்டதும், வீரவல்லாளனுக்கு வயிற்றைப் பிசைகிறது. அடிமடியிலல்லவா இவன் கைபோடுகின்றான்?

மாறி மாறி பேரம் பேசி, போசள நாட்டுக் கஜானாவில் பாதியையும், யானைகள், குதிரைகள் இவற்றில் முக்கால் பங்கையும் நஷ்ட ஈடாகத் தரவும், மாலிக் காஃபூருக்கு மதுரை வரை வழிகாட்டி துணை வர ஆளனுப்பவும், போசளப் படையில் பாதியை அவனுக்குத் தரவும் வீரவல்லாளன் ஒப்புக்கொள்கிறான்.

அதற்கு நன்றியாக போசள நாட்டை மேலும் தாக்காது தமிழ்நாட்டுக்குச் செல்ல மாலிக் காஃபூர் ஒப்புதல் அளிக்கிறான். தனது படைத்தலைவர் இருவர் இறந்துவிட்டதால், போசளப் படைத்தலைவர் இருவரைத் தனக்கு அடிமையாகத் தரவேண்டுமென்றும், அவர்கள் இஸ்லாமுக்கு மாற வேண்டும் என்ற முதல் நிபந்தனையையும், தான் திரும்பிச்சென்று தில்லியை அடையும் வரை, தற்போது தில்லி திரும்பும் தன் படையின் ஒரு பகுதியுடன் இளவரசன் வீரவிருபாட்சனை அனுப்பிவைக்க வேண்டும் என்ற இரண்டாவது நிபந்தனையையும் விதிக்கிறான் மாலிக் காஃபூர்.

“ஏன் என் மகனை தில்லிக்கு அனுப்ப வேண்டும்? அவன் என்ன பிணைக் கைதியா?” என வீரவல்லாளன் மறுக்கிறான்.

“நீர் எப்படிவேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளும். அதுபற்றி எனக்குக் கவலையில்லை. நாம் மதுரையை அடைந்து திரும்புமுன் உமது மனம் மாறாமலிருக்கவே, இப்படி ஒரு ஷரத்தை விதித்தேன். பிணைக்கைதி என்றால் உமக்கு அவமானமாகத்தான் இருக்கும். இப்படி வேண்டுமானால் செய்வோமா? நீர் தில்லிக்கு அடங்கி கிஸ்தி கட்டும் திம்மியாக இருக்கச் சம்மதிப்பதாகவும், நீர் எமக்கு நஷ்ட ஈடாய்க் கொடுக்கும் செல்வங்களுடன் உமது இளவரசரையும் சமாதானத் தூதுவராய் அனுப்புவதாகவும் மகஜர் எழுதிக்கொடும். அதற்கு இணங்கியதாக ஒப்பமிடுகிறேன். சுல்தானும் மனமகிழ்வார். அல்லா அவரது மனதில் உம் மீது கருணைகொள்ளச் செய்வார். அல்லாவின் கருணைக்கு அளவே இல்லை” என சாமர்த்தியமாக மறுமொழியளிக்கிறான் மாலிக் காஃபூர்.

வீரவல்லாளன் அதற்குச் சம்மதித்தவுடன், “சரி, எந்த இரு சிறந்த படைத்தலைவரை எமக்கு அளிக்கப்போகிறீர்?” அடுத்த கேள்வி பிறக்கிறது மாலிக் காஃபூரிடமிருந்து.

சில கணங்கள் சிந்தித்த வீரவல்லாளனின் கண்கள் அரசவையிலிருக்கும் படைத்தலைவர்களையும் பிரபுகளையும் அளவெடுத்துப் பார்த்து, இறுதியாக ஹக்கா, அவனது தம்பி இருவரின் மீதும் நிலைக்கின்றன.

“இதோ, உமது மதத்துக்கு மாறி, உமக்கு அடிமையாக இருக்கத் தேர்ந்தெடுத்திருக்கும் இரு படைத்தலைவர்கள்! இவர்கள் பெயர், ஹக்கன்னா, புக்கன்னா. இனி இவர்கள் உமது அடிமைகள்!” என்று சொல்லிவிட்டு கடகடவென்று நகைக்கிறான் வீரவல்லாளன்.

அவனது நகைப்புக்குக் காரணம் அறியாது திகைத்தாலும், ஹக்காவையும், புக்காவையும் பார்த்த மாலிக் காஃபூருக்கு முகம் சற்று மாறுகிறது. இந்த வீரர்களை சுல்தானுக்கு அடிமையாக அனுப்பினால், ஒருவேளை சுல்தான் அவர்களுக்கு அதிக சலுகை காட்டத் தொடங்கிவிடுவாரோ என்று யோசிக்கிறான்.

பிறகு அந்த எண்ணத்தை ஒதுக்கித் தள்ளிவிட்டு, இருவரையும் தன் முன்பு அழைக்கிறான். அவர்களைப் பார்த்து, “அல்லாவின் கருணையான பார்வை உங்கள் இருவரின் மீதும் இன்று விழுந்துள்ளது. அதுதான் அல்லா உங்கள் மன்னரின் மனதில் இந்த ஃபிர்மானைப் பிறப்பித்திருக்கிறார். அல்லா அருளிய திருக்குரானை ஏற்றுக்கொண்டு, முஸ்லிமாக மாற உங்களுக்குச் சம்மதம்தானே?” என்று கேட்கிறான்.

மாலிக் காஃபூரையும், தன் மன்னன் வீரவல்லாளனையும் ஹக்கா கண்கொட்டாமல் பார்க்கிறான். அவனது மார்பு விம்மிப் புடைக்கிறது. அவனது ஆத்திரத்தை மூச்சின் மூலமாக இழுத்து விடுகிறான். அவனது கண்கள் வீரவல்லாளனை ஆயிரம் கேள்விகள் கேட்கின்றன: ‘உமக்காக எவ்வளவு உழைத்திருக்கிறேன்? உமக்காக என் உயிரையும் கொடுக்கச் சித்தமாக இருந்தேனே! எமக்கு நீர் காட்டும் கருணை, நன்றி இதுதானா? இதற்குப் பதிலாக என்னை உமது கையினாலேயே கொன்றிருக்கலாமே?’

“ஹக்கன்னா, புக்கன்னா நீங்கள் இருவரும் நம் இளவரசனுக்குத் துணையாக தில்லி செல்ல வேண்டும். நீங்கள் தமது மதத்துக்கு மாற வேண்டும் என தில்லி சுல்தானின் துலுக்க சேனாபதி விரும்புகிறார். கடவுள் ஒருவரே, ஞானிகள் அவரைப் பல பெயரில் அழைக்கின்றனர் என்பது போல, இறைவனுக்கு அல்லா என்னும் ஒரு பெயரும் இருப்பதாக நினைத்துக்கொண்டு மதம் மாறிவிடும்படி உங்களுக்கு ஆணையிடுகிறேன்” என்ற வீரவல்லாளனின் பேச்சு இருவரின் காதுகளிலும் உருக்கி ஊற்றிய ஈயக்குழம்பாய் பாய்கிறது.

மெதுவாக மேலும் கீழும் தலையை ஆட்டி தனது சம்மதத்தைத் தெரிவிக்கிறான் ஹக்கா. அவன் மனக்கண் முன் தனக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதியை விட, அதற்குப் பின்னால் வீரவல்லாளனையும் சேர்த்து போசள அரசுக்குத் தன்னால் ஏற்படப்போகும் அழிவும், தான் உருவாக்கப்போகும் விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் தோற்றமுமே பெரிதாக உருவெடுத்துப் படர்கின்றன.

***

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com