மாறவர்மன்
மாறவர்மன்

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -நான்காம் பாகம்-அத்தியாயம் 6

ஒரு அரிசோனன்

மதுரை

குரோதன, ஆனி 10 - ஜூன் 9, 1205

நெஞ்சே நின்றுவிடும் போலிருக்கிறது மாறவர்மனுக்கு. அவன் பிறந்து வளர்ந்த மதுரை மயானக் கோலம் பூண்டிருக்கிறது. களப்பிரர் களைந்த கடுங்கோன் முதல், அவன் தமையன் குலசேகரன் வரை முடிசூடிக்கொண்ட அரசாணி மண்டபம் - பாண்டியர்களின் ஆட்சி உரிமையைப் பறைசாற்றிய பெரிய மாளிகை - பாண்டியர்களின் கலைத்திறமையை மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டிவந்த, வண்ணமயமான, கலைநுணுக்கங்கள் மிகுந்த சிற்பங்களையும், பாண்டிய மன்னர்களின் வரலாற்றை விளக்கும் வண்ண ஓவியங்களையும் தாங்கி நின்ற சுவர்களை உடைய அந்தக் கட்டுமானம் - பாண்டிய கட்டடக் கலையின் திறமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய மேதகு நினைவுச்சின்னம் - சுக்குநூறாக உடைக்கப்பட்டு, சிறுசிறு துண்டுகளாகச் சிதைக்கப்பட்டு, மண்ணோடு மண்ணாகிக் கிடக்கிறது.

அதன் அஸ்திவாரம் கூடத் தோண்டி எடுக்கப்பட்டு உடைக்கப்பட்டிருக்கிறது. அது இருந்த இடமே தெரியாமல் செய்ய வேண்டும், பாண்டியர்களின் பழம் பெருமை உருத்தெரியாமல் ஆக வேண்டும் என்ற அகங்காரத்துடன் - கலையழகு மிகுந்த கட்டடம் என்பதைக்கூட நினைவில் நிறுத்தாமல் - பாண்டியர்களை அவமானப்படுத்தி, சிறுமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் செய்யப்பட்ட இழிசெயலாகத்தான் மாறவர்மனுக்குத் தோன்றுகிறது.

கலைகளைப் போற்றி வளர்க்கும் சோழர்கள் இப்படிப்பட்ட இழிவான நிலைக்குப் போவார்கள், இழிசெயலைச் செய்வார்கள் என்று அவனால் நினைத்துக்கூடப் பார்க்க இயலவில்லை.

அதற்கும் மேல் அதிர்ச்சி தரும் செயலும் அங்கு நடந்துகொண்டிருக்கிறது. அதைப் பார்க்கப் பார்க்க, மதுரைக்கு இந்த இழிநிலையா என்று நினைக்க நினைக்க, அவனது நெஞ்சம் அங்கு அருகில் எரிந்து கருகிப்போன நிழல் மரங்களைப் போல மரத்துப்போக ஆரம்பிக்கிறது.

சோழ, கருநாட்டு வீரர்கள் நூற்றுக்கணக்கான கழுதைகளைக் கட்டியிழுத்து வருகிறார்கள். அவற்றைப் பிணைத்து சிறிய ஏர்க்கால்கள் பூட்டப்பட்டிருக்கின்றன. அரசாணி மண்டபம் இருந்த இடத்தைச் சுற்றிலும் அவற்றை வைத்து உழத் தொடங்குகின்றனர். அவர்கள் சாட்டை கொண்டு அடிக்கும் அடியில் கழுதைகள் பெரிதாகக் கத்துகின்றன. அவற்றின் கத்தல் மாறவர்மன் காதில் நாரசமாக ஒலிக்கின்றது.

கருநாட்டு வீரர்கள்
கருநாட்டு வீரர்கள்

அந்தக் கழுதைகளின் வால்களில் பாண்டியர்களின் மீனக் கொடிகள் கட்டப்பட்டிருக்கின்றன.  உழுதுகொண்டே செல்லும் கழுதைகளுக்குப் பின்னால் கூடைகளிலிருந்து ஏதோ விதையைத் தூவிக்கொண்டே செல்கின்றனர் பல வீரர்கள். அவர்களைத் தொடர்ந்து இன்னும் பல வீரர்கள் சாணம் கலந்த தண்ணீரை ஊற்றிக்கொண்டே செல்கின்றனர்.20

இவர்களுக்குப் பின்னால் பல திருநங்கைகள் மார்பிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு கையைத் தட்டியவாறே செல்கிறார்கள்.

“சோழ ராசாவை எதுத்தாங்களே! தோத்துப்போனாங்களே!! கழுதையாலே உழுகிறோமே, எருக்கு விதை விதைக்கிறோமே, அரசாணி மண்டபம் விழுந்த எடத்திலே வேதாளம் சேருமே, வெள்ளெருக்குப் பூக்குமே, பாம்பு குடி புகுமே, குட்டிச்சாத்தான் ஆடுமே!!!” என்று அபசுரத்தில் பாடிக்கொண்டும், தகாத முறைகளில் உடலை நெளித்து ஆடிக்கொண்டும் செல்கிறார்கள்.

--------------------------------------

[20. ‘மூன்றாம் குலோத்துங்கன் தனது இறுதிப் பாண்டியப் போரில் குலசேகர பாண்டினைத் தோற்கடித்ததோடு மட்டுமின்றி, பாடம் கற்பிக்க வேண்டும் என்று, அரசாணி மண்டபத்தைத் தகர்த்து, மதுரையின் பல பகுதிகளில் கழுதையைக் கொண்டு உழச் செய்து, எருக்கு விதைகளை விதைத்து அவமானப்படுத்தினான்.’ - குடுமியாமலை, சேரனூர் கல்வெட்டுகள்.  இந்தச் செயலே அவனைப் பழிவாங்கப் பிற்காலத்தில் பாண்டியரைப் பொங்கியெழச் செய்தது என்றும் வரலாறு வாயிலாக அறிந்துகொள்கிறோம்.]

இவர்களுக்குப் பின்னால் சில கழுதைகள் கொடும்பாவி சுமத்தப்பட்ட, பச்சை தென்னை மர ஓலைகளால் கட்டப்பட்ட பாடைகளை இழுத்து வருகின்றன. கொடும்பாவியின் மீது மீன் கொடி போர்த்தப்பட்டிருக்கிறது.

பத்து பாடைகள் இழுத்துச் செல்லப்படுகின்றன. மையத்தில் அடுக்கப்பட்டிருக்கும், கருவேல முட்களால் ஆன சிதையில் அவை வைக்கப்படுகின்றன. அந்தக் கொடும்பாவிகளுக்கு திருநங்கைகள் எரியூட்டுகின்றனர்.

இதைக் கண்ணுறும் மதுரை மக்கள் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிகிறது.  பெண்கள் மார்பிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு, கோவென்று கதறி அழுகிறார்கள்.  தரையில் புரண்டு, புழுதியை மேலே பூசிக்கொண்டு பரிதாபமான குரலில் ஓலமிடுகிறார்கள்.

“நம்ம நாட்டுக்கா இந்த நிலைமை?” என்று ஒப்பாரி வைக்கிறார்கள்.

மாறவர்மனின் இதயமே வெடித்துவிடும்போல இருக்கிறது.

பாண்டிநாட்டிற்குக் கொடும்பாவி கட்டி, அதை மீனக் கொடிகளால் போர்த்தி, அவற்றை கருவேல முட்களால் ஆன சிதைகளில் வைத்ததோடு மட்டுமின்றி, எருக்குச் செடிக் கிளைகளால் தீப்பந்தம் செய்து, திருநங்கைகள் மூலமாக எரியூட்டவதென்றால்…21 எப்படிப்பட்ட அவமானம், அநீதி, கொடுமை, பாண்டிநாட்டிற்கு இழைக்கப்படுகிறது!  இப்படிப்பட்ட அவமானத்தை, திருநங்கைகளைக்கொண்டு எரியிடுவதன் மூலம் ஏற்படுத்திய அவமானத்தைக் கண்டு, பாண்டியர்களின் வீர உணர்ச்சி அழிந்து போய்விடும் என்றுதானே இந்தச் சோழன் குலோத்துங்கன் முடிவுகட்டுகிறான்!

தனது நாளங்களில் ஓடும் இரத்தம் கொதித்து ஆவியாகி, கண்களிலிருந்தும், காதுகளிலிருந்தும், மூச்சுக் காற்றிலிருந்தும் வெளியேறுவதைப் போல உணர்கிறான் மாறவர்மன்.

இத்தகைய சிறுமையைச் செய்யும் சோழர்களையும், அவர்களுடன் வந்து இருக்கும் கருநாட்டாரையும் வெட்டிச் சாய்த்துவிட்டு, வீர மரணம் எய்த வேண்டும் என்று அவனது உள்ளம் துடிக்கிறது.

ஆவேசத்திற்கும், வெறிக்கும் இடம்கொடுத்து அழிவது சரியல்ல, இந்த அவமானத்திற்குத் தகுந்த பழி வாங்க வேண்டும், இந்த நாளை நினைத்து நினைத்து, ஏன் இப்படிச் செய்தோம்.  உறங்கிக் கிடந்த பாண்டியர்களை ஏன் தட்டி எழுப்பினோம் என்று குலோத்துங்கனைத் துடிக்கச் செய்ய வேண்டும் என்று அவனது அறிவு இடித்துரைக்கிறது.

“அப்படியே செய்வேன்! சோழர்கள் எங்களை வெற்றிகொண்டதைப் பற்றி நான் வருந்தவில்லை. வெற்றியும் தோல்வியும் திறமையைப் பொறுத்தது. என்னதான் எதிரிகளாக இருந்தாலும், சோழர்களின் போர் நெறிமுறைகள் இதுகாறும் போற்றத் தக்கவையாகத்தான் இருந்தன. ஆயினும், தோற்றவரை இப்படிப்பட அவமதிப்பிற்கா உள்ளாக்குவது? அதைப் பல தடவை இந்தக் குலோத்துங்கன் செய்திருக்கிறான்.

---------------------------------------

[21. இறுதிச் சடங்கின்போது எரியூட்டக் கடமைப்பட்டவன் மூத்த மகன்தான். அவன் இல்லாது போனாலும், மகன்களே இல்லாவிட்டாலும் மற்ற உறவினர்களில் ஒரு ஆண்தான் எரியிடுவான்.  பெண்கள் எரியூட்ட மாட்டார்கள். அப்படியிருக்கையில் திருநங்கைகள் மூலம் எரியூட்டச் செய்வது - அது கொடும்பாவிக்கு என்றாலும் - மிகவும் ஈடுகட்ட இயலாத அவமானத்திற்கு உள்ளாக்குவது என்றே கொள்ள வேண்டும்.]

“இனி நான் அவர்களை எதிர்க்கும் முறையில் நெறி இருக்காது; வெறிதான் இருக்கும்!  மதுரையின் இந்த அவமானத்திற்கு உறையூரும், தஞ்சையும், கங்கைகொண்ட சோழபுரமும் பதில் சொல்லத்தான் போகின்றன. பிணங்கள் எரியும் மயானத்தில் நின்று ஊழிக் கூத்தாடும் சொக்கநாதா! உன் மீது ஆணை! இங்கு எரியும் தீ என் உள்ளத்தில் அணையாமல் கொழுந்துவிட்டு எரியட்டும்! இரவும் பகலும், விழித்திருக்கும் நேரமும், உண்ணும் நேரமும், உறங்கும் நேரமும், இடைவிடாது எரியட்டும்! அன்பே சிவமாகப் பெயர் பெற்று இருந்தாலும், அழிக்கும் கடவுளான உருத்திரனே! உனது அழிக்கும் சக்தியையும், சினத்தையும், தீயவர்களைப் பார்வையாலேயே எரிக்கும் முக்கண்ணின் சீற்றத்தையும் எனக்குக் கொடுப்பாயாக! ஒருகாலும் உணர்ச்சிக்கு அடிமையாகாமல், அமைதியாகச் சிந்தித்துச் செயல்படும் திறன் எனக்குள் ஏற்பட வைப்பாயாக!” என்று மனம் உருகிச் சிவபெருமானை வேண்டிக் கொள்கிறான்.

இச்சமயத்தில் ஒரு பறைசாற்றி மேடையில் ஏறி நிற்கிறான். பெரிதாக முரசைத் தட்டுகிறான்.  அவன் முன்னர் அனைவரும் குழுமுகிறார்கள். “இதனால் எல்லோருக்கும் அறிவிப்பது என்னவென்றால்: கேளுமின்! கேளுமின்!! நன்றாகக் கேளுமின்!!! பரிதி குலத்தில் உதித்தவரும், வீரபாண்டியன் முடித்தலையைக் கொண்டவருமான குலோத்துங்க சோழரிடம் மதுரையை ஆண்டுவந்த சடையவர்ம குலசேகரபாண்டியர் தோற்று மதுரையை விட்டு ஓடிப் போய்விட்டார். பாண்டியர்களுக்குத் தக்க பாடம் கற்பிக்க வேண்டி, அவர்களது அரசாணி மண்டபம் தரைமட்டமாக்கப்பட்டிருக்கிறது.  பாண்டியர்கள் இனி தலைதூக்குவதைப் பற்றி நினைக்கவும் கூடாது என்று, அவர்களுக்குக் கொடும்பாவி கட்டி, கருவேல முட்களால் சிதையூட்டி, திருநங்கைகளால் எரியிடச் செய்திருக்கிறது. வீரமில்லாத பாண்டியர்களின் கொடும்பாவிக்குக்கூட எந்த ஆண்களும் எரியிட முன்வராததே இதற்குக் காரணம்.

“இன்றுடன் பாண்டியர்களின் கொட்டம் அடக்கப்பட்டுவிட்டது என்று சோழ மாமன்னர் அறிவிக்கிறார். இனிமேலாவது அவருக்குச் சினம் அளிக்காத வகையில் மற்ற பாண்டிய மன்னர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பிக்கிறார். அதை மீறினால் தரைமட்டமாக்கப்பட்ட அரசாணி மண்டபத்தைப் போல இன்னும் பல மண்டபங்களும், மாளிகைகளும் தரைமட்டமாக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

“இன்று இங்கு விதைக்கப்பட்ட எருக்க விதைகள் செடிகளாக வளரும். அதை அகற்ற முற்படுபவர்கள் சோழ அரசுத் துரோகிகளாகக் கருதப்பட்டு அதற்கான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவர்.

“மதுரையை வென்றதைச் சிறப்பிக்கும் வண்ணம் குலோத்துங்க சோழ மாமன்னர் வீரமுழுக்குச் செய்துகொண்டு திரிபுவன வீரர் என்ற பட்டத்தையும் சூட்டிக்கொள்ளுவார்.  அப்பொழுது அவரை எதிர்த்த மதுரை மன்னரிடமிருந்து கைப்பற்றிய செல்வங்கள் ஏழை எளியவர்களுக்குக் கொடையாக வழங்கப்படும். அனைவரும் மன்னரின் வீரமுழுக்கைக் கண்டுகளித்துக் கொடைகளைப் பெற்றுச்செல்லுமாறு ஆணையிடப்படுகிறார்கள்!” பறைசாற்றி, அறிவிப்பைப் பல தடவை திரும்பத் திரும்ப அறிவிக்கிறான்.

“இவர்கள் நன்றாக இருப்பார்களா? சாமிதான் கேட்கணும்!” என்று வசைமாறி பொழிந்த ஒருவன் மாறவர்மனைக் கண்டு, “அரசே! தாங்களா? நீங்கள் எப்படி இங்கே?” என்றதும், வாயில் விரலை வைத்து அமைதியாக இருக்கும்படி எச்சரிக்கிறான், சாதாரணக் குடிமகன் போல வேடம் அணிந்து அங்கு நிற்கும் மாறவர்மன்.

“இந்தக் கண்ராவியைப் பார்த்தீங்களா! நெஞ்சு குமுறுது மகா…” என்றவனின் வாயில் கையை வைத்து அழுத்துகிறான்.

“பகலில் பக்கம் பார்த்துப் பேசு என்பது தெரியுமல்லவா? இங்கு எதையும் பேச வேண்டாம்! நீ என்னைக் கண்டும் காணாதபடி சென்று விடு!” என்று தணிந்த குரலில் எச்சரிக்கிறான்.

பொங்கிவரும் அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டே அங்கிருந்து அகல்கிறான் அந்த மதுரைக் குடிமகன்.

தன்னருகில் இருக்கும் செந்தில்நாதனையும், அணித் தலைவர்கள் இருவரையும் தன்னுடன் வருமாறு குழுஉக்குறியில் சைகை செய்துவிட்டு, மீனாட்சி அம்மன் கோவிலை நோக்கி நடக்கிறான் மாறவர்மன். பண்டார வேடமணிந்த அவர்கள், ஒருவர் பின் ஒருவராக அவனைப் பின் தொடர்கிறார்கள்.

மதுரை

குரோதன, ஆனி 28 - ஜூன் 27, 1205

நேருக்கு நேராக (மூன்றாம்) குலோத்துங்க மன்னனைப் பார்க்கிறான் மாறவர்மன். அவனை விட இரண்டு அங்குல உயரம் அதிகமாகவே இருக்கிறான். எடுப்பான நாசி, ஐம்பத்தாறு வயதானாலும், சோழனுக்கு மிடுக்கு சற்றும் குறையாமலே இருக்கிறது. அவனுக்கு அருகில் அவனது மருமகனான போசள மன்னன் வீரவல்லாளன் அமர்ந்திருக்கிறான்.22

குலோத்துங்க மன்னன்
குலோத்துங்க மன்னன்

தனக்குப் பணிந்தால் அரசைத் திருப்பித் தருவேன் என்று குலோத்துங்கன் அறிவித்ததால், மதுரைக்குத் திரும்பி வந்த தனது தமையன் சடையவர்மன் குலசேகரனுக்கு துணையாக மாறவர்மன் வந்திருக்கிறான்.

மதுரைக்குத் திரும்பி வரப் பயந்த குலசேகரனை வலுக்கட்டாயமாக இழுத்து வந்தது மாறவர்மன்தான். திருப்பூவனத்தில் பரம்பரை மறைவிட மாளிகையில் அவர்களுக்குள் நடந்த வாதம் அவன் கண்முன் விரிகிறது...

...எவ்வளவு எடுத்துச் சொல்லியும் குலசேகரபாண்டின் மதுரைக்குத் திரும்புவதற்கு மறுத்துப் பேசினான்.

“மாறா! சோழர்களைத் தேவையில்லாமல் போருக்கு அழைத்தேன். மோசமான தோல்வியையும் அடைந்தேன். நடந்த போரில் நான் குலோத்துங்கனுடன் நேருக்கு நேர் மோதி, மதுரைக்காக எனது உயிரைக் கொடுத்திருக்க வேண்டும். அதை விடுத்துக் கோழையைப் போல மதுரையை விட்டு ஓடினேன். எனது தோல்வி, எனது ஓட்டம், நமது பரம்பரை அரசாணி மண்டபம் அழியக் காரணமாக அமைந்தது. இதற்குப் பிறகு நமது மக்கள் முன்னர் எப்படி என் முகத்தைக் காட்டி நிற்பேன்! என்னை எனது அவமானமே சிறிது சிறிதாகக் கொன்று தின்று விடட்டும். வடக்கிருந்து என் உயிரைக் கொடுத்து என் அவச்சொல்லைப் போக்கிக் கொள்கிறேன்.”

“அண்ணா, தாங்கள் எதிரியின் வலிமை தெரியாமல், திறை செலுத்த முடியாது என்று அறிவித்து விட்டு, அவசரப்பட்டு குலோத்துங்கனை வம்புக்கு இழுத்து விட்டீர்கள்.  நம்முடைய பலம் தெரியாமல், நீங்கள் எடுத்த முடிவு பற்றி மற்ற பாண்டிய மன்னர்களுடனும் தாங்கள் கலந்து ஆலோசிக்கவில்லை. எனவே, போசளப் படையின் துணையுடன் வந்து, உங்களைத் தாக்கி, மதுரையை அழித்து விட்டான். களப்பிரரைத் தாக்கியழித்த கடுங்கோன்பாண்டியர் கட்டிய அரசாணி மண்டபம் இப்பொழுது அழிந்ததுடன் மட்டுமல்லாமல், கழுதைகளால் உழப்பட்டு, எருக்கு விதைகள் விதைக்கப்பட்டு, கொடும்பாவியும் திருநங்கைகளால் எரியிடப்பட்டது. மதுரையின் மதில்களும் இடித்துத் தள்ளப்பட்டன. இது வேண்டுமா நமக்கு?  இதுவரை நாம் பட்ட அவமானங்களில் இதுதான் தலையாயதாக இருக்கிறது. இதற்குப் பழிவாங்க வேண்டும் என்றால் மதுரை மீண்டும் நம் வசம் வந்தால்தான் முடியும்!” என்று ஆணித்தரமாகப் பேசியதை குலசேகரனால் புரிந்துகொள்ள இயலவில்லை.

“மாறா! நீ என்ன பேசுகிறாய்? இவ்வளவு தூரம் நடந்த பிறகு நாம் எவ்வாறு மதுரைக்குத் திரும்பிச் செல்வது? குலோத்துங்கன் பிச்சை போடும் அரசை - அவன் காலில் விழுந்து வணங்கி வாங்கிக்கொள் என்று சொல்கிறாயா?” என்று கேட்டான் குலசேகரன்.

“இனிமேல் போவதற்கு என்ன அண்ணா இருக்கிறது! அடிமட்டத்திற்கு வந்துவிட்டோம்.  இனிமேல் மேலேதான் செல்ல முடியுமே தவிர, கீழே இறங்குவதற்கு எதுவும் இல்லை” என்று மாறவர்மனிடமிருந்து பதில் வந்தது.

“அதற்காக அவன் காலில் விழுந்து கெஞ்சச் சொல்கிறாயா மாறா?” குலசேகரன் குரலில் உஷ்ணம் ஏறியது.

--------------------------------------

[22. மூன்றாம் குலோத்துங்கனின் மகளை போசள (ஹொய்சள) மன்னன் இரண்டாம் வீரவல்லாளன் மணந்துகொண்டான். அதனால் சோழர்களுக்கு போசளர்களின் உதவி கிடைத்தது. அதேசமயம் கொங்கு நாடும், கருவூரும் (கரூர்), திருவண்ணாமலை உட்பட திருவரங்கத்திற்கு வடக்கே காவிரிக்கரை வரை தமிழ்நாடு போசளர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. தற்பொழுதைய சமயபுரம், கண்ணணூர் என்ற பெயரில் போசளர்களின் தென்தலைநகரமாக இருந்தது என்று வரலாறு கூறுகிறது.]

“நானாக இருந்தால் காலில் விழுந்து மதுரையைத் திரும்பப் பெற்றுக்கொள்வேன்” என்று சொன்ன மாறவர்மனை இடைமறித்துச் பேச விரும்பிய தன் தமையனைத் தடுத்து, “அண்ணா, நான் கோழையல்ல. மதுரைக்காக, பாண்டிநாட்டிற்காக எனது உயிரையும் கொடுக்கத் தயங்க மாட்டேன். குலோத்துங்கன் அரசாணி மண்டபத்தை இடித்ததாலும், கொடும்பாவி கொளுத்தியதாலும், பயந்துகொண்டு அவன் காலில் விழுவேன் என்று சொன்னதாக நினைக்காதீர்கள். வள்ளுவப் பிரான் என்ன சொல்லியிருக்கிறார்?

‘தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் அன்னார்

அழுத கண்ணீரும் அனைத்து.’

என்றுதானே! குலோத்துங்கனை நான் தொழுவேன் என்றாலும், இனிமேல் அவன் மீது படையெடுக்க நினைப்பதுகூடத் தவறு என்று அவன்முன் கண்ணீர் விட்டாலும், எனது மனதிற்குள் கொழுந்து விட்டு எரியும் பழிவாங்கும் நெருப்பு பெரிதாக எரிந்துகொண்டுதான் இருக்கும். சோழப் பேரரசை எப்படி அழிப்பது என்று ஒவ்வொரு விநாடியும் என் மனம் திட்டமிட்டுக்கொண்டுதான் இருக்கும்.”

மூச்சை இழுத்துவிட்ட மாறவர்மன், குரலைத் தாழ்த்திக்கொண்டு தொடர்ந்தான்.

“இப்பொழுது நமது பாண்டிநாட்டுக்குத் தேவை அமைதி. அந்த அமைதியை அவன் காலில் விழுவதன் மூலம்தான் பெறலாம் என்றால், அதைத்தான் செய்வேன். இன்று அவன் காலில் விழுந்து மதுரையைத் திரும்பப் பெற்று, நாளை அவனையும், அவனுடைய சோழ நகரங்களையும் அழிக்க வழி தேடுவேன். இது அவனுக்குப் பயந்து அல்ல, அவனது உடலில் வியாதிக் கிருமியாக ஒட்டிக்கொண்டு, புறையோடி அவனை அழிக்கத்தான். இதைச் செய்யாதுபோனால் மதுரை கையைவிட்டுப் போவது மட்டுமல்ல, பாண்டிநாடு தலைதூக்கவே இயலாது போய்விடும்” என்று தன் பக்கத்து வாதத்தை எடுத்து வைத்தான்.

“நீ அவன் காலில் விழுவேன் என்று சொன்னாலும், அங்கு குலோத்துங்கன் காலில் விழ வேண்டியது நான்தானே! அதை மறந்து பேசாதே மாறா!”

“இல்லை அண்ணா, இல்லை! நான் எதையும் மறக்கவில்லை, மறக்கவும் மாட்டேன். என்னைக் காலில் விழு என்று குலோத்துங்கன் கேட்கவில்லை. இருப்பினும், உங்களுடன் நானும் அவன் காலில் விழத்தான் போகிறேன்” என்று மாறவர்மன் சொன்னதும், குலசேகரனின் புருவம் வியப்பில் ஏறி இறங்கியது.

“ஆமாம். உங்களுக்கு ஒரு அவமானம் என்றால் அது எனக்கும்தான். தாங்கள் நமது எதிரியின் காலில் விழும் நேரம், நான் நெஞ்சை நிமிர்த்தி நிற்க இயலுமா! ஆகவே, தங்களுடன் நானும் அவன் காலில் விழுவேன். அந்தச் செயல் என் மனதில் வெறியை எரியாக வளர்க்கும். தங்கள் வலக்கையாக இருந்து, பாண்டிநாட்டை ஒருங்கிணைக்கும் வழியை, மதுரையை மீண்டும் சிறக்கச் செய்யும் வழியை, அதை நாமாகவே செய்யும் வழியை, நிறைவேற்றத் திட்டமிட்டு, செயல்படுத்தப் போகிறேன். இதற்குத் தங்கள் அனுமதி வேண்டும். மதுரையை நீங்கள் மீண்டும் திரும்பிப் பெறத்தான் வேண்டும்!” என்று ஆணித்தரமாக மாறவர்மன் சொன்னதை அரை மனதுடன் ஒப்புக்கொண்டான் குலசேகரன்.

இருவரும் குலோத்துங்கனுக்கு ஓலை அனுப்பி அவனது சம்மதத்தை வாங்கிக்கொண்டு, தங்களது மெய்காப்பாளர்களுடன் மதுரைக்குத் திரும்பி வந்தார்கள்.

எந்தவிதமான அரச அலங்காரமும் இல்லாமல், இடுப்பில் உடைவாள் இல்லாமல், தலையில் மணிமுடி இல்லாமல், குனிந்த தலையுடன் நிற்கும் சடையவர்மன் குலசேகரபாண்டினைக் கண்ட குலோத்துங்கனின் இதழ்களில் அலட்சியமான சிறிய புன்முறுவல் மலருகிறது. அதே சமயம் சிறிதும் கலக்கமின்றி, கண் இமைகளைக் கூடக் கொட்டாமல், தன் பார்வையை நேருக்கு நேர் சந்திக்கும் மாறவர்மனைக் கண்டதும் அவனது புருவங்கள் கேள்வியில் சிறிது மேலேறுகின்றன.

“சோழ மாமன்னரே! எனது தமையனார் சடையவர்மர் குலசேகரபாண்டியர் தங்களிடம் மதுரையை திரும்பிப் பெற வந்திருக்கிறார் என்பதை, அவருடைய இளைய உடன்பிறப்பான, மாறவர்ம பாண்டியனான நான் அறிவிக்கிறேன்” என்று, தனது ஏறிய புருவத்தின் நோக்கைப் புரிந்துகொண்டு, குரலில் கொஞ்சமும் பிசிறில்லாமல் பதில் சொன்ன மாறவர்மனின் துணிச்சலை குலோத்துங்கனால் மனதிற்குள் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

“ஏன் பாண்டிய மன்னர் வாயைத் திறந்து பேச மாட்டாரா?” குலோத்துங்கனின் குரலில் சற்று ஏளனம் கலந்திருக்கிறது.

“மாமன்னரே! மன்னர்கள் கொடையாக எதையும் பெறக்கூடாது என்பது தாங்கள் அறியாததல்ல. எனவே, அவரது சார்பில் நான் பேச வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.”

சிறிய இகழ்ச்சிப் புன்னகை குலோத்துங்கன் முகத்தில் மலர்கிறது.

“யாம் கொடுக்கப்போவது கொடைதானே! அதை அவர் ஏற்கத்தானே போகிறார்?”

“மாமன்னரே! நான் அரசனுமல்ல, இளவரசனுமல்ல. தங்களது கொடையை எதுவும் இல்லாத நான்தான் ஏற்கப்போகிறேன்! பிறகு தங்களது கொடையை பாண்டிய மன்னருக்கு எனது அன்பளிப்பாகச் சமர்ப்பிக்கப்போகிறேன்!”

மாறவர்மனின் இந்த விளக்கத்தை குலோத்துங்கன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

“என்னிடமிருந்து கொடை பெற விரும்பாத பாண்டிய மன்னர், உன்னிடமிருந்து எப்படி அன்பளிப்புப் பெற இயலும்?” குலோத்துங்கன் குரலில் கேலி தொனிக்கிறது.

“மாமன்னரே! நிலையில் தாழ்ந்தவர்கள், தம்மை விட உயர்ந்தவர்களுக்கு அன்பளிப்பைச் சமர்ப்பிக்கலாம் என்பது தாங்கள் அறியாததல்லவே! தாங்கள் பாண்டிய மன்னருக்கு அன்பளிப்பாக மதுரையை சமர்ப்பிக்கவும் கூடுமோ? ஆனால், நான் தங்களுக்குப் பணிந்து, மதுரையை கொடையாகப் பெற்று, அதைப் பாண்டிய மன்னருக்கு அன்பளிப்பாகச் சமர்ப்பிக்கலாம் அல்லவா!” மாறவர்மன் குரல் குழைகிறது.

“யாம் மதுரையை உமக்குக் கொடையாக அளித்தாலும், யாம் அறிவித்தபடி பாண்டிய மன்னர் எமது தாள்களில் பணிந்து ஆக வேண்டும். அவர் இதற்குச் சம்மதிக்கிறாரா?”

“அது பற்றித்தான் பாண்டிய மன்னர் ஓலை அனுப்பியிருந்தாரே! நானும் தங்கள் தாள்களில் பணிந்துதான் மதுரையைக் கொடையாக ஏற்கப்போகிறேன்!” மாறவர்மனின் குரலில் இருக்கும் பணிவு, குலோத்துங்கனை ஏமாற்றாவிட்டாலும், அது வெளிப்படையாகத் தெரியாததால் அவனால் அதைப்பற்றி எதுவும் பேச இயலவில்லை.

“ம்... நடக்கட்டும்!” என்று பதில் வருகிறது குலோத்துங்கனிடமிருந்து.

குலசேகரனைத் திரும்பிப் பார்க்கிறான் மாறவர்மன். இருவரின் கண்களும் ஆயிரமாயிரம் செய்திகளைப் பறிமாறிக்கொள்கின்றன. தனது மேலாடையை இடுப்பில் கட்டிக்கொண்டு அனைவரின் முன்னரும் குலோத்துங்கனின் காலில் விழுந்து வணங்குகிறான் மாறவர்மன். சிறிது தயக்கத்துடன் தன் தம்பி செய்வதைத் தானும் செய்கிறான் குலசேகரன். அவன் கண்களில் கண்ணீர் கசிகிறது.

அப்பொழுது எவரும் எதிர்பார்க்காத ஒரு செயலைச் செய்கிறான் குலோத்துங்கன். தனது வலது காலை மாறவர்மன் தலையிலும், இடது காலை குலசேகரன் தலையிலும் வைக்கிறான்.

“அனைவரின் முன்னாலும், குறிப்பாக உங்கள் பாண்டிநாட்டார் முன்னாலும் - சோழர்களின் வீரத்திற்கு முன்னர் உங்கள் பாய்ச்சல் பலிக்காது என்பதை உணர்ந்து, உங்களது தவறான செயல்களுக்காக மனம் வருந்தி, திருந்தி என் தாள்களில் நீவிர் பணிந்திருப்பது சீற்றம் கொண்ட எமது மனத்தைச் சிறிது குளிர்விக்கிறது. சோழர்களின் பெருந்தன்மையை இவ்வையகமே அறியும். எனவே, யாம் கைப்பற்றிய இந்த மதுரையையும், பாண்டிநாட்டின் பகுதியையும், மாறவர்மருக்குக் கொடையாக அளிக்கிறோம். இது யாம் வணங்கும் பெருவுடையார் மீது ஆணை!” என்று தனது கால்களை அகற்றி, கையைச் சொடுக்குகிறான்.

ஒரு தங்கத் தாம்பாளத்தில், மெத்தை மீது வைத்திருக்கும் ஒரு வாளையும், மகுடத்தையும் அவனிடம் கொண்டு வருகிறார் குலோத்துங்கனின் ஆன்மீக ஆசான் ஈஸ்வர சிவன்.

அவனை நிமிர்ந்து பார்க்கும் மாறவர்மனின் கண்களுக்குச் சக்தி இருந்தால் அக்கணமே குலோத்துங்கன் எரிந்து சாம்பலாகி இருப்பான். குலோத்துங்கன் தன் தலையை தனது ஆசான் ஈஸ்வர சிவன் பக்கம் திருப்பியதால் மாறவர்மனின் கண்களில் இருந்த வெறுப்பு கனலைக் காண இயலாது போனது.

“பாண்டியர்களே! எழுமின்!” என்றதும் இருவரும் எழுந்திருக்கிறார்கள்.

குலசேகரனின் கண்களிலிருந்து கண்ணீர் தாரையாக வழிந்திருப்பது தெரிகிறது.

வாளை எடுத்து மாறவர்மனிடம் நீட்டுகிறான் குலோத்துங்கன். மலர்ந்த முகத்துடன் அதைப் பெற்றுக்கொள்கிறான் மாறவர்மன். இருந்தபோதிலும், மகுடத்தை எடுத்து அவன் தலையில் சூட்ட வரும்போது, “மன்னர் மன்னரே, மகுடத்தையும் நான் கொடையாகவே பெற விரும்புகிறேன்” என்றபடி மகுடத்தைக் கையில் வாங்கி, தனது அண்ணன் குலசேகரின் தலையில் சூட்டுகிறான் அவன்.

“மன்னர் மன்னா! தாம் எனக்கு அளித்த வாளை என்றுமே என்னிடம் வைத்திருப்பேன்.  வீரனான எனக்குத் தாம் அளிக்கும் கொடையில் இதைவிடச் சிறந்தது எதுவும் இல்லை” என்று புன்னகைக்கிறான் மாறவர்மன்.

அவனது புன்னகைக்கு என்ன பொருள் என்று குலோத்துங்கனால் அனுமானிக்க இயலவில்லை.  ஆனால், அவனது புன்னகைக்குப் பின்னால் தன் மீது அளவில்லா வெறுப்பு இருக்கிறது என்று மட்டும் அவனால் புரிந்து கொள்ள முடிகிறது. வென்றவர் மீது தோற்றவருக்கு வெறுப்பு இருப்பது இயல்புதானே என்று அதைத் தன் மனதிலிருந்து நீக்கி விடுகிறான்.

“குலசேகரபாண்டிரே! உம்முடைய தவற்றை யாம் மன்னித்தோம். இனிமேலாவது திறையை ஒழுங்காகச் செலுத்தி வாரும். உமது உடன்பிறப்பின் அன்பளிப்பான இந்த மதுரையை நல்லபடியாகப் பாதுகாத்து வாரும். எமக்கு மதுரையின் மீது வெறுப்பு ஒன்றும் இல்லை. நீரும், யாமும் ஒரே சிவனாரைத்தான் தொழுகிறோம். இன்று நாம் சொக்கநாதர் கோவிலுக்குச் சென்று சிவனாரை வழிபட்டுவிட்டு வருவோம்” என்று சிரிக்கிறான் குலோத்துங்கன்.

குலசேகரன் தனது குரலில் இருக்கும் தடுமாற்றம் யாருக்கும் தெரியக்கூடாது என்று வாயை மூடிக்கொண்டு, ஒன்றும் பேசாமல் தலையசைக்கிறான். வாழ்வில் தாங்கவொண்ணாத அவமானத்தைச் சந்தித்துவிட்டோம், இனி என்ன நடந்தால் என்ன என்ற விரக்தி அவனைச் சூழ்ந்துகொள்கிறது. இனி மதுரை மக்களை எப்படித் தலைநிமிர்ந்து பார்ப்போம் என்ற வேதனை அவனைப் பிடித்துப் பிய்த்துத் தின்கிறது.

மாறவர்மனின் முகம் ஒரு இரும்புத்திரையாகத்தான் இருக்கிறது. அவனது வலது கை குலோத்துங்கன் அளித்த வாளை இறுகப் பற்றுகிறது.

“செல்லலாம், மன்னர் மன்னா! சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்கிறோம். தாமும் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். பூசைகள் துவங்குவதற்கு முன் ஆட்களை அனுப்புகிறோம்” என்று சிரித்த முகத்துடன் கூறுகிறான்.

குலசேகரனுக்கு தன் தம்பியின் சிரிப்புக்குப் பொருள் விளங்கவில்லை. அவன் குலோத்துங்கனுடன் தந்திரமாகப் பேசி, தன்னை உயர்த்தியது அவனுக்குப் பெருமையாக இருந்தாலும், அவன் பணிந்து பணிந்து பேசுவது அவனுக்கு ஒருமாதிரியாகத்தான் இருக்கிறது.  அது மாறவர்மனிடம் இதுவரை இல்லாத ஒரு புதிய சிறப்பியல்பாகத் தோன்றுகிறது.  அப்பொழுதே குலசேகரன் ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறான்.

திருவெண்ணெய்நல்லூர், சோழநாடு

பிரபவ, ஆவணி 12 - ஆகஸ்ட் 16, 1207

நைந்து போயிருக்கிறது அந்தக் கயிறு. வேறொரு கயிறு போட்டு ஓலைச் சுவடிகளைக் கட்டச் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறார் நீலகண்ட தீட்சிதர். தன் எதிரில் அமர்ந்திருக்கும் இளங்கவியைப் பார்க்கிறார்.

முறுக்கிய மீசை, இளந்தாடி, மேலே தூக்கிக் கட்டிய தலைமுடி, கண்களில் பளிச்சிட்ட ஒளி - இந்தக் கவி கலைமகளின் அருளைப் பெற்றவன் என்று தீட்சிதரை எண்ணச் செய்கிறது.

இளங்கவியின் புகழ் சோழ மன்னரின் அவையை எட்டியதும், தமிழுக்குப் புகழ் சேர்க்கும் பணியில் இந்த இளங்கவியையும் ஈடுபடுத்தலாம் என்று குலோத்துங்க சோழரின் அரச குருவான ஈஸ்வர சிவனுக்கு எடுத்துரைத்திருந்தார் தீட்சிதர்.

சேக்கிழாரின் தோழரான பாலசுப்பிரமணிய சிவாச்சாரியின் பெண் அம்பிகாவின்
வழித்தோன்றலான நீலகண்ட தீட்சிதருக்கு குலோத்துங்க சோழரின் அவையில் தனி மரியாதை உண்டு.

சக்ரவர்த்தி இராஜராஜசோழர் காலத்திலிருந்து அவரது பரம்பரை சோழ மன்னர்களால் ஆதரிக்கப்பட்டு வருகிறது என்பதாலும், தமிழையும், சைவத்தையும் பரப்புவதில் அவருக்குள்ள ஆர்வத்தையும் கண்ட ஈஸ்வர சிவன், தீட்சிதருடன் பல தடவை கலந்துரையாடி இருக்கிறார். குலோத்துங்கனின் அரசில் தமிழ்ச் காரியஸ்தர் என்ற பதவியையும் அவருக்கு அளித்திருக்கிறார்.

எனவே, இந்த இளங்கவியைப் பற்றி தீட்சிதர் எடுத்துரைத்தவுடன், அக்கவியைச் சோழரின் அரசவைக்கு அழைத்துவரும் பணியைக் கொடுத்தார் ஈஸ்வர சிவன்.

அரசின் தலைமைக்கவியான ஒட்டக்கூத்தரும் அதற்கு ஒப்புக்கொண்டது தீட்சிதரின் வேலையை எளிதாக்கி இருக்கிறது.

“இதுதான் நீர் எழுதிய கவிதையா?” என்று கேட்கிறார் தீட்சிதர்.

“ஆமாம் ஐயா. கல்விக் கடவுளாம் கலைமகள் மீது நான் தீட்டிய சிறு கவிதைத் தொகுப்பு இது.  இதில் பாயிரம் நீங்கலாக முப்பது செய்யுள்கள் எழுதி உள்ளேன். இதைப் பற்றித்தான் தாங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்” என்று பணிவுடன் பதிலளிக்கிறார் இளம்கவி.

“இதில் என்ன உத்தியைக் கையாண்டிருக்கிறீர்?”

“இதை அந்தாதி முறையில் எழுதி உள்ளேன். ஒரு செய்யுளின் முடிவில் உள்ள எழுத்தை வைத்து அடுத்த பாட்டை ஆரம்பித்து இருக்கிறேன். எனவே, இதற்கு சரஸ்வதி அந்தாதி என்ற பெயரைச் சூட்டி உள்ளேன்.”

“மிக்க நன்று. நான் இதைச் சற்று படித்துப் பார்க்கட்டுமா? உமக்கு வேறு ஏதாவது பணி இருக்கிறதா? இல்லை நான் படிக்கும் வரை அமர்ந்திருக்கிறீரா?”

“ஐயா, மாமன்னரின் அவையிலிருந்து என்னைத் தேடி வந்திருக்கிறீர்கள். தங்களுடன் இருப்பதைத் தவிர வேறு என்ன பணி இப்பொழுது எனக்குள்ளது? எனது எழுத்து சரியாக விளங்காவிட்டாலோ, ஏதாவது ஐயம் இருந்தாலோ கேளுங்கள், விளக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று இளம் கவியிடமிருந்து பதில் வருகிறது.

நைந்திருக்கும் கயிறு தீட்சிதர் அவிழ்க்கும்போது பிய்ந்து விடுகிறது. அது இருவருக்குமே ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது. ஆயினும், இளம் கவி எழுதியிருந்த சரஸ்வதி அந்தாதியைப் படிக்கப் படிக்க தீட்சிதரின் முகம் மலர்கிறது.

“இப்படிப்பட்ட அபாரமான உன் திறமையை நைந்த கயிறைப் போட்டுக் கட்டி வைத்திருந்தாயே அப்பா! இந்தக் கயிறு அறுந்ததும் நல்ல சகுனமாகத்தான் எனக்குப் படுகிறது. உன்னுடைய திறமையைக் கட்டிவைத்திருந்த பிணைப்பு அறுபட்டதாகத்தான் நான் கருதுகிறேன். இவ்வளவு நன்றாகத் தமிழில் கவிதை புனைந்திருக்கிறாயே, மேலே என்ன செய்வதாக உத்தேசம்?” என்று கேட்கிறார் நீலகண்ட தீட்சிதர்.

“புகழ் பெற்ற இராம காதையைத் தமிழில் வடிக்க வேண்டும் என்று எனக்கு ஆவல் இருக்கிறது.  அதற்காகவே ஆரியத்தையும் கற்றுள்ளேன். மூவர் இராம காதையை எழுதி இருப்பினும், வால்மீகி முனிவர் எழுதியதையே தமிழ்நாட்டுப் பண்பாட்டுக்கு ஏற்பத் தமிழில் இயற்றலாம் என்று முடிவெடுத்துள்ளேன்.”

இளம் கவியின் பதிலைக் கேட்டு தீட்சிதரின் முகம் மலர்கிறது.

“மிகவும் நல்ல நோக்கம்தான். உம்மைப் பற்றிச் சொல்லுமேன்!” என்கிறார் தீட்சிதர்.

“ஐயா, எனது தந்தை காளி கோவிலில் பூசை செய்யும் உவச்சர் மரபைச் சேர்ந்தவர். நான் திருவழுந்தூரில் (தேரழுந்தூர்) பிறந்தேன். சிறு வயதிலிருந்தே எனக்குக் கவி புனைவதில் ஆர்வம் ஏற்பட்டது. என் தந்தை ஆராதித்த காளியின் அருளால் திருவெண்ணெய்நல்லூரில் சிறந்து விளங்கிய வேளாளர்குலத் தலைவரின் ஆதரவு எனக்குக் கிட்டியது. எனது தமிழ் ஆர்வத்திற்கு நீர் பாய்ச்சி வளர்ப்பதோடு மட்டுமில்லாமல், இதுகாறும் ஆதரித்து வருகிறார். ஆரியம் கற்பதற்கும் ஆசான்களுக்கு ஏற்பாடு செய்து உதவியிருக்கிறார். இன்றும், என்றும் அவருக்குக் கடமைப்பட்டு உள்ளேன். அவர் இல்லையென்றால் நான் இல்லை, எனது கவிதைகளும் இல்லை” என்று நன்றிப் பெருக்குடன் கூறுகிறார் இளம் கவி.

“அப்படியா? அந்த வேளாளர் குலத் தலைவரின் பெயர் என்னவென்று சொன்னீர்?”

“சடையப்பர். அவரைச் சடையப்ப வள்ளல் என்றே இங்குள்ளவர் அழைக்கிறார்கள்.”

“எம்பெருமான் சிவபெருமானின் பெயர் கொண்டவர், அவரைப் போலவே வாரித்தரும் வள்ளலாக விளங்குவதில் அதிசயம் என்ன? மிக்க மகிழ்ச்சி!” என்ற தீட்சிதர், “மிகவும் நன்று!  உமது புகழைக் கேள்விப்பட்டுக் குலோத்துங்க சோழ மன்னரே, உம்மை அவரது அரசவைக்கு அழைத்து வர எம்மை அனுப்பியிருக்கிறார். எனவே, நீர் என்னுடன் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு பயணிக்க ஏற்பாடு செய்துகொள்ளும்” என்கிறார்.

“என்னை ஆதரித்து வரும் சடையப்பரின் அனுமதியைப் பெற்றுத் தங்களுடன் புறப்படுகிறேன்” என்கிறார் இளம் கவி.

“நீர் இராம காதையைத் தமிழில் எழுத விரும்புகிறேன் என்றும், வால்மீகி முனிவரின் ஆரிய இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்போவதாகவும் சொன்னீரே, அவரின் மூலக்கவிதை உம்மிடம் உள்ளதா? அதை முழுவதும் படித்து விட்டீரா?” இளம் கவியிடம் கேட்கிறார்.

“ஒருவழியாக முனிவரின் கவிதைச் சுவடிகளைச் சேகரித்துவிட்டேன். அவற்றைப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். மொத்தம் இருபத்திநான்காயிரம் செய்யுள்கள் அதில் உள்ளன. அந்த எண்ணிக்கையைப் பாதியாக்கிப் பன்னிரண்டாயிரம் செய்யுள்களில் விருத்தப் பாக்களாகச் சமைக்கலாம் என்றும் முடிவெடுத்துள்ளேன்” என்று பதில் அளிக்கிறார் இளம்கவி.

“உமது தமிழ் இராம காதையை எங்கு அரங்கேற்றம் செய்யலாம் என்று நினைத்துப் பார்த்திருக்கிறீரா?”

“இராமனை திருமாலின் திருஅவதாரமாகவே எண்ணுகிறேன். எனவே, திருமாலின் திவ்விய தேசங்களில் முதன்மையான திருவரங்கத்தில் அரங்கேற்றக் கலைமகளும், திருமாலும் அருள் புரியவேண்டும் என்பது எனது அவா” என்று தனது விருப்பத்தைத் தெரிவிக்கிறார் இளம்கவி - கம்பர்.23

---------------------------------------------

[23. கம்பர் வாழ்ந்த காலத்தை இருவிதமாகச் சொல்லுகிறார்கள். ஒருசிலர் அவர் பொது ஆண்டு 895ல் பிறந்தவர் என்றும், மற்றும் பலர் அவர் மூன்றாம் குலோத்துங்க காலத்தவர், பொது ஆண்டு 1180ல் பிறந்து, 1250ல் மறைந்தார் என்றும் கூறுகிறார்கள். வேறு சிலர், கம்பர்தான் முதலில் இராமனைத் திருமாலின் அவதாரம் என்று வர்ணித்தவர், வால்மீகி அப்படி எழுதவில்லை என்றும் சொல்வர். இந்தக் கதைக்கு அவர் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தவர் என்று எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.]

***

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com