பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -நான்காம் பாகம்-அத்தியாயம் 8

வைணவப் பெரியவர் ,பெரியவர் ஜீயர்
வைணவப் பெரியவர் ,பெரியவர் ஜீயர்

ஒரு அரிசோனன்

அரங்கநாதர் திருக்கோவில், திருவரங்கம்

ஆங்கீரஸ, ஆவணி 12 - ஆகஸ்ட் 15, 1212

ல்லாண்டு பாடும் ஒலி பலமாக எழுகிறது. நன்கு அலங்கரிக்கப்பட்ட அரங்கநாதனின் உற்சவத் திருவுருவை அடியார்கள் சுமந்துவந்து மண்டபத்தில் எழச்செய்கிறார்கள். சாற்றுமுறைகள் நிறைவேறியபின் அமைதி நிலவுகிறது. வைணவப் பெரியவர் ஜீயர் அருள்வாக்கு மொழிகிறார். அவர் கையை உயர்த்தியதும் கம்பர் தனது இராம காதையின் ஒலைச்சுவடிகள் சுற்றப்பட்ட துணிக்கட்டை எடுத்துவந்து வைணவப் பெரியவரைப் பணிந்து எழுகிறார்.25

பெரியவர் ஜீயர்
பெரியவர் ஜீயர்

ஜீயரது வலக்கரம் அருகிலிருக்கும் சிறிய மேடையைச் சுட்டுகிறது. அதில் அமர்ந்த கம்பர், அருகில் நின்றுகொண்டிருக்கும் ஒருவரை அழைக்கிறார்.

பெரிதாக திருநீற்றுப் பட்டையுடன் வட்டமாகக் குங்குமம் நெற்றியில் திகழத் தயங்கித் தயங்கி வரும் நீலகண்ட தீட்சிதரை அனைவரும் வியப்புடன் பார்க்கிறார்கள். திருமாலில் அவதாரமான இராமனின் கதையை அரங்கேற்றப்போகும் இந்த இடத்தில் சிவ பக்தரான இவருக்கு இங்கென்ன வேலை என்பது போலிருக்கிறது அனைவரின் பார்வையும்.

“இவர் சோழ மகாராஜாவின் தமிழ்க் காரியஸ்தர். இவர்தான் மகாராஜாவிடம் எடுத்துச்சொல்லி, என்னை அரசவைக் கவியாக்கினார். தமிழார்வம் மிக்கவர். இராம காதை அரங்கேறுவதை நேரில் கண்டுகளிக்க வந்திருக்கிறார்” என்று நீலகண்ட தீட்சிதரை அவைக்கு அறிமுகப்படுத்துகிறார் கம்பர்.

ஜீயரைப் பணிந்த தீட்சிதர், “அரங்கநாதருக்குக் காணிக்கைகளை மகாராஜா அனுப்பியுள்ளார். தாங்கள் அருள்கூர்ந்து ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்று கூறிவிட்டு, இலேசாகத் தலையை அசைக்கிறார்.

நான்கைந்து பேர் சிவப்புத் துணி மூடிய தட்டுகளை ஜீயரின் முன்னால் வைக்கிறார்கள்.

முகமலர்ச்சியுடன், “அப்படியா! அரங்கநாதன் மீது மகாராஜாவின் பக்தி அனைவரும் அறிந்ததே! காரியஸ்தருக்கு ஆசீர்வாதங்கள்! அமர்ந்துகொள்ளுங்கள்!” என்று தீட்சிதரை வாழ்த்துகிறார் ஜீயர்.

கம்பருக்கு அருகில் அமர்ந்துகொள்கிறார் தீட்சிதர். எப்பப்பொழுது எந்தெந்த ஓலைக்கட்டுகளை எடுத்துக் கொடுக்கவேண்டும் என்று அவர்கள் முன்பே பேசிவைத்திருந்ததால், கம்பரின் அருகிலிருந்த ஓலைக்கட்டுகளைப் பிரித்து முதல் கட்டை அவரிடம் நீட்டுகிறார்.

அதை அரங்கநாதரின் உற்சவத் திருமேனியின் பாதத்தில் வைத்துப் பெற்றுக்கொண்டு பணிவுடன் சில கணங்கள் கண்களை மூடி இறைவனை மனதில் ஏத்துகிறார் கம்பர். பின்னர், உரத்த குரலில் இராம காதையை இறைவணக்கத்துடன் தொடங்குகிறார்:

‘உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்

நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா

அலகிலா விளையாட் டுடையா ரவர்

தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே!’

---------------------------------------------

[25. வைணவ முனிவர் நாதமுனியின் முன்பு தனது இராம காதையை கவிச் சக்கரவர்த்தி கம்பர் அரங்கேற்றினார் என்பது சிலரின் கருத்து. ஆனால், நாதமுனியின் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு என்பதாலும், முன் அத்தியாயங்களில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கம்பர் வாழ்ந்தார் என்ற கருத்தை எடுத்துக்கொண்டதாலும், கற்பனையாக ஒரு காலத்தை இராம காதை அரங்கேறும் காலமாக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.]

“நாம் இருக்கும் இவ்வுலகம் மட்டுமல்லாது, நம்மைச் சுற்றியிருக்கும், நம் கண்ணுக்குத் தெரிவதும், தெரியாமல் இருப்பதுமான எல்லா உலகங்களையும் தாமாகவே படைத்துப் பாதுகாத்து, அழித்தும் வரும் நீங்கவே நீங்காத, என்றும் முற்றுப்பெறாத விளையாட்டுகளை நிகழ்த்திவரும் ஒப்பற்ற தலைவரான இறைவனுக்கே நாங்கள் அடைக்கலம் ஆகின்றோம்!”  என்று கடவுள் வாழ்த்தினை விளக்குகிறார்.

“ஆகா, ஆகா!” எனக் கவியின் பொருட் செறிந்த இறை வணக்கத்தை ரசிக்கிறது, இராம காதை அரங்கேற்றத்திற்கு வந்த அடியவர் திருக்கூட்டம்.

புன்னகையுடன் அனைவரையும் தலைவணங்கிய கம்பர், மெல்லத் தீட்சிதரின் பக்கம் திரும்பிக் கண்களால் வினவுகிறார்.

மகிழ்வுடன் தலையசைத்த தீட்சிதர், “இறைவன் பெயரைக் குறிப்பிடாமல், எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளும்படி விட்டுவிட்ட உமது திறமைதான் என்னே!” என்று வியக்கின்றார்.

“ஐயா, இது திருமாலில் திரு அவதாரத்தைப் புகழும் இராம காதையாக இருப்பினும், என்னை ஆதரிக்கும் சோழ மாமன்னர் சிறந்த சிவபக்தர். எனவேதான் பொதுவாக இறைவனை ஏத்தினேன்” எனத் தணிந்த குரலில் விளக்குகிறார் கம்பர். புன்னகையுடன் தலையசைக்கிறார் தீட்சிதர்.

பாயிரம் முடிந்த பின், ஆற்றுப் படலம், நாட்டுப் படலம் என இராம காதை தொடருகிறது:

‘தண்டலை மயில்க ளாடத் தாமரை விளக்கம் தாங்கக்

கொண்டல்கள் முழவின் ஏங்கக் குவளை கண் விழித்து நோக்கத்

தெண்திரை எழினி காட்டத் தேம்பிழி மகரயாழின்

வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கும், மாதோ!’

“கோசல நாட்டில், சோலைகள் சூழ்ந்திருக்கும் நாட்டிய மேடையில் மயில்கள் தம் தோகையை விரித்து ஆடும். அங்கு, நீர்வாவிகளில் பூத்திருக்கும் தாமரை மலர்கள் விளக்குகளாக ஒளி பெருக்கும். முகில்கள் இடியோசையால் மத்தள முழக்கமிடும். கருங்குவளைப் பூக்கள் விரிந்து மலர்ந்து, இந்த நாட்டியக் கச்சேரியை இமை மூடாது கண்டுகளிக்கும். நீரில் அவ்வப்போது தோன்றும் மெல்லிய அலைகள் திரைகளாகத் தோன்றிவரத் தேனைப் பிழிந்து நமது காதினில் இனிமையாக ஒலிக்கும் மகரயாழின் இசையாக வண்டுகள் ரீங்காரமிடும். அங்கே மருதம் என்னும் அரசன் தன் அரியணையில் கொலுவீற்றிருந்து இயற்கையின் நடனைத்தைக் கண்டுகளிக்கிறான்” என்று கவிச் சக்கரவர்த்தி வருணிக்கும் கோசலநாடு, சோழத்திருநாடே என்று நன்கு புரிந்துகொள்கிறார் தீட்சிதர்.

இராம காதை காலத்தைக் கடந்து நிலைத்திருக்கும் என்று அவர் மனம் புளகாங்கிதமடைகிறது. இப்படிப்பட்ட கவிக்கோமானை அரசவைக்குக் கொண்டு சேர்த்தது, தமிழன்னைக்குத் தான் செய்த மகத்தான தொண்டு எனப் பெருமிதமடைகிறார்.

அதன் பிறகு, அயோத்தி நகரைச் சிறப்பிக்கும்விதமாக அதன் மதில்களை வருணிக்கிறார் கம்ப நாட்டார்:

‘மேவ அரும் உணர்வு முடிவு இலாமையினால் வேதமும் ஒக்கும் விண் புகலால்

தேவரும் ஒக்கும் முனிவரும் ஒக்கும் திண்பொறி அடக்கிய செயலால்

காவலில் கலை ஊர் கன்னியை ஒக்கும் சூலத்தால் காளியை ஒக்கும்

யாவரும் தன்னை எய்துதற்கு அரிய தன்மையால் ஈசனை ஒக்கும்.’

“ஒருவை தன் அறிவினால் அயோத்தியின் மதில்கள் எவ்வளவு தூரம் செல்கின்றன, எங்கு முடிகின்றன என்று ஊகிக்க இயலாது. எனவே, அவற்றை மறைகளுக்கு ஒப்பிடலாம். அந்த மதில்கள், வானளாவி உயர்ந்து, விண்ணுலகத்தில் உறையும் தேவர்களுக்கு நிகராக உள்ளன.  எதிரிகளை வீழ்த்தக்கூடிய போர்க்கருவிகளைத் தமக்குள் அடக்கிவைத்திருப்பதால் ஐம்புலங்களை அடக்கியாளும் முனிவர்களுக்கு அம்மதில்களை உவமிக்கலாம்.  கொற்றவைக்கு அவற்றின் நகர் காக்கும் திறனை ஒப்பிடலாம். அதன் உச்சியை எவராலும் அடைய இயலாதென்பதால், கயிலையில் வீற்றிருக்கும் தென்னாடுடைய ஈசனான சிவபெருமானுக்கே நிகராகும். அப்படிப்பட்ட சிறப்புகளை அயோத்தி மாநகரின் மதில்கள் பெற்றிருந்தன.”

இப்படி அயோத்தியைச் சுற்றிவளைத்துக்குக் காக்கும் மதில்களைப் பற்றிக் கம்பர் விளக்கும்போது, கவியின் கற்பனை கங்கைகொண்ட சோழபுரத்தின் மதிலைத்தான் நினைவில் கொண்டிருந்தது என உணருகிறார் நீலகண்ட தீட்சிதர்.

மண்டபத்தில் குழுமியிருக்கும் கூட்டம், கம்பரின் கவிமழையில் நனைந்து திளைக்கிறது.  அவர் பொழியும் கவித்தேனை அனைவரும் மாந்தி மயங்குகின்றனர். மாலை மங்கிவரும் நேரத்தில் கவியரசர் அன்றைய நிகழ்ச்சியை முடித்ததும், சிறிது நேரம் யாருமே அசையவில்லை. பிறகு, மண்டபமே மக்களின் கைதட்டலால் அதிர்ந்தது.

தம் மூதாதையர் நினைத்த அளவுக்குத் தமிழ் ஆர்வத்தை வளர்க்க முடியாது போனாலும், சிறந்தவொரு கவிஞரை இனம்கண்டு, அவரது படைப்பைத் தமிழ்கூறும் நல்லுலகுக்குப் பரிசாகத் தரும் நிகழ்வில் கலந்துகொள்ள வாய்ப்புக் கிடைத்தமைக்கு உமையொருபாகனுக்கு மனதால் நன்றி நவில்கிறார் தீட்சிதர்.

தமது மூதாதையார் சோழ மாமன்னர்களான இராஜராஜருக்கும், இராஜேந்திர சோழருக்கும், அவரது வழித்தோன்றல்களுக்கும் தமிழைப் பரப்பும் உதவியாளர்களாக இருந்தார்கள் -- எப்படி அவர்களது மலைக்கு நிகரான தமிழ் பரப்பும் திட்டம், குன்றாகவும், பின்னர் மணல் திட்டாகவும் மாறிப் போயிற்று என்று அவரது தந்தையாரும், பாட்டனாரும் நன்கு விவரித்ததை அறிந்திருக்கிறார் தீட்சிதர்.

இவ்வமயம் தனது தொண்டு - தமிழின் பெருமை நன்கு நிலைத்து நிற்கக்கூடிய வண்ணம் - கவிஞர்களை ஆதரித்து – இராம காதையைப் போன்ற காவியங்களைத் தமிழுக்குப் பரிசாக அளிக்கவேண்டிய சூழ்நிலையை - எப்பாடு பட்டாவது உருவாக்கவேண்டியதுதான் - அதைத் தன்னிடமிருக்கும் பொற்சுருளில் பதிந்துவர வேண்டியதுதான் என்று மனதில் சொல்லிக்கொள்கிறார்.

கவியரசு கம்பரைப்போல இன்னும் பல தமிழ்ச் செல்வர்களைத் தமிழ்த்தாய் பெற்றெடுக்க வேண்டும், தமிழார்வம் மக்களிடையே வளர வேண்டும் என்றும் வேண்டிக்கொள்கிறார்.

“ஐயா! ஏனிப்படி அமைதியாக அமர்ந்துவிட்டீர்? இராம காதை எப்படி இருந்தது?” என்கிறார் கம்பர்.

“கவிஞரே! நீர் காலத்தையே வென்றுவிட்டீர்! தமிழ் உள்ளவரை உமது இராம காதையும், உமது பெயரும் நிலைத்து நிற்கும் ஐயா! தஞ்சைப் பெருவுடையார் கோவிலைப் போலக் காலம் காலமாக உமது கவித்திறனும் அனைவராலும் வியந்து பாராட்டப்படும்!” எனக் கனிந்து வாழ்த்துகிறார் தீட்சிதர்.

“எல்லாம் கலைவாணியின் அருள், தங்களைப் போன்ற பெரியோரின் நல்லாசி!” என அடக்கமாக பதில் அளிக்கிறார் கவியரசர் கம்பர். அவர் அடக்கமாகப் பேசினாலும், நற்கவிதைக் காவியத்தைச் சமைத்த பெருமை அவர் முகத்தில் ஒளிர்கிறது.

சேந்தமங்கலம் அரண்மனை

ஆங்கிரஸ, ஆவணி 12 - ஆகஸ்ட் 15, 1212

பாச உணர்வுடன் பல்லவராயரை அணுகுகிறான் அழகியசீயன். அவரைக் கண்டதும் அவனது உள்ளம் உருகுகிறது. கலிங்கத்துப் பரணிக்குக் காரணமான கருணாகரத் தொண்டைமான் வழிவந்தவரும் - இராஜராஜச் சக்கரவர்த்தியின் தமிழ் பரப்பும் பணிக்கு, முதன்முதலாக வேற்றுமொழி பேசும் வேங்கைநாட்டுக்கு அனுப்பப்பட்ட நிலவுமொழியின் வழிவந்தவருமான அவரை - அடைக்கலம் தேடிவந்த நிலையில் பார்க்கையில் அழகியசீயனின் மனம் துடிக்கிறது.

அவரது உடலில் ஓடும் குருதிதானே அவன் உடலிலும் ஓடுகிறது? அவரது வழிவந்தவளைத்தானே அவன் மணமுடித்திருக்கிறான்? அவரருகில் அமர்ந்து கனிவாக வினவுகிறான்:

“பாட்டனாரே! உங்களுக்கா இந்த நிலை? காஞ்சியின் காவலரான தாங்களா என்னிடம் அடைக்கலம் தேடி வந்துள்ளீர்கள்?” கனிவுடன் கடும் சினமும் கலந்து ஒலிக்கிறது.

“விட்டுத்தள்ளு, அழகா!” அழகியசீயன் என்பதைச் சுருக்கி, அழகன் என்றழைக்கிறார் பல்லவராயர்.

“தற்பொழுது சோழ மாமன்னருக்கு நண்பர் யார், பகைவன் யார், நலம்விரும்பி யார், நயவஞ்சகர் யார் என்று தெரியாமல் போய்விட்டது. வீரத்துக்கும், வீம்புக்கும் வித்தியாசம் அறியாது மனம்போன போக்கில் செயல்படுகிறார். முன்நூறாண்டுகளுக்கு மேலாகப் பல்லவர்களும், சோழர்களும் நண்பர்களாக இணைந்து செயல்பட்டோம். இவரது பெயரைக் கொண்ட முதலாம் குலோத்துங்கருக்கு நண்பனாகப் படைத்தலைவனாக, அமைச்சனாகத் தன் வாழ்வையே அர்ப்பணித்துக்கொண்டவர், நமது முப்பாட்டனாருக்கும் முப்பாட்டனாரான கருணாகரத் தொண்டைமான். அவர் இல்லையென்றால், குலோத்துங்கர் சோழவள நாட்டில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்க இயலுமா? இராஜேந்திரசோழப் பிரம்மராயரிடம் எண்மரை அழைத்துச் சென்று இராஜேந்திர நரேந்திரனுக்கு ஆதரவைத் திரட்டி, மேலைச் சளுக்கியனான விக்கிரமாதித்தனை வெல்லத் திட்டம் தீட்டிப் பெற்றுத் தராவிட்டால், சோழர் குலத்தை உய்விக்க வந்தவர் என்ற குலோத்துங்கப் பட்டத்தைத்தான் பிரம்மராயரிடம் பெற்றிருக்க முடியுமா? கலிங்கத்தை வென்று பரணிதான் பாடப்பெற்றிருக்க முடியுமா?   காலம்தான் இதையெல்லாம் மறக்கடிக்கச் செய்துவிட்டது போலும்! அதனால்தான் பல்லவனான நான், சம்புவராயனால் காஞ்சியிலிருந்தே விரட்டப்பட்டு, உன்னிடம் அடைக்கலம் தேடிவரும் நிலைக்கு வந்துவிட்டேனய்யா.”

பல்லவராயரின் குரல் தழுதழுக்கிறது. அழகியசீயனின் மீசை துடிக்கிறது. பெரிய கரும் விழிகளில் நீர்க்கசிவு தெரிகிறது. உதடுகள் துடிக்கின்றன.

“பாட்டனாரே! காஞ்சி என்றால் பல்லவர்கள் என்றும், பல்லவர்கள் என்றால் காஞ்சி என்றும்தான் இதுவரை பேசப்பட்டு வந்திருக்கிறது. அப்படியிருக்க, காஞ்சிக் காவலரான தங்களையே காஞ்சியிலிருந்து விரட்ட சம்புவராயனுக்கு என்ன திமிர்? யார் கொடுத்தது இந்தத் துணிச்சல்? பார்த்து விடுகிறேன், ஒரு கை! ஒழித்துவிடுகிறேன் அவனது அகந்தையை!” எனப் பொறுமுகிறான்.

சம்புவராயன்
சம்புவராயன்

“அழகா, வீரனுக்கு அவசரம் அழகல்ல. சினத்தை அடக்கு. பொறுமி உன்னால் என்னதான் செய்ய முடியும்? சம்புவராயனுக்கு பக்கபலமாக யார் நிற்கிறார் என்பதை நினைத்துப் பார். நீயும், அவனும் மட்டுமே பொருதினால், நீ வெற்றி பெற வாய்ப்புண்டு. சோழ மாமன்னரின் ஆதரவுடன், தெலுங்குச் சோடர்களின் உதவியாகப் போசளர்களும் சேர்ந்தால், தன்னந்தனியனாக உன்னால் என்ன செய்ய முடியும்? ஏழாண்டுகளுக்கு முன்னர் மதுரைக்கு ஏற்பட்ட நிலைதான் உன் சேந்தமங்கலத்திற்கும் ஏற்படும்” என்ற பல்லவராயர், மேலும் தொடர்கிறார்:

“விஜயாலய சோழர், உறையூரைச் சுற்றியுள்ள சிறு பகுதிகளை மட்டுமே ஆண்டுகொண்டு, ஒரு சிற்றரசனாகப் பாண்டிய மாமன்னருக்குத் திறை செலுத்தினர். அந்த நிலையிலிருந்த அவர், எப்படிச் சோழப் பேரரசுக்கு அடிக்கல் நாட்டினார்? பாண்டியருக்கு கீழ் மற்றொரு சிற்றரசாக விளங்கிய முத்தரையர்களின் நாடும், அவர்களின் ஊரான தஞ்சையும் அவர்கீழ் எப்படி வந்தன?

“வடவேங்கடம் முதல், காவிரிக்கு வடக்கு வரைத் தமிழகத்தைத் தன் குடைக்குக் கீழே ஆண்டு வந்த பல்லவரின் துணையைப் பெற்றுத்தானே! அவரது வழியைப் பின்பற்றித்தானே, பல்லவர்களைத் தமது நண்பர்களாக வைத்துக்கொண்டு, சோழர்கள், பாண்டியரை முறியடித்தனர்! பின்னர் பல்லவரையே தமக்கு உதவும் சிற்றரசராக ஆக்கிக்கொண்டனர்!”

தான் சொல்வதை அழகியசீயன் நன்கு கவனிக்கிறான் என்பதை உறுதி செய்துகொண்டு, பல்லவராயர் உரத்த குரலில் முழங்குகிறார்:

“இன்றுவரை அவர்களை மனமார நம்பினோம். நம்மை ஆளுகிறார்களே என்று அசூயைப்படாமல், நட்புக்குத் தோள்கொடுத்து மகிழ்ந்து, நமது உயிரையும் துச்சமாக மதித்து, சோழப் பேரரசு தென்னாடு முழுவதும் விரிவடைய உதவினோம். அதற்குப் பலனை, நன்றிக் கடனை, இப்பொழுது சோழர்கள் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்!

“இத்துடன் சோழருக்கும் பல்லவருக்கும் முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவந்த உறவு முறிந்துவிட்டது. விஜயாலய சோழரின் வழியைப் பின்பற்றி, அவர் பாண்டியரைப் பல்லவர் துணையுடன் வென்றதுபோல, நாம் பாண்டியர் துணையுடன் சோழரை முறியடிப்போம்! அவரது வரலாற்றைக் கடன் வாங்கிக்கொள்வோம்.”

அதிர்ந்துபோகிறான் அழகியசீயன். தன் காதுகளையே அவனால் நம்ப முடியவில்லை. பல்லவராயர் சொல்வதுதான் என்ன? காதில் இரகசியமாகச் சொல்லவேண்டியதை இப்படிப் பறையறிவிக்கிறாரே! இது சோழர்கள் காதில் விழுந்தால்...? அரசத் துரோகி என உடனே அவர் தலையைச் சீவியல்லவா எறிந்துவிடுவார்கள்! பலநூறு ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கும் சோழர்களுக்கு எதிராகப் பாண்டியருடன் சேர்வதா? அந்த எண்ணத்தை அவனால் செரிமானம் செய்ய முடியவில்லை.

பல்லவராயர் அருகில் அமர்ந்து அவரது முகத்தைக் கூர்ந்து நோக்குகிறான். அவர் முகத்தில் எந்தவிதமான மாற்றமோ, அச்சமோ இல்லை. தான் சொன்னது சரியே என்பதுபோல வைராக்கியத்துடன் மிளிருகிறது.

“என்ன பாட்டனாரே இயம்புகிறீர்கள்? சோழ மாமன்னர் செய்தது, செய்துவருவது தவறுதான்.  சம்புவராயன் நிலைமை மீறிப்போகிறான் என்று அவருக்குச் சரியான முறையில் எடுத்துச்சொன்னால் அவனை வைக்கவேண்டிய இடத்தில் வைத்துவிட மாட்டாரா? இதற்காக நம்பிக்கைத் துரோகம் செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கலாமா?”

உறுதியுடன் மீண்டும் உரத்த குரலில் பதில் வருகிறது:

“சிந்தித்துப் பார்த்தால், இதில் துரோகம் இருப்பதாகத் தோன்றவில்லை. அழகா, ஆழ்ந்து சிந்தி. மேலைச் சாளுக்கியர் சோழருக்குப் பரம எதிரியாவர். தனது அண்ணன் இராஜாதிராஜரை நயவஞ்சகமாக கொன்ற மேலைச் சாளுக்கியன் சோமேஸ்வர ஆகவமல்லனின் மகன் விக்கிரமாதித்யனுக்குத்தானே இராஜாதிராஜரின் உடன்பிறப்பான வீரராஜேந்திரர் தமது மகளைத் திருமணம் செய்து கொடுத்தார்? இதே விக்கிரமாதித்தனைப் போரில் புறம்காண வீரராஜேந்திரருக்கு உதவியவர்தானே இராஜேந்திரசோழச் சக்கரவர்த்தியின் பெயரரான இராஜேந்திர நரேந்திரன்? அந்த நன்றி வீரராஜேந்திரருக்கு இருந்ததா? இல்லவே இல்லையே!   அப்படிப்பட்ட வீரனைத் துரத்திவிட்டு, அவனின் மாற்றாந்தாயின் மகனுக்கு வேங்கைநாட்டை அளித்தவர்தாமே அவர்! மேலும், சோழருக்கும் பாண்டியருக்கும் இல்லாத நட்பா, என்ன? எப்பொழுதும் சோழ இளவரசிகளைப் பாண்டியர் மணப்பது காவியங்களிலும், திருமுறைகளிலும் எழுதப்பட்டதுதானே! அப்படிப்பட்ட சோழரும், பாண்டியரும் எத்தனை நூற்றாண்டாகச் சென்ம விரோதிகளாகச் செயல்படுகிறார்கள்! அழகா, ஆகையால் அரசியலில் யாருமே நிரந்தரமான நண்பருமில்லை, எதிரியுமில்லை. எல்லாமே தாற்காலிகம்தான்!

“நண்பர்களைத் தூக்கியெறிந்தால் பகைவர்தானே! பகைவனுக்குப் பகைவன் நண்பனே! பாண்டியன் மாறவர்மனின் வீரத்தைப் பற்றி நான் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். மெல்ல மெல்ல அவனை உனது நண்பனாக்கிக்கொள். அது உனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.”

பாட்டனார் பல்லவராயரின் அரசியல் விளக்கம் பசுமரத்தாணி போல மெதுவாகத் தன் இதயத்தில் இறங்குவதை உணர்கிறான் அழகியசீயன்.

தான் யாரைத் திருமணம் செய்துகொள்வதைகூடச் சோழ மாமன்னர் தீர்மானித்தார்.  பரம்பரை பரம்பரையாகத் தங்களுக்கு உழைத்த பல்லவரைக் கருவேப்பிலையாகத் தூக்கி எறிந்திருக்கிறார். அந்தப் பல்லவரின் பேத்தியை மணந்ததற்குத் தண்டனையாகத் தன்னையே தள்ளிவைத்திருக்கிறார்.

இவருக்கு உயிரைக் கொடுத்து உழைத்து என்ன பலனைக் கண்டோம்? இவரது தங்கை மகளை மணந்ததால், என் வாழ்வே இவருக்குக் கட்டுப்பட்டது என்று எண்ணுகிறாரா?

மேலும், மரக்கட்டையும் இவரது தங்கை மகளும் ஒன்றுதான். மரக்கட்டையுடன் குடும்பம் நடத்தி எப்படிக் குழந்தை பெற முடியும்? அது போகட்டும், தமிழாவது சரியாகப் பேச வருமா?   பாதிப் பேச்சு தெலுங்குதான்! ஏனென்று கேட்டால், தெலுங்கு நாட்டில் வளர்ந்தவள் என்ற சப்பைக்கட்டு வேறு. கவிதை தெரியுமா, கலை தெரியுமா, அழகையோ, இயற்கையையோ இரசிக்கத்தான் அறிவாளா? நன்றாகச் சாப்பிடத் தெரியும்; சாப்பிட்டுவிட்டுக் கரடியைப் போலக் குறட்டைவிட்டுத் தூங்கத் தெரியும்…

“என்ன அழகா, சிந்தனையில் ஆழ்ந்து விட்டாய்? நான் சொல்வது உருக்கிய ஈயக்குழம்பாக உன் காதில் விழுந்ததா அல்லாது தெளிவு ஏதாவது பிறந்ததா?” என்று பல்லவராயர் வினவியதும், அவன் முகத்தில் சிறிய புன்னகை மலர்கிறது.

“மாறவர்மனைச் சந்திக்க எப்பொழுது மதுரைக்குக் கிளம்ப வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் பாட்டனாரே?” என்று குறும்பாகச் சிரிக்கிறான். அவனது சிரிப்பில் பல்லவராயரும் கலந்து கொள்கிறார்.

கங்கைகொண்ட சோழபுரம் அருகே

ஆங்கீரஸ, கார்த்திகை 28 - நவம்பர் 30, 1212

பின்னால் திரும்பிப் பார்க்கிறார் கம்பர். கண்களை மூடியவாறு நீலகண்ட தீட்சிதர் அமர்ந்திருக்கிறார். இராம காதையின் அரங்கேற்றம் நிறைவு பெற மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. அவ்வப்போது தீட்சிதருடன் தம் கவிதையைப் பற்றிக் கருத்துரையாடல் நடத்தி வந்திருக்கிறார் கம்பர்.

மறை ஓதிவரும் அந்தணரான தீட்சிதரின் தமிழறிவு கம்பரை வியப்பில் ஆழ்த்துகிறது. அந்த அறிவை மெச்சித்தான் சோழ மாமன்னர் அவரைத் தமிழ்க் காரியஸ்தராக நியமித்திருக்கிறார் என்று நினைத்துக் கொள்கிறார். தீட்சிதரின் முன்னோர் சோழ மன்னர்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளவர்கள் என்றும், ஒருவகையில் உறவினர்கள் என்றும் அறிந்த கம்பர், அது பற்றித் தீட்சிதரிடமே கேட்டிருக்கிறார்…

…அப்பொழுது இலேசாகப் புன்னகைத்த தீட்சிதர், “கவிஞரே, எனது முப்பாட்டனாருக்கும் முப்பாட்டனார் ஒருவர் இராஜேந்திரசோழச் சக்கரவர்த்தியின் மகள் அருள்மொழிநங்கையை மணமுடித்திருந்தாராம். ஆனால், நான் முதல் மனைவியின் வழிவந்தவன். சோழச் சக்கரவர்த்தியின் மகளுக்குப் பிறந்தவர்கள் கருநாட்டிலேயே தங்கிவிட்டனர் என்றுதான் அறிவேன். அவர்களுடன் தொடர்பே அற்றுப்போய்விட்டது. அவர்களைப் பற்றிச் சோழ மன்னர்களுக்கும் ஒன்றும் தெரியவில்லை” என்று தன்னடக்கத்துடன் பதிலளித்தார்.

“அது ஒரு தனிக்கதை. பிணைப்பு விட்டுவிட்டுத்தான் இருந்து வந்திருக்கிறது. அதைப் பற்றிப் பேசாமல் இருப்பதே சிறந்தது கவிஞரே! ஒரு சமயம் போல் ஒரு சமயம் இருக்காது. அதிலும் நீர் முதலில் கேட்ட எங்கள் – சோழ மன்னர் உறவு பற்றிப் பேசாமலிருப்பதே மிக நல்லது. எங்கள் குடும்பத்திடம் இருக்கும் ஒரேயொரு சிறப்புரிமை இதுதான்...” என்று கருவூர்த்தேவர் இராஜராஜசோழருக்கு அளித்த தங்கச்சுருளைப் பற்றி விவரித்தார் தீட்சிதர்.

அதைக் கேட்டுக் கம்பர் அயர்ந்து விட்டார்.

“ஐயா, இப்படிப்பட்ட சிறப்புரிமையைத் தொடர்ந்து பெற்றுவரத் தங்கள் குடும்பம் எப்படிப்பட்டதொரு பேற்றைப் பெற்றதாக இருக்க வேண்டும்! தங்கள் நட்புக்கும், நெருக்கமான பழக்கத்திற்கும் பேருவகை எய்துகிறேன்” உணர்வுப் பெருக்குடன் தெரிவித்த, கவி, “அன்றிலிருந்து இன்று வரை தங்கச் சுருளில் என்ன எழுதியிருக்கிறது என்று நீங்கள் படித்துப்பார்த்திருக்கிறீர்களா?” என மெல்ல வினவினார்.

இல்லையெனத் தலையாட்டிய தீட்சிதர், “நாங்கள் அப்படிச் செய்யக்கூடாதென்று தடை விதிக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.

“ஏனோ?”

“அரசர்களுக்கே அவ்வுரிமை இல்லாதபோது, நாங்கள் எழுத்தர்கள்தான். எங்களுக்கு மட்டும் அந்த உரிமை வந்துவிடுமா? பிற்காலத்தில், நாங்கள் எழுதி வைத்தது யாருக்கு, எப்போது தேவைப்படுமோ, அப்போது அவர்களுக்குத் தங்கச்சுருள் கிட்டும், அவர்கள் அதைப் பிரித்துப் படிப்பார்கள் எனச் சொல்லப்பட்டிருக்கிறது.”

தலையைச் சிலமுறை ஆட்டிய கம்பர், “எனக்கு அதன் பொருள் விளங்கவில்லை ஐயா. தாங்கள் தமிழின் வரலாற்றை எழுதிப் பதிந்து வருகிறீர்கள். அதை யார், எப்போது படிப்பார்கள்? அது எவருக்கு, எப்படி உதவப்போகிறது? எதுவரை தாங்கள் தொடர்ந்து எழுதி வருவீர்கள்?” என்று கேட்டார் கம்பர்.

“காலம்தான் இதற்குப் பதிலளிக்கும் கவிஞரே! எனது கடமை, தமிழ் பரப்பு வரலாற்றை என் கோணத்திலிருந்து பதிவு செய்வது மட்டுமே! அந்தத் தொண்டைத் தொடருமாறு மன்னர்கள் காதில் இயன்றவரை ஓதிப் பார்ப்பதுதான். மேலும், எங்கள் சந்ததியாருக்குத் தமிழ் கற்பித்து, சுருளில் பதிவு செய்துவரச் செய்வதுதான் எங்கள் கடமை. அது எப்படி நிறைவுபெறுமோ, காலம்தான் நிர்ணயிக்கும். தில்லையில் இடைவிடாது கூத்தாடும் அந்த அம்பலவாணனுக்குத்தான் தெரியும். எல்லாம் அவன் திருவிளையாடலே!” என்று பதில் வந்தது.

அந்த பதிலில் சிறிது வருத்தமும், சலிப்பும், ஆற்றாமையும் கம்பருக்குத் தென்பட்டது.

பொங்கிச் செல்லும் காலவெள்ளத்தில் துடுப்பும், சுக்கானும் இல்லாத நாவாயை நடத்திச் செல்லும் மாலுமியைப் போலத்தான் தீட்சிதர் அவர் கண்ணுக்குத் தென்பட்டார்.

மேலே உரையாடலைத் தொடர விரும்பாதவர் போலக் கண்களை மூடிக்கொண்டுவிட்டார் தீட்சிதர்…

…கம்பரின் நினைவலைகளை மாட்டுவண்டியின் குலுக்கல் தடுத்து நிறுத்துகிறது. அதே குலுக்கல் தீட்சிதரின் உறக்கத்தையும் கலைக்கிறது. கண்களைத் திறந்து, “கவிஞரே, நான் நிறைய நேரம் உறங்கிவிட்டேனா?” என்று கேட்கிறார்.

“இல்லை ஐயா, ஓரிரு நாழிகைகள்தான் உறங்கி இருப்பீர்கள். சிலசமயம் உங்கள் முகத்தில் புன்னகை மலர்ந்தது. வேறொரு சமயம் கலவரம் தோன்றியது. ஏதாவது கனாக் கண்டீர்களா?”  என்று பரிவுடன் விசாரிக்கிறார்.

“கவிஞரே! எனது கலவரத்திற்குக் காரணம் கனாவாக இருந்துவிட்டால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். பகற்கனவுதான் என்றும் பலிப்பதில்லையே! பெரும்பாலும் நான் கண்களை மூடிக்கொண்டுதான் இருந்தேனே தவிர, உறங்கவில்லை. என்னை மறந்து உறங்கத் தொடங்கியபோது, வண்டியின் குலுக்கல் என்னை எழுப்பிவிட்டது.”

“அப்படியா? தங்கள் மனச்சுமையைச் சற்று என்னிடம் இறக்கி வைத்தால், சிறிது அமைதி கிட்டுமல்லவா?”

திருவெண்ணைநல்லூரில் ஐந்தாண்டுகளுக்கு முன் சந்தித்ததிலிருந்து அவர்களது நட்பு வளர்ந்துகொண்டே இருக்கிறது. ஒருவர்பால் மற்றவருக்கு மதிப்பும், அன்பும், நட்பும் பெருகி வருகிறது. ஒட்டக்கூத்தரிடம் மனத்தாங்கல் ஏற்பட்ட சமயத்தில்கூட, மாமன்னரது ஆசான் ஈசுவர சிவன் மூலம் தன்னைப் பற்றி நல்வார்த்தைகள் கூறி, தன்னைக் காத்திருக்கிறார் என்ற நன்றியும் மிகுதியாகியிருக்கிறது.

உடன்பிறவா உடன்பிறப்புகளாகவே பழகி வருகிறார்கள் இருவரும். கம்பரைத் தன் தம்பியாகத்தான் பாசத்துடன் நடத்தி வருகிறார் தீட்சிதர்.

அரங்கேற்றம் நிறைவு பெறுவதற்கு முன்பிலிருந்தே ஒருமாதிரியான கலக்கத்துடன்தான் காணப்படுகிறார் அவர். அவர் சற்று மன நிம்மதி கிட்டத் தன்னால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்று விழைகிறார் கம்பர்.

“என் முகத்தில் புன்னகை மலர்ந்ததின் காரணத்தை முதலில் சொல்கிறேன் கவிஞரே. சீதை அரச மண்டபத்தில் நுழைந்தபோது அவளது அழகை அங்கிருந்த அனைவரும் கண் இமையாது பார்த்ததைப் பற்றித் தாங்கள் புனைந்த கவிதை நினைவுக்கு வந்தது.”

“ஆமாம். அன்னை சீதையின் அழகைப் பற்றி,

‘சமைத்தவரை இன்மை மறைதானும் எனலாம் அச்

சுமைத் திரள் முலைத் தெரிவை தூய வடிவு கண்டார்

அமைத் திரள் கொள் தோளியரும் ஆடவரும் எல்லாம்

இமைத்திலர் உயர்த்திலைர்கள் சித்திரம் எனத் தாம்.’

என்று வருணித்திருந்தேன். அதற்கென்ன?” என்று கேட்கிறார் கம்பர்.

“உம்முடைய வர்ணிப்பின் பொருளை எண்ணிப் பார்த்தேன். ஜனக மன்னர் பிள்ளைப் பேற்றுக்காக நிலத்தை உழுதபோது, அன்னை சீதை ஒரு பேழையில்தானே கிடைத்தாள்?   எனவே, அவளை உருவாக்கியவர் ஒருவரும் இல்லாததால், மனிதர் எவரும் உருவாக்காத நான்மறைகளுக்கு நிகராக அவளைச் சொல்லலாம். அன்னை சீதா பிராட்டியின் திரண்டு பெருத்த மார்பகங்களோடு கூடிய தூய வடிவத்தைத் கண்டவுடன், அரசவையில் குழுமியிருந்த, மூங்கில் போன்ற தோள்களை உடைய பெண்களும், மற்ற ஆடவர்களும், திறந்த கண்களை இமை கூட மறந்து, மூச்சும் விடாமல், ஓவியம் போல அசையாமல் அமர்ந்திருந்தனர் என்று கூறினீர். அந்த வர்ணிப்பை உடைய சீதா பிராட்டி எப்படி இருப்பாள் என்று கற்பனை செய்து பார்த்தேன். உடனே கோவில் பதுமைகளின் - இல்லையில்லை - திருமாலின் இதயத்தில் அமர்ந்திருக்கும் இலக்குமியின் நினைவுதான் வந்தது. எனவே, அன்னையைக் கண்ட குழந்தை மகிழ்வது போல என் முகத்தில் புன்னகை மலர்ந்தது. உமது கவிதையின் திறந்தான் என்னே!”  என்று வியந்து மகிழ்கிறார் தீட்சிதர்.

அதைக் கேட்கும் கம்பரின் முகமும் மலர்கிறது.  “ஐயா,

‘ஈன்ற பொழுதிற் பெரிதுவுக்கும் தன் மகவைத்

சான்றோன் எனக் கேட்ட தாய்’

என்ற பொய்யாமொழிப் போதாரின் வாக்குப்படி களிப் பேருவகை எய்துகிறேன். தங்களது பாராட்டு நான் சுமந்து பெற்ற குழந்தையைப் பாராட்டுவது போல இருக்கிறது.”

ஆனந்த பரவசத்துடன் கூறிய கவியரசர் கம்பர், “அது போகட்டும், தங்களைக் கலவரம் அடைய வைத்த நிகழ்ச்சிதான் எது?” என்று வினவுகிறார்.

“கவிஞரே! உமது இராம காதையில் என்னை மிகவும் கவர்ந்தது சுந்தர காண்டம்தான். அதில் அனுமன் சீதா பிராட்டியாரைத் தேடி இலங்கைக்குச் சென்றது, அங்கு இராவணனைக் கண்டதும், இலங்கைக்கு எரியூட்டியதும் மிகவும் அருமையாக வரையப்பட்டுள்ளது. முதன் முதலாக அனுமன் இலங்கையைக் கண்டு வியந்த விதத்தைத்தான் எவ்வளவு கவிநயத்துடன் அனைவரின் கண் பார்வைக்கும் கொணர்ந்தீர்!

‘பொன்கொண் டிழைத்த மணியைக் கொடு பொதிந்த

மின்கொண் டமைத்த வெயிலை கொடு சமைத்த

என்கொண் டியற்றிய வெனத் தெரிகிலாத

வன்கொண் டல்விட்டு மதி முட்டுவன மாடம்

என்று இலங்கையின் செழிப்பினை எப்படிக் காட்டினீர்! மணிகள் பதிக்கப்பட்டு, பொன்னால் ஆக்கிய, மேகங்களையும் தாண்டி நிலவைத் தொடும் அளவுக்கு உயர்ந்த இலங்கை நகரில் மாடங்கள், மின்னலால் கட்டப்பட்டனவோ என்று அனுமன் வியப்பதாக அல்லவா சொல்லியிருந்தீர். அந்தக் கற்பனை மிகவும் சிறப்பு!” என்று பாராட்டுகிறார்.

“ஐயா, நமது சோழநாடு செழித்து விளங்கினால் எப்படியிருக்கும் எனக் கற்பனை செய்து பார்த்தேன். அவ்வாறே இலங்கை விளங்குவதாக எழுதிவிட்டேன்” என்று சோழ வளநாட்டின் புகழ் பாடிய கம்பர், “இன்னும் தங்களது அச்சத்திற்கான காரணத்தைச் சொல்லாமல் மழுப்புகிறீரே! அவ்வளவு கொடியதா அந்நிகழ்வு?” எனப் பரிவுடன் கேட்கிறார்.

“சொல்லி விடுகிறேன்.

‘பஞ்சரத்தொடு பசுநிறக்கிளி வெந்து பதைப்ப

அஞ்சனக் கண்ணின் அருவிநீர் முலை முன்றில் அமைப்ப

குஞ்சரத்தன கொழுநரைத் தழுவுறும் கொதிப்பால்

மஞ்சிசைப் புகும் மின்னெனப் புகையிடை மறைந்தார்’

என்றீர். அதாவது, அனுமன் இலங்கைக்கு இட்ட தீயினால் கூண்டிலிருக்கும் பச்சைக் கிளிகள் வெந்து துடித்தன; அரக்கப் பெண்டிரின் மை தீட்டிய கண்ணிலிருந்து பெருகிய கண்ணீர் அருவி, அவர்தம் மார்பகத்தில் வழிந்து நின்றது, யானை போன்று பேருருவம் கொண்ட தங்கள் கணவரை அவர் சென்ற வீர சுவர்க்கத்திற்கே சென்று தழுவ வேண்டும் என்ற ஆற்றாமையால், மேகத்துக்கிடையில் புகுந்து செல்லும் மின்னலைப் போல், அத்தீப்புகையில் மறைந்து இறந்தனர்… இப்படியாக, இலங்கை தீக்கிரையானதையும், அங்குள்ள அரக்கப் பெண்டிரின் அவலத்தையும் நீர் விவரித்தீர்.”

இதைச் சொல்லும்போது தீட்சிதரின் உடல் இலேசாக நடுங்குகிறது. மேலும் தொடர்கிறார்:

“அச்சமயம்தான் உம்மருகில் இருந்த தூண்டா விளக்கு திடுமென்று கவிழ்ந்து துணியில் விழுந்தது. துணி தீப்பற்றிக் கொண்டு, விளக்கிலிருந்து வழிந்தோடிய எண்ணெயும் சேர்ந்து, மக்கள் அமர்ந்திருந்த கோரைப் பாயிலும் அந்தத் தீ பற்றிக்கொண்டது. கலவரம் ஏற்பட்டது.  அவர் உடல் நடுக்கம் நிற்காததைக் கம்பரால் காண முடிகிறது.

“ஐயா, உடனேதான் தீயை அணைத்தாகி விட்டதே!”

“அதுவல்ல எனது அச்சம் கவிஞரே! இலங்கையை அனுமன் கொளுத்தியதை நீர் விவரிக்கும்போது ஏன் தீ பரவ வேண்டும்” அதுவும், சோழ வளநாட்டின் சிறந்த திருமாலின் தலமாகிய திருவரங்கத்தில்? இது நல்லதற்கல்ல கவிஞரே! சோழ நாட்டிற்கு ஏற்படப்போகும் தீமையை நமக்குக் காட்டும் தீ நிமித்தமாகவே அது எனக்குத் தோன்றியது, இன்னும் தோன்றுகிறது. அந்த நிகழ்வுதான் மீண்டும் மீண்டும் என் மனக்கண் முன் வந்து நின்று கலவரப்படுத்துகிறது. உமையொருபாகனான, பெருவுடையார்தான் சோழ மாமன்னரையும், இச்சோழ வளநாட்டையும் காப்பாற்ற வேண்டும்.”

இதைச் சொல்லச் சொல்ல, தீட்சிதரின் உடல் மேலும் பெரிதாக வெடவெடவென நடுங்குகிறது. அதைக்கண்டு கம்பரின் மனதிலும் இனம்தெரியாத கலக்கம் தோன்றத் தொடங்குகிறது.

***

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com