பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -நான்காம் பாகம்-அத்தியாயம் 18

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -நான்காம் பாகம்-அத்தியாயம் 18

பாண்டியர் அரண்மனை, மதுரை

சாதாரண, ஐப்பசி 19 - அக்டோபர் 25, 1310

ராக்கோழியின் கூச்சல் அரண்மனை மண்டபத்தில் நிலவும் மயான அமைதியைக் கிழிக்கிறது. வீரபாண்டியன், சுந்தரபாண்டியன் இருவரின் முகங்களிலும் ஈயாடவில்லை. சமாதானக் கொடியுடன் மதுரை வந்த தனது தமையன் தன்னுடைய அனைத்து நிபந்தனைகளுக்கும் ஒப்புக்கொள்வான் என்று சுந்தரபாண்டியனால் நம்பவே இயலவில்லை.  அதேசமயம், தன் தமையன் கொணர்ந்த சேதியும் அவனுக்கு அதிர்ச்சியை விளைவித்திருக்கிறது.

போசள மன்னன் வீரவல்லாளன் துலுக்கப் படைத்தலைவனுடன் சமாதானம் செய்துகொண்டு, தில்லி சுல்தானுக்கு அடங்கி திறை செலுத்த ஒப்புக்கொண்டதுடன், தமிழ்நாட்டைச் சூறையாட படை உதவியும் அளிக்க ஒப்புக்கொண்டதாக தன் தமையன் கொணர்ந்த உளவுச் செய்தியும் அவனைக் கலக்குகிறது.

பங்காளிச் சண்டையை விட்டுவிட்டு, பாண்டிநாட்டைப் பகைவரிடமிருந்து காப்பாற்ற வேண்டும். அதற்காக எவ்வித நிபந்தனையுமின்றி தன்னுடன் கூட்டுச் சேருவதாக வீரபாண்டியன் அளித்த வாக்குறுதி - தனக்குச் சாதகமாகவும், தமையனுக்குப் பாதகமாகவும் போட்ட நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டது - தான் காண்பது கனவா, நனவா என்ற ஐயத்தை உண்டுபண்ணுகிறது.

ஆகவே, அமைதியாக ஆலோசனையில் ஆழ்கிறான் சுந்தரபாண்டியன். தன் இளையவனே பேசட்டும் என வீரபாண்டியனும் அமைதிகாக்கிறான்.

“அண்ணா, தாங்கள் சொல்வது உண்மையா? தில்லை துலுக்கச் சேனாபதியின் தாக்குதலுக்கு ஆளாகிவிட்டதா? அங்கு என்ன நடந்தது? அவனது வேகத்தைத் தடுத்து நிறுத்தக் கங்கைகொண்ட சோழபுரம் அருகில் போரிட்ட தாங்கள் எப்படிப் புறமுதுகு காட்டி ஓடி வந்தீர்கள்?”

சுந்தரபாண்டியன் அமைதியைக் கலைக்கிறான்.

“சுந்தரா, துலுக்கப் படைத்தலைவனின் போர் முறை மிகவும் மாறுபட்டது. வெற்றி, தோல்வி என்று முடிவானவுடன் நாம் போரை நிறுத்திவிடுகிறோம். போரும் வீரர்களுக்கு இடையில்தான் நடக்கிறது. பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள், மறையவர்களை நாம் தாக்குவதில்லை. மற்ற சமயத்து வழிபாட்டுத் தலங்களையும் நாம் அழிப்பதில்லை. ஆனால், தன்னிடம் தோற்ற மன்னர்களையும், அவர்களின் படைத்தலைவர்களையும், குற்றமறியாப் பொதுமக்களையும், சித்திரவதை செய்து கொல்வது துலுக்கத் தளபதியின் பொழுதுபோக்காம்.

“நமது வழிபாட்டுத் தலங்களை அழிப்பதிலும், அவற்றை மாசுபடுத்துவதிலும்தான் அவன் மகிழ்வு காண்கிறானாம். தன்னிடம் தோற்பவரை அவனது சமயத்துக்கு மாற்றி, மாட்டிறைச்சி உண்ணும்படி கட்டாயப்படுத்துகிறானாம். குறிப்பாக, மறையவரைத் தேடிப்பிடித்து இக்கட்டாயத்துக்கு உட்படுத்துகிறான் என்ற சேதியும் கிட்டியுள்ளது. எனவேதான், நான் தில்லைவாழ் அந்தணரைச் சந்தித்து, அவர்களை அங்கிருந்து நீங்கிச் சிறு கிராமங்களிலும், காடுகளிலும் மறைந்து வாழும்படி பணித்தேன். தில்லைக்கூத்தனின் திருமேனியை திருவாரூருக்குக் கொண்டுசென்று பாதுகாக்கும்படி நம் தமிழ் ஆசானைக் கேட்டுக்கொண்டேன். அதனால் அம்பலவாணர் அழிவிலிருந்து தப்பினார். தன் சீற்றத்தைக் கண்டு மகாதேவரும் அஞ்சியோடினார் என்று துலுக்கத் தளபதி மார்தட்டிக்கொள்கிறானாம்.62

---------------------------------------

(62. இஸ்லாமிய வரலாற்றாளர் அப்துல் வாஸஃப் இவ்வாறு குறிப்பிட்டதாக எஸ்.ஸ்ரீநிவாச ஐயங்கார் தனது வரலாற்று நூலில் எழுதியுள்ளார். பீர்துல் என்ற இடத்தில் மாலிக் காஃபூருடன் போரிட்டுத் தோல்வியுற்று மதுரைக்கு ஓடினான் என்று வாஸஃப் குறிப்பிட்டிருக்கிறார். பீர்துல் கங்கைகொண்ட சோழபுரமாக இருக்கக்கூடும் என மற்ற சில வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள்.)

“பெண்களும், குழந்தைகளும், முதியவரும், மறையோரும் பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல வாய்ப்பளிக்கவே, கங்கைகொண்ட சோழபுரத்தருகே அவனுடன் சமரிட்டேன். அவனை எப்படியெல்லாம் அலைக்கழிக்க வைத்து, தில்லையை நெருங்கத் தாமதப்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு இங்குமங்கும் ஓடினேன். படைகளைப் பிரித்துப் பிரித்து அவனைக் குழப்பிப் போரிட்டேன்.”

அண்ணனின் விவரிப்பைக் கேட்ட சுந்தரபாண்டியனுக்கு உடலெல்லாம் பதறுகிறது. மதுரை என்னாகும் என்று எண்ணிப்பார்க்கவும் அவனுக்கு அச்சமாக இருக்கிறது.

மேலும் தொடருகிறான் வீரபாண்டியன்… “இருந்தபோதிலும் அவனது, போசளப் படைகளின் எண்ணிக்கை என்னுடைய படை எண்ணிக்கையை விட மிக அதிகம். எனது படையில் பாதிப் பேருக்கு மேல் போரில் வீர சுவர்க்கம் அடைந்தனர். நமது முறைப்படி இவனுடன் போரிட்டால் தோல்வி நிச்சயம். ஆகவே, வேறு விதமாகப் பொருதித்தான் நம் நாட்டைக் காப்பாற்ற வேண்டும். மதுரை காக்கப்படவேண்டுமென்ற ஒரே காரணத்துக்காகத்தான் நான் மீதியுள்ள படைகளுடன் விரைந்து வந்தேன். இருப்பினும், வாய்க்கரிசி வாங்கிக்கொண்ட நம் மறவர்குலப் பாண்டிய வீரர்கள், அவனது விரைவைக் குறைக்கவேண்டி, ஆங்காங்கு இரவோடிரவாக அவனைத் தாக்கி வருகிறார்கள். ஒவ்வொரு வீரனும் தன்னுயிரைத் துறக்குமுன் பத்து பகைவரையாவது எமனுலகுக்கு அனுப்பி வருகிறான் என்ற செய்தியும் எனக்குக் கிட்டி வருகிறது.

“மதுரைக்காக எவ்விதத் தியாகத்தையும் செய்யத் தயங்க மாட்டேன் சுந்தரா. அதனால்தான் உனது அனைத்து நிபந்தனைகளுக்கும் ஒப்புதலளித்தேன். இனி, நீ மதுரையை ஆண்டுகொள்.  பகைவனிடமிருந்து மதுரையையும், சொக்கநாதர் கோவிலையும் காப்பாற்றுவோம். இணைந்து பாண்டியர் பெருமையை நிலைநாட்டுவோம்” என உருக்கமாகத் தன் கருத்துகளை முன்வைக்கிறான்.

பழம் நழுவிப் பாலில் விழுந்து, அதுவும் நழுவித் தன் வாயில் தானாக வந்து விழுவது போலச் சுந்தரபாண்டியனுக்குத் தோன்றுகிறது. தனக்குக் கிடைத்திருக்கும் சாதகமான நிலைமையை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற உள்ளுணர்வுடன் மேலுமொரு நிபந்தனையைத் தன் தமையனிடம் வைக்கிறான்.

“அண்ணா, தங்களின் தாய்நாட்டுப் பாசத்தைப் பாராட்டச் சொற்களே போதாது. உங்களது விருப்பமே என் விருப்பமாகும். இணைந்து செயல்படத் தாங்கள் இன்னொரு வாக்குறுதியும் அளிக்க வேண்டும்” என்ன என்பதுபோல புருவத்தை உயர்த்துகிறான் வீரபாண்டியன்.

“உங்கள் பாதுகாப்புக்கென ஆயிரம் வீரர்கள் தவிர, மற்ற அனைவரையும் எனக்குத் தந்துவிட வேண்டும். துலுக்க சேனாபதியை புறம்கண்ட பின்னர், என்னை மதுரைக் காவலனாகவும், பாண்டியப் பேரரசனாகவும் அமர ஒப்புதல் அளித்துவிட்டு, தாங்கள் வட எல்லைக் காவலராகப் பொன்னமராவதிக்குச் சென்றுவிட வேண்டும். தங்களுக்குத் தேவைப்படும்போது, உதவிப் படைகளை அனுப்பும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன். நமது சிறிய தந்தையாரான நெல்லைப் பாண்டியர் விக்கிரமரும் மற்ற சிறிய தகப்பனார்களும் இதை ஒப்புக்கொள்வர்.  பாண்டிநாட்டின் உட்பூசல் நீங்கி அமைதி நிலவும். நம் பேரரசும் தந்தையார் காலத்துப் பழம்பெருமையை மீட்டுக்கொள்ளும். என்ன சொல்கிறீர்கள்?”

தன் இளையோன் தன்னைச் சூழ்ச்சி வலையில் இறுகக் கட்ட முயல்கிறான் என்பதை நன்கு உணர்கிறான் வீரபாண்டியன். வட பாண்டிநாட்டில் ஆயிரம் வீரர்களை வைத்துக்கொண்டு தன்னால் என்ன செய்ய இயலும்? மதுரையைக் காக்கவிழையும் தன் நல்லெண்ணத்தைப் பலவீனமாகக் கருதி, தன் கைகளைக் கட்டிப்போடச் சுந்தரபாண்டியன் தீட்டும் திட்டம் தன்னையும், தன் வழித்தோன்றல்களையும் வருங்காலத்தில் குறுநில மன்னர்களாக்கிவிடும் என்பதை நன்றாகவே அறிந்துகொள்கிறான்.

ஆயினும், பாண்டிநாடு சிதறிப்போய் மீண்டும் எவருக்கும் அடிபணியக் கூடாது என்னும் தன் தந்தையார் குலசேகரபாண்டியரின் வேட்கையை நிறைவேற்ற, தனது பேரரசு குறிக்கோளைத் தியாகம் செய்ய முடிவு செய்து விடுகிறான்.

“அப்படியே நடக்கட்டும் சுந்தரா. உனக்கு உறுதிமொழி அளிக்கிறேன். நம் பாண்டிநாட்டின் நன்மையைக் கருதி எப்போதோ இதைச் செய்திருக்க வேண்டும். இச்செயல் கண்கெட்ட பின் செய்யும் கதிரவன் வணக்கமாக இல்லாதுபோனால், அதுவே எனக்கு எல்லையில்லா மகிழ்வைத் தரும்” என்று தன் உள்ளப் புழுக்கத்தை வெளிக்காட்டாது புன்னகையுடன் பதிலளிக்கிறான்.

“என்னை வென்றுவிட்டீர்கள் தமையனாரே!” என்று சுந்தரபாண்டியன், வீரபாண்டியனைத் தழுவிக்கொள்கிறான்.

பாண்டியர் அரண்மனை, மதுரை

சாதாரண, ஐப்பசி 20 - அக்டோபர் 26, 1310

ணங்கி நின்று முத்தையன் தெரிவித்த செய்தியைக் கேட்டதும், சுந்தரபாண்டியனுக்கும், வீரபாண்டியனுக்கும் வானமே இடிந்து தலையில் விழுந்ததைப் போன்ற உணர்வு தோன்றுகிறது.

“அரசே, துலுக்கப் படைத்தலைவன் திருவரங்கத்தைத் தாக்கிச் சூறையாடிவிட்டானாம். திருவரங்கமே பிணக்காடாய் மாறிவிட்டதாம். அரங்கநாதன் கோவில் செல்வம் எங்குள்ளது என்று அறிந்துகொள்ள கோவிலில் பூசை செய்யும் வைணவ அந்தணர்களைப் பிடித்து வர முயல்கையில், பெரும்பாலானோர் அங்கிருந்து அகன்றுவிட்டதால், மிச்சமிருந்த கோவில் அந்தணர்களையும், மற்ற மறையவர்களையும் இழுத்துவந்தார்களாம். செல்வம் எங்கிருக்கிறது என்று கேட்டு அவர்களைப் பலவாறு சித்திரவதை செய்தும், பதில் சொல்ல இயலாது பலர் துடித்து இறந்தார்களாம். மற்றவர்கள் அவனது சமயத்துக்கு மாறச் சொல்லி வற்புறுத்தப்பட்டனராம். மறுத்தவரை தனது வாளுக்கு இரையாக்கி மகிழ்ந்தானாம் அந்த வஞ்சகன். திருவரங்கத்தில் அவனது அட்டகாசம் இன்னும் நிகழ்ந்துகொண்டிருக்கிறதாம்” முத்தையனின் குரல் கம்முகிறது.

இருவரும் திடுக்கிட்டுப்போகின்றனர்.

“உனக்கு இச்செய்திகளைச் சொன்னது யார்?”

“தாங்கள் ஆதரித்துவரும் தங்கள் தமிழ் ஆசான் சதாசிவ சாஸ்திரியார்தான்!”

“ஆசானை எங்கு சந்தித்தாய்? அவர் தில்லை அம்பலவாணனின் திருவுருவத்துடன் திருவாரூருக்கு அல்லவா சென்றிருந்தார்?”

“சற்று முன்னர்தான் அவரை அரண்மனை வாயிலில் சந்தித்தேன். காவலர் அவரை அடையாளம் கண்டுகொள்ள இயலாததால் உள்ளே அனுமதிக்க மறுத்தனர். என்ன கலவரம் என்று பார்க்கச் சென்றவன், அவரைக் கண்டதும் காவலரிடம் விவரத்தைச் சொல்லி, உள்ளே அழைத்து வந்தேன்” எனத் தகவல் தெரிவிக்கிறான் முத்தையன்.

“அப்படியா? ஆசான் எங்கிருக்கிறார்?”

“காடவ மன்னரின் வழிவந்தவளும், ஆசானின் பாதுகாப்பில் வளர்பவளுமான பதினெட்டு பிராயமுள்ள பெண்ணும் அவருடன் வந்திருக்கிறாள். உடலெங்கும் புழுதியுடன் இருந்ததால், மன்னர்களை அக்கோலத்தில் காண்பது முறையல்ல என்று நீராடிவிட்டு வரச் சென்றிருக்கிறார். செய்தி முக்கியமானதால், என்னிடம் தெரிவித்துத் தங்களுக்குப் பகருமாறு பணித்தார்.”

“வேறு ஏதாவது சொன்னாரா?”

“இல்லை அரசே!”

“அவர் வந்தவுடன், உடனே இங்கு அழைத்து வா” என்று வீரபாண்டியன் சொல்வதற்கும், காவலன் சதாசிவ சாஸ்திரி வந்து காத்துக்கொண்டிருக்கிறார் என்று தெரிவிப்பதற்கும் சரியாக இருந்தது. அவரை உடனே அழைத்துவரும்படி ஆணையிடுகிறான் வீரபாண்டியன்.

உள்ளே நுழைந்த சதாசிவ சாஸ்திரியிடம் தில்லையில் கண்டதற்கும், மதுரையில் தற்பொழுது காண்பதற்கும் நிறைய மாறுதல்கள் தென்படுகின்றன. கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக வளர்ந்திருக்கும் நரைத்த தாடியுடனும், மெலிந்த உடலுடனுடம் காட்சியளிக்கிறார். வழக்கப்படி கசங்கிய வேட்டியைத்தான் பஞ்சகச்சத்துடன் உடுத்தியிருக்கிறார். நீராடியவுடன் தீட்டிக்கொண்ட திருநீற்றுப்பட்டைகள் நெற்றியிலும், உடல் முழுவதும் வெண்ணிறமாக மிளிர்கின்றன.

“வாழ்க மன்னர்கள்! வான்முகில் வழாது பெய்ய, வரிவளம் சுறக்கக் குறைவிலாது உயிர்கள் வாழ, மன்னர் கோன் முறைமை செய்ய, நான்மறை அறங்கள் ஓங்க, நற்றவம் தழைக்க, மேன்மைகொள் சைவ நீதி உலகமெல்லாம் விளங்க, எல்லாம்வல்ல எம்பெருமானான சிவபெருமானை ஏத்துகிறேன்” என்று குழைந்து வாழ்த்திய சதாசிவ சாஸ்திரி, இருவரையும் பணிகிறார்.

வயதில் மூத்தவராக இருப்பினும், மன்னர்களுக்குரிய மரியாதையைத் தயங்காது அளிக்கிறார்.

இரு மன்னர்களும் தங்கள் தலையைச் சாய்த்து, வணக்கங்களைத் தமது ஆசானுக்குத் தெரிவிக்கின்றனர்.

"கூத்தபிரானின் திருமேனி, தியாகராஜருடன் சேர்ந்து உடையார்பாளையத்தில் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. திருவுருவங்கள் இருக்குமிடமும், செய்தியும் இரகசியமாகவே இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதைத் தங்கள் மெய்காப்பாளரிடம்கூடச் சொல்லாமல், உங்கள் முன்னிலையில் தெரிவிக்கிறேன்” என்று இரு மன்னர்களும் அறியத் துடித்துக்கொண்டிருந்த தகவலைத் தெரிவித்து உரையாடலைத் தொடங்குகிறார் சதாசிவ சாஸ்திரி.

“உடையார்பாளையம் என்றால்…? துலுக்கத் தளபதி திருவாரூருக்கும் சேதம் விளைவித்துவிட்டானா?” என்று வீரபாண்டியன் பதற்றத்துடன் வினவுகிறான்.

“இல்லை மன்னா! திருவரங்கத்தின் செல்வச் செழிப்பை அறிந்தவுடன் அங்கு நேராகச் செல்ல முடிவெடுத்துவிட்டான். திருவாரூர் தப்பியது. முன்னேற்பாடாகத்தான் கடவுளரின் திருமேனிகள் அங்கிருந்து அகற்றிக் கொண்டுசெல்லப்பட்டன.”

“எங்கள் மனதுக்கு நிம்மதியைத் தந்தீர்கள் ஆசானே! திருவரங்கம் பிணக்காடாகியது என்று முத்தையன் சொன்னான். தங்களுக்கு அச்செய்தி எவ்வாறு கிட்டியது?”

“அந்த அவல நிலையைக் காணும் கொடிய தண்டனையை அம்பலவாணன் எனக்கு ஏன் வழங்கினான் என்று தெரியவில்லை அரசே! ஆனைக்கா ஆண்டவனை (ஜம்புகேஸ்வரர், திருவானைக்கா) வழிபடலாம் என்று சென்றிருந்தபோதுதான் துலுக்கர் படை திருவரங்கத்துக்குள் நுழைந்தது. இலை, தழைகளால் என்னை மறைத்துக்கொண்டு, அவர்களின் படையைத் தொடர்ந்து சென்றேன். அங்கு நடந்த அவலங்களை - இழிசெயல்களை இக்கண்களால் காணும் இழிநிலையையும் இறைவன் எனக்குக் கொடுத்தான். அங்குதான் காடவ மன்னரின் வழித்தோன்றல் சிங்கமுகன் திருவரங்கத்தைக் காக்க வீரப் போரிட்டுத் தன் இன்னுயிரை ஈந்தார்.”

அந்தக் காட்சிகள் கண் முன் ஊசலாட, சதாசிவ சாஸ்திரியின் உடல் வெடவெடவென நடுங்குகிறது. தன்னைச் சமாளித்தவாறு, “அவரது மகள் வெண்ணிலாவுக்கு ஏதும் ஊறு ஏற்பட்டுவிடக்கூடாதென்று, மறைந்து மறைந்து திருஆனைக்காவில் இருக்கும் அவர்கள் வீட்டுக்குச் சென்று, அவளைக் கண்டுபிடித்தேன். அவளையும் அழைத்துக்கொண்டு, தங்களுக்குத் தகவல் தெரிவிக்க ஓடோடியும் வந்தேன்” என்று முடித்தவருக்குச் சிறிது மூச்சு வாங்கியது.

“தில்லைக் கோவில் என்னவாயிற்று? அங்கு பொன்வேய்ந்த அம்பலத்தின் கூரை இன்னும் இருக்கிறதா? அல்லாது பொன்னுக்காக அதைப் பெயர்த்தெடுத்துக்கொண்டு போய்விட்டார்களா?” என்று கவலையுடன் விசாரிக்கிறான் வீரபாண்டியன்.

“இன்னும் இருக்கிறது அரசே! அதன் மேல் தாமிரக் கரைசலைப் பூசிவிட்டதால் அது களிம்பேறியவண்ணம் காட்சியளித்ததாம். எனவே, அதை விட்டுச் சென்றுவிட்டார்களாம்.”

“தில்லைக் கோவிலின் நிலை?”

“இழுத்துப் பூட்டிவிட்டார்கள் மன்னர்களே! பூசைகள் நின்றுபோயின. கோவிலிலேயே கொலைகள் நிகழ்ந்து இரத்தப்பெருக்கு ஓடியதால், கோவிலின் புனிதமே கெட்டுப்போயிற்று.  அதனால், பரிகார பூசைகள் செய்து, நடராஜரின் திருமேனி திரும்பிய பின்னரே, அவரை மீண்டும் பிரதிட்டை செய்து, குடமுழுக்குச் செய்துதான் கோவிலைத் திறக்க முடியும்.”

“தங்கள் குடும்பம்...?”

“அந்த விவரம் அறிகிலேன் மன்னர்காள்! தங்களுக்குப் படையெடுப்பின் நிலை தெரிய வேண்டும், நாட்டை பரசமயத்தோரிடமிருந்து காக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை நீங்கள் எடுக்க வேண்டும் என்ற நினைப்பே என்னை மதுரைக்கு ஈர்த்து இழுத்து வந்தது.”

அவரின் அந்த நிலை இரு மன்னர்களுக்கும் அவர்பால் இரக்கத்தை வரவழைத்தது.  இருப்பினும் மேலும் விவரமறியும் ஆவலில், சுந்தரபாண்டியன் அவரிடம், “ஆசானே!  எப்படித் தங்களால் விரைவாக இங்கு வந்து சேர முடிந்தது?”

“சிங்கமுகனின் புரவியில்தான் வென்ணிலாவுடன் வந்தேன். எங்கள் இருவருக்குமே குதிரைச் சவாரி செய்து சிறிது பழக்கம் உண்டு. காலில் பட்ட அடியால், மதுரைக்கு ஆறு காதம் முன்னரே அப்புரவியால் மேற்கொண்டு செல்ல இயலவில்லை. அதை அங்கு ஒரு வேளாளரிடம் ஒப்படைத்துவிட்டு, அவரது மாட்டுவண்டியில் மதுரை வந்தடைந்தோம்” என்று சதாசிவ சாஸ்திரி விளக்குகிறார்.

“ஆசானே, தங்களது குடும்பத்தின் நலனையும் பொருட்படுத்தாது, நாட்டு நலனுக்காகத் தாங்கள் மதுரைக்கு வந்தது, எங்கள் இதயத்தைத் தொட்டுவிட்டது. தாங்கள் இளைப்பாறுங்கள். விரைவிலேயே தங்களைத் தகுந்த பாதுகாப்புடன் தங்கள் ஊருக்கு அனுப்பி வைக்கிறேன்” என்று கனிவு கலந்த பாசத்துடன் வீரபாண்டியன் கூறுகிறான்.

அவன் கண்ணசைத்தவுடன், முத்தையன் சதாசிவ சாஸ்திரியை அழைத்துச் செல்கிறான்.

வீரபாண்டியன் சிந்தனையில் ஆழ்கிறான்.

“அண்ணா, இனி பொறுக்கக்கூடாது. திருவரங்கம் நோக்கி விரைவோம். அரங்கநாதன் ஆலயம் வைணவக் கோவில் என்றாலும், எச்சமயங்களுக்கும் பரசமயத்தோரால் ஊறு நேராவண்ணம் காப்பது நமது பொறுப்பு!” என்று உணர்வு ததும்பக் கூறுகிறான் சுந்தரபாண்டியன்.

“சிந்திக்கச் சிறிது அவகாசம் கொடு தம்பி. நமது ஆசான் மூலமாக நமக்குச் செய்தி வந்திருப்பது என்னைக் குழப்புகின்றது” என்ற வீரபாண்டியனின் முகத்தில் கவலைக்குறிகள் தோன்றுவது நன்றாகவே தெரிகிறது.

“இதில் சிந்திப்பதற்கோ, குழம்புவதற்கோ என்ன இருக்கிறது தமையனாரே? எதிரி நமது வட எல்லையை அடைந்துவிட்டான் என்று தெரிந்தவுடனேயே அவனை முறியடிக்க நாம் புறப்பட்டுவிட வேண்டாமா?” என்னும் சுந்தரபாண்டியனின் குரலில் வேகம் இருக்கிறது.

“நம் ஒற்றர் மூலம் தெரியவேண்டிய சேதி நமக்கு ஆசான் வாயிலாகத் தெரியவந்திருக்கிறது என்றால், நம் ஒற்றர் படை - ஒற்றரை விட்டுத்தள்ளு - நம் வீரரில் ஒருவர்கூடவா விரைந்து வந்து நமக்குச் சேதி தெரிவிக்க இயலாது போயிருக்கும்? இது என்ன சொல்கிறது? நமது வீரர் எவரும் மருந்துக்குக்கூட உயிர் தப்பவில்லை என்பதுதானே? கூட்டிக் கழித்துப்பார்த்தால், மதுரைக்கு வடக்கே நமக்குப் படைபலம் எதுவுமே இல்லை என்றுதானே பொருள்? நான் நினைத்ததைவிட நம் நிலை மிகவும் மோசமாகிவிட்டது என்ற ஐயம் என்னை வாட்டியெடுக்கிறது. நம் படை பலத்தை அதிகரித்து, மதுரையைக் காக்க ஆவன செய்வதே சாலச்சிறந்து எனத் தோன்றுகிறது.

“துலுக்கத் தளபதியை குறைவாக மதிப்பிட்டு விட இயலாது. அவனுக்குத் துணையாகப் போசளர் உள்ளனர். அவர் நம் வலிமையையும் பலவீனத்தையும் நன்கறிவர். ஆகையால், பகைவரை எதிர்நோக்கி மதுரையிலேயே இருப்போம். மதுரையை அவன் முற்றுகையிடுவதற்குள் தென்பாண்டிநாட்டிலிருந்து படைகளை வரவழைத்து நம்மைச் சிறப்பான நிலைக்கு உயர்த்திக்கொள்வோம். அதை விடுத்து, இங்கிருக்கும் பலத்தையும் குறைப்பது நல்லதல்ல என்று எனக்குப் படுகிறது” என்று வீரபாண்டியன் தன் கருத்தை விளக்குகிறான்.

“இல்லையண்ணா இல்லை. போசளனும், துலுக்கத் தளபதியும் தமிழரை, அதுவும் பாண்டியரை கிள்ளூக்கீரைகளாக நினைத்துவிட்டனர் போலும்! அவர்களை காவிரியைக் கடக்கவிடக் கூடாது. மதுரையில் தங்களுக்கு ஆதரவாக ஆயிரம் வீரரை விட்டுச் செல்கிறேன். எனது படைகளும், மிஞ்சியிருக்கும் தங்களுடைய படைகளுமே மாற்றாரை மண்ணோடு மண்ணாக்கப் போதுமானவை. நெல்லைப் பாண்டியருக்கும் உடனே செய்தி அனுப்பி விடுவோம். அவரும் தன் படையுடன் எனக்குத் துணையாக வந்து சேர்ந்துவிடுவார்” என்று உற்சாகமாகப் பேசிக்கொண்டே போகும் சுந்தரபாண்டியனை கையமர்த்திக் கேட்கிறான் வீரபாண்டியன், “சுந்தரா… ஆயிரம் வீரரை மட்டுமே விட்டுச்செல்வாயா? மதுரையைக் காப்பாற்ற இவர்கள் போதுமா?”

“அண்ணா, வெற்றியுடன் நான் திரும்புவேன். வெற்றி பெற போதிய படைகள் எனக்கு வேண்டுமே! ஆகவேதான், ஆயிரம் பேரை விட்டுச் செல்கிறேன். மதுரைக் கோட்டையைத் தகர்க்க எவரால் இயலும்? வெற்றிவாகை சூடி நான் திரும்பி வரும்வரை கோட்டைக் கதவைத் தாளிட்டு விடுங்கள்.”

அதிக வீரரை வீரபாண்டியனிடம் விட்டுச்செல்ல தான் விரும்பவில்லை என்பதை வெளிப்படையாகச் சொல்ல விரும்பாது, சுற்றிவளைத்துச் சொல்கிறான் சுந்தரபாண்டியன்.  அவர்களை வைத்துக்கொண்டு மதுரைக்கு ஒருவேளை தன் தமையன் சொந்தம் கொண்டாடத் தீர்மானித்துவிட்டால், அதை முன்னேற்பாடாகத் தடுக்கத்தான் இத்திட்டத்தைக் கையாள முயல்கிறான்.

தன் இளையோனின் மனப்போக்கு தமையனுக்கும் புரிகிறது. மாலிக் காஃபூரின் படைத்திறனையும், அவனது துருக்கப்போல்63 என்ற வீரரின் அம்புகளையும் வீரபாண்டியன் நேரில் சந்தித்திருக்கிறான். ஆகவேதான், விளக்கில் விழும் விட்டில் பூச்சியைப் போலத் தன் தம்பி ஆகிவிடக்கூடாதே என்று அச்சப்படுகிறான். மாலிக் காஃபூருக்கும் மதுரைக்கும் இடையில் நிற்பது பாண்டியப் படைகள் மட்டுமே! அவையும் அழிந்துபோனால் மதுரையைக் காக்கவே இயலாது என்று அவனுக்கு நன்றாகவே தெரிகிறது.

“தம்பி, உன்னை மறுத்துப் பேசுவதாக எண்ணாதே. மதுரைக் கோட்டைக்குள் நாம் இருக்கும் வரை பகைவரால் நம்மை எதுவும் செய்து விட இயலாது. ஆயினும், நாம் விரும்பும் இடத்தில்தான் எதிரியை எதிர்கொள்ள வேண்டுமே தவிர, அவன் வலிவுடன் இருக்குமிடத்திற்குச் செல்வது, சிங்கத்தின் குகைக்குள் செல்வதை ஒத்தது. எவ்வகையில் அது நமக்குச் சாதகமாகும்? இந்தக் கடுமையான வெய்யிலில் நமது படைகளை நடத்திச்சென்று அவதிக்கு உள்ளாகுவதை விட, பகைவன் தனது படையினை நடத்தி வந்து களைத்திருக்கும் நேரத்தில், அவனைத் தாக்குவதுதானே நமக்குச் சாதகம்? எண்ணிப்பார்” என்று தன் பக்கத்துத் போர்த் தந்திரத்தை எடுத்துச் சொல்கிறான்.

“தமையனாரே, ‘கோனேரின்மை கொண்டான்’ குலசேகர பாண்டியரின் புதல்வர் நாம் என்பதை மறக்கக்கூடாது. தந்தையார் இருந்திருந்தால், துலுக்கப் படைத் தளபதி தமிழ்நாட்டின் எல்லையை மிதிக்கக்கூட விட்டிருப்பாரா? நமக்குள் நிகழ்ந்த பூசலில் பகைவனைத் தமிழகத்தில் இத்தனை தூரம் நுழைய விட்டுவிட்டோம். குறைந்தபட்சம் பாண்டிநாட்டுக்குள் நுழையாதவாறு விரட்டியடிப்போம். போருக்குச் செல்ல உங்களையா துணை வரச் சொல்கிறேன்? மதுரையில்தானே பத்திரமாக இருக்கச் சொல்கிறேன்! இது உங்களால் இயலாததா? இதற்கு ஒப்புக்கொள்ளாத பட்சத்தில், நாம் ஒன்றாகச் செயல்பட இயலாது. நமது வழிகளைப் பார்த்துக்கொண்டு செல்வதே சிறந்தது” என்று திட்டமாகத் தன் முடிவை அறிவிக்கிறான் சுந்தரபாண்டியன்.

------------------------------------------

(63. துருக்கியிலிருந்து வந்து குதிரை மீதமர்ந்து போரிடும் வில்லாளர்களை, ‘டர்க்கோபோல்’ (Turcopole) என்றழைத்தனர். இவர்கள் எதிரிகளைத் துரத்திச் சென்று குழப்பிக் கொல்வது வழக்கம்.  இவர்களின் வில் வீச்சு அப்போது தென்னாட்டிலிருந்த வில்லாளிகளின் வில் வீச்சை விட அதிகத் தொலைவு செல்லத்தக்கது. இவர்கள் கிறித்தவருக்கும், இஸ்லாமியருக்கும் இடையில் நடந்த ‘புனிதப் போரில் (Crusades)’ பங்கு கொண்டனர்.)

இக்கட்டான நிலையில் மாட்டிக்கொண்டோம் என அறிந்துகொள்கிறான் வீரபாண்டியன்.  எனவே, சிந்திக்கத் தொடங்குகிறான்.

“என்ன தமையனாரே அமைதியாகிவிட்டீர்கள்?” என்று அவனது மனவோட்டத்தைக் கலைக்கிறான் சுந்தரபாண்டியன்.

மதுரையின் எதிர்காலம் சுந்தரபாண்டியனின் கையில் கொடுக்கப்பட்டது; மதுரை இருப்பதோ அழிவதோ - அவன் பகைவனைப் புறம்காணுவதில்தான் உள்ளது என்று அறிகிறான் வீரபாண்டியன். எனவே, தனியாகச் சென்று, காத்திருக்கும் அழிவைச் சந்திப்பதை விட, அங்கயற்கண்ணியும், அழகரும் குடியிருக்கும் ஆலவாய்க்குக் காவலனாக இருப்பதே சிறப்பு என்ற முடிவுக்கு வருகிறான்.

“சுந்தரா, நீ விரும்பும்வண்ணமே செய். உன் வெற்றிக்காக இறைவர்களை ஏத்திக்கொண்டிருப்பேன். நம் தமிழகம், பாண்டிநாடு, மதுரை மாநகர் - இவற்றுடன் நமது சைவ சமயத்துடன், சனாதன சமயத்தின் மற்ற பிரிவுகளின் பாதுகாப்பு இவை அனைத்துமே உன் தோள் வலிமையை நம்பியிருக்கிறது என்பதை எப்போதும் மறவாதே! என் மெய்க்காப்பாளன் முத்தையனையும் உன்னுடன் அனுப்புகிறேன். நெல்லையப்பனும் சேர்ந்து இருவரும் உன் இரு பக்கத்திலும் நின்று காத்து வருவர். வெற்றி உனதே! பகைவனைப் புறங்கண்டு மதுரையின் புகழை நிலைநிறுத்துவாயாக!” என்று சுந்தரபாண்டியனைத் தழுவித் தன் சம்மதத்தை தெரிவிக்கிறான் வீரபாண்டியன்.

காவிரிப்படுகை, திருக்காட்டுப்பள்ளி, தமிழ்நாடு

சாதாரண, மார்கழி 5 - டிசம்பர் 9, 1311

வாள்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்வதால் ஏற்படும் பலமான பேரொலி காவிரியின் படுகை முழுவதும் எதிரொலிக்கிறது. காவிரியில் தண்ணீர் ஓடும், தங்களது வறண்ட நாவுகளை நனைத்துக் கொள்ளலாம் என்று எதிர்பார்த்த பாண்டிய வீரருக்கும், அவர்கள் ஏறி வந்த குதிரைகளுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது என்றாலும், ஆற்றுப் படுகையிலேயே திருவரங்கம் வரை நடந்து செல்லலாம் என்ற மன்னனின் ஆணையும் அவர்களின் வேகத்தையும், ஆற்றலையும் தளரச் செய்திருக்கிறது…

…காவிரியில் நீரோட்டமிருக்கும் என்று திருச்சிராப்பள்ளியில் காவிரியைக் கடக்காது, கிராமங்களில் குடியானவர் அறுவடைக்குத் தயாராக இருக்கும் பருவமானதால், உணவுக்குப் பஞ்சமிருக்காது என்ற தப்புக்கணக்கில் - கல்லணைக்குக் கிழக்கே திருக்காட்டுப்பள்ளியில் காவிரியைக் கடப்பது எளிது என்று படையை அங்கு நடத்திச்சென்ற சுந்தரபாண்டியனை ஏமாற்றமே எதிர்கொண்டது. காவிரியில் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட ஓடவில்லை. அளவு கடந்த வறட்சியினால் அந்த ஆண்டு குடகில் மழை பொய்த்துப்போய் காவிரியில் மணலாறுதான் ஓடிக்கொண்டிருந்தது.

மாலிக் காஃபூர் கரையோரக் கிராமங்களை அழித்து மக்களைக் கொல்லும் வெறித்தனமான விளையாட்டில் ஈடுபட்டதனால், அவனது படைக்கு உணவு கிட்டக்கூடாது என்று, அறுவடைக்கு நின்ற பயிர்களை அழுதுகொண்டே அக்கினிக்கு ஆகுதியாக்கிவிட்டு, அவர்கள் ஓடியொளிந்து விட்டனர். ஆகவே, சுந்தரபாண்டியன் எதிர்பார்த்த உணவும் கிட்டாது போயிற்று.

திருவரங்கத்தை நோக்கி காவிரிப் படுகையிலேயே அணிவகுக்க வேண்டும் என்ற ஆணையையும் சுந்தரபாண்டியன் பிறப்பித்தான்.

அப்படிச் செய்தால்தான் படைகள் வரும் ஆரவாரம் எதிரிக்குத் தெரியாதுபோகும் என்பது அவனது திட்டம்.

இப்படிப்பட்டதொரு முடிவை தங்கள் மன்னன் எடுக்கவே மாட்டான் என்பதை நன்கறிந்த வீரபாண்டியனின் படைத்தலைவர்கள், அவ்வாறு செய்ய வேண்டாம் என்று இதமாகவும், நயமாகவும் எடுத்துரைத்தது எதுவும் சுந்தரபாண்டியனின் செவிகளில் ஏறவில்லை. அண்ணனின் அணித்தலைவர்கள்தம் சொற்களுக்குச் செவிசாய்க்கக்கூடாது என அவனது ஆணவம் முடிவெடுக்கச் செய்தது. இவர்களின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்த எதிரிப்படை தாக்குதலைத் தொடங்கியது…

…“அரசே, புதை மண்ணில் சிக்குண்டவராக ஆகிவிட்டோம். நாம் ஆற்றுப் படுகையில் கீழிருக்க, எதிரிப்படை கரைக்கு மேலே உள்ளது.  நமது வில்லாளர் நடந்து வருகையில், எதிரி வில்லாளரான துருக்கப்போலர்64 குதிரை மீது வில்லுடனும், நீண்ட ஈட்டியுடனும் தாக்க வருகின்றனர். அவர்களது அம்புகள் பாயும் நெடுக்கமும் (தாக்கும் தூரம்) அதிகமாக உள்ளது.  குதிரையில் பயணிப்பதால் அவர்கள் நம் வில்லாளிகளின் நெடுக்கத்திலிருந்து (அம்புகள் செல்லும் தூரம்) எளிதில் தப்ப இயலுகிறது. நமது யானைகளும் மணலில் செயலிழந்து நிற்கின்றன. எதிரிகள் கரையில் யானைகளுடன் அணிவகுத்து நிற்கிறார்கள். இந்நிலையில் தங்களின் பாதுகாப்பே தலையாயது. தாங்கள் தெற்கே சென்று கரையேறி விடுங்கள். நாங்கள் முன்னேறிச் சென்று அதுவரை எதிரிகளைத் தடுத்துத் தாமதப்படுத்துகிறோம்” என்று சுந்தரபாண்டியனை வேண்டிக்கொள்கின்றனர்.

தன் அவசர ஆணையால் அணிகளை பாதகமான நிலையில் கொணர்ந்துவிட்டோமே என்பதை எண்ணினால், அவமானமாக உள்ளது. ஆயினும், தன் தமையனிடம் வாய்ப்பந்தல் போட்டுவிட்டு, நிலைமை சரியில்லை என்றவுடன் பின்வாங்க மனம் இடம் கொடுக்கவில்லை.  எப்படியிருப்பினும், முன்னேறிச் சென்று போரிடும் தவறான முடிவை எடுக்கிறான்.  “பேடியைப் போன்று பின்வாங்கச் சொல்கிறீர்களா?” சினத்துடன் சீறுகிறான்.

மற்றவர் அவனது சினத்தைக் கண்டு பின்வாங்கினும், ஆயிரக்கணக்கான வீரரின் உயிரைக் காப்பாற்றவும், அரசனுக்கு ஊறு நேரக்கூடாது என்னும் அக்கரையாலும் முத்தையன் பணிவுடன் பகருகிறான்: “அரசே! ஒரு நிமிடம் எனது பணிவான வேண்டுகோளைச் செவிமடுக்குமாறு இறைஞ்சுகின்றேன். படையின் ஊக்கமோ, வலிமையோ அரசரின் நலத்தைப் பொறுத்துத்தான் அமைகிறது என்பது தங்களுக்குத் தெரியாததல்ல. தாங்கள் நலமாக இருந்து உற்சாகப்படுத்தினால்தான் வீரர் எரிமலையின் சீற்றத்தையும் எதிர்கொள்வர். நாம் இப்போது இருக்கும் இடம் நமக்கு மிகவும் பாதகமானது. எனவே, படைத்தலைவர்தம் கூற்றைத் தாங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். தங்களின் மெய்க்காப்பாளன் என்ற முறையில் தங்களுக்கு இதைத் தெரிவிக்காதுபோனால், கடமையிலிருந்து தவறியவன் ஆவேன்.”

இதையே, தனது மெய்க்காப்பாளன் நெல்லையப்பன் எடுத்துரைத்திருந்தால் ஒருவேளை சுந்தரபாண்டியன் அதற்கு இணங்கியிருப்பானோ என்னவோ, தமையனின் மெய்க்காப்பாளனான முத்தையனிடமிருந்து அது வந்ததால், ஆணவம் கண்ணைக் கட்டுகின்றது.

“உன் கடமை, உயிரைக் கொடுத்தாவது என்னைக் காப்பாற்றுவதுதானே ஒழிய, எனக்குப் படை நடத்தப் பாடம் சொல்லிக்கொடுப்பதல்ல. தேவைப்பட்டால் நானே கேட்பேன். அதுவரை, நாவடக்கமே உனக்குச் சிறந்த அணிகலன்!” சுந்தரபாண்டியன் எரிச்சலுடன் கத்துகிறான்.

முத்தையன் அதிர்ந்துபோகிறான். வீரபாண்டியன் இதுபோல தன்னிடம் பேசியதே இல்லை.  அரசருக்கு என்னவாகி விட்டது? இவர் சொற்படி நடந்தால், அனைவரும் அழிவதுதானே உறுதி?  இப்படி இருக்கையில், படைகளையும், தன்னையும் ஏன் காலன் வாயில் எரியும் நெருப்புக்கு நெய்யாக வார்க்கிறார்?

“உம்… நடக்கட்டும்! போர் முரசம் முழங்கட்டும்! முன்னேறிச் செல்வோம். கடைசிப் பாண்டிய வீரன் இருக்கும் வரை பகைவனைச் சாடுவோம்!” என உறுமி முழக்கமிடுகிறான் சுந்தரபாண்டியன். அரசனின் ஆணையை வேண்டாவெறுப்புடன் நிறைவேற்ற முற்படுகின்றனர் படைத்தலைவர்கள்.

-----------------------------------

(64. துருக்கப்போல்களின் (Turcopoles) வலிமையால்தான் சுந்தரபாண்டியனின் தாக்குதல் எடுபடவில்லையென மாலிக் காஃபூரின் வரலாற்றாளர்கள் அவர்களது குறிப்பில் எழுதியிருக்கிறார்கள்.)

பகல் முழுதும் நிகழும் போர், பாண்டியருக்குப் பாதகமாகவே அமைகிறது. இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் மடிகின்றனர். வறண்டு கிடந்த காவிரிப் படுகையில் குருதி வெள்ளம் பெருக்கோடுகிறது. நீரோட்டமின்றி வறண்டுபோன மணற்படுகை, வீரர்களின் குருதியைக் குடித்துத் தன் கொடும் தாகத்தைச் சிறிது தணித்துக்கொள்கிறது. மாலை நெருங்குகிறது.

வெறியுடன் போரிடும் சுந்தரபாண்டியன் காவிரியின் வடகரையை நெருங்கி விடுகிறான். அச்சமயம் கிட்டத்தட்ட ஐம்பது துருக்கப்போல்கள் அவனைச் சூழ்ந்து வளைத்துக்கொள்கின்றனர். நெல்லையப்பனும், முத்தையனும், இன்னும் இருபது வீரரும் தங்கள் அரசனுக்கு ஆதரவாய்ப் போரிடுகின்றனர்.

பாண்டிய மன்னன் வளைக்கப்பட்ட செய்தியறிந்ததும், மாலிக் காஃபூர் நூற்றுக்கணக்கான வீரருடன் விரைந்து வருகிறான். சுந்தரபாண்டியனுக்கு எந்த உதவியும் வராதபடி பின்புறமாகச் சென்ற எதிரிப்படையினர், மாலிக் காஃபூரின் ஆணைப்படி பாண்டிய வீரர்களைத் தடுத்து நிறுத்தி விடுகின்றனர். கிட்டத்தட்ட பத்து துருக்கப்போல்களை வீழ்த்திய நெல்லையப்பன், தானும் வெட்டுண்டு வீழ்கிறான்.

மீதியுள்ள நாற்பது பேரில், பதினைவரை முத்தையன் வீழ்த்தி விடுகிறான். இருப்பினும் அவனது கை தளரத் தொடங்குகிறது. மன்னனுக்கு வந்த ஆபத்தைக் காப்பாற்றி விட்டோம் என்று மூச்சு விடுவதற்குள் மாலிக் காஃபூர் தன் வீரருடன் அங்கு வந்து சேர்கிறான். பதினைந்து நிமிடங்கள் கடுமையான கைகலப்பு நிகழ்கிறது. உடலெங்கும் இரத்தக் களரியால் சிவப்பான முத்தையன், தலையில் பட்ட பலத்த அடியில் மயங்கிக் கீழே விழுகிறான். சுந்தரபாண்டியனை தவிர, மற்றெந்தப் பாண்டிய வீரரும் உயிர் தப்ப இயலவில்லை. மாலிக் காஃபூரின் வீரர்கள் சுந்தரபாண்டியனை சுற்றிவளைக்கின்றனர். முகத்தில் தவழும் புன்னகையுடன் மாலிக் காஃபுர் வாளைச் சுழற்றியபடி சுந்தரபாண்டியனை நோக்கி முன்னேறுகிறான்.

***

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com