பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -நான்காம் பாகம்-அத்தியாயம் 7

நிலமங்கை
நிலமங்கை

ஒரு அரிசோனன்

சேந்தமங்கலம்

ஆங்கீரஸ, ஆவணி 12 - ஆகஸ்ட் 15, 1212

நொச்சிப் பூக்களின் மணம் மூக்கைத் துளைக்கிறது. அழகியசீயன் என்றும், மணவாளப்பெருமாள் என்றும் அழைக்கப்படும் கோப்பெருஞ்சிங்கன், கோட்டை மதில்களின் கட்டுமான வேலையைக் கண்ணுற்றுக்கொண்டு இருக்கிறான். அவனது மனம் குலோத்துங்க சோழன் செய்த அவமானத்தை எண்ணிக் குமுறிக்கொண்டு இருக்கிறது.

பரம்பரை பரம்பரையாக சோழ மன்னர்களுக்கு தோள்கொடுத்துப் போர்புரிந்து உதவி செய்து வந்தவர்கள் காடவர்கள். பாண்டியர்களுடன் குலோத்துங்கன் நடத்திய போர்களில் எல்லாம், அவனது முப்பாட்டனார் காடவராயரின் தங்கையான திருப்பாவையின் பேரர் பல்லவராயர், தலைமை ஏற்று வெற்றிபெற்றுத் தந்திருக்கிறார். அழகியசீயன் குலோத்துங்கனின் தங்கை மகளை முதல் மனைவியாக மணந்துகொண்டும் இருக்கிறான். அப்படி இருந்தும், பல்லவராயரது பேத்தியை இரண்டாம் மனைவியாக மணந்துகொண்டதற்குத்தான் குலோத்துங்கன் எவ்வளவு சினம் கொண்டான்!

அவனது அனுமதியில்லாமல் இரண்டாவது மணம் முடித்தது தவறாம்! ஒரு ஆண் மகனைத் தனது தங்கை மகள் பெற்றெடுக்கும் வரை அவன் யாரையும் மணந்துகொள்ளக்கூடாதாம்!  இது என்ன விசித்திரமான நினைப்பு! எப்படி இருந்தாலும் பட்டத்துராணியின் மகனைத்தானே தனக்கு வாரிசாக நியமிக்கப்போகிறான்!

அதனால், கடந்த மதுரைப் போருக்குத் தன்னை அழைக்காமல், போசள மன்னனின் படைத்தலைவர்களை அல்லவா குலோத்துங்கன் உடன் அழைத்துச் சென்றிருந்தான்!  மதுரையிலிருந்து வந்த செய்திகள்கூட குலோத்துங்கன் ஒரு சோழப் பேரரசன் மாதிரி நடந்துகொள்ளவில்லை. பாண்டியர்களை மிகவும் சிறுமையாக நடத்திவிட்டான் என்றுதானே தெரிவித்தன!

அப்பொழுதிலிருந்தே ஒரு முடிவுக்கு வந்திருக்கிறான் கோப்பெருஞ்சிங்கன்.  காடவர்களுக்கென்று ஒரு தனி அரசு அமைத்துக்கொள்ள வேண்டும், அதற்காகத் தனது தலைநகரத்தைப் பலப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று தீர்மானித்து, கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள சேந்தமங்கலத்தின் கோட்டை கொத்தளங்களைப் பலப்படுத்த முனைந்திருக்கிறான்.

குலோத்துங்கனுக்கு வலது கையாக விளங்கிய பல்லவராயரே தற்பொழுது மாமன்னன் மீது அதிருப்தி அடைந்திருக்கிறார் என்றும் அவனுக்குத் தெரிகிறது.

பரம்பரை பரம்பரையாக அவர்கள் பாதுகாப்பில் இருந்த காஞ்சியை, அவரது முதுமையையும், ஆண் வாரிசு இன்மையையும் காரணமாகக் காட்டி, தெலுங்குச் சோடர்களிடம் கொடுத்துவிட்டதால், அவர் மிகவும் வருத்தம் அடைந்திருக்கிறார் என்றும் அறிவான்.

அவரது பேத்தியை மணந்துகொண்டதால், காஞ்சியின் பொறுப்பு தனக்குத் தரப்படும் என்றும் நம்பினான். அந்த நம்பிக்கை பொடிப்பொடியானதுதான் மிச்சம்.

தமிழ் பேசப்படும் காஞ்சி, சிம்மபுரிச் (நெல்லூர்) தெலுங்குச் சோடர்களின் ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டது. தமிழைப் பரப்ப வேங்கைநாடு சென்ற நிலவுமொழியின் பரம்பரையில் வந்த அவனுக்கு கசப்பான நச்சுக் கஷாயமாக இருக்கிறது.

ஆனால் தெலுங்குச் சோடர்களோ, சம்புவராயர்களின் தலைவனும், குலோத்துங்கனின் தூரத்து உறவினனுமான எதிரிலிச் சோழ சம்புவராயனிடம் காஞ்சியை ஒப்படைத்து திறை பெற்றுக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்.

எனவே, அவர்களின் ஆட்சி மேலும் தெற்கை நோக்கி நகர்ந்து வராமல் இருக்க, நடுத் தமிழ்நாடுக்கு அரணாக விளங்க, சேந்தமங்கலத்தைத் தலைநகராக்கிக் கொண்டு, அதைப் பலப்படுத்தத் தொடங்கியுள்ளான் அழகியசீயன்.

நினைவுக் கடலில் நீந்திக்கொண்டு இருந்த அவனைக் காலடிச் சத்தம் நிகழ்காலத்திற்கு இழுக்கவே, சத்தம் வந்த திசையை நோக்கித் திரும்புகிறான்.

அவனது இரண்டாம் மனைவி நிலமங்கை தனது தோழியருடன் வந்துகொண்டிருக்கிறாள். அவளைக் கண்டதும் அழகியசீயனின் முகம் மலர்கிறது.

அழகிய தமிழில் கவிதைகளுக்குப் பொருள் விளக்கி, அவனுடன் விவாதிக்க அவள் ஒருவளால்தானே இயலும்! அவள் பரிந்துரைத்தபடி தமிழ்க் கவிஞர்களைச் சேந்தமங்கலத்திற்கு அழைத்து ஆதரித்து வருகிறான். அவர்களுடன் இருவரும் அளவளாவுவதுதான் மனதிற்கு எவ்வளவு நிறைவாக இருக்கிறது! மேற்கில் மறையும் கதிரவனின் ஒளி அவளது முகத்திற்குத் தங்க முலாம் பூசுகிறது. நடந்துவரும் தங்கப் பதுமையாக ஒளிருகிறாள் நிலமங்கை. அவனருகில் அவள் வந்ததும், அவளது தோழியர்கள் இருவரையும் விட்டுச் சற்று விலகி நிற்கிறார்கள்.

“தங்கப் பதுமையே என்னைத் தேடி வருகிறதோ என்று ஒருகணம் பிரமித்து நின்றுவிட்டேன்.  என் கண்ணே பட்டுவிடும் போல இருக்கிறது!” என்று புன்முறுவலுடன் கூறுகிறான்.

நிலமங்கை
நிலமங்கை

“போதுமே! உங்கள் கண் என் மேல் எப்பொழுதும் பட்டுக்கொண்டிருக்க நான் கொடுத்தல்லவா வைத்திருக்க வேண்டும்! தங்கள் கண் எப்பொழுதும் என் மீது நிலைத்திருப்பது எனது முன்னோர்கள் செய்த தவம் என்றுதான் நினைக்கிறேன்!” என்று குழைகிறாள் நிலமங்கை.

அவள் கன்னத்தை மெல்ல நிமிண்டுகிறான் அழகியசீயன்.

“மங்கை, உன்னைப்போல ஒருத்தியை என் துணைவியாகப் பெற நானும் மிகவும் கொடுத்து வைத்திருக்கிறேன். காஞ்சியின் நாயகி நீ! நகரங்களில் சிறந்ததான அதை விட்டுவிட்டு இந்தக் கோட்டைக்கு என்னுடன் குடிவந்திருக்கிறாயே! அதை நான் மறக்க முடியுமா!”

“அப்படிச் சொல்லாதீர்கள். இராமன் இருக்கும் இடம் அயோத்தி என்று சீதை இராம காதையில் கூறுவார்களாம். திருமாலின் காலடியில் இருக்கும் நிலமங்கை போல, அழகியசீயரான உங்கள் காலடியில் விழுந்து கிடக்க வேண்டும் என்பதுதான் இந்த நிலமங்கையின் விருப்பம். அக்காவை உங்கள் இதயத்தில் நீங்கள் ஏற்றுக்கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் காலடி எனக்குப் போதும்.”

அவளது உள்ளத்திலிருந்து வந்த இந்தச் சொற்கள் அழகியசீயனின் உள்ளத்தை உருக்குகின்றன. அப்படியே அவளைச் சேர்த்து அணைத்துக்கொள்கிறான்.

அவனது பிடியிலிருந்து நழுவிய நிலமங்கை, “தோழியர்கள் பார்க்கிறார்கள்! மற்றும் கோட்டைக் கட்டுமான ஊழியர்களும் நம்மைக் கவனிப்பார்கள். அரசிக்குள்ள மதிப்பை நான் இழக்கலாமா?” என்று சிரிக்கிறாள்.

“தலைவாழை இலையில் விருந்து பரிமாறி, சாப்பிடாதே என்று தடுத்து, அதற்குக் காரணம் பல கற்பிக்கிறாயே!” என்று தன் பிடியைத் தளர்த்திய அழகியசீயன், “நீ என்னைத் தேடி இவ்வளவு தூரம் வந்திருப்பது, கோட்டைக் கட்டுமானத்தைப் பார்க்க அல்ல என்று எனக்குத் தெரியாதா! என்ன காரணம்?” என்று கேட்கிறான்.

“பாட்டனார் பல்லவராயர் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார். பயணத்தினால் களைத்திருந்த அவரை அடிவார மாளிகையில் இருத்தி இளைப்பாறச் சொல்லிவிட்டு, உங்களை அழைத்துச் செல்ல வந்தேன்.”

“தலையாய காரணம் இல்லாமல் காஞ்சியையும், ஏகாம்பரநாதரையும் விட்டு நகர மாட்டாரே!  அதுமட்டுமல்ல, வீரர்களை அனுப்பி என்னை அழைக்காமல், அவரை அடிவார மாளிகையில் இருக்கச் செய்துவிட்டு, நீயே நேரில் வந்திருப்பதற்கும் உள்ள காரணத்தைச் சொல்.”

அவன் கேட்ட கேள்விக்கு நிலமங்கை சொன்ன பதில் அவன் முகத்தைப் பாறையாக இறுக வைக்கிறது. பதில் ஏதும் கூறாமல் விரைவாக நடக்கிறான்; அவன் வேகத்திற்கு ஈடு கொடுக்க இயலாத நிலமங்கை, தனது தோழியருடன் சேர்ந்து அவனைப் பின்தொடர்ந்து செல்கிறாள்.

மதுரை அரண்மனை

ஆங்கீரஸ, ஆவணி 12 - ஆகஸ்ட் 15, 1212

“நோக்கம் நேர்மையாக இருக்கும்பொழுது நாம் எதற்கு, ஏன் அச்சப்பட வேண்டும்? கடந்த இருநூறு ஆண்டுகளாக நாம் மாற்றார்களால் ஆளப்பட்டு வருகிறோம். சோழர்களுக்கு அடங்கிச் சிற்றரசர்களாக இருந்து வருகிறோம். இராஜேந்திரசோழன் தனது மைந்தர்களையும், பேரர்களையும் சோழ பாண்டியர்களாக மதுரையை ஆளச்செய்தான். பிறகு தெலுங்கர் வழிவந்த குலோத்துங்கன், தன்னைத் தமிழன் என்று சொல்லிக்கொண்டு தமிழ்நாட்டை ஆண்டான்.

“பாண்டிநாட்டைத் துண்டாடி, நம்மையும் பிரித்து வைத்தான். பாண்டிநாடு வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு, நடு என்று ஐந்து பிரிவாகப் பிரிக்கப்பட்டது.24 ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன், களப்பிளரைப் புறம்கண்ட கடுங்கோன் - இவர்கள் ஒரு குடைக்குக் கீழ் ஆண்ட பாண்டிநாடு இப்பொழுது ஐந்து துண்டங்களாக, ஒருவரைக் கவிழ்க்க இன்னொருவர் மாற்றாரைத் துணைக்கு அழைக்கும் மன்னர்கள் - இல்லை, இல்லை - சிற்றரசர்கள் கோலோச்சும் குறுநில நாடுகளாகத் துண்டாடப்பட்டு நிற்கிறது” பொரிந்து தள்ளுகிறான் மாறவர்மன்.

மாறவர்மன்
மாறவர்மன்

“எதிரிகளுக்கு இரையாக்க முனையும் இந்த இழிநிலைக்கு ஏன் நம்மை நாமே தள்ளிக் கொண்டிருக்கிறோம்? என்று நாம் இணைவோம்? என்று நம் தோள்களில் ஏற்றப்பட்டிருக்கும் அடிமை நுகத்தை உடைத்து எறிவோம்? வீர அன்னையின் மார்பில் சுரக்கும் பாலை உண்டவர்களா நாம்? இல்லை, இல்லை. நாம் நடந்து கொள்வதைப் பார்த்தால் வெளிநாட்டிலிருந்து வந்த அடிமைப்பெண்களின் பாலை உண்டு வளர்ந்தவர்கள் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.  வெட்கம். வெட்கம்! இப்படி அடிமை வாழ்வு வாழ்வதற்குப் பதிலாக, நமது மீசையை மழித்து விட்டு, மார்புக்கச்சை அணிந்து, பணிப்பெண்கள் ஆகிவிடலாம்.  மீசையுள்ள உண்மையான பாண்டிய வீரன் - அவன் அரச பரம்பரையில் பிறக்காமலிருந்தால் கூட பரவாயில்லை - இப்பாண்டிநாட்டை ஆளட்டும். அவனாவது இந்த அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடுவான்!”

குலசேகரபாண்டியனுக்கே மாறவர்மனின் பேச்சு ஒரு மாதிரியாக இருக்கிறது. முக்கியமான பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று பாண்டிய மன்னர்கள் அனைவரையும் அழைத்து விட்டு, அவர்களை ‘மார்புக்கச்சை அணிந்து கொள்ளுங்கள்’ என்று சொல்வது என்ன மாதிரி பின்விளைவை ஏற்படுத்துமோ என்று சிந்திக்கிறான்.

எனவே, அங்கு வந்திருக்கும் தனது பங்காளிகளான பாண்டிய மன்னர்களின் முகத்தில் ஓடும் உணர்ச்சிகளை அளவெடுக்க முயல்கிறான்.

நெல்லையைச் சுற்றியிருக்கும் தென்பாண்டிநாட்டை ஆண்டுவரும் பாண்டிய மன்னன் சினத்துடன் சீறுகிறான்.

“மாறா, அனைவருக்கும் மூத்தவரும், மதுரையை ஆளுபவருமான குலசேகரரின் அழைப்புக்கு மதிப்புக் கொடுத்து இங்கு வந்திருக்கிறோம். வந்தவர்களை நீ இப்படி அவமானப்படுத்துவதை என்னால் பொறுத்துக்கொள்ள இயலாது!” என்று எழுந்திருந்து தனது உடைவாளை உறுவுகிறான்.

மாறவர்மனுடன் போரிட்டு வெல்ல இயலாது என்று தெரிந்தும் நெல்லைப் பாண்டிய மன்னன் உடைவாளை உறுவுவது மற்றவர்களுக்கு துணிச்சலைத் தருகிறது. உடனே அவர்களும் எழுந்து உடைவாளை உறுவுகிறார்கள்.

“மாறா, நீ எல்லை மீறிவிட்டாய்! நீ மன்னிப்புக் கேளாவிட்டால் எங்களது வாள்களுக்குப் பதில் சொல்ல நேரிடும்! அப்பொழுது தெரியும், யார் மார்புக்கச்சையை அணிய வேண்டும் என்று!”  அனைவரின் குரல்களும் ஒன்றாக ஒலிக்கின்றன.

----------------------------------

[24. பாண்டியர் ஒன்றுசேர்ந்து சோழர்களுக்கு எதிராகப் போரிடுவதைத் தவிர்க்க, முதலாம் குலோத்துங்கன் பாண்டிநாட்டைப் பிரித்துத் திறை செலுத்தும் மன்னர்களாக ஆண்டுவரப் பணித்தான் - வரலாறு.]

கடகடவென்று சிரிக்கிறான் மாறவர்மன். மெதுவாகத் தன் வாளை உறையிலிருந்து எடுத்துக் கீழே போட்டுவிட்டு, அவர்களின் முன்னால் மண்டியிடுகிறான்.

“உங்களின் வீரத்தை மெச்சுகிறேன். இந்த வீரத்தைத்தான் பாண்டியர்களான உங்களிடம் எதிர்பார்த்தேன். உங்களை அவமதித்த உடனேயே, உங்களின் இரத்தமான என்னையே எதிர்த்து ஒன்று சேர்ந்து வாளேந்தினீர்களே, அந்த ஒற்றுமை சோழர்களை எதிர்க்கும்பொழுது ஏன் இல்லாது போயிற்று? மார்புக்கச்சை அணிந்துகொள்ளுங்கள் என்று நான் சொன்னபோது வந்த சினம், மதுரையைக் கழுதைகளால் உழுதபோது எங்கே போயிற்று? மீசையை மழியுங்கள் என்று நான் விட்ட அறைகூவலால் ஏற்பட்ட ஆத்திரம், பாண்டியருக்குக் கொடும்பாவி செய்து, திருநங்கைகளால் எரியூட்டியபோது வரவில்லையே! நமது அரசாணி மண்டபத்தைத் தகர்த்தபோது ஒளிந்துகொண்டுவிட்டதே!

“உங்கள் அனைவரையும் வாட்போரில் தடுத்து நிறுத்த என்னால் இயலும் என்று தெரிந்தும், உங்களை அவமதித்ததற்காகப் பொங்கி எழுந்தீர்களே, இப்படிப்பட்ட வீர உணர்ச்சியை இதுவரை எங்கே மறைத்து வைத்தீர்கள்? உங்கள் உறவினனான என்னையே உங்கள் வாளுக்கு இரையாக்க எழுந்த வீரம் மதுரை எரியிடப்பட்டபோது எங்கு போயிற்று? இருப்பினும், இந்த ஒற்றுமையை நீங்கள் தொடர்ந்து காட்டுவதாக எனக்கு நீங்கள் வாக்குறுதி கொடுத்தால், உங்கள் வாள்களுக்கு களபலி ஆவதற்கும் ஆயத்தமாக இருக்கிறேன். நடத்துங்கள் உங்கள் தாக்குதலை. சீவி எறியுங்கள் என் தலையை! துண்டாடுங்கள் எனது தேகத்தை!! சிந்தப் போகும் எனது குருதி உங்களை ஒருங்கிணைக்கட்டும்!! பாண்டிநாட்டின் விடுதலைக்கு அது ஆகுதி ஆகட்டும்!!!” அவனது கண்களில் சிறிதுகூட அச்சம் இல்லை, மாறாகப் பெருமிதம்தான் இருக்கிறது.

ஒருவர்பின் ஒருவராகத் தங்கள் வாள்களை உறையில் இட்டுவிட்டு இருக்கையில் அமர்கின்றனர்.

நெல்லைப் பாண்டியன் அவனருகில் வருகிறான். அவனது குரலில் இப்பொழுது பரிவும், கனிவும் கொட்டுகிறது.

“மாறா, எங்களுக்குள் உறங்கிக் கிடக்கும் உணர்ச்சிகளைத் தட்டி எழுப்ப நீ செய்த முயற்சியை உணர்ந்து கொண்டோம். தனி மனிதனாகச் செயல்படாதே, பாண்டிநாட்டுக்காகப் பொங்கி எழு என்று, எங்களைக் குத்தி எழுப்பியதற்கு நன்றி.  தூங்கிக் கிடந்த எங்கள்மீது குளிர் நீர் மழையாகப் பொழிந்து எங்களை எழுப்பி விட்டாய்! இனி வார்த்தை விளையாட்டு தேவையில்லை. எங்கள் அனைவரையும் இங்கு அழைத்த காரணத்தை விளக்கு” அன்புடன் மாறவர்மனைத் தூக்கி நிறுத்துகிறான்.

தான் எவ்வளவு முயன்றும் ஒருங்கிணைக்க இயலாத தனது உறவினர்களை சொல்வன்மையினால் கட்டிப்போடும் தனது தம்பியை மனதுள் வாழ்த்துகிறான் குலசேகரன். அவன் மனதில் தான் எடுக்கவேண்டிய ஒரு முடிவு உருப்பெற ஆரம்பிக்கிறது.

“இங்கு, நிழலில், சுகமான இலவம் பஞ்சு வைத்துத் தைக்கப்பட்ட இருக்கைகளில், பணிப்பெண்கள் சாமரம் வீசும் இனிய காற்றில் இளைப்பாறிக்கொண்டு, தமையனார் அழைத்த காரணத்தைச் சொல்ல நான் விரும்பவில்லை. புழுதிக்காற்று வீசும், வெள்ளெருக்கு வளர்ந்திருக்கும் நமது அரசாணி மண்டபத்தின் இடிபாடுகளில், நமது மதுரையின் வரலாற்றை குலோத்துங்கசோழன் மாற்றி எழுதிய இடத்தில் போய்ப் பேசுவோம் வாருங்கள்!” என்று விடுவிடென்று நடக்க ஆரம்பிக்கிறான் மாறவர்மன். அவனை நிழலாகப் பின்தொடர்கிறான் செந்தில்நாதன்.

சடையவர்மன் குலசேகரபாண்டியன் அங்கு வந்திருந்த மற்ற நான்கு பாண்டிய மன்னர்களையும், அவர்களின் இளவரசர்கள், மெய்காப்பாளர்களைப் பார்த்துத் தலையசைத்துவிட்டு, தானும் மாறவர்மன் சென்ற வழியில் நடக்கிறான். அனைவரும் மதுரைக் காவலனின் அடித்தடத்தைப் பின்பற்றுகிறார்கள்.

அந்த ஆண்டு மழை பொய்த்ததால் வெளியில் வெப்பம் அதிகமாகவே இருக்கிறது. சற்று முன்னர் மாறவர்மன் சொன்னபடி புழுதிக் காற்றுதான் வீசுகிறது.

எப்பொழுதும் மக்கள் கூட்டம் மிகுந்திருக்கும் மதுரை, களையிழந்து, ஆள் நடமாட்டம் இன்றிக் காணப்படுகிறது. தனது மிதியடிகளைக் கழட்டி எறிந்திருந்த மாறவர்மன் மண்ணின் சூட்டைப் பொருட்படுத்தாமல் நின்றுகொண்டிருக்கிறான். மற்றவர்கள் வருவதற்காகக் காத்துக்கொண்டிருக்கும் அவன், மீண்டும் உரத்த குரலில் பேச ஆரம்பிக்கிறான்.

“பாருங்கள் நமது மதுரையின் பொலிவை! மற்றவர் கண்டு வியக்கும் மாநகரமாகவா காட்சி அளிக்கிறது? குலோத்துங்கன் விதித்த அபராதத் தொகையான திறையைக் கட்டிவிட்டு, உடுத்தத் துணிகூட இல்லாத ஏழையைப் போலத்தானே ஏங்கி நிற்கிறது! வீர உணர்வு இல்லாத நாம் நன்கு வாழ்ந்து விடக்கூடாது என்று தண்டிக்கத்தானே, இயற்கையும் மாரியைப் பொய்ப்பித்து, சுட்டுப் பொசுக்குகிறது! நமக்கு ஏற்பட்ட இழிநிலையை நினைத்தால் எனக்குள் ஏற்படும் கொதிப்பால், இந்த மண்ணின் சூடு கூட எனது கால்களுக்கு உறைக்கவில்லை.

“நீங்களும் உங்கள் மிதியடிகளைக் கழட்டி எறியுங்கள்! நமது மதுரைக்கு ஏற்பட்டிருக்கும் பொலிவிழப்பை நினைத்து, நினைத்து - அதனால் கொதிப்படைந்து - அந்தக் கொதிப்பினால் ஏற்படும் சூட்டில் இந்த மணலின் சூட்டை மறந்து, நாம் அவமானப்படுத்தப்பட்ட இடத்தை நோக்கி வீர நடை போடுவோம்! நமது மதுரையை மீண்டும் அதன் புகழின் உச்சிக்கு எடுத்துச் செல்லக்கூடிய திட்டத்தை வகுப்பதைப் பற்றிக் கலந்து உரையாட - நமக்கு ஏற்பட்ட மாபெரும் அவமதிப்புச் சின்னத்தை நோக்கிச் செல்வோம்!” என்றபடி நடக்க ஆரம்பிக்கிறான்.

தனது தம்பியின் சொல்லுக்கு மதிப்புக் கொடுத்துத் தனது மிதியடிகளைக் கழற்றி வெறும் கால்களுடன் மண்ணை மிதிக்கிறான் குலசேகரபாண்டியன்.

தரை அனலாகக் கொதிக்கிறது. தனது முகத்தில் அந்தச் சூட்டின் தாக்கம் தெரியாதவாறு மறைத்துக்கொண்டு நடக்கிறான். ஒருவர்பின் ஒருவராக அனைவரும் மிதியடி இன்றிச் சுடும் மண்ணில் நடக்கிறார்கள். பத்து நிமிடங்களில் அரசாணி மண்டபத்தின் இடிபாட்டை பாண்டிய மன்னர் குழாம் அடைகிறது.

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக அந்த இடத்தைப் பார்க்கிறான் குலசேகரபாண்டியன். அந்தக் காட்சியைக் கண்டதும் அவனது உள்ளங்கால்களைத் தாக்கிவந்த சூடு மறந்துபோகிறது. மாறாக உடலே அனலாக எரிகிறது.

பெரிதாக எருக்கஞ்செடிகள் வளர்ந்து கிடக்கின்றன. இடையில் கருவேல மரங்கள் தாமாகவே வளர்ந்து பெரிதாகி இருக்கின்றன. அரசாணி மண்டப இடிபாடுகளே தெரியாதவாறு புதர் மண்டிக்கிடக்கிறது. உய், உய்யென்று பூச்சிகள் கத்தும் ஒலி காதைப்பிளக்கிறது. தட்டாம்பூச்சிகள் அங்குமிங்கும் பறந்து ரீங்காரமிடுகின்றன. அவனையும் அறியாமல் குலசேகரனின் கண்களில் ஈரக் கசிவு ஏற்படுகிறது.

புதர்களை விலக்கிக்கொண்டு சென்ற மாறவர்மன் அங்கு இருக்கும் இடிபாடு ஒன்றில் அமர்ந்து கொள்கிறான். மற்றவர்களும் ஆங்காங்கு கிடக்கும் இடிபாடுகளில் அமர்ந்து கொள்கின்றனர்.

இவர்களைக் கண்டதும், அங்கு குடியிருக்கும் சில கழுதைகள் கத்தியவாறே அகன்று செல்கின்றன. ஓந்திகளும், அரணைகளும் பாதுகாப்பை நோக்கி ஓடுகின்றன. ஓரிரண்டு பாம்புகளும் விடுவிடென்று நெளிந்து செல்கின்றன. அவற்றைத் தன் வாளால் வெட்டப் போன செந்தில்நாதனைத் தடுத்துவிடுகிறான் மாறவர்மன்.

“செந்தில், சோழ வீரர்கள் பலர் உனது வாளுக்கு இரையாகக் காத்திருக்கிறார்கள். இந்தப் பாம்புகள் பாண்டிநாட்டுக் குடிகள். இவற்றை விட்டுவிடு. பாவம், பிழைத்துப் போகட்டும்!”  என்று நையாண்டியாகச் சிரிக்கிறான். பதிலுக்குப் புன்னகைத்தவாறே செந்தில்நாதன் வாளை உறையில் இடுகிறான்.

மாறவர்மன் அவனைப் பார்த்துத் தலையசைக்கவே, பாண்டிய மன்னர்கள் பேசுவது தங்கள் காதில் விழாத தூரத்திற்கு மற்ற மெய்காப்பாளர்களைக் கூட்டிச்செல்கிறான்.

“கழுதைகூடப் பொதி சுமக்க மறுக்கும் இந்த வெய்யிலில் தாங்கள் அனைவரையும் இங்கு வெறுங்காலுடன் அழைத்து வந்ததற்கு மனமார மன்னிப்புக் கோருகிறேன். அதேசமயம், எனது அழைப்புக்குச் செவிசாய்த்ததற்கு தலை சாய்க்கிறேன்” என்றவன் குனிந்து, குலசேகரபாண்டினின் காலில் கசியும் இரத்தத்தைத் தனது மேலாடையால் துடைக்கிறான்.

“என் உறவினர்களே, இந்தக் காயும் வெய்யிலில் உங்களை நான் அழைத்து வந்ததை, இதுவரை நமது பாண்டிநாட்டின் நிலைமையாக நினைத்துக் கொள்ளுங்கள். நமது காலைச் சுட்ட மண், சோழர்களின் மேலாதிக்க நிலைமைக்கு ஒப்பாக இருக்கிறது எனச் சொல்லலாம். நம்மைச் சுற்றியிருக்கும் இடிபாடுகளும், எருக்கஞ்செடிகளும், புதர்களும் நமது பாண்டிநாட்டின் நிலைமைக்கு ஒப்பாக இருக்கிறதல்லவா? இங்கு ஓடிச்சென்ற கழுதைகளின் நிலையில்தான் நாம் இருக்கிறோம். நம்மைக் கழுதைகளுடன் நான் ஒப்பிடுவதை அனைவரும் மன்னியுங்கள்.  ஆனால், சோழர்களைக் கண்டு பயந்து ஓடிய நம்மை வேறு எதற்கு ஒப்பிடுவது?

“நம்முடைய பரம்பரைச் சொத்துகளான அரியணை, மணி மகுடம், வீரவாள்கள் அனைத்தும் இப்பொழுது கங்கைகொண்ட சோழபுரத்தில், சோழர்கள் அரண்மனைக் கருவூலத்தில் உள்ளன. மதுரையிலும், நெல்லையிலும், பொன்னமராவதியிலும் பாண்டிய மன்னர்கள் கோலோச்சினாலும், அது என்னவிதமான ஆட்சி? நமது பரம்பரை அரியணை நம்மிடம் இல்லாதபோது நாம் அமர்ந்து ஆட்சி செய்வது வெறும் நாற்காலியில்தான். நமது பரம்பரை மகுடம் சோழரிடம் இருக்கும்போது நாம் அணிந்துகொண்டிருப்பது வெறும் தலைப்பாகைதான். களப்பிரரை வென்ற கடுங்கோன் பாண்டியனாரின் வீரவாள் நம்மிடம் இல்லாதபோது, நம்மிடம் இருப்பது வெறும் அரிவாள்தான்.”

வெறுப்பாகச் சிரித்த மாறவர்மன், தனது உடைவாளை உறுவி உயர்த்திப் பிடிக்கிறான். சூரிய ஒளி பட்டு அந்த வாள் தகதகவென்று மின்னுகிறது. வாளை விறுவிறுவென்று சுழற்றுகிறான் மாறவர்மன். அந்த வேகத்தில் ‘விஷ், விஷ்’ என்ற ஒலி எழுகிறது.

“இந்த வாள் நம்மை அவமானப்படுத்திய, நமது ஜன்ம விரோதியான குலோத்துங்கனால் எனக்கு ஈயப்பட்டது. அவன் காலில் நான் விழுந்தபோது, அவன் மதுரையைப் பிச்சையாக அளித்தபோது, இந்த உடைவாளையும், கொடுத்தான். இவ்வாளைச் செய்த முறையில் குறைபாடு இருந்தது. இதைப் பிடித்துச் சுழற்றினால் சமநிலை சரியாக இல்லை. இருப்பினும் தினமும் இந்த வாளுடன் மல்லுக்கட்டி, எங்கு எடை ஏற்றினால் சமநிலை ஏற்படும் என்று பார்த்து அங்கங்கு எடையைக் கூட்டி இருக்கிறேன்” என்று அந்த வாளில் சில இடங்களைக் காட்டுகிறான். மெல்லிய, சிறிய உலோகத் தகடுகள் ஆங்காங்கு ஈயத்தால் இணைக்கப் பட்டிருக்கின்றன.

“இப்பொழுது இந்த வாளின் சமநிலை மிகவும் துல்லியமாக இருக்கிறது.  இப்படிப்பட்ட குறைபாடு உள்ள நிலையில் இருந்த வாளை - எதிரி எனக்குக் கொடுத்து, இந்த வாளை - கண்ணும் கருத்துமாகக் கவனித்து, சரிசெய்து வைத்துக்கொண்டிருப்பது ஏன் என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம்” அனைவர் முகங்களையும் கவனமாகக் கண்ணுற்ற மாறவர்மன் தனது பேச்சைத் தொடர்கிறான்.

“பாண்டிநாடும் ஒருவகையில் இந்த வாள் இருந்ததைப் போல சமநிலை இல்லாமல்தான் இருக்கிறது. அதனால்தான் சோழநாட்டிற்கு எதிராக நிமிர்ந்து நிற்க இயலவில்லை.  ஆங்காங்கே ஒட்டப்பட்டிருக்கும் மெல்லிய உலோகத் தகடுகளாக பாண்டிய மன்னர்கள் நாம் எப்பொழுது பாண்டிநாட்டைப் பங்கிடாமல் ஒன்றாக இணைக்கிறோமோ, அன்றுதான் பாண்டிநாடும் இந்த வாளைப்போலச் சமநிலைக்கு வந்துசேரும். இதை நான் இன்னும் ஏன் என் கையில் வைத்துக்கொண்டிருக்கிறேன் தெரியுமா? இது சோழர்களை அழிக்கும் கோடாரிக் காம்பாக நமக்கு உதவ வேண்டும் என்றுதான்!

மீண்டும் ஒரு முறை வாளைத் தூக்கி விறுவிறுவென்று சுழற்றுகிறான் மாறவர்மன். அவன் சுழற்றும் வேகத்தில் வாள் மற்றவர்கள் கண்களுக்கு தெளிவற்றுத்தான் தெரிகிறது.

சுழற்றுவதை நிறுத்துகிறான். அவன் முகத்தில் ஒரு நிறைவு தெரிகிறது.

“நமது பாண்டிநாடு இந்த வாளைப் போல சமநிலைக்கு வந்து சேரவேண்டும். போரில் சோழர்களை வெல்லத்தகுந்த நாடாக மாற வேண்டும். அதை நிறைவேற்ற நாம் ஒன்றாக இணைய வேண்டும். அதுபற்றி விவாதிக்கவோ அல்லது பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவோ அல்ல - அதை எப்படி நிறைவேற்றுவது என்று கலந்துரையாடத்தான் உங்களுக்கு என் தமையனார் அழைப்பு விடுத்திருக்கிறார்” என்று அவர்கள் அங்கு அழைக்கப்பட்ட காரணத்தைக் கூறுகிறான் மாறவர்மன்.

“தமையனாரே, இதுவரை மாறனேதான் பேசிக்கொண்டிருக்கிறான். தாங்கள் இதுவரை ஒரு சொல்கூட பேசவில்லையே?” என்று வினவுகிறான் நெல்லைப் பாண்டியன் என்று அழைக்கப்படும் வீரபாண்டியன்.

“வீரா, பாண்டிநாட்டைப் பற்றிப் பேச எனக்கு என்ன அருகதை இருக்கிறது?  நாடே பார்க்க, அனைவரும் எள்ளி நகையாட, எதிரியின் காலில் விழுந்தவன் நான். அதுமட்டுமல்ல, அவன் என் தலையில் காலை வைத்தபோது, வாளெடுத்து அவன் தலையைச் சீவிவிட்டு வீர சுவர்க்கம் செல்லாத கோழை நான்; அப்பொழுதே பாண்டிநாட்டைப் பற்றிப் பேசும் அருகதையை இழந்து விட்டேன்!” குலசேகரபாண்டியனின் குரல் தழுதழுக்கிறது.

“அப்படியென்றால் அந்தத் தகுதி யாருக்கு இருக்கிறது தமையனாரே? நானும்தான் எதிரியின் காலில் விழுந்தேன்!” பரிவுடன் பதில் சொல்கிறான் மாறவர்மன்.

“எலிகளெல்லாம் ஒன்றுகூடி, பூனையின் கழுத்தில் மணிகட்டக் கலந்துரையாடிய கதையாக இருக்கிறது நமது கதை…” என்று அலுத்துக் கொள்கிறான் நெல்லைப் பாண்டியன்.

“கழிவிரக்கப்பட்டே நமது காலத்தைக் கழிக்க வேண்டுமா, தமையன்மார்களே?” என்ற மாறவர்மனின் குரலில் சீற்றம் இருக்கிறது.

“யார் பேசினால் என்ன! பாண்டியர் ஒற்றுமையைப் பற்றி யார் பேசினால் என்ன? நான்தான் உங்கள் அனைவரையும் அழைக்கச் சொன்னேன். மாறன் வாளைப் பற்றிச் சொன்னதும் எனக்குப் பழைய நினைவு வந்து விட்டது. நானும் வருத்தப்பட்டு, நிலைதடுமாறி, உங்களையும் வருத்தப்படச் செய்துவிட்டேன். நமது ஒற்றுமை குறித்து மாறனே பேசட்டும். வீரா, அவனால்தான் கோர்வையாகப் பேச இயலும்” என்று மெல்லிய குரலில் மாறவர்மனை தொடர்ந்து பேச அழைக்கிறான் குலசேகரபாண்டியன். மாறவர்மன் மீண்டும் துவங்குகிறான்.

“தமையன்மார்களே! பாண்டிநாடு ஒன்றாக இணைய வேண்டும். நாம் ஒன்றாகச் செயல்பட வேண்டும். இப்பொழுது நாம் ஐந்து துண்டங்களாக இருக்கிறோம். ஒருவர் செய்வது மற்றொருவருக்குத் தெரிவதில்லை. ஒருவர் தெற்கே சென்றால் இன்னொருவர் வடக்கே செல்கிறோம். ஐந்து மன்னர்களும் ஐந்து வெவ்வேறு நாட்டார்கள் போலவே நடந்துகொள்கிறோம்.

“நான் சொன்னால் வருத்தப்படக் கூடாது. மதுரை குலோத்துங்கனால் தாக்கப்பட்ட செய்தி உங்களில் பலருக்குத் தெரியவே இல்லை. தமையனாராகவே முடிவு எடுத்து, வடக்கே படையெடுத்துச் சென்றார். பொன்னமராவதி மன்னர் தோல்வியடைந்து, குலோத்துங்கன் மதுரை வந்த பின்னரே எனக்குச் செய்தி வந்தது. நான் மதுரை எல்லையை அடைவதற்குள் கதை முடிந்துவிட்டது. சோழனால் மதுரைக்கு ஏற்பட்ட இழிநிலை அனைவருக்குமே தெரியும்.  ஆகவே, ஆகவே...” சற்று நிறுத்துகிறான்.

“ஆகவே, நாம் தனித்தனியாக பாண்டிநாட்டை ஆண்டு வந்தாலும், பாண்டிநாட்டின் தலைவராக ஒரு பாண்டியர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். வெளிநாட்டு உறவுகளையும், பாதுகாப்பையும் அவர் பொறுப்பில் விட்டுவிட வேண்டும். பாண்டிநாட்டு மன்னர்கள் அனைவரும் அவரது ஆணைக்குக் கட்டுப்பட வேண்டும். சுருங்கச் சொன்னால், அந்தத் தலைமையான பாண்டியர் மதுரையிலிருந்து ஆட்சி செய்ய வேண்டும்.”

“சற்றுப் பொறு, மாறா!” என்று அவனை இடைமறிக்கிறான் நெல்லைப் பாண்டியன்.
“நீ சொல்வதைக் கேட்டால், எங்கள் சுதந்திரத்தை மதுரைக்குக் கொடுத்துவிடு என்பது போல அல்லவா இருக்கிறது?”

“சோழனுக்கு உங்கள் உரிமையை முழுமனதுடன் விட்டுக்கொடுப்பீர்கள்; ஆனால், உங்களில் ஒருவருக்குப் பாண்டிநாட்டின் பாதுகாப்புப் பொறுப்பை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள், அவ்வளவுதானே?” எதிர்க் கேள்வி பிறக்கிறது மாறவர்மனிடமிருந்து.

“மாறா, நெல்லைத் தமையனாரின் கேள்வியில் நியாயம் உள்ளது” என்று தன் கருத்தைத் தெரிவிக்கிறன் பொன்னமராவதிப் பாண்டியன். “அவருக்குச் சரியான விளக்கம் தராது, எங்களைச் சோழனுடன் ஒப்பிடுவது எந்த விதத்தில் நியாயம்?”

“அப்படியா? நான் முன்பு சொன்னதை நிதானமாகத் திரும்பவும் சொல்கிறேன். தலைமைப் பாண்டிய மன்னர் மதுரையிலிருந்து ஆட்சி புரியவேண்டும் என்றுதான் சொன்னேன். உங்கள் தனிப்பட்ட உரிமையை மதுரைக்குத் தாரைவார்த்துக் கொடுத்து விடுங்கள் என்று சொன்னேனா? காலங்காலமாக மதுரைதான் பாண்டிநாட்டின் தலைநகராக இருந்து வருகிறது.  எனவே, ஒருங்கிணைந்த பாண்டிநாட்டுக்கு, பாண்டியர்களின் நாடுகளுக்கு, முன்பு போல மதுரையே தொடரட்டும் என்றுதான் எடுத்துரைத்தேன்.

“பாண்டி மக்கள் மதுரை மீது வைத்திருக்கும் பற்று, தமையனார்கள் தாங்கள் அறியாததா?  தற்பொழுது மதுரைப் பகுதியை ஆண்டுவரும் என் தமையனார்தான் தலைமைப் பாண்டியராக இருக்க வேண்டும் என்று நான் - தவறு - என் தமையனார் சொல்லவில்லை. அது அவரது கருத்தும் அல்ல. தலைமைப் பாண்டியராக நாம் யாரைத் தேர்ந்தெடுக்கிறோமோ, அவர் மதுரையில் ஒருங்கிணைந்த பாண்டிநாட்டின் பாதுகாப்பிற்குப் பொறுப்பேற்கட்டும் என்றுதான் தெரிவிக்கிறார். அவரது கருத்தைத்தான் நான் அவரது சார்பில் தெரிவிக்கிறேன்” என்று அழுத்தம் திருத்தமாகப் பதிலிறுக்கிறான் மாறவர்மன்.

பாண்டிய மன்னர்கள் தணிந்த குரலில் தங்களுக்குள் சிறிது நேரம் கலந்துரையாடிய பின் பொன்னமராவதி பாண்டியன் பேசுகிறான்: “தமையனார் குலசேகரர் அவர்களே! மாறனின் கருத்தைச் சிந்தித்துப் பார்த்ததும் அதிலுள்ள நியாயம் விளங்குகிறது. இருப்பினும், எங்களது சில ஐயங்களைத் தீர்க்க நீங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.”

“தம்பி மாறனே ஐயங்களைத் தீர்த்து வைப்பானாக” என குலசேகரனிடமிருந்து பதில் வருகிறது.

“தமையனார்களே! தங்களது தயக்கம் எனக்குப் புரிகிறது” என்ற மாறவர்மன் தொண்டையை இலேசாகச் செருமிக்கொள்கிறான்.

“தங்கள் அனைவரையும் விட வயதில் இளையவனான நான் பேசியது எதுவும் தங்களைத் தவறான இடங்களில் தாக்கியிருந்தால் அதற்குத் தங்களிடம் தலைவணங்கித் தாழ்மையுடன் மன்னிப்புக் கோருகிறேன். முதலிலேயே சொன்னபடி, தங்கள் பகுதிகள் எதுவும் மதுரைப் பகுதியுடன் இணைக்கப்படாது. தாங்களும், தங்கள் வழித்தோன்றல்களும்தான் உங்கள் பகுதியை எப்படி ஆட்சிபுரிவது என்பதைத் தீர்மானிப்பீர்கள்.

“நமக்குள் ஒருவரைப் பாண்டிநாட்டுப் பாதுகாவலராகத் தெரிந்தெடுப்போம். அவர் மதுரையிலிருந்து நம் நாட்டுப் பாதுகாப்பிற்கும், சோழர்களின் அடிமைத் தளையிலிருந்து நம்மை விடுவிப்பது பற்றித் திட்டமிட்டு, அதை மற்ற அனைவரின் ஆதரவுடன் செயல்படுத்தட்டும்.”

தான் சொல்வதை மற்றவர் நன்கு கவனிக்கிறார்கள் என்பதை அவர்தம் முகப்போக்கிலிருந்து கண்டுகொண்ட மாறவர்மன் மேலே தொடர்கிறான்: “இலங்கையிலிருந்த நமது பரம்பரைச் சொத்தான அரியணை, மகுடம், வீரவாள் இவற்றைச் இராஜேந்திரசோழன் கைப்பற்றிச் சென்று இருநூறு ஆண்டுகள் கழியப்போகின்றன. இன்னும் நாம் தன்னாட்சியும் பெறவில்லை, பரம்பரைச் சொத்தையும் மீட்கவில்லை. மேலும் ஆறாண்டுகள் சென்றால் சரியாக இருநூறாண்டு நிறைவுபெறும். அதற்குள் அடிமைத் தளையை உடைத்தெறிந்து, நம் சொத்தை மீட்க வேண்டும். நம் மதுரையும், பாண்டி நாடும் பழம்பெருமையை அடைய வேண்டும்.  இதற்காக நாம் இடைவிடாது உழைக்க வேண்டும்.

“நீங்கள் கேட்கலாம் - போசளர், தெலுங்குச் சோடர்கள், வேங்கைநாட்டார் - இவர்களின் உதவியைப் பெற்றிருக்கும் சோழர்களை நாம் எப்படிப் புறம்காண்பதென்று. கொஞ்சம் தென்பக்கம் திரும்பிப் பாருங்கள்.  நூறாண்டுகள் சோழர்தம் பிடியில் அடங்கிக் கிடந்த சிங்களவர் தம் விடுதலையைப் பெறவில்லையா? அவர்களை விட நாம் எந்தவிதத்தில் தாழ்ந்துபோனோம்? நமது முப்பாட்டனார்கள் இருநூறு ஆண்டுகளுக்கு முன் செய்த தவறுதான் என்ன?” மாறவர்மனே தொடரட்டும் என்பது போல நெல்லைப் பாண்டியன் தலையசைக்கிறார்.

“சிங்களரும், சேரரும் உதவுவர் என்று சோழருடன் போர் தொடுத்ததே காரணம். தன் கையே தனக்குதவி என்று ஒருகாலும் நாம் நினைக்கவில்லை. அது மட்டுமா? நம் பாட்டனார்கள் தமக்குள் சண்டையிட்டுக்கொண்டு, அண்ணன்-தம்பிச் சண்டைக்குள் சிங்களவரையும், குலோத்துங்கனையும் பாண்டிநாட்டுக்கு அழைத்து வந்தனர். அதனால் என்ன ஆயிற்று?

“பாண்டிநாடு எரியிட்டு அழிக்கப்பட்டது. நாமும் துண்டு துண்டாகப் பிரிக்கப்பட்டோம். அதை விடுத்து, நாம் ஒன்றாகச்சேர்ந்து போராடியிருந்தால் சோழரைப் புறம்கண்டிருப்போம். நாம் அதைச் செய்யவில்லை. தம்மைக் காத்துக்கொண்டால் போதுமென வாளாவிருந்து விட்டோம்.

“நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். எதிர்காலத்தில் மீண்டும் இத்தவறை இழைத்தால், சோழரென்ன, வேற்றுநாட்டாருக்கும் அடிமையாகும் நிலை ஏற்படும்.  சோழராவது தமிழர். வேற்றுநாட்டார் எம்மொழி பேசுவரோ, எப்பழக்க வழக்கத்தைக் கொணர்வரோ, நாம் அறியோம். நம்மை நாமே இழந்து வேறொருவராக வாழும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுவோம்!”

மகுடி இசை பாம்புகளைக் கிறங்க வைப்பதுபோலத் தன் ஒவ்வொரு சொல்லும் அனைவரையும் கட்டிவைக்கிறது என்று அறிந்த மாறவர்மன், தன் குரலில் கெஞ்சலையும், தூண்டலையும், உற்சாகத்தையும் ஒருங்கே கலந்து அவர்களைத் தன்பால் ஈர்க்க முற்படுகிறான்.

“தமையன்மாரே! ஆகவே, உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். நாம் ஒன்றாக இணைவோம். நம் கையையும், தோள் வலிமையையும், நம் பாண்டிநாட்டு வீரர்தம் தீரத்தையும் மட்டுமே நம்பிச் செயல்படுவோம். உறுதியாக அறுதியிட்டுச் சொல்கிறேன் - மதுரை பாண்டிநாட்டுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கே தலைநகராக, சிறந்த செல்வாக்குடன் திகழும். வெளிநாட்டார் பலரும் மதுரையைத் தேடி வருவர் - அடக்கி ஆள்வதற்கல்ல, வணிகம் புரிந்து பாண்டிநாட்டைச் செல்வச்செழிப்பாக்க மட்டுமே. சங்க காலத்தில் சிறந்து விளங்கிய நிலையை நாம் அடைவோம். யவன நாட்டுக்குப் பரவிய நமது புகழ், மீண்டும் அங்கு மட்டுமல்ல, சீனம், ஸ்ரீவிஜயம், கடாரம், சாவகம் முதலிய நாடுகளுக்கும் பரவும்.”

வரைபடம்
வரைபடம்

அவனது வீர உரை அனைவரையும் மெழுகாக உருக்கி விடுகிறது.

திட்டம் முழுவதும் விவரிக்கப்பட்டதும், அனைவரும் ஒருங்கிணையச் சம்மதிக்கின்றனர்.

சடையவர்மன் குலசேகரபாண்டியனே மற்ற மன்னரின் தலைவராகப் பணியாற்றவும், மாறவர்மனும், நெல்லைப்பாண்டியனும் உதவியாக பாண்டிநாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்றும் தீர்மானிக்கின்றனர்.

அத்தீர்மானத்தை உறுதிசெய்யும் வகையில் உள்ளங்கையில் வாளால் கீறி, தங்களின் குருதித் துளிகளை ஒன்றுசேர்த்து உறுதிமொழி எடுத்துக்கொள்கின்றனர்.

எங்கிருந்தோ இடிமுழக்கம் மெதுவாகக் கேட்டுப் பின்னர் பலமாக ஒலிக்கிறது. எங்கிருந்தோ கார் மேகங்கள் திரண்டு வருகின்றன. மின்னல் பளிச்சிடுகிறது. தூரல் பெருமழையாக உருவெடுத்து அனைவரையும் நீராட்டி மகிழ்கிறது. அவர்களின் ஒற்றுமைக்கு இயற்கையே மந்திரம் ஓதி, தீபம் காட்டிப் புனித நீராட்டுவது போல அவர்களுக்குப் படுகிறது.

***

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com