பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -நான்காம் பாகம்-அத்தியாயம் 3

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -நான்காம்  பாகம்-அத்தியாயம் 3

ஒரு அரிசோனன்

அரசினர் விடுதி, தில்லை

நள, மாசி 2 - ஜனவரி 31, 1137

தோத்திரங்களைச் சொல்லிக்கொண்டே மாடத்தில் இருக்கும் வெள்ளிச் சம்புடத்திலிருந்து திருநீற்றை எடுத்துக் குழைத்து இட்டுக்கொண்ட பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார் சேக்கிழார் தங்கியிருக்கும் அரசு விடுதியை நோக்கி நடக்கிறார். அவரது மனம் முதல் நாள் இரவு இராமானுஜாச்சாரியாரைப் பற்றி சேக்கிழார் சொல்லிச் சென்றதை அசைபோட்டுக்கொண்டிருக்கிறது.

“ஓய் சிவாச்சாரியாரே, இப்படித்தான் ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற திருமாலின் திருமந்திரத்தை ஓதி வந்து, அவன் மேல் பக்தி செலுத்தினால் போதும், பரமபதம் அடைந்துவிடலாம் என்ற நம்பிக்கையை இராமானுஜர் பரப்பி வர ஆரம்பித்தார். அவர் சொல்லுவதின் உண்மையை உணராத பலர், சரியை, கிரியை, இயமம், நியமம் என்றெல்லாம் படிப்படியாக ஞான மார்க்கம் மூலம், குருவின் அருளுடன் சிவபதத்தைத் தேட வேண்டாம், வெறும் எட்டெழுத்துச் சொற்களைக் கிளிப்பிள்ளைகள் போல் சொல்லிவந்தால் போதும் என்று வைணவத்திற்கு மாறத் தொடங்கினர். அத்தோடு நின்றிருந்தால் பரவாயில்லை.

“’எளிதில் முக்தி அளிக்கும் தங்கள் கடவுள்தான் மேலானவர், சுடுகாட்டில் சாம்பலைப் பூசிக்கொண்டு இரவில் நட்டமிடும் சைவர்களின் கடவுள் பித்தன்!’ என்றும் பேச ஆரம்பித்தனர்.  இதனால் சமயப் பூசல்கள் தோன்றத் தலைப்பட்டன, இன்னும் பரவிக்கொண்டிருக்கின்றன.  இதை வளரவிடாமல் தடுப்பதே பெரும் பாடாக இருந்து வருகிறது. இதற்குள் நேற்று மாலை அநபாயச் சோழரிடமிருந்து ஒரு திருமுகம் வந்தது. முக்கியமான வேலை இருப்பதாகவும், அது இராமானுஜர் சம்பந்தப்பட்டதாகவும், அதனால் இப்போது புனிதத்தல யாத்திரை மேற்கொள்ள வேண்டாம் என்றும் சேதி அனுப்பியுள்ளார். அதனால்தான் உம் இல்லத்திற்கு வந்தபோது அலுப்புடன் வந்தேன்” என்று அலுத்துக்கொண்டார் சேக்கிழார்.

அதைக் கண்டு பாலசுப்பிரமணிய சிவாச்சாரியாரின் முகம் வாடுவதைக் கண்டதும், “நீர் ஏன் வாட்டமுறுகிறீர்?” என்று வினவினார்.

“இவ்வளவு தலையாய வேலை இருக்கும்போது நான் உங்களுடன் அரசரைச் சந்திக்க வர இயலாது போய்விடுமே என்று நினைத்துத்தான் வாட்டமுறுகிறேன்.”

“அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? நீர் காலைக்கடன்களை முடித்துக்கொண்டு நான் தங்கியிருக்கும் விடுதிக்கு வந்து விடும். என் கூடவே நீரும் இரும். தக்க சமயத்தில் உம்மை நாளை கட்டாயம் அரசருக்கு அறிமுகப்படுத்துகிறேன். நல்ல உணவளித்ததற்கு உமது மனைவியாருக்கு எனது வாழ்த்துக்கள். இறைவன் அருள்படி சந்திப்போம். திருச்சிற்றம்பலம்” என்று விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார் சேக்கிழார்.

அரசு விடுதி மிகவும் பரபரப்பாக இருக்கிறது. சிவாச்சாரியாரை வரவேற்ற உதவியாளர் ஒருவர் சேக்கிழாரிடம் அவரை அழைத்துச் செல்கிறார். அவரைக் கண்டு முகமலர்ந்த சேக்கிழார், “வாரும் ஓய், சிவாச்சாரியாரே, உமக்காகத்தான் காத்துக்கொண்டிருந்தேன்.  நேற்று ஒரு விஷயம் சொல்ல விட்டுப் போய்விட்டது. அநபாயச் சோழர் வருவதற்கு இன்னும் சில நாழிகைகள் ஆகும் என்று தகவல் வந்திருக்கிறது. எனவே, அதையும் சொல்லிவிடுகிறேன்” என்று ஆரம்பித்தவர், “உமக்குச் சமண, புத்த காவியங்கள் பற்றித் தெரியும் அல்லவா?” என்று கேட்கிறார்.

“தெரியும் பெருமானே! மணிமேகலை புத்த காவியம். சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி போன்றவை சமண காவியங்கள் ஆகும். சிலர் சிலப்பதிகாரத்தையும் அதில் சேர்ப்பார்கள். அதில் எனக்கு உடன்பாடில்லை” என்று பதில் வருகிறது.

“அவற்றைப் படித்திருக்கிறீரா?”

“தமிழ் மீதுகொண்ட ஆவலால் அவை அனைத்தையும் படித்துள்ளேன். நல்ல கவியாழம் கொண்டவை அவை.”

“சீவக சிந்தாமணியைப் பற்றி என்ன நினைக்கிறீர்?”

“நான் நினைப்பதற்கு என்ன இருக்கிறது? அதை மணவினை நூல் என்று தமிழறிஞர்கள் கூறுகிறார்கள். சிருங்காரச் சுவை அதில் அதிகம் உண்டு…” என்று இழுக்கிறார்.

“அது மட்டும்தானா?”

“அக்காவியத்தின் நோக்கமே, மக்களை சமண சமயத்திற்கு ஈர்ப்பதுதான். சிருங்காரச் சுவை மூலம் அக்காவியத்தைப் படிக்க ஆர்வமூட்டி, இறுதியில் வாழ்க்கை நிலையில்லாதது, சமண முனிவர்கள் காட்டிய வழியில் செல்வதுதான் சிறந்தது என்பதை எடுத்துரைப்பதுதான் அதன் இலட்சியமே ஆகும்” சுருக்கமாகச் சொல்கிறார் சிவாச்சாரியார்.

“ஆணியை அறைந்தாற்போல காவியத்தின் கருத்தை மனதில் பதியவைத்துள்ளீர். அநபாயச் சோழருக்குத் தமிழ் ஆர்வத்தை வளர்க்க நான் ஒரு தமிழ் ஆசிரியரை திருவாரூருக்கு8 அனுப்பி வைத்திருந்தேன். அவர் சீவகசிந்தாமணியை அரசரிடம் காட்டிவிட்டார். அதன் சிருங்காரச் சுவையில் மயங்கி விட்டார் அரசர். அது மட்டுமல்லாமல் சமண சமயத்திலும் சிறிது நாட்டம் சென்றுவிடும் போல இருந்தது...!”

“பிறகு என்ன ஆயிற்று பெருமானே?” என்று பதற்றத்துடன் கேட்கிறார் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார்.

“நீர் கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. எனவே, மன்னரை அவ்வழியிலிருந்து திருப்பி, சைவ நூல்களில் இறைச் சுவை மிகுதியாக உள்ளன, அதைத் தெரிந்து கொள்ளுங்கள் என்று எடுத்துரைத்து, தேவாரம், திருவாசகம் இவற்றை அரசருக்கு விளக்க ஆரம்பித்தேன். மேலும், திவ்வியப் பிரபந்தங்களையும் அவ்வப்போது எடுத்துரைக்க ஒரு வைணவத் தமிழர் அறிஞரையும் ஏற்பாடு செய்தேன். தில்லையின் சிறப்பைப் பற்றி விளக்கியதும், அவருக்கு கூத்தபிரானின் மேலும், சைவத்தின்மீதும் ஈடுபாடு பெருகியது. சிவபெருமானார் மதுரையில் மேற்கொண்ட திருவிளையாடல்களை அறிந்துகொள்வதிலும் நாட்டம் காட்டினார்.  சமணசமயத்தின்பால் சென்ற நாட்டத்தையும் முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டாகிவிட்டது.  இந்தச் சமயத்தில்தான் அரசருக்கு மேலும் தமிழ்த் திருமுறைகளை எடுத்துரைக்க உம்மை ஏற்பாடு செய்துவிட்டு, திருத்தல யாத்திரை மேற்கொள்ளலாம் என்று இருந்தேன். மற்றவைதான் உமக்கும் தெரியுமே!” என்று சேக்கிழார் முடிப்பதற்கும் ஒரு பணியாளன் அநபாயச் சோழரின் வருகையை அறிவிப்பதற்கும் சரியாக இருக்கிறது.

பாலசுப்பிரமணிய சிவாச்சாரியாரையும், பணியாளரைகளையும் அழைத்துக்கொண்டு வாயிலுக்கு விரைகிறார் சேக்கிழார்.

அநபாயச் சோழன் சுற்றம் புடைசூழ வந்துகொண்டிருக்கிறான். அவனைப் பார்க்க வந்திருக்கும் மக்கள் கூட்டத்தைச் சோழவீரர்கள் கட்டுப்படுத்துகிறார்கள். அவனும், அவனது ராணிகள் தியாகவல்லியாரும், முக்கோகிலனும் இருபக்கமும் அமர்ந்திருக்கிறார்கள். வந்த இரதம் அவர்கள் அருகில் நிற்கிறது. தன்னை வணங்கி நிற்கும் சேக்கிழாரையும், பாலசுப்பிரமணிய சிவாச்சாரியாரையும் நோக்கிக் கையை உயர்த்திய அநபாயன், “சேக்கிழாரே! நலமாக இருக்கிறீர்களா? தங்கள் அருகில் இருப்பவர் யார்?” என்று விசாரிக்கிறான்.

--------------------------------

[8. ‘இரண்டாம் குலோத்துங்கன் (அநபாயச்சோழன்) திருவாரூரிலிருந்து ஆட்சிபுரிந்தான்’- Tamil Literature (தமிழ் இலக்கியம்) - எம்.எஸ்.பூர்ணலிங்கம் பிள்ளை.  இந்த நிலைப்பாடு, ‘Some Milestones in the History of Tamil Literarure (தமிழ் இலக்கிய வரலாற்றில் சில மைல்கற்கள்)’ என்று
பி.  சுந்தரம்பிள்ளை எழுதிய நூலில் (1985) மறுக்கப்படுகிறது. இப்புதினத்தில் அநபாயச்சோழன் திருவாரூரில் தங்கியிருந்தபோது சேக்கிழார் தமிழறிஞரை அனுப்பிவைத்ததாகக் கொள்ளப்படுகிறது.]

அவனை ஏறிட்டு நோக்குகிறார் பாலசுப்பிரமணிய சிவாச்சாரி. அவனது முகத்தில் புசுபுசுவென்று அடர்ந்து பரந்திருக்கும் மீசை முறுக்கி விடப்பட்டிருக்கிறது. நெற்றியில் வெள்ளை வெளேரென்ற திருநீற்றுப் பட்டையும், நடுவில் குங்குமப் பொட்டும் பளிச்சென்று திகழுகிறது. பளபளக்கும் உடையை அணிந்திருக்கிறான் அவன். போர்களுக்கு அதிகம் செல்லவில்லை என்றாலும், உடலைத் திண்ணென்று வைத்துக்கொண்டிருக்கிறான்.

“இவர் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார். தங்கள் மூதாதையர்களுக்கு மிகவும் வேண்டியவர்கள் பரம்பரையில் வந்தவர். தங்களது பாட்டனாருக்குப் பாட்டனரான கோப்பரகேசரி இராஜேந்திர சோழரின் நண்பரும், அவரது மருமகனும், தலைமைத் தளபதியாகப் பணியாற்றிய இராஜேந்திர சோழ பிரம்மராயரின் வழிவந்தவர் இவர்.  ஒருவழியில் தங்களுக்கு உறவினர். தங்களுக்கு தமிழ் திருமுறைகளை விளக்கவும், எனக்கு உதவியாளராக இருக்கவும் அழைத்து வந்துள்ளேன்” என்று அறிமுகப்படுத்துகிறார் சேக்கிழார்.

“அப்படியா!  நல்லது” என்று சிரித்தபடியே பாலசுப்பிரமணிய சிவாச்சாரியாரை எடைபோடுகிறான் அநபாயன்.

“தாங்கள் அவசரமாகப் பேச வேண்டும் என்று அனுப்பிய திருமுகம் வந்திருந்தது. தாங்கள் ஆரூரிலிருந்து ஒருநாளுக்கும் மேலாகப் பயணித்து வந்திருக்கிறீர்கள். இளைப்பாறிய பிறகு உரையாடலாமா?” என்று பணிவுடன் கேட்கிறார் சேக்கிழார்.

“இறைவனைத் தரிசித்து வட்டுப் பின்னர் உரையாடுவோம்.”

“தாங்கள் பயண அலுப்புத் தீருமாறு நீராட வெந்நீரும், உணவும் விடுதியிலேயே ஏற்பாடு செய்திருக்கிறது. வருகிறீர்களா?” என்று அழைக்கிறார் சேக்கிழார். பாலசுப்பிரமணிய சிவாச்சாரியை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டே கீழே இறங்குகிறான் அநபாயன்.  ராணிகளுக்கும் கைலாகு கொடுத்து இறக்கிவிடுகிறான். அனைவரும் பேசியபடியே உள்ளே செல்கிறார்கள்.

நீராடி, அம்பலவாணனின் தரிசனத்தை முடித்துவிட்டுத் திரும்ப இரண்டு மணிக்கும் மேலாகி விடுகிறது. அரசர் வந்திருக்கிறார் என்று பூரணகும்பத்துடன் வரவேற்பு, சிறப்பான வழிபாடுகள் நடத்தப்பட்டிருந்தன. அநபாயன் மனம் உருகி நடராஜரை வழிபட்டதை பாலசுப்பிரமணிய சிவாச்சாரியின் கண்கள் கவனிக்கத் தவறவில்லை. “உன்னை விட்டு வேறுவழியில் செல்ல இருந்தேனே! என்னைத் தடுத்தாட்டுக் கொண்டாயே! உனது கருணையே கருணை!” என்று வேண்டிக்கொண்டதும் அவரது காதுகளில் விழத் தவறவில்லை.

விடுதிக்குத் திரும்பியதும் ராணிகள் தனியாக ஓய்வெடுக்கச் சென்றுவிடுகின்றனர்.

அநபாயனைச் சுற்றி சேக்கிழார், பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார், அநபாயனின் தளபதி, இன்னும் சில பிரதானிகள் அமர்ந்துகொள்கின்றனர். அநபாயன் சேக்கிழாரைப் பார்த்துப் புன்னகைக்கிறான்.

“சொல்லுங்கள் அரசே!” என்று எடுத்துக் கொடுக்கிறார் சேக்கிழார்.

“இன்று தரிசனம் மிகவும் அருமையாக இருந்தது அமைச்சரே! இப்படிப்பட்ட அருளாளனான தெய்வத்தை விட்டு நாத்திக சமயத்தில்9 நாட்டம் காட்ட மனம் துணிந்ததே என்று மிகவும் வருந்தினேன். சைவ சமயகுரவரான திருநாவுக்கரசர் சைவத்திற்குத் திரும்பி வந்தபோது எப்படி நினைத்திருப்பார், எந்த விதமான உணர்ச்சிகளெல்லாம் அவர் மனதில் ஓடியிருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன்.”

அநபாயனின் குரல் கரகரக்கிறது.

“திருவாதவூராரும் ‘நாயிற் கடையாய் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான புண்ணியனே!’ என்றுதானே சிவபுராணத்தில் ஓதிச் சென்றிருக்கிறார்!” என்று அநபாயனின் உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுத்துப் பேசுகிறார் சேக்கிழார்.

-----------------------------------

[9. சமணசமயம், இறைவன் இருப்பதை ஒப்புக் கொள்ளாததால், அதை நாத்திக சமயம் என்று அழைப்பதும் உண்டு.]

“அப்பர் பெருமான் நமக்குச் சிறந்த பரிசாகத் திருமுறையைக் கொடுத்துச் சென்றிருக்கிறார்.  அவரைப்போல எத்தனையோ நாயன்மார்களைப் பற்றி சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகையில் எழுதியிருப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள் சேக்கிழாரே! அவர்களைப் பற்றி விரிவாக நீங்கள் திருமுறையாக எழுதவேண்டும். அது ஒரு சிறந்த சைவப்பணி ஆகுமல்லவா!” என்று தன் மனதிலிருக்கும் ஆவலை வெளியிடுகிறான் அநபாயன்.

“அது ஒரு சிறந்த தமிழ்ப் பணியும் ஆகும் அரசே!”

குரல் வந்த திசையை நோக்கித் திரும்புகிறான் அநபாயன். அவனது பெரிய விழிகளின் பார்வை பாலசுப்பிரமணிய சிவாச்சாரியின் மேல் வந்து நிலைக்கிறது.

“மன்னிக்க வேண்டும் அரசே! எனது தமிழ் ஆர்வத்தினால் நாவை அடக்காது பேசிவிட்டேன்!”  என்று தணிந்த குரலில் கூறுகிறார் பாலசுப்பிரமணிய சிவாச்சாரி.

“தங்களது தமிழார்வம் எனக்குப் புரிகிறது ஐயா!” என்ற மெல்லச் சிரிக்கிறான் அநபாயன்.  “அமைச்சர் தங்களைப் பற்றிச் சொன்னது சரியாகத்தான் இருக்கிறது” என்று அவரைக் கையமர்த்தியபடி மேலே தொடருகிறான். “வணிகம் செழிக்க சுங்கவரியை நீக்கினார் எனது பாட்டனார். அது போல நானும் மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று இருக்கிறேன்.”

அவனே பேசட்டும் என்று அமைதியாக அவன் முகத்தைப் பார்க்கிறார் சேக்கிழார்.

“நில வரியைத் தவிர மற்ற எல்லா வரிகளையும் நீக்கிவிடலாம் என்று இருக்கிறேன்.”

“அரசுப் பொக்கிஷத்தின் செல்வங்கள் குறையாதா? போர் வந்தால் என்ன செய்வது?” 

“இறைவன் அருளால் நாடு முழுவதும் அமைதி நிலவுகிறது. சேரரும், பாண்டியரும், சோடர்களும், தொல்லைதராது திறைசெலுத்தி வருகிறார்கள். ஒரு சிறிய போருக்காக ஐந்து ஆண்டுகளுக்கான வரிப்பணம் அல்லவா செலவாகிறது! எனவே மக்களின் செல்வம் அவர்களிடமே இருந்துவிட்டுப் போகட்டுமே! தவிர, கடந்த சில ஆண்டுகளாக நிறைய வரிப்பணம் கிடைத்ததால் பொக்கிஷம் நிரம்பி வழிகிறது என்று ஆமாத்தியர் சொன்னார்.  எனவே, நான் தில்லைக் கோவிலை விரிவுபடுத்திக் கட்டலாம் என்று இருக்கிறேன். நாயன்மார்கள் புராணத்தை நீங்கள் நன்றாக எழுதவேண்டும் அமைச்சரே! நீங்கள் அதை எழுதி முடிப்பதற்குள் கட்டுமானப் பணிகளும் முடிவடைந்துவிடும் என்று நினைக்கிறேன்” அநபாயன் தான் சொல்ல வந்ததைச் சொல்லி முடிக்கிறான்.

“அரசே! பொன்னம்பலத்திற்கு மிக அருகில்தானே கோவிந்தராசப் பெருமாளின் சன்னிதானம் இருக்கிறது? எப்படி அம்பலத்தை விரிவுபடுத்த இயலும்?” என்று கேட்கிறார் சேக்கிழார்.

தனது திட்டத்தை விவரிக்க ஆரம்பிக்கிறான் அநபாயன். அனைவரும் வாயடைத்துப் போய்விடுகின்றனர். “அட கடவுளே! இத்திட்டம் வைணவர்களுக்கு சினத்தை அல்லவா வரவழைக்கும்? முக்கியமாக இராமானுஜாச்சாரியார் போர்க்கொடியை அல்லவா உயர்த்துவார்?” என்று மனதிற்குக் கலக்கமுறுகிறார் சேக்கிழார்.

அரங்கநாதன் ஆலயம், திருவரங்கம்

பிங்கள, வைகாசி 12 - மே 12, 1137

“நமோ நாராயணாய!” என்று அடியவர்கள் எழுப்பும் கோஷம் அரங்கநாதன் ஆலயத்தின் பிரகாரத்தைச் சுற்றிச் சுற்றி ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் உள்ள மண்டபத்தில் இரண்டு பீடங்களில் இராமானுசாரியாரும், அவரது குருவான பெரியநம்பி என்ற மகாபூரணரும், அவரது சீடர்களான கூரத்தாழ்வானும், தாசரதியும் (முதலியாண்டான்) அவர்களுக்கு இருபுறமும் அவர்களைப் பார்த்தவண்ணமும், இன்னும் பல சீடர்களும், கோவில் அதிகாரிகளும் அவர் முன்னாலும் அமர்ந்துகொண்டிருக்கிறார்கள்.  கூரத்தாழ்வனின் குரல்தான் பலமாக ஒலிக்கிறது.

“ஆச்சாரியாரே! எனது ரத்தம் கொதிக்கிறது. தில்லையைச் சைவர்கள் என்னதான் உயர்த்தியாகச் சொல்லிக்கொண்டாலும், அது பள்ளிகொண்ட கோவிந்தராஜப் பெருமாள் அருள்சாதிக்கும் ஷேத்திரம் அல்லவா! அந்த வகையில் நமது திவ்விய தேசங்களில் அதுவும் தலையானதுதானே!

“திருச்சித்திரக்கூடமாக அல்லவா அது போற்றப்படுகிறது! அப்படியிருக்க, கனகசபையை விரிவுபடுத்துவதற்காக கோவிந்தராஜப் பெருமாளை அப்புறப்படுத்தப் போகிறேன் என்று அநபாயச் சோழன் அறிவித்திருக்கிறானாம்!” என்ற கூரத்தாழ்வானைக் கையைமர்த்துகிறார் இராமானுஜர்.

“கூரேசா, இந்த நாட்டு மன்னரை அவமதிக்காமல், நீ சொல்ல வந்ததைச் சொல்லு!” அவர் குரலில் கண்டிப்பு இருக்கிறது.

“நாராயணனை மதிக்காதவனுக்கு எப்படி ஆச்சாரியரே நான் மதிப்புக் கொடுப்பது?”  குறைந்து கொள்கிறான் கூரத்தாழ்வான்.

“மன்னர் நாட்டின் தந்தைக்கு நிகரானவர். நீ எனது சீடனாக இருந்தும் இப்படி நடந்துகொள்வது எனக்கு மிகவும் துக்கத்தைத் தருகிறது” என அவனை மேலே பேசவிடாது மன்னன் மதிப்புக்குரியவன், நமக்கு ஒப்புதல் இல்லாததைச் செய்தாலும் அவமதிப்பாகப் பேசக்கூடாது என்பதை வலியுறுத்துகிறார் இராமானுஜர்.

“தங்களுக்காக நான் அவனை… இல்லை இல்லை, அவரை அவமதிக்காமல் பேசுகிறேன்” என்று மேலே தொடர்கிறான் கூரத்தாழ்வான்.

“எனக்குச் செய்தி கிடைத்ததும் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வர ஓடி வந்திருக்கிறேன் ஆச்சாரியாரே! இந்த அநியாயத்தை, வைஷ்ணவ நிந்தனையை நாம் பொறுத்துக் கொள்ளலாமா? அதுவும் தாங்கள் வைஷ்ணவத்தைப் புனருத்தாரணம் செய்யும் இந்த வேளையில், லட்சக்கணக்கானவர்களுக்கு நாராயணனின் மகிமையை எடுத்துச்சொல்லி அவனது நாமத்தை உலகெங்கும் பரப்பி வரச் செய்யும் இந்த வேளையில்! சித்திரகூடமான சிதம்பரத்திலேயே நாராயணனுக்கு இடமில்லை என்றால் மக்களுக்கு அவன் மீது நம்பிக்கை குறையாதா?” என்று பொருமித் தள்ளுகிறான்.

“கூரேசா, நாராயணன் மீது மற்றவர்களுக்கு நம்பிக்கை குறைகிறதோ இல்லையோ, உனக்குக் குறைந்து வருகிறதோ என்று எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது!” என்று திருவாய் மலர்ந்து அருளுகிறார் இராமானுஜர். கூரத்தாழ்வான் அதிர்ந்து போகிறான்.

“ஆச்சாரியாரே, என்ன இது? என் மீதா இந்த சந்தேகம்?  இப்படி ஒரு வார்த்தையை உங்களிடமிருந்து கேட்பதற்கு எந்த பாவத்தைச் செய்தேன்?” அவன் குரல் தழுதழுக்கிறது.

“கூரேசா, ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது உன் விஷயத்தில் சரியாக இருக்கிறதே!  முதலில் நாட்டு மன்னரை அவமரியதை செய்யாதே என்றபோது என்னுடன் வாதாடினாய்.  உடனே நாராயணன் மீது மக்களுக்கு நம்பிக்கை குறையாதா என்றும் விதண்டாவாதம் செய்கிறாய்!  நமக்கு அவர் மீது நம்பிக்கை இருக்கிறதா, அது எந்த அளவுக்கு இருக்கிறது என்று நம்மைச் சோதனை செய்யவே இப்படி ஒரு நிலைமைக்கு நாராயணன் தன்னை உள்ளாக்கிக் கொள்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது. தாசரதி, நீ என்ன நினைக்கிறாய்?” என்று தாசரதியைப் பார்க்கிறார் இராமானுஜர்.

“ஆச்சாரியாரே!  தாங்கள் காலால் இட்ட ஆணையைத் தலையால் மேற்கொள்வதைத் தவிர நான் வேறு என்ன அறிவேன்? நான் நாராயணனின் தாசர்களுக்கும் தாசன்!” என்ற தாசரதியைப் பார்த்துப் புன்னகைக்கிறார் இராமானுஜர்.

“தாசரதி, கூரேசன் ஒரு பக்கம் என்றால் நீ மறுபக்கம். அவன் பொங்கி எழுந்தால் நீ பனியாய்க் குளிர்கிறாய். உன் மனதில் பட்டதைச் சொல்லு” என்று அவனைத் தூண்டுகிறார்.

“ஆச்சாரியாரே! கூரேசர் சொன்னதைக் கேட்டதும் என் மனதும் துடிக்கிறது. இருப்பினும் அவருக்குக் கிடைத்த செய்தியில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். சோழ ராஜாக்கள் சைவர்களாக இருந்தாலும், வைஷ்ணவத்திற்கு எதிராகப் போர்க் கொடியை என்றுமே உயர்த்தியதில்லை. விண்ணகரங்களுக்கு நிறைய மானியங்களும், செல்வங்களும் அளித்திருக்கிறார்கள். வைஷ்ணவர்களுக்கு எந்தவிதமான இடையூறும் இழைத்ததில்லை. ஆகவே...”  நிறுத்தி விடுகிறான் தாசரதி.

“மகாபூரணமே! தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று தனது ஆசானான பெரியநம்பியை வினவுகிறார் இராமானுஜர்.

“நெருப்பில்லாமல் புகையாது என்று சொல்வார்கள். கூரேசன் தகுந்த ஆதாரமில்லாமல் இப்படி நம் எல்லோரையும் கூட்டி இந்த நாட்டு மன்னர் மீது ஒரு பழியைப் போட்டிருக்க மாட்டான்.  கூரேசா, உனக்கு இந்தச் செய்தியைச் சொன்னவர் யார்?”

மகாபூரணரின் கேள்விக்கு உடனே கூரத்தாழ்வானிடமிருந்து பதில் வருகிறது: “சோழர்களின் நலம் விரும்பிகளான காடவராயரிடமிருந்தும், சேதிராயரிடமிருந்தும்தான் தெரிந்துகொண்டேன். சில நாள்களுக்கு முன்னர் நான் விண்ணகரம் (திருமால் கோவில்) சென்று ஒப்பிலியப்பனை தரிசனம் செய்யச் சென்றிருந்தேன். அங்குதான் இருவரையும் சந்தித்தேன். அவர்களிடமிருந்துதான் இச்செய்தியை நான் அறிந்துகொண்டேன்.  அவர்களுடைய துக்கத்தை என்னாலேயே தாங்க முடியவில்லை ஆச்சாரியாரே!

“அவர்கள் அநபாயரிடம் நிறைய விண்ணப்பித்துப் பார்த்தார்களாம். சோழ மன்னர் கோவிந்தராஜனை சித்திரகூடத்திலிருந்து அகற்றுவதில் மும்முரமாக இருக்கிறாராம்.  கனகசபையை விரிவுசெய்து கட்டப் போகிறாராம். அப்படிக் கட்டுவதற்கு அவரை ஊக்குவது அவரது அமைச்சர் சேக்கிழார்தானாம். காடவரும், சேதியாரும் வருத்தத்துடன் சேந்தமங்கலத்திற்குத் திரும்பிச் சென்றுவிட்டார்கள். அவர்கள்தான் நிலைமை கைமீறிச் செல்வதற்குள் ஆச்சாரியாரிடம் தெரிவித்து, இந்த அநியாயத்தைத் தடுத்து நிறுத்துமாறு என்னிடம் சொன்னார்கள். நானும் உடனே இங்கு ஒடிவந்தேன்” பரக்கப் பரக்கச் சொல்கிறான் கூரத்தாழ்வான்.

அவனது குரல் உணர்ச்சிப் பெருக்கில் தடுமாறுகிறது.

சாந்தமான குரலுடன் பேச ஆரம்பிக்கிறார் மகாபூரணர். “நாமே நேரில் சென்று அநபாயச் சோழரிடம் பேசுவதுதான் சாலச் சிறந்தது. மன்னரிடம் எடுத்துச்சொல்லுவோம்.  நாராயணனை அவனது சித்திரகூடத்திலிருந்து அகற்றுவது மகாபாவம் என்று எடுத்துரைப்போம். எதிராஜா, (முனிவர்களின் அரசா) உனது நாவில் நாராயணனின் நாமம் இருக்கிறது. எவரும் உனது பேச்சுக்குச் செவி சாய்க்கிறார்கள். எத்தனை சிவ பக்தர்களை நாராயணன் பக்கம் நீ இழுத்திருக்கிறாய்! நீ பேசினால் கோவிந்தராஜனை சித்திரகூடத்திலேயே விட்டுவைப்பதோடு மட்டுமல்லாமல், அநபாயனே நாராயணனைச் சரணடையவும் வாய்ப்பு இருக்கிறது அல்லவா!”

தனது குரு சொல்வதைக் கவனத்துடன் செவிமடுக்கிறார், இராமானுஜர். அவரது முகம் மலர்கிறது. அவரது தலை மெல்ல ஆடிச் சம்மதத்தைத் தெரிவிக்கிறது.

“குருவே, தாங்கள் சொல்வதுதான் எனக்கும் சம்மதமாக இருக்கிறது. அநபாயச் சோழரை வைஷ்ணவராக்கத்தான் இப்படிப்பட்ட லீலையை கோவிந்தராஜப் பெருமாள் செய்கிறார் என்று தோன்றுகிறது. நாராயணனின் கருணைக்கு மயங்காதவர் யார்? அடியார்களைத் தன் அருளினால் மயக்குபவன் என்பதால்தானே திருமால் என்று அழைக்கப்படுகிறார்! அவர் அநபாயரையும் தன் அருள் மயக்கத்தால் ஆட்கொள்ளுவார். ஏன், அந்தச் சேக்கிழாரும் நாராயணனைச் சரணடையக்கூடும் அல்லவா! அவர்கள் இருவரும் வைஷ்ணவர்கள் ஆகிவிட்டால் இந்தத் தமிழ்நாடே நாராயணனின் நாடு ஆகிவிடாதா! கூரேசா, அநாபயர் இப்பொழுது எங்கு இருக்கிறார்? சிதம்பரத்தில்தானே?” என்று உற்சாகத்துடன் கூரத்தாழ்வானை வினவுகிறார் இராமானுஜர்.

“ஆச்சாரியாரே, இது என்ன விபரீதம்? அநபாயன், இல்லை இல்லை, அநபாயர் ஒரு சைவ வெறியர் என்பது தாங்களும், வணங்கத்தக்க மகாபூரணரும் அறியாததா! சமணத்தை நோக்கித் திரும்ப இருந்த அவரைச் சைவத்துக்கு இழுத்ததோடு மட்டுமல்லாமல், தீவிர சிவ வெறியராகவும் சேக்கிழார் மாற்றினார் என்பதை இந்த நாட்டில் உள்ள சிறு குழந்தை கூடச் சொல்லுமே! அப்படிப் பட்ட இருவர் முன்பு தாங்களும், மகாபூரணரும் செல்வதா? அவர்கள் தங்களைக் கொலைகூடச் செய்யத் துணிவார்கள்!” கூரத்தாழ்வானின் குரலில் இருந்த உணர்ச்சிப் பெருக்கு, தான் சொல்வதை அவன் நம்புகிறான் என்பதைக் காட்டுகிறது.

“கூரேசா, நீ இப்படி வாதாடினால் உன்னை இங்கேயே விட்டுவிட்டுச் செல்லவேண்டியதுதான்.  எனது நம்பிக்கை எங்கே, உனது பழிப்பு எங்கே!  நாராயணனை நம்புபவர்கள் கைவிடப்பட மாட்டார்கள் என்பதை அறியாதவனா நீ! நீ சொல்வது ராஜத் துரோகம் அல்லவா! ராஜத் துரோகிகளை இராமானுஜன் துணையாக வைத்துக்கொண்டிருக்கிறான் என்ற பழியை நீ எனக்குச் சேர்க்க விரும்புகிறாயா?” 

இராமானுஜரின் இந்த வார்த்தைகள் பொங்கும் பாலில் ஊற்றிய தண்ணீராக கூரத்தாழ்வானின் கோபத்தைத் தணிக்கின்றன. அப்படியே அனைவரின் முன்னாலும் அவர் கால்களில் விழுகிறான்.

“ஆச்சாரியாரே, என்னைப் பொறுத்தருளுங்கள். தங்கள்பால் இருக்கும் பக்தியும், தங்களின் பாதுகாப்பு பற்றிய சிந்தனையும் என்னை அப்படிப் பேசவைத்துவிட்டது. இனி எதுவும் பேசமாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்.”

இராமானுஜரின் கால்களில் இறுகப் பற்றிக்கொள்கிறான் கூரத்தாழ்வான். அவன் கண்களில் நீர் வழிந்தோடுகிறது.

“எழுந்திரு கூரேசா, நீ என்ன குழந்தையா? என் மீது நீ கொண்டிருக்கும் விசுவாசமும், நாராயணன் மீது நீ வைத்திருக்கும் பக்தியும் எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் தெரியும்.  அநபாயச் சோழருக்கு நாம் அவரைச் சந்திக்க வருவதாக ஓலை அனுப்பு. காடவராயரும், சேதிராயரும் அச்சமயம் நம்முடன் சேர்ந்து அநபாயரைச் சந்தித்தால் மிகவும் நன்றாக இருக்கும். நாம் அவர் இருக்கும் இடத்திற்குக் கிளம்ப ஏற்பாடுசெய். மகாபூரணரும், தாசரதியும், நீயும் இன்னும் முக்கியமான சிஷ்யர்களும் என்னுடன் வருகிறீர்கள். நாராயணன் நமக்கு நல்லதே செய்வான். ஓம் நமோ நாராயணாய!” என்று முழங்குகிறார் இராமானுஜர். அவருடன் சேர்ந்து அனைவரும் முழங்கும் ‘ஓம் நமோ நாராயணாய’ என்னும் கோஷம் அரங்கநாதன் ஆலயத்தில் எதிரொலிக்கிறது. ஆலய மணி அதை ஆமோதிப்பது போல முழங்குகிறது.

வரதராஜப் பெருமாள் கோவில், காஞ்சி

பிங்கள, ஆவணி 2 - ஆகஸ்ட் 5, 1137

“நாராயண, நாராயண!” என்று கூறியவாறே கோவில் மண்டபத்தில் தன் தம்பி காடவராயர் அருகில் அமர்ந்து கொள்கிறார் சேதிராயர். அவர்கள் இருவரின் கண்களும் யாரோ வரவை எதிர்நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கின்றன. இருவரும் சேர்ந்து அடிக்கொரு தடவை பெருமூச்செறிகிறார்கள்.

இருவரும் நிலவுமொழியின் பேரனான அழகியமணவாள நம்பியின் பிள்ளைவழிப் பேரர்கள்.  இருவரும் வைணவர்களாகவே வளர்ந்தவர்கள். அவர்களுக்கு தில்லையில் நடந்த விஷயங்கள் அநபாயன்பால் மனக்கசப்பைக் கொடுத்திருக்கிறது. எனவே, தங்கள் தந்தையின் அத்தை அழகியமணவாளினி மற்றும் கருணாகரத் தொண்டைமானின் பெயரனும், தங்கள் தங்கை திருப்பாவையின் கணவனுமான ஏகாம்பர பல்லவராயனை10 சந்திக்க வந்திருக்கிறார்கள்.

“நான் உங்களை தாமதிக்க வைத்து விட்டேனா? ஏன் மாளிகைக்கு வராமல் இங்கு சந்திக்க வரச் சொன்னீர்கள்?”  என்று கேட்டபடி அவர்களிடம் வருகிறான் ஏகாம்பர பல்லவராயன்.

“வரவேண்டும் ஏகாம்பரரே! எங்கள் வேண்டுகோளுக்கு இணங்கி இங்கு எங்களைச் சந்தித்தது பற்றி மிக்க மகிழ்ச்சி. அமருங்கள்!” என்று தங்களுக்கு நடுவில் இருந்த இடத்தைச் சுட்டிக்காட்டுகிறார் மூத்தவரான சேதிராயர்.

ஏகாம்பர பல்லவராயன் அவரருகில் அமர்ந்துகொள்கிறான்.

திருமண் அணிந்து திருமாலின் பக்தர்களாகக் காட்சி அளிக்கும் இருவருக்கும் நடுவே திருநீறு அணிந்து சிவனடியானாக அமர்ந்திருக்கும் அவனைப் பார்த்தால் வருவோர் போவோருக்குச் சற்று வியப்பாகவே இருக்கிறது. அதைப் பொருட்படுத்தாமல், “இவ்வளவு ரகசியம் எதற்கு மைத்துனர்களே! தங்கள் முகங்களும் வாட்டமாகவே இருக்கின்றதே, என்ன காரணம் என்று கேட்கிறான்.

“எல்லாம் உங்கள் மன்னர் அநபாயர் செய்யும் செயலால்தான்” என்று காடவராயர் அலுத்துக் கொள்கிறார்.

-----------------------------------

[10. இது முற்றிலும் கற்பனையே.  கருணாகரத் தொண்டைமானின் பரம்பரையைப் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.]

“நன்றாக இருக்கிறதே நீங்கள் சொல்வது! நீங்கள்தான் மன்னருக்கு மிகவும் வேண்டியவர்கள்.  மாதம் தவறினாலும் நீங்கள் மன்னவரைச் சந்திப்பது தவறாது. உங்களைக் கலந்துகொள்ளாமல் மன்னர் எதையுமே செய்வதில்லை. நான் அவரை ஆடிக்கொரு தடவை, அமாவாசைக்கொரு தடவை சந்தித்தாலே அதிசயம்தான். அப்படியிருக்கையில் திடுமென்று அநபாயச் சோழர் எனது மன்னவர் ஆகிவிட்டாரா? அப்படி என்ன செய்தார் மன்னவர், நீங்கள் என்னை இப்படி உங்கள் கோட்டைக்குள் வரவழைத்திருப்பதற்கு?” என்று கிண்டல் செய்கிறான் ஏகாம்பர பல்லவராயன்.

வரதராஜப் பெருமாள் கோவிலைத்தான் அவன் ‘உங்கள் கோட்டை’ என்று குறிப்பிடுகிறான்.  உள்ளே நுழையும் போது திருநீறு அணிந்த அவனை அங்கு குழுமியிருந்த வைணவர்கள் ஒருமாதிரியாக, “இந்தச் சைவனுக்கு திருமால் கோவிலில் என்ன வேலை?” என்று பார்த்த பார்வைதான் அவனை அப்படிப் பேச வைக்கிறது.

“உங்களுக்கு என்ன, மன்னரோ சைவர்.  எங்கள் தங்கையும் உங்களை மணந்துகொண்டு வைணவத்திருந்து சைவத்துக்குத் தாவிவிட்டாள். அந்த அதிர்ச்சியிலிருந்து நாங்கள் இன்னும் மீண்டபாடில்லை, அதற்குள் மன்னர் இப்படி ஒரு காரியத்தைச் செய்யத் துணிவார் என்று…”  சேதிராயரின் குரலில் இருந்த எரிச்சல் ஏகாம்பர பல்லவராயனை திடுக்கிட வைக்கிறது.

அவருக்கு அநபாயன் மேல் இருக்கும் விசுவாசத்தை நன்கு உணர்ந்து இருந்ததால் மன்னர் மிகவும் மனவருத்தத்தைத் தரும் செயலைச் செய்திருக்கிறார் என்று அறிந்து கொள்கிறான்.

“மீனாட்சியை திருமாலும், கள்ளழகரும் சுந்தரேசருக்கு மணம் செய்துவைத்த மாதிரிதானே எனக்கு உங்கள் தங்கை திருப்பாவையை மணமுடித்து வைத்தீர்கள்? அது போகட்டும். புதிர் போட்டுப் பேசாமல் உங்கள் மனம் வாட்டமடையும் அளவுக்கு மன்னர் என்ன செய்தார் என்பதைச் சொல்லுங்கள்” என்று பரிவுடன் விசாரிக்கிறான் ஏகாம்பர பல்லவராயன்.

தொண்டையைக் கனைத்துக்கொண்ட சேதிராயர் மெல்லத் துவங்குகிறார். “மன்னர் திடுமென்று எங்கள் இருவரையும் ஒரு நாள் தில்லைக்கு அழைத்தார். சேக்கிழாரும், கூடவே ஒரு சிவாச்சாரியாரும் அங்கு இருந்தார்கள். மன்னர் எங்களிடம் கனகசபையைச் சுற்றி விரிவாகக் கட்ட நிச்சயித்திருப்பதாகச் சொன்னார். கூரைக்குப் பொன்னால் ஆன ஓடுகளை வேயப்போவதாகவும் தெரிவித்தார்.”

“நல்ல விஷயம்தானே! அதற்கு ஏன் உங்களுக்குக் காய்ச்சல்? கோவிந்தராஜப் பெருமாளுக்கும் அப்படியே ஏதாவது செய்யும்படி கேட்கவேண்டியதுதானே!” என்கிறான் ஏகாம்பர பல்லவராயன்.

“சொன்னார், அவர் கோவிந்தராஜப் பெருமாளைப் பற்றிச் சொன்னதுதான் எங்களை உலுக்கியெடுத்து விட்டது!”

“என்னது!”

“ஆமாம், ஏகாம்பரரே! கனகசபையைச் சுற்றி விரிவு படுத்துவதற்கு கோவிந்தராஜரின் பிரகாரம் இடையூறாக இருக்கிறதாம். அதனால் கோவிந்தராஜரை, அவர் பள்ளிகொண்டிருக்கும் இடத்திலிருந்து அப்புறப் படுத்திவிட்டு, அவரது சித்திரகூடத்தையும் சிறிதாக்கிய பிறகு, திரும்பக் கொண்டுவருவதாகச் சொன்னார்.”

இதைச் சொல்லும்போது சேதிராயருக்குத் துக்கம் தாங்க முடியவில்லை.

“மன்னரா இப்படிச் சொன்னார்? சேக்கிழார் ஒன்றும் சொல்லவில்லையா?”

“அவரென்ன சொல்வார்? அவர்தான் மன்னரை முடுக்கிவிட்டிருப்பார் என்று எங்களுக்குத் தோன்றுகிறது. சமண சமயத்தில் நாட்டம் போய்விடக்கூடாதே என்று சைவத்தைக் கரைத்துக் கரைத்தல்லவா மன்னருக்கு ஊட்டி இருக்கிறார்! வாயை மூடிக்கொண்டுதான் இருந்தார்” என்று காடவராயர் பொருமுகிறார்.

“அப்படிச் செய்ய வேண்டாம் என்று நீங்கள் மன்னரைக் கேட்டுக் கொள்ளவில்லையா? உங்கள் இருவரின் பேச்சுக்கும் மிகவும் மதிப்புக்கொடுப்பவர் ஆயிற்றே மன்னர்?”

“தனக்குக் காரியம் ஆக வேண்டும் என்றால் மதிப்புக் கொடுக்காமலா போவார்? பரம்பரை பரம்பரையாக சோழர்களுக்காக குருதியைச் சிந்தி அல்லவா நாங்கள் உழைத்திருக்கிறோம்!  சைவ-வைணவ சமயப் பூசல் கூடாது என்றுதானே எங்கள் பாட்டனாரும், முப்பாட்டனாரும் மன்னரின் பாட்டனாரான இராஜேந்திர நரேந்திர குலோத்துங்கருக்குத் தோள்கொடுத்தார்கள்!  மக்கள் ஒரு வைணவரை சோழ மன்னராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றுதானே வைணவப் பெண்ணை மணந்த அதிராஜேந்திரரை விடுத்து, சைவரான குலோத்துங்கரை மன்னராக வரித்தார்கள்! அப்படியிருக்க வைணவர்கள் மனம் புண்படக்கூடிய செயலை இவர் செய்யத் துணியலாமா? தேவை என்றால் கோவிந்தராஜப் பெருமானுக்குப் புதிய விண்ணகரம் கட்டித் தருகிறேன் என்று எங்களுக்கு சமாதானம் வேறு சொல்கிறார்” என்கிறார் சேதிராயர்.

அண்ணன் சொல்வது உண்மை என்று தலையாட்டுகிறார் காடவராயர். ஏகாம்பர பல்லவன் திகைக்கிறான். நிலைமை மோசமாக போய்விடக் கூடாது என்று தனது மைத்துனர்களைச் சமாதானப்படுத்த முயல்கிறான் ஏகாம்பர பல்லவன்.

சோழர்களின் வலது கையாக, அவர்களுக்கு தோள் கொடுப்பதற்கென்றே பிறவி எடுத்திருக்கிறோம் என்று நம்பும் காடவர்கள் பரம்பரையில் வந்த தனது மைத்துனர்கள் இப்படி மனம் வெதும்பக்கூடாது என்று அவன் நினைக்கிறான்.

“மைத்துனர்களே! நிதானம் தேவை. மன்னரிடம் பேச யாராவது பெரியவர்களை, சமயக் காவலர்களை அழைத்துச் செல்லலாமே! அவருக்கு கடமைப்பட்ட சிற்றரசர்களாக நம்மை அவர் நினைக்கக்கூடும். ஆனால், சமயப் பெரியவர்களுக்கு மன்னர் கட்டாயம் மரியாதை காட்டுவார். அவர்கள் சொற்களுக்குச் செவிமடுப்பார். தாங்கள் வைணவப் பெரியார் எவரையாவது அழைத்துச்சென்று மன்னரிடம் பேசிப் பாருங்களேன்!” என்று தன் மனதில் பட்டதை அவர்களுக்கு எடுத்துரைக்கிறான்.

“நாங்களும் அப்படித்தான் நினைத்தோம் ஏகாம்பரரே! அதனால்தான் மன்னரைச் சந்திக்க உடையவர் இராமானுஜாச்சாரியார் அவரது சீடர்களுடனும், அவரது குருவான பெரிய நம்பியுடனும் வந்திருக்கிறார். இக்கோவில் விடுதியில்தான் தங்கி இருக்கிறார். நீர்தான் மன்னரிடம் சொல்லி, உடைவருடன் அவர் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்ய வேண்டும்.  அதற்காகத்தான் உம்மை இங்கு அழைத்தோம்” என்று தாங்கள் அவனை அழைத்த காரணத்தைக் கூறுகிறார்கள்.

“அப்படியா! அதை முதலில் சொல்லாமல் மன்னரைப் பற்றிக் குறையா சொல்வீர்கள்! எல்லா முன்னேற்பாடுகளையும் செய்துவிட்டு என்னை ஆழம் பார்க்கிறீர்களாக்கும்!” என்று சிரிக்கிறான் ஏகாம்பர பல்லவன்.

ஆளரவம் கேட்கவே மூவரும் திரும்புகிறார்கள்.

கூரத்தாழ்வான், தாசரதி புடைசூழ இராமானுஜர் வந்துகொண்டிருக்கிறார். பின்னால் மெதுவாக பெரிய நம்பி இன்னும் சிலருடன் வந்துகொண்டிருக்கிறார். அவர்களைக் கண்டதும் மூவரும் எழுந்து நின்று வணங்குகிறார்கள்.

கையை உயர்த்தி ஆசி வழங்கிய இராமானுஜர், அவர்களைப் பார்த்துப் புன்னகைக்கிறார்.  சேதிராயரையும், காடவராயரையும் கண்ட கூரத்தாழ்வானின் வாயெல்லாம் பல்லாக மலர்கிறது. அவர்களிடம் ஓடிவந்தவன், ஏகாம்பர பல்லவனைப் பார்த்ததும் அப்படியே திடுக்கிட்டு நிற்கிறான்.

அவனது முக மாற்றத்தை ஏகாம்பர பல்லவனும் கவனிக்கத் தவறவில்லை.

“ஆச்சாரியாருக்கு வணக்கங்கள். நான் காடவராயன், இது எனது தமையனார் சேதிராயர்.  தங்களது அழைப்புப்படி வந்திருக்கிறோம்” என்று குழைவாகப் பேசுகிறார் காடவராயர்.

“நாராயணன் அருள் தங்களுக்குக் கிட்டட்டும். தங்களுடன் இருக்கும் சிவ பக்தர் யாரோ?”  என்று பெரிய திருநீற்றுப் பட்டையுடன் திகழும் ஏகாம்பர பல்லவனைப் பார்த்துக் கேட்கிறார், இராமானுஜர்.

“இவர் எங்களது தங்கையின் மணாளர். காஞ்சிக்குக் காவலர்.  ஏகாம்பர பல்லவர் இவரது பெயர்” என்று அறிமுகம் செய்கிறார் சேதிராயர்.

“தங்கள் தங்கையின் கணவரா?” இராமானுஜரும், அவரது சீடர்களும் இவர்களையும், பல்லவனையும் மாறிமாறிப் பார்க்கிறார்கள். காடவர்களுக்குப் புரியாதது, பல்லவனுக்கு உடனே புரிந்து விடுகிறது.

“எங்கள் குடும்பத்தில் வைணவர்களும் சைவர்களும் மணவினை செய்து கொள்வது நெடுநாளையப் பழக்கம் ஆச்சாரியாரே! இவர்களின் தங்கை எனக்கு முறைப்பெண்தான்.  நான் காலம் சென்ற கருணாகரத் தொண்டைமானின் பெயரன். அவர் எனது மைத்துனர்களின் தந்தையின் அத்தையை மணந்திருந்தார். அந்த அத்தையின் பாட்டியே ஒரு சைவப் பெண்மணிதான்” என்று பளிச்சென்று பதில் சொல்கிறான்.

கூரத்தாழ்வானின் கண்கள் பெரிதாக விழிக்கின்றன. சைவர்களும் வைணவர்களும் மணவினை செய்து கொள்கிறார்களா? இவர்களை நம்பி ஆச்சாரியர் அநபாயனைச் சந்திக்க வந்துவிட்டாரே! இவர்களது மாப்பிள்ளை ஒரு சைவன், அதிலும் கருணாகரத் தொண்டைமானின் பெயரன்!

அவனது தலை சுற்றுகிறது.

“ஆச்சாரியாரே!  ஏகாம்பரரும் தாங்கள் மன்னருடன் பேசுவது மிகவும் பயன் அளிக்கும் என்றே கருதுகிறார். தங்களது பேச்சுக்கு மன்னர் செவிமடுப்பார் என்றும் நம்புகிறார். தாங்கள் மன்னரைச் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அவரைத்தான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்” என்று சொல்கிறார் சேதிராயர்.

“அப்படியா! ஒரு சைவர் கோவிந்தராஜரைச் சித்திரகூடத்தில் நிறுத்திவைக்க உதவப் போகிறாரா? நாராயணன்தான் அவர் மனதில் புகுந்து அருள்பாலித்திருக்கிறார். போன ஜன்மத்தில் அவர் ஒரு வைஷ்ணவராகப் பிறந்திருந்திருந்தாரோ என்னவோ?” என்று கூரத்தாழ்வான் புன்னகைக்கிறான்.

கூரத்தாழ்வான் சொல்வதை ஏகாம்பர பல்லவன் ரசிக்கவில்லை என்பது அவனது முக பாவத்திலிருந்தே தெரிகிறது. ஏதோ பதில் சொல்ல வாயெடுத்தவன் உதட்டைக் கடித்து நிறுத்திக் கொள்கிறான்.

“மன்னர் எப்பொழுது காஞ்சிக்கு வருகிறார்?” என்று வினவுகிறார் சேதிராயர்.

“அவர் நாளை வருகிறார். தாங்களும் வாருங்கள். மன்னர் உங்கள் இருவரையும் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவார். ஆச்சாரியார் அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்வோம்” என்று அழைப்பு விடுக்கிறான் ஏகாம்பர பல்லவன்.

“அப்படியே செய்வோம்” என்று சேதிராயரிடமிருந்து பதில் வருகிறது.

“பூஜை ஆரம்பமாகப் போகிறது. ஆச்சாரியார் வந்து அருள்பாலிக்க வேண்டும்” என்று பணிவாகக் கூறுகிறான் தாசரதி.

“வாருங்களேன். நாராயணனைத் தரிசிக்கலாம்” என்று இராமானுஜர் அனைவரையும் அழைக்கிறார்.

“மன்னர் வருகைக்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருக்கிறது. ஆச்சாரியார் மன்னிக்க வேண்டும்” என்று நழுவுகிறான் ஏகாம்பர பல்லவன்.

அவனது சொற்களின் உள்நோக்கத்தைப் இராமானுஜர் புரிந்து கொள்ளுகிறார். அவர் முகத்தில் சிறிய ஏமாற்றம் பரவுகிறது.

“மைத்துனர்களே! தரிசனத்தை முடித்துக்கொண்டு மாளிகைக்கு வாருங்கள். திருப்பாவை உங்களை மிகவும் எதிர்பார்த்துக்கொண்டிருப்பாள்” என்றபடி விடை பெற்றுக்கொள்கிறான் ஏகாம்பர பல்லவன்.

***

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com