பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -நான்காம் பாகம்-அத்தியாயம் 19

வெண்ணிலா
வெண்ணிலா

காவிரிப் படுகை, திருவரங்கத்துக்கும் திருக்காட்டுப்பள்ளிக்கும் இடையே, தமிழ்நாடு

சாதாரண, மார்கழி 9 - டிசம்பர் 13, 1311

விடிவெள்ளி எழுகிறது. வலக்கையில் தடியை ஊன்றியவாறு சதாசிவ சாஸ்திரி நடக்கிறார். அவரது இடது கையைப் பிடித்தவாறு வெண்ணிலா உடன்நடக்கிறாள். கடந்த ஐந்து மாதங்களுக்குள் சதாசிவ சாஸ்திரி மிகவும் தளர்ந்துபோயுள்ளார். நல்வாழ்வுக்கு உத்தரவாதமில்லா நிலையும், குடும்பத்தைப் பற்றி நான்கு மாதங்கள் ஏதும் தெரியாததும், நாட்டு நிலவரங்களும், அமைதியில்லாச் சூழலும், அனைத்துக் குடிகளின் உயிருக்கு ஊறுவிளைவிக்கும் படையெடுப்பு எனும் இன்னலும், நாடு என்னவாகுமோ என்ற கவலையும், அவரை ஆட்டி உருக்குலைத்திருக்கிறது. கடந்த மூன்று மாதங்களாக வெண்ணிலாவுக்கு மனத்துணையாக அவரும், அவருக்கு உதவியாக வெண்ணிலாவும் இருந்துவருகிறார்கள்.

மதுரையிலிருந்து வேளாளரின் மாட்டுவண்டியைச் செலுத்திக்கொண்டு தன் சொந்த ஊருக்கு வெண்ணிலாவுடன் திரும்பிக்கொண்டிருக்கிறார் சதாசிவ சாஸ்திரி.

சுந்தரபாண்டியனின் படைகள் பதினைந்து இருபது நாள்களுக்கு முன்னர் அவரது மாட்டுவண்டியைக் கடந்து சென்றன. அவர்களுக்கு வழிவிட்டு ஒரு கிராமத்தில் தங்கியிருந்தவர், மூன்று நாள்கள் முன்பு காலையில் கிராமத்தைவிட்டுக் கிளம்பியவர், காலைக்கடன்களை முடித்துக்கொள்ளலாம், காவிரியில் தண்ணீர் ஓடும், அதில் நீராடலாம் என்ற நினைப்புடன் மாட்டை ஒரு மரத்தில் நீண்ட கயிற்றில் கட்டி, மேயவிட்டு, வண்டியை அதற்கருகில் நிறுத்தி, வெண்ணிலாவுடன் கிளம்பி வந்திருக்கிறார். சிறிது தொலைவு சென்றதும் காவிரிப்படுகை அவர்கள் கண்ணில் படுகிறது. அங்கு அவர்கள் கண்முன் விரியும் காட்சி அவர்களை உலுக்கி எடுத்துவிடுகின்றது.

படுகை முழுவதும் பிணக்குவியலாக இருக்கிறது. ஆங்காங்கு காக்கைகளும், கழுகுகளும், கழுதைப்புலிகளும், நரிகளும் பிணங்களைக் கொத்தியும், கிழித்தும் தின்றுகொண்டிருக்கின்றன. கை கால்கள் இல்லாதவை, உருத்தெரியாதவாறு சிதைக்கப் பட்டவை, தலையில்லா முண்டங்கள், தனியாய்க் கிடக்கும் உடலுறுப்புகள் - இவ்வாறு பலவாறு தோற்றமுள்ள பிணங்கள் சிதறிக்கிடக்கின்றன. இரத்தக்கறை தோய்ந்த படைக்கலன்களும் கதிரவனின் ஒளியில் செந்நிற, கருநிற ஒளியைப் எதிரொளிக்கின்றன.

இத்துடன், காலுடைந்து கிடக்கும் குதிரைகளின் பரிதாபமான கனைப்புகளும் முனகல்களும் காதுகளில் அவலமாக ஒலிக்கின்றன. துதிக்கை வெட்டப்பட்டு, உடல் முழுதும் ஈட்டிகளால் துளைக்கப்பட்ட யானையொன்று பரிதாபமாகப் பிளிறுகிறது. தன்னைக் கொத்திக் கிழிக்கும் கழுகுகளையும், வயிற்றைக் குத்திப் பிளக்கும் கழுதைப்புலிகளையும் அதனால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அங்கு அடிக்கும் காற்று வயிற்றைப் புரட்டியெடுக்கும் கெட்ட வாடையை அவர்கள் முகத்தில் அறைவதுபோல விசிறியடிக்கிறது.

இக்காட்சியும், பிணவாடையும் வெண்ணிலாவின் வயிற்றைக் குமட்டி எடுக்கிறது.  அவளையும் அறியாமல், அடிவயிற்றிலிருந்து பெரிய ஒலியெழுகிறது. அவலக் காட்சியைக் காண விரும்பாது, தலையைத் திருப்பி, வாயைப் பொத்தியவாறே, அருகிலிருக்கும் புதர்ப்பக்கம் ஓடி, வெளிவரும் வாந்தியை எடுக்கத் தலையைக் குனிகிறாள். அதற்குள் மூடிய வாயிலிருந்து பீறிட்டுக்கொண்டு வந்த ஒக்களிப்பு, கைவிரல்களுக்கு இடுக்கிலிருந்தும், மூக்கிலிருந்து வழிகிறது. வெண்ணிலாவுக்குப் புரையேறுகிறது.

வெண்ணிலா
வெண்ணிலா

இதைக் கவனித்த சதாசிவ சாஸ்திரி, நிலைமை மீறிப்போகக்கூடதென வாயை மூடியிருக்கும் அவளது கையை வலுக்கட்டாயமாக இழுக்கிறார். அவள் கட்டுப்படுத்த முயன்ற வாந்தி அவர் மீது வெள்ளமாய்ப் பெருக்கிட்டு அடிக்கிறது.

அதைப் பொருட்படுத்தாது, அவளைப் புதர்ப்பக்கம் நடத்திச் சென்று, மெதுவாக அவளை அமர வைக்கிறார். வெண்ணிலா உமட்டி உமட்டி வாந்தியெடுக்கிறாள். சதாசிவ சாஸ்திரி ஆதரவாக அவள் முதுகைத் தடவிக்கொடுக்கிறார்.

திடுமென்று அவரையும் தள்ளிவிட்டு வெண்ணிலா கீழே சாய்கிறாள். அவளது விழிகள் மேலே சொருகிக்கொள்கின்றன. விரல்கள் புதரைச் சுட்டிக்காட்டுகின்றன. வாய் ஏதோ சொல்லவிரும்பினாலும், நாக்கு புரள மறுத்துக் குழறுவதால், சொற்கள் வெளிவர மறுக்கின்றன.

புதரில் பாம்பு, பூச்சி எதையாவது கண்டு பயந்துவிட்டாளோ என்று ஐயமுற்ற சதாசிவ சாஸ்திரி, கைத்தடியால் புதரை விலக்கிப் பார்க்கிறார். அங்கு…

இரத்த வெள்ளத்தில் குப்புறக் கிடக்கிறான் ஒரு பாண்டிய வீரன். அவனது கை வாளை இறுகப்பிடித்திருக்கிறது. வாள் முழுவதும் படிந்திருந்த குருதி கருப்பாகக் காய்ந்திருக்கிறது.  உடலில் காயமில்லாத இடமே இல்லை. சிலவற்றில் இரத்தம் கட்டிக் கருப்பாகியிருக்கிறது. சிலவற்றிலிருந்து இன்னும் குருதி மெல்லக் கசிகிறது. காயங்களில் ஈக்கள் மொய்த்துச் சரம கவி பாடிக்கொண்டிருக்கின்றன.

கசியும் குருதி அந்த வீரனுக்கு உயிர் இருக்கிறது என்பதை சதாசிவ சாஸ்திரிக்குத் தெரிவிக்கிறது. அவன் தன்னைத் தரையில் இழுத்துக்கொண்டு அப்புதர்ப் பக்கம் ஊர்ந்து வந்திருக்கிறான் என்பதை மணற்தடங்களில் நீளமாகப் பதிந்திருக்கும் குருதிக்கசிவு தெரிவிக்கிறது.

போர்களத்திலிருந்து இந்த வீரன் எப்படி இவ்வளவு தொலைவு ஊர்ந்து வந்திருக்கிறான், எவ்வளவு நாழிகைகளாக இப்புதரின் அருகில் கிடக்கிறான் என்று வியக்கிறார். கொத்தித் தின்னும் காக்கை, கழுகுகளிடமிருந்து தப்ப புதரருகில் வந்து கிடக்கிறானோ என்றும் அவர் மனது நினைக்கிறது.

இதற்கிடையில் வெண்ணிலா முனகும் ஒலி கேட்கவே, அவள் பக்கம் திரும்புகிறார். அச்சத்தில் அவளுக்கு மூச்சிரைக்கிறது. அவளைத் தன் மடியில் கிடத்திக்கொண்டு சமாதானப்படுத்துகிறார்.

“மூச்சை இழுத்து விடம்மா. நானிருக்கிறேன். அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை.” மெல்ல மெல்ல நிதானத்துக்கு வருகிறாள் வெண்ணிலா. புதரின் மறுபுறத்திலிருந்து மிகவும் மெதுவான முனகல் ஒலி எழுகிறது. சதாசிவ சாஸ்திரி திடுக்கிட்டுத் திரும்புகிறார்.

பெரிதாக அலறுகிறாள் வெண்ணிலா.

“ஒன்றுமில்லையம்மா, பயப்படாதே. என்னவென்று சென்று பார்க்கிறேன்” என்றவரின் கையை வெண்ணிலா இறுகப் பற்றிக்கொள்கிறாள். அவளது உடல் வெடவெடவென்று நடுங்குகிறது.

“புதரின் மறுபுறம் விழுந்துகிடப்பது, பாண்டிய வீரனம்மா. எப்படியோ போர்க்களத்திலிருந்து உயிர் தப்பி இவ்வளவு தூரம் ஊர்ந்து வந்து இப்புதருக்குக் கீழே குப்புற விழுந்துகிடக்கிறான்.  அவனிடமிருந்துதானம்மா இந்த முனகல் சத்தம் வருகிறது. அவனைத் திருப்பி விடாவிடில் அவன் மூச்சுத்திணறி இறந்துவிடுவானம்மா. நம்மைக் காக்கப் போரிட்ட ஒரு உயிர் தேவையில்லா அச்சத்தாலோ, கவனக்குறைவாலோ போய்விடக்கூடாது. சற்றுப் பொறு.  அவனைப் புரட்டிப் போட்டுவிட்டு வருகிறேன்” என்று கனிவாகக் கூறி, தன் மேலாடையைப் பிரிமணையாக உருட்டி, வெண்ணிலாவின் தலைக்குத் தாங்கலாக வைத்துவிட்டு எழுந்திருக்கிறார். அவளைச் சமாதானப்படுத்தும் வகையில் அவள் தலையை வருடிவிட்டுப் புதரின் மறுபக்கம் செல்கிறார்.

கனிவான குரலில், “நீ யாராக இருப்பினும் அச்சப்படத் தேவையில்லை. என்னால் உனக்கு எவ்விதத் தீங்கும் வராது. உன்னை மெதுவாக உருட்டி மல்லாக்கப் புரட்டப்போகிறேன்.  இல்லாவிடில் மூச்சுத்திணறி, உயிருக்கு ஊறு ஏற்படும். வலியைச் சிறிது பொறுத்துக்கொள்” என்று அப்பாண்டிய வீரனைத் தேற்றி, மெதுவாகப் புரட்ட முற்படுகிறார். அவனது பளுவான உடலைப் புரட்டுவது அவருக்குக் கடினமாகத்தான் உள்ளது. மூச்சை இழுத்துப் பிடித்து அடக்கி, அவனைப் புரட்டிய சதாசிவ சாஸ்திரி திடுக்கிடுகிறார்.

வீரபாண்டியனின் மெய்காப்பாளன் முத்தையான்தான் அலங்கோலமாகக் கிடக்கும் அந்தப் பாண்டிய வீரன். உடலில் நிறைந்திருக்கும் காயங்களில் மணல் ஒட்டிக்கொண்டுள்ளது. மூச்சு அனல்காற்றாக வெளிவருகிறது. கண்கள் மூடியவண்ணம் இருக்கின்றன. முகத்திலும் பெரிதாக நான்கைந்து கீறல்கள்; அவற்றில் ஒன்று இன்னும் ஓரங்குலம் தப்பியிருந்தால் கண்ணோ, காதோ கிழிந்துபோயிருக்கும்.

முத்தையன் மீண்டும் ஒருமுறை முனகுகிறான். அதைக்கேட்டுப் பெரிதாக வீரிடுகிறாள் வெண்ணிலா.

திருத்தளிநாதர் கோவில், திருப்புத்தூர், பாண்டிநாடு

சாதாரண, தை 20 - ஜனவரி 23, 1311

வீரிட்டு அலறுகிறான் அப்துல்லா. தூணின் பொதாகையிலிருந்து தலைகீழாகக் கயிற்றில் தொங்கவிடப்பட்ட அவன் பம்பரமாகச் சுற்றிவந்து துடிப்பதை ரசித்து மகிழ்கிறான் மாலிக் காஃபூர். அவனது அடிமை சித்திக் அப்துல்லாவை சவுக்கால் மேலும் இருமுறை பலமாகச் சாடுகிறான். நாலரை அடி உயரமே உள்ள அப்துல்லாவின் வலுவிழந்த மேனி கோவில் தூணில் சிலமுறை முட்டிக்கொள்கிறது. அப்படி ஒருமுறை முட்டும்போது அவனது தலை தூண் விளிம்பில் இடித்து இரத்தம் பெருகுகிறது. போதும் என்பதுபோலக் கையை உயர்த்துகிறான் மாலிக் காஃபூர். அவன் முகத்தில் இலேசான குரூரப் புன்னகை மலர்கிறது.

மாலிக் காஃபூர்
மாலிக் காஃபூர்

அப்துல்லாவைக் காலால் உதைக்கிறான். மீண்டும் அப்துல்லா சுழன்றுவந்து, தூணில் முட்டிகொண்டு சுழலுகிறான். அவனது கண்ணீர் தாரைதாரையாக வழிகிறது.

“அல்லா கா கசம். உளவு பார்க்கறதுக்காக இங்கிட்டு வரலை. அராபிய மொழில பேசற சத்தம் கேட்டுச்சு. இந்துக் கோவில்ல அரபுமொழிச் சத்தம் ஏன் கேக்குதுன்னுதான் ஹுசுர், உள்ள நுழஞ்சு பார்த்தேன்” என்று தீனமான குரலில் முன்பு பல தடவை சொன்னதையே திரும்பச் சொல்கிறான் அப்துல்லா. அவனது சிறிய உடம்புக்கு மாலிக் காஃபூரின் சித்திரவதையைத் தாங்கும் வலிமையில்லை. கண்கள் இருட்டிக்கொண்டு வருகின்றன. நா வரள்கிறது.

“குட்டிச்சாத்தானே! கருணை மிகுந்த அல்லாவின் பெயரை வீணாக எதற்கு இழுக்கிறாய்? உன்னை உயிருடன் தோலை உரித்துத் தொங்கவிட்டு விடுவேன். அரபுமொழி கேட்டது என்று உள்ளே நுழைந்தாயே, அது உளவு பார்ப்பதற்கு அல்லாமல் வேறு எதற்காம்?” என்று மீண்டும் ஒருமுறை எட்டி உதைக்கிறான் மாலிக் காஃபூர். வலியில் அப்துல்லாவுக்கு உயிரே போய்விட்டுத் திரும்ப வருகிறது.

“கருணை மிகுந்த அல்லாவின் பெயரால் கெஞ்சுதேன். நீங்களும் புனிதமான இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவருதானே! சக முஸ்லீமை இப்படியா துன்புறுத்துவீக? நான் குலசேகரபட்டனத்துல மீன் புடிச்சு வேபாரம் பண்ணுத மரக்காயன். மவுத் ஆகிப்போன பெரிய ராவுத்தர் ஐயா தக்கியுத்தீன் அப்துல் ரகுமானின் பேட்டையச் சேந்தவன் நானு.  என்னைப்போல நெறய முஸ்லீமுக அங்கிட்டு குடியிருக்காப்பல. நாம எல்லாரும் அல்லாவோட கொளந்தக. என்ன விட்டுடுங்க” என்று மெலிந்த குரலில் அழுகிறான் அப்துல்லா.

அரபு மொழியில் தொனித்த அவனது அழுகை மாலிக் காஃபூரின் மனத்தைச் சிறிது இளக்குகிறது. கையால் சைகை செய்கிறான். உடனே, சித்திக் தன் பிச்சுவாவை எடுத்து அப்துல்லாவைக் கட்டியிருக்கும் கயிற்றை ஒரே வீச்சில் துண்டிக்கிறான். தொப்பென்று தரையில் விழுந்த அப்துல்லா வலி பொறுக்காது துடித்து அழுகிறான்.

“குட்டிச் சைத்தானைப் போல இருந்தாலும், கருணைமிக்க அல்லாவின் திருநாமத்தை மூச்சுக்கு முப்பத்திரண்டு தடவை ஜபிப்பதால், உன்னக் கொல்லாது விடுகிறேன். நீ யார்?  குலசேகரபட்டனத்தில் இருப்பவன் இங்கே ஏன் வந்தாய்?  முஸ்லிமான நீயும், உன்னைச் சேர்ந்தவர்கள் பலரும் எப்படி அந்தப் பட்டனத்தில் இருக்கிறீர்கள்? ஒன்றும் விடாமல் விபரமாகச் சொல்லு. ஏதாவது மறைத்தால் தோலைப் பிய்த்து எடுத்துவிடுவேன்” என்று மாலிக் காஃபூர் மிரட்டுகிறான்.

மெல்ல மெல்லத் தன்னைப் பற்றியும், தன் குடும்ப விவரங்களையும், காலம்சென்ற பெரிய ராவுத்தர் தக்கியுத்தீன் அப்துல் ரகுமானைப் பற்றியும், காலம்சென்ற பேரரசர் குலசேகரபாண்டியரிடம் அவருக்கு இருந்த செல்வாக்கு குறித்தும், பாண்டியப் படையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர் வீரராகப் பணி செய்வதையும், மதுரை நகரின் அழகைப் பற்றியும் விவரிக்கிறான் அப்துல்லா. “அதல்லாம் பத்துப் பன்னிரண்டு சால் (ஆண்டு) முன்னால. இப்ப அண்ணன் தம்பி ராசாக்க ஒருத்தர ஒருத்தர் அடிச்சுக்கிட்டு இருக்காக. இந்த முலுக்கு (நாடு) முந்தி மாதிரி இல்ல சாஹேப். முன்னால, ராசாமாருங்க நம்ப அரேபியாலேந்து நிறயக் குதிரங்கள இறக்குமதி செய்வாக. நிறயத் துட்டு கெடைக்கும். நாங்க கடல்ல பிடிச்சுட்டு வார மீனை ரொம்ம விரும்பிச் சாப்பிடுவாக. நல்ல லாபம் கிட்டுமில்ல. தவிரவும், எங்க படகுக்கு அவுக எப்போதும் பஸ்தோபஸ்து (பாதுகாப்பு) கொடுப்பாகல்ல. இப்ப, எங்களுக்கு பஸ்தோபஸ்தே இல்லாமப் போச்சு சாஹேப். சிங்களக்காரங்க எங்க மீன்பிடி படகைத் தாக்கி முழுகடிக்கறாங்க. எப்படிப் பொழப்பு நடத்துவோமிண்டு சொல்லுங்க சாஹேப்?

“அதுனாலதான் அல்லாத்தையும் பிக்ரி செய்துட்டு (விற்றுவிட்டு), இங்க மூஸ் போட்டு (தங்கத்துக்கு மாற்று ஏற்றும் தொழில்) பொழப்பு நடத்தலாம், ஆடு வாங்கி மேயவுட்டு, கசாப்புக்கடை வச்சுப் பொழக்கலாமிண்டு குடிமாத்தி வந்தேனுங்க சாஹேப். என்னோட படா பாயி(அண்ணன்) படுத்த படுக்கையாக் கெடக்குறாக. அவுக மீன் வாபாரம் நொடிச்சுப்போச்சு.  அவுக பேட்டாக்க(பிள்ளைகள்) அவருக்கு ஆதர்(மரியாதை) கொடுக்கறதே இல்ல. எனக்கும் மூணு பொட்டப் பிள்ளைக இருக்காக. அவுகளுக்கு நிக்கா செஞ்சு, நாந்தான் கரையேத்தணும் சாஹேப். நானும் போயிட்டா அவுகளுக்கு யாருமே இல்லே. அல்லா உங்களைக் காப்பாத்துவாறு. புண்ணியமாப் போயிடும். நீங்க ஒரு அடி அடிச்சா சுருண்டு விழுந்து மவுத் ஆகிப் போயிடுவேன். நீங்க முஸ்லிம், நானும் முஸ்லிம்.  நம்ம பாயி பாயி; நான் உங்களுக்கு எதிரா, அதுவும் முஸ்லிம் சாஹேப்புக்கு எதுரா நடந்துக்குவேனா சொல்லுங்க சாஹேப்!” என்று புலம்பி அழுகிறான் அப்துல்லா.

தேவாரப் பாடல் பெற்ற தலமான திருப்பத்தூரிலுள்ள திருத்தளிநாதர் கோவிலில் பாசறையிட்டுள்ளான் மாலிக் காஃபூர். அவன் வருவதற்கு முன்னரே, கோவிலில் இருக்கும் ஐம்பொன் திருமேனிகள் அகற்றப்பட்டுவிட்டன. மூலவர்களையும் பெயர்த்தெடுத்து புதைத்துவிட்டுக் கோவில் அர்ச்சகர்களும், அதிகாரிகளும் ஓடியொளிந்துள்ளனர். ஆகவே, தெய்வங்களில்லாத அக்கோவில் மாலிக் காஃபூருக்கு வெறும் பாசறையாகவே பயன்படுகிறது.65

அவனது ஆயுதங்கள், இதுவரை போரில் அபகரித்த செல்வங்கள் அனைத்தும் அங்கு குவிந்திருக்கின்றன. மதுரையில் செல்வத்தை அடைய, விலை மதிப்பற்ற துருப்புச் சீட்டொன்றும் அங்கு ஒளித்துவைக்கப்பட்டிருக்கிறது. அதைச் சமயம் பார்த்துக் கையாள வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கிறான் மாலிக் காஃபூர். அது வெளிப்பட்டுவிட்டால்…?  அவனைக் கையமர்த்திவிட்டுச் சிறிது நேரம் சிந்திக்கிறான். சித்திக்கின் காதில் ஏதோ மெதுவாகச் சொல்கிறான். அவனும் தலையை ஆட்டுகிறான்.

மெதுவாகச் சிரித்த மாலிக் காஃபூர், “குட்டிச் சைத்தானே, அல்லாவின் திருநாமத்தைப் பலமுறை சொல்லிவிட்டாய். எனவே, உன் உயிரை அல்லா மகிழ்வதற்காக உனக்குச் ஷக்கத்தாக (தானமாக) அளிக்கிறேன். அல்லாவின் கருணையே கருணை. ஆனால், நீ பேயீமான் (நன்றியில்லா) உளவாளியா இருந்துவிட்டால்...? யாரிடமும் சேதி சொல்லவோ, எழுதிக்காட்டவோ கூடாதல்லவா? அதனால் உன் நாக்கையும், கைவிரல்களையும் துண்டித்துவிட்டு, உன்னை உயிருடன் விட்டுவிடுமாறு என் அடிமைக்கு ஆணை பிறப்பித்திருக்கிறேன். பிழைத்துப் போ!” என்று அங்கிருந்து எழுந்து சென்றுவிடுகிறான். அப்துல்லாவுக்கு பேயறைந்தது போல இருக்கிறது. மாலிக் காஃபூரின் உத்தரவை நிறைவேற்றுவதற்காக அப்துல்லாவை கோவிலுக்கு வெளியே இழுத்துச் சென்ற சித்திக்குக்கு அந்தச் சிறிய உடல் படைத்த சக இஸ்லாமியன் மீது கருணை பிறக்கிறது.

மனதுக்குள், ‘அல்லா… என் எஜமானனின் கட்டளையை மீறப்போகிறேன். இந்தப் பாவத்திலிருந்து என்னை மீட்பீராக. இவனைப் பார்த்தால் உளவாளியாகத் தெரியவில்லை. இவனது கதையைக் கேட்டால் கருணை பெருகுகிறது. நாக்கையும், கைவிரல்களையும் துண்டித்துவிட்டால் எப்படிப் பிழைப்பு நடத்துவான். என் மீது கருணைகாட்டி, இவனை முழுதாக விட்டுவிடுவது என் எஜமானருக்குத் தெரியாமல் என்னைக் காத்தருளுங்கள்.

----------------------------------------------

[65. திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவிலில் மாலிக் காஃபூர் பாசறை அமைத்துக்கொண்டதாக வரலாறு கூறுகிறது. மேலும், கோவிலிலிருக்கும் ஒரு கல்வெட்டு, துருக்கர் படையெடுப்பால் தூய்மை இழந்த கோவிலைப் புதுப்பித்துக் குடமுழுக்குசெய்வித்ததாகத் தெரிவிக்கிறது.]

இன்ஷா அல்லா! உமது கருணையே கருணை’ என்று மனதில் வேண்டிக்கொண்டு, அப்துல்லாவை இரண்டு தட்டுத்தட்டி விரட்டிவிடுகிறான். செத்தேன் பிழைத்தேனென்று திரும்பிப் பார்க்காமல் மதுரைக்கு ஓடுகிறான் அப்துல்லா - வீரபாண்டியனின் ஒற்றனாகச் செயல்படும் அப்துல்லா.

பாண்டியர் அரண்மனை, மதுரை

விரோதிகிருது, சித்திரை 16 - ஏப்ரல் 18, 1311

வெளியே ஆரவாரம் கேட்கிறது. முகத்தில் கலவரம் பொங்க ஓடி வருகிறான் பாண்டிய வீரன் சிவநேசன். அவனது முகத்தைப் பார்த்தே, விவரம் எதுவாக இருக்கும் என வீரபாண்டியனால் ஊகித்துத்கொள்ள முடிகிறது.

“கோட்டை மதில் ஓரிடத்தில் தகர்க்கப்பட்டுவிட்டது அரசே! எதிரிப்படைகள் உள்ளே நுழையத் தொடங்கிவிட்டன” என்று பதட்டத்துடன் பறைகிறான் சிவநேசன்.

“எந்த இடம்?”

“மேற்கு வாயிலருகில் அரசே! பகைப்படையினர் புற்றீசல்கள் போலப் பெருக்கெடுத்து வருகிறார்கள். ஒரு நாழிகைக்குள் நம் வீரர்களில் இருநூற்றுவருக்கும் அதிகமாக வீர சொர்க்கமடைந்தனர்.”

“பகைப் படையில்...?”

“எண்ணூற்றுவர் எமனுலகுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இப்பொழுது யானைகள் நுழையும் அளவுக்கு மதில் தகர்க்கப்பட்டுவிட்டது அரசே! தாக்குப் பிடிப்பது கடினம் என்று படைத்தலைவர் எண்ணுகிறார்.”

“ம்…  உடனே சென்று அமைச்சரையும், தலைமைப் படைத்தலைவரையும் நான் சந்திக்க விரும்புவதாக ஆலோசனைமண்டபத்துக்குக் கூட்டி வா” என்று வீரபாண்டியனிடமிருந்து ஆணை பிறக்கிறது.

“அவர்களும் தங்களைச் சந்திக்க அங்குதான் விரைந்து வந்துகொண்டிருக்கிறார்கள்.  தங்களுக்குத் தகவல் தெரிவிக்கவே ஓடோடியும் வந்தேன்.”

அவனைப் போகச்சொல்லிவிட்டு, உடைவாளை இடுப்பில் கட்டியவாறே, ஆலோசனைமண்டபத்துக்கு விரைகிறான் வீரபாண்டியன். அவன் மனம் பின்னோக்கி விரைந்து இதுகாறும் நிகழ்ந்தவற்றைக் கண்ணுறுகிறது…

…சுந்தரபாண்டியன் தலைமைதாங்கிச் சென்ற படைகள் காவிரிப்படுகையில் நிர்மூலமாக்கப்பட்டதை ஒற்றர் வாயிலாக அறிந்தான் வீரபாண்டியன். நெல்லையப்பன் சுந்தரபாண்டியனுக்காகத் தன்னுயிரை ஈந்தான் என்பதும் தெரிந்தது. ஆனால், தனது மெய்காப்பாளன் முத்தையனின் கதி என்னாயிற்று என்றுதான் தெரியாது போயிற்று. அவன் உயிருடன் இருக்கிறானா இல்லை வீரசுவர்க்கம் அடைந்துவிட்டானா என்று தெரியாது அவன் மனதினை அழுத்துகிறது.

மாலிக் காஃபூரின் படைகள் மதுரையை நோக்கி வருமா என்பது கேள்வியே இல்லை. அவை எப்போது வரும் என்பதே கேள்வி என்பதை உணர்ந்து, மதுரைக் கோட்டையைப் பலப்படுத்தினான். முற்றுகை என்று வந்தால், கிட்டத்தட்ட ஓராண்டு காலமாவது மதுரை பட்டினி கிடக்காமலிருக்கும் அளவுக்குத் தானியங்களைக் களஞ்சியங்களில் நிரப்பச்செய்தான்.

ஆயிரம் வீரரை வைத்துக்கொண்டு, பல பத்தாயிரம் வீரருடன் வரும் துலுக்கத் தளபதியை எப்படி எதிர்கொள்வது என்று படைத்தலைவர்கள், அமைச்சர்கள், ஊர்த்தலைவர்கள், மற்ற முதியவருடன் கலந்தாலோசனை செய்தான்.

கிராமங்களிலிருந்து வீரமிக்க இளைஞர்களைத் தற்கொலைப் படையினராகப் பயன்படுத்தி, இராக்காலங்களில் எதிரிக்கு இடைவிடாத தொல்லை தந்து, பெருஞ்சேதம் விளைவிக்கத் திட்டம் தீட்டப்பட்டது.

இதைத் தீர்மானித்து முடிக்கும்போதுதான் குற்றுயிரும் குலையுயிருமாக வந்த அப்துல்லா கொணர்ந்த செய்தி வீரபாண்டியனைக் கலங்கவைத்தது. மாலிக் காஃபூரின் படைகள் திருப்பத்தூரை வந்தடைந்து, திருத்தளிநாதரின் கோவிலையே தம் பாசறையாகவும் ஆக்கின என்றும் தெரிந்துகொண்டான். எதிரியின் படை பலங்களை அப்துல்லா அறிந்து வந்து சொன்ன உளவுச் செய்தியும் உதவியாக இருந்தது.

"உன் உயிரைப் பணயம் வைத்தாயே அப்துல்லா! உனக்கு எவ்வகையில் பாண்டிநாடு கைம்மாறு செய்யும்?” என உருகினான். அப்துல்லா அனுபவித்த சித்திரவதை அவன் மனதைப் பொங்கியெழச் செய்தது.

“ஹுசுர், எங்கள நீங்க எவ்வளவு நல்லா, பச்சா(குழந்தை) கணக்காப் பார்த்துக்கிட்டீக!  பள்ளிவாசல் கட்ட எத்தனை நிலபுலம், பணம் கொடுத்தீக! ஒரு ‘ரோஜு’(நாள்)கூட நாங்க பயத்துல ‘ஜிந்தகி’யக் கழிச்சிருக்கோமா? எங்க மதத்துக்கு ஒங்களால தும்பம் வருமிண்டு எப்பவாவது நாங்க நெனச்சதுண்டா? பொழப்பு நடத்தத்தான் கஸ்டப்பட்டதுண்டா? மீன் புடிக்க எவ்வளவு ‘தில்’லோட நாங்க கடல் மேல போவோம். இப்ப அப்படியா நடக்குது? சிங்களவங்க தொந்தரவு தாங்க முடியல. நீங்க பழயபடி ஒண்ணாச் சேந்து, சுபிச்சமா இருக்கணும்னு ரோஜுதோறும் பள்ளிவாசல்ல நமாஸ் ஓதிக்கிட்டு வாறோம்.

“அப்பிடி இருக்கச்சே, உங்க கோவில எங்க மதத்துக்காரகளே அசுத்தப்படுத்தறத எப்பிடி ஹூசுர் நானு பொறுத்துக்க முடியும்? எம்மேல சவுக்கடி விளறபோதெல்லாம், என் உடம்பு கோவில் தூணுல மோதி உயிர்போறாப்பல வலிக்கறபோதும், ‘அல்லா, துலுக்க சாஹிப் செய்யறது ரொம்பத் தப்பு; இந்த முலுக்(நாடு)குக்கு நான் பேயிமானா (துரோகி)ப் போயிடக்கூடாது. நீதான் எனக்கு வலியத் தாங்கற சக்தியக் கொடு’ன்னு வேண்டிக்கிட்டு மனசுக்குள்ல குரான ஓதுனேன். அல்லாவோட கருணைதான் துலுக்க சாஹப்போட உத்தரவ, அவரோட அடிமை நிறைவேத்தாம என்ன முழுசா விட்டு, உங்களுக்குச் சேதி சொல்ல முடிஞ்சுது. எனக்கு நீங்க கொடுத்த ‘ஹுக்கும்’ (கட்டளை) முடிஞ்சுபோச்சு, ஹுஜுர். என்னோட ஊருக்குப் போக அனுமதி கொடுங்க” என்ற கெஞ்சலுடன் முடித்தான் அப்துல்லா. அவனைப் பாராட்டிப் பொற்காசுகள் கொடுத்து அனுப்பி வைத்தான் வீரபாண்டியன்.

இதற்கிடையில், ‘உதவி செய்ய இயலாது. நாங்கள் நெல்லையைக் காக்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என்ற பதில் நெல்லைப்பாண்டியர் விக்கிரமனிடமிருந்து வந்து சேர்ந்தது.  அதைவிட வருத்தப்படும் செய்தி - பாண்டியப் படையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமிய வீரர்கள் துலுக்கத் தளபதியின் படையில் சேர்ந்தனர் என்றும் விக்கிரமனிடமிருந்து செய்தி வந்தது. ஒருசில குறுநில மன்னர்கள் பழைய நன்றியுடன் தங்கள் படைகளுடன் மதுரைக்கு வந்து சேர்ந்தனர்.

மாலிக் காஃபூர் மதுரையை வந்தடைவதற்கும், வீரபாண்டியன் எல்லா முன்னேற்பாடுகளையும் செய்துவிட்டுக் கோட்டைக்கதவுகளை அடைப்பதற்கும் சரியாக இருந்தது.

ஒரு வாரத்துக்குள் மதுரைக்கோட்டை விழுந்துவிடும் என்று எதிர்பார்த்து வந்த மாலிக் காஃபூருக்கு ஏமாற்றமே காத்திருந்தது. மதுரைக்கோட்டையின் மதில்களில் மறைந்து நின்று வேவு பார்க்கும் வீரர்களை, அவனுடைய ‘துருக்கப்போலர்’களின் அம்புகளால் வீழ்த்த இயலவில்லை. ஆகவே, கோட்டையின் வலுவில்லாத பகுதி எது என்பதைத் தேட முயன்றான் மாலிக் காஃபூர்.  அதற்கு அவன் பிடித்துவைத்திருந்த ‘துருப்புச் சீட்’டும் ஒருவகையில் பயன்பட்டது. இரவுகளில்தான் அவனது படைகளுக்கு இடைவிடாத தலைவலி ஏற்பட்டது. எங்கிருந்தோ எறும்புகள்போல ஊர்ந்து வந்து, பாண்டிய தற்கொலைப் படைவீரர் அவர்களைத் தாக்கினர்.

அவர்கள் எத்தனை பேர் என்றே தெரியவில்லை; ஆனால், ஒவ்வொரு வீரனாலும் மாலிக் காஃபூரின் வீரர்கள் பலர் விண்ணுலகம் எய்தினர். சிலசமயம் அவர்கள் குடிக்கும் நீரில் விஷம் கலக்கப்பட்டது. மற்றொரு சமயம், விஷப்பாம்புகள் மூட்டை மூட்டையாய் வீசப்பட்டன. இதனால் பயம் கலந்த குழப்பத்தில் நூற்றுக்கணக்கான வீரர்கள் இறந்துபோயினர். இந்நிலை கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் நீடித்தது. கைவசமிருக்கும் உணவும் தண்ணீரும் தீர்ந்துபோகும் நிலை வரத்தொடங்கியது. கொதிக்கும் வெய்யிலால் வைகை ஆற்றில் நீரோட்டம் நின்றுபோய் குடிப்பதற்கே நீரில்லாது போயிற்று.  வியாதியும் வீரர்களைக் கொண்டுசென்றது.

இரவில் எப்படிப் பாண்டியத் தற்கொலைப் படையினர் வருகின்றனர் என்று மாலிக் காஃபூரால் அறிந்துகொள்ள இயலவில்லை. தன்வசமிருந்த ‘துருப்புச்சீட்டி’ன் மூலம் அதற்கு விடையை அறிய முயன்றான். தனக்கும் தெரியாத விந்தையாக உள்ளது என்ற பதில்தான் கிடைத்தது.  மதுரைக்கோட்டை அரணில் சேதம் விளைவித்து உள்ளே நுழைந்தாலொழிய தன்னை வைத்து எதையும் சாதிக்க இயலாது என்ற தகவலும் அந்தத் ‘துருப்புச்சீட்டி’டமிருந்து கிட்டியது. அதேசமயம் எப்பக்கம் வலு குறைந்த அரணில் உள்ளது என்ற தகவல் மட்டும்
அத் ‘துருப்புச்சீட்’டுக்குத் தெரிந்தது; அதை அறிந்துகொண்ட மாலிக் காஃபூர் அந்தப் பக்கம் தாக்குதலை அதிகரித்தான். அதற்காக நேரிட்ட மாபெரும் இழப்புகளையும் அவன் பொருட்படுத்தவில்லை.

இதற்கிடையில் கைவசமிருந்த உணவின் இருப்பும் குறைந்தது. உணவின்மையால் படைகளின் ஒழுங்குணர்வும், மனவுறுதியும் குறைந்தன. இன்னும் ஒரு வாரம், பத்து நாள்கள்கூடத் தாக்குப்பிடிக்க இயலாது என்ற நிலையில்தான் அவனுக்குச் சாதகமான அந்நிகழ்வு நடந்தது. மதுரைக்கோட்டையின் மேற்கு மதிலைத் தகர்ப்பதைப் பல்லாயிரம் வீரர்களின் உயிரைக் காவுகொடுத்துச் சாதிக்க முடிந்தது…

…“அவனுக்கு நம் கோட்டையின் பலவீனமான இடம் தெரிந்ததுதான் வியப்பாக உளது. வடப்பக்கமும், கிழக்குப் பக்கமும்தான் தாக்குவான் என்று தப்புக்கணக்குப் போட்டுவிட்டேன்.  உள்ளே புகும் பகை வீரர்கள் மதுரையின் மாடமாளிகைகளைத் தகர்க்கத் தொடங்கிவிட்டனர்.  பாதுகாப்பின்றி நிற்கும் முதியவரே முதலில் பலியாகி வருகின்றனர். மதுரையிலிருக்கும் ஒவ்வொரு ஆண் மகனும் தன்னுயிரைக் கொடுத்து இவர்களைக் காக்கப் படும் பாடு, விழலுக்கிறைத்த நீராகிப் போகிறது. இதற்கு மேலும் நிலைமையைச் சமாளிக்க இயலாது.  எனவே, எதிரிப் படைத்தலைவனுடன் சமாதானப் பேச்சுவார்த்தைதான் நடத்தவேண்டும்” என்று அமைதியாக அறிவிக்கிறான் வீரபாண்டியன்.

“என்ன அரசே? பேச்சுவார்த்தையா? அதற்கு வெற்றி பெற்றுவரும் எதிரி ஒப்புக்கொள்வான் என்றா எண்ணுகிறீர்கணள்?” என்ற கேள்வி எழுகிறது.

“ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். எதிரியின் நிலைமையும் மோசமாகத்தானிருக்கின்றது என்றுதான் எண்ணுகிறேன். நமது மதில் தகர்ந்ததுதான் நமக்குப் பேரிழப்பு. சிந்தித்துப் பாருங்கள், தன் படைச்சேதத்தைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாது மூர்க்கத்தனத்துடன் தாக்கியது அவனது நிலைமை நம்முடையதை விட மோசமாக உள்ளதையே சுட்டுகிறது.  நம்மிடம் படைகள் குறைவு என அவன் அறிய மாட்டான். அதுதான் நமக்குச் சாதகமான ஒன்று.  ஆகவே, மதுரையில் போர் நிகழ்த்தி மேலும் இழப்பைச் சந்தித்துத் தனது சாதகமான நிலையை இழக்க முன்வரமாட்டான்; பேச்சுவார்த்தைக்குச் சம்மதிப்பான்” என்ற வீரபாண்டியன் மேலும் தொடர்கிறான்:

“நம்முன் மூன்று பாதுகாப்புப் பிரச்னைகள் நிற்கின்றன. முதலாவது மதுரையின் பாதுகாப்பு; இரண்டாவது, அங்கயற்கண்ணி-அழகர் ஆலயத்தின் பாதுகாப்பு; மூன்றாவது நமது மக்களின் உயிருக்கும், சமயத்திற்கும் ஊறு நேராது பாதுகாப்பது. எனவே, நாம் சமாதானக் கொடியை உயர்த்தித்தான் ஆகவேண்டும். அதற்கு ஆவன செய்வீராக!” என்று வீரபாண்டியன் திட்டவட்டமாகாத் தன் முடிவை அறிவிக்கிறான்.

“தங்கள் இளைவர் சுந்தரபாண்டியர் மட்டும் படைகளை நடத்திச்சென்றிராவிட்டால்…” என்று ஒருவர் ஆரம்பிக்க முயன்றபோது, அவரைக் கையடக்குகிறான் வீரபாண்டியன்.

“நடந்ததைப் பற்றிப் பேசிப் பயனில்லை. இப்படிப் பேசிப்பேசித்தான் எங்களுக்குள் பகை வளர்ந்தது. ஆகையால், இந்நிலை வருவதற்கு நானும் காரணமாகிவிட்டேன்.  நடக்கவேண்டியதைக் கவனிப்பீராக. முதலில் மதுரை மக்களின் உடமைக்கும் உயிருக்கும் இழப்பு ஏற்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். நம்மிடமுள்ள வீரர்கள் எத்தனை பேர் என்று மட்டும் எதிரிகளுக்குத் தெரியவே கூடாது” என்று எழுகிறான்.

ஒருவர்பின் ஒருவராகக் கலைந்துசெல்கிறார்கள். எவருமில்லா அரசவையில் மரணக்களை தாண்டவமாடுகிறது.

***

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com