பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -நான்காம் பாகம்-அத்தியாயம் 4

இராமானுஜர், அநபாயன்
இராமானுஜர், அநபாயன்

ஒரு அரிசோனன்

சோழர் அரண்மனை, காஞ்சி

பிங்கள, ஆவணி 5 - ஆகஸ்ட் 8, 1137

நீண்ட காலமாகிறது, நிலவுமொழியின் மணம் இராஜேந்திர சோழனால் நிச்சயிக்கப்பட்டு. அதே அரண்மனையில் அநபாயச் சோழன் தனது முதலமைச்சர் சேக்கிழாருடனும், இதர பிரதானிகளுடனும் கொலுவீற்றிருக்கிறான். இராமானுஜாச்சாரியாரை அங்கு சந்திப்பதாக ஏற்பாடு ஆயிருக்கிறது.11 அவரையும், மற்றவர்களையும் அழைத்து வரச் சென்றிருக்கிறான் ஏகாம்பர பல்லவன்.

சேக்கிழாருக்குப் பக்கத்தில் நின்று பாலசுப்பிரமணிய சிவாச்சாரி அவருடன் உரையாடிக்கொண்டு இருக்கிறார்.

ஒரு காவலன் இராமானுஜர் வந்துகொண்டிருப்பதாக அறிவிக்கிறான்.

சேக்கிழார் எழுந்து கொள்கிறார். “மன்னர் அவர்களே! வைணவத் தலைவரும், விசிட்டாத்துவைதத் தத்துவத்தை முன்வைத்தவரும், சமயக் குரவருமான இராமானுஜரைத் தாங்கள் முன்சென்று வரவேற்பதே முறையாகும். சைவ சமயக் குரவர்களுக்கு என்ன மரியாதையை நாம் நல்குவோமோ, அந்த மரியாதையை இராமானுஜாச்சாரியாருக்கும் நாம் இச்சபையில் நல்க வேண்டும்” என்று எடுத்துரைக்கிறார்.

தலையசைத்த அநபாயனும் எழுந்து கொள்கிறான். இராமானுஜரை ஏகாம்பர பல்லவன் அழைத்து வருகிறான். அவர்களுடன் ஐவர் வருகின்றனர். மிகுந்த மரியாதையுடன் இரு கரங்களையும் கூப்பி முகத்தில் புன்னகையுடன் இராமானுஜரை வரவேற்கிறான் அநபாயன்.

அநபாயன்
அநபாயன்

“ஆச்சாரியாரே, வர வேண்டும்! வர வேண்டும்!! தங்களை நேரில் சந்திக்கும் பாக்கியம் கிடைத்ததற்கு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். தாங்கள் திருவரங்கத்திலிருந்து இவ்வளவு தூரம் என்னைத் தேடி வர வேண்டுமா? தாங்கள் அழைத்திருந்தால் நானே அங்கு வந்திருப்பேனே!”

“நாரணன் அருளால் எல்லாவித பாக்கியங்களையும் அடைவீராக! குடிகள் மன்னனைத் தேடித்தான் வரவேண்டுமே தவிர, மன்னவனைத் தன் இடத்திற்கு அழைக்கும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை. எனவே, யாமே உம்மைத் தேடி வந்தோம்!” என்று மன்னனைத் தேடி வந்திருக்கும் சமயக் குரவராக மறைமுகமாகத் தம்மைப் பன்மையில் அறிவித்துக் கொள்கிறார் இராமானுஜர்.

அதை உடனே புரிந்துகொண்ட அநபாயனும், “ஆச்சாரியார் எம்மைத் தேடி வந்ததற்கான காரணத்தை அறிய யாம் ஆவலாக உள்ளோம். முதலில் தாம் அமர்ந்து கொள்ளுமாறு அழைக்கிறோம்” என்று அரசனுக்குரியவாறு தான் பேசும் விதத்தை மாற்றுகிறான்.

-----------------------------------------

[11. இராமானுஜாச்சாரியார் அநபாய குலோத்துங்க சோழனைச் சந்திக்கவே இல்லை என்றும், அவரது உயிருக்கு சோழ மன்னனால் ஆபத்து ஏற்படலாம் என்று அஞ்சிய கூரத்தாழ்வார் இராமானுஜர் போல் வேடம் அணிந்துகொண்டு பெரிய நம்பி மகாபூரணருடன் குலோத்துங்கனைச் சந்தித்தார் என்றும் வைணவ ஆசிரியர்கள் பலர் அவருடைய வாழ்க்கை வரலாற்றில் எழுதியிருக்கிறார்கள். விசிஷ்டாத்வைதத்தின் வித்தகரும், மகாபுருஷரும், தன் ஆசிரியருக்கு எதிராகவே அச்சமின்றி வாதாடிய தைரியசாலியும், வைணவத்திற்குப் புத்துயிர் ஊட்டியவருமான இராமானுஜர் தானே முன்சென்று நின்றிருப்பாரே தவிர, உயிருக்குப் பயப்படும் ஒரு கோழையாக, இன்னொருவரைத் தன்னைப் போல வேடமணிந்து செல்ல அனுமதித்திருப்பார் என்று எண்ணிப் பார்க்கக்கூட என்னால் இயலவில்லை.  எனவே, இராமானுஜாச்சாரியாரே அநபாய குலோத்துங்க சோழனை நேரில் சந்தித்திருக்க வேண்டும் என்றே என்னால் அனுமானிக்கப்படுகிறது. தவிரவும், அவரும், சேக்கிழாரும் ஒருவரை ஒருவர் சந்தித்திருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்து, கற்பனைக் குதிரையில் ஏறிச் சென்று நான் கண்ட காட்சிகள் கதையில் வடிவமைக்கபட்டிருக்கின்றன.]

“அமருங்கள் ஆச்சாரியாரே! தங்களைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். தங்களைச் சந்திக்கும் பாக்கியம் இன்று கிடைத்தது எல்லாம்வல்ல உமையொருபாகனின் அருளேயன்று வேறொன்றுமில்லை. அருண்மொழி என்று பிள்ளைப் பிராயத்தில் அழைக்கப்பட்டு இப்பொழுது சேக்கிழான் என்று பொதுவாக வழங்கப்படும் எனது வணக்கங்கள்!” என்று அநபாயனின் அரியணைக்கு முன்னால் அவருக்காகவே போடப்பட்டிருக்கும் இருக்கையைக் காட்டுகிறார் சேக்கிழார்.

இராமானுஜர் அவரை ஏற இறங்கப் பார்க்கிறார். “தங்களைப் பற்றியும் நிறையக்
கேள்விப்பட்டிருக்கிறோம் சேக்கிழார் பெருமானே! மன்னருக்கு வலக்கரமாக விளங்கி சோணாட்டின் நலத்திற்காக அல்லும் பகலும் தாங்கள் உழைத்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று. தங்களையும் மன்னருடன் சேர்த்து சந்திப்பது இராமபிரானையும் அவரது சிறிய திருவடியான அனுமனையும் ஒருங்கே பார்த்த மாதிரி இருக்கிறது.”

தன்னைப் புகழ்கிறாரா அல்லது கிண்டல் செய்கிறாரா என்பதை எத்திராஜரின் முகபாவத்திலிருந்து கண்டுகொள்ள இயலாததால், “மன்னர்மன்னரான அநபாயரை நீதி நெறி வழுவா இராமபிரானுக்கு நிகராக ஆச்சாரியார் ஒப்பிட்டுக் கூறுவது மிகவும் பொருத்தமானதே. இந்த எளியவனை சிவபிரானின் அவதாரமான அனுமனின் நிலைக்கு உயர்த்தி இருப்பது தங்களது பெருந்தன்மையைக் காட்டுகிறது”12 என்று புன்னகைக்கிறார் சேக்கிழார்.

அறிமுகங்கள் முடிகின்றன. நலம் விசாரிக்கப்படுகிறது. அநபாயனை இராவணனைப் போன்ற ஒரு அரக்கன் என்றும், சேக்கிழாரை அவனுக்கு உதவியாக இருக்கும் அரக்க மந்திரி என்றும் மனதிற்குள் எண்ணி வந்த கூரத்தாழ்வானுக்கு, அநபாயன் இராமானுஜரைக் குழைந்து வரவேற்றதும், சேக்கிழாரின் பணிவும் வியப்பையே அளிக்கிறது. ஆச்சாரியர் சொன்னபடி தங்கள் வேலை எளிதாக முடிந்துவிடக்கூடும் என்ற எண்ணம் அவனுள் எழுகிறது.

“ஆச்சாரியார் அவர்களே! திருவரங்கத்தில் அரங்கநாதனின் பணிகள் நன்கு நடந்து வருகின்றனவா? கோவிலை விரிவுபடுத்தவோ, அங்கு குடிகொண்டிருக்கும் கடவுளர்களின் அணிகலன்கள், பூசைகள் பெருகவோ அரசிடமிருந்து உதவி தேவைப்பட்டால் தாம் தலையசைத்தால் போதும், உடனே யானைகளில் ஏற்றித் தேவையானவற்றை அனுப்பி வைக்கிறோம். தாம் இங்கு வந்து எம்மைச் சந்தித்ததைச் சிறப்பிக்கும் வகையில் அரங்கநாதனின் சேவைக்காக ஐநூறு பசுக்களையும், பத்து யானைகள் சுமக்கும் வெள்ளிக் காசுகளையும் தம்முடன் அனுப்பி வைக்கிறோம்!” என்று தானாகவே முன்வந்து அநபாயன் சொன்னதைக் கேட்டதும் கூரத்தாழ்வானுக்கு மயக்கமே வந்துவிடும்போல இருக்கிறது.

அரங்கநாதனுக்கு வாரி வழங்கும் இவனா கோவிந்தராஜரை சித்திரக்கூடத்திலிருந்து அகற்ற முற்படுவான்!

“தமது முன்னோர்களின் பெயரைத் தாமும் நிலைநாட்ட விழைகிறீர் மன்னவரே! தாம் முன்வந்து அளிக்கும் செல்வம் எதையையும் கோரி யாம் இங்கு வரவில்லை. ஒரு அருட்செல்வத்தைத் தம்மிடம் யாசிக்கவே யாம் திருவரங்கத்திலிருந்து வந்திருக்கிறோம்!”  என்று இராமானுஜரிடமிருந்து பதில் வருகிறது.

“தம்முடைய திருவாயிலிருந்து இம்மாதிரியான வார்த்தைகளைக் கூறலாமா ஆச்சாரியாரே! தாம் வேண்டுவதைத் தயங்காமல் கேட்கலாம். எம்மால் இயன்றவை நிச்சயமாக அரங்கநாதனின் சேவைக்கு அளிக்கப்படும்!” என்று அநபாயன் இயம்பியதுமே, வந்த வேலை எளிதில் முடிந்துவிட்டது என்று கூரத்தாழ்வான் கனவு காணத் துவங்கி விடுகிறான்.

இப்படிப்பட்ட ஒரு மன்னனைத் தவறாக எண்ணிவிட்டோமே என்றும் வருந்துகிறான்.

“எமது மனத்திற்கு வருத்தம் தரக்கூடிய ஒரு செய்தியைக் கேட்கப்பெற்றோம்.”

“அப்படியா? அரங்கநாதனின் சேவைக்கு இடையூறு ஏதாவது ஏற்பட்டதா?” அநபாயனுக்கு அவர் கேள்விப்பட்டது என்ன என்று ஊகிக்க முடிந்தாலும், பிடிகொடுக்காமலேயே பேசுகிறான்.

-------------------------------------

[12. இராமாயணக் காவியங்களில் ஒருசில ஆசிரியர்கள் அநுமனைச் சிவபெருமானின் அவதாரமாகச் சித்தரித்திருப்பதும் உண்டு.]

அது இராமானுஜருக்கும் புரிகிறது. தானே வெளிப்படையாகச் சொன்னால் ஒழிய, அநபாயன் தானாக எதையும் சொல்ல மாட்டான் என்று தெரிந்துகொள்கிறார்.

“மன்னா! அரங்கநாதரின் சேவைக்கு என்ன இடையூறு ஏற்படப்போகிறது! யாமே நேரில் இருந்து கவனித்துக்கொள்கிறோம். முதலியாண்டானும் கோவிலை நன்கு நிர்வகித்துக்கொண்டுதான் வருகிறான். அதில் குறையொன்றும் இல்லை. எமது மனக்குறை சித்திரக்கூடத்தைப் பற்றித்தான்.”

“சித்திரக்கூடமா?” அநபாயன் விழிக்கிறான்.

“ஆச்சாரியார் தில்லையைத்தான் அப்படிக் குறிப்பிடுகிறார் அரசே!” என்று சேக்கிழார் எடுத்துக் கொடுக்கிறார்.

“அம்பலவாணன் ஆனந்தத் தாண்டவம் ஆடும் பொன்னம்பலத்தைப் பற்றித் தமக்கு மனக்குறை எப்படி வரக்கூடும்? யாம்தான் பொன்னம்பலத்தை விரிவுபடுத்திக் கட்ட ஏற்பாடுகள் செய்து வருகிறோமே! அதில் ஏதாவது குறை இருக்கிறதா? தாம் அதைச் சொன்னால் அதை நீக்கி இன்னும் நன்றாக, மிகவும் சிறப்பாகச் செயல்படுத்துவோம்.”

இவர்களின் சொற்போரை நன்கு ரசிக்கிறார் பாலசுப்பிரமணிய சிவாச்சாரி. சமயக் குரவரிடம் மிகவும் மரியாதையாக, அதேசமயம் கொஞ்சமும் விட்டுக்கொடுக்காமல் அவன் பேசும் திறமை அவரைக் கவர்கிறது. வீரர்களான சேதிராயர், காடவராயர் மற்றும் ஏகாம்பர பல்லவன் இவர்களுக்கு அதுவும் ஒரு போர் முறையாகத்தான் படுகிறது.

கூரத்தாழ்வானின் மனதில் உற்சாகம் குறைந்து குழப்பம் தோன்ற ஆரம்பிக்கிறது.  ஆச்சாரியர் ஏன் சுற்றிச் சுற்றி வருகிறார், விஷயத்தைப் பட்டென்று ஏன் போட்டு உடைக்க மாட்டேன் என்கிறார் என்று பொறுமையின்றித் தவிக்கிறான்.

“அதில்தான் எமக்கு மனக்குறை மன்னவா!”

“அதைச் செவிமடுக்க ஆவலாக உள்ளோம்.”

“கோவிந்தராஜரைச் சித்திரக்கூடத்திலிருந்து அகற்ற மன்னர் திட்டமிட்டிருப்பதாகச் சேதி கேட்டோம், மனம் வருந்தினோம்” கடைசியில் இராமானுஜாச்சாரியார் விஷயத்திற்கு வருகிறார்.

“ஆச்சாரியாருக்கு எவர் மூலம் சேதி வந்ததோ?” அநபாயனின் கண்கள் மண்டபத்தில் இருப்பவர்களைச் சுற்றி வருகின்றன.

“அம்பு எம் மீது தைத்தது என்பது முக்கியமல்ல மன்னவா, அம்பு அரசரால் எய்யப்பட்டதா என்பதுதான் எமது கேள்வி!” இராமானுஜர் அநபாயனை மடக்குகிறார்.

“அனைவரும் வணங்கும் ஆச்சாரியாரைத் துன்புறுத்துவது எமது நோக்கமல்ல.  பொன்னம்பலத்தை விரிவுபடுத்த இடம் தேவைப்படுகிறது. கோவிந்தராஜரின் சன்னிதி மிகவும் நெருக்கமாக உள்ளதால், சன்னிதியைச் சற்றுத் தென்புறம் நகர்த்த வேண்டும். அதனால்…”

“அதனால், ஆகம முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டு, காலம் காலமாக பாகவதர்கள்13 வணங்கிவரும் கோவிந்தராஜரை அகற்றலாமா? அவரது சன்னிதியை இடித்துச் சிதிலப்படுத்தலாமா?” இராமானுஜரின் கேள்வியில் ஆற்றாமையும் சினமும் கலந்து வெளிவருகின்றன.

“எதையும் ஆகம முறைப்படி செய்யலாம் என்பது தமக்குத் தெரியாத ஒன்றா! எந்தவிதமான முறைகேடும் நடக்காதபடி கவனமாகச் செய்யத் தீர்மானித்திருக்கிறோம். முறைமை தவறாமலிருக்கத் தாமும் தமக்கு வேண்டிய வைணவ ஆகமச் சான்றோரை அறிவுரை கூற அமர்த்தினால் எமக்கும் மிகுந்த உதவியாகவும், சிறப்பாகவும் இருக்கும்.”

------------------------------

[13. திருமாலின் அடியவரை, ‘பாகவதர் என்று குறிப்பிடுவது வழக்கம்.]

அநபாயனின் முகத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. குரலில் பணிவும், பரிவும், உறுதியும் இருப்பதை அனைவரும் கவனிக்கிறார்கள்.

“முறையற்றதைச் செய்ய முறைமை என்று தாம் வாதிக்கலாமா? இவ்வையகத்திலேயே சிறந்த தெய்வம் நாராயணன் அல்லவா? அவனை இடம் பெயர்ப்பது தகுமா? சூரிய குலத்தில் உதித்த தாமா இதைச் செய்வது!”

இராமானுஜரின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் அநபாயனின் புருவங்கள் ஏறி இறங்குகின்றன. உதடுகள் துடிக்கின்றன.

தன்னுள் பொங்கி எழும் சினத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டவாறு, “மனுநீதிச் சோழர் பரம்பரையில் வந்த யாம் முறை தவறி எதையும் செய்ய மாட்டோம். மேலும், ஏழேழு உலகத்தையும், நம் அனைவரையும் படைத்த பிறப்பிலியான சிவபெருமானை விடுத்து, இன்னொரு தெய்வத்தை வையகத்தில் சிறந்த தெய்வம் என்று சமயக் குரவரான தாம் இப்படிச் சொல்வது எம் நெஞ்சை வருத்துகிறது. வேறு யாராவது இச்சொல்லைச் சொல்லியிருந்தாலும் எமது சீற்றத்திலிருந்து தப்ப இயலாது. இருப்பினும் தம்முடைய உயர்ந்த நிலைமையைக் கருதி யாம் பொறுத்துக்கொள்கிறோம். கோவிந்தராஜருக்காகத் தனிக் கற்றளி வேறிடத்தில் எழுப்ப எத்தனை செலவானாலும் அதற்கான நிதியைத் தர யாம் சித்தமாக உள்ளோம். பொன்னம்பலத்தை விரிவுபடுத்துவதை யாம் கைவிட இயலாது.” அநபாயன் ஆணித்தரமாக, சற்றுக் கடுமையாக மொழிகிறான்.

நிலைமை விபரீதமாகத் திரும்புகிறது என்பதை உணர்ந்த சேக்கிழார், “அரசே! ஆச்சாரியார் முன்பு இப்படிப்பட்ட சொற்களைத் தவிர்ப்பதுதான் தங்களுக்கு அழகு. நான் தங்களின் நிலைமையை ஆச்சாரியாருக்கு எடுத்து உரைக்கிறேனே! அவரைச் சமாதானப்படுத்தி இருவருக்கும் ஒப்புதலான ஒரு முடிவுக்குக் கொணர முயற்சி செய்கிறேனே! தாங்கள் அதற்கு அனுமதி தர வேண்டும்!” என்று வேண்டிக்கொள்ளவே, சொல்லின் செல்வரான அவர் விஷயமில்லாமல் இப்படிப் பேச மாட்டார் என்பதை உணர்ந்து சிறிது சினம் தணிகிறான் அநபாயன்.

“ஆச்சாரியாரே, குறுக்கிட்டு பேசுவதற்குத் தாங்களும் என்னை மன்னிக்க வேண்டும். தாங்கள் வந்திருக்கும் விஷயம் கோவிந்தராஜரின் திருவுருவை சன்னிதியிலிருந்து அகற்றக் கூடாது என்பதே. நாம் அதைப்பற்றி மட்டும் பேசுவதே சாலச் சிறந்ததாகும்” என்று இராமானுஜரிடம் விண்ணப்பிக்கிறார் சேக்கிழார்.

கூரத்தாழ்வானின் வாய் துருதுருக்கிறது.

‘இந்த அநபாயன் கடைசியில் தான் ஒரு சிவ வெறியன் என்பதைக் காட்டிவிட்டானே!  எதிராஜரும், உடையவரும், இளையபெருமானும் ஆன ஆச்சாரியாரையே எடுத்தெறிந்து பேசிவிட்டானே! அது மட்டுமில்லாமல், திருமாலையும் தாழ்வு செய்துவிட்டானே - அதுவும் ஆச்சாரியார் முன்னாலேயே! இதற்குத்தானே ஆச்சாரியாரை இங்கு வர வேண்டாம், நானே அவரைப் போல வேடமணிந்து செல்கிறேன் என்று சொல்லிப் பார்த்தேன். ஆச்சாரியாரும், காடவரும், சேதிராயரும் அதைத் தடுத்துவிட்டார்கள். இப்படியா ஆச்சாரியாரையும், நாராயணனையும் தூஷணை செய்வான் இந்த மன்னன்? இவனுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று வேறு ஆச்சாரியார் சொன்னாரே!’ என்று தன்னுள் பொங்குகிறான்.

“சேக்கிழாரே, நீர் சொல்லின் செல்வர் என்பது எமக்கும் தெரியும். நீர் மன்னருக்காகப் பேச வந்திருக்கிறீர். கோவிந்தராஜரை ஏன் சித்திரக்கூடத்திலிருந்து அகற்றக் கூடாது என்று நாம் விவாதிப்பதானால், கோவிந்தராஜர் யார், அவர் எப்படிப்பட்டவர் என்பதைப் பற்றியும் நாம் விவாதித்துதான் ஆகவேண்டும். சினம் கொள்ளாது நமது வாதத்தைத் தாம் செவிமடுக்கப் போவதாக மன்னரின் ஒப்புதலை நீர் பெற்றால்தான் நாம் மேற்கொண்டு பேச இயலும்” என்று கணீர் குரலில் சேக்கிழாருக்குப் பதிலளிக்கிறார் இராமானுஜர்.

அநபாயனின் முகத்தை ஏறிட்டு நோக்குகிறார் சேக்கிழார்.

“மன்னரே, எங்கள் விவாதத்தைத் தாங்கள் அமைதியாகச் செவிமடுக்க வேண்டும் எனக் கோருகிறேன். ஆச்சாரியாருக்கு எந்தவிதமான மனநோவும் நம்மால் வரக்கூடாது. அவர் தரப்பு வாதத்தை அவர் தடையேதும் இல்லாமல் சொல்லட்டும். தங்கள் சார்பில் நான் நமது தரப்பை எடுத்துச்சொல்கிறேன். இறுதியில் தாங்கள் தங்களது கருத்தைச் சொல்லுங்கள்” என்று சேக்கிழார் கைகூப்புகிறார். அவரது கூப்பிய கரத்தைப் பிடித்துக் கொள்கிறான் அநபாயன்.

“சேக்கிழாரே, உமது வேண்டுகோளுக்கு யாம் ஒப்புதல் அளிக்கிறோம்!” என்று தலையாட்டுகிறான்.

“சொல்லுங்கள், ஆச்சாரியாரே!” இராமானுஜரைப் பார்த்துக் கூறுகிறார் சேக்கிழார்.

“முதலில் நாராயணன் யார் என்பதை விளக்குகிறேன். பொறுமையாகக் கேளுமின்: நாராயணன் என்பதற்கு இரண்டு பொருள்கள் உண்டு. நர என்றால் நீர் என்றும், மனிதர்கள் என்றும் பொருள்படும். அயணன் என்றால் சயனித்திருப்பவன் என்றும், நடத்திச் செல்பவன் என்றும் கொள்ளலாம். நீரில், அதாவது திருப்பாற்கடலில் ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷன் மீது சயனித்திருப்பவன், மனிதர்களை வழி நடத்திச் செல்லும் நாயகன் நாராயணன். அவனை மகாவிஷ்ணு என்கிறோம். அதாவது எங்கும், எதிலும் நிறைந்திருப்பவன். அனைவரையும் காக்கும் கருணைக்கடல். அவனை விடச் சிறந்தவர் யார் உளர்? நீயே தெய்வம் என்று அவனைச் சரணடைந்தாலே போதும். அவன் வேறு எதையும் எதிர்பார்ப்பதில்லை. உடலை வருத்தித் தவம் இயற்ற வேண்டும், பல பிறப்புகள் எடுத்து, படிப்படியாக ஞானம் பெற வேண்டும் என்றும் அவன் நவில்வதில்லை. அப்படியிருக்கும் ஒரே தெய்வமான திருமாலை அவனது இருப்பிடத்திலிருந்து மாற்ற நாம் யார்? அவன் சித்திரக்கூடத்தில் பள்ளிகொண்டு விட்டான். அவன் அப்படியே இருந்து விட்டுப் போகட்டும்!”  இராமானுஜர் திருவாய் மலர்ந்து அருளுகிறார்.

“ஆச்சாரியாரே, நரர்களை நடத்திச் செல்பவன் நாராயணன், அவன்தான் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் திருமால் என்று நவின்றீர்கள். தில்லையில் பொன்னம்பலத்தில் நின்றாடும் நடராஜன், தான் ஆடுவதோடு மட்டுமின்றி, நம்மையும் ஆட்டுவிக்கிறான்.  அப்படியானால் நம்மை நடத்திச் செல்வதும் அவன்தானே! அவனையும் நாராயணன் என்று கொள்வதில் என்ன தவறு இருக்கிறது? மகாவிஷ்ணு எங்கும் நிறைந்திருக்கிறார் என்றீர்கள்.  சிவபெருமான் இல்லாத இடம் எது? இங்கெங்கெணாதபடி எங்கும் நிறைந்த பரம்பொருள் அல்லவா அவன்! அவனுக்கும் மகாவிஷ்ணு என்ற பெயர் பொருந்தும் அல்லவா! நமக்குள்ளும் அவன் நிறைந்திருக்கிறான் என்பதை உணராமல் உழலும் நம்மை நோக்கி, தன்னைச் சரணடைந்தால் வீடு பெறலாம் என்று தன் தூக்கிய காலைச் சுட்டிக் காட்டுகிறானே - ஆனந்தக் கூத்தாடும் தில்லையில்? அப்படிப்பட்ட கருணைக்கடல் அல்லவா அவன்!  அவனுடைய பொன்னம்பலத்தைத்தானே மன்னவர் விரிவாக்க முற்படுகிறார்! அது எப்படித் தவறாகும்? தவிரவும், திருமால் தனது தங்கை கணவனுக்காக சற்றுத் தன் இடத்தைத் தர மாட்டாரா?” என்று சொல்வன்மையால் தனது பக்கத்தை நிலைநாட்ட முயல்கிறார் சேக்கிழார்.

“சேக்கிழாரே, சரஸ்வதி உமது நாவில் இருந்து விளையாடுகிறாள். நீர் சொல்வதைப் பார்த்தால் அண்ட சராசரத்திற்கும் நாயகனான நாராயணனையே சிவனுக்குள் அடக்கி விடுவீர் போல இருக்கிறதே! படைப்புக்குத் தலைவனான பிரம்மனே திருமாலின் தொப்புள் கொடியிலிருந்து உதித்தவன். அந்த பிரம்மனிடமிருந்து உருவானவன்தானே உருத்திரன்? அந்த உருத்திரனை, பிரம்மனால் படைக்கப்பட்டவனை, திருமாலின் பேரனை, திருமாலின் தங்கையின் மணாளன் என்று தவறாகச் சொல்கிறீரே!” என்று எதிர்பாராத அம்பை எய்கிறார் இராமானுஜர்.

“உருத்திரர்கள் பதினோரு பேர்கள். அவர்கள் சிவனுக்குள் அடக்கம். சிவ தத்துவத்திற்குள் சென்றால், சிவனில் பாதி சக்தி. அந்த சக்தியும், திருமாலும் ஒரே அம்சம். எனவே, திருமாலும் சிவனில் அடக்கம் என்று சொல்வது தவறில்லையே!” என்று சேக்கிழார் சொன்னதும், “இதைக் கேட்கவா நான் இங்கு வந்தேன்? நாராயணா! நாராயணா!!” என்றபடி இராமானுஜர் காதுகளைப் பொத்திக்கொண்டு, கண்களையும் மூடிக்கொள்கிறார்.

அவரது வாய், ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற திருமாலின் திருமந்திரத்தைப் பலமுறை முணுமுணுக்கிறது. சில கணங்கள் சென்ற பிறகு காதுகளிலிருந்து கைகளை எடுத்து, கண்களைத் திறக்கிறார்.

“நாராயணன்தான் பரமாத்மா. பிரம்மா இந்த உடலையும், மற்ற கண்ணுக்குத் தெரியும் பொருள்களையும் படைக்கிறார். தன்னால் படைக்கப்பட்ட பிரம்மாவால் படைக்கப்பட்ட, உடலில் வாழும் ஜீவர்களை பகவான் விஷ்ணு ரட்சித்து அருளுகிறார்.

“உமது சிவனும் ஒரு பெரிய தேவர்தான். ஆயினும் அவர் அழிக்கும் கடவுள். ஒன்றின் அழிவில்தான் மற்றொன்று பிறக்கிறது. அந்த அழிக்கும் தொழிலைச் செய்ய பரமாத்வான நாராயணனால் படைக்கப்பட்டவரே சிவன்.  கடைசியில் பரமாத்மாவிடம் சரணாகதி அடைந்து முக்தி பெறும் வரை ஜீவாத்மாக்கள் பிறந்து, இறந்து, மீண்டும் பிறந்து, முடிவற்ற பிறப்பு இறப்புச் சுழலில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கின்றன. எனவே, விஷ்ணுவே முக்தி தருபவர். அவர்தான் உயர்ந்த கடவுள். அவரை இருக்கும் இடத்திலிருந்து நீக்கக் கூடாது என்பதே என் வாதம்!” என்று தனது விசிஷ்டாத்துவைதக் கொள்கையை சுருக்கமாகப் புகல்கிறார் இராமானுஜர்.

“ஆச்சாரியாரே! இங்குதான் நான் தங்களை மறுத்துப் பேச வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகி இருக்கிறேன். படைப்பு அனைத்தும் ஓங்கார ஒலியிலிருந்து பிறக்கிறது. அந்த ஒலியைக் கிளப்புகிறது சிவனாரின் உடுக்கை. அப்படிப்பட்ட ஆக்கும் தொழிலை சத்யோத்ஜாதரான சிவன் பிரம்மன் மூலமாகச் செய்கிறார். அப்படிப் படைக்கப்பட்டவை அனைத்தும் செழித்து வளர்ந்து பாதுகாக்கப்பட தனது வலது கையை உயர்த்திக் காட்டுகிறார்.  அத்தொழிலைச் செய்ய அவர் வாமதேவராகப் பரிணமித்து விஷ்ணுவைக் கொண்டு செய்விக்கிறார். அவரது தலையில் இருக்கும் கங்கையும் ஜீவராசிக்கு இன்றியமையாத அமிர்தமான நீரைப் பொழிகிறது. படைக்கப்பட்ட எவையும் அழிந்து நிலை மாற வேண்டியதுதான். அப்படிப்பட்ட அழிவை அவரது கையிலிருக்கும் காலாக்கினி காட்டுகிறது.  அந்தத் தொழிலை அகோரர் என்ற உருத்திரராக இருந்து சிவனார் நடத்துகிறார். எல்லா உயிர்களும் தானே சிவம்தான் என்பதை உணர்ந்தால் அனைத்துமே ஸ்தம்பித்து நின்று போய்விடும் என்பதற்காக மாயைத்திரையினால் நமது கண்களை தத்புருஷரான மகேஸ்வரனாக உருக்கொண்டு மறைக்கிறார். கன்மம், ஆணவம், மாயை என்ற மும்மலங்களை நீக்கித் தன்னைச் சரணடைந்தால் தன்னுடன் ஒன்றி முக்தி அடையலாம் என்று தனது தூக்கிய காலைக் காட்டி ஈசன் சதாசிவமாக இருந்து முக்தி அளிக்கிறார். இந்த ஐந்து தொழில்களையும் செய்யும் சிவபெருமான் நமச்சிவாய என்ற ஐந்தெழுத்தில் பரிணமிக்கிறார்!  அவரது பொன்னம்பலத்திற்கு இடம் தருவது அவருடைய ஐந்து அம்சங்களில் ஒன்றாகிய கோவிந்தராஜருக்கே பெருமை அல்லவா?” என்று சைவ சித்தாந்தத்தை விளக்கிச் சிவ தத்துவத்தை நிலைநாட்ட முற்படுகிறார் சேக்கிழார்.

என்ன தோன்றியதோ தெரியவில்லை, திடுமென்று பொங்குகிறான் கூரத்தாழ்வான்.

“ஆச்சாரியாரே, நீங்கள் ஏன் இப்படி இவர்கள் முன்பு பணிவாகப் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்? சிவம் எப்படிப்பட்டது என்றுதானே தெரிய வேண்டும்?  சிவத்தை தராசின் ஒரு தட்டிலும், துரோணத்தை மறுதட்டிலும் வைத்தால், துரோணத்துக்குச் சமமாகாது சிவம், துரோணம் கீழே வரும், சிவம் மேலே நிற்கும் என்று சொல்லுங்கள்.”

துரோணம், சிவம் என்ற எடைக்கல்களின் மதிப்பைக் கொண்டு சிலேடையாக விதண்டாவாதம் செய்து வெடித்த அவன் அத்தோடு நிற்காமல், “ஏ… அறிவிலா மன்னா! கோவிந்தராஜரை சித்ரக்கூடத்தில் இருந்து அகற்றுவதும் கடலில் தூக்கிப்போடுவதும் ஒன்றுதான். அறிந்துகொள்!” என்று பெரிதாக இறைகிறான்.

இராமானுஜரும், சேக்கிழாரும் தங்கள் வாதத்தை நிறுத்திவிட்டு அதிர்ச்சியுடன் கூரத்தாழ்வானைப் பார்க்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல, சபையில் குழுமி இருக்கும் அனைவரும் திடுக்கிட்டுப் போகிறார்கள். அநபாயனின் மெய்க்காப்பாளர்களின் கைகள் தானாக உடைவாளைப் பற்றுகின்றன. கால்கள் ஓரடி முன்வைக்கின்றன.

சேக்கிழாரின் கண்கள் அவர்களைத் தடுத்து நிறுத்துகின்றன.

“கூரேசா! நீ என்ன செய்கிறாய்? பல்லாண்டு சொல்லும் வாயால் கோவிந்தராஜரை கடலில் தூக்கி எறி என்ற வார்த்தை வரலாமா? மன்னர் நாட்டிற்குத் தந்தை போன்றவர் என்று படித்துப் படித்துச் சொன்னேனே?” என்று துடிக்கிறார் இராமானுஜர்.

இதுவரை இராமானுஜர் மற்றும் சேக்கிழாரின் தத்துவ விவாதத்தை அமைதியாகக் கேட்டுக்கொண்டு வந்த அநபாயனுக்கு கூரத்தாழ்வானின் உணர்ச்சிப் பெருக்கான இடக்குப் பேச்சு அடக்க முடியாத கோபத்தை வரவழைக்கிறது. சேக்கிழாரின் சொல்லுக்காகவும், இராமானுஜரின் பேரில் உள்ள மரியாதைக்காகவும் தன் உணர்ச்சிகளை அணை போட்டு அடக்கிக்கொண்டிருந்த அநபாயனின் கோபப்புனல் வெடித்துச் சிதறுகிறது.

“சிவ நிந்தனை செய்யும் கயவா, என்ன சொன்னாய்! துரோணருக்கு சிவன் சமமாக மாட்டாரா?  கோவிந்தராஜரை அகற்றி, மீண்டும் தகுந்த முறைப்படி பிரதிஷ்டை செய்வதும், கடலில் போடுவதும் ஒன்றா? அப்படியானால் நான் தில்லையிலிருக்கும் கோவிந்தராஜரைப் பெயர்த்தெடுத்து கடலிலேயே தூக்கிப் போட்டுவிடுகிறேன்! கடலில் சயனம் செய்யும் திருமால் வங்கக்கடலில் மிதந்து சயனம் செய்வாரோ அல்லது முழுகுவாரோ, அது அவருடைய சக்தியைப் பொறுத்தது!”

அநபாயன் இப்படி உரத்தக் குரலில் கூரத்தாழ்வானை நோக்கி இரைந்ததும் அவன் அடங்கி விடுவான் என்ற அனைவரும் நினைத்தது தவறாகி விடுகிறது.

மன்னர்மன்னன் அநபாயன் என்பதைப் பற்றிச் சிறிதுகூட நினைத்துப் பார்க்காமல் அநபாயனைப் பார்த்து சபையே அதிரும் வண்ணம் திரும்பவும் கத்துகிறான் கூரத்தாழ்வான்.

“கோவிந்தராஜரைக் கடலில் எறிந்தால் உன் ரெண்டு கண்களும் அவிந்து போய்விடும்.  நரகத்தில் சித்ரவதைப்பட்டுத்தான் சாவாய். தூ! நீயும் ஒரு மன்னனா! உனக்கு ராஜ்ஜியம் ஒரு கேடா!” என்று காறி உமிழ்கிறான் கூரத்தாழ்வான்.

அனைவருக்கும் மூச்சு அப்படியே நின்று போகிறது. எப்படிப்பட்ட அவமதிப்பான காரியத்தைச் செய்கிறான் இந்த கூரத்தாழ்வான்! பேரரசர் முன்பு இப்படியா வெறித்தனமாக நடப்பது! இராமானுஜரும் அதிர்ந்து போகிறார்.

“கடையனே! அவியப்போவது எமது கண்களா அல்லது உன் கண்களா என்று பார்த்துவிடுவோம்! ஏகாம்பர பல்லவரே, சிவ நிந்தனை செய்த இந்தச் சிறுமதியாளனின் - எமது கண் அவிந்து போகும் என்று காறி உமிழ்ந்தவனின் கண்களைத் தோண்டி எடுத்து காக்கைகளுக்கும், கழுகுகளுக்கும் உணவாக எறிந்து விட ஆணை பிறப்பிக்கிறோம். இவன் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தைச் சொல்லிக் கதறும் வரை சித்ரவதை செய்யவும் உத்தரவிடுகின்றோம். உம், இழுத்துச் செல்லுங்கள்.”

இராமானுஜர் வாயடைத்துத் தவித்துப் போகிறார். இவ்வளது தூரம் வந்தது இதற்குத்தானா!  கூரேசன் மனத்தில் எந்தப் பேய் புகுந்தது?

அடுத்து யாரும் எதிர்பாராத ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. பெரிய நம்பி மகாபூரணர் எழுந்து வந்து அநபாயன் முன் நிற்கிறார்.

“நீ ஒரு மன்னனா! உலகத்திற்கே மகாப் பிரபுவான ஸ்ரீமன் மகாவிஷ்ணுவை வங்கக்கடலில் தூக்கிப் போடுவேன் என்ற துர்வார்த்தையைச் சொன்னது மட்டுமல்லாமல், அதைச் செய்தால் எப்படிப்பட்ட துஷ்பலன் கிடைக்கும் என்று சொல்லி உன்னை நல்வழிப்படுத்த முற்பட்ட விஷ்ணு பக்தனின் கண்களைப் பிடுங்கி அவனைச் சித்ரவதை செய்யவும் உத்தரவிடுகிறாயே!  நீ ரௌரவாதி நரகத்திற்குத்தான் போவாய்! யம படர்கள் உன் கண்களைத் துடிக்கத் துடிக்கப் பிடுங்கி எறிவார்கள். நீ கதறிக் கதறி வேதனைப்படும்படி உன் உடலைக் கிருமி போஜனத்திற்கு அனுப்புவார்கள். நான் இதுவரை தொழுது வரும் மகாவிஷ்ணு மேல் சத்தியம்.  இது கட்டாயம் நடக்கும்! விஷ்ணு பக்தர்களை சித்ரவதை செய்ய உத்தரவு பிறப்பித்த உன் ராஜ்ஜியம் அழியும்!” தள்ளாத அவரது உடல் நடுங்கி ஆடுகிறது.

அநபாயனின் கண்கள் சிவக்கின்றன. “ஏகாம்பர பல்லவரே! இந்த பித்துப் பிடித்த கிழவருக்கும் அதே தண்டனையை அளிக்கிறோம். இவரது கண்களையும் பிடுங்கி எறிய ஆவன செய்வீராக!”

அரசவையே அதிர்ந்து போகிறது. இராமானுஜரின் குருவான மகாபூரணருக்கு மாமன்னன் இப்படிப்பட்ட தண்டனையா விதிப்பான்!

மிகவும் முயற்சி செய்து, தனது ஆத்திரத்தையும், சினத்தையும், உடல் துடிப்பையும் கட்டுப்படுத்தி, தன் நிலைக்குக் கொண்டுவர சில மணித்துளிகள் ஆகின்றன அநபாயனுக்கு.  பிறகு மெல்ல இராமானுஜரின் பக்கம் திரும்பி கைகளைக் கூப்புகிறான்.

“ஆச்சாரியாரே! தமது சீடனுக்கும், ஆசானுக்கும் யாம் விதிக்கும் தண்டனை எமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை. நெறி வழுவா மன்னனை அவமதிப்பது மகேசனையே அவமதிப்பதற்கு நிகராகும் என்ற கூற்று தாம் அறியாததல்ல. எனவே, கொடுத்த தண்டனைகளை ஒரு மன்னனின் கடமையாக, விருப்பு வெறுப்பின்றிச் செய்தோம் என்று அறிவீராக. தன் மகனையே கன்றுக்காக தேரோட்டிக் கொன்ற மனுநீதிச் சோழன் பரம்பரையில் வந்த எமது தீர்ப்பைத் தாம் மதிப்பீராக! பொறுத்து அருள்வீராக!  கோவிந்தராஜப் பெருமாளின் திருவுருவத்தைப் பற்றிய எமது முடிவையும் அறிவிக்கின்றோம்.

“யாம் எடுத்த முடிவு எடுத்துதான்! அதில் எள்ளளவும் மாற்றமில்லை. அவரது திருவுருவை அகற்றி, சற்றுத் தள்ளி அவருக்கு சன்னிதி அமைத்து, அச்சன்னிதியில் அவரது திருவுருவம் மீண்டும் வைணவ ஆகம விதிப்படி நிறுவப்படும். வேறு எங்கும் இல்லாத அதிசயமாக ஓரிடத்தில் நின்றபடியே அம்பலவாணனையும், கோவிந்தராஜரையும் தரிசனம் செய்யும்படி சன்னிதி திருத்தி அமைக்கப்படும்.

“எமது இந்த முடிவினால் நாட்டில் சமயக் கலவரங்கள் தோன்றக்கூடும். வைணவ ஆச்சாரியாரும், தமிழ்நாட்டில் வைணவத்தை மறுமலர்ச்சி அடையச் செய்து வரும் தமது எதிரிலேயே, தம்மிடம் நன்கு பயின்ற தமது சீடரும், தமக்கு மகாமந்திரத்தை உபதேசித்த குருவுமே, எமக்கு எதிரில் முறையற்றவற்றைச் செய்து விட்டபோது, இதைக் கேள்வியுறும் கல்வி அறிவற்ற மற்றவர்கள் என்ன செய்வார்கள்? எமக்கு இழைக்கப்பட்ட அவமதிப்புக்கு பதிலாகத் தங்களை எமது ஆதரவாளர்கள் என்ன செய்வார்கள் என்பதை நினைத்தால் எமக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. தமது உயிருக்கும், உடலுக்கும் ஆபத்து வந்து சேரும் என்று யாம் ஊகிக்கிறோம். தமது பாதுகாப்பும், தங்களது நீண்ட வாழ்வும்தான் எமக்கு முக்கியம்.

“எனவே, எமக்குச் சற்றும் விருப்பமில்லாத முடிவை நாட்டு நலனுக்காகவும், தமது பாதுகாப்புக்காகவும், யாம் எடுக்கவேண்டிய நிலைமையும் ஏற்பட்டு விட்டிருக்கிறது.  ஆகையால், தம்மிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறோம். யாம் உயிருடன் இருக்கும் வரை தாம் எமது நாட்டைவிட்டு நீங்கி இருப்பதே தலை சிறந்ததாகும். தங்களை எமது வீரர்கள் தக்க பாதுகாப்புடன் கருநாட்டின் எல்லையில்கொண்டு விட்டுவிடுவார்கள். தமது மற்ற சீடர்களையும் தாம் அழைத்துச் செல்வீராக. யாம் முன்பு தருவதாகச் சொன்ன செல்வங்களையும் தம்முடன் யாம் அனுப்பி வைக்கிறோம். கருநாட்டில் தாம் தமது வைணவப் பணியைச் சிறப்பாகச் செய்து வருவீராக! இதை மன்னனின் ஆணையாக நினைக்காமல், வேண்டுகோளாக ஏற்றுக்கொள்வீராக! எமது முடிவுகளைப் பற்றி நாளை சரித்திரம் என்ன சொல்லும் என்று யாம் அறியோம். யாம் எடுக்கும் இந்த முடிவுகள் மனத்தூய்மையுடன் யாம் எடுத்ததாகும்!”

தனது மணிமகுடத்தைக் கழட்டி அரியணையில் வைத்துவிட்டு அநபாயன் இராமானுஜர் முன்பு மெல்ல மண்டியிடுகிறான். அவன் கண்களில் நீர் துளிர்க்கிறது.

தான் அமர்ந்திருந்த பீடத்திலிருந்து மெல்ல எழுகிறார் இராமானுஜர். குனிந்து அநபாயனின் தலையை அன்புடன் தடவுகிறார். அவர் கண்களிலும் நீர் பனிக்கிறது.

“அரசனாகிய நீ என்னை நாடு கடத்தவில்லை அநபாயா! அரங்கநாதன் திருவுள்ளம் இது.  அவன் கபடநாடக சூத்ரதாரி. நீ எனக்கு இந்தத் தமிழ்நாட்டில் செய்த சேவை போதும், கருநாட்டில் என் நாமத்தைப் பரப்பு என்று அவன்தான் உன் மூலமாகக் கட்டளை இட்டிருக்கிறான். நான் சந்தோஷமாகச் செல்கிறேன். ஆனால், நான் திரும்பி வருவேன்,14 அரங்கநாதனைக்குச் சேவை செய்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று சமயக் குரவர் என்ற ரீதியில் இல்லாமல் ஒரு தந்தையின் அன்புடன் அநபாயனிடம் சொல்கிறார் இராமானுஜர்.

-----------------------------------

[14. இரண்டாம் குலோத்துங்கனான அநபாயச் சோழன் இயற்கை எய்தியவுடன், அவனது மகன் இரண்டாம் இராஜராஜ சோழன் இராமானுஜாச்சாரியாரைச் சோழ நாட்டிற்குத் திரும்ப அழைத்தான் என்று வரலாறு கூறுகிறது.]

“ஆச்சாரியாரே, அதுதான் நடக்கப்போகிறது. தாங்கள் திரும்பி வருவதற்குள் நாட்டில் அமைதி நிலவத் தொடங்கிவிடும். அரங்கநாதனைத் தொழுதெழும் இரண்டு பாகவதர்கள் என்னைச் சபித்திருக்கிறார்கள். எனவே, நான் செல்லவேண்டிய நாள் குறிக்கப்பட்டு விட்டது.  எப்படிப்பட்ட சாவு எனக்கு வரும் என்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும் அதைத் தாங்கும் சக்தியைக் கொடுக்குமாறு சிவபெருமானை நான் வேண்டிக்கொள்கிறேன். சென்று வாருங்கள் ஆச்சாரியாரே! தாங்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேல் வாழ எல்லாம்வல்ல சிவபெருமானை இறைஞ்சுகிறேன்.”

அரசன் என்ற முறையில் இல்லாது, நாட்டு நலனையும், தனது நல்வாழ்வையும், திருமாலின் பாகவதர்களின் சாபத்திற்கு அஞ்சும் ஒரு சிவ பக்தனாகவும், அநபாயன் சொன்ன இந்தச் சொற்களைக் கேட்டு சபையில் அனைவரின் கண்களிலும் நீர் திரையிடுகிறது.

காவலர்கள் கூரத்தாழ்வானையும், பெரியநம்பியையும் இழுத்துச் செல்கிறார்கள். அவர்களை கண்ணீர் மல்கப் பார்த்த வண்ணம் இராமானுஜர் சபையை விட்டு வெளியேறுகிறார். அவரது கால்கள் இலேசாகத் தடுமாறுகின்றன. அவரைத் தாங்கிப் பிடித்தவாறு உடன் செல்கிறான் தாசரதி.

***

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com